Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை

தத்தர்

தற்போது இலங்கைத்தீவு சார்ந்து காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்தமும், தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சிக்குண்டுள்ள ஒரு பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இத்தகைய இரண்டு அடிப்படைகளையும் வைத்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி இன்றைக்கு ஐந்து ஆண்டுகளாகின்றன. அதன் பின்பும் எதிரி தனது ஒடுக்குமுறைகளை பல வகைகளிலும், பல பரிமாணங்களிலும் அதிகரிப்பதில் முனைப்புடன் செயல்படுகிறான். இவற்றை எதிர்கொள்ள ஒன்றுபட்ட பலத்துடன் சரியான திட்டமிடலுடனும் செயற்பட வேண்டிய காலகட்ட அவசியம் எழுந்துள்ளது.

அவ்வாறு நாம் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு ஏதுவாக ஓர் அரசியல் அணுகுமுறையையும் கருத்தொருமைப்பாட்டையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. காணப்படும் அரசியல் யதார்த்தத்தை ஆராய்ந்து அறிந்து அதன் அடிப்படையில் ஒரு பொதுவான கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு ஏதுவாக முதலில் நாம் அமர்ந்திருந்து கலந்தாலோசித்து ஒரு பொதுவான கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டும். யதார்த்தம் எமது தொண்டையை நெரிக்கும் அளவுக்கு கடினமானதாக இருக்கிறது. அதேவேளை இதனை எதிர்கொண்டு முன்னேற வழிகளும் இருக்கின்றன.

முதலில் யதார்த்தத்தை பற்றிய ஓர் உருவரையை தீட்டிக்கொள்வோம். எதிரி சர்வதேச வியூகத்தினால் எம்மை சுற்றிவளைத்து எமது மக்களை படுகொலை செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறான். சர்வதேச அரசியலை கையாள்வதில் எதிரி நீண்ட பாண்டித்தியமும், பரீச்சியமும் கொண்டவன். எதிரி எப்படி சர்வதேச வியூகத்தினால் எம்மை வீழ்த்தினானோ அவ்வாறே நாமும் எம்மை மீட்பதற்கு ஒரு சர்வதேச வியூகத்தை அமைத்தாக வேண்டும். இதன்பொருட்டு நாம் சிக்குண்டுள்ள புவிசார் அரசியல் சிக்கலையும் அதன் இன்றைய யதார்த்த நிலையையும் முதலில் பார்ப்போம். புவிசார் அரசியலை பிரதானமாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

முதலாவது புவியியல் அமைவிட அண்மைத்தன்மை (Geographical Proximity) அதாவது இந்தியாவிற்கு அருகாமையில் இலங்கைத் தீவு அமைந்திருப்பது. சீனாவிற்கு அருகாமையில் தாய்வான் அமைந்திருப்பது போன்றன.

இரண்டாவது பூகோள ரீதியிலான பேரரச அமைப்புச் சார்ந்த புவிசார் அரசியல். அதாவது பூகோளம் தழுவிய பிரித்தானிய காலனிய ஆதிக்க பேரரசு அமைப்புச் சார்ந்த புவிசார் அரசியல்.

மூன்றாவது மூலவளத் தேடல், வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை நோக்கிய போக்குவரத்து மற்றும் இராணுவ கேந்திர துறைமுக அமைப்புக்களுக்கான புவிசார் அரசியல்.

இலங்கைத் தீவு இந்த மூன்று வகையான புவிசார் அரசியலோடும் சம்பந்தப்படுகிறது.

முதலாவது இந்தியாவுக்கு அருகாமையில் இலங்கை அமைந்திருப்பதால் இந்தியாவினுடைய புவிசார் அரசியல் நலனோடு அது சம்பந்தப்படுகிறது.

அடுத்து இந்தியாவுக்கு அருகாமையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கைத்தீவு அமைந்திருப்பதாலும் இந்தியாவை எதிர்கொள்ள அல்லது வெற்றிகொள்ள விரும்பும் உலகப்பேரரசுகள் இலங்கையை அதற்கு களமாக பயன்படுத்த முற்படுவதினாலும் இலங்கை புவிசார் அரசியல் சிக்கலுக்குள் அகப்படுகிறது. இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால் மட்டுமின்றி இந்துசமுத்திரத்தின் மத்தியில் இதற்குள்ள கேந்திர முக்கியத்துவமும் இந்து சமுத்திரம் தழுவிய அரசியல் ஆதிக்க நலன்களின் அடிப்படையிலும் இதற்கான புவிசார் அரசியல் மேலும் விரிகிறது.

மூன்றாவதாக இந்துசமுத்திரத்தின் மையத்தில் கடல்வழி போக்குவரத்திற்கு அத்தியாவசியமான இடத்தில் இலங்கை அமைந்திருப்பதால் உலகளாவிய மூலவளத்தேடல் மற்றும் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளின் பொருட்டான புவிசார் அரசியலோடும் இலங்கைத் தீவு பின்னிப்பிணைந்திருக்கிறது.

இந்தியாவின் பார்வையில் இலங்கைத்தீவு இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துள் அமைந்திருக்கும் ஒரு புள்ளியாகும். அத்தகைய கோணத்திலிருந்தே இலங்கையை இந்தியா அணுகுகிறது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருப்பதன் மூலம் இலங்கை நட்பைப்பெற இந்நிலையைப் பேணலாம் என இந்தியா நினைக்கிறது. நயத்தாலோ அல்லது பயத்தாலோ இலங்கையை இந்தியா இவ்வாறு தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

சிங்கள ஆட்சியாளர்களின் நோக்குநிலை இதில் இரத்தமும் தசையுமானது. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நீண்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் இத்தகைய ஆதிக்கம் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் காலத்துக்கு காலம் ஏற்பட்ட இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள் மூலம் இத்தகைய இந்திய ஆதிக்கம் பற்றிய அச்சம் சிங்களவர்களிடம் வளர்ந்திருக்கிறது.

தமிழரை இந்துமதத்துடனும், தமிழக தமிழருடனும் இணைத்து இந்தியாவின் மீட்சியாகவே சிங்களவர் பார்க்கின்றனர். இதனால் இந்திய ஆதிக்கத்தின் கருவியாக தமிழரை பார்ப்பதினால் இந்தியா ஆதிக்கத்திற்கு எதிரான தமது யுத்தத்தை சிங்களவர் ஈழத்தமிழர் மீது புரிகின்றனர். ஆதலால் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறை என்பது இந்தியாவுடனான புவிசார் அரசியல் பிரச்சனையின் வெளிப்பாடாகும்.

இந்த வகையில் சிங்களவர்க்கும் இந்திய ஆதிக்கத்திற்கும் இடையில் உள்ள ஒரு நீண்டகால பிரச்சனையின் விளைவாக ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்பதால் ஈழத்தமிழர் பிரச்சனை புவியியல் அண்மைத்தன்மை சார்ந்த புவிசார் அரசியல் பிரச்சனையாகும். இப்புவிசார் அரசியல் பிரச்சனையை சிங்கள ஆட்சியாளர்கள் மிகுந்த மதிநுட்பத்தோடு கையாண்டு வருகின்றனர்.

சிங்கள இனத்தின் பெருந்தலைவரான டி.எஸ்.சேனநாயக்கா 1942ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் 'விரும்பியோ விரும்பாமலோ (willy-nilly) எந்தொரு நெருக்கடியின் போதும் இலங்கை இந்தியாவின் பக்கமே' என்று புவிசார் அரசியல் நெருக்கடிக்கு இவ்வாறு ஒரு பதிலை வழங்கினார்.

ஆனால் மூன்று ஆண்டுகளின் பின்பு டி.எஸ்.சேனநாயக்கா இதற்கு மாறாக புவிசார் அரசியலின் இரண்டாவது பகுதியை பயன்படுத்த தொடங்கினார்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததும் இந்தியா சுதந்திரம் அடைய இருந்த தருணம் அது. பிரித்தானியர் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் இந்துசமுத்திரம் சார்ந்த தமது நலன்களை கைவிட தயாரில்லை. பிரித்தானியரின் கடலாதிக்கம் புதிதாக எழுந்துவந்த உலக பேரரசான அமெரிக்காவின் கைக்கு மிக சுமூகமான முறையில் கைமாறியது.

இந்நிலையில் பிரித்தானிய அமெரிக்க கூட்டின் அடிப்படையில் இந்தியாவை கட்டுப்படுத்த வல்லதும் இந்துசமுத்திரத்தில் ஆதிக்கம் புரியவும் ஏற்றதுமான வகையில் இலங்கைத் தீவில் கடற்படை, விமானப்படை தளங்களை வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இவ்விருப்பத்தை பிரித்தானியர் டி.எஸ்.சேனநாயக்காவிடம் தெரிவித்தபோது டி.எஸ்.சேனநாயக்கா பின்வருமாறு கணக்குப்போட்டார்.

இந்தியாவில் இந்து - முஸ்லிம் இரத்தக்களரி ஏற்பட்டு இருந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிய முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், இந்தியாவால் இலங்கைக்கு எதிராக ஓர் அடிதானும் எடுத்து வைக்க முடியாது என்ற பலவீனமான சூழலில், உலகப் பேரரசான பிரித்தானிய - அமெரிக்க கூட்டுப் புவிசார் அரசியல் நலனுக்கு பொருத்தமான பக்கம் சாய்வதன் மூலம் இந்தியாவினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இங்கு அமைவிட அண்மைத் தன்மையான புவிசார் அரசியல் சக்தியான இந்தியாவை உலகளாவிய பேரரச புவிசார் சக்தியினால் டி.எஸ்.சேனநாயக்கா எதிர்கொண்டு 1947ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டார்.

இவ்வாறு இராணுவ தளங்கள் அமைக்க பிரித்தானியாவுக்கு உதவும்போது அதற்கு கைமாறாக ஈழத்தமிழருக்கு பாதகமான வகையில் ஒற்றையாட்சி முறையின் கீழான பெரும்பான்மையின சர்வாதிகாரத்திற்கு (Majoritarian Dictatorship) பொருத்தமான அரசியல் யாப்பை, மந்திரிசபை அரசியல் யாப்பு என்ற பெயரில் வடிவமைத்து அதனையே இலங்கைக்கான யாப்பாக வழங்க வேண்டும் என பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் டி.எஸ்.சேனநாயக்கா கேட்டுக் கொண்டார். அதனை பிரித்தானியர் ஏற்று சோல்பரி அரசியல் யாப்பை இலங்கைக்கு வழங்கினர்.

இதில் இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன. ஒன்று புவியியல் அமைவிட அண்மைத்தன்மையான புவிசார் அரசியலை பூகோள பேரரச புவிசார் அரசியலால் எதிர்கொள்ளும் முறைமையை டி.எஸ்.சேனநாயக்கா சிங்கள அரசியலில் ஏற்படுத்தினார். இரண்டாவதாக அவ்வாறு உலகப்பேரரச புவிசார் நலனுக்கு சார்பாக மாறும்போது அதற்கு கைமாறாக ஈழத்தமிழர்களை பலிக்கடாவாக்கினார். பிற்காலத்தில் அனைத்து சிங்களத் தலைவர்களும் இதனை இருநிலைகளிலும் மாறி மாறிச் செய்கின்றனர்.

புவியியல் அண்மைத் தன்மை கொண்ட இந்திய அரசுக்கு சார்பான புவிசார் அரசியலின் பக்கம் சிங்கள அரசு சாயும்போது அதில் ஈழத்தமிழர்களை பலிக்கடாவாக்கும் விதத்திலேயே சிங்களத் தலைவர்கள் அச்சாய்வை வடிவமைத்து நிறைவேற்றுவதில் வெற்றிபெறுகின்றனர்.

எனவே மேற்படி இருவகையான புவிசார் அரசியலின் போது காலகட்டத் தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்ப அவற்றை மதிநுட்பத்துடன் கையாண்டு ஈழத்தமிழரை ஒடுக்குவதில் சிங்களவர் தொடர்ந்து வெற்றியீட்டுகின்றனர்.

இப்போது எமது பிரச்சனை இத்தகைய புவிசார் அரசியலை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதுதான். இதில் மிகுந்த மதிநுட்பம் கொண்ட யதார்த்தத்துக்கு பொருத்தமான நடைமுறை சாத்தியம்மிக்க ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்து அதனடிப்படையில் நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

இதுவிடயத்தில் எமக்கு இரண்டு பிரச்சனைகள் உண்டு. ஒன்று புவிசார் அரசியலுக்கு பொருத்தமான யதார்த்தபூர்வமான ஒரு வெளியுறவு கொள்கைத் திட்டத்தை உருவாக்குவது. இரண்டு உணர்ச்சிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிவுபூர்வமான வெளியுறவுக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு அமைப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏற்ற பரந்த மனப்பான்மையும் அதற்கு ஏற்ற களத்தையும் உருவாக்குவதாகும்.

இதுவிடயத்தில் சர்வதேச அரசியல் உறவுகள் பற்றிய விடயத்தை அதிகம் அறிவுபூர்வமாகவும், நடைமுறைசார்ந்தும் கருத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

**

நெருப்பு ஓர் ஆபத்தான நண்பன். அதில் நன்மையோடு ஆபத்தும் உண்டு. ஆபத்தும் உண்டு என்பதற்காக அதை புறக்கணிக்க முடியாது. நெருப்பை பிழையாகவோ அன்றி தவறாகவோ கையாளும் போது அது எமக்கு எதிரியாகிவிடுகிறது. இயற்கை போதிக்கும் இந்த பாடத்திலிருந்து நாம் எமது விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்த வேண்டும்.

'நியாயவாதி வெகுஜன விரோதி' என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு பொருளில் நன்மையும் தீமையும் கலந்திருக்குமிடத்து அதிலுள்ள நன்மைகளை புறந்தள்ளி அதில் காணப்படும் தீமைக்கு எதிரான தர்ம ஆவேசத்தின் பேரால் நாம் எதிரிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகி விடக்கூடாது.

முரண்பாடுகளை கையாளும் ஒரு வித்தையே தலைமைத்துவம் என்ற வகையில், தீயவற்றில்கூட ஒப்பீட்டு ரீதியான நன்மைகளினால் கையாளவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டும். அரசியல் தலைமைத்துவம், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச உறவுகள் போன்ற விடயங்களில் இத்தகைய ஒழுக்கநெறிமுறையும், அணுகுமுறையும் அவசியமானதாகும்.

எந்த ஒரு தேசிய விடுதலைப் பேராட்டமும் எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற வகையில் ஒரு தேசிய போராட்டத்தின் முக்கிய சிறப்புக்கூறாய் சர்வதேச உறவுகளும் அதற்கான வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. அந்த வகையில் ஈழப்போராட்டம் சர்வதேச உறவுகளை விஞ்ஞான கண்கொண்டு நடைமுறைச் சாத்தியமான வகையில் நோக்கி அதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

உறவு என்பது நலன்களின் அடிப்படையில் அமைவது. அது பரஸ்பர நலன்களின் அடிப்படையிலோ அல்லது ஆதிக்க நலன் அடிப்படையிலோ அமைவது. புனிதமான காதல்கூட இருதரப்பினருக்கும் இடையேயான பரஸ்பர நலன்களின் அடிப்படையில் தான் உருவாகிறது. தலைவன் தலைவியைப் பார்த்து 'நான் உன்னை காதலிக்கின்றேன்' என்று கூறும்போது அதற்கு தலைவி 'இல்லை நீ என்னை காதலிக்கவில்லை, என்னில் உன்னை காதலிக்கின்றாய் என்பதுதான் உண்மை' என்று கூறிய ஓர் இலக்கிய வரி உண்டு. அதாவது ஒரு காதலனோ அல்லது காதலியோ தனது நலனை மற்றவர்கள் கண்டு அந்த நலனின் பொருட்டு அவரை நேசிப்பதற்கு பெயர்தான் காதல் என்பதாக அதன் பொருள் அமைகிறது.

இது மனித வாழ்வுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளினது வாழ்வுக்கும், உறவுக்கும் அடிப்படையானது. மாமிச உண்ணிகளான சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளிடம் அகப்பட்டு உயிருக்கு போராடும் விலங்குகளை யானை, எருமை போன்ற காட்டு விலங்குகள் காணும் போதும், நீரில் மாமிச உண்ணியான முதலையின் பிடியில் அகப்பட்டு தவிக்கும் விலங்குகளை நீரில் வாழும் நீர்யானை காணும் போதும் விரைந்து சென்று அப்பிராணிகளின் உயிர்களை எத்தகைய கைமாறுமின்றி போராடி மீட்டுவிடுகின்றன.

மேற்கூறியவாறு யானை, எருமை, நீர்யானை போன்ற சில பிராணிகளிடம் விதிவிலக்காக நலன்பாராத ஓர் உன்னத குணம் காணப்படுகின்ற போதிலும் இதனை ஒரு விதியாகக் கொள்ளாமல் காணப்படும் பொதுவிதிக்கு உட்பட்டே நாம் செயல்பட முடியும்.

அந்தவகையில் 'உறவு' என்பதன் பொருள் 'நலன்' என்பதாய் அமையும்போது அரசுகளுக்கிடையேயான உறவுகளில் இத்தகைய பரஸ்பர நலன்கள் அல்லது ஆதிக்க நலன்கள் இன்றி எந்த ஒரு உறவுமே இருக்க முடியாது என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். 'தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு' என்ற பழமொழியும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது.

183 அரசுகளைக் கொண்டுள்ள இந்த உலகில் அரசுகளுக்கிடையேயான நலன்களின் அடிப்படையில் குறுக்கும் நெடுக்குமாக, வளைவும் நெளிவுமாக சுற்றிச்சுழன்று ஒரு சிக்கலான உறவுமுறை நிலவுகிறது. இதில் பரிசுத்தமான உறவுகளும் வேண்டாம், அடிமைத்தனமான உறவுகளும் வேண்டாம் என்ற வகையில் அரசுகளுடனான உறவை ஏதோ ஒரு பரஸ்பர நலன் அடிப்படையில் வடிவமைக்க முயற்சிக்க வேண்டும்.

'நாம் ஓர் அரசுக்குள் மட்டும் வாழவில்லை. அரசுகள் எனப்படும் ஓர் உலகளாவிய முறைமைக்குள்ளும் வாழ்கிறோம் என்று சர்வதேச உறவுகள் பற்றிய கூற்றுண்டு.'

இந்த வகையில் சர்வதேச உறவை விருப்பு வெறுப்புக்கு அப்பால் யதார்த்தபூர்வமான வகையில் நாம் கருத்தில் எடுத்து வடிவமைக்க வேண்டும். சிங்கள ஆட்சியாளர் தமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து உறவுகளையும் பயன்படுத்தி எம்மை ஒடுக்கியுள்ளார்கள். இராஜபக்சே இப்போது அமெரிக்காவுடன் முரண்பட்டாலும் அவர் அமெரிக்காவின் உதவி பெற்றார்.

இந்தவகையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமக்கு சாதமாக யார் உதவினாலும் அதனை ஏற்பார்கள். அரசியலில் அரைவழி நண்பன் (Half a friend) தங்குமிட உறவு (half a house) என உறவு நிலைகள் உண்டு. நாமும் இவற்றை கருத்தில் கொண்டு எமக்கு சாதகமாக காணப்படும்  அரை, கால் உறவுகளோடும் கூட்டுச்சேர வேண்டுமே தவிர பகைமைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகிவிடக் கூடாது.

இப்போது இலங்கைத் தீவின் புவிசார் அரசியலோடு மூன்று முனைகள் சந்திக்கின்றன. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

1. முதல்நிலையில் உலகளாவிய பேரரச புவிசார் அரசியலைக் கொண்டுள்ள அமெரிக்கா.

2. இந்துசமுத்திரம் தழுவிய பேரரச புவிசார் அரசியல் நலனை கொண்டுள்ள சீனா.

3. அமைவிட அண்மைத்தன்மையான புவிசார் அரசியல் நலனை கொண்டுள்ள இந்தியா

மேற்படி இந்த மூன்று அரசுகளினதும் மூன்று நிலையிலான புவிசார் அரசியலோடு இலங்கைத் தீவினதும் ஈழத்தமிழர்களினதும் அரசியல் இப்போது பின்னிப்பிணைந்து சிக்குண்டிருக்கிறது.

இதில் சீனா திட்டவட்டமாக சிங்கள அரசின் பக்கமே நிற்கும். அதற்காக தமிழர்களின் நலன்களை காவுகொடுக்க அது தயாராக இருக்கும். எனவே இதனை நாம் எமது பக்கம் வைத்து ஒருபோதும் பார்க்க முடியாது.

அடுத்து, சீனாவின் இத்தகைய உலகப் பேரரசு எழுச்சியை அமெரிக்கா விரும்பாது. எனவே அதனை எதிர்கொள்ள குறைந்த பட்சம் அது ஈழத்தமிழருக்கு சாதகமாக அது செயற்பட்டாக வேண்டும். இங்கு அமெரிக்க சீன முரண்பாட்டை நாம் மிகவும் நுணுக்கமாக கையாளவேண்டும்.

மூன்றாவதாக இந்தியா, சீனாவின் வளர்ச்சியை அது விரும்ப முடியாது. ஆனால் சீனாவுடன் பிணைந்திருக்கும் சிங்கள அரசை நயத்தாலும், விட்டுக்கொடுப்புக்களாலும் தன் பக்கம் வைத்திருக்க இந்தியா முயல்கிறது. ஆனால் சிங்கள அரசு சீனாவின் இந்துசமுத்திரம் தழுவிய வியூகத்தோடு தன்னை இணைத்துக்கொண்டுள்ள வகையில் இந்தியாவின் விருப்பம் இறுதியில் ஈடேற முடியாது.

மேலும் சிங்கள அரசிடம் வரலாற்று ரீதியாக இந்திய எதிர்ப்பு இருப்பதால் சீனாவின் துணைகொண்டு இந்தியாவை தம்மால் எதிர்கொள்ளத்தக்க வாய்ப்பு இருப்பதாக நம்பும் நிலையில் அது சீனாவுடன் மேலும் இறுக்கமாக கைகோர்ப்பதிலேயே முடிவடையும்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் மெத்தனத்தன்மை சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவில் ஒரு நெருடு நிலை உள்ளது. ஆயினும் இறுதி அர்த்தத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு புள்ளியில் கூட்டுச் சேர்வது தவிர்க்க முடியாது.

சீனாவின் பேரரச ஆதிக்க கொள்கை இந்தியாவுக்கு எதிரான 'முத்துமாலை வியூகம்' என இராணுவ அர்த்தத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை மூடி மறைப்பதற்கு ஏற்ற வகையில் சீனா பட்டுப்பாதை (Silk Route) கோட்பாட்டை முன்வைக்கிறது. இதன்படி சீனாவிடம் ஆதிக்க நோக்கம் இல்லையென்றும் பண்டைக்காலத்திலிருந்து பட்டுத்துணி வர்த்தகத்திற்காக சீனா பயன்படுத்திய பாதையை, இப்போது கப்பல் வர்த்தக பாதைக்கூடாக வெறும் வர்த்தக நோக்கத்திற்கான பயன்படுத்துகின்றதே தவிர, ஆக்கிரமிப்புக்கான நகர்வுகள் அல்ல என சீனா விளக்குகின்றது. உண்மையில் வர்த்தக ஆதிக்கமே அனைத்துவகையான ஆதிக்கத்துக்குமான ஊன்றுகோல் என்ற வகையில் இதனை வெறும் வர்த்தகமாக அரசியல் நிபுணர்கள் பார்க்கமாட்டார்கள்.

இந்நிலையில் அமெரிக்கா - சீனா - இந்தியா என்பவற்றிற்கு இடையிலான ஒரு முக்கோண புவிசார் அரசியல் போட்டி நிகழ்கிறது. இதில் இறுதி அர்த்தத்தில் இரண்டு புள்ளிகள் ஒன்று சேரும். அதாவது ஒன்றுக்கொன்று முரண்பாடான சக்திகள் பல இருப்பினும் அவை மோதும் ஒரு புள்ளியில் இரு அணிகளாகவே பிளவுபடும் என்ற கூற்றுக்கிணங்க இந்த மூன்று சக்திகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளே உருவாக முடியும். இவற்றை எல்லாம் நாம் கருத்தில் கொண்டு நாம் எமக்கேற்ப, எமது விடுதலைக்கு பொருத்தமான வகையில் கையாளத்தக்க கொள்கையை வகுக்க வேண்டும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=27004707-523d-454d-a329-5670146c297e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.