Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் - மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது? நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் - மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது? நிலாந்தன்

18 மே 2014

விடுதலைப்புலிகள் வீழ்ச்சியுற்று இன்றோடு ஐந்தாண்டுகளாகின்றன. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் தொடங்கிய ஒரு போராட்டடம் நந்திக் கடற்கரையில் வற்றாப்பளை அம்மன் கோயில் கோபுரம் சாட்சியாக நிற்க முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழர்களுடைய ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியும் மிகப் பெரிய இழப்பும் அதுவெனலாம். அது மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் அறிவுக்கெட்டிய காலத்திலிருந்து இன்று வரையிலுமான காலப் பரப்பினுள் நிகழ்ந்த ஆகப் பெரிய இழப்பு அதுவெனலாம். யாழ்ப்பாணம் கந்தரோடையில் காணப்பட்ட ஈழத் தமிழர்களின் முதலாவது சிற்றரசு என்று வர்ணிக்கப்படும் கதிரமலையரசின் வீழ்ச்சியிலிருந்து தொடங்கி சங்கிலியன், பண்டார வன்னியன் ஈறாக ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருக்கக்கூடிய எந்த ஒரு வீழ்ச்சியின்போதும் இந்தளவு பெரியதொரு இழப்பு ஏற்பட்டிருக்கிறதா?

அத்தகைய ஆகப் பெரியதொரு இழப்பிலிருந்து தமிழர்கள் எத்தகைய பாடங்களைக் கற்றிருக்கிறார்கள்?

அப்படித் தமிழர்கள் ஏதும் பாடங்களைக் கற்றிருந்தால் அதை கடந்த ஐந்தாண்டு கால அரசியலில் தமிழர்கள் பெற்ற வெற்றிகள் அல்லது மேற்கொள்ளப்பட்ட முக்கிய நகர்வுகள் என்பவற்றுக்கூடாகவே மதிப்பீடு செய்யவேண்டும்.

ஆயின், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழர்களின் அரசியலில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள் எவையெவை? முதலாவது ஜெனிவாத் தீர்மானங்கள். இரண்டாவது, வடமாகாண சபையின் உருவாக்கம்.

ஆனால், இந்த இரண்டுக்குமே தமிழர்கள் முழு அளவில் உரிமை கோர முடியாது. ஏனெனில், ஜெனிவாத் தீர்மானங்களில் தமிழர்கள் ஒரு தரப்பேயல்ல. மேற்கு நாடுகள் தமிழர்களை கருவிகளாகக் கையாண்டு அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றிவரும் தீர்மானங்களே அவை. எனவே, அதில் தமிழர்கள் பெருமளவிற்குக் கருவிகள் தான். மேற்கின் வியூகத்திற்கேற்ப கையாளப்படும் கருவிகள்.

அதிலும் குறிப்பாக, கடைசித் தீர்மானத்தில் கருவியின் பெயரைக்கூட கர்த்தாக்கள் திட்டமிட்டு நீக்கிவிட்டார்கள் என்பதை இங்கு தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, வடமாகாண சபை. அதுகூட தமிழர்களின் சாதனை அல்ல. அது ஒரு பிரிக்கப்பட்ட மாகாண சபை என்பதே மிக அடிப்படையான ஒரு பலவீனம். அடுத்தது அதை உருவாக்கியது தங்களுடைய சாதனையே என்று இந்தியா உரிமை கோருகிறது. அதில் உண்மையும் உண்டு. அதை அண்மையில் பிரியாவிடை பெற்றுச் சென்ற யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சலற்; ஜெனரல் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றார்.

எனவே, இப்படிப் பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகளில் ஈழத்தமிழர்களுடைய அரசியலில் ஏற்பட்டிருக்கக்கூடிய இரண்டு முக்கிய மாற்றங்களுக்கும் தமிழர்கள் முழு அளவிற்கு உரிமை கோர முடியாது. அவை இரண்டும் இப்பொழுது பூகோளப் பங்காளிகளாகக் காணப்படும் ஒரு உலகப் பேரரசு, ஒரு பிராந்தியப் பேரரசு ஆகிய இரு பேரரசுகளுடைய உலகளாவிய வியூகங்களின் ஒரு சிறு பகுதியாக நிகழ்ந்தவைதான்.

இப்படிப் பார்த்தால் கடந்த ஐந்தாண்டுகளாக உலகின் சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலிகளிற்கு சேவகம் செய்பவர்களாக ஈழத்தமிழர்கள் மாறியிருக்கின்றார்களா? என்ற கேள்வி எழும். கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துலகப் பரப்பில ஈழத்தமிழர்களிற்கு ஆதரவான ஒரு அனுதாப அலை திரண்டிருக்கின்றது. இதற்குத் தமிழ் டயஸ்பொறாவே முக்கிய பங்காற்றியிருக்கின்றது. ஆனால், இங்கேயும் சில கேள்விகளிருக்கின்றன. சக்தி மிக்க மேற்கு நாடுகள் தமது வியூகத் தேவைகளுக்கேற்ப தமிழ் டயஸ்பொறாவை கையாண்டு வருகின்றனவா? அல்லது தமிழ் டயஸ்பொறாவானது மேற்கு நாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டு வருகின்றதா? அப்படிக் கையாளுமளவிற்குத் தமிழ் டயஸ்பொறா ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் தீர்க்க தரிசனமும் தியாக சிந்தனையும் ஜனவசியமும் மிக்கதொரு தலைமையின் கீழ் ஐக்கியப்பட்டிருக்கின்றதா?

மேற்கண்டவை அனைத்தையும் காய்தல் உவத்தல் இன்றித் தொகுத்துப் பார்;;தால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் அரசியலில் பேரசைவுகள் ஏதும் ஏற்படாததிற்கு முக்கியமாக மூன்று காரணங்களைக் கூற முடியும்.

முதலாவது, விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்ற போதிருந்த அதே உலகச் சுழலும் பிராந்தியச் சூழலும் பெருமளவிற்கு மாறாதிருப்பது.

இரண்டாவது, மே 18 இன் போதிருந்த அதே தென்னிலங்கை அரசியல் சூழலே மேலும் புதிய திருப்பங்களோடு நீடித்திருப்பது.

மூன்றாவது, புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்ற போதிருந்த அதே உட்சமூகச் சூழல்தான் தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுதும் பெருமளவுக்கு மாறாது நிலவுவது. அதாவது, தமிழர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டவைகள் போதாது என்பது.

இதில் முதலிரு காரணங்களையும் பற்றி ஏற்கனவே, கடந்த வாரக் கட்டுரையில் எழுதப்பட்டுவிட்டது. மூன்றாவது காரணத்தை சற்று ஆழமாகப் பார்ப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும். அதாவது, ஈழத்தமிழர்கள் வீழ்ச்சியிலிருந்து போதியளவுக்கு கற்றுக்கொள்ளத் தவறியதும், கடந்த ஐந்தாண்டு காலத் தேக்கத்திற்கு ஒரு காரணம் தான் என்பது. ஆயின் அப்படிக் கற்றுக்கொள்ளத் தவறியதற்குக் காரணம் என்ன?

பதில் மிகவும் எளிமையானது. அதாவது, ஈழத்தமிழர்கள் தமது இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்க முழு அளவிற்குத் தயாரற்றுக் காணப்படுகின்றார்கள். இறந்த காலத்தை -போஸ்ற்மோர்ட்டம்- பிரேத பரிசோதனை செய்யத் தயாரில்லை என்றால் எப்படி அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது?

சரி, இப்பொழுது அடுத்த கேள்வியைக் கேட்கலாம். ஈழத் தமிழர்கள் தமது தோல்வியை போதியளவு பிரேத பரிசோதனை செய்யத் தவறியதற்குக் காரணங்கள் எவை?

பின்வரும் பிரதான காரணங்களை அடையாளங் காண முடியும்.

முதலாவது, அதற்குரிய ஒரு காலச்சூழல் இன்னமும் கனியவில்லை எனப்படுவது.

இரண்டாவது, அதற்குரிய ஒரு விமர்சன மரபு தமிழர்கள் மத்தியில் இல்லை என்பது.

மூன்றாவது, அதற்கு வேண்டிய துணிச்சலான விமர்சகர்கள் தமிழர்கள் மத்தியில் மிகக் குறைந்தளவே உண்டு எனப்படுவது.

இம்மூன்று காரணங்களையும் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும்.

முதலாவது, அதற்குரிய காலம் இன்னமும் கனியவில்லை எனப்படுவது. ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் இறந்தவர்களை நினைவு கூர முடியவிலலை. இறந்தவர்களையும், காணாமற்போனவர்களையும் எண்ணிக் கணக்கிடவும் முடியவில்லை. எனவே, கொழும்பில் வெற்றிவாதம் கோலோச்சும் ஓர் அரசியற் சூழலில் தோற்கடிக்கப்பட்ட தரப்பானது வெற்றிபெற்ற தரப்பின் மீது கோபத்தோடும் பழிவாங்கும் உணர்ச்சியோடும் தான் காணப்படும். அப்படிப்பட்ட ஓர் அரசியல் முன்னுக்கு வரும்போது எல்லாத் தீமைகளுக்கும் எதிர்த் தரப்பையே அது குற்றம் காணும். நடந்து முடிந்த தோல்விகளுக்கும் இழப்புகளுக்கும் அது எதிர்தரப்பையும், எதிர்த்தரப்பின் நண்பர்களையுமே குற்றம் காணும். மாறாக, உள்நோக்கித் திரும்பி தன்னை சுய விசாரணை செய்ய முற்படாது. இவ்விதமாக ''எதிரிக்கு எதிரான' ஒரு அரசியல் போக்கு அநேகமாக கறுப்பு – வெள்ளையானது தான், கொழும்பில் வெற்றிவாதம் கறுப்பு – வெள்ளையாக ஆட்சி செய்யும் போது அதற்கு எதிரான தமிழ் அரசியலும் கறுப்பு – வெள்ளையாகத் தானிருக்கும் என்று இப்போக்கை ஆதரிப்பவர்கள் கூறுவார்கள்.

இத்தகையதொரு பின்னணியில் தோல்விக்கும், இழப்புக்கும் வெளியிலிருந்து காரணங்களைத் தேடும் ஒரு சமூகம் தனக்குள்ளிருக்கக்கூடிய காரணங்களைக் கண்டுபிடிக்காது. இதனால் அது உள்மருந்து எடுக்காமல் வெளிக் காயத்திற்கே மருந்து கட்ட முயற்சிக்கும். அதாவது, நோயின் ஆழவேர்களைக் கண்டுபிடிக்காது நோய்க் கிருமிகளோடு வாழ முற்படும். இது எங்கே கொண்டு போய் விடும்?

சில படித்த ஈழத்தமிழர்கள் கூறுகிறார்கள் இது சுய விமசர்னத்துக்குரிய ஒரு காலம் அல்ல என்று. ஏனெனில், இப்பொழுது நாட்டில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை மட்டும்தான் சொல்ல முடியும். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூற முடியாது என்று. இதனால், ஒரு பகுதி உண்மையை விழுங்கிக் கொண்டு எழுதப்படும் எந்த ஒரு விமர்சனமும் முழுமையற்றது என்றும் அத்தகைய விமர்சனங்களை எழுதுபவர்கள் அவற்றை எழுதாமலே விடுவது உத்தமம் என்றும்.

ஆனால், இங்குள்ள கொடூமையான உண்மை எதுவெனில், இக்கட்டுரையாசிரியரும் உட்பட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து எழுதும் எவருமே முழு உண்மைகளை எழுதுவதில்லை என்பதுதான். கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உண்மையின் ஏதோ ஒரு பகுதி விழுங்கப்பட்டே வந்துள்ளது. அதற்கு வெளித்தணிக்கையும் உட்தணிக்கையுமே காரணங்களாகும். வெளித் தணிக்கையென்பது வெளியிலிருந்து வரும் ஒரு நிர்ப்பந்தம். உட் தணிக்கை அல்லது சுயதணிக்கை எனப்படுவது ஒன்றில் அரசியல் சாய்வு காரணமாகவோ குரூட்டு விசுவாசத்தின் காரணமாகவோ அல்லது ஏதோ ஒரு உன்னதமான விளைவுக்காகக் காத்திருப்பதிலிருந்தோ வரும் அல்லது உண்மையின் எல்லாப் பரிமாணங்களையும் அறியாமலிருப்பதிலிருந்தும் அதாவது அரைகுறை விளக்கத்திலிருந்தும் வரும். எதுவாயினும் சுய தணிக்கை எனப்படுவது பெரும்பாலும் அரசியல் சாய்வு அல்லது வாங்கும் சம்பளத்தின் பாற்பட்டதுதான்.

மேற்சொன்ன இரு தணிக்கைகள் காரணமாக உண்மையை விழுங்கும் ஒரு மரபே கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக நிலவி வந்துள்ளது. உண்மையின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொண்டு வரக்கூடிய ஒரு சூழல் கனியும் வரை எழுதக்கூடாது என்று சொன்னால் ஈழத்தமிழர்களில் யாருமே எழுத முடியாது.

இப்படியாக உண்மையின் ஏதோ ஒரு பகுதி விழுங்கப்பட்டதற்கு இக்கட்டுரையாளரும் உட்பட தமிழில் எழுதியஇ எழுதிக் கொண்டிருக்கின்ற எல்லாருமே பொறுப்புத்தான். எல்லா ஊடகங்களும், ஆய்வாளர்களும், புத்திஜிவிகளும், படைப்பாளிகளும் பொறுப்புத்தான்.

ஆக மொத்தத்தில் இது ஒரு கூட்டுப் பொறுப்பு. அல்லது கூட்டுப் பழி என்று கூடச் சொல்லாம். நந்திக் கடற்கரையில் நிகழ்ந்த ஆகப் பெரிய அழிவுக்கு இதுவும் ஒரு காரணம் தான். இது முதலாவது.

இரண்டாவது, தமிழில் அப்படிப்பட்ட மரபு இல்லை என்பது. இதுவும் ஏறக்குறைய முதல் காரணத்தின் தொடர்ச்சிதான். தமிழில் அப்படியொரு மரபு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனுமொரு நக்கீர மரபு தமிழர்களிடமிருந்தது. இராமலிங்க வள்ளலார் ஒரு வணக்கத்தற்குரிய ஆளுமையாக இருந்தபோதிலும் அவருக்கு எதிராக அருட்பாவா மருட்பாவா என்று வழக்குத் தொடுக்க ஒரு ஆறுமுக நாவலர் இருந்தார். எனவே, தமிழில் அப்படியொரு மரபு இல்லையென்று கூற முடியாது.

ஆனால், ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு நக்கீரர்கள் ஒன்றில் கொல்லப்பட்டார்கள். அல்லது தாக்கப்பட்டார்கள். அல்லது பங்கரில் வைக்கப்பட்டார்கள் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டைவிட்டு வெளியேறினார்கள். கேள்வி கேட்பவர்களை துரோகிகளாகச் சித்தரிக்கும் ஓர் அரசியல் மிதவாதிகளிடமிருந்தே தொடங்கியது. அது பின்னாளில் ஆயுதப் போராட்டத்தின் போது அதன் முழு அளவிலான விகார வளர்ச்சியைப் பெற்றது.

இப்பொழுது கூட்டமைப்பு தன்னை ஆயுதப் போராட்ட மரபிலிருந்து விலக்கிக்காட்ட முற்படுகிறது. அதன் உயர்பீடம் தன்னை கூடிய பட்சம் புலி நீக்கம் செய்துவிட்டது.

ஆனால், அக்கட்சியானது தன்னைப் புலி நீக்கம் செய்து கொண்டமைக்கான காரணங்களை இன்று வரையிலும் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரில்லை. அதன் உயர் மட்டத்தினர் பேட்டிகளின்போதும், உரைகளின்போதும் தெட்டம்தெட்டமாகத் தெரிவித்துவரும் கருத்துக்களைத் தவிர அதை ஒரு பகிரங்கமான வாதப் பரப்பாகத் திறக்க கூட்டமைப்பு தயங்குகிறது. குறிப்பாக, வடமாகாண முதலமைச்சர் இது தொடர்பில் அறநெறியின் பாற்பட்டு அவ்வப்போது கருத்துக்களைக் கூறிவருகிறார். ஆனால், தேர்தல் மேடைகளில் அவர் பேசியவற்றுக்கும் இப்பொழுது அறநெறிக்கூடாக அவர் செய்யும் ஒப்பீடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை எப்படி விளங்கிக்கொள்வது?

மேலும் கூட்டமைப்பின் உயர் பீடம் அது தோல்விகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையிற்தான் இப்போதுள்ள நிலைப்பாட்டிற்கு வந்ததாக ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. ஆனால், அந்தக் கட்சி அதன் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஏறக்குறைய ஆயுதப் போராட்ட அரசியல் மரபையே பிற்பற்றி வருகிறது. முடிவுகள் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, அவை மேலிருந்து கீழ் நோக்கி வழங்கப்படுபவைகளாகவே தெரிகின்றன. ஆயின் தோல்விகளிலிருந்து கூட்டமைப்பு பெற்ற படிப்பினைகள் எவை?

கூட்டமைப்பு மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்போக்காகக் காணப்படும் ஊடகங்களும், புத்திஜீவிகளும், விமர்சகர்களும், படைப்பாளிகளும்கூட இது விசயத்தில் ஒருவித கள்ள மௌனத்தை காத்து வருகிறார்கள். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கள்ள மௌனம் நந்திக் கடற்கரையில் கொண்டு வந்து நிறுத்தியது. அதற்குப் பின்னரான ஐந்தாண்டுகால மௌனம் தமழர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தும்? இது இரண்டாவது.

மூன்றாவது தமிழர்கள் மத்தியில் அத்தகைய விமர்சகர்கள் குறைவு என்பது.இது இரண்டாவது காரணத்தின் தொடர்ச்சி தான்.

ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஓர்கானிக் புத்திஜீவிகள் தமிழில் மிக அரிது. தமது நிலையான நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு இயக்கங்களுடன் கள்ளப் பெண்டாட்டி உறவு வைத்திருந்தவர்களே அதிகம். இது காரணமாகவே இயக்கங்களும், புத்திஜீவிகளை ''கதைகாரர்கள், கற்பனாவாதிகள், சாகப் பயந்த கோழைகள்' என்று சொல்லித் தூர வைத்தன. இதனால், ஒரு பலமான சுயவிமர்சனப் பாரம்பரியம் உருவாக முடியாது போயிற்று. அறிவும் - செயலும் அல்லது அறிவும் - வீரமும் ஒன்றை மற்றது இட்டு நிரப்பவல்ல ஒரு செழிப்பான இடை ஊடாட்டப் பரப்பு தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே இருந்தது.

அதாவது, செழிப்பான, உலகத் தரத்திலான சிந்தனைக் குழாம்களை உருவாக்க முடியாத ஒரு போராட்டமாக தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் காணப்பட்டது. அது தோற்கடிக்கப்பட்ட ஐந்தாண்டுகளான பின்னரும் அப்படிப்பட்ட சிந்தனைக் குழாம்களையோ அல்லது ஆராய்ச்ச்p மையங்களையோ உருவாக்க முடியவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

தமிழ் டயஸ்பொறாவிடம் போதியவு பணம் உண்டு. போதியளவு அறிவுஜீவிகள் உண்டு. சிந்தனைக் குழாம் ஒன்றை உருவாக்க எவை தேவையோ அவை அனைத்தும் அங்குண்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக அவர்களால் ஏன் ஆராய்ச்சி மையங்களையும், சிந்தனைக் குழாம்களையும் உருவாக்க முடியவில்லை? தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள தரப்புகள் மத்தியிலும் ஏன் அத்தகைய முன் முயற்சிகள் எடுக்கப்படவில்லை? தனக்கென்று உலகத் தரத்திலான ஆராய்ச்சி மையங்களையும், சிந்தனைக் குழாம்களையும் உருவாக்க முடியாத ஒரு டயஸ்பொறா பலமானதா? அல்லது பலவீனமானதா?

இன்று இக்கட்டுரையானது பெரும்பாலும் விடைகளைக் கூற முற்படவில்லை. மாறாக கேள்விகளை முன்வைக்கவே விரும்புகிறது. ஒரு பேரழிவுக்கும் பெரும் வீழ்ச்சிக்கும் பின்னரான கடந்த ஐந்தாண்டுகளாக தமிழர்களுடைய அரசியலை பெருமளவுக்கு அசையாது தேங்கி நிற்கிறது என்றால், அல்லது அது சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்தப்படும் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு யார் பொறுப்பு? விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பூகோளப் பங்காளிகளும் இலங்கை அரசாங்கமும் மட்டும்தானா பொறுப்பு? தமிழ் ஊடகங்களும், அறிவுஜீவிகளும் விமர்சகர்களும், படைப்பாளிகளும், இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட்ட தமிழில் அரசியல் எழுதும் அனைவரும் பொறுப்பில்லையா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107027/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.