Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1

சுந்தர் வேதாந்தம்

Brain_See_Inside_Touch_Feel_1.png

கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்கை அவயங்களை எடுத்துவிட்டு புதிய செயற்கை உதிரி பாகங்களைப் பொருத்துகிறோம். ஆனால் உடலின் மிக முக்கியமான ஒரு அவயமாக இருந்த போதிலும் மூளை மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஐன்ஸ்டைனையும் சேர்த்து, ஆயிரக்கணக்கான இறந்துபோனவர்களின் மூளைகளை வெட்டிப்பார்த்து சோதனைகள் செய்தும், உயிரோடு இருக்கும் பலரை பல்வேறு நிலைகளில் எம்ஆர்ஐ (MRI: Magnetic Resonance Imaging) ஸ்கேன் செய்தும் பல்லாண்டுகளாக அதை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிகள் விடாமல் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்ற பத்து நூற்றாண்டுகளைவிட கடந்த பத்து ஆண்டுகளில் மூளை எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பது உண்மைதான். இருந்தும், மூளையின் இந்தப்பகுதி இந்த பொறுப்பை ஏற்று செயல்படுகிறது போலிருக்கிறது என்ற ஒரு குத்துமதிப்பான புரிதலுக்குதான் இதுவரை வந்திருக்கிறோம். மூளை மாற்று அறுவை சிகிச்சையோ செயற்கை மூளை தயாரிப்போ நம் வாழ்நாட்களுக்குள் சாத்தியம் என்று தோன்றவில்லை. இந்தத்துறையைப்பற்றி சுவையான புத்தகங்கள்[1] எழுதியிருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் டாக்டர் வீ.எஸ்.ராமசந்திரன், இன்றைக்கும் ஒரு உயர்நிலை. பள்ளி மாணவன் சாதாரணமாக யோசித்து மூளையைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கு கூட இத்துறை நிபுணர்களிடம் சரியான பதில்கள் இல்லை என்ற நிலை என்னை வசீகரித்து இத்துறை ஆய்வில் ஈடுபட உந்தியது என்று சொல்வார். அவருடைய விரிவுரைகளை யுட்யூப், டெட் (TED) முதலிய வலைத்தளங்களில் பார்த்து ரசிக்கலாம்.

http://www.youtube.com/watch?v=ojpyvpFLN6M

Human_Brain_Neurons_Connections_Visual_A

நான் என்கிற பிரக்ஞை நம் மூளைக்குள் எப்படி வருகிறது என்பது போன்ற தத்துவார்த்தமான சிக்கல் கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும், சும்மா நம் காதில் விழும் ஒலி எப்படி மூளைக்கு சென்று சேர்ந்து புரிந்து கொள்ளப்படுகிறது என்பது போன்ற சற்றே எளிதான செயல்பாட்டுமுறை கேள்விகளுக்கு கூட மிகச்சரியான முழு விடைகள் இன்னும் கிடைக்கவில்லை. காதிலிருந்து மூளைக்கு ஒலி அலைகளை எடுத்துச்செல்லும் நரம்புகள் பழுது பட்டிருந்தால் காது சுத்தமாய் கேட்காமல் போய்விடும். எந்தவிதமான ஒலியையும் பிறந்ததிலிருந்து கேட்காதவர்கள் பேசவும் முடியாதல்லவா? எனவே 1950களில் இருந்து இந்தக்குறை உள்ளவர்களுக்கு காதுக்கு பக்கத்தில் சிறிய மைக் ஒன்றை பொறுத்தி, சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலிகளை மின் அதிர்வுகளாக மாற்றி, அதை ஓயர் வழியே காதுக்குள் இருக்கும் காக்லியா என்ற இடத்திற்குள் செலுத்தி, அங்கிருந்து வழக்கமான பாதை வழியே மூளைக்கு அனுப்பி காது கேட்பது போல் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டு இருக்கிறார்கள். காக்லியர் இம்ப்ளாண்ட் (Cochlear Implant) என்று சொல்லப்படும் இந்த கருவிகள் மூன்று லட்சம் பேர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. பல லட்ஷக்கணக்கில் பணம் தேவைப்படும் இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சைக்கு அப்புறம் கூட சிகிச்சை பெற்றவர்கள் காது கேட்கும் திறனை முழுவதும் பெறுவதில்லை. அதற்கு காரணம் வெவ்வேறு ஒலிகளை கேட்கும்போது இயற்கையாக எத்தகைய மின் அதிர்வுகள் நம் காதுக்குள் ஏற்படுகின்றன, அந்த அதிர்வுகள் மூளையால் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதெல்லாம் நமக்கு இன்னும் சரியாக புரியாததுதான். இப்போதைக்கு ஒரு ஐம்பது சதவிகிதம் காது கேட்பதாக சொல்கிறார்கள். பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கும்போது ஐம்பது சதவிகிதம் நல்ல முன்னேற்றம்தான்.

Cochlear_Implant_Hearing_Nerve_Sound_Pro

இதே உத்திகளை பயன்படுத்தி பிறவியிலிருந்தே கண் பார்வை இல்லாதவர்களுக்கு முடிந்த அளவு பார்வைத்திறனைத்தரும் முயற்சியும், நடந்து கொண்டு இருக்கிறது[2]. கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு கண்ணாடி போன்ற கருவியை கொடுத்து அணிந்துகொள்ளச்சொல்லி அதில் சிறிய காமெராக்களைப்பொறுத்தி, எதிரே உள்ள காட்சிகளுக்கேற்ப மின் அதிர்வுகளை உருவாக்கி அவற்றை கண்களுக்கு பின்புறம் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குள் செலுத்தி எவ்வளவு தூரம் மூளைக்கு படம் காட்ட முடியும் என்று ஆய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆராய்ச்சியை பற்றி அடுத்த இதழில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம். இப்போதைக்கு நிழல், புள்ளி என்பதுபோல் ஏதோ பஜ்ஜென்று தெரிய வைத்து கரகோஷம் பெற்றிருக்கிறார்கள்.

இதெல்லாம் மிகவும் கடினமான சிறிய முன்னேற்றங்கள் அதுவும் மனம் தளரவைக்கும் வேகத்தில் நடப்பவை போல் தெரிகிறதே என்று எண்ணினீர்களானால், அங்கேதான் கதை மாறுகிறது! இந்த ஆய்வுகளில் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இணைப்பு விட்டுப்போன இந்த நரம்புகளுக்கு செயற்கையாய் ஒட்டுப்போட்டு ஏதோ நமக்கு தெரிந்த வரையில் மின் அதிர்வுகளை சுமாராக ஏற்படுத்தி மூளைக்கு அனுப்பி வைத்தோமானால், நமது அசகாய மூளை உள்ளே வரும் அரைகுறை சமிக்ஞைகளை (Signals) வாங்கி தானே அதை எப்படி அலசி புரிந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டு விரைவில் நன்கு செயல்பட ஆரம்பித்து விடுகிறது! கொஞ்சம் யோசித்தால் எனக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை உங்களுக்கு சிவப்பு நிறமும், உங்களுக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை எனக்கு மஞ்சள் நிறமும் ஏற்படுத்தலாம் என்பது நமக்கு புரியும். நானும் நீங்களும் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு வண்ணமும் நமது மூளைக்குள் ஏற்படுத்தும் சலனங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால், இந்த வித்யாசங்களால் எந்த பாதகமும் இல்லாமல் ட்ராஃபிக் விளக்குகளை ஒரே மாதிரி புரிந்துகொண்டு வண்டி ஓட்ட முடிகிறது. அது போல பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களும், கண் தெரியாதவர்களும், ஒவ்வொரு ஒலி, ஒளிக்கேற்ப ஒரு சமிக்ஞை உள்ளே வர ஆரம்பித்தால், அதைக்கற்றும் புரிந்தும் கொண்டும் இயங்க ஆரம்பித்து .விடுகிறார்கள். பிறவியிலிருந்தே அந்த புலன்கள் ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கு உள்ளே வரும் சமிக்ஞைகளில் இருந்து, நாம் உருவாக்கி உள்ளே செலுத்தும் இந்த செயற்கை சமிக்ஞைகள் சற்று வேறுபட்டாலும் ஊனமுற்றவர்களின் மூளைக்கு அவை புதிய சமிக்ஞைகள் என்பதால் அவர்களுக்கு அவை பழகிவிடுகின்றன. குறிப்பிட்ட (ஒலி அல்லது) ஒளிக்கான சமிக்ஞை கண்டபடி நாளுக்கு நாள் மாறினால் மட்டுமே குழப்பம். இப்படி வளைந்து கொடுத்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் மூளையின் கில்லாடி திறனுக்கு நியூரோப்ளாஸ்டிசிடி (Neuroplasticity) என்று பெயர்.

Brain_Cartoons_Comics_Graphics_Weight_Li

கை கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை கால்களை பொறுத்திக்கொடுத்து அவர்களை முடிந்த அளவு நேர்ப்படுத்துவதுபோல், ஐம்புலன்களில் ஏதாவதொன்றை பிறவியிலேயோ அல்லது வாழ்வின் இடையிலோ இழந்தவர்களுக்கு செயற்கை உபகரணங்களை (Prosthesis) பொறுத்தி அந்த திறனை திரும்ப பெற்று தருவது மருத்துவத்துறையின் வெகுநாளைய போராட்டம். இந்தத்தேடல் அல்லது தேவை எல்லோருக்கும் எளிதாகப்புரியும் விஷயம். ஆனால் அந்த முயற்சியின் வழியாக நாம் பெற்றிருக்கும் அனுபவத்தைக்கொண்டு, நரம்பியல், மூளை முதலியவற்றை பற்றிய சம்பிரதாயமான ஆய்வுகளைத்தாண்டி, இதுவரை மனிதர்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதிய புலன்களை அமைத்துக்கொடுத்து புதிய திறன்களை மனித மூளைக்கு கொடுக்க முடியுமா என்பது எளிதாக எல்லோருக்கும் தோன்றாத ஒரு புத்திசாலித்தனமான கேள்வி.

பீட்டர் கியோனிக் (Dr Peter König) இந்தக்கேள்வியில் ஈடுபாடு கொண்ட ஒரு ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்/ஆய்வாளர். இதற்கு பதில் சொல்லும் முயற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு டஜன் குட்டி மோட்டார்களை எடுத்து ஒரு பட்டை பெல்ட்டில் ஒட்டினார். ஒவ்வொரு மோட்டாரும் பதினைந்து வருடங்களுக்கு முன் உபயோகத்தில் இருந்த பேஜர்களைப்போன்றவை. இவற்றோடு பெல்ட்டில் ஒரு சிறிய GPS கருவி மற்றும் பேட்டரி. பெல்ட்டைக்கட்டிக்கொண்டு ஸிவிட்சை தட்டிவிட்டால் அந்த பன்னிரண்டு மோட்டார்களில் எந்த மோட்டார் வடக்குபுறம் இருக்கிறதோ அது மட்டும் விடாமல் செல்போன் அதிர்வதுபோல் அதிர்ந்து கொண்டே இருக்கும். அதாவது, பெல்ட்டைக்கட்டிக்கொண்டு வடக்கு திசையை நோக்கி நின்றீர்களானால், உங்கள் தொப்பிளுக்கு நேரே உள்ள மோட்டார் அதிரும். இப்போது மெதுவாக ஒரு அரைச்சுற்று சுற்றி தெற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் முதுகில் உள்ள மோட்டார் அதிரும். இன்னொரு கால்சுற்று சுற்றி மேற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் வலது கைக்கு அருகே உள்ள மோட்டார் அதிரும். ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) என்று பெயரிடப்பட்ட இந்த பெல்ட்டின் படங்களைப்பார்த்தால், நான் சொல்ல முனைவது சுலபமாகப்புரிந்துவிடும்.

Vibration_Motor_Sensor_Feel_Space_Wrist_

இந்த பரிசோதனையில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் ஒரு இரண்டு மாதங்கள் இந்த பெல்ட்டை நாள் பூராவும் அணிந்திருந்தார்கள். ஆரம்பித்த முதல் சில மணிநேரங்கள் விடாமல் இடுப்பில் ஏதோ ஒரு பக்கம் இந்த மெல்லிய அதிர்வு இருந்து கொண்டே இருந்தது வினோதமான நச்சரிப்பாகத்தோன்றினாலும், ஒரே நாளில் இடைவிடாத அந்த அதிர்வு மிகவும் பழகிப்போய் விட்டதாம். மறுநாள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சைக்கிள் ஓட்டிக்கொண்டு வரும்போது, ஒவ்வொரு திருப்பத்திலும் இடுப்பில் அதிர்வு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு பூச்சி மாதிரி ஓடி, வடக்கு எந்தப்பக்கம் என்று விடாமல் நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. மொத்தத்தில் இந்த பெல்ட் அணிந்தவர்களின் மூளைக்கு அந்த இடைவிடாத மெல்லிய இடுப்பு அதிர்வு மூலம் வடதிசை எந்தப்புறம் என்று எப்போதும் தெரிந்து இருந்தது. அந்தத்தகவல் அவர்களுக்கு அந்த கணம் தேவையோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்களோ, திறந்து வைத்திருக்கிறார்களோ, இரவோ பகலோ, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கிறார்களோ அல்லது வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களோ அல்லது சைக்கிள், கார், ரயில் எதிலும் பயணித்துக்கொண்டு இருக்கிறார்களோ கவலை இல்லை. வடக்கு திசை எந்தப்புறம் என்ற தகவல் நாள் பூராவும் அவர்களின் மூளைக்குள் விடாமல் சென்று கொண்டே இருந்தது. இது இவர்களுக்கு ஸ்பெஷலாக வழங்கப்பட்ட, சில இடம் பெயரும் பறவைகளுக்கு இருப்பதைப்போன்ற, ஒரு புதிய புலன்!

இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த இடுப்பு உறுத்தல் மிகவும் பழகிப்போய் ஏறக்குறைய மறந்தே போய்விட்டாலும், காரில் பயணிக்கும்போது தன்னையறியாமல் சாலை எவ்வளவு வளைந்து வளைந்து போகிறது என்பது அவர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது! வீட்டில் சும்மா டி‌வி பார்க்கும்போது என் ஆஃபிஸ் இருப்பது அந்தப்பக்கம் என்று மிகச்சரியான திசையை நோக்கி ஓர் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது! இரண்டு வாரங்களுக்குப்பின் புதிய ஊர்களுக்கு போனாலும்கூட ஊரின் மேப் மூளைக்குள் தானாகவே உருவாக ஆரம்பித்து, என்னை எங்கே கொண்டுபோய் விட்டாலும் நான் நிச்சயம் தொலைந்து போகவே மாட்டேன் என்ற அசாத்திய தன்னம்பிக்கை வந்து விட்டதாம்! முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை செய்யும்போது மெக்காவை நோக்கி தொழும் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எந்த ஊரில் எந்த அறைக்குள் இருந்தாலும், மெக்கா எந்தப்பக்கம் என்று இந்த ஃபீல் ஸ்பேஸ் பெல்ட்காரர்களால் சுலபமாக சுட்டிக்காட்ட முடிந்திருக்கும்! திசை என்ற தலைப்பில் சொல்வனத்திலேயே ஒரு கட்டுரை எழுதிய சுகா கூட இந்த முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார். இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தபின் பேராசிரியர் பீட்டர் கியோனிக், சரி பரிசோதனை முடிந்தது, பெல்ட்டைக்கொடுங்கள் என்று திரும்ப வாங்கிக்கொண்டார். அவ்வளவுதான், பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் ஏதோ ஒரு பழகிய திறனை திடீரென்று இழந்தாற்ப்போல் ஒரு மனம் கலங்கிய நிலை, மனச்சோர்வு, குழப்பம்! இதெல்லாம் விலகி பழைய நிலைமை திரும்ப ஒரு வாரம் ஆகியது!

இந்த அழகான சோதனையிலிருந்து தெளிவாகப்புரிவது எப்படியாவது விஷயங்களை சேகரித்து மூளைக்கு அனுப்பி வைத்தால் அதுவாகவே வெகு விரைவில் அந்த தகவல்களைப்படித்து புரிந்து கொண்டு உபயோகிக்க ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த அற்புதமான திறன் நமக்கு நன்கு புரிந்த ஐம்புலன்களை இன்னும் செம்மைப்படுத்த (உதாரணமாக நமக்கு எப்போதும் இருக்கும் சாதாரண மோப்ப சக்தியை ஒரு நாயின் மோப்ப சக்தியின் அளவுக்கு உயர்த்துவது) மட்டும் இல்லாமல், நமக்கு இதுவரை இல்லவே இல்லாத புதிய புலன்களை பெறவும் சாத்தியக்கூறுகள் உள்ளதை நிரூபிக்கிறது.

இந்தக்கொள்கையின்படி நிலநடுக்கம் வருவதையோ, டால்ஃபின் அல்லது வௌவால் அல்ட்ராசோனிக் அதிர்வெண்களில் (Frequency) ஒலியெழுப்புவதையோ நாம் உணரவேண்டுமெனில், அதற்கு தகுந்த உணர்விகளை (sensor) உபயோகித்து, நமக்கு புரியும் ஐம்புலன்களில் ஒன்றுக்கு எட்டும்படியான சமிக்ஞையாக மாற்றி மூளைக்குள் செலுத்திவிட்டால் போதும். அதற்கப்புறம் மூளை பார்த்துக்கொள்ளும்!

(தொடரும்)

சான்றாதாரங்கள்

1. V. S. Ramachandran “A Brief Tour of Human Consciousness: From Imposter Poodles to Purple Numbers”, Pi Press, New York, 2004.

2. http://www.forbes.com/sites/matthewherper/2013/02/14/fda-approves-first-bionic-eye/

.- See more at: http://solvanam.com/?p=33408#sthash.M0oGBNv4.dpuf

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாணதொரு இனைப்பு நன்றி கிருபன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 2
சுந்தர் வேதாந்தம்
 


Neuro1.png

 

ஒரு பெரிய நகரத்தில் வாழ்வதால் ஒளி மாசுபாடு (Light Pollution) காரணமாக இரவில் வான் நட்சத்திரங்களை பார்த்து பழக்கமற்ற என் நண்பரின் குழந்தை ஒன்று, ஓரிரவு அபூர்வமாக வானில் நட்சத்திரங்களை பார்த்தபோது, வானம் தான் சமீபத்தில் பார்த்த ப்ளனடேரியம் (Planetarium) போலவே இருக்கிறது என்று சொன்னது வேடிக்கையாய் இருந்தது. அதுபோல் சில சமயங்களில் இயற்கையாக உருவாகியிருக்கும் சில விஷயங்களை நமக்கு பரிச்சயமான சில செயற்கை விஷயங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது எளிதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

அப்படிப்பார்த்தால், மூளையை உங்கள் மேஜை கணினிக்கும், நமது புலன்களை கீ போர்டு, மவுஸ், காமிரா போன்ற கணினியுடன் இணைந்து இயங்கும் கருவிகளுக்கு இணையாகவும் உருவகிக்கலாம். கணினிகளில் நிறைய யு‌எஸ்‌பி (USB) துறைமுகங்கள் அமைக்கப்பட்டு புலன் கருவிகளை இணைத்துக்கொள்ள வழி செய்யப்பட்டு இருப்பதைப்போல் மூளையிலும் வரும் செய்திகளைப்பெற்றுக்கொள்ள குறைந்தது ஐம்புலன்கள் என்ற ஐந்து துறைமுகங்கள் காத்திருக்கின்றன. ஒரு மவுஸ் கணினியுடன் இணைக்கப்படும் யு‌எஸ்‌பி போர்ட்டில் (USB Port) அதற்கு பதில் ஒரு ஜாய் ஸ்டிக் (Joy Stick) அல்லது தொடுபலகை (Touch Pad) ஒன்றை இணைத்தும்கூட நிலைக்காட்டியை (Cursor) நாம் நகர்த்த இடும் கட்டளைகளை கணினிகள் புரிந்துகொண்டு செயல்படுவதைப்போல் மூளையாலும் செயல்பட முடிகிறது. என்ன, அந்த ஜாய் ஸ்டிக், தொடுபலகை, மவுஸ் என்று கணினியுடன் இணைக்கப்படும் ஒவ்வொரு விதமான உணர்விகளையும் கணினிகள் புரிந்துகொள்ள பல மென்பொருள் பொறியாளர்கள் டிரைவர் (Driver), அப்ளிகேஷன் (Application) என்று நிரலிகள் எழுதி அவற்றை கணினிகளில் ஓட்டி எல்லாம் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று சோதித்து மாதக்கணக்கில் மெனக்கிட வேண்டும். இயற்கை உயிரியலில் பரிணாமவளர்ச்சி என்ற பொறியாளரைக்கொண்டு இந்தக்காரியங்களை எல்லாம் எப்போதோ செய்து முடித்திருப்பதுபோல் தெரிகிறது! துரதிருஷ்டவசமாக நமக்கு எளிதாக புரியும்படியான பயனர் கையேடு (User Guide), வடிவமைப்பு விவரக்குறிப்பு (Design Specification) எதையும் இயற்கை மூளையோடு சேர்த்து நமக்கு கொடுக்கவில்லை. எனவே நாமாகவே தட்டுத்தடுமாறி அந்த கொசகொசப்பு எப்படி இயங்குகிறது, வேறு என்னென்ன உணர்விகளை அதன் துறைமுகங்களில் இணைக்கலாம் என்று புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது!

Neuro2.png

குழந்தைகள் பெரியவர்கள் முதுகில் எதையாவது எழுதி நான் என்ன எழுதினேன் என்று கேட்டு கண்டுபிடிக்கச்சொல்லி விளையாடுவது நம் எல்லோருக்கும் பழகிய விஷயம். 1960களிலேயே இதை எந்த அளவு துல்லியமாக செய்ய முடியும் என்று ஆராய ஒரு சாய்வு நாற்காலி தயாரித்து அதன் முதுகு பக்கத்தில் 100×100 என்கிற கணக்கில் மழுங்கிய பிளாஸ்டிக் ஆணிகளை அமைத்தார்கள். நாற்காலியில் சட்டை போடாமல் ஒருவரை உட்கார வைத்து, இந்த மேட்ரிக்ஸ் அமைப்பில் உள்ள குமிழ்களை பின் புறத்தில் இருந்து அவர் முதுகை நோக்கி தள்ளி, அருகிலுள்ள படங்களில் காணப்படும் பிக்ஸெலெடெட் (Pixelated) உருவங்களை முதுகில் தோன்றும் அழுத்தங்களைக்கொண்டு அவரால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று சோதித்தார்கள். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் சில மணி பயிற்சிக்குப்பின் பொதுவாக எல்லோராலும் தங்கள் கண்களை மூடிக்கொண்டு முதுகில் தோன்றும் அழுத்தங்களை உணர்ந்து தங்கள் மனக்கண்களில் எளிதான உருவங்களை பார்க்க முடிந்தது! மோனாலிசாவின் மர்மப்புன்னகையை புரிந்து ரசிக்க இந்த அமைப்பின் துல்லியம் (Resolution) போதாது என்றாலும், இந்த பரிசோதனையின் மூலம் நன்றாக வேலை செய்யும் கண்களை கொண்டவர்கள் கூட தொடு உணர்வின்மூலம் “பார்க்க முடியும்” என்று தெரிந்தது.
 

 

Neuro3.png

 

இதை அடுத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருக்கும்போது மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் ஸ்பரிச உணர்வை உபயோகித்து பார்ப்பது எப்படி என்று 80களில் யோசித்துக்கொண்டிருந்த விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர். பால் பாக்கி ரீட்டா (Paul Bach-y-Rita), முதுகைவிட தொடு உணர்த்திறன் மிகவும் அதிகமான நாவினை இதற்கு உபயோகிக்க திட்டமிட்டார். வைகேப் (Wicab) என்ற ஒரு சிறிய கம்பெனியை ஆரம்பித்து அதன் வழியே இதற்காக அவர் வடிவமைத்த சிறிய மெல்லிய சர்க்யூட் போர்டு உங்கள் நாக்கின் மேல் பொருந்த வல்லது. 25×25 புள்ளிகள் கொண்ட அந்த சர்க்யூட் போர்டு ஒயர்களால் ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டு, மெல்லிய மின் அதிர்வுகளை அந்த தொடுபுள்ளிகளின் (Contact Points) வழியாக நாக்கிற்கு அனுப்பியது. லேசான, சும்மா ஒரு 9 வோல்ட் பேட்டரியை நக்கினால் நாவில் தோன்றுமே, அத்தகைய உணர்வு. அவ்வளவுதான். அந்த மேட்ரிக்ஸின் வெளி விளிம்பில் இருக்கும் புள்ளிகள் மட்டும் மின்சாரத்தை வழங்கி அதிர்ந்தால், மூளையால் ஒரு சதுரவடிவை பார்க்க முடிந்தது!
 

Neuro4-150x150.png

அந்த ஆரம்ப கட்டங்களைத்தாண்டி இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் ஒரு சிறிய காமிரா வழியே வரும் பிம்பங்களை கருப்பு வெள்ளை சாம்பல் நிற பிக்ஸல் படமாக மாற்றி நாக்கிற்கு அனுப்புகிறார்கள். கருப்பு நிறத்தைக்குறிக்க மின் அதிர்வு ஏதும் கிடையாது. சாம்பல் நிறத்துக்கு லேசாகவும் வெள்ளை நிறத்துக்கு சற்று அதிகமாகவும் மின் அதிர்வுகளை நாவிற்கு அனுப்பினால், மூளையால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. பிறவியிலேயே கண் தெரியாதவர்கள் மட்டுமின்றி, சாதாரணமாக பார்வை உள்ள நீங்களும் உங்கள் கண்களை கட்டிக்கொண்டு, இந்த சர்க்யூட் போர்டை வாயில் வைத்து லாலிபாப் போல சப்ப ஆரம்பித்தால், கிடைக்கும் சமிக்ஞைகளை ஓரிரு மணி நேர பயிற்சியிலேயே புரிந்துகொண்டு சுவற்றில் மோதிக்கொள்ளாமல் புதிய இடங்களில் நடக்கவும், தரையில் கருப்பு பெயிண்ட்டால் வரையப்பட்ட கோடுகளுக்குள் நடக்கவும் பழகி விடுவீர்கள்!

இந்த முறையை பயன்படுத்தி கோச்சடையான் படமெல்லாம் நிச்சயம் பார்க்க முடியாது என்றாலும், இந்த ஆய்வுகளின் மூலம் மனித மூளையின் கிரகிப்புத்தன்மை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிய வருகிறது. மெக்ஸிகோ தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் பணி புரிந்து வந்த டாக்டர். பாக்கி ரீட்டா 2006ல் காலமாகி விட்டார் எனினும், அவர் தொடங்கிய இந்தக்கம்பெனி இப்போது பல நாடுகளில் ப்ரெய்ன் போர்ட் (Brain Port) V100 என்ற பெயரில் இந்த கருவியை கண் தெரியாதவர்களுக்காக விற்று வருகிறது.
 

Neuro5-300x210.png

இன்னொரு இஸ்ரேலிய நிறுவனம், இதே தத்துவத்தை உபயோகித்து வடிவமைத்திருக்கும் VIA என்கிற பார்வையற்றவர்களுக்கான கருவி, நாகரீக அலங்கார நகை போல (Fashion Accessory) அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜோடியாக விற்கப்படும் இவற்றை கைக்கு ஒன்றாக அணிந்து கொண்டால், வழக்கமான கைத்தடிக்கு தேவை இல்லாமல் பார்வையற்றவர்கள் நடமாட முடியும். இதிலேயே GPS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு இருப்பதால், வாய் வார்த்தையால் எங்கே போக வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். எதிரே வரும் இடையூறுகளுக்கேர்ப்ப இது இரண்டு மூன்று விதங்களில் நம் கைகளைச்சுரண்டி போக வேண்டிய இடத்திற்கு வழி காட்டும்!

நமது காதுகளுக்குள் இருக்கும் மூன்று அரைவட்ட கால்வாய் அமைப்பு ஒரு முந்திரிப்பருப்பு சைஸ்தான். பக்கத்தில் உள்ள படத்தில் பழுப்பு நிற காது மடலுக்கு வலது புறம் சற்று சாயம் போனதுபோல் சிறியதாய் காணப்படும் அதே வளைய அமைப்புதான் பெரிதாக்கப்பட்டு வெளிர்சிவப்பு நிறத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டு மேலே உட்கார்ந்திருக்கிறது. அதற்குள் குழந்தைகளின் கிலுகிலுப்பையில் இருப்பது போல் உருண்டோடிக்கொண்டிருக்கும் சில துகள்களை வைத்துக்கொண்டு அங்கிருந்து வரும் சமிக்ஞைகளை பகுத்தறிந்து, நாம் நிற்கிறோமா, சுற்றுகிறோமா, தலைகீழாக தொங்குகிறோமா என்பது போன்ற வெளிநோக்குநிலை (Spatial Orientation) விவரங்களை, இருட்டில் நம் கண்களை கட்டிவிட்டாலும்கூட மூளை அறிந்து கொண்டுவிடுகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அந்த துகள்கள் எளிதாக உருண்டோட முடியாத நிலமை ஏற்படுவதுண்டு. உதாரணமாக கடுமையான ஜலதோஷத்தினால் அல்லது சாப்பிடும் சில மருந்துகளால் இந்த குழாய்கள் வீங்கி விடுவது ஒரு காரணம், அப்படிப்பட்ட நிலையில் அந்த துகள்கள் சுலபமாக உருள முடியாத சந்தர்ப்பங்களில் நமது சமநிலை உணர்வு (Sense of Balance) தவறிப்போய் சரியாக நடக்கக்கூட முடியாமல் தடுமாறுவோம்.

Neuro6.png

மிட்ஷல் டெய்லர் என்பவர் பாக்கி ரீட்டாவின் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சக ஆய்வாளர். இவருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை உள் காதில் வந்த ஒரு தொற்றுநோய் (Inner ear infection) தற்காலிகமாக அவருடைய பேலன்சை ஒழித்து எரிச்சலூட்டவும், இந்த சப்பு மிட்டாய் கருவியை கொண்டு ஏதாவது சமாளிக்க முடியுமா என்று யோசித்தார். உடனே சாதாரணமாக ஒரு காமிராவை இதனுடன் இணைத்து விளையாடிக்கொண்டிருந்த அவரது ஆய்வக சகாக்கள், காமிராவை கழற்றிவிட்டு அதற்கு பதில் வேக மாறுபாடுகளை உணரும் கருவி (Accelerometer) ஒன்றை அதனுடன் இணைத்தனர். இப்போது இந்த ப்ரெய்ன் போர்ட் கருவியை வாயில் போட்டுக்கொண்டு டெய்லர் ஒழுங்காக நின்று கொண்டிருந்தால் நாம் நான்கு பத்திகளுக்கு முன் பார்த்த அந்த சதுர மின் அதிர்வு அவர் நாக்கில் அசையாமல் நின்றது. அவர் இடது அல்லது வலது பக்கமாகவோ அல்லது முன்பின்னாகவோ சாய்ந்தால் நாக்கில் தெரிந்து கொண்டிருக்கும் சதுர மின் அதிர்வும் அதே பக்கம் வழுக்கிக்கொண்டு நகர ஆரம்பித்தது! அவ்வளவுதான். வெகுவிரைவில் மூளை அதுவாகவே, “அடேடே, காதிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த செய்தி நின்று போய்விட்டதே என்று நினைத்திருந்தேன். இப்போது இது வாய் வழியாக வருகிறது. பேஷ்..பேஷ்”, என்று புரிந்துகொண்டு சமநிலை உணர்வை திரும்ப கொண்டுவந்துவிட்டது!
 

Neuro7.png

 

இந்த பேலன்ஸ் புதுப்பித்தலை பற்றி புரிந்து கொள்ளும்போது, டெய்லரின் கண் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் நாக்கில் நிலவும் தொடு உணர்வு என்ற துறைமுகத்தின் வழியே பார்வை சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கை மட்டும்தான் மூளைக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதில்லை. சமநிலை உணர்வு சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கையும் இதே துறைமுகத்தின் வழியே அனுப்பி வைக்க முடியும். ஆமாமாம், புரிகிறது என்று நாம் சொல்வதற்குள் மூளையின் இன்னொரு மூலையில் ஒளிந்திருந்த ஒரு புதிய திறன் வெளிப்பட்டது.

ஷெரில் ஷில்ட்ஸ் என்ற பெண்மணி உடம்பு சரியில்லாத போது சாப்பிட்ட ஒரு அண்ட்டய்பயாடிக் (Antibiotic) மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போய் அவருடைய காதுக்குள் ஒரு பகுதியை சேதப்படுத்த, அவரும் பேலன்ஸ் இல்லாமல் நடக்கத்தடுமாறிக் கொண்டு இருந்தார். பாக்கி ரீட்டா அவரை ஆய்வகத்துக்கு அழைத்து இந்தக்கருவியை அணிந்து கொள்ளச்சொல்லி பரிசோதித்தபோது உடனேயே அவருக்கும் பேலன்ஸ் திரும்ப வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் அந்த Accelerometer தொப்பி, வாயில் வைத்துக்கொண்டு இருந்த லாலிபாப் எல்லாவற்றையும் கழட்டி வைத்தபின்பும் கொஞ்ச நேரத்திற்கு பேலன்ஸ் உணர்வு தொடர்ந்தது! இன்னும் கொஞ்சம் பரிசோதனைகள் நடத்தியதில், ஷெரில் எத்தனை நேரம் இந்த கருவியை உபயோகிக்கிறாரோ, ஏறக்குறைய அதே அளவு நேரம் இந்த கருவிகளை நீக்கிய பின்னும் பேலன்ஸ் உணர்வு ஒரு எஞ்சிய விளைவாக (Residual Effect) நிலைத்திருந்தது தெரிய வந்தது! திரும்பத்திரும்ப முயற்சித்ததில், அந்த எஞ்சிய விளைவு நீண்டு கொண்டேபோய், இப்போது இந்த சிகிச்சைக்கு தினப்படி அவசியம் ஏதும் இல்லாமல் ஷெரில் தனது பேலன்ஸ் உணர்வை திரும்ப பெற்று விட்டார். இந்த யுட்யூப் வீடியோவில் ஒரு காலத்தில் ஒழுங்காக நிற்கவே தடுமாறிய அவர் இப்போது குஷியாய் தானாகவே சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருப்பதைப்பார்க்கலாம்! இது எப்படி சாத்தியம் என்றால், மூளை பழுதாகிப்போன அந்த ஒரிஜினல் பாதையை விட்டுவிட்டு இதே செய்திகளை வேறொரு வாயில் வழியாக திரும்ப பெற்று அதை உணர்ந்தறிய கற்றுக்கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள்!

http://www.youtube.com/watch?v=7s1VAVcM8s8&feature=player_embedded

சென்ற இதழில் நாம் சொன்னதுபோல், ஒரு புலனை நாம் இழக்கும்போது வேறு ஒரு வழியில் அந்த புலனை திரும்பக்கொண்டு வருவது ஒரு புறம் இருக்க, இத்தகைய முறைகளை உபயோகித்து இல்லாத புதிய திறன்களை கொடுத்து மனித இனத்தை மேம்படுத்துவது இன்னும் சிலாகிதம். இந்த புதிய சிந்தனையின்படி எங்கெங்கு யாருக்கு எப்படிப்பட்ட புதிய திறன்களைக்கொடுப்பது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று சோதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சுவையான உதாரணம்? இருட்டில் கூட உள் காதில் இருந்து வரும் சமிக்ஞைகளைக்கொண்டு மூளை நமக்கு பேலன்ஸ் தவறாமல் பார்த்துக்கொள்ளுகிறது என்று சொன்னோமல்லவா? அது சரிதான் என்றாலும், ராணுவ விமானிகள் மிக வேகமாக விமானங்களை ஒட்டி, செங்குத்தாக மேலேறி கீழிறங்கும்போது புவி ஈர்ப்பு விசையில் ஏற்படும் திடீர் மாறுதல்களால் இந்த பேலன்ஸ் தடுமாறும். வெளிச்சம் இருக்கும்போது கண்கள் வழியே வரும் சுற்றுப்புறத்தைப் பற்றிய செய்திகளைக்கொண்டு இந்த தடுமாறல்களை விமானிகளின் மூளை எளிதாக சமாளித்து விடும். ஆகவே அவர்களின் வெளிநோக்குநிலை (Spatial Orientation) பாதிக்கப்படாமல் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் இதையே இருட்டில் செய்தால் ததுங்கினதோம்தான்.

Neuro8.png

இருட்டில் இந்த பயிற்சி எல்லாம் ஏன் செய்யவேண்டும் என்று கேட்கலாம். போரில் எதிரி விமானமோ ஏவுகணையோ துரத்தினால் இரவாக இருந்தாலும் தப்பித்தாக வேண்டும் இல்லையா? அதற்குத்தான் இந்தப்பயிற்சி. ஆனால் அந்த வேகத்தில் இருட்டில் தன் பேலன்ஸ் தவறி, நோக்குநிலை (Orientation) குழம்பி விமானி சில வினாடிகள் தடுமாறினால் கூட உயிரிழக்க நேரும். அவர்களுக்கு நாக்கில் வைத்துக்கொள்வதற்குபதில் கைகளில் அணிந்து கொள்ள ஒரு உறையை கொடுத்து, விமானத்தின் நிலையை பொறுத்து அவர்களின் புறங்கையில் மின் அதிர்வு கிச்சுக்கிச்சு மூட்டி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள். விமானம் ஓட்ட எந்த பயிற்சியும் பெறாதவர்கள் கூட சில நிமிடங்களிலேயே இந்த உறையை அணிந்து கொண்டவுடன் சிமுலேட்டோர்களில் (Simulator) கண்ணைக்கட்டிக்கொண்டு விபத்துக்கள் இல்லாமல் அட்டகாசமாய் விமானங்களை .எங்கேயும் போய் இடிக்காமல் ஓட்டுவதாக கேள்வி! ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) பெல்ட் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் போலவே இவர்களும் தான் எப்படி பார்வைத்திறனே தேவை இல்லாமல் விமானம் ஓட்டும் திறமைசாலியான விமானியானோம் என்று கான்ஷியஸாக சரிவரப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விமானத்தை எங்கும் இடிக்காமல் வழி நடத்துவத்தில் மட்டும் என்னவோ சூரர்களாய் இருக்கிறார்கள்! இதே போல் ஆழ்கடலில் இருட்டில் நீந்தி பணி புரிய வேண்டியவர்களைப் (Deepsea Divers) பற்றி யோசிக்கலாம். தண்ணீருக்குள் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு இருக்காது என்பதால் இருட்டில் இவர்கள் பணி புரியும்போது எது எந்தப்பக்கம் என்று புரியாமல் குழம்ப நிறைய வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கும் இத்தகைய உணர்விகள் மூலம் கடலின் மேற்பரப்பு எந்தப்பக்கம் போன்ற சமிக்ஞைகளை தொடு உணர்வின் மூலம் மூளைக்கு சொல்ல முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது!

Neuro9.png

நாம் தன் உணர்வோடு (consciousness) யோசித்து செயல்படத்தேவை இல்லாமல் அன்கான்ஷியஸாக மூளை எவ்வளவோ பணிகளை நாள் முழுதும் செய்கிறதல்லவா, அந்த வகையில் இந்த புதிய திறன்களும் சேர்ந்து விடுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு ஆய்வு சரளமாக இரண்டு மொழிகள் பேசுபவர்களுக்கு அல்சைமெர்ஸ் (Alzheimer’s) போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள் வயதான காலத்தில் வந்தாலும் சுமார் ஐந்து வருடங்கள் தாமதமாக வருகின்றன என்று அறிவித்தது. இரண்டு மொழிகளை சரளமாக உபயோகிப்பது ஒரே மொழியை உபயோகிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, நம்மை அறியாமல் நாம் மூளைக்கு கொடுக்கும் உடற்பயிற்சிக்கு ஈடானது. அப்படி பயிற்சி பெரும் மூளை நீண்ட நாட்கள் நன்கு இயங்குவதில் ஆச்சரியமில்லை. பல மொழி பயிற்சியோ, பல திறன் பயிற்சியோ, வேறு புது விதமான சவால்களோ, எது வந்தாலும் சமாளித்து, கொஞ்ச காலத்தில் நிபுணத்துவம் பெற்று பணிசெய்ய மனித மூளை உற்சாகமாக காத்திருப்பது தெளிவாக தெரிகிறது.

நம் மூளையைப்பற்றிய நமது புரிதல் இன்னும் மேம்பட மேம்பட அதன் பல மூலைகளில் ஒளிந்திருக்கும் பல புதிய திறன்களைக்கண்டு நாமே வியந்து நிற்கப்போகிறோம்!

(முற்றும்)
படங்கள்: நன்றி விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்
. - See more at: http://solvanam.com/?p=33784#sthash.58eX5Re7.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.