Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைர விழா (சவால் சிறுகதை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைர விழா (சவால் சிறுகதை)

 
diamond.jpgமுன் குறிப்பு: மக்களே!!! சவால் சிறுகதையாம். ஏதோ நம்மால முடிஞ்சே இலக்கியப்பணி. சிகப்புல உள்ள வாசகங்கள் இடம் பெற்றிருக்கனுமாம். காமினி கெட்டவள் இல்லையாம். ப்ளாஷ் பேக் எழுதக் கூடாதாம். அப்பப்பா... எவ்வளவு நிபந்தனைகள்.  விறுவிறுப்பா(அப்படின்னு எனக்கு நினைப்பு) கதை ஒரே நாள்ல நடக்கற மாதிரி எழுதியிருக்கேன். முயற்சி எப்புடின்னு நீங்களே சொல்லுங்க.

விடியற்காலை 5:45 மணி: அண்ணா நகர் 18th கிராஸ். சூரியன் மாமனைப் பார்த்து பேசுவோமா வேண்டாமா என்று வெட்கப்பட்ட பெண்போல் தொடுவானத்தில் எட்டிப்பார்த்தது. பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசித்தபடி கர்ம சிரத்தையாக வீடு வீடாக பாலிட்டார்கள், பேப்பரிட்டார்கள். "சொத்" என்று கதவில் மோதி படியில் விழுந்த 'தி ஹிந்து' என்னைப் பிரித்து படி என்று அழைத்தது காமினியை. விஷ்ணு துர்க்கைக்கு சங்கும் சக்கரமும் போல் காலையில் ஒரு கையில் தேநீர்க் கோப்பையும் மறுகையில் ஹிந்துவும் கட்டாயம் வேண்டும். புதுப் பேப்பர் சரசரக்க பிரித்தால் வெளிநாட்டு தூதுவர் வருகை, மாவோஸ்ட் நாலு போலீஸ்காரர்களை போட்டு தள்ளியது அதற்க்கு உள்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்தது என்று தலைப்பும் இல்லாமலும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஐந்தாம் பக்கத்தில் ட்ரேட் சென்டெரில் அகில இந்திய வைர வியாபாரிகளின் கண்காட்சி - "Glitters 2010" இன்று மாலை ஆறு மணிக்கு வர்த்தக அமைச்சர் குத்துவிளக்கேற்ற தொடங்குகிறது என்று தம்மாத்தூண்டு பொடி எழுத்தில் "Today's Engagements" காலத்தில் இருந்தது. மூளையில் குறித்துக்கொண்டாள்.

காலை 8:00 மணி: டிபன் சாப்பிடும் போது கண்ணாடி மேஜையில் "மனதில் உறுதி வேண்டும்" என்று ஜேசுதாஸ் குரலில் செல்போன் சினுங்கியது.  ஏதோ தெரியாத நம்பர். ஓரக் கண்ணால் பார்த்தாள். எடுக்கவில்லை. இரண்டு இட்லி கெட்டிச் சட்னியுடன் விழுங்கிய பிறகு மீண்டும் செல்போனில் "மனதில் உறுதி வேண்டும்". யாரோ?
"ஹலோ" என்றாள் காமினி 
"ஏய். என்ன கூப்ட்டா எடுக்க மாட்டேங்கற. கரெக்டா நாலு மணிக்கு வந்திரு... பன்னெண்டாம் நம்பர் ஸ்டால்..திரு திருன்னு முழிக்காதே. நுழைஞ்சதும் வலது பக்கம் நாலாவது கடை.  பையா லால் அண்டு பாபா லால். குறைஞ்சது மூனு கோடி.. ஓ.கே வா...ஓடி வா.." என்று கரகரத்தது மறுமுனை.
குரல் கம்ம மறுபடியும் ஹலோவினாள் காமினி
"சும்மா... ஹலோ ஹலோன்னு .. பக்கத்துல யாராவது இருக்காங்களா... என்ன... ஹலோ... ஹலோ...சரி சொல்லு.. ஹலோ.. ஹலோ..." 
இணைப்பை துண்டித்தாள் காமினி.
***********
காலை 10:00 மணி: போலீஸ் கமிஷனர் அலுவலகம். "திருட்டுக் குரல் சார் அது" என்று காமினி தனக்கு விபரீத கால் வந்த நம்பரைக் காண்பித்தாள்.  "உங்களோட உதவிக்கு நன்றி மேடம்." என்று கைகுலுக்கினார் ஏ.சி.பி. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் காப்பாற்ற போலீசாரை கேட்டுக்கொண்டாள். கண்ட்ரோல் ரூம் உஷார் படுத்தப்பட்டது. ஏர்டெல் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு மொபைல் எண் ட்ரேஸ் செய்ய ஏற்பாடு செய்தார்கள். கடைசியாக எந்த டவரில் இருந்து அந்தக் கால் புறப்பட்டது என்ற தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்கள். செய்தி சொன்ன நன்றிக் கடனாக போலீசார் தருவித்து தந்த நாயர் கடை பானகமான தேநீரை குடித்து விட்டு "நன்றி" சொல்லி வீட்டுக்கு கிளம்பினாள். அலுவலக நாளில் அண்ணா நகர் 18th கிராஸ் அனாதையாக இருந்தது. போகன்வில்லா மட்டும் காற்றுக்கு சற்று ஆடி ஆடி சிகப்பு மலர் உதிர்த்து தான் அங்கு இருப்பதை உறுதி செய்தது. ஆளில்லா தேசத்தில் அவர்கள் மட்டும் குடியிருப்பது போல இருந்தது காமினிக்கு. கைனடிக் ஹோண்டாவை சைட் ஸ்டாண்ட் போட்டு விட்டு வீட்டு வாசலுக்கு வந்தாள். வண்டியின் முன்னால் இருந்து ஸ்டிக்கர் ஷீரடி சாய் பாபா கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஆசி கூறினார். ஏதோ என்னமோ கலைந்தது போன்ற உள் உணர்வு குறுகுறுத்தது. இடது புறம் பட்ரோஸ் வைத்திருந்த பூச்சட்டி தாண்டி லேசாக நிழலாடியது. மெல்ல இடது புறம் திரும்பி பார்த்து விட்டு குனிந்து கிரில் கதவைத் திறக்கும் வேளையில் தான் அவனை கவனித்தாள். யார் என்ன என்று சுதாரிப்பதற்குள் "ணங்.." என்று பின்மண்டையில் பலமாக ஒரு அடி விழுந்தது.
"அம்மா...ஆ...ஆ...."  என்று அலறி அறுந்த செயின் போல S- போல ஆகி கீழே சாய்ந்தாள் காமினி.
****************
மதியம் 2:00 மணி: ஹெல்த் கேர் ஹாஸ்பிடல்ஸ். ஆதிகாலத்து வால்வு ரேடியோ பாட ஆரம்பிப்பது போல பேச்சு சப்தங்கள் மெதுவாக காதில் விழ ஆரம்பித்தது காமினிக்கு. ஆஸ்பத்திரியின் பினாயில் வாடை மூக்கை துளைத்தது. மெதுவாக கண்களை திறந்து பார்த்தவுடன் மங்கலாகத் தெரிந்தார் எஸ்.ஐ. முத்துப்பாண்டி. ஆறடி ஐயனாருக்கு காக்கி பேண்ட் ஷர்ட் போட்ட மாதிரி இருந்தார். அவர் கையில் பிடிபடும் திருடர்கள் மீசையை பார்த்தே உண்மையை கக்கிவிடுவார்கள். கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தால் "கீங்..கீங்..ரீங்..ரீங்.." என்று சத்தம் போடும் ஃபேன் கையில் இடிக்கும் உயரம்.
"மேடம்...ஐ அம் முத்துப்பாண்டி. எஸ்.ஐ.  ஒரு பெரிய இண்டர்னேஷனல் கும்பல் இந்த வைர வேட்டையில் ஈடுபட்ருக்காங்க. அரிய தகவல் சொல்லியிருக்கீங்க. எல்லா ஸ்டேஷனையும் அலர்ட் பண்ணியிருக்கோம். இந்த துப்புனால உங்களுக்கு நிச்சயம் ஆபத்து இருக்கும் அப்படின்னு என் மனசுல இருக்கிற எக்ஸ்பீரியன்ஸ் பட்சி சொல்லிச்சு. அதனால உங்களை பின் தொடர்ந்தேன். அதே மாதிரியே ஆயிடிச்சு. உங்களை அடிச்சவனுங்க என்னோட புல்லட் சத்தம் கேட்டவுடனே பின்பக்க சுவர் ஏறிக் குதிச்சு தலைதெறிக்க ஓடிப் போய்ட்டானுங்க. அண்ணா நகர் K7க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சு. இந்நேரம் விசாரணையை ஆரமிச்சுப்பாங்க" என்று மூச்சு விடாமல் பேசிவிட்டு கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டார்.

 

நாலைந்து பேர் காக்கி சீருடையில் பள பள பிரவுன் ஷு கால் "சரக் சரக்"க காரிடாரில் இங்குமங்கும் அலைந்தார்கள். கண்ணாடியை மூக்கு நுனியில் மாட்டிக்கொண்டு ஸ்கேன் ரிப்போர்ட்டோடு டாக்டர் சேகர் M.D வந்தார். நடு மண்டையில் கிரவுண்டு வாங்கிய வழுக்கை தலையை தொங்கப் போட்டு தொந்திக்கு கீழிருக்கும் அவர் ஷுவைப் எட்டிப் பார்த்தால் கண்ணாடி நழுவி கீழே விழுந்து உடையும் அபாயத்துடன் நடந்து வந்தார்.
"இன்ஸ்பெக்டர்.. உங்க கடமை உணர்ச்சிய பாராட்றேன். டோன்ட் டிஸ்டர்ப் ஹர்.. ஷி நீட்ஸ் ரெஸ்ட்".
"ஸ்கேன்ல பயப்படும்படி ஏதும் இல்லையே டாக்டர்..." அனுகூலமாக விசாரித்தார் மு.பாண்டி.
"அப்ஸலுட்லி நோ ப்ராப்ளம்"
"அப்புறம் ஏன் சார்... அவங்களை மூஞ்சியை மூடி வச்சுருக்கீங்க.. அவங்க ரொம்ப அவஸ்த்தையா ஃபீல் பண்றாங்க போலிருக்கு... உங்களோட அந்த மாஸ்க்காலையே அவங்களுக்கு மயக்கம் வந்துடும்ன்னு நினைக்கிறேன்."
"ஜோக்ஸ் அபார்ட் இன்ஸ்பெக்டர். மண்டைல வேற அடி பட்ருக்கு. அவங்களுக்கு ஈசநோஃபில்ஸ் கவுன்ட் ஜாஸ்தி இருக்கு.  பிரீதிங் கொஞ்சம் அன் ஈசியா பண்ணினாங்க. அதனால அவங்க கம்ஃபர்ட்டுக்காக ஆக்சிஜன் மாஸ்க் வச்சிருக்கோம். டோன்ட் டிஸ்டர்ப் நவ். ஷி வில் பி ஆல்ரைட் டுனைட். இரவு சந்திப்போமே இன்ஸ்பெக்டர்" என்று தோள்களை குலுக்கினார் டாக்டர்.
"ஓ.கே ஓ.கே டாக்டர்... இவங்களுக்கு பாதுகாப்புக்கு ரெண்டு பேர் வெளிய நிறுத்தறேன். ப்ளீஸ் அலோ தெம் டு ஸ்டாண்ட் தேர்" என்று சல்யுட் அடித்து திரும்பினார் முத்துப்பாண்டி. "உங்களை இரவு சந்திக்கிறேன்" என்று பதிலுக்கு தோள்களை குலுக்கி காமினியை பார்த்து அரை கிலோ மீசை மேலெழும்ப புன்னகை புரிந்து பறந்து போனார்.
காமினியின் கண்கள் இன்ஸ்பெக்டருக்கு "மிக்க நன்றி" என்று மனப்பூர்வமாக சொன்னது.
மீண்டும் மீண்டும் காலையில் வாங்கிய "ணங்.." நினைவில் வந்து வந்து போனது காமினிக்கு. அவனை நன்றாகத் தெரியும் அவளுக்கு. எங்கோ பார்த்திருக்கிறாள். ஒரு அறுபது வினாடி தொடர்ந்து மூளையில் பிலிம் ஓட்டி பார்த்ததில், ஏதோ ஒரு ந்யூரான் முடிச்சில் இருந்து அந்த பிம்பம் வந்து விழுந்தது. தெருமுனையில் காதர் பாய் வேஸ்ட் பேப்பர் கடையில் பார்த்திருக்கிறாள். முக்கால் வாசி நேரம் FCUK என்ற கருப்பு வாசகம் தாங்கிய ஒரே அழுக்கு வெள்ளை டீ ஷர்ட் அணிந்து பழைய ஹிந்து, எக்ஸ்பிரஸ் பேப்பர் கட்டுக்கு முட்டு கொடுத்து சாய்ந்து உட்கார்ந்திருப்பான். சவரம் செய்யாத முகம். போதையில் சொருகிய கண்கள். எப்போதும் முகத்தை சுற்றும் சிகரட் புகை. பெண்களை அசிங்கமாக கண்ட கண்ட இடங்களில் பார்ப்பான். ஒரு முடிவுக்கு வந்தவளாய்..
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இரண்டாவது மாடியின் சன்ஷேடில் ஒரு கால் வைத்து செயின்ட் கோபின் ஜன்னலைத் திறந்து படிக்கட்டை அடைந்தாள். பெண் புலி போல பதுங்கி சர்வ ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் நோட்டம் விட்டாள். நிறை மாத கர்பிணி இடுப்பை பிடித்தபடி மாடிப்படி ஏறுகையில் காமினியை பார்த்தாள். குதிப்பதை பார்த்து கேள்வி எழுப்பும் முன் இடுப்பு வலி வர அழுது கூச்சல் போட்டாள். பிள்ளைத்தாச்சிப் பொண்ணை கவனிக்க கூடிய கூட்டம் இவளை கண்டு கொள்ள தவறியது. நிச்சயம் காதர் பாயை கேட்டால் தெரியும் என்று வாசலில் வந்து பின்னால் "பிரசவத்திற்கு இலவசம்" போட்ட ஒரு ஆட்டோ பிடித்து "அண்ணா நகர் 18th கிராஸ் போப்பா" என்றாள்.  இவளை ஏற இறங்க  பார்த்த "பிரசவத்திற்கு இலவசம்" உச்ச ஸ்தாயியில் டர்ர்...ர்ர்...ர்ர்ர்.....றியது.
******************
மாலை 04:30 மணி: அண்ணாநகர் 18 மற்றும் 19ம் தெருவின் முனையில் இருக்கும் காதர் பாய் பழைய பேப்பர் கடை.  ஸ்கூல் விட்டு ரெண்டு சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டே சென்றனர். ஆட்டோவில் இறங்கிய காமினியை அவன் பார்த்துவிட்டான். அவளைக் கண்ட உடனேயே பாய் கடைக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். ரெண்டே எட்டில் உள்ளே பாய்ந்தாள் காமினி.
"என்னங்கம்மா வேணும்?" என்று கேட்டார் கல்லாவில் இருந்த பாய்.
"யார் அது?" என்று சீறினாள்.
"யாரும்மா...யாரு...யாரு....யாரை கேட்கிறீங்க...." என்று வார்த்தைகளை இழுத்துக்கொண்டே எழுந்து மெதுவாக உள்ளே நடந்தார் பாய்.

"சொல்லுங்க.. பாய்.. அங்கே நிக்கறானே.. யார்  அது?" கேட்டுக்கொண்டே பாயை தொடர்ந்தாள்.

"டர்.டர்.டர்...ட்.ட்.தட்." என பின்னால் ஷட்டர் இழுத்து விடப்பட்டு கடை அடைக்கப்பட்டது. பாதி இருட்டில் ஒரு வித பயத்துடன் திரும்பி பார்த்தாள் காமினி. அங்கே சிவா! இவன் எங்கே இங்கே.  பி.எஸ்.ஸி கூட முடிக்காமல் மூலைக்கு மூலை பெட்டிக்கடைகளில் அக்கவுன்ட் வைத்து தம் அடித்து திரிந்த மாமா பையன். அம்மாவின் உடன்பிறந்த தம்பி பையன். தல, தளபதி என்று தறுதலையாக சுற்றிக்கொண்டிருப்பவன்.
"டேய். சிவா.. நீ எங்கடா இங்க... ஏன் கதவை சாத்தினே..."
"காமினி... இப்பெல்லாம் எனக்கு வீட்ல காசு குடுக்கரதில்லை. எவ்வளவு நாள் சரக்குக்கு எல்லோரும் கடன் தருவாங்க. அதான் இவன் கூட சேர்ந்திட்டேன். இவன் டேவிட். நம்ம சகா. இருபத்து நாலு மணிநேரமும் ATM மாதிரி. சரக்கு கொடுக்கும் ATM. இன்னிக்கி ஆரம்பிக்கிற டயமன்ட் எக்சிபிஷன்ல லால் கடையில் அடிக்கப்போற டயமன்ட் இனிமே என்னை யார் கிட்டயும் சரக்குக்கு கையேந்த விடாது. காலைல மொபைல்ல கடைசி நம்பர்  5க்கு பதிலா போதைல 8ஐ அழுத்தி பேசிட்டான் இந்த மடையன். கால் உன்கிட்ட வந்து நீ போலீஸ் கிட்ட போய்ட்ட. உன்னை அடிக்கும் போது நானும் இந்த முட்டாள் கூட வந்தேன். எனக்கு தெரியும் நீ இங்க வருவேன்னு."
"வேண்டாம்டா.. சொன்னா கேளு.. இப்படி பண்ணினா போலீஸ் கிட்ட மாட்டிப்பே. அங்கிள்ட்ட நான் பேசறேன்" விழி விரிய பயத்துடன் காமினி.
"நீ சும்மா இரு காமினி... அட்வைஸ் பண்ணாதே. என்னோட வழிய நான் பார்த்துக்குறேன். ஆனா இன்னிக்கி உன்னை வெளியே விட முடியாது. விட்டா நான் மாட்டிப்பேன். இன்னிக்கி ஒருநாள் சமர்த்தா இங்கேயே இந்த மூட்டையோட மூட்டையா இரு.. என்ன..." என்று கஞ்சா பல் தெரிய இளித்தான் சிவா.
"டேய்.. என்னைப் பத்தி உனக்கு தெரியாது..." என்று கடையின் இன்னொரு வாசலுக்கு பாயப் போனவளை தடுத்து...
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
கை கால்கள் வெலவெலக்க சப்த நாடியும் அடங்கிப்போனாள் காமினி. இப்படி துப்பாகிஎல்லாம் வைத்திருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள்.
திடீரென்று "ட்ஷ்ஷும்....ட்ஷ்ஷும்...." என்று இருமுறை துப்பாக்கி வெடித்தது. சிவாவின் மணிக்கட்டில் புல்லட் பாய கை உதறினான். கையில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. வெடித்த திக்கில் தலைக்கு மேலே துப்பாக்கியை தூக்கியபடி ஆபத்பாந்தவனாக ஐயனார் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. அடுத்த சில நிமிடங்களில் காதர் பாய் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. டேவிட், காதர் பாய், சிவா மூவரையும் ஜீப்பில் ஏற்றி அடுத்த கட்ட விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு கொண்டு போனார்கள்.
***********
மாலை 7:00 மணி: ட்ரேட் சென்டர். கலர் கலர் விளக்கு போட்ட பையா லால் அண்டு பாபா லால் ஸ்டால். காமினிக்கு முன்னரே முத்துப்பாண்டி அங்கே ஆஜர்.
"வாங்க மேடம். உங்களோட சேஷ்டைகள் காலையிலேயே எனக்கு தெரிந்ததால் கான்ஸ்டபில்களை ரூம் வாசல்ல நிறுத்திட்டு கீழே அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் தான் டீ குடிச்சுக்கிட்டு இருந்தேன்."
"அதெப்படி கரெக்ட்டா அவன் என் நெத்தியில் துப்பாக்கியை வைக்கும் போது நீங்க அங்க வந்தீங்க இன்ஸ்பெக்டர்"
"அதுக்கு முன்னாடியே வந்திருப்பேன். திருமங்கலத்தில் ரெட் சிக்னல் தாண்டி நீங்க வந்த ஆட்டோ வழக்கம் போல சிக்னல் மீறி போய்ட்டான். நா போலாம்ன்னு நினைச்சாலும் ரூல்ஸ் தெரிஞ்ச என் வண்டி போக மாட்டேங்குது. லக்ஷ்மணன் கோடு மாதிரி ரெட்டை தாண்ட மாட்டேங்குதுங்க" என்று சிரித்தார் முத்துப்பாண்டி.
"ஆபத்துல இருந்தா கூடவா?" என்று குழந்தை போல கேட்டாள் காமினி.
"இல்ல.இல்ல... ஒரு வயசான அம்மா க்ராஸ் பண்ண வந்திடுச்சு... அதான்... அது கூட நல்லதுக்குதான். என்ன மொதெல்ல பார்த்திருந்தா எகிறி ஓடியிருப்பானுங்க..."
லால் கடை ஓனருக்கு காமினியை அறிமுகம் செய்து வைத்தார் மு.பாண்டி. ஒவ்வொரு மேசையாக பார்த்துக்கொண்டு வந்தாள் காமினி. முத்துப்பாண்டி அடுத்த ஸ்டால்களை பார்க்க மூவினார். அவ்வளவாக ஒன்றும் கூட்டம் இல்லை. ரெண்டு மூனு டிசைன் காண்பித்ததும் தவுறுதலாக கீழே விழுவதுபோல் நடித்து நைசாக அந்த வைர அட்டிகையை எடுத்து ஹான்ட்பாக்ல் போட்டுக்கொண்டாள். இதை அரசல்புரசலாக பார்த்துவிட்ட வடக்கத்திய வேலையாள்..
"மேம் சாப்.. கியா கர்த்தா..ஹை.." என்றான்.
காமினி வாய் பதில் பேசவில்லை. ஆனால் அவள் கண் திருட்டு பேசியது. அந்த செக்ஷனில் இருந்து வேகமாக அடுத்த இடத்திற்கு தாவினாள். இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக அவன் கூப்பிட ஆரம்பித்தான். இல்லை கூவ ஆரம்பித்தான். "மேம் சாப்.. மேம் சாப்...". அவசராவசரமாக ஸ்டாலை விட்டு வெளியேறினாள். அதற்குள் அங்கே பரபரப்பானது. கூட்டம் கூடியது. பெரிய லால் தலையில் அடித்துக்கொண்டு பிடிக்கச் சொன்னார். ஐந்தாறு பேராய் துரத்த ஆரம்பித்தார்கள். முத்துப்பாண்டி ஏதோ ஒரு மூலையில் இருந்தார். கைனடிக் ஹோண்டாவை ஒரு திட்டத்துடன் ட்ரேட் சென்டருக்கு வெளியே விட்டு விட்டு வந்த காமினி பாய்ந்து அதில் ஏறினாள். ஸ்பீடோமீட்டர்  ஒடியும் வரை வண்டியை வேகமாக ஓட்டினாள். பின்னால் புல்லட்டிலும், ஜீப்பிலும் வழக்கம் போல் கதை முடியும் தருவாயில் வரும் போலீசார் போல போலீசார் விரட்டினர். வீட்டை அடைந்து கைனடிக் ஹோண்டாவை அப்படியே கீழே போட்டுவிட்டு கதவை திறந்து கொண்டு மாடிக்கு ஓடினாள் காமினி. போலீசாரும் துரத்தினர்... அங்கே...
 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
அதைக் கேட்ட முத்துப்பாண்டி அதிர்ந்துபோனார். காமினியை ஆரத்தழுவி உச்சி மோந்தார் பரந்தாமன். ஆனால் அவருடைய செய்கையில் அடுத்த நிமிடம் ஏதோ வித்தியாசமாக பட்டது இன்ஸ்பெக்டர் முத்துபாண்டிக்கு.  ஆமாம். பாராட்டிய ஆசாமி சட்டையை மேலும் கீழும் பட்டன் மாற்றி போட்டுக்கொண்டு, பழைய கசங்கிய அழுக்கு வேஷ்டி இடுப்பில் சுற்றிக் கொண்டு ஏதோ சித்தப் பிரமை பிடித்தது போல கை காலை ஆட்டி சேஷ்டைகள் செய்தபடி இருந்தார். அவருக்கு விஷயம் ஏனோதானோ வென்று  புரிந்தது. 
"ஹாண்ட்ஸ் அப்" என்று சத்தமாக கத்தி மேலே பார்த்து சுட்டார். சாண்டிலியர் விளக்கு கண்ணாடி சில்லுகள் பொடித்து விழ "டமார்" என்ற பெருத்த ஓசையுடன் தரையில் விழுந்து நொறுங்கியது. பயந்துபோன பரந்தாமன் மயங்கி தரையில் சரிந்தார்.
***************
இரவு 09:30 மணி: ஹெல்த் கேர் ஹாஸ்பிடல்ஸ். 
"ரொம்ப தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்..நீங்க கூட என்னை சந்தேகப்படுவீங்கன்னு நினைச்சேன்" என்றாள் காமினி.
"சே.சே..பார்த்தவுடன் நினைச்சேன்.. இது ஏதோ வித்தியாசமா இருக்கேன்னு அதான் மேலே பார்த்து சுட்டேன். ஸாரி.. தவறுதலா விளக்குல பட்டு அதுவும் விழுந்து உடைஞ்சிருச்சு..உங்களுக்குத்தான் நஷ்டம்.."
"பரவாயில்லை இன்ஸ்பெக்டர். எங்க அப்பாவுக்கு குணமாய்டும் அப்படின்னா அந்த மேற்கூரையே இடிஞ்சி விழற மாதிரி சுட்டா கூட பரவாயில்லை பொறுத்துப்பேன்."
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா.. உங்கப்பா எப்படி இப்டி ஆனாரு...ஏதாவது அசம்பாவிதமா இருந்த பிளாஷ்பேக்குக்கெல்லாம் போய்டாதீங்க.." என்று கலவரமானார் முத்துப்பாண்டி.
"பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின வைர அட்டிகை திருட்டு போய் அதுவும் சில பொறுக்கி போலீஸ் கைல கிடைச்சு அவங்க அதை அபகரிச்சுட்டதால, கல்யாணம் நின்னு போனா எந்த அப்பாவுக்கு தான் பைத்தியம் பிடிக்காது இன்ஸ்பெக்டர்?" என்று கண்களில் நீர் வழிய ரத்தினச் சுருக்கமாகக் கேட்டாள் காமினி.
"ஓ. ஒரு அதிர்ச்சி கொடுத்த உங்கப்பா தெளிஞ்சுடுவார்ன்னு தான் எங்களை விரட்ட விட்டு நாங்கெல்லாம் பின்னாடி நிற்க அந்த அட்டிகையை உங்க அப்பாகிட்ட காண்பிச்சீங்களா. மேடம். நீங்க ரியலி ப்ரில்லியன்ட்." என்று மீசை விரிய சிரித்து பாராட்டினார் முத்துப்பாண்டி.
கீழே விழாமல் கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக்கொண்டு வந்த டாக்டர் சேகர் "மிஸ். காமினி... உங்கப்பாவுக்கு லேசா நினைவு வந்திருக்கு. இவ்வளவு நாளைக்கப்புறம் இது என்ன ஹாஸ்பிடல்? அப்படின்னு என்னை பார்த்து கேட்டார். ஐ  திங் ஹி வில் பி ஆல்ரைட்"  
வாயெல்லாம் புன்னகையாக சந்தோஷத்தில் வைரம் போல் நட்சத்திரங்களை அள்ளி தெளித்த வானில் மிதந்தாள் காமினி. திருப்தியோடு கையசைத்து வைர அட்டிகையோடு விடைபெற்றார் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி.
 
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்புத்தான் கதை ஆனால் குழப்பமும் இருக்கு. நன்றி நுணா பகிர்வுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.