Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது?

எல்.சிவலிங்கம்

இலங்கையில் கலவரம் என்பது முதன் முதலில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலோ அல்லது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலோ நடக்கவில்லை. 1883 ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற முதல் கலவரமானது சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலேயே இடம்பெற்றது. அதன் பின்பு அனகாரிக தர்மபால போன்ற சிங்கள மதக் கடும்போக்குவாதிகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தத்தினை முன்னிறுத்திய அதேவேளை, சிங்கவர்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்திய வண்ணம், பெரும்பான்மை சிங்களவர்களிடையே சிறுபான்மை மக்களுக்கு எதிரான கடும்போக்குவாதத்தினை மிகக் கச்சிதமாக உருவாக்கினார்கள். கொட்டாஞ்சேனையில் சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்று சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின்னர், சிங்களவர்களால் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் 1983 இல் நிகழ்த்தப்பட்டது. அதற்கு முன்னர் 1915 ஆம் ஆண்டு புத்தளத்தில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்றது. அதன் நூறாவது ஆண்டு நினைவு பூர்த்தி அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் நிலையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் படிப்படியாக அதிகரித்த அளவில் நாடு முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

முப்பது வருடகால யுத்தம் இடம்பெற்று முடிவுற்றுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியே இலக்கு என்று கூறும் அரசாங்கம், முஸ்லிம் நாடுகளின் தயவில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் வேண்டி நிற்கும் அரசாங்கம், நீதி அமைச்சர் உட்பட பல முஸ்லிம் அமைச்சர்களை தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏன் ஊக்குவிக்க வேண்டும்? இதன் உண்மையான பின்னணி என்ன?

இதற்கான பதில் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமாகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்தபோது தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை. தாம் சிங்கள மக்களுக்கு சமமாக சகல உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழவே அவர்கள் விரும்பினர். ஆனால் இலங்கை அரசாங்கம் சுதந்திரம் கிடைத்தவுடன் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் பரவலாக முடுக்கி விடப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் மொழி இழிவுபடுத்தப்பட்டது. 1958 இல் தமிழ் மக்களுக்கெதிரான கலவரம் இடம்பெற்றது. அற்ப சொற்ப சலுகைகளைத் தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய பண்டா- செல்வா மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்னும் முறை அமுல்படுத்தப்பட்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் ஏவிவிடப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுத்தனர். இதன் மூலம் புரியும் உண்மை யாதெனில், தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தினை ஏவி, தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி, தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதத்தினை முடுக்கிவிட்டு, இன்று தமிழ் மக்களின் பொருளாதாரம் கல்வி, வாழ்வாதாரம் என அனைத்தையும் ஏப்பமிட்டு சிங்கள தேசம் எக்காளமிட்டு நிற்கின்றது. நாட்டை விட்டு தமிழ் கல்விமான்கள் வெளியேறினார்கள். தமிழ் வணிகர்கள் வெளியேறினார்கள். இறுதியில் இலட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். இன்று தமிழ் மக்கள் மிகப் பரிதாபகரமான நிலையில் தான் சிறிலங்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோன்ற நிலைமையினை முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்னும் நன்கு திட்டமிட்ட குறிக்கோள்களுடன்தான் யுத்தம் முடிவுற்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கக்கபட்டுள்ன. இங்கு எழும் கேள்வி யாதெனில் யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் நாடுகளும் பெருமளவிற்கு அரசாங்கத்தின் பக்கமே நின்றுள்ள போது ஏன் தற்போது அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது என்பதாகும்.

இதற்குரிய காரணம் மிகத்தெளிவானது. யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலத்தில் சிங்கள மக்கள் பெருமளவிற்கு பொருளாதார சமூக நலன்களைத் தியாகம் செய்துள்ளார்கள். தற்போது அரச ஊழியர்கள் பெருமளவு சம்பள உயர்வினை எதிர்பார்க்கின்றார்கள். மீனவர்கள், விவசாயிகள், சாதாரண பொதுமக்கள் என அனைவரும் சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள். பொருளாதார சலுகைகள் வழங்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி வரும் என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இதற்கு உதாரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக போராடிய சிங்கள இளைஞர் சுட்டுக் கொல்லப்படார். நீர்கொழும்பில் மண்ணெண்ணை விலை உயர்வுக்கு எதிராகப் போராடிய சிங்கள மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரத்துபஸ்வலவில் நல்ல நீர் கேட்டுப் போராடிய பல சிங்கள மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செயப்பட்டனர்.

ஆகவே நாடு அமைதியாக இருந்தால் சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அவர்களுக்கு மிகப் பெரியளவில் பொருளாதார சலுகைகளை வழங்கும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் இல்லை. உள்நாட்டில் தமிழ் மக்கள் சகல வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளதால் சிங்கள மக்களுக்கு எதிராக மிக நெருங்கிய மற்றுமொரு எதிரியை உருவாக்குவது நீண்ட கால வெற்றியினைத் தரும் என ஆட்சியாளர்கள் நினைப்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்காகவே கோட்டாபய ராஜபக்ச பொதுபல சேனாவினை உருவாக்கினார். பொதுபல சேனா முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் சனத்தொகையினை விஞ்சி விடுவார்கள் எனவும், முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் வேகமாகப் பரவுகின்றது எனவும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. இதன் மூலம் கலாலினை இல்லாமல் செய்து, பள்ளிவாசல்களை தாக்கி, முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கி இன்று முஸ்லிம் பொதுமக்களைத் தாக்குமளவிற்கு பொதுபல சேனா வளர்ந்துள்ளது.

இங்கு அரசாங்கம் அடைந்துள்ள இலக்கு யாதெனில், சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் திருப்பி சிங்கள மக்களை சிங்கள பௌத்த பேரினவாதம் மூலம் அரசாங்கம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் முதல் வெற்றி அடையப்பட்டுள்ளது. இந்த வெற்றி தொடரப்போகின்றது என்பதற்கு அறிகுறியாக சில முஸ்லிம் பிரதேசங்களில் சில பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. அழுத்கமவிற்கு அடுத்ததாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல நகரம் இலக்கு வைக்கப்படலாம் என் முஸ்லிம் நண்பர் ஒருவர் இன்று என்னிடம் கூறினார்.

இந்நிலையில் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அரசாங்கத்தில் இவர்களை யாரும் கிஞ்சித்தும் கணக்கெடுக்கவில்லை. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர்கள் வாள்வெட்டில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அழுத்கமையில் முஸ்லிம் மக்களின் வீடுகளை எரித்து சூறையாடியவர்களில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் காணப்பட்டார்கள் என்று முஸ்லிம் மக்கள் பொலிசில் முறைப்பாடு செய்தபோது அப்படி எழுத அழுத்கம பொலிசார் மறுத்து விட்டனராம். முஸ்லிம் அமைச்சர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அழுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தன்னைத் தெளிவாக சிங்கள இனவாதியாகக் காட்டிக் கொள்கின்றாராம். முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்ற முஸ்லிம் மக்கள் ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்து 'முஸ்லிம்களாகிய நாங்கள் எந்தத் தவறும் இதுவரை செய்யவில்லை. ஆனால் நாங்களும் தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்ததுதான் நாங்கள் செய்த ஒரே தவறு' என கூறியதாக அழுத்கமயைத் சேர்ந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.

அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட போது முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக ரிசாத் பதியுதீன், அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி அரசாங்கத்தினை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் ஜெனீவாவில் நீதிகேட்டுப் போராடிக் கொண்டிருக்கையில், ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி முஸ்லிம் நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக ஆக்கிரோசமாகப் போராடுவதற்கு வழி செய்து, தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகத்தினைச் செய்தார். ஆனால் இன்று அதே ஹக்கீம், நவநீதம் பிள்ளை அம்மையாரிடம் முஸ்லிம் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய பட்டியலினைக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் பழி ஹக்கீமைச் சுற்றுகின்றது என என்னிடம் ஒரு தமிழ் நண்பர் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாட்டு மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றி கிஞ்சித்தும் கவலையில்லை. நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் வறுமை மோசமடைந்து கொண்டிருக்கின்றது. மக்களிடையே போசாக்கின்மையானது இந்தியா, பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான், செனகல், மாலாவி போன்ற நாடுகளை விட இலங்கையில் மோசமாக உள்ளது. ஜெனிவாவில் பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு பலமாக இருந்தும் தாம் தோற்றுப்போனமை அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். கடன்களை அள்ளிக்கொடுக்க சீனா தயாராக உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் எவ்வகையில் மீறப்பட்டாலும் சீனா கண்டுகொள்ளப் போவதில்லை. ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபையில் இலங்கையைக் காப்பாற்றும் என்ற அதீத நம்பிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.

ஆகவே இலங்கையில் ஆட்சியினைத் தொடர்ச்சியாகத் தக்கவைக்க வேண்டிய நடவடிக்கைகளே அரசாங்கத்திற்கு தற்போது தேவைப்படுகின்றன. சிங்கள மக்கள் சிங்கள பௌத்த தேசியவாதம் என்னும் மாயைக்குள் கட்டுண்டு ஒற்றுமையாக இருக்கும் வரை, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இந்த அரசாங்கத்திற்கு தேவையில்லை என்னும் முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டனர். அதற்கேற்றாற் போல் எதிர்க்கட்சிகள் எல்லாம் நலமடிக்கப்பட்டு செயலிழக்கக் செய்யப்பட்டு விட்டன. இனிமேல் தேர்தல் நடந்தாலும் தொடர்ச்சியாக ராஜபக்சாக்களே வெல்லப் போகின்றார்கள். இராணுவம் அதற்குரிய வேலைகளைச் செய்யும். தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடப்பதாகக் வெளியுலகிற்குக் காட்டப்படும். இத் தேர்தல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளின் தேவை இருக்காது.

இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்னும் கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. அடக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனம் இன்னுமொரு சிறுபான்மை இனம் ஒடுக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது முறையாகாது. முஸ்லிம் தலைவர்கள் விட்ட தவறுகளை தமிழ் தலைவர்கள் விடக்கூடாது. அந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் அறிக்கை விட்டமை மிகச் சாரியான நடவடிக்கையே. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டவில்லை. 'ஹக்கீம் ஜெனீவாவிற்கு சென்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது போன்று தமிழ் தலைவர்களாகிய நாங்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்' என்று முஸ்லிம் மக்களிடம் கூற வேண்டும். முஸ்லிம் தலைமைகளின் வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கை பெற்றோலிய இறக்குமதிக்கு முற்றுமுழுதாக முஸ்லிம் நாடுகளில் தங்கியுள்ளது. தேயிலை ஏற்றுமதி வருமானமும் முஸ்லிம் நாடுகளிடமிருந்து கணிசமாகக் கிடைக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையிலிருந்து ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி விட்டால் இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தே யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட காரணமாக இருந்தன. ஆகவே முஸ்லிம்கள் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் நாட்டு மக்கள் மூலம் இந்தியாவினை வழிக்குக் கொண்டு வர வேண்டும். எந்த பாகிஸ்தானும் இந்தியாவும் இலங்கைக்கு யுத்தத்தில் கை கொடுத்தனவோ அதே பாகிஸ்தானும் இந்தியாவும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உறுதியான தீர்வினை பெற்றுத் தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பேர்தான் இராஜதந்திரம்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=32583369-705c-4e32-8eb5-44a94a463cbd

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.