Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

நாகரத்தினம் கிருஷ்ணா

ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கிய, காக்கி நிற பெர்முடா; மேலே பூக்கள் அச்சிட்ட பொத்தான்களிடப்படாத அரைக்கை பருத்திச் சட்டை; பூத்த சாம்பல்போன்ற நரைத்த ரோமங்களுடன் மார்பு, கொளகொளவென்று மடிந்த வயிறு; தலையில் ஓலையில் முடைந்த வெள்ளை நிற ஹவாய்த் தொப்பி. தோட்டங்களில் உபயோகித்திற்கென்று தயாரிக்கப்பட்ட மேசைமீது ஒரு பீர் பாட்டிலும் கண்ணாடி கிளாஸ¤ம் இருக்கின்றன. கிளாஸின் அடிப்பகுதியில் மிச்சமிருக்கிற தேன்நிற திரவத்துடன் இணைந்துகொள்ள, விளிம்பிலிருந்து கண்ணாடி சுவரில் எச்சிலும் நீர்த்த நுரையுமாக வடிகிறது. ‘ஏவ்’ என்று புளித்த ஏப்பம் உதடுகளால் பூட்டப்படிருந்த வாயை அகலமாகத் திறக்க வைத்தது. மனைவி பிரான்சுவாஸ் பக்கத்தில் இல்லாத தைரியத்தில் புட்டத்தை உயர்த்தி அபாணவாயுவை இலகுவாக வெளியேற்றியதும், வயிறு இலேசானது. மண் தரையிலிருந்து இறக்கைமுளைத்த எறும்பொன்று தலையை இருபுறமும் அசைத்தபடி முழங்கால் ரோமங்களைச் சாதுர்யமாகப் பற்றி முன்னேறுவதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மேசையில் பேட்டிருந்த இடதுகை ஒத்துழைப்புடன் அதைத் தட்டி விட்டார். அவர் அங்கே உட்கார்ந்திருப்பது செரீஸ் பழங்களுக்கென்று வேலி தாண்ட முனையும் சிறுவர்களைத் தடுக்கவென, பிரான்சுவாஸ் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்திலிருக்கிற அரபு நாட்டவர் பிள்ளைகள் வேலியைத் தாண்டிக்குதித்து செரீஸ் மரங்களில் ஏறி விடுகிறார்கள். பூமியில் அழிந்தாலும் பரவாயில்லை, அப் பிள்ளைகள் வாயில்மட்டும் போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாகப் பிரான்சுவாஸ் இருக்கிறாள். அவளுக்குக் கடந்த மேமாதத்திலிருந்து வயது ஐம்பத்தைந்து. அந்தோணிசாமிக்கு இரண்டொரு வருடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக்கூடும். அவளைப் போல துல்லியமாக அவர் வயதைக் கணக்கிட முடியாது. அவர் பிறந்ததேதியோ வருடமோ நமக்குமட்டுமல்ல அவருக்கும் தெரியாது. பெயர்கூட பீட்டர் சாமியார் வைத்ததுதான். பெற்றவள் என்ன பெயர் வைத்திருப்பாளென்று ஒருவருக்கும் தெரியாது. ‘கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்’ அவரை பெற்றுபோட்டுவிட்டு காணாமற் போனதாகச் சொல்லப்பட்டது. பிரான்சுவாஸை ஒரு சுற்றுலாபயணியாக புதுச்சேரியில்வைத்து சந்திக்க நேர்ந்தது. ரிக்ஷா ஓட்டும் ஒரு நபருக்கும், சேவையொன்றிர்க்கான விலையைச் செலுத்த தயாராக இருந்த பயனாளிக்குமான சந்திப்பாகத்தான் அது தொடங்கியது. இருவருக்கும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் அந்த முதற் சந்திப்பில் இருந்திருக்க முடியாது. அவளுக்கு எப்படியோ, நம்முடைய அந்தோணிசாமிக்கு இல்லை.

முப்பது வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. மதியம் கடந்த நேரம். பள்ளிக்கூடப் பிள்ளைகள் சவாரியை முடித்துக்கொண்டு வழக்கம்போல தமது ஸ்டாண்டிற்கு அந்தோணிசாமி திரும்பியிருந்தார் எதிர்வெய்யிலுக்காகப் படுதாவை இறக்கிவிட்டு ரிக்ஷாவில் கண்ணயர்ந்திருந்தார். சொடுக்குப்போட்டதுபோல திரண்ட மேகங்கள் சூரியனைச் சூழ்ந்துகொண்டன. தூறலும் காற்றுமாக இணைந்து மனிதர்களை விரட்ட ஆரம்பித்தது. இறக்கியிருந்த படுதா விலக தூறலில் நனைந்த கால்களா, மனிதர் குரலா அல்லது இரண்டும் சேர்ந்துமேவா? அந்தோணிசாமியின் தற்காலிகத் தூக்கத்தை ஏதோ ஒன்று கலைத்தது. திடுக்கிட்டு எழுந்தபோது, வெள்ளைக்கார பெண்ணொருத்தி புருவ மயிர்களில் நீர்சொட்ட கழுத்தை இறக்கிக்கொண்டு இவர் எதிரே நிற்கிறாள். சவாரி வரமுடியுமா? என அவள் கேட்டதுபோலிருந்தது. இரண்டவது முறை குரலைச் செலவிட விருப்பம் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஒன்று இரண்டு என விழ ஆரம்பித்த மழைத்துளிகள் பல்கிப் பெருகி அடுத்த சில நொடிகளில் பறைபோல சடசடவென கொட்ட, அந்தோணிசாமி ரிக்ஷாவிலிருந்து இறங்கினார். அவள் ரிக்ஷாவில் அமர்ந்ததும் போக வேண்டிய இடத்தைச்சொன்னாள். லுங்கியை மடித்துக்கட்டினார். துண்டைத் தலையிற்போட்டுக்கொண்டார். ஹேண்ட்பாரில் ஒரு கையும், சீட்டின் பின்புறம் ஒருகையும் கொடுத்து வேகக்கால் வைத்து ரிஷாவைத் தோள்கொடுத்து தூக்க முனைபவர்போல சில அடிகள் தள்ளிக்கொண்டு ஓடினார். அதற்கு அடுத்தகட்டமாக இடப்பக்க பெடலில் ஒருகாலை ஊன்றி மறுகாலால் அடுத்த பெடலைத் தொட்டு மிதித்து உடலில் மொத்தபாரத்தையும் அதில் இறக்கினார். ரிக்ஷா உருளத் தொடங்கியது. வண்டி சீராக ஓடவும், தமக்கும் பிரெஞ்சு மொழி வரும் என்பதுபோல, “மதாம் சவா?” எனக் கழுத்தை ஒடித்துக் கேட்டார். அவள் காதில் விழவில்லையா அல்லது பதில் சொல்ல விருப்பமில்லையா எனத் தெரியவில்லை, அமைதியாக இருந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பத்து ரூபாயோடு கூடுதலாக ஒர் இரண்டு ரூபாய் தாளை அவள் நீத்தியபோது அந்தோணிசாமி மறுத்தார். அவள் வற்புறுத்திக் கையிற் திணித்துவிட்டுச் சென்றாள். அதற்கும் மறுநாளே அவளை மறுபடியும் சந்திக்கவேண்டிவருமென அவர் நினைக்கவில்லை. நேருவீதியில் தமது ரிக்ஷாவில் சவாரி வந்த உள்ளூர் தம்பதிகளை இறக்கிவிட்டு எதிரே பார்த்தபோது அரிஸ்டோ ஒட்டல் வாயிலில் பூ விற்கும் பெண்மனியுடன் அதே பெண் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். “வண்டியை உடனே எடு!” என்ற போலீஸ்காரரின் அதட்டலைக் பொருட்படுத்தாது அவர்கள் பிரச்சினையில் குறுக்கிட இரண்டொரு நிமிடங்கள் தேவைப்பட்டன. பூவிற்கும் பெண்மணியின் கையில் மல்லிகைச் சரம் மடித்த பொட்டலம். பிரெஞ்சுப் பெண்ணின் கைவிரல்களிடை இரண்டுரூபாய் தாள் ஒன்று. அந்தோணிசாமிக்குப் புரிந்தது “மல்லிதானேம்மா, எத்தனை முழம்கொடுத்த?”, என்ற அவரின் கேள்விக்கு, ” ஒரு முழம்தான் தம்பி கொடுத்தேன், ஆனா முழம் ஐந்து ரூபாய்ண்ணு அஞ்சு விரலைக் காட்டினேன். அந்தப் பொண்ணு, இரண்டு ரூபாய் தாளை நீட்டுது” எனப் பூ விற்கிற பெண்மணி, அந்தோணிசாமியின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவருக்குக் கோபம் வந்தது, “ஏம்மா கொஞ்சங்கூட மனசாட்சிவேணாம், முழம் ஒரு ரூவாண்ணுதானே விக்கிற, அந்தப் பொண்ணு ரெண்டு ரூவாவை நீட்டுது. வாங்கிக்கிணு சந்தோஷமா போவியா” என்றவர் அவள் கையிலிருந்த பூச்சரத்தைப் பிரெஞ்சு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த இரண்டு ரூபாய் தாளை வாங்கி பூக்கார பெண்மணியிடம் கொடுத்தார். பிரெஞ்சுப் பெண் முகம் மலர “மெர்ஸி” என்றாள். அச்சம்பவத்திற்குப் பிறகு பலமுறை இருவரும் குறுக்கிட்டுக்கொண்டது எதேச்சயாக நடந்ததென்று அந்தோணிசாமி நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளாவே இவரைத் தேடிவந்ததாக நினைத்தாள். ஒரு முறை “என்னை மணம் செய்துகொள்ள விருப்பமா” என அவரிடம் கேட்டாள். வெகுநாட்கள கேட்பாறின்றி சிதிலமாகக்கிடந்த வீடொன்றின் திண்ணையிற் குடிவைத்திருந்த “பொண்டாட்டியும் பிள்ளைகளும்” அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவளிடம் மறைத்துவிட்டார். இருவரும் அவள் விருப்பப்படி ஒரு கோவிலில் மணம் செய்துகொண்டார்கள். பிரான்சுக்குப்போன ஆறுமாதத்தில், அவரை அழைத்துக்கொண்டாள். இன்றுவரை ஊர் திரும்பவில்லை. பலமுறை பிரான்சுவாஸிடம் கேட்டுப்பார்த்தார் அவள் சம்மதிக்கவில்லை. ஆகாயத்தில் விமானங்களைப் பார்க்கிறபோதெல்லாம் ஊர் ஞாபகம் வருகிறது. இப்போதும் வாழைக்கு மேலே மெல்ல உருமிக்கொண்டு ஒரு தெற்கு நோக்கி விமானமொன்று போகிறது. குறுக்கிய விழிகளுடன் அந்தோணிசாமியின் பார்வையும் அதனுடன் பயணித்தது.

விமானம் அடிவானத்தில் மறைந்ததும் மீண்டும் அந்தோணிசாமியின் கவனம் வாழையின் பக்கம் திரும்பியது. தோட்டத்தில் பருவத்திற்கேற்ப பிரான்சுவாஸ் பூச்செடிகள், பிறதாவரங்களென வளர்ப்பதும் புதுபித்தலுமாக இருப்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு தோட்டக்கடைக்கு அவளுடன் சென்றபோதுதான் இந்த வாழையைப் கண்டார். ஊரின் ஞாபகமாக இருக்கட்டுமென்று அதை வாங்க நினைத்தார், பிரான்சுவாஸ் கூடாதென்றாள். அந்தோணிசாமி தமது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். வீட்டுத் தோட்டத்தில் அதைப் பதியமிட்டார். ஒருவாரத்திலேயே குருத்து நீண்டு இலையாக உருமாறி சிரித்தபோது, இவரது நெஞ்சில் பூபூத்து, குலைதள்ளியது. தினப்படிக்கு நீர்வார்த்தார். தழை உரம், இராசயன உரமென்று பார்த்து பார்த்து வைத்தார். குருத்துகள் தொடர்ந்தன. ஓரிலை இரண்டிலை ஆனது. முன்னிரவுகளில் விஸ்கிபோதை தலைக்கேறியதும் அதனோடு உரையாடத்தொடங்கி, பல நாட்கள் மண்தரையில் உறங்கிவிடுவார். பிரான்சுவாஸ் பிரம்பும் தண்ணீருமாக வருவாள். தண்ணீர் முகத்தில் விழும்போதே பிரம்படிகள் உட்காருமிடத்தில் விழும். சரியாக ஐந்தாவது அடியில் எழுந்து உட்கார்ந்து வாயைத் திறவாமல் கட்டிலுக்குத் திரும்புவார். அந்நாட்களில் இரவு சாப்பிடுவதில்லை. அவளும் அதற்கெல்லாம் கவலைகொள்வதில்லை. அந்த வாழைதான் திடீரென்று ஒருநாள் நிலைகுலைந்ததுபோல வாடி நின்றது. இலைகள் சுருண்டு, பசுமையெல்லாம் உறிஞ்சப்பட்டு துவண்டு தலைசாய்ந்து நிற்கிறது. அந்தோணிசாமிக்கு அதற்கான காரணங்கள் விளங்கவில்லை. பிரான்சுவாஸிடம் கேட்க தைரியமில்லை. கேட்டாலும் “உனக்கெல்லாம் அதைச் சொல்லி புரியவைக்க முடியாது” என்பாளென்று அவருக்குத் தெரியும்.

ஒரு நாள் அமெரிக்க சீரியலொன்றைப் பார்த்துவிட்டு, பார் மேசையைத் திறந்து ஆரோக்கியத்திற்கும் அவளுக்குமாக விஸ்கி பரிமாறிக்கொண்டு பிரான்ஸ¤வாஸ் சோபாவில் புதைந்தாள். தம்முடைய விஸ்கி கிளாஸ்கொண்டு, அவள் கரத்திலிருந்த கிளாஸைத் தொட்டு ‘உனது உடல் நலனிற்காக’ எனக்கூறிவிட்டு ஒரு மிடறு விழுங்கியதும் அந்தோணிசாமி: “இரண்டு வருடம் தாக்குப்பிடித்த வாழை மூன்றாவது வருடம் ஏன் கருகவேண்டும்?” எனக்கேட்டார். அவள் பதில் சொல்ல விருப்பமில்லாதவள் போல ஒரு மிடறு விஸ்கியைத் தொண்டைக்குழியில் இறக்கினாள். கண்களை மூடி, அச்சுகத்தை நரம்புகள் உடலெங்கும் கொண்டுசேர்த்து முடிக்கட்டுமெனக் காத்திருப்பவள்போல இரண்டொருநிமிடங்கள் மௌனமாக இருந்தாள். அந்தோணிசாமி நிதானமிழந்தார். அவள் கையிலிருந்த விஸ்கி கிளாஸைப் பறித்து, அருகிலிருந்த மேசைமீது வைத்தார். “இல்லை எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும், நான் விடமாட்டேன்” என்று உதடுகள் துடிக்க அவர் கூறியபோது, மது நெடிசுமந்த எச்சில் அவள் முகத்தில் தெறித்தது. இரண்டொரு நிமிடங்கள் சுவாசிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டு ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். என்னவோ நடக்கப்போகிறதென அவர் உள்மனம் எச்சரித்தது. ‘எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்” என அதே மனம் அவருக்குத் தைரியமும் சொன்னது. அவள் எழுந்தாள். நெருங்கியவள் கையிலிருந்த அவர் விஸ்கி கிளாஸைப் பிடுங்கித் தரையில் வீசினாள். அது உடைந்து நான்குபக்கமும் சிதறியது. “ஒவ்வொண்ணுக்கும் உயிர்வாழ சில அடிப்படை தேவைகள் இருக்கு, அதை நம்மால சரியா கொடுக்க முடியாதென்றுதான், அன்றைக்கு வாங்க வேண்டாம் என்றேன். உங்கள் வாழைமரத்தின் முடிவுக்கு நீங்கள் தான் பொறுப்பு” எனக் கோபத்துடன் அவள் கூறியபோது, அந்தோணிசாமியும் ஏதோகேட்கவேண்டுமென்று நினைத்தார். அவள் முகத்தைப் பார்த்ததும் ‘நா காப்பது’ உத்தமமென அடங்கிப்போனார். அதன் பிறகு அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டா¡ள். வழக்கம்போல அன்றிரவும் சோபாவிலேயே அந்தோணிசாமி உறங்கவேண்டியிருந்தது. வாழை இருந்த இடத்தில் “ஒயிட் டேஸ்லர்’ வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்றாள், பிறகொரு நாள்.

“அந்தோணி! என்ன செய்யற? கூப்பிடுவது காதுலே விழலை. ஏற்கனவே மணி பத்து ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்குத் தொடங்குமென்று சொன்ன ஞாபகம்” - தோட்டத்திற்குள் காலெடுத்து வைக்காமல், வீட்டிலிருந்தபடி பிரான்சுவாஸ் குரல் கொடுத்த்தாள். வாழைமீதிருந்த கவனத்தை கரகரப்பான அவள் குரல் சிதைத்தது. நெஞ்சில் உணர்ந்த வலியை “நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்கு” என்ற சொற்களிம்பு குறைப்பதுபோல தோன்றியது. அவர்கள் வீட்டுக்கு நான்குவீடுகள் தள்ளி மொரீஷியஸ் குடும்பமொன்று இருக்கிறது. அந்தோணிசாமி ஒரு ‘தமுல்’-(Tamoul-தமிழர்) என்று அறியவந்த நாளிலிருந்து அவர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அழைப்பார்கள். ஆனால் அந்தோணிசாமி-பிரான்சுவாஸ் தம்பதிகள் எங்கும் போவதில்லையெனத் தீர்மான இருந்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. பிரான்சுக்கு வந்த புதிதில் புதுச்சேரிகாரர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். நகரசபையில் பதிவு திருமணத்தை முடித்தபின் இரவு விருந்து. விஸ்கியும், ஒயினும் தாராளாமகக் கிடைத்தது. அந்தோணிசாமி – பிரான்சுவாஸ் மேசைக்கருகே மற்றொரு கணவன் – மனைவி ஜோடி. கணவன் இவரைப்பார்த்து: “மிஸியே அந்தோணி! ஊருலே நீங்க ரிக்ஷா ஓட்டினவர் இல்லை, இங்கே என்ன பண்ணறீங்க” எனக்கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியதுபோல கலகலவென்று சிரிக்கிறார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். பலரின் முன்னிலையில் தமது கடந்த காலத்தை அந்தப் புதுச்சேரிக்காரர் நினைவூட்டியவிதம் போதையிலிருந்த அந்தோணிசாமியைத் சீண்டிவிட்டது. சிவ்வென்று கோபம் தலைக்கேறிவிட்டது. பிரான்சுவாஸ¤க்கு அங்கு நடந்த தமிழ் உரையாடல் விளங்காமற்போனாலும், உரையாடல் நடுவே வந்து விழுந்த ரிக்ஷா என்ற சொல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்திவிட்டது. அந்தோணிசாமியின் கோபத்தைத் தணிக்க நினைத்தவள்போல அவருடைய கையைப் பிடித்து இழுத்தாள். ” அந்தோணி! வம்பெதுவும் வேண்டாம், புறப்படுவோம்”, என்றாள். அந்தோணிசாமி தணியவில்லை,” ஆமா உங்க பொண்டாட்டியக்கூட லாட்ஜ்லே கொண்டுபோய் விட்டிருக்கேனே. அவங்களுக்கு இங்கே எப்படி, தொழில் பரவாயில்லையா?” எனத் திருப்பிக் கேட்க, சம்பந்தப்பட்ட இருவரும் கட்டிப்புரண்டார்கள். மற்றவர்கள் சிரமப்பட்டு விலக்குபடி ஆனது. சம்பவத்திற்குப் பிறகு, பிரான்சுவாஸே எபோதாவது சம்மதித்தாலும், அந்தோணிசாமிக்குத் தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. அந்த விரதத்தை முடித்து வைத்தவர் மத்யாஸ் மாஸ்ட்டர். பிரான்சுவாஸ¤ம் மது சம்பந்தப்படாத எதுவென்றாலும் வீடே கதியென்று கிடக்கிற மனுஷன் வெளியிற் போய்வர உதவுமென்றால் பரவாயில்லை என்பதுபோல அனுமதிக்கிறாள்.

போன கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக ஒரு பகல் வேளையில் இரண்டு பெண்கள் சூழ, மத்யாஸ் மாஸ்ட்டர் அந்தோணிசாமியின் இல்லத்திற்கு வந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்ததும் “வணக்கம்” என்று ஏகக் காலத்தில் மூன்று குரல்கள். அந்தோணிசாமி “வணக்கம்” என்ற சொல்லை புத்துச்சேரியில் கூட கேட்டதில்லை. பீட்டர் சாமியார் கூட, “வாடா அந்தோணி” என்றுதான் முகமன் கூறியிருக்கிறார். “அந்தோணி! அவர்களை உள்ளே கூப்பிடு, எதற்கு வெளியிலே நிக்கவச்சிருக்க” என்றாள் பிரான்சுவாஸ். வந்திருந்த மூவரும் உள்ளே வந்தார்கள். இவரை வந்தவர்களுடன் பேசச்சொல்லிவிட்டு பிரான்சுவாஸ் போய்விட்டாள். அந்தோணிசாமி மூவரையும் சோபாவில் உட்காரவைத்தார். “என்ன குடிக்கிறீர்கள்”, எனக்கேட்டார். நாசூக்காக மறுத்த மத்யாஸ் மாஸ்டர்தான் முதலில் பேசினார். பெண்கள் இருவரும் அவர் பேசுவதை ஆமோதிப்பவர்களைப்போல ஓயாது புன்னகைப்பதும் தலை அசைப்பதுமாக இருந்தார்கள்.

“நாங்கள் மூவரும் யெகோவா சாட்சிகள். தேவனுடைய சாம்ராச்சியப் புகழைப் பரப்பும் பிரசங்கிகள். யெகோவாதான் கடவுள் என்பதை நீங்கள் நம்பவேண்டும். பரிசுத்த ஆவி என்பதெல்லாம் சுத்தப் பொய், அவர் கடவுளே அல்ல. நித்திய நரகம், நித்திய தண்டனை என்பதெல்லாம் ஏமாற்று பேச்சு. சிரியாவில் போர், ஈராக்கில் பங்காளிச் சண்டைகள், உக்ரைன் பிரச்சினை இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கிற ஒரே தீர்வு தேவனரசு நிறுவப்படுவது” – என மாத்யாஸ் மாஸ்ட்டர் மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டுபோக, அந்தோணிசாமிக்கு சோர்வைத் தந்தது.

- “நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு விளங்கலைங்க மிஸியெ”, எனக் குறுக்கிட்டார்.

- ” இதை புரிந்துகொள்வதில் என்ன சங்கடம்? நீங்கள் தமிழ் வாசிப்பீர்கள் இல்லையா?”

- “ஓரளவு எழுத்தைக்கூட்டி வாசிப்பேன்”.

- ” பிரெஞ்சு அல்லது ஆங்கிலமாவது தெரியுமா? “

- “எனக்குத் தெரியாது. மனைவி பிரெஞ்சு வாசிப்பாங்க”

- ” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன் புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

இப்போது ஒரு மொரீஷியக் குடும்பம் “மாரியம்மன் கஞ்சிக்கு” அழைத்திருக்கிறது. மாத்யாஸ் மாஸ்ட்டருக்குப் போன்போட்டு “மொரீஷியஸ் தமிழர்கள் ‘மாரியம்மனுக்குக் கஞ்சி’ படைக்கிறார்களாம், அழைத்திருக்கிறார்கள், இந்த ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்க வரமுடியாது” என்றார். மாத்யாஸ் மாஸ்ட்டருக்குக்கோபம் வந்தது.

- “உண்மையில் உங்களை அழைத்திருப்பது யார் தெரியுமா?

- “——” – இவர் பதில் சொல்லவில்லை.

- பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் உங்களை இணைத்துக்கொள்ளபார்க்கிறான். பைபிள் படிப்பதைவிட்டு இப்படி சாத்தானுக்குப் பலியாகாதீர்கள்.

- மிஸியே. எனக்கு இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்போதாது. பைபிள் படிக்க நீங்க கூப்பிட்டீங்க வந்தேன், அவங்க மாரியம்மன் கஞ்சிக்கு கூப்பிடறாங்க போகிறேன்.

- இப்படியொரு பதிலை சொன்னால் எப்படி? தெளிவா ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

- எனக்குச்சொல்ல தெரியலை.

மத்யாஸ் மாஸ்ட்டரின் கையில் தொலைபேசி இருக்கிறபோதே, அந்தோணிசாமி உரையாடலைத் துண்டித்துக்கொண்டார்.

பிரான்சுவாஸ¤ம் அந்தோணிசாமியும் மண்டபத்தை நெருங்கும்போது, நான்கு பேர் மாரியம்மன் சிலையை சுமந்தபடி நடந்தார்கள். நான்கைந்தடி துராத்தில், அவர்களுக்கு முன்பாக ஒருவர் கரகத்துடனிருந்தார். சிறுவன் ஒருவன் தோளில் சூலத்தைத் தாங்கியபடி நடந்தான். இரண்டு பெண்கள் “களிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுட்டே, யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுட்டே” எனப்பாட, மற்றவர்கள் கோரஸாக ‘ஓம் ஷக்டி’ என்றார்கள். அந்தோணிசாமியின் அண்டை வீட்டு மொரீஷியஸ் நண்பர் இவர்களைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க இப்போதுதான் ‘ஷிவ் ஜீ’ பூஜா முடிந்தது, உள்ளே போய் உட்காருங்க” என்றார். மண்டபத்திற்குள் அந்தோணிசாமியும் -பிரான்சுவாஸ¤ம் நுழைந்தார்கள். பெரும்பாலோர் வெளியிலிருந்தால் பாதி நாற்காலிகளுக்கு மேலே காலியாக இருந்தன. எதிரே வரிசையாக நான்கைந்து பஞ்சலோக சிலைகள் சுவர்களில் தகுந்த இடைவெளிகளில் சாமிப்டம்போட்ட காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வலதுபக்கம் நாற்காலிகளை அடுத்து, நடக்க இடம்விட்டு சுவர் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவரவர் வீட்டில் செய்துகொண்டுவந்த உணவுவகைகளையும் கஞ்சிக்குடத்தையும் எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் தமிழ் திரைபடபாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மொரீஷியஸ் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். புதுச்சேரி மற்றும் ஈழத்தமிழர்களின் குடும்பங்களும் இருந்தன. திடீரென்று மண்டபத்தில் சலசலப்பு. வெளியில் ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டுவந்தவைபோலவும், அந்தக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள். பிரான்சுவாவும்-அவரும் எதிரெதிரே அமர்ந்து நடத்திய உரையாடல்களும்; மத்யாஸ் மாஸ்டரின் சாத்தான்பற்றிய விளக்கங்களும் பிறவும் ஒரு பெருங்கனவு சமுத்திரத்தின் ஜெல்லிமீன்களாக ஆழ்மனைதில் நீந்திக்கொண்டிருக்க இதுவரை உபயோகித்திராத பலத்துடன் கைகால்களை உதறி பெரும்பாய்ச்சலுடன் வெளியில் வந்தார். எல்லா நாற்காலிகளிலும் அந்தோணிசாமிகள். பெஞ்சிலிருந்த பஞ்சலோகச் சிலைகள்கூட அந்தோணிசாமிகளாகத் தெரிந்தன.

- பிரான்சுவா கொஞ்சம் உன்னுடைய மொபைலைக் கொடேன்.

- எதற்கு?

- அவசரமா ஒருத்தருக்குப் போன்பண்னனும்.

- இந்த நேரம் போன் பண்ணக்கூடாது. பிறகு செய்யலாமே.

- இப்பவே சொல்லியாகணும், பிறகென்றால் மறந்துபோகும்.

போனை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். மத்யாஸ் மாஸ்ட்டரைப் போனில் பிடித்தார்.

- ஹலோ! மத்யாஸ் மாஸ்ட்டரா? அந்தோணிசாமி பேசறேன். நான் உங்களிடம் பைபிள் படிக்க வந்தற்கும் மொரீஷியர்கள் அழைத்தார்களென்று “மாரியம்மன் கஞ்சி”க்கு வந்ததற்கும் காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்.

- என்ன அந்த எழவு காரணம்?

அந்தோணிசாமிகளைப் பார்க்க முடிவது.

. - See more at: http://solvanam.com/?p=34034#sthash.VS9TYhDh.dpuf

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இத இதத்தான் தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதம் என்று சொல்லி இருக்கின்றார்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.