Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்குமா?

முத்துக்குமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கென 12 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழுவில் விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள், பாலினத்துவ நிபுணர்கள், சட்ட ஆலோசகர்கள் என்போர் அங்கம் வகிக்கின்றனர். விசாரணைக்குழுவின் ஆரம்பச் செயற்பாடுகள் இவ் வருடம் யூலை மாதத்தில் ஆரம்பமாகும் என்றும், 2015 மார்ச் மாதமளவில் விசாரணைச் செயற்பாடுகள் முடிவடையும் என்றும் கூறப்படுகின்றது. விசாரணைச் செலவுகளுக்கென 1 192 000 அமெரிக்க டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்குழு என்று சொல்வதிலும் பார்க்க ஆய்வுக்குழு எனக் கூறலாம். முன்னைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் நிபுணர்குழு போல இதுவும் ஒரு ஆய்வுக்குழுவாக இருக்கும். ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான விடயங்கள் ஐ.நாவிடம் அறிக்கை வடிவில் இருக்கின்றன. இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

இலங்கையில் அரசாங்கம் ஐ.நா விசாரணைக்குழுவினை அனுமதிக்கப்போவதில்லை. இதனால் நேரடிச் சாட்சியங்கள் விசாரணைக்குழுவிற்கு குறைவாகவே இருக்கும். எனினும் மறைமுகமாக கூடியளவு சாட்சியங்களை பெற்று விசாரணைகளை நடாத்தவே அது முயற்சி செய்யும். சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் காப்பகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் சாட்சியமளிக்க முற்படலாம். போரின் பின்னர் இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் சாட்சியமளிக்க முற்படலாம்.

நிலத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்தால் சில சாட்சிய நெறிப்படுத்தல்களைச் செய்யலாம். ஆனால் அதற்கான விருப்பங்களோ செயற்திட்டங்களோ அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மாவை சேனாதிராஜா, தாம் சாட்சியங்களைப் பெற்று கையளிக்கப் போவதாக கூறியிருந்தாலும் நடைமுறையில் அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளைச் செய்யலாம். உண்மையில் இந்தப் பணி நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசாரணைக்குழு தொடர்பாக அரசாங்கம் தனது பிரதிபலிப்பை தெளிவாகவே வெளிக்காட்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலேயே இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இலங்கையில் விசாரணைக்குழுவை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

அரசாங்கம் தன்னுடைய தீர்மானத்திற்கு மக்கள் அந்தஸ்தினைக் கொடுத்து தப்பி விட முயற்சிக்கின்றது. இதற்காகத்தான் ஐ.நா. விசாரணைக்குழுவை அனுமதிப்பதா? இல்லையா? எனத் தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை பாராளுமன்றத்திடம் விட்டுவிட்டுள்ளது.

போர் தொடர்பான மனித உரிமை மீறல்கள் அரசாங்கம் தொடர்பான குற்றச்சாட்டாக இல்லாமல், அரசு தொடர்பான குற்றச்சாட்டாகவே மகிந்தர் அரசாங்கம் மாற்ற விரும்புகின்றது. போர், அரசினை பாதுகாப்பதற்காக நடாத்தப்பட்டதனால் போர் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவே பார்க்க வேண்டும் என அரசாங்கம் வாதிடுகின்றது.

மகிந்தர் அரசாங்கத்தின் இந்த முடிவினால் எதிர்க்கட்சிகள் குழம்பிப் போயுள்ளன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும் என அவை அஞ்சுகின்றன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விசாரணைக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும், அதற்கு நான் தயார். விசாரணைக்குழுவினைப் பகிஷ்கரித்தால் இராணுவத்தை குற்றவாளியாக்கி விடுவர் என கூறியிருக்கின்றார்.

ஜே.வி.பி ஆதரவு வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. சுயாதீனமான உள்ளக விசாரணையை உடனடியாக நடாத்த முன்வர வேண்டும். விசாரணைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு அறிக்கை 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுதல் வேண்டும். யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும். ஜனநாயகமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஆயுதங்கள் மூலம் ஒடுக்கியமை தொடர்பாக விசாரிக்கப்பட்டு அறிக்கை மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பாகவும் இவ் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். கைதிகளின் மீதான தாக்குதல் தொடர்பாகவும் விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பனவே அவ் நிபந்தனைகளாகும்.

அரசாங்கம், எதிர்க்கட்சிகளை விலகமுடியா பொறிக்குள் மாட்ட முயற்சிக்க, ஜே.வி.பி அரசாங்கத்தை பொறிக்குள் மாட்ட முயற்சிக்கின்றது. அரசாங்கம் ஜே.வி.பி.யின் நிபந்தனைகள் எவற்றையும் நடைமுறைப்படுத்த போவதில்லை. இது விடயத்தில் சிங்கள வெகுஜன அபிப்பிராயம் அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது ஆதரவாகவே வாக்களிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும். தேர்தல்கள் வர இருப்பதால் சிங்கள வெகுஜன உளவியலுக்கு மாறாக நடந்து கொள்ள அவை தயாராகவில்லை. அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ்- முஸ்லிம் கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றிற்கு சில சங்கடங்கள் இருந்தாலும் ஆதரவாகவே வாக்களிக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே எதிராக வாக்களிக்கும்.

இங்கு எழும் கேள்வி, இந்தியா இந்த விசாரணையை எப்படிப் பார்க்கும்? ஒத்துழைக்குமா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை இந்த விசாரணையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது போரில் இந்தியாவிற்கும் பங்கு இருக்கின்றது. சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றோர் நேரடி ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். விசாரணை இடம்பெற்றால் இந்தியாவின் பங்களிப்பு ஆவண ரீதியாக வெளியில் வரும். இது இந்திய அரசாங்கத்திற்கு தமிழ் நாட்டு மட்டத்திலிருந்தும் ஏனைய மட்டங்களிலிருந்தும் பலத்த நெருக்கடிகளை உருவாக்கும்.

இரண்டாவது, இந்தியா உள்நாட்டு தேசிய இன விவகாரங்களில் இலங்கையை விட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது. தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அசாம், மணிப்பூர், நாகலாந்து, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் இது அதிகளவில் இடம்பெற்றுள்ளது. மாவோஜிஸ்டுகள் செல்வாக்குள்ள பிரதேசங்களில் பழங்குடிகள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது. இதனை ஆதரித்தால் நாளை இந்தியாவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களையும் விசாரணை செய்யும்படி கோரிக்கைகள் வரும். அதனை இந்தியா விரும்பவில்லை.

மூன்றாவது, இலங்கையைப் பாதுகாப்பதாகும். தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் இலங்கை இருக்க வேண்டும் என்பதற்காக இது விடயத்தில் இலங்கைக்கு சார்பாகவே நிற்க முயற்சிக்கும். இதன் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஜெனிவாவில் நடுநிலை வகித்தது. இதைவிட, விசாரணை என்பதற்கூடாக மேற்கின் அதிகரித்த தலையீடு வருவதையும் இந்தியா விரும்பவில்லை. இலங்கைத் தீவு தனது தலையீட்டிற்கு மட்டும் உரியது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

மேற்கூறிய நிலைப்பாடுகள் எல்லாம் காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்பதும் உண்மை தான். மோடி அரசாங்கம் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது இங்கு எழும் இன்னோர் கேள்வி. பெரிய நாடுகளைப் பொறுத்தவரை வெளிவிவகாரக் கொள்கைகளில் புதிய அரசாங்கம் அதிக மாற்றங்களைச் செய்வதில்லை. வெளிவிவகார உறவுகளை சடுதியாக மாற்றுவது நாட்டிற்கு தீங்கினைக் கொண்டுவரும் என்பதே இதற்குப் பின்னாலுள்ள காரணம். இதைவிட வெளிஉறவுக் கொள்கை தீர்மானத்திலும் நடைமுறைப்படுத்தலிலும் அரசியல் தலைவர்களைவிட அதிகாரிகள் அதிக பங்கெடுப்பதும் இம் மாற்றமின்மைக்கு ஒரு காரணம். எனவே உடனடியாக பண்பு ரீதியான மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஆனால் தலைமையின் இயல்புக்கேற்ப அளவு ரீதியான மாற்றங்கள் இடம்பெறலாம்.

மோடியைப் பொறுத்தவரை காங்கிரஸ் அரசாங்கம் போல சென்னையை முழுமையாக புறக்கணிக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் தமது அரசியற்தளம் பலவீனப்பட்டுப்போகும் என்பதற்கு அப்பால் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தமிழ் நாட்டிற்கும் இருப்பதால் அதனைத் தனிமைப்படுத்தவும் விரும்பவில்லை.

மோடி அரசாங்கத்தினால் இலங்கையையும் எதிராளியாக்க முடியாது. தமிழ்நாட்டையும் எதிராளியாக்க முடியாது. எனவே கொழும்புக்கும் சென்னைக்குமிடையே ஒரு சமநிலைப்படுத்தலைக் கொண்டு வரவே அது முயற்சிக்கும். அந்த சமநிலைப்படுத்தலுக்காக 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி அது வற்புறுத்தும். அதேவேளை சீனாவிலிருந்து அதிகம் விலகும் படியும் வற்புறுத்தும்.

இந்த வற்புறுத்தலுக்கு இலங்கையின் பிரதிபலிப்புக்கேற்பவே இந்தியாவின் அணுகுமுறையும் இருக்கும். தற்போதைக்கு நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்பே அதிகம் உண்டு. கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்தல் என்ற இந்தியாவின் விருப்பத்தை மகிந்தர் அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பதும் இங்கு கவனத்திற்குரியது. மகிந்தர் அரசாங்கத்தினால் இதனை நடைமுறைப்படுத்துவது கடினம். 13வது திருத்தம் என்பது ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு தீர்வு. ஒற்றையாட்சியில் அதிகாரக்குவிப்பு மத்திய அரசிடம் இருப்பதால் அதிகாரப் பங்கீட்டுக்குப் பதிலாக ஒரு நிர்வாக பரவலாக்கமே அங்கு இருக்கும். இது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.

ஆனால் இந்த நிர்வாகப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கே மகிந்தர் அரசாங்கம் தயாரில்லை என்பது தான் இங்குள்ள பிரச்சனை. குறிப்பாக காணி, பொலிஸ் சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறுப்புகள் மாகாண அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படுவதையோ, காணி நிர்வாகம் ஒப்படைக்கப்படுவதையோ மகிந்தர் அரசாங்கம் விரும்பவில்லை. தம்முடைய பிடி அங்கு இல்லாமல் போய்விடும் என்பதும் இராணுவ நிர்வாகம் பலவீனமடைந்துவிடும் என்பதும் தான் அதற்கு காரணம். குறைந்தபட்சம் தற்போது மேற்கொள்ளப்படும் பச்சை ஆக்கிரமிப்புகளை நிறுத்துவதற்கு கூட மகிந்தர் அரசாங்கம் தயாராகவில்லை.

ஜெயலலிதா குறைந்தபட்சம் பூரண சுயாட்சியையாவது எதிர்பார்ப்பார். இது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. சர்வஜன வாக்கெடுப்பு என்கின்ற உயர்ந்த கோரிக்கையை வைத்திருக்கும் ஜெயலலிதா, மாகாண சபை முறையினை தீர்வாக ஏற்கமாட்டார். அதுவும் ஜெயலலிதாவின் கொடும்பாவி கொழும்பில் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவினை சமாதானப்படுத்துவது இலகுவாக இருக்காது. எனவே கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.

மறுபக்கத்தில் கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்துவதற்கு அப்பால் கொழும்பையும் புதுடில்லியையும் சமநிலைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. சீனாவின் பிரசன்னத்தை இலங்கையில் இல்லாமல் செய்வதன் மூலம் இந்த சமநிலைப்படுத்தலை மேற்கொள்ள முடியும். இது விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒரு இந்திய தேசியவாத கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் அரசாங்கத்தை விட சற்றுக் கறாராகவே இருக்கும். இந்த விடயம் இராஜதந்திர மொழியில் பேசப்படுமே தவிர, தமிழர் விவகாரம் போல வெளிப்படையாக பேசப்படமாட்டாது. தமிழர் விவகாரத்தை அதிகளவில் வற்புறுத்தும் போது சீன விவகாரமும் அதற்குள் மறைந்து நிற்கும்.

மகிந்தர் அரசாங்கத்தினால் சீனாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது. மகிந்தர் விரும்பினாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வளவிற்கு சீனா இலங்கையில் காலூன்றி விட்டது. இது விடயத்தில் மகிந்தர் அரசாங்கம் செய்யக்கூடியது சீனாவைப் போல இந்தியாவிற்கும் இலங்கையில் இடம்கொடுப்பது தான். ஆனால் மோடி இதனை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்ற கூடாது என்பதே அவரின் நிலைப்பாடு.

மொத்தத்தில் சமநிலைப்படுத்தல் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=238cc50d-716d-4372-97a6-47e6e97c552a

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.