Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதியதோர் உலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதியதோர் உலகம்

அப்பாத்துரை அபூபக்கர்

அண்மையில் நோர்வேயில் இருந்து வந்திருந்த நண்பரொருவரை சந்தித்தேன். வடக்கில் நடந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றில் அவரை சந்தித்தேன். யாரோ அறிமுகமான ஒருவருடன் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரது நடையில் ஒருவிதமான மிதப்பை உணர்ந்தேன். ஒரு பழுத்த அரசியல் பிரமுகரைப்போல அல்லது மிகப்புகழ் வாய்ந்த போராளியையொத்த ஒரு தோரணை. கால்ப்பந்தென்றால், நான்றாக கால்ப்பந்து ஆடுபவர்களிற்கும், கிரிக்கெட் என்றால் நன்றாக கிரிக்கெட் ஆடுபவர்களிற்கும்தானே மரயாதை. அதுபோல, அரசியலரங்கிலும் முதல் மரியாதை பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும், மிகத் தீவிரமான அர்ப்பணிப்பினால் பகழடைந்த போராளிகளிற்கும் ஒரு மரியாதை இருக்கத்தானே செய்யும். அவர்களும் மற்றவர்களிடம் கௌரவத்தை வேண்டும் ஒருவிதமான பாவனையுடன் நடப்பார்கள்.

சந்திப்பில் அவர் நிறையப் பேசினார். எல்லா விடயங்களிலும் எல்லோரையும் சிலுவையில் ஏற்றினார். தற்போதைய நிலையில், தமிழ்த்தரப்பினால் வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாத நிலை பற்றிய பேச்சு வந்தது. நாட்டிலுள்ள, புலம்பெயர்ந்த, இந்தியாவிலுள்ள ஏன் நவுறு தீவுகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் உள்ளடக்கி, உலகத்திலுள்ள ஒரு தமிழனையும் மிச்சம் விடாமல் எல்லோரையும் குற்றவாளியாக்கினார். உலகத்தின் மூளை முடுக்குகளிலுள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதிகளையும் குற்றம் சொன்னார்.

13வது திருத்தம் பற்றிய பேச்சு வந்தபோது, அவர் இரண்டு பக்கத்திற்கும் ஆடும் உதைபந்தாட்ட வீரன் போல நின்றார். முதலில், புலிகள் தவிர்ந்த அத்தனை இயக்கங்களின் தோலையும் உரித்தெடுத்தார். மூச்சுவாங்கிய கணத்தில், சிறிய அவகாசம் எடுத்துவிட்டு, இந்த பிரச்சனையின் ஒரு பக்கத்தையே தான் கதைத்ததாக கூறியவர், இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளதாக கூறி, சடடென மற்றப்பக்கம் மாறி புலிகள் சைட்டிற்கு ஒன்கோலாக பொழிந்து தள்ளினார். 13 வது திருத்தம் பற்றிய ஓரளவு தெளிவிருந்தவர்களையெல்லாம் அன்று அவர் நிச்சயம் குழப்பமடைய வைத்திருப்பார்.

ஆள் ஒரு சுவாரஸ்யமான மனிதன் என்ற எண்ணம் அங்கிருந்த எல்லோரிடமும் ஏற்பட்டிருந்தது. கலந்துரையாடல் முடிந்ததும், அவர் பற்றி அறிவதில் பலரும் காட்டிய ஆர்வம் அதனைப் புலப்படுத்தியது.

கலந்துரையாடலில் முடிவில் அவருடன் பேசினேன். அவர் தன்னையொரு இடதுசாரியென அறிமுகப்படுத்தினார். இன்றைய திகதியில் இலங்கையில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமான இடதுசாரி பிரிவுகள் இலங்கையில் உள்ளன, அவர் எந்தப்பிரிவு என்றேன். நோர்வேயில் வசிப்பதாக கூறினார். இலங்கையில் எந்த இடதுசாரி கட்சியுடனும் தொடர்பில்லை என்றார். ஆச்சரியமாக இருந்தது. யாரும் தூய கொம்யூனிஸ்ட் இல்லை. எல்லோரும் திரிபுவாதிகள் என்றார். அவர்களின் மீதான நம்பிக்கையின்மையால் இலங்கைக் கட்சிகள் ஒன்றையும் ஆதரிக்கவில்லை, முன்னிலை சோசலிசக் கட்சியை மட்டும் ஆதரித்ததாக சொன்னார். எனக்கு கூட பர்மாவின் ஆங்சாங் சூகியின் கட்சியில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அப்படியானால் நோர்வே கொம்யூனிஸ்ட்டாக்கும் என நினைத்தேன். இதனையும் மறுத்தார். ஏதோ ஒரு கட்சியின் பெயரை சொல்லி, இரண்டுதரம் அவர்கள் நடத்திய மேதினத்தில் சிவப்புச்சட்டை அணிந்து கொண்டு போய் வந்ததாக சொன்னார்.

அப்படியானால், ஒருவேளை ரஸ்யாவுடன் தொடர்பான ஆளாக இருப்பாரோ என்று நினைத்தேன். இல்லை. அவருக்கு யாருடனும் தொடர்பில்லையாம். அவர் இந்த உலகத்தை மாற்றியமைக்க தனித்து நிற்கும் போராளியாம். அதற்காக முகப்புத்தகத்திலும், தனது வலைப்பக்கத்திலும் தொடர்ந்து இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேனே, பார்ப்பதில்லையைா என்றார். இல்லையென்றால் கொன்றுவிடுவார் போலிருந்தது. பார்ப்பேன், அது நீங்கள்தானா என சும்மா கேட்டேன்.

தமிழில் முகப்புத்தகத்தில் தீவிரமாக இயங்குபவர்களை குறித்து, அண்மைய சில காலமாகவே பேஸ்புக் போராளிகள் என்ற சொற்பதம் ஒருசாரரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பேஸ்புக் தவிர்த்து, வலைத்தளங்கள், வேறு சமூக வலைத்தளங்களிலும் பலர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சேர்த்து இணையப்போராளிகள் என்றொரு சொற்றொடர் அண்மையில் புழக்கத்திற்கு வந்துள்ளது.

இந்த வார்த்தையை கேட்டதுமே, மேற்படியானவர்கள் எல்லோரும் சட்டென பதகளித்து கொண்டு விடுவார்கள். எல்லோருமே உடனே துனிசியாவில் அசேலம் அடிக்கிறார்கள். துனிசியாவிலும் இப்படித்தானாம். யாரோ ஒரு ஏழைக்கு நேர்ந்த கொடுமையை இணையம்தானாம் அம்பலப்படுத்தி அரபு வசந்தத்தை வீசவைத்தது. இணையத்தில் இயங்குபவர்களை கிண்டலடிப்பவர்கள், பேரினவாதிகளின் கைக்கூலிகள் என்கிறார்கள்.

எல்லா சார்புகளையும் விட்டுவிட்டு, நமது சூழலில் இணையத்தினால் ஏதாவது மாற்றங்களை காண முடியுமா என்பதை நாம் விலாவாரியாக அலசிப்பார்க்க வேண்டும். ஏனெனில், உலகத்தின் கணிசமான கல்வியறிவை கொண்டவர்களில் தமிழர்களும் உள்ளனர். நவீன விஞ்ஞான, தொழில்த்துறை கண்டுபிடிப்பு அறிவுப்பரம்பல் தமிழ்ச்சமூகத்திற்குள் சமச்சீராக பரவியுள்ளது என்று சொல்ல முடியாதுதான். ஆனால் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை- குறிப்பாக இணைய ஊடாட்டம் மிகுந்த இனமாகத்தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். அலாஸ்காவில் நடக்கும் சம்பவமொன்றை அடுத்த நொடியிலேயே அல்லைப்பிட்டியிலுள்ளவர்களும் அறிந்து கொண்டு விடுகிறார்கள். நம்மிடம் ஒரு புரட்சியை அல்ல ஓராயிரம் புரட்சிகளை தூண்டவல்ல இணையப்பரம்பல் உள்ளது.

ஆனாலும் தமிழ்ச்சமூகத்தை இந்த சமூகவலைத்தளங்களினால் அசைத்துப்பார்க்க முடிந்ததா? நந்திகடலோரம் உயிருக்காக இறைஞ்சிக் கொண்டிருந்த நமது பெண்களிற்காக ஒரு கண்ணாலும், எயார்ரெல் சுப்பர் சிங்கரில் முதலிடத்தை பறிகொடுத்தவனிற்காக இன்னொரு கண்ணாலும் நாம் அழுது கொண்டிருப்பவர்கள். நமது இணையபாவனை வரலாற்றை மிக நன்றாக இன்னொருதரம் மீட்டிப்பார்ப்போம்.

சரணடைந்த சிலர் சுட்டுக் கொல்லப்பட்டகாட்சிகள் வெளியானபோது, பெரும்பாலான தமிழ்ப்பாவனையாளர்கள் அதனை பார்த்தார்கள். முக்கால்ப்பங்கிற்கும் மேற்பட்டவர்கள் அழுகைக்குறியையாவது சமூக வலைத்தளங்களில் நிலைத்தகவலிட்டார்கள். பகிர்ந்து கொண்டார்கள். இந்த துயரம் ஒரு தமிழ் வசந்தத்தை உருவாக்கவில்லை. மாறாக சில தன்னெழுச்சிகளைத்தான் உருவாக்கியது. புலம்பெயர்ந்த இடங்களிலும், தமிழகத்திலும் ஓரிரண்டு மரணங்களை சம்பவிக்க வைத்தன. கொஞ்சப்பேரை இரண்டு மூன்றுதரம் ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டியது. இலங்கையில் ஒரு தமிழ்வசந்தத்தை ஏற்படுத்தாமல், உலகத்தின் சில மூளைகளில் கொஞ்ச ஆர்ப்பாட்டக் கோசங்களைத்தான் எழுப்பியது.

அதிகபட்சமாக ஒருவாரம் நீடித்திருக்குமா இந்த பிலாக்கணம்? பின்னர் எல்லாம் வழமைக்கு திரும்பின. அதன் பின், இதே அழுகையுடனும் தீவிரத்துடனும் தென்னிந்திய தொலைக்காட்சிகள் நடத்தும் சில நிகழ்ச்சிகளின் சம்பவங்கைள பகிர்ந்து கொண்டார்கள்.

இதுதான் தமிழர்களின் இணையச்சூழல். இதன் வரையறைகளை நன்றாக விளங்கிக் கொண்டால், அதீதமான கற்பனைகளிருந்து விடுவித்து நம்மை தரையில் கால்பதிக்க வைக்கும்.

உண்மையில் தமிழர்களிற்கு இணையம் ஒரு சாபமென்றுதான் சொல்ல வேண்டும். ஆயுதங்கள் வைத்திருப்பது மட்டும்தான் போராட்டமென்றோ, அல்லது ஆயுதவழிதான் பயனுள்ள வழியென்பதோ இந்த கட்டுரையாளரின் வலியுறுத்தலல்ல என்பதை ஆரம்பத்திலேயே வலியுறுத்திவிட்டுத்தான் மேலே சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.

இணையவழித் தூண்டல்களின் மூலமாகட்டும், நேரடிப்பிரச்சார தூண்டல்களின் மூலமாகட்டும், தன்னெழுச்சிகளின் மூலமாகட்டும் ஒரு புரட்சியை அல்லது போராட்டத்தை முன்னெடுப்பது அந்தந்த சமூகங்களின் இயல்பை அல்லது மனநிலையை பொறுத்தது. இதுவும் காதலைப் போலத்தான். சில பூக்கள் சட்டென பூப்பதும், சில இரும்புகளில் எவ்வளவுதான் அறைந்தாலும் அது அசைந்து கொடுக்காததைப் போலவும் இதனை கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களிடம் பல காலமாகவே ஒரு வழக்கு உள்ளது. யூதர்களுடன் தங்களை கற்பனையாக இணைத்துப் பார்த்து சுயஇன்பம் அனுபவித்து கொள்வார்கள். யூதர்கள் தங்களிற்கென ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்றதும், உலகெங்குமிருந்து இஸ்ரேலை நோக்கி படையெடுத்து சென்றார்கள். மாறாக இலங்கையில், ஈழத்தமிழர்கள் தங்களிற்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமென மிகக்குறிப்பிட்ட எண்ணிக்கையான இளைஞர்கள் போராடப் புறப்பட்ட சமயத்தில், அதனை சாக்காக வைத்து பெரும்பாலானவர்கள் அங்கிருந்து தப்பி வெளியேறினார்கள். இந்த இயல்பின் அடிப்படையிலேயே மிகுதி அனைத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

இது சாதாரண மக்களிற்கு மட்டுமுரிய மன இயல்பல்ல. போராளிகளாக அரசியல்வாதிகளாக உள்ள அனைவரையும் சேர்த்த ஈழத்தமிழர்களின் இயல்பு. இதனால்த்தான் இணையத்தில் தமிழர்களிடம் இத்தனை போராளிகளை, அறச்சீற்றக்காரர்களை, கலாசாரக்காவலர்களை, நாட்டாமைகளை உருவாக்கி வைத்துள்ளது.

இது ஈழத்தமிழ்களின் பொது இயல்பு. இன்னொரு விதமாக சொன்னால், ஈழத்தமிழர்களின் இந்த பொதுஇயல்பிற்கு கிடைத்த வடிகால்தான் இணையம். துனிசியாவைப் போல, எகிப்தைப்போல ஒரு புரட்சியை கற்பனை பண்ணியபடி, இஸ்ரேலைப் போல ஒரு நாட்டின் உதயத்தை கற்பனை பண்ணியபடி, மேற்கின் சமூகப்பாதுகாப்பு மிக்க வாழ்க்கையை தமிழீழத்தில் பிரதிபண்ணி கற்பனை பண்ணியபடி வாழ்க்கை நடத்த இணையத்தைப் போன்ற ஒரு மார்க்கம் தமிழர்களிற்கு இதுவரை கிடைத்ததில்லை. முன்னர், இப்படியொரு மார்க்கமாக பெரும்பாலானவர்களிற்கு புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆசைகள் பலதை புலிகள் செயற்படுத்தியபோது, அவர்களை ஆதர்சமாக்கினார்கள். புலிகளுடன் நடப்பது கத்தியின் மேல் நடப்பதை போல. அவர்களுடன் எல்லாக்கூத்தும் ஆட முடியாது. கொஞ்சம் பேச்சு மாறினாலே முகம் மாறிவிடுவார்கள். இணையம் அப்படியல்ல. அது போன மாசம். இது இந்த மாசம் என்ற கணக்கில் ஒடிக் கொண்டிருக்கலாம். அப்படிப் பார்த்தால் ஈழத்தமிழர்களிற்கு போராட்டம் நடத்த புலிகளை விட, இணையம்தான் மிக வாய்ப்பான-சௌகரியமான வழி.

இன்னொரு விதமாக சொன்னால், ஈழத்தமிழர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க இணையம்தான் வடிகாலாக அமைந்துள்ளது. அவர்கள் எல்லோரிடமும் புரட்சி பற்றிய கனவுகள் உள்ளன. தமது சமூகத்தின் போராட்டத்திற்கான அவசியம் பற்றிய பிரக்ஞை உள்ளது. ஆனால் யதார்த்ததில் அதனை சாத்தியமாக்க முடியாமல் உள்ளது. தமது நாளாந்த கடமைகள் எல்லாவற்றையும் முடித்து, சாப்பிட்ட பின்னர் மிகச்சாவகாசமாக வந்து கணினியை திறந்து அவர்கள் புதியதோர் உலகத்திற்குள் புகுகிறார்கள். அன்று காலை விடிந்ததில் இருந்து கணினித்திரைக்குள் சற்றுமுன் புகுந்ததுவரையான காலப்பகுதியில் அவர்கள் வாழ்ந்ததற்கு நேரெதிரான உலகமது. இந்த உலகத்தில் அவர்களின் நியாயத்தராசிலிருந்து யாரும் தப்ப முடியாது. அது விக்னேஸ்வரனில் தொடங்கி பராக் ஒபாமா வரையும் நீளும். அசாமிலோ ஆபிரிக்காவிலோ சுமைதாங்கியபடி செல்லும் சிறுவனின் புகைப்படமொன்று இணையத்தில் வரும். இப்படியான காட்சிகள் நடக்கும் உலகத்தை ஒரு பார்வையில் எரிக்கும் கண்ணகி விழிகளை எனக்கும்தா என்று சாரப்பட ஒரு கவிதை எழுதி, படத்துடன் சேர்த்து தட்டிவிடுவார்கள். இத்தனைக்கும் இந்தவகையான எண்ணற்ற சிறுவர்களை நாங்கள் தினமும் கடந்து கொண்டுதான் உள்ளோம். இன்னும் சொன்னால், மிருகபலிக்கு எதிராகவும் ஒரு லைக். அங்கு வெட்டப்பட்ட ஆட்டின் இறைச்சியில் சமைத்தது என, நல்ல தூள்ப்பிரட்டலாக கறியின் படமிருந்தால் அதற்குமொரு லைக். சாதிய எதிர்ப்பு போராட்டமென்றால் அதற்கும் ஒரு லைக். உங்கள் சாதியில் பெண் பாருங்கள் என்று வரும் திருமணத்தளங்களிற்கும் ஒரு லைக்.

இதுதான் பொதுவாக தமிழர்களின் உளவியல். கிட்டத்தட்ட கனவுகாண்பதை ஒத்த உளவியல்தான் இணையத்தில் தீவிரமாக இருப்பவர்களின் உளவியலும் என நினைக்கிறேன். இது பற்றி பேஸ்புக் நிறுவனமோ அல்லது வேறு உளவியலாளர்களோ நிச்சயம் ஆராயச்சி செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் புதியதொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நிஜவுலகத்திற்கு கொண்டு வரலாம்.

http://pagetamil.com/?p=9067

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.