இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,மூட்டுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி, வீக்கம், சிவத்தல் ஆகியவையும் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கட்டுரை தகவல்
சுமன்தீப் கவுர்
பிபிசி செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
காலையில் எழும்போது கால் மூட்டுகள் விறைப்புடன் இருப்பதையோ, கால் அல்லது மூட்டுகளில் லேசான வலி இருப்பதையோ, வயது அல்லது சோர்வு காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுவதையோ நாம் புறக்கணித்து விடுகிறோம்.
ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட அது காரணமாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் அல்லது ஆர்த்ரிட்டீஸ் எனப்படுகிறது.
யூரிக் அமிலம் என்பது என்ன, அது ஏன் நம் உடலில் அதிகரிக்கிறது, சரியான நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்துவது ஏன் முக்கியம் என்பவை குறித்து மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயல்வோம்.
குர்காவுனை சேர்ந்த மூத்த வாத நோய் (rheumatologist) மற்றும் நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் ரேணு டாபர், உடலில் உருவாகும் இயற்கைக் கழிவுகளே யூரிக் அமிலம் என விளக்கினார்.
"இவை பியூரின்கள் எனப்படும் கரிம சேர்மங்கள் உடையும்போது உருவாகின்றன. பியூரின்கள் என்பது உடலின் செல்களில் இயற்கையாகக் காணப்படும் வேதிம சேர்மங்களாகும். மேலும் அவை சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இவை உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது" என்றார்.
ஹைப்பர்யூரிசெமியா (Hyperuricemia) என்பது ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இதனால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் ஆகியவை ஏற்படுகின்றன.
யூரிக் அமிலம் எப்படி உருவாகிறது?
லூதியானா சிவில் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சௌரவ் சிங் சிங்லா, பியூரின் வளர்சிதை மாற்றம் அடையும்போது உருவாவதாகவும் அது இரண்டு வழிகளில் உருவாவதாகவும் விளக்கினார்.
முதலாவது உடலின் திசுக்களிலேயே, அதாவது கல்லீரல், குடல், தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் வாஸ்குலர் எண்டோதெலியம் (vascular endothelium - ரத்த நாளங்களை உருவாக்கும் உட்புறச் சுவரை உருவாக்குகின்ற மெல்லிய செல் அடுக்கு) ஆகியவற்றில் உருவாகிறது. இரண்டாவது வழி, உடலுக்கு வெளியே, அதாவது விலங்குப் புரதங்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உருவாகிறது.
மேலும் அவர் கூறுகையில், "இந்த பியூரின் நியூக்ளியோடைடுகள் (nucleotides) நொதிகள் மூலம் ஹைபோக்ஸன்தைன் (hypoxanthine), ஸன்தைன் (xanthine) ஆகியவையாக உடைந்து, பின்னர் மேலும் ஸன்தைன் ஆக்ஸிடேஸ் (xanthine oxidase) எனும் நொதி மூலம் யூரிக் அமிலமாக மாறுகின்றன" என விவரித்தார்.
"மனிதர்களிடத்தில் யூரிகேஸ் (uricase) எனும் நொதி இல்லை என்பதால் யூரிக் அமிலம் உடையாமல் இருக்கும். எனவே அது சிறுநீரகங்களையே சார்ந்திருக்கிறது. அதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலத்திற்கு தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக இருக்கும். எனவே, அது மிக அதிக அளவில் இருந்தால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும்."
"மற்ற விலங்குகளிடம் யூரிக் அமிலத்தை மேலும் உடைத்து வெளியேற்றும் யூரிகேஸ் நொதி உள்ளது. ஆனால் மனிதர்களிடம் இந்த நொதி இல்லை. எனவே, யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது."
யூரிக் அமிலத்தின் இயல்பு அளவு
ஆண்கள் மற்றும் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள்: 3.5-7.2 mg/dL
மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள்: 2.6–6.0 mg/dL
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பியூரின் எனப்படும் ஒரு பொருள் சிதைக்கப்படுவதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது.
யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் காட்டும் அறிகுறிகள்
நிபுணர்களின் கூற்றுப்படி யூரிக் அமிலம் 6.8 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், மோனோசோடியம் யூரேட் படிகங்கள் (crystals) உருவாகத் தொடங்கும். இந்தப் படிகங்கள், மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும்.
சில மருத்துவ ஆதாரங்கள், ஆண்களுக்கு 3.4-7.0 மற்றும் பெண்களுக்கு 2.4-6.0 என்பதை இயல்பு அளவாகக் குறிப்பிடுகின்றன.
எனினும் நிபுணர்களின் கூற்றுப்படி, "வெவ்வேறு ஆய்வகங்களில் அதன் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கும். ஆனால், 7 mg/dLக்கு மேலே இருப்பது அதிகமான அளவாகக் கருதப்படுகிறது" என்றார்.
மருத்துவர் ரேணு விளக்கும்போது, கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் வரை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பது பெரும்பாலும் அறிகுறிகள் வாயிலாக எளிதில் தெரிய வருவதில்லை என்றார்.
"திடீரென மற்றும் கடுமையாக அழற்சி கீல்வாதம் ஏற்படும். இதனால் மூட்டுகளில் வீக்கம், சிவப்பாகுதல், சூடாகுதல் மற்றும் கடுமையான வலி ஏற்படும்," என்று அவர் விளக்கினார்.
"இந்த வலி கை, கால்களின் பெருவிரலில் ஆரம்பித்து, குதிங்கால், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் சிறு மூட்டுகளுக்குப் பரவும். இந்த வலி இரவு ஓய்வில் இருக்கும்போது ஆரம்பித்து ஓரிரு நாட்களில் அதிகபட்ச வலியை எட்டும்."
யூரிக் அமிலம் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்
மருத்துவர் சௌரவ் இதுகுறித்து விளக்கியபோது, யூரிக் அமிலம் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
"சுமார் 90% நோயாளிகளில், யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் முறையாக வெளியேற்றாததால் அதிகரிக்கும். 10% நோயாளிகளில் உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் உற்பத்தியாவது காரணமாக இருக்கிறது."
பட மூலாதாரம்,Getty Images
யூரிக் அமிலம் எதனால் உருவாகிறது? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கீல்வாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
வாழ்வியல் முறை: அதிகளவிலான இனிப்பு உணவுகள், மது (குறிப்பாக பீர்) மற்றும் இனிப்பு கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது.
அதிகமாக மது அருந்துவது, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, பியூரின்களின் அளவை அதிகரிக்கிறது.
உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் ரத்தத்தில் யூரிக் அமிலம் செறிவூட்டப்படுகிறது.
இதுதவிர, வேகமாக உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் சார்ந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது போதிய உடலுழைப்பு இல்லாமல் போனால் இவ்வாறு யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.
மரபியல்: பிறவி நொதிக் குறைபாடுகள் (congenital enzyme deficiencies) அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் குடும்பத்தில் ரத்த உறவுகள் யாருக்காவது இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
பட மூலாதாரம்,Getty Images
உடல்பருமன் (வயிற்றுப்பகுதி பருமனாக இருத்தல்): இதனால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே யூரிக் அமிலம் உருவாவதையும் அது சுரப்பதையும் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகமான அல்லது குறைவான கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு (metabolic syndrome) ஆகியவற்றாலும் சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறுவது குறைகிறது.
ரத்த புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள்: நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம்.
வயது மற்றும் பாலினம்: இந்தப் பிரச்னை பெண்களைவிட ஆண்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.
மேலும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, வீக்கம், சிவந்துபோகுதல் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம்.
இத்தகைய காரணங்களும் அறிகுறிகளும் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் (hyperuricemia) உள்ளதா என்பதை வழக்கமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்தல், ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்
எப்போது இந்த பிரச்னை அதிகமாகும்?
மருத்துவர் ரேணு கூறுகையில், அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், கீல்வாதம் தவிர மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் நீண்ட கால விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும்.
"சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் படிந்துவிடும்" என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, "இதனால் எலும்பு சேதமடைந்துவிடும், இதை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன்கள் மூலம் பார்க்கலாம். இதில், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள நீரை நீக்குவதன் மூலமும் இத்தகைய படிகங்களை அடையாளம் காண முடியும்."
அவரை பொறுத்தவரை, "இந்தப் படிகங்கள் சிறுநீரகங்களில் படிந்து, சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்."
சிறுநீரக நோய் (Nephropathy) என்பது சிறுநீரகங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் சிறுநீரகம் அதன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போகும்.
இதற்கு சிகிச்சை என்ன?
மருத்துவர் சௌரவை பொறுத்தவரை, மருந்துகளுடன் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதைச் சார்ந்தே கீல்வாதத்திற்கான சிகிச்சை உள்ளது.
அதுகுறித்து விளக்கியவர், "இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்," என்றார்.
பாதிக்கப்பட்ட மூட்டுகளை ஓய்வில் வைத்திருத்தல், அதில் ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதோடு, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பலன் தரும் என்றும் இவை உடல்நலத்தைப் பேணவும் மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறுகின்றனர்.
மேற்கொண்டு விளக்கிய மருத்துவர் ரேணு, "மது மற்றும் இனிப்பு நிறைந்த பானங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்."
"கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய், செர்ரி, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். போதுமான தண்ணீரைப் பருகுவதும் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் அல்லது 6-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு உதவும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cwyvee7j1r7o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.