Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசை வழிபடும் அறிவுஜீவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசை வழிபடும் அறிவுஜீவி

க. திருநாவுக்கரசு

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டத்தைச் சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தரப்பை சுப்பிரமணியன் சுவாமியும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை (பாஜக தரப்பை அல்ல) எஸ். குருமூர்த்தியும் பேசினர். (இடதுசாரிகளின் தரப்பைப் பேச வேண்டிய என். ராம் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை) விவாதத்தை நெறிப்படுத்துபவராக இருந்தவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசுவாமி.

விவாதத்திற்குப் பின்னர் கேள்வி நேரத்தில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் விவாதிக்கப்பட்ட கருத்து என்ன, தான் என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு ஏதுமில்லாமல் கேள்வி என்ற பெயரில் நீளமாகப் பேசிக்கொண்டேயிருந்தார். இத்தகைய கூட்டங்களில் இப்படிப்பட்ட ‘‘கேள்விகள்’’ வழக்கம் என்பதால் சுவாமியோ குருமூர்த்தியோ பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்க, பொறுமையிழந்த சோ ‘‘என்னதான் சொல்லவருகிறீர்கள்? நீங்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை’’ என்று எரிச்சலுடன் கூற அந்தப் பெண்ணும் ‘‘நான் ஒன்றும் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை’’ எனக் கோபமாகக் கூறினார். சில அறிவுஜீவிகளால் முட்டாள்தனத்தைச் சகித்துக்கொள்ள முடியாது. சோ அவர்களுள் ஒருவர். ஆனால் முட்டாள்தனத்தை மட்டுமல்ல மாற்றுக் கருத்துகளையும் சோவால் சகித்துக்கொள்ள முடியாது என்பது அவரது எழுத்துக்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும் (பழமைவாதக் கருத்துக்கள், திருநீறு நிறைந்த நெற்றி ஆகியவற்றைச் சோவின் அடையாளங்களாக அறிந்திருந்த எனக்கு அவர் புகைபிடிப்பதை, அதுவும் புகைக்குழாய் பயன்படுத்துவதைப் பார்த்து ஆச்சர்யம் தோன்றியது).

பத்திரிகையாளர்களில் ஒரு சிலரே அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்கிறார்கள். (இங்கு அறிவுஜீவி என்பதை ஆங்கிலப் பதமான public intellectual என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறேன்). ஆங்கிலத்தைப் போலல்லாமல், தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிவுஜீவிகள் மிகக் குறைவு. கூர்மையான அறிவு, பல முன்னாள், இந்நாள் பிரதமர்கள், முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், பல மாநிலங்களைச் சேர்ந்த எண்ணற்ற நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள், பல கட்சித் தலைவர்கள் என அரசியலில் எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுடன் உள்ள நேரடித் தொடர்பு, பிரபலமான அரசியல் பத்திரிகையின் ஆசிரியராக இருப்பது எனப் பல வகையிலும் சோ முக்கியத்துவம் வாய்ந்த அறிவுஜீவியாக இருக்கிறார். ஒரு ஆங்கிலப் பத்திரிகை நடத்திய கணிப்பில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம்பெற்றவர். 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். தமிழகத்தில் இவருக்கு இணையாகச் சொல்லத்தக்க பத்திரிகையாளர் அநேகமாக என்.ராமைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை. ஆனால் என். ராம் தமிழ்ப் பத்திரிகையாளர் அல்ல. எத்தனை ஆயிரம் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது என்றாலும் சோ சொல்வதை வேதவாக்காக நினைக்கப் பல ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள். நானே ஓர் உதாரணம். என் பதின்ம வயதுகளில் அரசியல் ரீதியாக என்மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தியவர் சோ. ‘துக்ளக்’ பத்திரிகை என்மீது ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தேன். மகத்தான தலைவருக்கான சிறந்த உதாரணம் மொரார்ஜி தேசாய் என்று முழுமையாக நம்பினேன். என்னைப் போலவே சோவைப் பெரும் அறிவுஜீவியாக, நேர்மையின் வடிவமாகக் கருதும் சிலரை அப்போது சந்தித்திருக்கிறேன். இவர்களில் ஏறக்குறைய 99 சதவிகிதத்தினர் இந்துக்களாக இருப்பார்கள் என்பதையும் இவர்களிலும் பெரும்பான்மையினர் பிராமணர்களாகவும் பிற முன்னேறிய சாதியினராகவும் இருப்பார்கள் என்பதையும் எந்தக் கருத்துக் கணிப்பும் நடத்தாமலே சொல்ல முடியும். ஆக, சோவின் அடையாளம் என்ன என்பது சொல்லாமலே விளங்கக் கூடியது.

அரசியல், சமூகம் சார்ந்த சோவின் கருத்துக்கள் தமிழகப் பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு எதிரானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும் சோவைப் போல சித்தாந்தரீதியில் முரணற்றுத் தனது விமர்சனங்களை முன்வைத்திருப்பவர்கள் வெகு குறைவு. தனது நிலைப்பாடுகளைத் தனது வசதிக்கேற்ப சோ மாற்றிக்கொள்கிறார். அவர் ஒரு குழப்பவாதி என்று கருதுபவர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள். உதாரணமாக, ஜெயபிரகாஷ் நாராயண் தொடங்கிய மனித உரிமை இயக்கமான பி.யு.சி.எல்.லில் முக்கிய உறுப்பினராக இருந்த, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையைத் தீவிரமாக எதிர்த்த ஒருவர் இன்று அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்னை மூடிக்கொண்டு ஆதரிப்பது முரண்பாடாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ஏன் அப்படி அல்ல என்பதைப் பின்னர் பார்ப்போம்.

‘‘உண்மைக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய சுதந்திரமான சிந்தனையைக் கொண்டவராக மற்றும் அதன் பாதுகாவலராக இருப்பவர்.’’ அறிவுஜீவி என்பவர் யார் என்பதற்குப் பிரஞ்சு அறிஞர் ஜூலியன் பென்டா வகுத்த இந்த வரையறையின்படி சோ ஓர் அறிவுஜீவி அல்ல. ஜெயகாந்தனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு சித்தாந்தத்திற்கோ அல்லது கட்சிக்கோ தாலிகட்டிக்கொண்டவர்கள் பென்டாவின் வரையறையின்படி அறிவுஜீவிகளாக இருக்க முடியாது. இந்துப் பழமைவாதம், வலதுசாரி அரசியல் பார்வையிலிருந்து சோ ஒருபோதும் விலகியதில்லை. சோ விசுவாசியாகவும் பாதுகாவலராகவும் இருப்பது இந்த இரண்டு விஷயங்களுக்குத்தான். இவற்றிற்காக உண்மையை, நீதியைப் பலிகொடுக்க அவர் ஒருபோதும், எள்முனையளவும் தயங்கியதேயில்லை. தனது இளம் வயதிலேயே வரித்துக்கொண்ட விழுமியங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியதேயில்லை. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஒரு முழுமையான வலதுசாரி அவர்.

சென்னையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து பழமைவாதச் சூழலில் வளர்ந்தது அவரது ஆளுமையின் பெரும்பகுதியைத் தீர்மானித்திருக்கிறது. அதையொட்டியே அவரது உலகப் பார்வையும் அமைந்திருக்கிறது. பன்முக ஆளுமை கொண்டவர் சோ. வழக்கறிஞர், நாடக ஆசிரியர், நடிகர், பத்திரிகையாளர் எனத் தான் ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றவர். இவரது நாடகங்களுக்கு இலக்கிய மதிப்பு ஏதும் கிடையாது. அதே காலகட்டத்தில் நாடக உலகில் இயங்கிவந்த விஜய் டெண்டுல்கர், கிரீஷ் கர்னாட், பாதல் சர்க்கார் ஆகியோருடன் ஒப்பிடும்போது சோவின் நாடகங்கள் வெறும் கோமாளித்தனமானவை என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. ஆனால் அவற்றில் வெளிப்பட்ட பகடி இலட்சக்கணக்கானவர்களைப் பெரிதும் சிரிக்கவைத்தது. சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தது படிப்பறிவற்ற மக்களிடமும் பிரபலமாக உதவியது. தான் சரியென்று கருதுவதை யாருக்கும் அஞ்சாமல் பேசும் குணம் இன்று இவர் பெற்றிருக்கும் இடத்திற்கு ஒரு முக்கியக் காரணம். ஆஸ்கர் ஒயில்டின் வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்வதென்றால் ‘‘பெரும்பாலானவர்கள் எனது கருத்தை மறுக்கிறார்கள் என்றால் அது சரியானதாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கருதக்கூடியவர் சோ. தன்னைத்தானே பகடி செய்துகொள்ளும் சோ, தனது சாதனைகள் எதையும் சாதனைகளாகக் கருதுவதில்லை. அவற்றிற்குப் பின்னால் பெரிய திட்டமிடலோ அல்லது கடும் உழைப்போ இல்லை என்கிறார். வாழ்வின் போக்கில் ஏற்பட்ட இயல்பான விஷயங்கள் அவை என்பதே அவரது கருத்து. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் குணத்தைத் தனது தந்தையிடமிருந்து பெற்றதாகச் சொல்கிறார்.

பத்திரிகையாளராக இருப்பது உட்பட தனது வாழ்வின் பல விஷயங்கள் தற்செயலாக நடந்தவை என்கிறார் சோ. தான் மேலாளராகப் பணியாற்றிய அமெச்சூர் நாடகக் குழுவில் அன்று நடிக்க வேண்டிய ஒருவர் வராது போய்விட்டதால் தான் நடிகராக நேர்ந்தது, இயக்குநர் பீம்சிங் வற்புறுத்தியதால் சினிமாவில் நடிக்க நேர்ந்தது என்கிறார். 1970இல் ஒரு நாள் ‘இவ்வளவு பேசுகிறாயே உன்னால் ஒரு பத்திரிகையை நடத்த முடியுமா?’ என்று நண்பர்கள் சிலர் சவால் விட்டதால் அதை ஏற்று துக்ளக் பத்திரிகையைத் தொடங்கினார். பத்திரிகை தொடங்கலாமா என வாசகர்களிடம் கேட்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் தமிழில் விளம்பரம் வெளியிட்டார். தனது மிகப் பிரபல நாடகமான முகமது பின் துக்ளக் பெயரைத் தனது பத்திரிகைக்கு வைத்தார். ஆனால் துக்ளக் நாடகம் முதலில் 1964இல் கிரீஷ் கர்னாடால் எழுதப்பட்டது என்றும் அதைத் தனக்கேற்றாற்போன்று மாற்றிக்கொண்ட சோ, கர்னாடுக்கு உரிய அங்கீகாரத்தைத் தரவில்லை என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். சுமார் 25 நாடகங்களை எழுதி இயக்கியிருக்கும் சோ 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவரது நையாண்டி எழுத்துகள் பெரும் வரவேற்பு பெற்றதற்கு முக்கியக் காரணம் மூன்றாம், நான்காம் தர அரசியல்வாதிகளால் தமிழகம் நிரம்பியிருந்ததுதான். திமுக பாணி அரசியல்வாதிகளின் தந்திரமான பேச்சுகளை, செப்படி வித்தைகளைப் பரிகாசம் செய்வதற்குப் பதில் தனது கோபத்தை இந்தியச் சமூகத்தில், அரசியலில் நிலவும் அமைப்பு ரீதியான வன்முறை, அநீதிக்கு எதிராக சோ திருப்பியிருப்பாரென்றால் ஒருக்கால் நமக்கு ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ அல்லது ‘விலங்குப் பண்ணை’ போன்ற படைப்புகள் கிடைத்திருக்கக்கூடும்.

தனிமனித வாழ்வில் இவர் கடைபிடிக்கும் நேர்மையை இவரது மோசமான எதிரிகளால்கூடக் குறை சொல்ல முடியாது. இவரது நேர்மை, துணிவு இவரைக் காமராஜர், மொராஜி தேசாய், சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே, அத்வானி, இன்று நரேந்திர மோடி உட்பட பலருக்கு இவரை நெருக்கமாக்கியிருக்கிறது. இந்த உறவுகளின் அடிநாதமாக இருப்பது வலதுசாரி அரசியல் என்பதை மறந்துவிடக் கூடாது. எத்தனையோ செல்வாக்கான தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தும் ஒரு முறையேனும் அந்த நெருக்கத்தைத் தனது சொந்த ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாக சோவை யாரும் குற்றம் சொல்ல முடியாது. இந்த நேர்மையுணர்வு அவரது அடிப்படை பலம். தான் நம்பும் கோட்பாடு இந்துப் பழமைவாதமாக இருந்தாலும் நண்பர்கள், சக பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என அனைவருடனும் இவரது உறவு எப்போதும் சாதி, சமயச் சார்பற்றதாகவும் கண்ணியமானதாகவும் இருப்பதாக இடதுசாரி பத்திரிகையாளரான ஞாநி குறிப்பிடுகிறார்.

இந்த பலங்களை அடிப்படையாக வைத்துத்தான் தனது மிக மோசமான, நேர்மையற்ற அரசியல் விமர்சனங்களை ‘உண்மை உண்மையைத் தவிர வேறில்லை’ என்ற பாவனையுடன் இவரால் பல ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் செல்லுபடியாக்க முடிகிறது. இவரது தனி வாழ்வு நேர்மையும் தீவிர வலதுசாரி அரசியலும் கைகோர்க்கிறபோது அது முற்போக்கான அரசியலுக்கும் தாராளவாத (லிபரல்) ஜனநாயகத்திற்கும் பெரும் தீங்காக முடிகிறது. ‘‘திராவிட இயக்கத்தின் மீதான சோவின் கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் இயக்கத்தின் முற்போக்கான அம்சங்களுக்கு எதிரானாது’’ என்று வேங்கடாசலபதி கூறுவதில் நிறையவே உண்மையிருக்கிறது.

1975இல் நெருக்கடி நிலைக்கு எதிராகத் துணிவுடன் செயல்பட்ட ஓரிரு பத்திரிகையாளர்களில் சோவும் ஒருவர். இதற்குக் காரணம் இந்திரா காந்தியின் எதேச்சதிகாரப் போக்கு அல்ல. அதுதான் காரணம் என்றால் ஜெயலலிதா, மோடி போன்ற தலைவர்களை சோ இவ்வளவு தீவிரமாக ஆதரிக்க முடியாது. கொஞ்சம் இடதுசாரிச் சாய்வு கொண்டவராகவும் சோ பெரிதும் நேசித்த காமராஜ், கிருபளானி, மொரார்ஜி போன்றவர்களுக்கு எதிரியாகவும் இருந்த காரணத்தாலேயே இந்திராவைத் தீவிரமாக எதிர்த்தார் சோ. நெருக்கடி நிலைக்கு எதிரான சோவின் நிலை முற்போக்கு அரசியலுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டிலிருந்து பிறந்ததே தவிர மக்களாட்சி, மனித உரிமை மாண்புகள்மீது அவருக்கிருந்த நேசத்திலிருந்தல்ல.

சோவைப் பற்றிய மதிப்பீடு பொதுவாக எப்படியிருக்கிறது என்பதற்கு எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘‘வியப்பளிக்கும் ஆளுமைகள்’’ என்ற புத்தகம் நல்ல உதாரணம். தன்னை வியக்கவைத்த ஆளுமைகளுள் ஒருவராக சோவைக் குறிப்பிடுகிறார் வெங்கட் சாமிநாதன் (எம்.ஜி.ஆர்., கருணாநிதி, வைரமுத்து ஆகியோரும் அவரை வியக்கவைத்த ஆளுமைகளில் அடக்கம்). காந்தி, திரு.வி.க.விற்குப் பிறகு வாராது வந்த மாமணியாக சோவைப் பார்க்கிறார் சாமிநாதன். சோவின் அறிவார்த்தம், தார்மீகம், எதிர்நீச்சல் ஆகியவற்றை விதந்தோதுகிறார். அறிவுக்கூர்மை நிறைந்தவர் சோ என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தான் நம்பும் மகா அபத்தமான விஷயங்களைப் பொருள் பொதிந்தவை என நிறுவுவதற்காகத் தனது கூரிய அறிவை சோ படுத்தும்பாடு சாமிநாதனுக்கு வியப்பளிக்கத்தான் செய்யும்.

தான் எழுதிய ‘‘ஹிந்து மஹா சமுத்திரம்’’ என்ற தொடரில் இந்து மதம் எப்படித் தொடக்கம் என்ற ஒன்று இல்லாத, எப்போதும் இருந்துவருகிற மதம் என்பதைத் தனது வாதத்திறனால் பின்வருமாறு நிறுவ முயல்கிறார்: ‘‘உங்களது தந்தையை உங்களுக்குத் தெரியும். உங்களது தாத்தாவை அறிந்திருப்பீர்கள். முப்பாட்டன் பற்றிக் கேட்டால் அநேகமாகப் பெயரைத் தவிர்த்து வேறு எதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். பத்து, பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த உங்கள் முன்னோரைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பீர்கள். அதனால் உங்களுக்கு முன்னோரே இருந்ததில்லை என்று சொல்லிவிட முடியுமா? அப்படிப்பட்டதுதான், 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதம் இருந்ததில்லை, ஏனெனில் அப்படிச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் வாதிடுவதும்.’’ சமத்காரமான வாதம் இது. இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாததை வைத்து இல்லை என்று சொல்ல முடியாதென்றால் இருந்தது என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? மேலும் பரிணாம வளர்ச்சி பற்றியும் தொல்லியல், வரலாறு எப்படி அறிவுப்பூர்வமாக அணுகப்படுகிறது என்பது பற்றியும் எந்தப் புரிதலும் இல்லாத ஒருவரால்தான் இத்தகைய சமத்காரமான, ‘அறிவார்த்தமான’ வாதங்களை வைக்க முடியும். 2000 அல்லது 20000 ஆண்டுகளுக்கு முன்னர் என் முன்னோர் இருந்தனர் என்றால் நம்ப முடியும். ஆனால் 200000 ஆண்டுகளுக்கு முன்னர் என் முன்னோர்கள் இருந்தனர் என்றால் யார் நம்புவார்கள்? ஏனெனில் அப்போது மனித இனமே உருவாகியிருக்கவில்லை. இப்போது நடப்பது கலியுகம். சத்யயுகம், திரேதாயுகம், துவாரக யுகம் எல்லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் நீடித்தன. அப்போதெல்லாம் மனிதர்களின் சராசரி ஆயுள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தன என்ற கதையெல்லாம் சாத்தியமே என்று நம்புகிற சோ இத்தகைய வாதத்தை வைப்பதில் ஆச்சர்யமல்ல.

தனது போற்றுதலுக்குரிய தலைவர்களின் தவறுகளை, அநியாயங்களை நியாயப்படுத்தவும் இதே போன்ற சமத்காரமான வாதங்களைப் பயன்படுத்துவதில் சோ வல்லவர். இந்த வகையில் இவர் சங் பரிவாரத்திற்குக் கிடைத்த சின்னக் குத்தூசி எனலாம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் பத்திரிகையின் அட்டையைக் கருப்பு நிறத்தில் வெளியிட்டிருந்ததுடன் அச்செயலை வன்மையாகவும் கண்டித்திருந்தார். தார்மீகம் மிக்க செயல்தான். ஆனால் இந்தத் தார்மீகம் எவ்வளவு போலியானது, அர்த்தமற்றது என்பது இவர் அத்வானியைக் கொண்டாடும் விதத்திலேயே தெரிந்துகொள்ளலாம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கான இயக்கத்தை நடத்திய அத்வானியை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்பதற்கு சோ ‘‘வெள்ளையனே வெளியேறு இயக் கத்தின்போது நடந்த வன் முறைகளுக்குக் காந்தியைப் பொறுப்பாளியாக்க முடியுமா?’’ என்றார். வங்கம் வகுப்புவாதத் தீயில் எரிந்தபோது நவகாளியில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பாதயாத்திரை மேற்கொண்ட காந்தி தன்னால் கூட்டப்பட்ட ஒரு கூட்டம் தன் கண்ணெதிரில் வன்முறையில் ஈடுபடுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வன்முறை வெடித்தபோது தனது இயக்கத்தையே திரும்பப் பெற்றுக்கொண்ட காந்தியோடு, தான் கூட்டிய கூட்டம் தன் கண்ணெதிரில் மசூதியை இடிப்பதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டு, தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் ‘‘எனது வாழ்க்கையின் மிகச் சோகமான நாள்’’ என்று நீலிக்கண்ணீர் வடிக்கிற ஒரு சராசரி அரசியல்வாதியைச் சமப்படுத்திப் பேசுவதற்கு சோவால்தான் முடியும்.

இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், தேசிய மற்றும் சர்வதேசிய மனித உரிமை அமைப்புகள் எனப் பலவும் 2002 குஜராத் கலவரத்தில் அன்றைய மாநில அரசாங்கமும் மோடியும் வகித்த பாத்திரத்தைப் பற்றி ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்திருந்தபோதிலும் சோவைப் பொருத்தவரை அவையனைத்தும் மோடிக்கு எதிரான துவேஷம் மட்டுமே. ஆனால் மோடியின் துவேஷமோ அக்மார்க் தேச பக்தி! கருணாநிதிக்குச் சின்னக் குத்தூசி வாய்த்தார் என்றால் அத்வானி, நரேந்திர மோடிக்கு சோ வாய்த்திருக்கிறார்.

எல்டிடிஈயின், இஸ்லாமியத் தீவிரவாதிகளின், மாவோயிஸ்டுகளின் வன்முறை முதல் நம்மூர் திமுக, பாமக, கல்லூரி மாணவர்களின் பொறுக்கித்தனம் வரையிலான எல்லா வன்முறைகளையும் கடுமையாக விமர்சிக்கும் சோ ஒருபோதும் அரசு வன்முறையைக் கண்டித்ததேயில்லை என்பதுடன் அதைக் கொண்டாடவும் செய்கிறார். மனித உரிமை இயக்கங்கள் ஏதோ கொலைகாரர்களின் உரிமைகளுக்காக மட்டுமே செயல்படுபவை என்பதாகக் காட்ட முற்படுகிறார். ஆங்கிலத்தில் straw man argument என்பார்கள். நாம் எதிர்க்க வேண்டிய தரப்பை மிகத் தவறாகச் சித்திரித்துவிட்டு அந்தத் தவறான சித்திரிப்பைத் தாக்குவது. எதிர்த்தரப்பு என்ன என்பதைத் தெளிவாக அறியாதவர்களிடம் இது மிகவும் எடுபடும். மிகச் சமீபத்தில் ‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்’ (NGOS) பற்றி எழுதியுள்ள தலையங்கத்தில் எந்த அளவிற்கு அவற்றைப் பற்றிய உண்மைகளைச் சிதைத்துக் கேலிக்கூத்தாக்க முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார். ‘‘சில வருடங்களாகத் ‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்’ என்று ஒரு புது வகை வந்திருக்கிறது. அதாவது சிலருக்கு, அவர்களுக்காகவே ஒரு ஆர்வம் வந்துவிடுகிறது, தன்னார்வம். தொண்டு செய்ய வேண்டுமென்று துடிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் நடத்துகிற நிறுவனங்கள் அரசுக்கோ, பங்குதாரர்களுக்கோ பதில் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஆர்வமோ தானாக வந்தது; தொண்டோ தெருவில் இறங்கினால் கிடைப்பது. இதில் யாருக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது?’’ அதே தலையங்கத்தில் சுற்றுச்சூழலியலாளர்களைப் பற்றிய அவரது வர்ணணை: ‘‘இந்தத் தன்னார்வக்காரர்களுக்கு எதில்தான் தன்னார்வம் வரும் என்று சொல்ல முடியாது. ‘சஹாரா பாலைவனத்தில் ஜீலி ஜியாம்போ என்ற மிகவும் அரிய விஷ ஜந்து இருக்கிறது. இது மூச்சுவிட்டால் 300 மைல் நாசம். அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஜீலி ஜியாம்போவை மனிதன் கோழைத்தனமாக அழித்து வருகிறான்- வருகிறான் என்ன, கிட்டத்தட்ட அழித்தேவிட்டான். இதன் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். இருந்ததே மூன்றே மூன்று ஜீலி ஜியாம்போ. இப்போது மீதம் இருப்பது ஒன்றுதான். இதைக் காப்பாற்ற ஐ.நா. சபை முன்பு, முன்னாள் நோபல் பரிசு பெற்றவர்கள்கூடி எதிர்ப்புக்காட்ட இருக்கிறார்கள். வெட்கக்கேடு, இந்தியாவில் இருந்து ஒரு பிரதிநிதிகூடக் கிடையாது’ என்று ஒரு தன்னார்வம் கிளம்பும்’’. இது பகடியா அல்லது விமர்சனமா? கிரீன்பீஸ் போன்றதொரு இயக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த ஆனால் திமுக, காங்கிரஸ் கட்சிகளைப் பற்றி ஏதும் அறியாத ஒருவர், இவரது விமர்சனங்களைப் படித்தால் திமுகவும் காங்கிரஸும் மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுகிற சிறந்த கட்சிகளாக இருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வருவார். இவரது விமர்சன நேர்மை அத்தகையது.

எல்டிடிஈ ஒரு பயங்கரவாத இயக்கம். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டுமே தவிர வன்முறை வழியாக அல்ல என்று சோ பல காலமாகக் கூறிவந்திருக்கிறார். எல்டிடிஈ போன்றதொரு பயங்கரவாத இயக்கத்தை எந்தவொரு பண்பட்ட (civilized) மனிதனும் ஆதரிக்க முடியாது. ஆனால் சோவின் பண்பாடு அல்லது விழுமியம் எப்படிப்பட்டது? காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பாகிஸ்தான்மீது இந்தியா தொடுக்கும் போர் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்றாலும் அதற்கும் இந்தியா தயங்கக் கூடாது என்று சொல்லுமளவிற்குச் செல்கிறார். அணு ஆயுதப் போர் என்று வந்தால் இந்தியாவின் ஒரு பகுதி அழிவதற்குள் நாம் பாகிஸ்தானை முழுமையாக அழித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையால் வரும் பேச்சு இது. இதைவிடத் தீவிரமாக வன்முறையை ஒருவர் ஆதரிக்க முடியாது. அரசை வழிபடுவதில் ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் சீடர்களுக்கு எந்த வகையிலும் இவர் சளைத்தவரல்ல. பயங்கர வாதத்தில் அரசுக்கொரு நியாயம், அரசு சாரா பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம். அமெரிக்காவில் இருந்திருந்தால் ரீகன், புஷ் வகையறாக்களைப் பெரிதும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்.

மக்களாட்சியின் அடிப்படையான பேச்சுச் சுதந்திரம் என்பது சோவைப் பொருத்தவரை அரசியல்வாதிகளைப் பகடி செய்வதற்கானது மட்டுமே. குடும்பம், மதம், அரசு, நீதிமுறை என அமைப்பு ரீதியான எதையும் கேள்விக்குட்படுத்துவது சோவிற்கு அந்நியமான விஷயங்கள். அவரைப் பொருத்தவரை அவ்வாறு கேள்விக்குட்படுத்துகிறவர்கள் கலகக்காரர்கள், ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேன்டியவர்கள். வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் இவரை anti-establishment என்று கருதுவது establishment என்றால் என்ன என்றே தெரியாததால் வரும் வினை. நிறுவன எதிர்ப்பாளர்கள் எவ்வளவு நேர்மையானவர்களாக, தன்னலமற்றவர்களாக, மனிதநேயர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சோவின் கருணை கிடைக்காது.

Dreyfus affair போன்றதொரு விவகாரத்தில் கண நேரத் தயக்கமும் இல்லாமல் சோ பிரஞ்சு ராணுவத்தின், அரசின் பக்கமே நின்றிருப்பார். ஒருமுறை கேள்வி பதில் பகுதியில் டாக்டர் பினாயக் சென் மீதான சத்தீஸ்கர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அவ்வழக்கு தொடர்பான ராய்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு ‘‘இந்த வழக்குப் பற்றிக் கருத்துச் சொல்கிறவர்கள் பலரும் பினாயக் சென் நல்ல மனிதர் என்று சொல்கிறார்களே தவிர்த்து வழக்கின் நியாயங்களைப் பார்க்கத் தவறுகிறர்கள்’’ என்று எளிமையாக, சுருக்கமாகப் பதிலளித்தார். ஆனால் பல சட்ட நிபுணர்கள், பாஜக ஆதரவாளரான ராம்ஜெத்மலானி உட்படப் பலரும் இந்த வழக்கை ஆராய்ந்து, சுதந்திரமாகச் செயல்படும் எந்தவொரு நீதிமன்றமும் ஆதாரமற்றது என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிடும் என்று சந்தேகத்திற்கிடமின்றிக் கூறியிருக்கின்றனர். வழக்கு எவ்வளவு சொத்தையானது, பொய்யானது என்பது வழக்கை ஆராய்கிறவர்களுக்கு முதல் பார்வையிலேயே தெரிந்துவிடும். இந்த வழக்கில் மட்டும் சத்தீஸ்கர் அரசாங்கத்தின் பக்கம் நியாயம் இருந்திருக்கும் என்றால் வாசகரின் கேள்விக்குப் பதிலாக நீண்ட தலையங்கமே எழுதியிருப்பார். பினாயக் சென்னைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டிருப்பார். சோ எப்படி நேர்மையுடன் விஷயங்களை அணுகுவார் என்பதற்கு இதுவோர் உதாரணம்.

ஜார்ஜ் புஷ்ஷும் டோனி பிளேரும் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் உசைன் பதுக்கி வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் கிடைத்திருப்பதாகக் கூறிப் போர் தொடுத்தனர். பின்னர் இந்தப் பொய்கள் முழுமையாக அம்பலமாகி புஷ்ஷும் பிளேரும் அவற்றைச் சொல்வதை நிறுத்திய பிறகும் சோ ‘‘பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இல்லவேயில்லை என்று சொல்லிவிட முடியாது’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்படியொரு விசுவாசி தங்களுக்கு இருப்பது தெரிந்திருந்தால் புஷ்ஷும் பிளேரும் புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள்.

ஜெயலலிதா, மோடி போன்றவர்களை சோ ஆதரிப்பதற்குக் காரணம் அவர்கள் இந்து தேசியவாதத்தை, தனியார்மயமாக்கலை ஆதரிப்பவர்கள் என்பது மட்டுமல்ல. கூட்டுச் செயல்பாட்டில் நம்பிக்கையற்றவர்கள், சர்வாதிகாரப் போக்கு கொண்டவர்கள் என்பதும் முக்கியமான காரணம். சீனாவின் வளர்ச்சிக்குக் காரணம் எதிர்க்கட்சிகள், கருத்து மாறுபாடுகள் என்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் அரசாங்கத்தால் தனது திட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்த முடிவதே என்று சோ திடமாக நம்பும் காரணத்தால் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்துகொண்டபோது அடுத்த ஓரிரு பத்தாண்டுகளில் சீனாவைப் போல இந்தியாவும் பொருளாதாரத்துறையில் முன்னேறும் என்கிற நிச்சயம் இருந்தால் தனது அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுத்தருவதாகக் கூறி அவரை ஒரு லிபரல் ஜனநாயகவாதி என்று (தவறாக) நினைத்துக் கொண்டிருந்தவர்களை அதிர்ச்சியடையவைத்தார். சோவுக்கு அடுத்துப் பேசிய பேராசிரியர் தீபங்கர் குப்தா, சீனாவின் வளர்ச்சிக்குக் காரணம் அது விவசாயம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்களே தவிர அதன் சர்வாதிகாரம் அல்ல. மாறாக நீண்டகால நோக்கில் பார்க்கும்போது ஒரு நாட்டிற்குச் சர்வாதிகாரம் அல்ல ஜனநாயகமே நன்மை பயக்கும் என்று பதிலளித்தார். அதற்கு சோ எந்த மறுமொழியும் கூறாமல் அமைதியாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டியில் ‘‘நெருக்கடி நிலை தவறான மனிதரால் தவறான காரணத்திற்காகக் கொண்டுவரப்பட்டது. இப்போது நாட்டின் பல பகுதிகளில் நக்சல் இயக்கங்கள் வளர்ந்துவருகின்றன. நெருக்கடி நிலையைக் கொண்டுவர இது சரியான தருணம். ஆனால் கொண்டுவரக்கூடியவர் சரியான ஆள் இல்லை. அதாவது உண்மையான அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் சோனியா காந்தியைக் குறிப்பிடுகிறேன். வாஜ்பாய், அத்வானி அல்லது அவர்களைப் போன்றவர்கள் கொண்டுவந்தால் ஆதரிப்பேன்’’ என்றார். ‘‘அதிகப் பாதுகாப்பிற்காகத் தங்களது உரிமைகளை விட்டுத்தருகிறவர்கள் உரிமைகளுக்கும் தகுதியற்றவர்கள், பாதுகாப்பிற்கும் தகுதியற்றவர்கள்’’ என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னது சோவுக்கு நன்கு பொருந்தும்.

பெண்ணுரிமை, செக்ஸ் கல்வி எனப் பல விஷயங்களைத் தனது சமத்காரமான வாதங்கள் மூலம் தொடர்ந்து எதிர்த்துவருகிறார். பிற்போக்குத்தனமான தனது நிலைப்பாடுகளை நிறுவ இவர் முன்வைக்கும் வாதங்கள் பல சமயங்களில் அபத்தமானவை. ‘பள்ளி மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவையா?’ என்ற கேள்விக்கு ‘‘யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் செக்ஸில் ஈடுபடுகின்றன’’ என்று பதிலளித்தார். இந்தப் பதில் அவரது பெரும்பான்மை வாசகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கக்கூடும். இந்தப் பதிலைப் பற்றி மனநல மருத்துவர் ருத்ரனிடம் கேட்டபோது ‘‘விலங்குகள் தங்களுக்காகப் பத்திரிகை எதையும் நடத்துவதில்லை’’ என்றார். சோவின் வாதங்கள் எப்படித் தர்க்கப்பூர்வமற்றவை என்பதை விளக்க இன்னும் ஏராளமான உதாரணங்களைத் தர முடியும்.

தனது கட்சிக்காரர் பக்கம் உண்மையும் நியாயமும் இருக்கிறதா என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவரைக் காப்பாற்ற வழக்கறிஞர் தன்னால் முடிந்த அளவிற்கு வாதிடுவதைப் போலவே, சோ தனது சித்தாந்த நிலைபாட்டிற்கு உகந்த விஷயங்களை, தலைவர்களை ஆதரிக்க வாதிடுகிறார். இந்த விஷயத்தில் இவர் பெற்றுள்ள வெற்றிக்குக் காரணம் தனி வாழ்வில் இவர் பின்பற்றும் நேர்மை. மிக நேர்மையான சர்வாதிகாரிகளுடன் ஒப்பிடுகிறபோது மிகுந்த பலவீனங்கள் கொண்ட

ஊழல் அரசியல்வாதிகள் ஆபத்தற்றவர்கள் என்று மொழியியல் மேதை நோம் சோம்ஸ்கி கூறியது மெத்தவும் சரி.

http://www.kalachuvadu.com/issue-175/page07.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.