Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் அறுவடை

Featured Replies

தூய்மையான நீர் கிடைப்பது அரிதாகிவருகிறது.

  • பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு  நீராக கடலில் உள்ளது.
  • மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது. 
  • மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம்  நீர்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது.  அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது.
நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்

நகர்புறம்

கிராமப்புறம்

மேற்கூரையில் விழும் / வழிந்தோடும்      மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறுவடை செய்தல்

  • ரீசார்ஜ் குழி
  • ரீசார்ஜ் டிரன்ச்
  • குழாய் கிணறுகள்
  • ரீசார்ஜ் கிணறு      

வழிந்தோடும்      மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறுவடை செய்தல்

  • கல்லி ப்ளக்
  • கான்டூர் வரப்பு
  • கேபியன் கட்டுமானம்
  • உறுஞ்சு குளங்கள்
  • தடுப்பணை கட்டுதல்
  • ரீசார்ஜ் ஷாப்ட்
  • வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்
  • நிலத்தடி நீர் அணைகள்
அ. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல்.

கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.

i. கல்லி ப்ளக்
  • உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம்  போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.
  • மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
  • நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும்.

ii. கான்டூர் வரப்பு

ar5.jpg

 

  • நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது.
  • குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த  முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது.  
  • சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு  ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது.
  • இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும்.
  • சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும்.
 

iii. கேபியன் கட்டுமானம்e

 

gabion_structure.gif

  • சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக்கட்டுமானம் உதவுகிறது.
  • நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம்.
  • கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது.
  • கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது.  சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும்.  காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும். இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது.  இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நிரைத்தடுக்கிறது.  பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது.
 

 
iv. உறுஞ்சு குளங்கள்
  • இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.
  • நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது.
  • இவ்வமைபுகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும்  நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம்.
  • உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது.  பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்படவேண்டும். 
  • மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும்.  இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின்  அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை.

Percolation_Tank.png

 

 

 

v. தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை
  • லேசான சரிவுள்ள  சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.  தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும்.
  • இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது. பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும்.
  • நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது.
  • சிறிய நீரோடைகளை தடுத்து  நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது.  ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது.
  •  
 Check_Dams.gif

 

 

 

vi ரீசார்ஜ் ஷாப்ட்

 

harvesting7.png

  • இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை.
  • மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டளாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்.
  • நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதிரய் கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும். இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம்.  
  • இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது.  சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும்.
  • மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக, அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம்.
  • வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது.
  • இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

 

vii. வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்

 

 

direct-bore-well-500x500.jpg

 

 

  • ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம்.
  • சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது.

viii நிலத்தடி நீர் அணைகள்

 

Ground_water_Dams.gif

  • நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது.
  • நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் உடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும்
  • தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர்  கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும்.
  • நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய  நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம்.
  • தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு  நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
 

 

ஆ. நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு

நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.

i. ரீசார்ஜ் குழி

 

recharge_pit.gif

  • நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும்  பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது.
  • இம்முறை 100 ச.மீட்டர்  கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது.
  • இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம்,  2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு  சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம்.  சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது.
  • குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு/சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம்.
  • குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்படவேண்டும்.
  • முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது.
 

ii. ரீசார்ஜ் டிரன்ச்

 

trenches.gif

  • இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும்.
  • நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன.
  • நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம்.
  • முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும்.
 

iii. குழாய் கிணறுகள்

 

harvesting2.png

  • மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம்.
  • 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ  விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும்
  • கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது.
 
iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு
  • மேல்  மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில்,  கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன.
  • இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம்,  தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது.
  • சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது.
  • 1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது.
  • கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின்  அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும்.
  • குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது.
  • நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள  ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது.
ar4.jpg
 

மூலம் : மத்திய நீர்வள அமைச்சகம், மத்திய நிலத்தடி நீர் வள வாரியம், பரிதாபாத்.

 

http://www.indg.in/rural-energy/technologies-under-rural-energy/ba8bbfbb2ba4bcdba4b9fbbf-ba8bc0bb0bc8-b89bafbb0bcdba4bcdba4-baebb4bc8ba8bc0bb0bcd-b85bb1bc1bb5b9fbc8/

Edited by Athavan CH

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
தண்ணீரைத் தொலைப்பவர்களா நாம்?

தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலான அணைகள் கிட்டத்தட்ட முழுக்க நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, மேட்டூர் அணை கிட்டத்தட்ட 110 அடியாக இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முழு மூச்சாகத் தொடங்கியிருக்கும் இந்த நிலையில், பாசன ஏரிகளில் பெரும்பாலானவை தூர்வாரப்படாமல் இருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, டெல்டாவிலேயே கடைமடைப் பகுதியில் வாய்க்கால்கள் தூர்ந்தும், கரைகள் சரிந்தும் இருக்கின்றன. தண்ணீருக்காகத் தொடர்ந்து கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் நாம், தண்ணீர் மேல் காட்டும் அக்கறையின் லட்சணம் இதுதான்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள் 13,779-ல், சுமார் 3,350 மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் தூர் வாரப்பட்டுள்ளன, அதுவும் உலக வங்கி அளித்த கடனில். 2008-ம் ஆண்டு ரூ.2,820 கோடியை உலக வங்கி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது. ஆனாலும், 54% ஏரிகள் இன்னமும் தூர் வாரப்படாமல் இருக்கின்றனவாம். அதுமட்டுமா, மேட்டூர் அணையைத் தூர் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணையில் நீர்மட்டம் 20 அடியாகக் குறையும்போது, இந்தத் தண்ணீரைப் பாசனத்துக்கும் திறந்துவிட முடியாது, மின்சாரமும் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது; முழுக்க வண்டலாகத்தான் இருக்கும்.

நான்கு வழிப்பாதை, ஆறு வழிப்பாதை என்று சாலைகள் விரிவாக்கப்படும்போதும், புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்போதும், குடிசை மாற்று வாரியமும் வீட்டு வசதி வாரியமும் வீடுகளைக் கட்டும்போதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டப்படும்போதும் ஆட்சியாளர்கள் கண்ணில் முதலில் படுவது ஏரிகள்தான்.

பாசனத்துக்கும், சூழலுக்கும் ஏரிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அறியாமல், அவையெல்லாம் பாழாகக் கிடக்கின்றன என்றே பலரும் நினைக்கிறார்கள். ஒரு பக்கம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர் வாரப்படாமல் குப்பைகளைக் கொட்டி மண்மேடாக்கிக் கட்டிடங்களைக் கட்ட ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். மறுபுறம், கட்டுமான வேலைக்காக ஆற்று மணலை இயந்திரங்கள் கொண்டு, அடியோடு கொள்ளையடிக்கின்றனர். நீர்ப்பாசனத்தில் நிகரற்று விளங்கிய ஒரு பண்பாட்டின் இன்றைய நிலை இதுதான்!

மழைக் காலம் நெருங்கிய பிறகே, பொதுப்பணித் துறையினர் விழித்துக்கொண்டு ஒப்புக்குச் சில நீர்த்தேக்கங்களில் மதகுகளுக்கு கிரீஸ் போடுவார்கள், வண்ணம் பூசுவார்கள், கரைகளை உயர்த்திக் கட்டி சீரமைத்ததாக அரசுக்கு அறிக்கை அனுப்பிவிடுவார்கள்.

மழை என்பது இயற்கை தரும் கொடை. அந்த நீரைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தக் காலத்தில் வெட்டிவைத்த குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்குக் கூடுதலாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை நீர்நிலைகள் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும். புதிதாக ஏற்படுத்துவது இருக்கட்டும், இருப்பதையாவது பாதுகாக்க வேண்டுமல்லவா?

ஏரிகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கும். பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும். சுற்றுவட்டாரப் பகுதியின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை ஊட்டும். பறவையினங்கள் பெருக உதவும். மழைப்பொழிவை அதிகப்படுத்தும். ஏரிக்கரை மீது மரங்களை நடலாம். இப்படியாக, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கு ஏரிகள் பெரிதும் உதவும். அது மட்டுமல்லாமல், மீன்பிடி மூலமாக உள்ளூர் பொருளாதரத்துக்கும் ஏரிகள் உதவும். ஏரிகளெல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டால் பல விதங்களிலும் பயன் அளிக்கக்கூடியவை.

காலங்காலமாக விவசாயிகளிடம் இருந்த குடிமராமத்துக் கலாச்சாரமும் உரிமையும் இப்போது காணாமல் போய்விட்டது. இந்தச் சூழலில் நீர்நிலைகளை மீட்டெடுக்க அரசாங்கம் பெரும் முனைப்பு காட்ட வேண்டும். வீடுதோறும் மழைநீரைச் சேமிப்பதற்கான நல்ல திட்டத்தைக் கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போது நீர்நிலைகளைக் காப்பதற்கான மக்கள் இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும். தமிழக நீர்நிலைகளைக் காப்பதற்கான பெரும் பயணத்தின் முதல் அடியாக அது அமையும்.

 

http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article6359001.ece?theme=true

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

குளங்களைக் கரைசேர்ப்போம்!

 

இந்தியாவின் முக்கியமான நீர் ஆதாரங்களான குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது

 
குளம் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இடங்களில் வீடு மற்றும் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செப்டம்பர் 6, 2014 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பைக் கூறியுள்ளது.
 
இந்தியாவில் ஆற்றுப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னால், விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக ஏரிகளும் குளங்களும் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. குளமும் ஏரிகளும் அளவில் ஆறுகளைவிடச் சிறியனவாக இருப்பதால், இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும். பராமரிப்புச் செலவும் குறைவு. குளங்களின்மூலம் பயிர்ச் சாகுபடி செய்யப்படும் பரப்பு சிறியதாக இருப்பதால், நீர்ப்பகிர்வும் மேலாண்மையும் செய்வது எளிது.
 
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளின் முக்கியமான நீர் ஆதாரம் குளங்கள். சிறிய அளவிலான குளங்கள் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்து, நீர் வளத்தைப் பெருக்க முடியும். இத்தனை சிறப்புகள் மிக்க குளங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் என்பதுதான் மிகப் பெரிய துயரம்!
 
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமங்களின் உதவியுடன் குளங்களைச் சீர்ப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2004-05-ல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், குளங்களைச் சரிசெய்து உபயோகத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு புத்துயிர்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், குளங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும் நிலைதான் தொடர்கிறது!
 
காணாமல் போகும் குளங்கள்
 
பெரும்பாலான குளங்களும் ஏரிகளும் அமைந்திருந்த இடங்களில் இன்று அரசு மற்றும் இதர கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இன்னும் சில இடங்களில் குளங்கள் சாக்கடை நீரோடைகளாவும், நகராட்சியின் குப்பைக் கிடங்குகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மத்திய நீர்வளத்துக்கான நிலைக் குழுவால் 2012-13-ல்
 
சமர்ப்பிக்கப்பட்ட 16-வது அறிக்கை, பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ‘இது வெட்கக் கேடான விஷயமல்லவா?’ என்றும் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சம் சிறிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் வருவாய்த் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 
தலைநகரிலும் இதே கதை!
 
டெல்லியில் உள்ள 1,012 நீர்நிலைகளில், ஏறக்குறைய 168 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
 
குளங்களும் நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுவதால், மழைக் காலங்களில் நீரைச் சேமித்துப் பூமிக்குள் அனுப்ப முடியாமல் போகிறது. இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்கள் தத்தளிக்கின்றன.
 
மத்திய நீர்வளத் துறையால் வெளியிடப்பட்ட மூன்றாவது குறு நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி (2000-01), இந்தியாவிலுள்ள குளம் மற்றும் சிறிய நீர்நிலைகளின் எண்ணிக்கை 5.56 லட்சம். இவற்றில் 85,000 குளங்கள் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்மையாலும் தற்போது உபயோகத்தில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய 10 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனப் பரப்பளவை நாம் இழந்துவிட்டோம்.
 
தொடர் ஆக்கிரமிப்புகள், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால், இந்த நீர்நிலைகள் மூலம் பயன்பெறும் பாசனப் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. 1950-களில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் ஏறக்குறைய 40 முதல் 50% வரை குளங்கள் மூலமாக மட்டும் பல்வேறு மாநிலங்களில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. 1960-61-ல், இந்தியாவில் குளங்கள் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற மொத்தப் பரப்பளவு ஏறக்குறைய 46.30 லட்சம் ஹெக்டேர்கள். தற்போது (2010-11) அதன் அளவு, பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதாவது, 20.40 லட்சம் ஹெக்டேர்களாக!
 
தவிக்கும் தமிழகம்
 
ஏறக்குறைய 39,000 குளங்கள் மற்றும் ஏரிகளைத் தன் வசம் கொண்டுள்ள தமிழகத்தில், 1960-61-ல்இவற்றின் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற பரப்பளவு ஏறக்குறைய 9.36 லட்சம் ஹெக்டேர்கள். ஆனால், இந்தப் பரப்பளவு தொடர்ந்து குறைந்து 2011-12-ல் 5.28 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. மழையின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் எனச் சிலர் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல! அரசுத் துறையினால் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, தமிழகத்திலோ, இந்தியா முழுவதுமோ ஆண்டின் மொத்த மழையளவில் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் குறைவு ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் நல்ல மழை பொழிந்த ஆண்டுகளில்கூட, குளங்கள் மூலமாகப் பயன்பெறும் பாசனப்பரப்பு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால், குறைந்துவரும் குளத்துப் பாசனப் பரப்புக்கு, மழை அல்லாத மற்ற காரணங்கள் முக்கியமானவை என்பது தெளிவாகிறது.
 
செய்ய வேண்டியது என்ன?
 
தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்திசெய்யப்
 
பட்டுவருகின்றன. ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது. எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
 
தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன. எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றி, நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்
 
பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம். உலக நீர்தினம் ஆண்டுதோறும் கொண்டாடுவதுபோல, குளங்களின் மகத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் சிறிய நீர்நிலைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.
 
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது. எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்.
 
- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.
 
தொடர்புக்கு: na_narayana@hotmail.com
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.