Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் புதிய உபாயம் - சீன, இந்திய அரவணைப்பு அணுகுமுறையா? : யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India-China.jpg

இந்தக் கட்டுரை எழுதுவதற்கான குறிப்புக்களை எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அவுஸ்திரேலிய ஊடகமான கிறீன் லெப்ட் (Green Left Weekly) வாராந்த சஞ்சிகையை மேற்கோள் காட்டி மேற்படி செய்தி இலங்கையின் ஊடகங்களால் முக்கியத்துப்படுத்தப்பட்டிருந்தது. 

அந்த செய்தி இதுதான் - சமீபத்தில் சீனா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அங்கு ஒரு உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அதாவது, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடா பகுதியில் 1200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கியிருக்கின்றார். இது பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி ((defense-related development) என்னும் அடிப்படையில் சீனாவினால் பயன்படுத்தப்படவுள்ளது. இப்பகுதி முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சில தினங்களாக சீனா, திருகோணமலையில், விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையிலேயே, மேற்படி அவுஸ்திரேலிய ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜை சந்தித்த போதும், இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படைத் தளபதி (Air Chief Marshal Arup Raha) அரூப் ராகா இலங்கைக்கு பயணம் செய்ததுடன், குறிப்பிட்ட சீனக்குடா விமானப் படைத்தளத்திற்கும் வருகை செய்திருந்தார். 

திருகோணமலையில் சீனா கால்பதிக்கவுள்ளதான செய்திகள், இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் சலசலப்புக்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, இந்திய கடற்படைத் தளபதியின் திடீர் பயணம் நிகழ்ந்தது. ஆனால் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இலங்கை இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டதுடன் அப்படியான எந்தவொரு விடயத்திலும் இலங்கை ஈடுபடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் ஒரு நடவடிக்கையின் சாதக, பாதகம் என்பது அதன் உடனடி அர்த்தத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே இவ்வாறான விடயங்களை இந்தியா எவ்வாறு நோக்குகிறது என்பது அதன் மூலோபாய நகர்வுகளில் தங்கியிருக்கிறது. அதே வேளை சீனாவும் எத்தகையதொரு நோக்கில் திருகோணமலையில் கால்பதிக்க முயல்கிறது என்பதும் உடனடியாக உய்த்துணரக்கூடிய ஒன்றல்ல. ஆனால் தற்போதைய கொழும்பின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்தியா மற்றும் சீனா ஆகிய, ஆசியாவின் இரு பிரதான சக்திகளையும் ஒரே சமயத்தில் அரவணைத்துச் செல்லுவதற்கான உபாயங்களை கைக்கொள்வதாகவே தெரிகிறது. 

1971ல் இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர், நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த நேசம் இப்போதுதான் முழுமைபெறக் கூடிய சூழல் கனிகிறது என்று ஒருவர் சொல்லக் கூடியளவிற்கு பெய்ஜிங் - கொழும்பு உறவானது, முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு நெருக்கமடைந்துள்ளது. 

காலணித்துவதற்கு பின்னரான இலங்கைக்கும், சீனாவிற்குமான உறவு என்பது 1952 இல் ஏற்படுத்தப்பட்ட றப்பர் – அரிசி (Rubber-Rice pact) உடன்பாட்டுடன் தொடங்குகிறது. எனினும் நீண்ட காலமாக, சீன - இலங்கை உறவென்பது ஒரு விவாதப் பொருளாக நோக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்புலத்தில்தான், இவ்வாறானதொரு விவாதம் வேர்கொண்டது. 

அவ்வாறான விவாதங்களை உற்று நோக்கினால் இதில் இரண்டு தரப்பினர் பிரதானமாக ஈடுபட்டிருப்பதை காணலாம். ஒன்று, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை முன்னிறுத்தி சிந்திக்கும் இந்திய சிந்தனைக் குழாம்கள் (Indian Think Tanks) மற்றையது தமிழ் தேசியவாத தரப்பினர் ஆவர். இந்தியாவை தளமாகக் கொண்டிருக்கும் சிந்தனைக் குழாம்கள், இந்திய கொள்கை வகுப்பாளர்களை எச்சரிக்கை செய்வதாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். தமிழ் தேசிய தரப்பினரில் சிலரோ, இந்தியாவிற்கு ஆலோசனை வழங்குவதாக தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர் வேறு சிலரோ, சீன - இலங்கை நெருக்கமானது, இறுதியில் ஈழத் தமிழர்களுக்கான புதிய கதவை திறந்துவிடும் என்றவாறு விவாதித்தனர். 

இந்திய சிந்தனைக் குழாம்கள் அவ்வாறு எச்சரிக்கை தொனியில் விவாதிப்பது தவறான ஒன்றல்ல. அது அவர்களின் பணிதான். ஆனால் தமிழ் தேசிய தரப்பினர் சீன - இலங்கை நெருக்கம் குறித்து விவாதித்தளவிற்கு, கொழும்பின் அணுகுமுறைகளை ஊன்றி கவனிக்கவில்லையோ என்றே கேட்கத் தோன்றுகிறது. 

அனைவரும் குறித்துரைப்பது போன்றே விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுபெற்ற பின்புலத்தில்தான், கொழும்பு – பெஜிங் நெருக்கம் முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்தது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இதனை ஆளும் மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுச் செய்ததா அல்லது மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருச்த சூழலில், அதனை எதிர்கொள்ளுகின்ற ஒரு மார்க்கமாக சீனாவை நாடியதா? 

ஒரு அரசு நெருக்கடிகளை எதிர்கொள்ளுகின்ற சந்தர்ப்பங்களில் பிற அரசுகளின் ஆதரவை நாடுவது ஆச்சரியமான ஒன்றல்ல. அமெரிக்கா, ஜக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்த போது, அதனை எதிர்ப்பதில் சீனாவே முன்னின்றது. சர்வதேச அரங்கில் மகிந்த அரசாங்கத்திற்கு பக்கபலமாக சீனா களமிறங்கியது. 

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், சீனா சர்வதேச அரங்கில் கொழும்பிற்கு அனுசரணையாக இருந்த சூழலில், காங்கிரஸ் இந்தியா அமெரிக்க பிரேரணைகளுக்கு ஆதரவாக செயற்பட்டது. உலக வல்லரசாக தன்னை காண்பிக்கின்ற அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பிராந்திய சக்தியான இந்தியா ஆதரவளித்திருந்த நிலையில் கொழும்பின் முன்னால் சீனா, ஒரேயொரு தெரிவானது. ஆனால் காங்கிரஸ் இந்தியாவின் அணுகுமுறைகளை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி கடுமையாக விமர்சித்திருந்ததையும் இங்கு குறித்துக் கொள்ளல் வேண்டும். இதுவே இன்றைய சீன - இலங்கை நெருக்கத்தின் பின்னணி ஆகும். 

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் கட்டுமான பணிகளில் சீனாவின் கடனுதவி பிரதான பங்கு வகித்து வருகிறது. இதன் மூலம் இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மை பாத்திரத்தை சீனா எடுத்துக்கொண்டு விட்டது. இன்றைய நிலையில், இலங்கைக்கான நேரடி அன்னிய முதலீட்டிற்கான மிக்பெரிய வழிமூலமாக இருப்பது சீனாவாகும். அத்துடன் அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனுதவிகளுக்கான மூலமாகவும் சீனாவே விளங்குகின்றது. 

குறிப்பாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்ட துறைமுக கட்டுமானம், இலங்கைக்கான முதலாவது நான்கு தட அகல அதிவேகப் பாதை (first four-lane expressway) மற்றும் புதிய தேசிய திரையரங்கு. இப்படியான லாபகரமான விடயங்கள் கொழும்பு – பெய்ஜிங் உறவை ஆழப்படுத்தியிருக்கிறது. சீனா ஒரு பொருளாதார அதிகாரமாக எழுச்சியடைந்து வருவதில் அதன் முதலீட்டு உபாயம் முக்கிய பங்கு வகிப்பதாக பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 

இது பற்றி கூறும் அமெரிக்காவின் பொருளாதார ஆலோசகர் கென் மிலர் (Ken Miller) இவ்வாறு கூறுகின்றார் – சீனாவின் பொருளாதாரம் தொடர்பான வெளிவிவகார அணுகுமுறையானது இரண்டு உக்திகளில் தங்கியிருக்கிறது. ஒன்று, அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பது மற்றையது, நேரடி முதலீடு, கடனுதவி, கடன் என்றவாறு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவது. அந்த வகையில் இலங்கை சீனாவின் இரண்டாவது உக்திக்கான வகைமாதிரியாக (model) இருப்பதாக கருதப்படுகிறது. 

எனவே விவாதங்கள் எதுவாக இருப்பினும் உண்மை கொழும்பிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவாறு, பிரித்தெடுக்க முடியாதவாறான நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. மேற்குலக தலையீடுகளால் தனிமை நிலைக்கு தள்ளப்பட்ட கொழும்பு, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை (non-interference in internal affairs) என்னும் சீனாவின் வெளிவிவகார கொள்கை என்னும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டது. 

இந்த பின்னணியில்தான் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, கொழும்புடன் இணங்கிச் செல்வதற்கான சமிஞ்சைகளை காண்பிக்கிறது. சமீபத்தில் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதாவின் உயர் திட்டமிடலாளர் குழுவினர் வெளிப்படுத்திச் சென்றிருக்கும் கருத்துக்களை தொகுத்தால், கொழும்பு இந்தியாவை விட்டு விலகிச் செல்ல எத்தணிக்கக் கூடாது என்பதாகவே அமைந்திருந்ததை காணலாம். 

இக்குழுவில் இடம்பெற்றிருந்த பாஜகவின் வெளிவிவகார கொள்கைப் பிரிவின் தேசிய அமைப்பாளரான கலாநிதி ஷேசாத்திரி சாரி குறிப்பிட்டிருந்த விடயம் இங்கு அடிகோடிடத்தக்கது. இந்தியாவின் நுழைவாயிலில் இலங்கை இருக்கிறது எனவே 'இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தங்கியிருக்கிறது - இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவில் தங்கியிருக்கிறது'. மேலும் சாரி இலங்கை உள்விவகாரங்களை சர்வதேச மயப்படுத்துவதையும் இந்தியா எதிர்க்கும் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 

கடந்த ஜந்து வருடங்களில் கொழும்பு பெய்ஜிங் நெருக்கத்தின் அடிப்படையாக இருந்தது, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடாக் கொள்கை என்பதையும், தற்போது மோடி தலைமையிலான இந்தியா, இலங்கை உள்விவகாரங்கள் சர்வதேச மயப்படுவதை எதிர்ப்பதும் ஒரே புள்ளியில்தான் சந்திக்கின்றன. இலங்கை பிரச்சனை அதிகம் சர்வதேச மயப்படுமாயின், கொழும்பு சர்தேச அழுத்தங்களுக்கு எதிர்நிலையில் நிற்கும் சீனாவுடன் மேலும் நெருக்கமடைவதை தடுக்க முடியாது. இந்த விடயங்களை கருத்தில் கொண்டுதான் தற்போது இந்தியா செயலாற்றுவதாக தெரிகிறது. 

ஆனால் மோடி தலைமையிலான இந்தியா, சீனாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி நிற்கிற சூழலில், கொழும்பு எவ்வாறான அணுகுமுறையை தெரிவு செய்யும் என்பதே கேள்வியாகிறது. சமீபத்தில் இடம்பெற்ற பிறிக்ஸ் மகாநாட்டின் (BRICS summit) போது சீன பிரதமர் சி ஜிம்பிங்கை (Xi Jinping) சந்தித்த மோடி, இணக்கமான முறையில் எல்லைப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான அழைப்பை விடுத்ததுடன், இந்தியாவின் உள்கட்டுமான பணிகளில் அதிகமாக முதலீடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். எனவே இந்த நிலையில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பையும் ஒரே நேரத்தில் அரவணைக்கும் உபாயத்தை கொழும்பு கடைப்பிடிக்க வேண்டிய சூழல் தோன்றியுள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது திருகோணமலையில் சீனாவிற்கு 1200 ஏக்கர் காணிகளை வழங்குவது குறித்து சர்ச்சைகள் மேலெழுந்துள்ளன. இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி திருகோணமலை துறைமுகத்கை பிறிதொரு நாடு பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாமல் இருக்காது. ஆனாலும் கொழும்பு இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் தூரநோக்கற்று செயற்படும் என்றும் கூறிவிட முடியாது. 

அன்று இந்தியாவின் நேரடி தலையீட்டிற்கான காரணங்களில் திருகோணமலை கடற்படைத் தளத்தை அமெரிக்க கடற்படையினரின் பயன்பாட்டுக்காக கொடுக்க முற்பட்டமையும் ஒரு குற்றச்சாட்டாக இந்திரா தலைமையிலான இந்தியாவினால் முன்வைக்கப்பட்டது. இந்த வரலாற்று பதிவை அவ்வளவு சுலபமாகவா கொழும்பு மறந்துவிட முயலும்? 

இன்று மீண்டும் அந்த இடத்தில் சீனாவை முன்வைத்து விவாதங்கள் நடைபெறுகின்றன. சர்வதேச சக்திகளின் நீண்டகால நோக்கங்களை எவரும் முன் கூட்டியே கூறிவிட முடியாது. எனினும் ஆசியாவை நோக்கி உலகம் திரும்பியிருக்கின்ற சூழலில், எதிர்காலத்தில் ஒவ்வொரு அதிகார மையங்களும் தங்களது நலன்களுக்காக எவ்வாறெல்லாம் செயலாற்ற எத்தணிக்கும் என்பது, ஊகங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். ஆனால் இவ்வாறான சக்திகளை நம்பி சிறிய இனங்கள் எவ்வாறு தங்களது அரசியலை முன்னெடுக்க முடியும் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். 

இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பு தெளிவான நிலைப்பாடொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, மனித உரிமை விவகாரத்தை ஒரு கருவியாகக் கொண்டு கொழும்பின் மீது அழுத்தங்களை தொடர்கிறது. மோடி தலைமையிலான இந்தியாவோ, இலங்கையின் உள்விவகாரங்கள் சர்வதேச மயப்பட்டுச் செல்வதை எதிர்க்கிறது. இந்த பின்னனியில் கொழும்புடன் அதிகம் நெருக்கிச் செயற்படவே இந்தியா முயலும். இந்தியா இலங்கையின் உள்விவகாரங்கள் சர்வதேச மயப்படுவதை எதிர்க்குமாயின், கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது? 

சர்வதேச அழுத்தம் குறிப்பாக தற்போது இடம்பெற்றுவருகின்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை முன்னிறுத்தி கூட்டமைப்பு செயலாற்றுமாயின், இந்தியாவிடமிருந்து கூட்டமைப்பு எந்தவொரு உதவியையும் பெற முடியாது போகலாம். இந்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் மத்தியில் எத்தகைய உரையாடல் இடம்பெறுகின்றன என்று அறியமுடியாது போனாலும், இன்றைய சூழலில் தமிழர் விவகாரத்தை எவ்வாறு கையாளுவதென்று கூட்டமைப்பு ஆக்கபூர்வமான வகையில் சிந்தித்துச் செயற்படாது விடின், அதன் இறுதி விளைவாக, தமிழர் விவகாரம் என்பது, வெறுமனே ஒரு விவாதப் பொருளாகச் சுருங்கிவிடும் நிலைமை தோன்றலாம்.

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.