Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபு (எ) பிரபாகரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரபு (எ) பிரபாகரன்!
Wednesday, 17 September 2014 10:52
 

thenkurippukkal.jpg

தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார்.

செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது.

story_love_4.jpgசின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்சி அது. பேரூந்தில் சுன்னாகம் வரை சென்று அங்கிருந்து அநேகமாக தட்டிவான் பயணத்தில் ஊரெழு. வயல் வெளிகள், தோட்டங்கள் நிறைந்த பகுதியில் சின்னடித்தாத்தாவின் பெரிய நாற்சார வீடு. நல்ல பெரியவளவு. ஏராளம் பூச்செடிகள், மாமரம், தென்னை மரங்கள் இருக்கும். முக்கியமாகக் கவர்ந்தது அங்கேயிருந்த பொமரேனியன் நாய்க்குட்டி.

கடைசியாக வவுனியாவில் பார்த்தபோதுகூட அந்த சின்னவயது ‘காந்தித் தாத்தா’ யோசனை ஞாபகம் வந்தது. அந்த யோசனை மீது புகையை அள்ளி அடித்தது அவர் பிடித்துக் கொண்டிருந்த கோல்ட் லீஃப். அப்போது அந்த பிராண்ட்தான் பாவித்தார். ஒரு நாளைக்கு இருபது காலி செய்துகொண்டிருந்தார். மிக உற்சாகமான மனிதராக, ஒரு விடலைப்பையன் மனநிலையோடு  இருந்தார்.

வீட்டிற்கு வந்திருந்த ஒரு குழந்தையிடம் தாத்தாவைக்காட்டி,

"இந்தத் தாத்தாவைப் பிடிச்சிருக்கா உங்களுக்கு?"

"தாத்தா எண்டு சொல்லாத அண்ணா"

"இந்தத் தம்பியப் பிடிச்சிருக்கா?"

ந்திய இராணுவ காலம். ஒருமுறை திடீரென்று வீதிமுனையில் நாய்களின் வித்தியாசமான குரைப்பொலி. இந்திய இராணுவம் சோதனைக்கு வந்திருப்பது தெரிந்துவிட்டது. வீட்டில் பிரபுவும் இன்னும் நான்கைந்து 'பெடியளும்' நிற்கிறார்கள். வெளியேறிச் செல்ல சாத்தியமில்லை. என்ன செய்வது? யோசிக்கவும் நேரம் இல்லை.  உடனே சின்னட்டித் தாத்தா ஒரு ஐடியாவைப் போட்டிருக்கிறார். எல்லாரும் மேல்சட்டையக் கழட்டி, சாரமும் கட்டிக்கொண்டு தோட்டவேலையில் இறங்கியிருக்கிறார்கள். உள்ளே சாமியறையில் கட்டில் மெத்தைக்குக் கீழே ஆர்ம்ஸ் எல்லாம் படுக்கப் போட்டிருந்தார்கள். இராணுவம் வரவும், தாத்தா உற்சாகமாக  வரவேற்றுப்(?!) பேசிக் கொண்டிருந்தாராம். அப்பிடியே குரல் கொடுத்தாராம், "டேய் இளநி வெட்டிக் குடுங்கடா!". ஒருத்தன் தென்னையில் ஏறி இளநி இறக்க ஒருத்தன் சீவிக் கொடுக்க, ஆமியும் குடித்துவிட்டுத் தாங்க்ஸ் சொல்லிப் போயிருக்கிறார்கள். பிறகு இராணுவக் கைதியானபின் சுற்று வட்டாரத்தில் எல்லா ஆமிக்காரனுக்கும் தெரிந்துபோய்விட்டது. வீதியால் செல்லும்போது ‘புலியோட அம்மா, அப்பா போறாங்க’ என்று சொல்லுமளவிற்குப் பிரபலமாகியிருந்தார்கள். நான் இறுதியாகச் சென்ற போது இந்திய அமைதிப்படை திரும்பிப் போயிருந்தது. பிரபு மாமா வீட்டிலிருந்தார். புதிகாக வெளிவந்த சில பாடல்களைப் போட்டுக் காட்டி, கேட்டிருக்கிறீங்களா என்றார்.

வசத் தொப்பி மாட்டி, மண்ணில் ஊன்றிய எஸ். எல். ஆர். துப்பாக்கி இரண்டுபக்கமும் வரையப்பட்டிருந்த, ‘வீரவணக்கம்’ போஸ்டரின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்தார் பிரபு. "கடைசியா சுன்னாகத்தில கண்டனான் பிஃப்டி கலிபர் (50 Calibers) பூட்டின ஒரு பிக்கப்பில கைகாட்டிட்டுப் போனவன்" - யாரோ ஒரு மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.

எண்பது, தொண்ணூறுகளின் ஆரம்பங்களில் யாழ்ப்பணத்தில் இருந்தவர்களுக்கு நினைவிருக்கலாம். ஃபிஃப்டி கலிபர் என்கிற பெயருக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. ஒரு கம்பீரத்தின் அடையாளம் போன்றது. 'பிளேன் அடிக்கிறதுக்கு பாவிக்கிறது' என அறிமுகமாகியிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அடுத்த கட்ட போருக்கு இரண்டு தரப்பும் தயாராகிக் கொண்டிருந்த காலம். இனிவரப் போகும் யுத்தத்தில் விமான எதிர்ப்புப் படையும், ஒரு வலுவான கடற்படையும் அவசியம் இருக்க வேண்டும் என்பதில் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது என நாம் படித்திருக்கிறோம். அதற்கேற்றாற்போலவே ஃபிஃப்டி கலிபர்களும் பார்வையில் தென்பட்டன. அடிக்கடி பார்த்தது ஆமி ஹெலியில்தான். இலங்கை இராணுவம் அதுவரை வைத்திருந்த போர்விமானம் சியாமா செட்டி என்கிற இரண்டாம் உலகப் போர் காலத்து இத்தாலிய விமானங்கள், ஸீ பிளேன் என்கிற வேவு பார்க்கும் விமானங்கள், அமெரிக்கத் தயாரிப்பு பெல் ஹெலிகொப்டர்கள். இம்முறை மக்களால் பொம்மர், பொம்பர் மற்றும் சிலரால் பம்பர் என அழைக்கப்பட்ட சியாமா செட்டி விமானங்களுடன் புதிதாக அவ்ரோவும், சகடையும் சேர்ந்து கொண்டன. பெல் ஹெலிகளில் ஒருபக்கம் ஃபிஃப்டி கலிபரும், மறுபக்கம் ரொக்கட் லோஞ்சரும் பொருத்தப்பட்டு வந்து தாக்குதல் நடாத்தியது.

பள்ளியில் துப்பாக்கியின் வெற்று ரவைக் கோதுகள் சேகரித்து வைத்திருக்கும் நண்பர்கள் மத்தியில், அரிதாகக் கிடைக்கக் கூடிய 50 கலிபர் ரவைக்கோதுக்குத் தனி மரியாதை, மவுசு இருந்தது.

50.gif

நாச்சிமார் கோவிலின் பின்புறம் இருந்த சிறிய மழைகாலக் குளத்தில் ஒரு சிறு படகைக் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். நான்கு மண்ணெண்ணெய் பரல்களைக் கட்டி, ஒரு மிதவை தயாரித்து கரைக்கும், படகுக்குமான போக்குவரத்துச் சேவையும் நடைபெற்றது. படகில் ஏறிப் பார்ப்பதற்காக  இந்த ஏற்பாடு. இரவில் ஜெனரேற்றர் உதவியுடன் ஒளிர்ந்த அந்த பிரதேசத்தில், தனியாக ஒரு சிறு ஜெனரேற்றர் படகு, குளக்கரைக்கு இணைக்கப்பட்டு இரவில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அது ஒரு மாவீரர்நாள் காலம். பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போய் அவசர அவசரமாக சாப்பிட்டு நாங்கள் ஓடிவந்தது அந்தப் படகைப் பார்க்க அல்ல. அது ஒன்றும் அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. எங்களைக் கவர்ந்தது குளக்கட்டின் இரு முனைகளிலும் தண்ணீரில் நிற்கும் படகைக் குறி பார்ப்பதுபோல் பொருத்தப்பட்டிருந்த ஃபிஃப்டி கலிபர் கனரக இயந்திரத்துப்பாக்கி. முதன் முறையாக எட்டித் தொடும் தூரத்தில்!

முதலாம் உலகப் போரின் இறுதிகளில் ஆங்காங்கே பரீட்சிக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரில் முழுமையாகப் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்கக் கண்டுபிடிப்பு. இலகுரக வாகனங்கள், தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கெதிராக நல்ல பயனைக் கொடுத்திருந்தது என்கிற தகவல்கள் குறித்தெல்லாம் அக்கறையிருக்கவில்லை. காமிக்ஸ் ரசிகர்களான எங்களுக்கு அது டெக்ஸ்வில்லர் கதைகளில வாசித்து பழக்கப்பட்ட பிரபல வின்செஸ்டர் கம்பனியின் தயாரிப்பு என்கிற தகவலை எங்கிருந்தோ ஒரு நண்பன் தெரிந்து வந்து சொன்னதில் தனியாக ஒரு பெருமை.

50%2B%282%29.jpgஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட பல தயாரிப்புக்கள் வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் பக்கத்தில் தொட்டுப் பார்த்தது, உலகப் போரில பயன்படுத்திவிட்டு அப்படியே நேராக இங்கே அனுப்பிவிட்டது போல இருந்தது.  கைபிடியைப் பிடித்துச் சுழற்றிப் பார்த்தோம். வழக்கம்போல அல்லாமல் அதை யாரும் கவனிக்காமல், அநாதரவாக விட்டிருந்ததைப் பார்த்தபோதே தெரிந்தது. கறள் பிடித்து அதே நிறமாக மாறியிருந்தது. "வேலை செய்யாது போல இருக்கடா இல்லாட்டி இப்பிடி விடமாட்டாங்கள். பழைய இரும்பு" பதின்மூன்று வயதானதில் தெளிவாகச் சிந்திப்பதாக அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்.

நேரடியாக அங்கே வந்த ஒரு அண்ணனிடம் அந்த முக்கியமான  சந்தேகத்தைக் கேட்டான் ஒருத்தன்.

"அண்ணை சுடுமோ?"

"சுடுறதுதான் பாக்க வேணுமோ? யாருக்கெல்லாம் இங்க சுட ஆசை?"

கள நிலவரம் ஒரு மாதிரி சாதகமாக இல்லாததுபோலத் தோன்ற, ஒரு தந்திரோபாயமான பின்வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நாங்கள் நினைத்தவேளையில், அவரே சிரித்துக் கொண்டு சொன்னார்.

"சுட்டாலும் சுடும் சொல்ல ஏலாது. அந்த நேரத்தில்தான் தெரியும்"

"அப்ப ஹெலி வந்துட்டா?"

"சுட்டா ஹெலிக்காரன் ஓடிடுவான். சுடாட்டி நாங்கள் விட்டுட்டு ஓடவேண்டியதுதான்"

எல்லோரும் சிரிக்க, தொடர்ந்து சொன்னார், "அப்ப எங்கடயாக்களிட்ட இருந்த முதலாவது கலிபர் இந்தியா தந்தது. அது சுட்டத யாரும் பாக்கேல்லயாம். நந்தாவில் காம்பில வச்சிருந்தவ. யார் யாரோ எல்லாம் வந்து தலையால தண்ணி குடிச்சும், ஒண்டுக்கும் சரிவரேல்ல. கடைசில இந்தியா வந்து ஆயுதங்கள ஒப்படைக்கச் சொன்னதெல்லோ. அப்ப அவங்களிட்டயே திருப்பி அத குடுத்து விட்டுட்டினமாம், கொண்டு போங்கோ எண்டு..."

அந்தக் காலப்பகுதியில் எல்லாருக்கும் தெரிந்து போயிருந்தது. இனி ஃபிஃப்டி கலிபரால் விமானத்தைச் சுட முடியாதென்பது. சியாமா செட்டி, அவ்ரோ, சகடை எண்டு போய்க்கொண்டிருந்த அரசாங்கம் திடீரென்று ஒரேயடியாக சுப்பர்சொனிக்குக்கு அப்டேட் ஆகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. சுப்பர்சொனிக் வரும்போதே விமானம் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் பேசப்பட்டன. விமானம் கடந்து போன பிறகுதான் சத்தம் வரும் என்றார்கள் சிலர். இந்தப்பக்கம் சத்தம் கேட்டா அந்தப்பக்கம்தான் பிளேன் போகும் என்றார்கள் சிலர். ஏற்கனவே இந்தியாவின்ர மிராஜ் பறக்கிறதைப் பார்த்ததால் சத்தம் மட்டும் கேட்ட சத்தமாக இருந்தது. மற்றபடி சத்தத்தை வைத்து விமானத்தைப் பார்க்கிறதுக்கே தனியாகப் பயிற்சி தேவைப்பட்டிருந்தது. ஆக, பெல் ஹெலிகளுக்கு மட்டும்தான் ஃபிஃப்டி கலிபரால் அடிக்கலாம் என்பது புரிந்தது.

இருந்தாலும் அதற்கிருந்த ஒருவித கவர்ச்சி குறையவில்லை. இப்போதும் பெயரைக் கேட்கும்போதே எங்களில் பலருக்கு பழைய ஞாபகங்கள் கிளறப்படலாம். கூடவே ஒரு சிலருக்கேனும் கப்டன் ஹீரோராஜ் ஞாபகமும் வரலாம்.

prisoner.jpg

லாலி இராணுவத் தளம். ஹீரோராஜ் கூடவே நாலைந்து சகபோராளிகளுடன் கைதியாகத்  தடுத்து வைக்கப்பட்டிருந்தான். கலகலப்பான பெடியன். ஆமிக்காரன் ஒருத்தன் கிளி ஒன்று வளர்த்துக் கொண்டிருந்தானாம். இவர்களோடு அதுவும் சக கைதியாகக் கூட்டுக்குள்ள இருந்திருக்கிறது. "எப்பிடியாவது கிளிய ரிலீஸ் பண்ணவேணும் மச்சான்" ஹீரோராஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பானாம்.  ஒருநாள் நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆமிக்காரன் அசந்திருந்த நேரம் பார்த்து ஒப்பரேசன சக்சஸா முடிச்சிட்டான். கிளியை வெளியில் விட்டாயிற்று. ஆனால் பாவம் அதனால் பறக்க முடியவில்லை.

சிறகு வெட்டப்பட்டு வளர்ந்த கிளி. தத்தித் தடுமாறிப் பறக்க முயற்சி செய்கிறது. முடியவில்லை. இங்கே இவர்களுக்குப் பதைப்பாக இருக்கிறது. ஆமி எந்த நேரத்திலையும் இந்தப்பக்கம் வந்திடலாம். "டேய் பறந்திடுறா பறந்திடுறா" ரசசியம் பேசுகிற குரலில் ஹீரோராஜ் சொல்லிக் கொண்டிருக்கிறான். கிளியால் பறக்க முடியவில்லை. ஆமி வந்துவிட்டான். பார்க்கிறான். கிளி வெளியில். கூண்டுக்கதவு திறந்து கிடக்கிறது. இவர்களைச் சந்தேகமாகப் பார்க்கிறான். அசந்து தூங்குவது போலப் 'போஸ்' குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திரும்பக் கிளியைக் கூண்டில விட்டுப் பூட்டிவிட்டுப் போய்விட்டான். போகும்போது ஹீரோராஜை ஒரு மாதிரிப் பாத்துச் சிரிச்சிட்டுப் போனானாம். அவனுக்கு விளங்யிருக்கலாம்.

பிறகு சொன்னானாம், "எனக்குத் தெரியும் நீதான் பண்ணியிருப்ப". அந்தக் கூட்டத்துக்குள்ளே இவன்தான் இப்பிடியான பேர்வழி என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. "ச்சே அநியாயமாத் திரும்ப அவனிட்டயே மாட்டீட்டுது" அடிக்கடி அந்தக் கிளியைப் பற்றிச் சொல்லிக் கவலைப்படுவானாம். பெற்றோர், சகோதரர்கள் பார்க்க வரும்போது, ஆமிக்காரர் கொஞ்சம் தள்ளி பக்கத்திலயே நிற்பார்களாம். என்ன பேசுகிறார்கள்? அதிலிருந்து போராளிகள் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா? வெளியில் இருக்கும் போராளிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறதா? என்கிற ரீதியில் கண்காணித்துக் கொண்டிருபார்கள். இந்த விஷயத்தில் எம்மவரின் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே? எல்லாரும் வலு அலேர்ட். ஹீரோராஜ்தான் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா பார்க்க வரும்போதெல்லாம் எடுத்த உடனேயே மிக இயல்பாகச் சிங்களத்தில பேச ஆரம்பிப்பார்க்களாம். நாட்டுநிலைமை, வெளிநிலைமை எல்லாப் பிரச்சினையும் அதிலேயே போகும். தமிழோ, ஆங்கிலமோ இந்தியன் ஆமிக்குத் தெரியலாம். சிங்களம் எங்கே தெரிந்திருக்கப் போகிறது?

உண்மையில் ஹீரோராஜுக்கு சிங்களம்தான் சரளமாகப் பேச வந்தது. தமிழ் ஓரளவுக்குப் பேச மட்டும்தான் தெரியும். சிறையிலதான் ஹீரோராஜ் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அவன் படித்துக் கொண்டிருந்தது யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில சிங்கள மீடியத்தில். எண்பத்திமூன்றில் அங்கே குண்டு வைத்துப் பள்ளிக்கூடத்தை மூடியதும், ஹீரோராஜோட அப்பாவே நேரில் கூட்டிக் கொண்டுவந்து இயக்கத்தில சேர்த்து விட்டாராம். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது பலாலியில் கைதியாக இருந்தபோதுதானாம். அதுவரைக்கும் தமிழ் பேச மட்டும்தான் தெரியுமாம். ஒருவழியாகத் தமிழ் படித்து, பேப்பர், ஆனந்தவிகடன் வாசிக்க தொடங்கும்போது விடுதலையாகி வெளியில் வந்துவிட்டார்கள். இந்திய இராணுவம் திரும்பிப் போயிருந்தது. ஈழநாதத்தில் போராளிகள் பற்றி ஒரு முழுப் பக்கத்தில் வெளிவந்துகொண்டிருந்த 'விழுதுகள்' தொடரில் ஹீரோராஜ் பற்றி விரிவாக எழுதியிருந்தது.

தொண்ணூறாம் ஆண்டு யாழ் கோட்டை முற்றுகைச் சமரில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஒரு சியாமாசெட்டி விமானத்தை ஃபிஃப்டி கலிபரால் சுட்டு வீழ்த்தியிருந்தான் கப்டன் ஹீரோராஜ்.

uk.jpg

தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி. விமானம் சுட்டு பண்ணைக்கடலில் வீழ்த்தப்பட்ட அடுத்தநாள் விடிகாலைப் பொழுது. விமானத்தின் பாகங்களை பின்பு மக்கள் காட்சிக்கு வைப்பதுதானே வழமை. அருகில் கடலுக்குள் சக தோழர்களுடன் இறங்கிய ஹீரோராஜை மண்டைதீவிலிருந்த ஒரு இராணுவ 'சினைப்பர்'காரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

பதின்ம வயதுகளில் போராட்டத்தில் இணைந்து இருபதுகளில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்ட, கப்டன் ஹீரோராஜ் என்கிற, தந்தையால் போராட்டத்தில்  இணைத்துவிடப்பட்ட பிரபு என்கிற பிரபாகரன் இன்னும் யாரோ ஒருவர் இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியில் ஏற்றி வைக்கும் நவம்பர் மாதத்து ஒற்றை மெழுகுவர்த்தி மூலம் நினைவுகூரப்படலாம். இன்னும் ஏராளமான ஹீரோராஜ்கள் போலவே!

- 4தமிழ்மீடியாவிற்காக : ஜீ உமாஜி

pro4.jpg

http://www.4tamilmedia.com/social-media/google-plus/25887

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.