Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் மாநாடு வெற்றியா தோல்வியா?

Featured Replies

439_content_p4_1.jpg

 

439_content_p4_2.jpg

 

இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  15 ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தவரை வெற்றிகரமான மாநாடு என்றே கூறிக் கொள்கின்றனர். ஆனால்,  அம் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கொள்கைகள், ஆற்றப்பட்ட உரைகள், வேலைத் திட்டங்கள், தெரிவு செய்யப்பட்ட தலைமைப் பொறுப்புக்குரியவர்கள் உள்ளிட்ட சாராம்ச விடயங்களை வைத்தே அம்மாநாடு வெற்றியா தோல்வியா அல்லது இரண்டும் அல்லாத சம்பிராதய பூர்வமான சடங்கு நிலைப்பட்டதா என்பதை முடிவு செய்ய முடியும்.

 

மேலும் வடக்கு, கிழக்கில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் வாழ்நிலை அபிலாஷைகளும் நோக்கங்களும் எத்தகையவை என்பதும்  அவர்கள் தமிழ் மக்களின் எந்த எந்தப் பிரிவினரான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டனர் என்று பார்ப்பதும் அவசியமாகும்.  

 

அத்துடன்  எத்தகைய சமூகக் கருத்தியலின் அடிப்படையில் இருந்து கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதும் முக்கியமானதாகும். ஏனெனில் இலங்கைத் தீவில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இன ஒடுக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.    இதனால்  தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்  மற்றும் சிறுபான்மை  சமூகத்தவர்கள் கடுமையான பாதிப்புகளைப் பெற்று வந்திருக்கிறார்கள். இம் மக்கள் மத்தியில்  குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி அதிக ஆதரவு பெற்ற கட்சியாக செயற்பட்டு வந்திருக்கிறது.

 

எனவே அக் கட்சியின் மாநாட்டின் போது மக்கள் அதனிடம் பொறுப்புக்  கேட்பதும் கேள்விகள் எழுப்புவதும் விமர்சனங்கள் முன்வைப்பதும் ஜனநாயக அறம் சார்ந்த அரசியல் நிலைப்பாடாகும். இத்தகைய ஜனநாயகம் ஒரு நாட்டில் ஒரு ஒடுக்கப்படும் இனத்தில் அல்லது ஒரு கட்சியில் மறுக்கப்படும் போது அலட்சியப்படுத்தப்படும் நிலை இருக்குமானால் எந்தவகையிலும் முன்நோக்கிச் செல்ல முடியாது என்பதே உண்மையாகும்.    தமிழரசுக் கட்சிக்கு  அறுபத்திநான்கு வயது . அக் கட்சியானது  அதற்கு முன்பு உருவாக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர்களாலேயே  உருவாக்கப்பட்டது.

 

தமிழ்க் காங்கிரஸிற்குப் பிரபல வழக்கறிஞர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமை தாங்க அதிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தவர்களுக்கு பிரபல சிவில் வழக்கறிஞர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் தலைமை தாங்கினார். சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாகத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி  தமிழரின் தலைவிதிக்குரிய இரண்டு கட்சிகளாக இருந்து வந்துள்ளன. அந்த இரண்டு தமிழ்த் தேசிய வாதப் பாரம்பரியம் இன்று வரை தொடரப்படுகிறது.   அந்த வகையில் தமிழரசுக் கட்சி தனது பதினைந்தாவது தேசிய மாநாட்டை வவுனியாவில் நடத்தியுள்ளது. அம் மாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்  பற்றி தமிழ் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவது அவசியமாகும்.  

 

மேற்படி மாநாட்டில் நடுத்தர வயதைத் தாண்டியவர்களும் முதியவர்களுமே கூடுதலாகக் காணப்பட்டனர் என்றே கூறப்படுகின்றது.   இதனைத் கருத்திற் கொண்டே அம் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கட்சிக்குள் இளம் தலைமுறையினர் அதிகளவிற்கு உள்வாங்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் தமிழரசுக் கட்சியின் திட்டவட்டமான கொள்கை அறிக்கை என எதுவும் முன்வைக்கப்படவோ அல்லது வெளியிடப்படவோ இல்லை. தலைவர் ஆற்றும் உரையிலேயே கொள்கை என்பதைத் தேடிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் புதிய  தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மாவை சோ. சேனாதிராஜா ஆற்றிய நீண்ட உரையின் ஊடாகவே கட்சியின் நோக்கையும் போக்கையும் காணுதல் வேண்டும்.  

 

அவ் உரையில் கட்சியின் கடந்த கால வளர்ச்சி, வரலாறு ,முன்னெடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டு விளக்கங்களும் நீட்டி வாசிக்கப்பட்டிருந்தன. சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது முதல் சத்தியாக் கிரகம் நடத்தப்பட்டமை, அதன் பின் தனித் தமிழீழம் முன்வைக்கப்பட்டமை போன்றன சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சிகள் தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளை மறுத்து வந்தமை அழுத்திக் கூறப்பட்டிருந்தன. அந்த இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலப் பேரினவாத செயற்பாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. தமிழரசுக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான உள்ளார்ந்த மேட்டுக் குடி உறவின் வெளிப்பாடு எப்போதும்  வெளிப்படையானது என்பதை புதிய தலைவரின்  உரையிலும் காண முடிந்தது.

 

மேற்படி உரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை வழமையான பழைமை வாதத் தமிழ்த் தேசிய வாதமுனைப்புடன் கூடிய கருத்துக்களாகவே  அமைந்திருந்தன. எந்தவொரு இடத்திலாவது தமிழரசுக் கட்சி எடுத்த கொள்கை முடிவுகளாலும் நடைமுறைப் போராட்டங்களினாலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அவற்றுக்கு தாங்களும் பொறுப்புதாரிகள் என்பது சுய விமர்சன ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டி நிற்பதாகப் பிரகடனம் செய்து நின்ற மாவை சேனாதிராஜாவின் உரையில் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்கள் அழைத்துச் செல்லப்படுவதற்கு தமிழரசுக் கட்சி வழங்கிய தலைமைத்துவ, வரலாற்றுப் பாத்திரம்  பற்றிய விமர்சனம் கடுகளவாவது காணப்படவில்லை.

 

ஒட்டுமொத்தப் படுகொலைகளுக்கும் மாபெரும் அழிவுகள், இழப்புகளுக்கும் சிங்கள பௌத்த பேரினவாத  இராணுவ ஒடுக்கு முறை முதற்காரணம் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. அதேவேளை  எதிர் நிலையில் தமிழ்த் தேசியத்தை  குறுந்தேசியப் பழைமைவாத ஆதிக்க அரசியலாக முன்னெடுப்பதில் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குத் தழுவிய கட்சி என்ற அடிப்படையில் வகித்த தலைமைப் பாத்திரம் கேள்வி, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது.  

 

மேலும் எதனைத் தமிழரசுக் கட்சி இன்று தெளிவான திட்டவட்ட வரையறைகளுடன் வேண்டி நிற்கின்றது என்பது உறுதிபடக் கூறப்படவில்லை. சுயநிர்ணய உ ரிமை, சுயாட்சி, சமஷ்டி, பதின்மூன்றாவது திருத்தம், தன்னாட்சி , பதின்மூன்றுக்கு மேல் என்றெல்லாம் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், அறுபத்தி நான்கு வருட அனுபவம் பட்டறிவுகள் மூலமாகக் குறிப்பாகப் பேரழிவு ஒன்றின் பின்னான சூழலில் தமிழரசுக் கட்சியானது திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடு எதனை முன்வைத்திருக்கிறது என்பதே எழுந்து நிற்கும் அடிப்படைக் கேள்வியாகும்.

 

இன்றைய இன ஒடுக்கு முறைச் செயற்பாடுகளை விபரிப்பதும் விளக்குவதும் மட்டும் கொள்கையாகாது. அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதும் மக்களை அறிவுறுத்தி விழிப்புற வைத்து  அணி திரட்டுவதும் மிக முக்கியமானதாகும். தமிழரசுக் கட்சி தனது நீண்ட அரசியல் பயணத்தில் ஆளும் தரப்பு பேரினவாத சக்திகளுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வந்திருக்கிறது.  குறிப்பாக நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அக் கட்சி மிக அடக்கி வாசித்து வந்துள்ளது. அதேவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சி  இடதுசாரிகள் கூட்டாக ஆட்சி செய்த காலங்களில் தனது எதிர்ப்பு இயக்கங்களை விரிந்தவைகளாக முன்னெடுத்தும் வந்துள்ளது.

 

இதன் பின்புலம் நன்கு தெளிவுக்கு உள்ளாகுதல் வேண்டும். அத்துடன் தமிழரசு கட்சி  1965-70 கால கட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஒரு கட்சிகளின் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்று அங்கம் பெறவும் செய்தது என்பதை மறுக்கவியலாது.    1976  இல் தமிழீழக் கோரிக்கையை வட்டுக்கோட்டைத் தீர்மானமாக முன்வைத்ததில்  தமிழரசுக் கட்சியே பொறுப்புதாரி. அதன் எதிர்நிலை அழிவுகளுக்குப் பின்பும் தமது வரலாற்றுத் தவறினை இப் பதினைந்தாவது மாநாட்டில் அக் கட்சி ஒப்புக் கொண்டிருப்பின் அதன் அரசியல் நேர்மையினை மெச்சியிருக்க முடியும்.

 

அதனை விடுத்து இடத்திற்கு ஏற்றால் போன்று ஒவ்வொருவரும் கூறிவருவது அடிப்படையில் தமது வாக்கு வங்கிக்கு ஏதாவது சேதம் வந்து விடக் கூடாது என்பதாலேயே ஆகும். எனவே தமிழரசுக் கட்சியின் அறுபத்தி நான்கு வருட கால அரசியல் வரலாற்றில் யாவற்றையும் விட வாக்கு வங்கியும் பாராளுமன்ற அரசியலும் முதன்மை இடத்தில் இருந்து வந்திருக்கிறது.  

 

இப்போதும் அதனைக் கணக்கிட்டே அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.    புதிய தலைவரான மாவை சேனாதிராஜாவின் உரையினை முழுமையாக நோக்கினால் அங்கே புதிய விடயங்களும் சம காலத்திற்குரிய கொள்கை நிலைப்பாடுகளும் மிக அருந்தலாகவே காணப்படுகிறது. ஒன்று, இரண்டு விடயங்கள் ஊறுகாய் தொட்டுக் கொள்ளப்படுவது போன்று தொட்டுக் காட்டப்பட்டுள்ளனவே தவிர யாவும் பழையவைகளே.

 

அதனால்  அரைத்த மாவே மீண்டும் அரைக்கப்பட்டுள்ளது.  மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் இளைஞரணியில் தனது தமிழ்த் தேசிய வாத அரசியலை ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் ஊடாகப் பயணித்து வந்த ஒருவர். அத்தகைய ஒருவர் கடந்த கால அனுபவங்களுடன் தலைவராக வந்துள்ளமை  தமிழரசுக் கட்சியின் மத்தியில் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால், எழும் கேள்வி என்னவெனில் எவ்வாறு தமிழரசுக் கட்சியை வழிநடத்திச் செல்லப் போகிறார் என்பதேயாகும்.

 

ஏனெனில் சில முக்கியமான பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் மாவையின் உரையில் விடை காணப்படவில்லை. பேரினவாத ஒடுக்குமுறையைத்  தனியே  சிங்கள, தமிழ் முரண்பாடாகவே அன்றிலிருந்து கூறப்பட்டு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியைத் தான் மாவையின் நீண்ட உரையிலும் நிறைவேற்றப்பட்ட பதினைந்து தீர்மானங்களிலும் காண முடிகிறது.  

 

இதற்கு அப்பால் தமிழ் மக்களும் வடக்கு, கிழக்கும் இலங்கையின் தற்போதைய உலக மயமாதலின் கீழான  நவதாராள வாதப் பொருளாதாரத்தின் பிடிக்குள் இருந்து வருவதை மாவையின் உரையில் மருந்துக்கும் சுட்டிக்காட்டப்படவில்லை. அதனைத் தொட்டால் உலக மயமாக்கலை முன்னெடுத்து வரும் அமெரிக்க மேற்குல இந்திய வல்லாதிக்க சக்திகளின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டே தீர வேண்டும் என்பதால் அது விடப்பட்டிருக்கிறது.

 

இதன் மூலம் தமிழர் சமூகத்தில் பொருளாதார , சமூக பண்பாட்டுத் தளங்களில் இடம்பெற்று வரும் பலமுனைப் பிரச்சினைகளுக்கு தமிழரசுக் கட்சி எத்தகைய மாற்று கொள்கைளை முன்வைத்திருக்கிறது என்பது கேள்வியாகிறது. இன்றைய சூழலில் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் எதிர்நோக்கும் அடிப்படைப் பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டுமே காரணம் எனக் குறுக்கி வாசித்து விட முடியுமா?   வட பகுதியின் மீன்பிடிப் பிரச்சினையிலும் சம்பூரின் நிலம் பறிக்கப்பட்டிருப்பதிலும் தவிர்க்க முடியாது இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இது தவிர்க்க முடியாத ஒரு நிர்ப்பந்தக்  கூற்று   என்றே கொள்ள முடியும்.ஆனால்,  அவ் உரையின் தென்பகுதி சிங்கள மீனவர்கள் சீன மீன் பிடிக் கப்பல்கள், சீனாவின் செல்வாக்குப் பற்றிக் காட்டமாகக் குறிப்பிடுவது போன்று இந்தியா பற்றி மிக மிகக் கவனமாகவே கூறப்பட்டிருக்கிறது. இது தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் அமெரிக்க, இந்திய, மேற்குலக சக்திகளின்  நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவே இருந்து வரும் என்பதையே எடுத்துக்  காட்டுகிறது.  

 

மேலும் தமிழர்கள் எல்லோரும் ஏற்றத்தாழ்வுகளும்  முரண்பாடுகளும் அன்றாடப் பிரச்சினைகளும்  இல்லாத ஒரு சமத்துவச் சூழலில் வாழ்ந்து வருகிறார்களா ? என்பதற்கு அக் கட்சி தனது மாநாட்டில் பதிலுரைக்கவில்லை. தமிழர்கள் ஒரு சமூகம் என்னும் வரையறைக்குள் எவ்வளவு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது அடையாளம் காண்பது அச் சமூகத்தின் பிரதான கட்சி என்னும் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கு உண்டு.  

 

ஆனால் அவை எதுவும் கூறப்படவில்லை. இது பற்றி முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவ்வப் போதான உரைகளில் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார். இப்போதும் அரசாங்க மாகாண சபை , உள்ளூராட்சி , ஊழியர்கள், அதிகாரிகள் கொலனித்துவ காலச் சிந்தனை நடைமுறைகளில் இருந்து வருகிறார்கள்.  

 

அவற்றை நம்மவர்கள் கைவிட்டு மக்களுக்குச் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டமை முக்கிய கூற்றாகும். அதேபோன்று  நம்மவர்கள் மத்தியில் சாதியம் தொடர்கிறது என வெளிப்படையாகவே அவர் கூறியிருந்தார்.  மேலும்  எங்கள் மத்தியில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை  இரண்டாம் தரமாக நடத்தும் நிலை காணப்படுவதாகவும் முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.  அவ்வாறே முஸ்லிம் மக்கள் பற்றியும் அவர்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து கொள்வது பற்றியும்  கூறியிருந்தார்.

 

அதேபோன்று வடக்கு, கிழக்கின் பெண்களின் நிலை பற்றியும் முதலமைச்சர் ஏற்கனவே சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனால் தான் போலும் மாவையின்   உரையில் பெண்களின் நிலைபற்றி ஓரளவாவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் அவ்வப்போது திறந்த மனதுடன் விமர்சனப் போக்கில் கூறி வரும் விடயங்கள் மாவையின் உரையில் விடப்பட்டவைகளாகவே இருந்தன.  

 

 முதலமைச்சர் அவ்வப்போது சுட்டிக்காட்டிய விடயங்கள்  போன்று தமிழரசுக் கட்சி மாநாட்டில் குறிப்பிட்ட சில விடயங்கள் வரலாற்று  விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியும். போர்க் களத்தில் உள்ளே புகுந்த அபிமன் யூ விற்கு தன்னைச் சுற்றியிருந்த வியூகத்தை உடைத்து வெளியேற முடியவில்லை. அதனால் அவன் கொல்லப்பட்டான் என்று கூறினார். கடந்த காலத்தின் ஆயுதப் போராட்டம் பற்றியும் அதன் தவறுகள் பற்றியும் தனக்கே உரிய நீதிவான் பாணியில்  எடுத்துரைத்த முதலமைச்சர் இப்போது பழைய பாணியில் சிலர் பேசி வருவதையும் சாடி நின்றதையும் அவரது உரையில் காண முடிந்தது.

 

முதலமைச்சர் அவ்வப்போது கூறிவரும் கருத்துகளும் ஆலோசனைகளும் விமர்சனங்களும் தேவையானவைகளும் அர்த்தங்கள் கொண்டவைகளாகும்.  ஆனால்,  அவற்றை தமிழ்த் தேசியவாத,  பழைமை வாத சக்திகள் எந்தளவிற்கு உள்வாங்கும் நிலையில் உள்ளன என்பது கேள்விக்குரியதாகும்.  தமிழரசுக் கட்சியின் மாநாடு நமக்குச் சொல்லும் செய்தியில் எதுவும் புதிதாகக் காணப்படவில்லை.

 

வண்டிலும் பழையது. பயணிப் போரும் பழையவர்கள். பாதையும் பழைமையானது. பயணத் திசையும் பழைய திசையே. ஆசனத் தட்டில் அமர்ந்திருந்து நாணயக்  கயிற்றைக் கையில் வைத்திருப்பவரும் பழையவரே . அவர் மாநாட்டில்  விடுத்த அறைகூவலும் பழைய போராட்ட அறை கூவலேயாகும். இருப்பினும்  தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான மாவை சோ. சேனாதிராஜாவின் அடுத்த நகர்வை சற்றுப் பொறுத்திருந்து நோக்குவோம்.

 

 

at: http://thinakkural.lk/article.php?article/bdxwlokmjf4606c850c535b69651epmdob72487b20cee5d7434506d7prxw#sthash.D4oTzJPi.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.