Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்துக்கள் பத்து

Featured Replies

  • தொடங்கியவர்
ஸ்டெபான் ஹெல் 10
 
Untitled_2254092h.jpg
ஸ்டெபான் ஹெல்
 
வேதியியலில் நோபல் பரிசு வென்ற ஜெர்மனி விஞ்ஞானி ஸ்டெபான் வால்டர் ஹெல் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
 ருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990-ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அப்பா ஒரு பொறியி யலாளர்.
 
 1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந் தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த 3 ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED Microscopy) கோட்பாட்டை மேம்படுத்தினார்.
 
 உயர் தொழில்நுட்ப ப்ளோரசன்ட் மைக்ரோஸ்கோப்பை (Super Resolution Microscope) மேம்படுத்திய இவருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகியோருடன் கடந்த 10-ம் தேதி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
 
 ஆப்டிகல் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதுபடுத்திப் பார்க்கப்படும் பொருட்களில் தெளிவு இல்லாத நிலை இருந்தது. அதை இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு தகர்த்துள்ளது. தற்போது ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன், ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நானோ பரிமாணத்தை எட்டமுடியும் என்று நிரூபித்துள்ளனர்.
 
 2002-ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் உயிரி வேதியியல் நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நானோ பயோ ஃபோட்டோனிக்ஸ் துறையை இங்கு நிறுவியுள்ளார். ‘ஸ்டெட்’ நுண்ணோக்கியியல் வளர்ச்சியிலும் பிற மைக்ரோஸ்கோப்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 200 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
 
 2000-ம் ஆண்டில் ஒளியியல் சர்வதேச ஆணைக்குழு இவருக்கு ‘ஆட்டோ ஹான்’ பரிசை வழங்கியது. கார்பர் ஐரோப்பிய அறிவியல் விருது உட்பட 30 விருதுகள், ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.  ஜெர்மனியின் புற்றுநோய் ஆய்வு மைய ஆப்டிகல் நானோஸ்கோபி துறைத் தலைவராகவும், ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.
 
 இவரது பங்களிப்புடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப் மூலம் செல் பிரிவதை மிக நுண்ணிய நானோ அளவில் காண முடியும். ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த மைக்ரோஸ்கோப் மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நானோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.
 
 அல்ஸீமர், பார்கின்சன் போன்ற நோய்களுக்கு மூலகாரணமான புரோட்டீன்களை இந்த மைக்ரோஸ்கோப் மூலம் அடையாளம் காணமுடியும். மருந்தில்லா நோய்களை முற்றிலும் தடுப்பதற்கான மகத்தான பல ஆய்வுகளுக்கு இந்த நானோஸ்கோப் வித்திட்டுள்ளது.
 
 மைக்ரோஸ்கோப் உத்திகளை மேம்படுத்தி அவற்றை மனிதகுல நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகிறார் ஸ்டெபான் ஹெல்.
 
  • Replies 81
  • Views 18.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
a_2257424h.jpg
மா சே துங்
 
 
சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
 சீனாவின் ஷாவ்ஷான் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 6 வயதில் விவசாய வேலைகள் பார்த்தார். 13 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முழு நேர விவசாயி ஆனார்.
 
 ‘வேர்ட்ஸ் ஆஃப் வார்னிங்’ என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்கள், மேற்கத்திய நாடுகளின் வலிமைகளைப் பற்றி அறிந்துகொண்டார். 6 மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றவர்.
 
 இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.
 
 ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்த காலகட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைபயணம் மேற்கொண்ட இவர், 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.
 
 1935-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு கட்சி நல்ல வளர்ச்சி பெற்றது.
 
 அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது. 1949-ல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். அப்போது இவருக்கு வயது 56.
 
 சீனாவின் பொருளாதார நிலை அப்போது அதல பாதாளத்தில் இருந்தது. பழைய மரபுகளில் ஊறிக் கிடந்த பல கோடி மக்கள் படிப்பறிவில்லாமல் இருந்தனர். புதிய சீனாவைப் படைக்கும் மாபெரும் பணி இவர் முன்பு மலைபோல் எழுந்து நின்றது. ‘வலிமையும் வளமும் மிக்க சீனா.. முன்னோக்கியப் பெரும் பாய்ச்சல்’ என்ற மகத்தான தொலைநோக்குடன் நாட்டு முன்னேற்றத் துக்காகப் பாடுபட்டார்.
 
 செல்வாக்கு படைத்த தலைவராக ஆதிக்கம் செலுத்திய இவரது ஆட்சிக் காலத்தில் சீனா அடியோடு மாறியது. தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் நாடு முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமின்றி சமூகப் புரட்சியையும் தூண்டினார்.
 
 நாட்டு மக்களிடையே தீவிர தேசப் பற்றை உண்டாக்கினார். நாடு நவீனமயமானது. பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது.
 
 சீனாவில் பெரும் தொழிற்புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டுமின்றி, தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப்படுகிறார். இவரது கொள்கைகள் மாசோயிசம் என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்.
 
  • தொடங்கியவர்
ரத்தன் டாடா 10
 
ratan_2259780h.jpg
ரத்தன் டாடா
 
டாடா குழுமத் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்த நாள் இன்று (டிசம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
* மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
 
* 1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது.
 
* 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
 
* பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
 
* நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது.
 
* உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.
 
* டிரைவர் வைத்துக்கொள்ளாமல் தானே கார் ஓட்டிச் செல்வதை விரும்புபவர்.
 
* இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபராக இவர் அறியப்படுகிறார். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக உள்ளார். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் உள்ளார்.
 
* பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
 
* 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார்.
 
  • தொடங்கியவர்

ஹெர்மன் போர்ஹாவே 10

 

hermen_2262965h.jpg

ஹெர்மன் போர்ஹாவே
 

ஐரோப்பாவின் தலைசிறந்த மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்வித் தந்தையாகப் போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே பிறந்த நாள் இன்று (டிசம்பர் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 ஹாலந்தில் பிறந்தவர். அப்பா மதபோதகர். பள்ளிப் படிப்போடு பல மொழிகளையும் கற்றார். அறிவுக் கூர்மையால் 3 ஆண்டு உயர் கல்வியை ஒன்றரை ஆண்டுகளிலேயே முடித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
 
 தத்துவம், கணிதம், இறையியல், வேதியியல், தாவரவியல் பயின்றார். உடலில் இருந்து மனம் வேறுபட்டிருப்பது குறித்து விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைக்காக 22-வது வயதில் டாக்டர் பட்டம் பெற்றார். இறையியலிலும் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
 உடலுக்கு மட்டுமல்லாது, ஆன்மாவுக்குமான மருத்துவராக சேவையாற்றும் இலக்கைக் கொண்டிருந்தார். லேடன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். தலைசிறந்த ஆசிரியராக போற்றப்பட்டார்.
 
 மாணவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மாணவர்களை அருகில் வைத்துக்கொண்டு கற்றுக்கொடுக் கும் முறையை அறிமுகப்படுத்தியது இவர்தான்.
 
 மருத்துவத் தகவல்களை முறையாகத் தொகுத்து வைத்ததில் இவரது பங்கு மகத்தானது. மாணவர்களும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் நோய்க்கான காரணங்களை ஆய்வு செய்து, அதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை நடத்தும் கிளினிக்கோ-பாதலாஜிகல் கான்ஃபரன்ஸ் என்ற நடைமுறையை தொடங்கிவைத்தார்.
 
 தற்போதைய மருத்துவக் கல்விக்கு அடித்தளமான நவீன மருத்துவ போதனை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். ரஷ்யப் பேரரசர் பீட்டர், வால்டயர் ஆகியோர் இவரைச் சந்திக்க ஹாலந்து சென்றது இவரது திறமைக்கான அங்கீகாரம்.
 
 ஹாலந்து ரூபாய் நோட்டுகளில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. லேடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2 முறை நியமிக்கப்பட்டார்.
 
 பல மருத்துவப் பாடப் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் எடுத்துக்கொண்ட குறிப்புகள் தொகுக்கப்பட்டு பல மருத்துவ நூல்களாக வெளிவந்துள்ளன.
 
 உணவுக்குழாய் பாதிப்பால் உயிரிழந்த ஒரு நோயாளியின் உடலைப் பரிசோதனை செய்த இவர், நோய் பாதிப்பு குறித்தும் அதற்கான காரணங்களையும் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தினார். இந்த பாதிப்பு இவர் பெயராலேயே ‘போர்ஹாவ் சிண்ட்ரோம்’ என இன்றும் குறிப்பிடப்படுகிறது.
 
 மருத்துவ வழிமுறைகளைவிட நோயாளிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 18-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மருத்துவ மேதையாக, மருத்துவ ஆசிரியராக போற்றப்பட்ட ஹெர்மன் போர்ஹாவே 70-வது வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

ஐசக் அசிமோவ் 10

 

5_2265448h.jpg

ஐசக் அசிமோவ்
 
 

அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடியான ஐசக் அசிமோவ் பிறந்த நாள் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
ரஷ்யாவில் பிறந்தவர். 3 வயதில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அப்பாவின் மிட்டாய்க் கடையில் அசிமோவ் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வேலை பார்த்தனர். அதீத நினை வாற்றல், அறிவுக் கூர்மை கொண்ட இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார்.
 
 ‘படிப்பது வீண் வேலை. தொழிலைப் பார்’ என்பார் அப்பா. இவருக்கோ எழுத்து, படிப்பு மீது அளவுகடந்த ஆர்வம். பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் முதல் மாணவனாக வந்தார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.
 
 11 வயதில் கதை எழுதினார். 19 வயதில் இவரது கதைகள் நாளிதழ்களில் வெளிவந்தன. ரசிகர்களும் உருவானார்கள். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1938-ல் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடற்படையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1948-ல் உயிர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
 1950-ல் இவரது கதைத் தொகுப்பு ‘ஐ ரோபோ’ வெளிவந்தது. அடுத்த ஆண்டே இவரது ‘பவுண்டேஷன்’ நாவல் வெளிவந்தது. படைப்பாற்றல் மிக்க இவரது கதைகள் உலகம் முழுவதும் பிரபலமாயின. 1958-ல் முழுநேர எழுத்தாளர் ஆனார்.
 
 தொடர்ந்து பவுண்டேஷன் அண்ட் எம்பயர், செகண்ட் பவுண்டேஷன் ஆகிய நூல்கள் வெளிவந்தன. 1979-ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் இவரை கவுரவப்படுத்தி உயிர் வேதியியல் துறைப் பேராசிரியராக நியமித்தது.
 
 வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளிலும் சுய சரிதையாகவும் ஏறக்குறைய 500 புத்தகங்கள் படைத்துள்ளார். 90 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.
 
 1956 முதல் இவரது தனிப்பட்ட ஆவணங்கள் பாஸ்டன் பல்கலைக்கழக நூலகத்தில் 464 பெட்டிகள், 232 அடி அலமாரியில் ஆவணப்படுத்தப்பட்டன. உலகின் அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்‌ஷன்) எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.
 
 இவர் சிறந்த பேச்சாளரும்கூட. நேசம் நிறைந்தவர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கடிதங்களுக்குப் பொறுமையாக விடையளிப்பார். 1984-ல் அமெரிக்க மனிதநேய சங்கம் இவரை மனிதநேயம் மிக்கவராகத் தேர்ந்தெடுத்தது.
 
 அந்த சங்கத்தின் கவுரவ முதல்வராகவும் பதவி வகித்தார். பல பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாவலைத் தழுவி வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘ஐ ரோபோ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பல்வேறு அறிவியல் அமைப்புகள், நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கு இவரது பெயரைச் சூட்டின.
 
 புதினங்கள், கதைகள் தவிர, குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார். 72-வது வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

வீரபாண்டிய கட்டபொம்மன் 10

Untitled_2266821h.jpg

வீரபாண்டிய கட்டபொம்மன்

 

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
 பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.
 
 பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட, பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக் கும் ஆங்கிலேயத் தளபதி யால் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
 
 1797-ல் கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் வந்தார் ஆலன். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பிறகு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார். ஆனால் குறிப் பிட்ட இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்தார் கட்டபொம்மன்.
 
 இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார்.
 
 ‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.
 
 இவரை ஒழிக்க ஆங்கிலேய அரசு முடிவுகட்டியது. 1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் இந்த பகுதியை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டது.
 
 கடுமையாக நடந்த போரில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது செய்யப்பட்டார்.
 
 கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன்’ என்று கம்பீரத்துடன் முழங்கினார். 1799-ல் கயத்தாறில் 39-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
 
 தூக்கிலிடப்பட்ட இடமான கயத்தாறில் இவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
 

 

 இவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ்ப் புராணங்கள், காவியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 1959-ல் பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் கட்டபொம்மனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், தமிழக மக்களின் நெஞ்சங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்தது.
 

 

  • தொடங்கியவர்

ஹென்றிச் வான் ஸ்டீபன் 10

Untitled_2271021h.jpg

ஹென்றிச் வான் ஸ்டீபன்

உலக அளவில் அஞ்சல் சேவை மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்த ஹென்றிச் வான் ஸ்டீபன் பிறந்த நாள் இன்று (ஜனவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 பிரஷ்யாவில் பிறந்தவர். பள்ளியில் சேரும் முன்பே இத்தாலி, ஸ்பெயின், ஆங்கில மொழிகளைக் கற்றவர்.
 
 16-வது வயதில் அஞ்சல் சேவைப் பணியாளராகச் சேர்ந்தார். அப்போது ஜெர்மனி 17 பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அஞ்சல் சேவை தனித்தனி விதிகளுடன் செயல் பட்டது. கட்டணங்களும் வெவ்வேறாக இருந்தன.
 
 வேலை பார்த்துக்கொண்டே கல்வியைத் தொடர்ந்தார். அதிக கல்வியறிவும், அபார மொழித் திறனும் அடுத் தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்றுத் தந்தன. நாடக விமர்சனங்களும் எழுதிவந்தார். ‘ஹிஸ்டரி ஆஃப் த பிரஷ்யன் போஸ்ட் ஆபீஸ்’ என்பது உட்பட அஞ்சல் துறை தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
 தனியாரால் நடத்தப்பட்டு வந்த அஞ்சல் சேவையை அரசுடமை ஆக்கும் திட்டத்துக்கு 1866-ல் பொறுப்பேற் றார். முதலில், தபால்கள் அனுப்பும் நடைமுறையை எளிதாக்க ஜெர்மனி முழுவதும் ஒரே கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்தினார்.
 
 அஞ்சல் சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும், உலகம் முழுவதும் அதை முறைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டார். ஜெர்மனியில் தபால் அட்டையை அறிமுகப்படுத்தவேண்டும் என்று 1865-ல் தீர்மானித்தார். 1870-ல் இவர் அஞ்சல் சேவைகள் இயக்குநராகப் பதவியேற்ற பிறகு, அந்த நோக்கம் நிறைவேறியது.
 
 ஜெர்மனியில் அஞ்சல், தொலைபேசி சேவைகளை ஒன்றிணைத்தார். அதன் பிறகு நடந்த பிரான்ஸ் - பிரஷ்யப் போரில் படைப் பிரிவினரிடையே தகவல் தொடர்புக்கு அஞ்சல் அட்டைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
 
சிறு தாமதம், இடையூறுகூட இல்லாமல், போர் வீரர்களின் கடிதப் பரிமாற்றம் நடந்தது. 8 மாத காலகட்டத்தில் சுமார் 9 கோடி கடிதங்கள், 25 லட்சம் அஞ்சல் அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட்டன.
 
அதன் பிறகு பார்சல்கள், மணி ஆர்டரையும் அறிமுகப் படுத்தினார். இதை பின்பற்றி, 1883-ல் ஜெர்மனி யில் மட்டும் 8 கோடி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அப்போது உலகம் முழுவதும் மற்ற நாடுகளில் மொத்தமே 5 கோடி பார்சல்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.
 
 1876-ல் பிரஷ்யப் பேரரசின் அஞ்சல் துறைத் தலைவர், 1880-ல் அஞ்சல் சேவைகளுக்குப் பொறுப்பான அரசு செயலர், 1895-ல் ஜெர்மனி அஞ்சல் சேவைகள் துறை அமைச்சர் என உயர்ந்தார். 1874-ல் பெர்ன் நகரில் நடந்த சர்வதேச அஞ்சல் மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். அதில்தான் சர்வதேச போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்டது.
 
 ஜெர்மனியில் தொலைபேசியை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவை துறைகளில் தூய ஜெர்மன் மொழிக் கலைச் சொற்களை உருவாக்குவதிலும் முனைப்பாகச் செயல்பட்டார். உலகம் முழுவதும் அஞ்சல் சேவை சீரமைப்பில் முக்கியப் பங்காற்றிய ஹென்றிச் வான் ஸ்டீபன் 66-வது வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

ஹர் கோவிந்த் குரானா 10

 

Untitled_2273459h.jpg

 
ஹர் கோவிந்த் குரானா
 
மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா பிறந்த நாள் இன்று (ஜனவரி 9). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார். தந்தை கிராம வரி வசூலிப்பவராகப் பணியாற்றி வந்தார். ஏழ்மை நிலையிலும் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இளம் வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கினார்.
 
 லாகூர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். 1945-ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். அரசு உதவித் தொகை பெற்று இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, டாக்டர் பட்டம் பெற்றார்.
 
 1948-ல் ஸ்விட்சர்லாந்து ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். 1949-ல் இந்தியா திரும்பினார். இங்கு சரியான வேலை கிடைக்காமல், மீண்டும் இங்கிலாந்து சென்றார். 1953-ல் காமன்வெல்த் ஆய்வுக் கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
 பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1960-ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
 
 4 ஆண்டுகள் உயிரி வேதியியல் பேராசிரியராகவும், பிறகு அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணி யாற்றினார். 1950-ல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.
 
 இந்த ஆய்வுக்காக 1968-ல் இவருக்கும் நோரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் இவர் மேற்கொண்ட மரபுக்குறியீடு (genetic code) பற்றிய ஆய்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. உயிரினங்களின் குடற் பகுதியில் இருக்கும் எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கத்தில் குரானாவும் அவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.
 
 படிப்படியாக முயன்று இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர், 1976-ல் இந்த செயற்கை மரபணுக்களை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியுடன் இணைத்ததும் அவை இயற்கை மரபணுக்களைப் போலவே செயல்பட்டன.
 
 புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார். அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், இந்திய அரசின் பத்மபூஷண், கொல்கத்தா போஸ் நிறுவனத்தின் ஜே.சி.போஸ் பதக்கம் உட்பட பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார்.
 
 இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில், விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத் துறையும் இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து குரானா புரோகிராம் என்ற அமைப்பை 2007ல் தொடங்கின.
 
 முதன் முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து அறிவியல் உலகுக்கு புதிய திசை காட்டிய மருத்துவ அறிவியல் மேதை ஹர் கோவிந்த் குரானா 89-ஆவது வயதில் மரணமடைந்தார்.
 
  • தொடங்கியவர்

கே.ஜே. யேசுதாஸ் 10

_HYF13YESUDAS_8901_2274735h.jpg

கே.ஜே. யேசுதாஸ். | படம்: வி.ஸ்ரீனிவாச மூர்த்தி.

கர்னாடக இசைக் கலைஞரும், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகருமான கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் (கே.ஜே. யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார்.
 
 முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.
 
 மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
 
 இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது.
 
 இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதம மந்திரி யுத்த நிதிக்காக பணம் திரட்டினார்.
 
 கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
 ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.
 
 ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என் அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர், குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம் அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல் திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும் தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை தொடங்கி நடத்திவருகிறார்.
 
 இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும் பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர்.
 
  • தொடங்கியவர்

அலெக்ஸான்டர் ஹாமில்டன் 10

 

alex_2276588h.jpg

அலெக்ஸான்டர் ஹாமில்டன்
 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிறுவனத் தந்தையாகப் போற்றப்பட்டவரும், வாஷிங்டனுக்கு முதன்மை அலுவல ராகவும் செயல்பட்ட அலெக்ஸான்டர் ஹாமில்டன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

 
 பிரிட்டிஷ் வெஸ்ட் இண்டீசின் லீவார்ட் தீவுகளின் நேவிஸ் தீவின் தலைநகர் சார்லஸ் டவுனில் பிறந்தவர். கல்வியுடன் கிரேக்கம், ரோமன் மொழி பாரம்பரிய இலக்கிய புத்தகங்களையும் படித்தார்.
 
 வறுமையில் வாடியதால், 11 வயதிலேயே வேலை பார்க் கத் தொடங்கினார். இவரது திறமையால் கவரப்பட்ட முதலாளி, படிப்பதற்காக அமெ ரிக்கா அனுப்பி வைத்தார். 16 வயதில் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.
 
 அவருக்குப் படிப்பைவிட அரசியலில் நாட்டம் அதிகமாக இருந்தது. பிரிட்டன் காங்கிரசில் சேர்ந்தார். 1774-ல் பிரிட்டன் ஆதரவு விசுவாசத்துக்கு எதிராக தனது முதல் அரசியல் கட்டுரையை எழுதினார். பிரிட்டிஷ் அரசின் வரிகள் மற்றும் வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார்.
 
 அமெரிக்க விடுதலைப் போராட்டம் தொடங்கியபோது 1775-ல் நடைபெற்ற லாங் ஐலான்ட், ஒயிட் பிளைன்ஸ் மற்றும் டிரென்டன் யுத்தங்களில் கலந்துகொண்டார். துடி துடிப்பான செயல்வீரரான இவர், ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டனின் அன்பைப் பெற்று அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளரானார்.
 
 மீண்டும் யார்க்டவுன் யுத்தத்தில் தலைமையேற்று படைகளை வெற்றிகரமாக வழிநடத்தினார். இதன் முடிவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. வாஷிங்டனின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு படிப்பைத் தொடர்ந்து சட்டம் பயின்றார்.
 
 வலுவான மத்திய அரசை உருவாக்குவதுதான் அமெரிக்க சுதந்திரத்தை கட்டிக் காக்கும் என்று கூறினார். அமெரிக்க சுதந்திர போராட்டமும் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டமும் பிரிக்க முடியாதவை என்று கூறினார். பெடரலிஸ்ட் கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார்.
 
 அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தார். தி ஃபெடரலிஸ்ட் என்ற தலைப்பில் வெளிவந்த 85 கட்டுரைகளில் 51 கட்டுரைகளை ஜேம்ஸ் மாடிசன் மற்றும் ஜான் ஜேயுடன் கூட்டாக இணைந்து இவர் எழுதியுள்ளார்.
 
 ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதியாக 1789-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஹாமில்டனை அவர் முதல் கருவூலச் செயலராக நியமித்தார். முதன் முதலாக பாங்க் ஆஃப் யுனைடட் ஸ்டேட்ஸ் என்ற அரசுக்கு சொந்தமான தேசிய வங்கியை உருவாக்கினார். நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்ததில் முதன்மை பங்காற்றியவர்.
 
 தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரிட்டனுடனான நட்பு, வணிக உறவு, உற்பத்தி கொள்கைகள் ஆகிய அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு இவர் பங்கு முக்கியமானது. அமெரிக்காவில் பல இடங்களில் இவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
 
 அமெரிக்க கரன்சி நோட்டுகள், சேமிப்பு பத்திரங்கள், அஞ்சல் முத்திரைகள் ஆகியவற்றில் இவரது உருவப் படங்கள் வெளியாகின. அமெரிக்க ராணுவத்தின் பிரிவு உட்பட பல அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டன. 49-ஆம் வயதில் மரணமடைந்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

ரஜினிகாந்த் 10

 

11Dec_thapm_Raj_11_2241547f.jpg

 

 இவரது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இடம் பெறும் ‘பஞ்ச் டயலாக்’ அனைத்துத் தரப்பினரிடமும் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

இந்தப்  ‘பஞ்ச் டயலாக்’ கை அவர் இந்தப் 'பாஞ்' சிடம் கற்றுக்கொண்டதால், நான் அவருக்குக் குருவானேன். என்னை மறந்ததென்ன ஆதவன் அவர்களே!!  :( 

  • தொடங்கியவர்

ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸ் 10

richard_2276580h.jpg

ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸ்
 

நவீன தாவரத் தொடர்பியலின் (ethnobotany) தந்தையாக கருதப்படும் ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 12). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஜெர்மனி லிருந்து புலம் பெயர்ந்தவர்கள். சிறு வயதில் இவர் தனது மாமாவின் பண்ணையில் இருந்த அரிதான பல தாவர வகைகளைக் கண்டு, அவற் றைப் பற்றித் தெரிந்துகொள் வதில் ஆர்வம் கொண்டார்.
 
 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, இவரது பேராசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஓகஸ் அமெஸ் `பயன் தரும் மற்றும் தீமை விளைவிக்கும் தாவரங்கள்’ என்ற தலைப்பில் கற்பித்த பாடம் இவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றியது.
 
 அமேசான் மழைக் காடுகளில் 17 வருடங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த ரிச்சர்ட் ப்ரூஸ்தான் இவரது ஹீரோ. ஷல்டீஸ், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் 1937-ல் உயிரியியல் மற்றும் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
 1941-ல் தாவரவியலில் டாக்டர் பட்டமும் பெற்றார். தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நேஷனல் ரிசர்ச் கவுன்சில் இவருக்கு உதவித் தொகை அளித்தது.
 
 முதலில் இவரது ஆய்வுகள் ரப்பர் மற்றும் மருத்துவ குணங்கள் உடைய தாவரங்களைப் பற்றி இருந்தன. பிறகு உளவியல் தொடர்பான மருந்துகள், மனமயக்கம் தரும் தாவரங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவடைந்தன. அமேசான் பகுதிகளில் ஏறக்குறைய 80,000 வகை பயனுள்ள தாவரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 அமேசான் மற்றும் மெக்சிகோ காடுகளில் இவரது 50 வருட கால ஆராய்ச்சிகளில் அதுவரை அறிவியலில் கண்டறியப்படாத 300 மூலிகைத் தாவரங்கள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட மூலிகை குணங்கள் உடைய தாவர வகைகளை சேகரித்தார். ஆரோ பாய்சன் உட்பட ஏராளமான தாவரத் தொடர்பியல் கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
 
 1957-ல் “சீகிங் தி மேஜிக் மஷ்ரூம்ஸ்” என்ற கட்டுரையை வெளியிட்டார். ஆல்பர்ட் ஹாஃப்மெனுடன் சேர்ந்து இவர் எழுதிய தி பிளான்ட்ஸ் ஆஃப் தி காட்ஸ்: தெயர் சேக்ரட், ஹீலிங், ஹலுசினோஜெனிக் பவர்ஸ் (1979) புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விற்பனையில் சாதனை படைத்தது.
 
 இவான்ஸ் 1958-ஆம் ஆண்டில் ஹார்வர்டின் ஆமெஸ் அர்சிட் ஹெர்பேரியத்தின் பொருளாதார தாவரவியல் க்யுரேட்டராக நியமிக்கப்பட்டார். 1970-ல் இதன் உயிரியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். நடைமுறை சார்ந்த, தனது அரிய அனுபவங்களை கூறி இவரது விரிவுரையாற்றும் பாணியால் மாணவர்கள் ஈர்க்கப்பட்டனர்.
 
 இவரது மூலிகைத் தாவர ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. காடுகள் அழிக்கப்படுவது பற்றி இவர் கவலை தெரிவித்தார்.
 
 டயிலர் பிரைஸ் மற்றும் வேர்ல்டு வைல்டு லைஃப் ஃபன்ட் அமைப்பின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகள், ஏராளமான விருதுகள், கவுரவப் பட்டங்களையும் வென்ற டாக்டர் ரிச்சர்ட் இவான்ஸ் ஷல்டீஸ் 86-வது வயதில் 2001 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி காலமானார்.
 
  • தொடங்கியவர்

மார்டின் லூதர் கிங் - ஜூனியர் 10

martin_2279606h.jpg

மேத்யூ மவுரி

நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
# அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார்.
 
# கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் புரொமோஷன் பெற்று, விரைவில் கல்லூரியில் சேரும் தகுதிபெற்றார். சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
 
# 25-ஆவது வயதில் அலபாமாவில் பாதிரியாகப் பணிபுரியத் தொடங்கினார். 1955-ல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் பட்டம் பெற்றார்.
 
# தேசிய கறுப்பரின முன்னேற்ற கூட்டமைப்பின் தலைமைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். அமெரிக்க கறுப்பரினத்தவரின் உரிமைப் போராட்டத்திற்கு தலைமையேற்று வழி நடத்தினார் பேருந்துகளில் அனைவரும் சமமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்.
 
# 382 நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. போராட்ட சமயத்தில் கிங் கைது செய்யப்பட்டார், இவரது வீடு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, இறுதியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1956-ல் பேருந்துகளில் இனப்பிரிவினை நடைபெறுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது
 
# அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவை அமைத்தார். காந்தியடிகளின் அறப்போராட்ட வழிமுறைகளால் ஈர்க்கப்பட்டார். இவற்றை விரிவாக அறிந்துகொள்வதற்காக தன் குழுவினருடன் 1959-ல் இந்தியா வந்தார்.
 
# இவரது போராட்டக் கொள்கைகளில் கிறிஸ்துவின் போதனைகளையும் செயல்பாட்டு யுத்திகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளும் பிரதிபலித்தன. 1957 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இவர் 60லட்சம் மைல் தூரம் பயணம் மேற்கொண்டு உரிமைக் குரல் எழுப்பினார்.
 
# 2,500 கூட்டங்களில் உரையாற்றியுள்ளார். எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதி நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் இவர் சென்று அவர்களுக்காகப் போராடினார்.
 
# வாஷிங்டன் டி.சி. யில் இவர் தலைமையேற்று நடத்திய பிரம்மாண்டமான அமைதிப் பேரணியில் 2,50,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு இவர் “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உலகப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார். இவர் நடத்திய போராட்டங்களின் பலனாக, பொது இடங்கள், அமைப்புகளில் கறுப்பரின மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதை தடைசெய்யும் சிவில் ரைட்ஸ் ஆக்ட் 1964-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
 
# 1964-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.அப்போது இவருக்கு 35 வயதுதான். இனவெறிக்கு எதிராகப் போராடிய உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், இனவெறிகொண்ட ஒரு வெள்ளையனால் 1968 ஏப்ரல் 4-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
  • தொடங்கியவர்

ஜேம்ஸ் வாட் - 10

james_2282562h.jpg

 

 
பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி ஐரோப்பாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்தநாள் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
 
# ஸ்காட்லாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். காகிதம் வாங்க காசு இருக்காது என்பதால், வீட்டுத் தரையிலேயே வரைவார். இவரது ஓவியங்களில் வட்டம், சதுரம், முக்கோணம் என கணித சம்பந்தமானவை அதிகம் இடம்பெறும்.
 
# பிறவியிலேயே சற்று பலவீனமானவர். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லமுடியாததால் அம்மாவிடம் வீட்டிலேயே கற்றார்.
 
# உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும் இயந்திரங்களைப் பற்றியே கனவு காண்பார். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். ஊர் திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை கிடைத்தது.
 
# தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு 1764-ல் கிடைத்தது. அதில் அதிக சக்தி வீணாவதைக் கண்டார். உடல்நிலை அனுமதிக்காதபோதும் மனம் தளராமல் கடுமையாக உழைத்தார். இயந்திரத்தில் சக்கரம் பொருத்தும் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி அதை மாற்றம் செய்தார்.
 
# இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. இதற்கு காப்புரிமை பெற்றார். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்தார்.
 
# 1775-ல் பொறியாளர் மேத்யூ போல்டன் என்பவருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இருவரும் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்து பெரும் செல்வந்தர்களாயினர். இவரது கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்கு வரப்பிரசாதமாக விளங்கின.
 
# அதுவரை மனித, விலங்கு ஆற்றல்களையே நம்பியிருந்த தொழில் உலகம் புதிதாக நீராவி என்ற இயற்கை சக்தியை பயன்படுத்தத் தொடங்கியது. உற்பத்தி பல மடங்கு பெருகியது. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.
 
# மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.
 
# ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே. வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய நோயாளியாகவே வாழ்ந்த இவர் மனிதகுலத்துக்கு வழங்கிய மகத்தான பங்களிப்புகள் ஏராளம்.
 
# இயற்கையான நீராவி சக்தியை மகத்தான சக்தியாக மனிதகுலத்துக்கு மடைமாற்றிய வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட் 83 வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

டேவிட் மோரீஸ் லீ- 10

 

lee_2283402f.jpg

டேவிட் மோரீஸ் லீ
 
ஐசோடோப் ஹீலியம் 3 ன் சூப்பர்ஃப்ளுயிடிட்டி குறித்து கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞரான டேவிட் மோரீஸ் லீ பிறந்த தினம் இன்று (ஜனவரி 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
 நியூயார்க் நகருக்கு வெளியே சிறு புறநகர்ப் பகுதியான ராய் என்ற ஊரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். தந்தை மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குழந்தை யாக இருந்தபோது வயல்களிலும் கடற்கரைப் பகுதிகளில் காணப் படும் உயிரினங்களை மணிக்கணக் காகப் பார்த்துக் கொண்டிருப்பார்.
 
 சிறு வயதில் ரயில்கள் மேல் அலாதி பிரியம் கொண் டிருந்தார். ஒட்டுமொத்த அமெரிக்க ரயில்வே அட்ட வணையையும் சேகரித்து ஒரு இளம் ரயில் பிரயாண நிபுணராகவே மாறிவிட்டார். வானியல் ஆராய்ச்சிகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். சொந்தமாக வானிலை அறிக்கை பதிவேட்டைப் பராமரித்து வந்தார்.
 
 சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் எழுதிய தி மிஸ்டீரியஸ் யுனிவர்ஸ் என்ற புத்தகத்தைப் படித்தார். அதுதான் இயற்பியலில் இவருக்குள் இருந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. 1952ல் அமெரிக்க ராணுவத்தில் 22 மாதங்கள் பணிபுரிந்தார்.
 
 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இயற்பியல் ஆய்வுகளில் இறங்கினார். ஒரு பேராசிரியருடன் இணைந்து, காக்கிராஃப்ட்-வால்டன் ஆக்சிலரேட்டருக்கான அயனியாக்கப் பாதை கட்டுப்பாடு சர்க்யூட் அமைப்பதுதான் இவரது முதல் ஆய்வு.
 
 கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்லஸ் ரெனால்ட்சுடன் சூப்பர்ஃப்ளுயிட் திரவ ஹீலியம் குறித்து சோதனை ஆய்வு நடத்தி வந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
 
 திரவ ஹீலியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். தன் சகா ரிச்சர்ட்சன்னுடன் இணைந்து, குறைந்த வெப்பநிலை கொண்ட சோதனைக் கூடத்தில் தங்களது ஆய்வுகளுக்காக குளிர்விக்கும் ஒரு விசேஷ சாதனத்தை வடிவமைத்தார்.
 
 எதேச்சையாக 1972ல் ஹீலியம்-3ல் சூப்பர்ஃப்ளூயிடிட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த ஹீலியத்தில் இருக்கும் அணுக்கள் ஒருங்கிணைந்த முறையில் நகர்வ தால், எந்த உட்புறத் தடையும் இல்லாமல் சரளமாக பாய்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இந்த நிலையில் இருக்கும் ஹீலியம் -3 குவான்டம் இயக்கமுறை விதிகளின் படி செயல்படுகிறது என்பதை இந்தக் குழு கண்டறிந்தது.
 
 இந்த ஆய்வுக்காக ராபர்ட் சி. ரிச்சட்சன் மற்றும் டாக் ஓஷரோஃப் ஆகியோருடன் கூட்டாக இணைந்து 1996ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
 
 இவரது ஆய்வுகள் திரவங்கள், திடப்பொருட்கள் மற்றும் சூப்பர்ஃபுளூயிட் ஹீலியம், (4He, 3He மற்றும் இரண்டும் கலந்த) தொடர்பான எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கியவை.
 
 நோபல் பரிசு தவிர அமெரிக்கன் ஃபிசிகல் சொசைட்டியின் ஆலிவர் பக்லே விருது உள்ளிட்ட பரிசுகளையும் விருது களையும் வென்றுள்ளார். உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகளிலும் இவர் உறுப்பினராக செயல்படுகிறார். தற்போது 78வது வயதிலும் டெக்ஸாஸ் ஏ.எம். பல்கலைக் கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருவதோடு தனது முன்னாள் ஆய்வுக்குழுவினரோடு இணைந்து ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
 

பால் ஆலன் 10

__________10_2284454f.jpg

பால் ஆலன்

அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் பிறந்தநாள் இன்று (ஜனவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்தவர். 14 வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் தன்னைப் போலவே கம்ப்யூட்டரில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.
 
 இருவரும் இணைந்து 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவினர். 1981-ல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது.
 
 மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. ஹாட்கின்ஸ் நோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
 உலகம் முழுவதையும் இணையத்தால் இணைக்கும் நோக்கத்துக்காக `இன்டர்வெல் ரிசர்ச்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். சியாட்டில் சீஹாக்ஸ் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களை வாங்கி, உலகின் 7-வது மிகப் பெரிய கேபிள் நிறுவனத்தின் உரிமையாளரானார்.
 
 ஆராய்ச்சிகளுக்கு உதவும் அமைப்புகளில் முதலீடு செய்தார். தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், ஊடகம் என பல துறை நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்களில் என பல கோடி டாலர் முதலீடு செய்துள்ளார்.
 
 இவரது வல்கான் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துவருகிறது. கிடார் வாசிப்பது இவரது பொழுதுபோக்கு.
 
 தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவருகிறார். இவர் தொடங்கியுள்ள பால் ஜி ஆலன் ஃபேமிலி பவுண்டேஷன் மூலம் கல்வி, கலை, அறிவியல், கேளிக்கை, விளையாட்டு, வர்த்தகம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
 
 எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் வழங்கினார். சிகிச்சையில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவும் வகையிலும் உலக சுகாதார அமைப்புக்கும் நிதி உதவி அளித்துள்ளார்.
 
 ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
 அறப்பணிகளுக்காக இதுவரை இவர் வழங்கியுள்ள தொகை 1.8 பில்லியன் டாலர். இவரது சொத்து மதிப்பு 17.1 பில்லியன் டாலர். உலகின் 55-வது பணக்காரர். 62 வயதாகும் இவர் சாதனைகள், நற்பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார்.
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 10

 

Untitled_2287048h.jpg

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
 
இந்திய விடுதலையைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட தன்னிகரில்லாத புரட்சி வீரர் சுபாஷ் சந்திரபோஸ் (Subhas Chandra Bose) பிறந்த தினம் இன்று (ஜனவரி 23). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
 
 ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பாரம்பரியப் பெருமை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வி கற்றார்.
 
 ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி குருவைத் தேடி அலைந்தார். குரு கிடைக்காததால் தந்தை சொன்னபடி 1915-ல் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
 
 அங்கே இனவெறி பிடித்த ஆசிரியருடன் நடைபெற்ற மோதல் காரணமாக சுபாஷும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்தக் கல்லூரியிலும் சேர முடியாதவாறு தடையும் விதிக்கப்பட்டது. சி.ஆர். தாஸ் உதவியுடன் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
 
 ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார். ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை லண்டனிலேயே துறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தன் விருப்பம் குறித்து சி.ஆர். தாஸுக்குக் கடிதம் எழுதினார்.
 
 அவரை வரவேற்று பதில் கடிதம் அனுப்பினார் சி.ஆர். தாஸ். இவரது திறனை நன்கு புரிந்துகொண்டிருந்த தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக வெறும் 25 வயதே ஆன சுபாஷை நியமித்தார். மாணவர்களிடையே விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
 
 ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய டயரைச் சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கைக் கண்டித்து காந்திஜி அறிக்கை விட்டார். ஆனால், சுபாஷ் அவரைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார். காந்திஜிக்கும் இவருக்கும் மோதல் ஆரம்பமானது.
 
 மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ், கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு ஆதரவு பெருகி வருவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு ஏதோ காரணம் காட்டி இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
 
 சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறையிலிருந்து வெளிவந்து உடல்நிலை தேறிய பின் 1930-ல் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார்.
 
 1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கணமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார்.
 
 இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட வீரருமான இவர் 1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
 
 

Edited by Athavan CH

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தாமஸ் ஆல்வா எடிசன் 10

 

Untitled_2306955f.jpg

 

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.
 
 ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.
 
 பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.
 
 ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.
 
 ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.
 
 ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்தி ரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.
 
 இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.
 
 மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
 
 ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.
 
 எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.
 
  • தொடங்கியவர்

கலிலியோ 10

 

galileo_2311579f.jpg

 

கணிதவியலாளர், பொறியாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி என பன்முகப் பரிமாணம் கொண்ட கலிலியோ கலிலி (Galileo Galilei) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

 
* இத்தாலியின் பைசா நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே எதையும் மிக நுணுக்கமாக கவனிக்கும் திறன் கொண்டிருந்தார்.
 
* ‘ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் இவர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்தார். ‘அரிஸ்டாட்டில் சொன்னது தவறு, இருவருக்குமே 32 பற்கள்தான்’ என்று தெளிவுபடுத்தினாராம்.
 
* அப்பாவின் ஆசைப்படி, மருத்துவம் படிக்க பைசா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உண்மையில், இவருக்கு கணிதம், இயந்திரவியல், இசை, ஓவியத்தில்தான் ஆர்வம். கல்லூரியில் பயின்றுகொண்டே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘பெண்டுலம்’ விதியைக் கண்டறிந்தார். தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக் கண்டறிந்தார். அதைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதினார். அறிவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார்.
 
* மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு கணிதம் பயின்றார். பின்னர், அதே ஊரில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, ‘பாடுவா’ என்ற ஊரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.
 
* அண்டவெளியில் காணும் பொருட்கள், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், வியாழன் கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், சூரியனில் காணப்படும் புள்ளிகள் ஆகியவற்றை தான் கண்டறிந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ஆராய்ந்தார்.
 
* கோள்களைப் பற்றிய பல கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சிகள் தகர்த்தன. இவரது கருத்துகள் வானியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தின. இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி மேலும் பிரபலமானார். வெப்பமானியை உருவாக்கினார்.
 
* பொருட்கள் இயக்கவியலில் புதிய கோட்பாட்டை நிரூபித்தார். தொடர்ச்சியாக பல நூல்கள் எழுதினார். அவை உலகப் புகழ் பெற்றன.
 
* சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றுவதாகவே பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. பூமி உள்ளிட்ட கோள்கள்தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று கலிலியோ, கோபர்நிகஸ், ஜோகன்னஸ் கெப்ளர் ஆகியோரின் ஆய்வுகள்தான் முதன்முறையாக கூறின.
 
* இவரது கண்டுபிடிப்புகள் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவரது கருத்துகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. நீண்டகாலம் இவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கல்லால் அடித்து, தீவைத்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
* நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, அறிவியலின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் கலிலியோ 78 வயதில் மறைந்தார். கலிலியோ இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை தண்டித்தது தவறு என்று 1992-ல் போப் மன்னிப்பு கோரினார்.
 
  • தொடங்கியவர்

தெளிவத்தை ஜோசப் 10

joseph_2312412h.jpg

தெளிவத்தை ஜோசப்

 

இலங்கை மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவரும், தமிழ் இலக்கிய ஆய்வாளருமான தெளிவத்தை ஜோசப் (Thelivathai Joseph) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
* இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.
 
* தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் பெயருடன், தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டார்.
 
* 1960-களில் தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்து, பலராலும் அறியப்படும் படைப்பாளியாக மாறினார். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினார். பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.
 
* இலங்கை மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்கிற அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களை இவரது படைப்புகள் எடுத்துக் கூறின.
 
* ‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20-ம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக அடையாளம் காட்டின.
 
* தனது படைப்புகள் மூலம் மலையக எல்லையைக் கடந்து இலங்கை அளவில் பேசப்படும் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியாகத் திகழ்கிறார். பல்வேறு பத்திரிகைகளுக்காக பல புனைப்பெயர்களில் இலக்கிய கட்டுரைகள், இலக்கிய குறிப்புகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியத் தகவல்களை அளித்துள்ளார்.
 
* பல பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதை வென்றுள்ளார். இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010-க்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதை வென்றது. 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.
 
* இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் இவரை அழைத்து கவுரவித்துள்ளன. சிறந்த இலக்கிய விமர்சகர், வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் இவரிடம் பலர் தங்கள் நூல்களுக்கான முன்னுரைகளைக் கேட்டுப் பெறுகின்றனர்.
 
* மலையகத்தின் மூத்த எழுத்தாளராகத் திகழும் இவர் 1960 முதல் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.
 
* 1960-களில் இலக்கியப் பயணத்தை தொடங்கிய இவர், 66 சிறுகதைகள் உட்பட ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த எழுத்தாளர் என்ற பெருமையுடன் வலம் வருகிறார்.
 
  • தொடங்கியவர்

ராமகிருஷ்ண பரமஹம்சர் 10

 

Untitled_2314283f.jpg

ராமகிருஷ்ண பரமஹம்சர்

 

இந்தியாவின் ஆன்மிக குரு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) பிறந்ததினம் இன்று (பிப் 18). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:

 
 மேற்குவங்க மாநிலம் காமார் புகூர் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா. சிறு வயதில் ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார்.
 
 பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இயற்கையை ரசிப் பதிலும், புராணக் கதை கேட் பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதையுமே அதிகம் விரும்பினார். அதே நேரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார்.
 
 தந்தை காலமானதும் தாய் மற்றும் அண்ணன்களின் பராமரிப்பில் வளர்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திவந்தார்.
 
 இவரை தன்னுடன் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கு அவரது பாடசாலையில் கல்வி கற்றதுடன் அவருக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். தட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தது. தங்குவதற்கு அறையும் ஒதுக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்தது இங்குதான்.
 
 காளியை நேரில் காணவேண்டும் என்ற ஏக்கம், ஆவல் தீவிரமானது. கடும் தியானம் மேற்கொண்டும், அது கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்றார். உடனே சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தன. பித்து பிடித்துவிட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்.
 
 பிற்காலத்தில் உலகமே அன்னையாகப் போற்றவிருந்த சாரதாதேவி எங்கு இருக்கிறார் என்று சொன்னதோடு அவரையே மணம் செய்துவைக்குமாறும் கேட்டுக்கொண் டார் ராமகிருஷ்ணர். அனைத்து பெண்களையும் காளியின் அம்சமாகவே போற்றியவர், தன் மனைவியையும் அலங் கரித்து பூஜை செய்து, அவரது காலில் விழுந்து வணங்குவார்.
 
 பைரவி பிராம்மணி என்ற பெண்ணிடம் தாந்த்ரீகமும், தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில் 6 மாதங்கள் இருந்தார். ராமர், கிருஷ் ணர், சீதை, ராதையின் காட்சி கிடைத்ததாக கூறியுள்ளார்.
 
 இவரது புகழ் பரவியது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர்.
 
 நாடி வருவோருக்கு எளிமையான ஆன்மிக, தத்துவ, யதார்த்த கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம். இவரது உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமம் என்பார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை காளியாகவும், சிவனாக வும் பார்த்ததாக சீடர்கள் கூறியுள்ளனர். ‘ராமனாக, கிருஷ்ணனாக வந்தவன்தான் இப்போது ராமகிருஷ்ணனாக வந்துள்ளேன்’ என்று தன்னிடம் அவர் கூறியதாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
 
 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குருவும் வங்கம் தந்த ஆன்மிகப் பேரொளியுமான ராமகிருஷ்ணர் 50 வயதில் மறைந்தார்.
 
  • தொடங்கியவர்

ஜார்ஜ் வாஷிங்டன் 10

 

washington_2319034_2319998h.jpg

 

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
# அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தவர் (1732). ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். பிறகு கணிதம், புவியியல், லத்தீன், ஆங்கிலம் கற்றார். புகையிலை வளர்ப்பு, நில அளவை உட்பட பல விஷயங்களை தந்தையின் பண்ணையில் கற்றுக் கொண்டார்.
 
# 1753-ல் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது நடந்த பிரெஞ்சுப் போர், சிவப்பிந்தியப் போரில் பங்கேற்றார். இது அவருக்கு ராணுவ அனுபவத்தோடு புகழையும் பெற்றுத் தந்தது. அடுத்த 15 ஆண்டுகள் பண்ணையை நிர்வகித்தார். செல்வத்தைப் பல மடங்கு பெருக்கினார்.
 
# ஆறடி உயரம், கட்டான உடலமைப்பு, வசீகரத் தோற்றம் கொண்டவர். எதற்கும் அஞ்சாதவர். நிர்வாகத் திறன், மன உறுதி படைத்தவர். ஒழுக்க சீலர். 1775-ல் அமெரிக்கப் புரட்சி ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
# ஏறக்குறைய 8 ஆண்டுகள் பிரிட்டனுடன் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப் போர் 1783-ல் முடிந்தது. அமெரிக்க சுதந்திரத்தை பிரிட்டன் அங்கீகரித்தது. தன்னிகரில்லாத அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார் ஜார்ஜ் வாஷிங்டன்.
 
# அமெரிக்க சுதந்திரப் போரில் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775 முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
# நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசுகள் ஏற்குமாறு செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்.
 
# 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார்.
 
# அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார்.
 
# ஆதரவு, செல்வாக்கு இருந்தாலும் 3-வது முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது.
 
# அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவரது பிறந்தநாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் 67 வயதில் (1799) காலமானார்.
 
 
 
  • தொடங்கியவர்

மைக்கேல் டெல் 10

 

dell_2319937f.jpg

மைக்கேல் டெல்
 

கம்ப்யூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் (Michael Dell) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 
 அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார் (1965). சிறு வயதில் தபால் தலைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு வரவேற்பு இருப்பதை அறிந்து, யாருடைய உதவியுமின்றி, தானே விளம்பரம் கொடுத்து 10 வயதுக்குள் 2 ஆயிரம் டாலர் சம்பாதித்தார்.
 
 பள்ளியில் படிக்கும்போது செய்தித்தாள் முகவராக வேலை பார்த்தார். நகரில் புதிதாக குடியேறியவர்கள், புதுமணத் தம்பதிகளின் முகவரிகளை அரசு அலுவலகத்தில் பெற்று, அவர்களிடம் சந்தா பெற்றார். மற்றவர்களைவிட அதிகம் சம்பாதித்தார்.
 
 அப்பா அவருக்கு வாங்கித் தந்த புது ஆப்பிள் கணி னியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி, பிறகு கச்சிதமாக பொருத்தி கணினி பற்றிக் கற்றுக்கொண்டார்.
 
 கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். கணினித் தொழிலில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் அடைகிறார்கள். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப் படுவதில்லை என்று தெரிந்துகொண்டார்.
 
 டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையி லேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங் கினார். கணினி உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்றார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.
 
 தரகர்கள் இல்லாமல் நேரடியாக சேவைகளை வழங்கிய தால் கணினிகளை மலிவாகத் தரமுடிந்தது. போட்டி நிறுவனங்களும் வேறு வழியின்றி கணினி விலையைக் குறைத்தன.
 
 வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொண்டு தங்கள் தேவைகள், குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளைச் செய்தார். அவர்களது குறைகளைப் போக்க உடனுக்குடன் நட வடிக்கை எடுத்தார். வாடிக்கையாளரின் திருப்தியை முழுமையாகச் சம்பாதிக்கும் நிறுவனம் என்ற நற்பெயரும் கிடைத்தது.
 
 1987-ல் நிறுவனத்தின் பெயரை ‘டெல் கம்ப்யூட்டர் கார்ப் பரேஷன்’ என மாற்றினார். 1992-ல் ‘ஃபார்ச்சூன்’ இதழின் ‘டாப் 500’ நிறுவனங்கள் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. பட்டியலில் மிகவும் இளமையான தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) இவர்தான்.
 
 1999-ல் டெல் நிறுவன உத்தி பற்றிப் புத்தகம் எழுதி வெளியிட்டார். மைக்கேல் சூஸன் அறக்கட்டளை மூலம் ஏழை, எளியவர் கல்வி, மருத்துவத்துக்கு உதவிவருகிறார்.
 
 உலகப் பொருளாதாரப் பேரவை, சர்வதேச பிசினஸ் கவுன்சில், டெக்னாலஜி சிஇஓ கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறார். ‘மக்களின் தேவை அறிந்து, வாய்ப்புகளைக் கண்டறியுங்கள். அதை வெற்றியாக மாற்றுங்கள்’ என்ற இவரது தாரக மந்திரத்தின் அடிப்படையில் டெல் நிறுவனம் தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது.
 
  • 2 months later...
  • தொடங்கியவர்
சுஜாதா' ரங்கராஜன் 10

 

sujatha_2393683f.jpg

 

 
# சென்னை திருவல்லிக்கேணியில் (1935) பிறந்தார். இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் தாத்தா - பாட்டியிடம் வளர்ந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
 
# குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) பயின்றார். விமானப் போக்குவரத்துத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார் ஆய்வுப் பிரிவு உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அதன் பொது மேலாளராக உயர்ந்தார்.
 
# இவரது முதல் கதை 1953-ல் சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. 1962-ல் ‘இடது ஓரத்தில்’ என்ற சிறுகதை குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் பெயர் குழப்பத்தை தவிர்க்க, தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதினார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் என்ற தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் எழுதினார்.
 
# இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என பல துறைகளிலும் முத்திரை பதித்தார். காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா உள்ளிட்ட இவரது பல நாவல்களைத் தழுவி திரைப்படங்கள் வந்துள்ளன.
 
# அறிவியல், தொழில்நுட்பத் தமிழுக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. ஜூனியர் விகடனில் ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற பெயரில் வெளிவந்த இவரது கேள்வி-பதில் பகுதி மிகவும் பிரசித்தம். வாசகர்களின் சிக்கலான அறிவியல் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் எளிமையாக பதில் கூறுவார். மூளையின் செயல்பாடு குறித்து இவர் எழுதிய ‘தலைமைச் செயலகம்’ மிகச் சிறந்த அறிவியல் நூல்.
 
# பாட்டியுடன் ஸ்ரீரங்கத்தில் கழித்த இளமைக் கால நினைவுகளை ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்ற தலைப்பில் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்தார். ‘கற்றதும் பெற்றதும்’, ‘கடவுள் இருக்கிறாரா’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் பிரபலமானவை. பல கவிதைகள் எழுதியுள்ளார்.
 
# இவரது அறிவியல் புனைகதைகளான ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ரோஜா, இந்தியன், முதல்வன், ஆய்த எழுத்து உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
 
# அறிவியலை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டுசென்றதற்காக தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 1993-ல் இவருக்கு விருது வழங்கி கவுரவித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார். அதற்காக இவருக்கு ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது. எழுத்துப் பணிக்காக ‘கலைமாமணி’ விருது பெற்றார்.
 
# நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள், கவிதை நூல் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
 
# எழுத்துலக ஜாம்பவான் என்று புகழப்பட்ட ‘சுஜாதா’ ரங்கராஜன் 73 வயதில் (2008) மறைந்தார்.
 
 
 
  • 1 month later...
  • தொடங்கியவர்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் 10

 

spb_2427177f.jpg

 

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜுன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 
# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் (1946). தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
 
# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.
 
# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.
 
# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.
 
# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
 
# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.
 
# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
 
# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
 
# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
 
# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.
 
  • 3 months later...
  • தொடங்கியவர்

சி.வை.தாமோதரம் பிள்ளை 10

Untitled_2545076f.jpg
 

பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத் துறை முன்னோடியுமான சி.வை.தாமோதரம் பிள்ளை (C.W.Thamotharam Pillai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில் (1832) பிறந்தவர். தந்தை வைரவநாதப் பிள்ளையிடமே தமிழ் பயிலத் தொடங்கியவர், உயர்நிலை இலக்கண, இலக்கியங்களை கவிராயர் முத்துக்குமாரரிடம் கற்றார்.

l அமெரிக்க மிஷன் பாடசாலை யில் ஆங்கிலம் பயின்றார். யாழ்பாணம் வட்டுக்கோட்டை பல்கலைக்கல்லூரியில் கணிதம், மெய்யியல், வானவியல், அறிவியல் கற்றார். கோப்பாய் சக்தி வித்யாசாலையில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ‘நீதிநெறி விளக்கம்’ நூலை 1853-ல் பதிப்பித்து வெளியிட்டார். இதன்மூலம், தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி என்ற பெருமை பெற்றார். புத்தகங்கள் வெளியிடுவதில் இளம் பருவத்திலேயே இவர் கொண்டிருந்த ஆர்வம்தான் தமிழ் மக்களுக்கு பல அரிய நூல்களைப் பெற்றுத் தந்தது.

l யாழ்ப்பாணம் மத்திய கல்லூரித் தலைவர் பீட்டர் பெர்ஸிவல், தமிழகத்தில் நடத்திய ‘தினவர்த்தமானி’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, சென்னை வந்தார். சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் பணிபுரிந்தார். பல ஆங்கிலேயர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். 1858-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.ஏ. பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.

l அரசு வரவு செலவுக் கணக்குச் சாலையில் கணக்கு ஆய்வாளராகச் சேர்ந்தார். விரைவில் துறைத் தலைமை அதிகாரியானார். 1871-ல் சட்டப் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1884-ல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1895-ல் ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்றார்.

l அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவரை, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தளவாய் பொறுப்பை ஏற்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. தமிழ் நூல்களை அச்சிடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்து, கும்பகோணம் கருப்பூரில் குடியேறினார்.

l l வழக்காடுவதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றை முழு மூச்சாக பதிப்பித்தார். பண்டைய தமிழ் ஏடுகளைத் தேடி, தமிழகம் முழுவதும் சுற்றினார். சேதமடைந்த ஏடுகளை மிக கவனமாகப் பிரித்து, பிரதி எடுத்துப் பதிப்பித்தார்.

l மிகவும் சிரமப்பட்டு தொல்காப்பியப் பொருளதிகாரச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்தார். அதை சரிபார்த்து, அச்சிட்டு தமிழகம் முழுவதும் கிடைக்கச் செய்தார். இந்த அரிய பணியை தமிழ் அறிஞர்கள் வியந்து பாராட்டினர்.

l வீரசோழியம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, இலக்கண விளக்கம் உட்பட பல நூல்களைப் பதிப்பித்தார். கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், வசன சூளாமணி, நட்சத்திர மாலை உட்பட பல நூல்களைப் படைத்தார்.

l தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான இடத்தையும், நீடித்த புகழையும் பெற்றவர். தமிழ்ச் செவ்வியல் நூற்பதிப்பு வரலாற்றில் புதிய தடத்தை உருவாக்கியவர். ‘செந்தமிழ்ச் செம்மல்’, ‘தமிழ் நூற்பதிப்புப் பணியின் தலைமகன்’ என்று பாராட்டப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை 69-வது வயதில் (1901) மறைந்தார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/சிவைதாமோதரம்-பிள்ளை-10/article7645154.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.