Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறை அரசியலும் மிதவாதிகளும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை அரசியலும் மிதவாதிகளும் - யதீந்திரா

ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள் சாத்வீக (வன்முறை தழுவாத) மற்றும் வன்முறை (ஆயுதம் தாங்கிய) ஆகிய இருவேறுபட்ட வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டிருப்பதே வரலாறு. அந்த வகையில் தமிழர் உரிமைசார் அரசியல் போக்கிலும் மேற்படி இருவேறுபட்ட வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியிலிருந்தே இளைஞர்கள் வன்முறையை நோக்கி பயணித்ததாக ஒரு கருத்துண்டு. ஆனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். அன்றிருந்த மிதவாத தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தை உச்சளவில் முன்னெடுக்கும் ஆற்றலற்றவர்களாக இருந்த நிலையிலேயே, மிதவாதிகள் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் வன்முறை அரசியலை நாடினர். இதன் விளைவாகவே பல்வேறு பெயர்களுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கு இயலுமானவாறு ஆயுத அமைப்புக்களை உருவாக்கி இயங்கினர். அன்றைய சூழலில் 37 ஆயுத அமைப்புக்கள் இயங்கியதாக ஒரு தகவலுண்டு. ஆனால் சிலர் 32 என்று பதிவு செய்திருக்கின்றனர்.

இவ்வாறு பல இயக்கங்கள் உருவாகிய போதும், அவற்றில் ஐந்து அமைப்புக்களே அளவில் பெரியதாகவும், அதேவேளை மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவையாகவும் இருந்தன. எனினும் 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவை வன்முறை அரசியலை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டன. இதன் மூலம் அதுவரை தாங்கள் கடைப்பிடித்துவந்த தனிநாடு என்னும் கொள்கையை கைவிட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு தீர்விற்காக போராடுவதென்னும் நிலைப்பாட்டை மேற்படி அமைப்புக்கள் சுவீகரித்துக்கொண்டன.

இதில் பிரதான இயக்கங்களுள் ஒன்றான க.வே.பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் அமைப்பு, பிரபாகரனின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு புலிகளுடன் ஐக்கியமாகியது. எனினும் ஈரோஸ் அமைப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பாலகுமாரனின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு வெளியேறியவர்களில் ஒரு பிரிவினர் ஜனநாயக நீரோட்டத்திலும் இணைந்து கொண்டனர். இவ்வாறு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட அனைத்து போராட்ட இயக்கங்களையும் விடுதலைப் புலிகள் தங்களின் எதிரிகளாகவே கருதினர். பிரபாகரனை பொறுத்தவரையில் தமிழீழத்திற்கு மாறாக சிந்திப்பவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்னும் புரிதலை கொண்டிருந்தார்.

இந்த பின்னணியில்தான் புலிகள் ஏனைய அமைப்புக்களை அழித்தொழிப்பதில் தொடர்ந்தும் கரிசனை கொண்டிருந்தனர். புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பும் நோக்கிலேயே ஏனைய அமைப்புக்களும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர். எனவே இக்காலத்தில் புலிகளுக்கும் ஏனைய ஆயுத இயக்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் என்பவை பிரபாகரனின் இப்புரிதலின் விளைவாக நிகழ்ந்தவையாகும். எனினும் இயக்கங்களது செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அதற்கான பொது மன்னிப்பை கோரவேண்டிய கடப்பாடு அனைத்து அமைப்புக்களுக்கும் உண்டு.

ஆனால், பிரபா - ரணில் உடன்பாடு ஏற்பட்ட பின்னணியில் தமிழர் அரசியல் அரங்கிற்குள் தலைகாட்டிய புதிய விடயம்தான் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகும். அதுவரை புலிகளுக்கு அஞ்சி தங்களை தற்காத்துக்கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்திவந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், அடைக்கலநாதன் மற்றும் இவர்களளவில் சவாலான நபராக இல்லாவிட்டாலும் கூட, புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவரான இரா.சம்பந்தன் ஆகியோர் அனைவரையும் புலிகளே வலிந்து அங்கீகரிக்கும் நிலைமை ஏற்பட்டது. அதுவரை எதிரும் புதிருமாக இருந்தவர்கள் அனைவரும் பிரபாகரனுடன் கலந்துரையாடுவதாக புகைப்படம் பிரசுரமான போது, அது மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் பார்க்கப்பட்டது. எனினும் புலிகள் கூட்டமைப்பை ஒரு சுயாதீனமான அரசியல் அமைப்பாக இயங்க அனுமதித்திருக்கவில்லை. அது பற்றி விவாதிப்பதற்கான இடம் இதுவல்ல. ஆனால் அன்றைய சூழலில் புலிகள் மிகவும் வலுவாக இருந்த போதிலும் கூட, அனைத்து தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவை இருந்திருக்கிறது என்பதையே இங்கு நோக்க வேண்டும். புலிகளது மேலாதிக்கத்தின் கீழ் விடயங்கள் இடம்பெற்றபோது, வன்முறையாளர்கள் மிதவாதிகள் என்னும் பிரிவுகள் குறித்தும் எவரும் சிந்திக்கவில்லை. ஆனால் புலிகளது அழிவிற்கு பின்னர் ஏன் இப்படியான விவாதங்கள் இடம்பெற்றன என்பதே இன்று பலரதும் கேள்வியாக இருக்கிறது.

இன்று கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளில் மூன்று கட்சிகள் ஒரு காலத்தில் ஆயுத வழிமுறையில் நம்பிக்கைவைத்திருந்து, பின்னர் ஜனநாயக நீரோட்டத்துடன் கலந்த அமைப்புக்களாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வன்முறை அரசியல் மீது நம்பிக்கை கொள்பவர்கள் பின்னர் தங்களது வழிமுறை புதிய நிலைமைகளுக்கு பொருத்தமற்றவை என்பதை உணர்ந்துகொள்ளும்போது தங்கள் அரசியல் வழிமுறையை மாற்றிக்கொள்வதுண்டு. இது உரிமைசார் அரசியல் போராட்டங்களில் சாதாரணமாக நிகழ்பவையாகும். ஓர் அமைப்பு, தன்னுடைய வன்முறைசார் வழிமுறையை கைவிட்டதன் பின்னர், அந்த அமைப்பு முற்றிலும் ஜனநாயக மரபிற்குரிய அமைப்பாகும். எனவே அந்த வகையில் இன்று கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகியவற்றை எவருமே வன்முறையாளர்கள் என்று குறிப்பிட முடியாது. அவ்வாறு குறிப்பிடுவது ஒரு முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையாகவும் அமையாது. இந்த இடத்தில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை அரசியல் குறித்தும் சில விடயங்களை பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

1960களில் உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் தலைதூக்குகின்றன. இது தங்களுடைய சூழலில் தாங்கள் எதிர்கொள்கின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டுமென்னும் முனைப்பில் இருந்த பலருக்கும் உத்வேகமளிக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் இலங்கையிலும் 1970களில் ஆயுதப் போராட்டம் குறித்த எண்ணங்கள் கருக்கொள்கின்றன. அதுவரை தமிழரசு கட்சியின் மேடைப் பேச்சுக்களில் கட்டுண்டு கிடந்த பல இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்திற்கான அமைப்பு வடிவகள் குறித்தும், பயிற்சிகள் குறித்தும் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். பல நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு அமைப்புக்களிலும் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு இணைந்து கொண்டவர்கள் எவருமே வேலை வெட்டியில்லாமல் இணைந்து கொள்ளவில்லை. ஒரு விடுதலைக்கான தாகத்துடன்தான் தங்களை இணைத்துக் கொண்டனர். அன்றைய சூழலில் இயக்கங்களோடு தங்களை பிணைத்துக் கொண்டவர்கள் அனைவரும், தங்களை முழுமையாகவே அர்ப்பணிக்கும் ஆற்றலுள்ளவர்களாகவே இருந்தனர்.

87 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து ஏனைய இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட போதும், பிரபாகரன் மட்டும் தன்னால் தனித்து இயங்க முடியுமென்னும் முடிவை எடுத்தார். பின்னர் இடம்பெற்றவைகளை மக்கள் அறிவார்கள். தமிழரின் இதுவரையான அரசியல் இயங்குநிலையில் அதிகமான காலப்பகுதியை கையாண்டவராக பிரபாகரனே இருக்கிறார். பிரபாகரனது செயற்பாடுகளால் தமிழ் மக்கள் ஒரு ஆக்கபூர்வமான அடைவை பெற முடியவில்லை. இங்கு ஒரு விடயத்தை அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது, 90களுக்கு முன்னரும் சரி 90களுக்கு பின்னரும் சரி வன்முறை அரசியல் நல்ல வாய்ப்புக்களை கொண்டுவராமலில்லை.

1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தியதில் இளைஞர்களின் வன்முறை அரசியலுக்கே பிரதான பங்குண்டு. இன்றும் மாகாணசபை என்று ஒன்றிருப்பதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே காரணமாகும். அந்த வகையில் நோக்கினால் மாகாணசபை என்பதே வன்முறையால் இலங்கைக்கு கிடைத்த ஒன்றுதான். இதன் பின்னர் பிரபாகரனது காலத்திலும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்காமலில்லை. சந்திரிக்கா 13வது திருத்தச்சட்டத்திற்கும் அப்பால் சென்று ஒரு தீர்வை காண்பதற்கு தயாராக இருந்தார். இதன் பின்னர் சர்வதேசத்தின் அனுசரணையில் ஒரு நல்ல வாய்ப்பு கதவைத் தட்டியது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம், வன்முறை அரசியல் வாய்ப்புகளை கொண்டு வந்தது. ஆனால் அவை முறையாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. பிரபாகரனது இராணுவ அணுகுமுறை தனியான ஆய்வுக்குரிய ஒன்றாகும். ஒரு பத்தி கட்டுரை என்னும் வகையில் அதிக விடயங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் பிரபாகரன் மீதுள்ள விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரபாகரனது வழிகாட்டலில் மரணமடைந்த இளைஞர்கள் யுவதிகளை வேலை வெட்டியில்லாமல் இறந்து போனவர்கள், அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எவரும் கூறிவிடுதல் சரியான ஒன்றல்ல. புலிகள் மட்டுமன்றி ஏனைய அனைத்து இயக்கங்களுக்காகவும் மரணித்த ஒவ்வொருவரும், ஓர் உயர்ந்த இலட்சியமொன்றை மனம்கொண்டே இறந்து போயினர். அந்த லட்சியம் சரியானதா அல்லது தவறானதா என்னும் அரசியல் விவாதங்களை ஒரு புறமாக வைத்துவிட்டு நோக்கினால், தாங்கள் நம்பிய ஒன்றுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் ஆற்றலும், நெஞ்சுரமும் அவர்களிடமிருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அப்படியான அர்ப்பணிப்பும், நெஞ்சுரமும் எத்தனை மிதவாத தலைவர்களிடம் இருந்தது?

இந்த இடத்தில் புலிகள் அமைப்பின் தற்கொலை பிரிவின் முதலாவது பெண் அங்கத்தவரான அங்கயற்கண்ணி பற்றி நான் படித்த தகவலொன்றை பதிவுசெய்வது பொருத்தமென்று கருதுகிறேன். அங்கயற்கண்ணி தாக்குதலுக்கு செல்வதற்கு முன்னர் தன்னுடைய தாயாருக்கு ஒரு கடிதத்தை அனுப்புகின்றார். அதில் - என்னுடைய இறப்பு நல்லூர் கோவில் திருவிழாக் காலத்தில் இடம்பெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன் - ஏனெனில் அப்போதுதான் என்னுடைய தாயாரிடம் கோவில் திருவிழாவில் கச்சான் கொட்டை விற்ற பணம் எஞ்சியிருக்கும். அவரால் எனது இறப்பை நினைவு கூர்ந்து என்னுடைய நண்பிகளுக்கு உணவு கொடுக்க முடியும். இதனை இந்த இடத்தில் குறிப்பிடுவதன் மூலம் நான் தற்கொலை தாக்குதலை சரியென்று கூற முற்படவில்லை. அது உலகளவில் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும் ஒன்று. என்னுடைய கருத்தும் அதுதான். ஆனால் இப்படியானவர்களை வேலை வெட்டியில்லாமல் இறந்தவர்கள் என்று எவரும் கூறிவிட முடியாது. இன்று இயக்கங்களில் இருந்தவர்களை வன்முறையாளர்கள் என்று சாதாரணமாக சொல்லும் போது, அப்படியானவர்கள் வன்முறையை நாடுவதற்கும், அதுதான் ஒரேயோரு வழியென்று நம்பியதற்கும் பொறுப்பானவர்கள் யார்?

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்த போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அது முன்வைக்கப்பட்டது? அதற்காக மிதவாத தலைவர்களிடம் இருந்த வேலைத் திட்டம் என்ன? ஒரு மாபெரும் சாத்வீக போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பும் நெஞ்சுரமும் அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்த மிதவாத தலைவர்களிடம் இருந்திருப்பின், இளைஞர்கள் முன்னால் வன்முறை மட்டுமே ஒரேயோரு தெரிவாக இருந்திருக்காதல்லவா! ஆனால் தாங்கள் முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை இளைஞர்கள் ஆயுத வழியில் அடையலாமென்று நம்பிய போது, அதனை ஊக்குவிக்கும் வகையிலேயே அன்றிருந்த மிதவாத தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இன்று, தமிழர்கள் அனுபவங்கள் என்னும் ஆசானின் துணையுடன் அரசியலை கையாளவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இன்றிருக்கும் நிகழ்காலம் என்பது கடந்தகாலத்தின் விளைவாகும். அன்றைய சூழலில் அரசியலை கையாண்ட அனைவருக்கும் இதில் பங்குண்டு. எனவே அவர் - இவர் என்னும் தேவையற்ற பாகுபாடுகளை துறந்து அனைவரும் ஓரணியில், ஓர் இலக்கிற்காக நிற்க வேண்டிய காலமிது.

இன்றைய சூழலையும், வெறும் வரட்டு கௌரவங்களாலும், தன்முனைப்பாலும் இழந்து போனால், தந்தை செல்வா அன்றுரைத்த கூற்றை, மீண்டும் உச்சரித்துக் கொள்வதைத் தவிர வேறொரு தெரிவு இருக்கப் போவதில்லை. அது - தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=9df94183-a686-40d9-944e-62ec9a9f4a4e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.