Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அரசியல் கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வந்திருக்கும் ISIS

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச அரசியல் கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வந்திருக்கும் ISIS - சாந்தி சச்சிதானந்தம்:-
 
 

 

 

இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham)  என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். சில ஆயிரம் படை வீரர்கள் கொண்டதொரு சிறு குழுவாகவே இது கருதப்பட்டிருந்தது. ஆனால் இன்று வட சிரியா தொடங்கி ஈராக்கின் பாக்தாத் நகர் வரை பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறும் பெரும்படையாக இது மாறி விட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத்தில் சுல்தான்களால் ஆளப்பட்ட caliphate  போன்ற ஆட்சியினை மீளக் கொண்டு வருவதே தமது நோக்கம் என இவ்வமைப்பு பிரகடனம் செய்திருக்கின்றது. அதென்ன மந்திரமோ மாயமோ இதன் படைகள் நெருங்கி வருவதைக் கண்டாலே அமெரிக்கர்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு பல நவீன ரக அமெரிக்க ஆயுதங்களை ஏந்தியிருக்கும் ஈராக்கிய படையினரெல்லாம் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு தலைதெறிக்க ஓடுகின்றனராம். சென்றவிடமெல்லாம் இவ்வாறு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு வெற்றிநடை போடுகின்றது ஐசிஸ் அல்லது இப்பொழுது வெறுமனே இஸ்லாமிய அரசு என அழைக்கப்படும் ISIS.

 

அமெரிக்கா ஈராக் யுத்தத்தினை ஆரம்பித்த காலத்தில்  அது யுத்தங்களுக்கெல்லாம் தாய் யுத்தம் (mother of all battles)  ஆகப் போகின்றது என அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன்  விபரித்தார். அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தினைத்தான் குறிப்பிடுகின்றாராக்கும் என எல்லோரும் நினைத்து விட்டார்கள். அன்று அமெரிக்கப் படைகளின் முன்பு ஈராக் கடகடவென்று சரிந்தபோது எங்கு அவர் குறிப்பிட்ட (mother of all battles) எனவும் வினவினர். ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த யுத்தத்துக்கெல்லாம் யுத்தம் அந்த நடவடிக்கையின் பயனாக இனி வரப்போகின்ற யுத்தமே என உணரவில்லை. அந்த யுத்தத்தினைத்தான் அமெரிக்கா முன்றலில் ISIS கொண்டு வந்திருக்கின்றது. ISISஸின் எழுச்சி தத்தமது சுயநலன்களை முன்வைத்து மேற்கு நாடுகளின் சக்திகள் ஆடும் விளையாட்டுக்களின் விளைவை அவற்றுக்கே உணர்த்தும் எழுச்சியாகும். ஒரு மக்களை ஒரு சர்வாதிகார ஆட்சியின் பிடியிலிருந்து விடுவித்து ஜனநாயகத்தினை ஸ்தாபிக்க எத்தனிக்கலாம். ஆனால் அந்த நடவடிக்கை குறித்த நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் அவற்றின் அரசியல் சமூகக் கட்டமைப்புக்களில் அடிப்படையான மாற்றங்களைக்கொண்டு வரும் மாற்றங்களாக இருக்க வேண்டுமே தவிர தமக்கு சாதகமான ஆட்சியாளர்களைக்கொண்டு வரும் மாற்றங்களாக இருக்க முடியாது. ஒருபுறம் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையின் சின்னமாக விளங்குகின்ற சவூதி ஆட்சியாளர்களைத் தக்க வைத்துக்கொண்டு, இன்னொருபுறம் மத்திய கிழக்கில் தனது அதிகார மையமாக இருக்கக்கூடிய இஸ்ரேலை நிலைநிறுத்திக்கொண்டு அதே சமயம் ஈராக்கிலும் சிரியாவிலும் மட்டும் ஜனநாயகத்தைக்கொண்டு வர எத்தனித்த பொய்யிற்குப் பதிலடியாக இன்று உருவாகியிருக்கின்றது ISIS. தாம் ஈராக்கின் மீது படையெடுத்ததன் தவறினை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒத்துக்கொண்டிருக்கின்றது அமெரிக்கா. ஒசாமா பின் லேடனைக் கொன்றொழித்தது கூட பயனற்ற செயலென்று தெரிந்து விட்டது. ஏனெனில் ஐஎஸ்ஸின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், ஈராக் யுத்தம் மற்றும் அல்கய்தா அமைப்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு.

 

சுன்னி முஸ்லிம்கள் அடங்கிய இந்த குழு 1999ம் ஆண்டு அபூ முஸாப் அல் சர்காவி  என்பவரால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஜிகாத் படையாக ஆரம்பிக்கப்பட்டது. அனால் இவற்றின் படையினர் அமெரிக்க உளவுப் படையினால் பயிற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டு இரண்டாவது ஈராக் படையnடுப்பின் பின்னர் ஒசாமா பின் லேடனுக்கு விசுவாசமாகி ஈராக்கில் அல்கய்தா என்கின்ற பெயருடன் இயங்கியது. சதாம் ஹுசெய்னின் வீழ்ச்சிக்குப் பின்பு அந்நாட்டில் சுன்னி முஸ்லிம்கள் பாதிக்கப்படவே அங்கு நிலைகொண்டு ஈராக்கில் இயங்கி வந்த பல்வேறு சுன்னி குழுக்களையும் இணைத்து 2006ம் ஆண்டு ஐசிஸாகப் பரிணாம வளர்ச்சி கண்டது. அதன் ஆரம்பகால தலைவர்கள் யுத்தத்தில் கொல்லப்படவே 2013ம் ஆண்டு அபூபக்கர் அல் பாக்தாதி தலைமைப் பதவியைக் கைப்பற்றினார். இதன்பின்னர் இக்குழுவின் நடவடிக்கைகள் கணிசமாக மாற்றமடைந்தன. வெறுமனே எதிர்ப்புக் குழுவாக மட்டும் இயங்காமல் ஓர் இஸ்லாமிய அரசை ஸ்தாபிக்கும் நோக்குடன் படைகளுடன் முன்னேறும் இராணுவமாகத் தன்னை மாற்றிக்கொண்டது. அதன் பின்னர் அல்கய்தா அமைப்புக் கூட இவ்வமைப்பின் பயங்கரவாத நிலைப்பாட்டினையும்; அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் கண்டித்து அதனிலிருந்து பிரிந்து விட்டது. அல் கய்தா பயங்கரவாதம் என அதனை அழிக்கத் திரிந்த அமெரிக்காவிற்கு இப்பொழுது ஐஎஸ் பயங்கரவாதம் பதிலுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. வெட்ட வெட்டத் தழைக்கும் இயக்கமாக இஸ்லாமிய இயக்கம் விசுவரூபமாக வளர்ந்திருக்கின்றது. என்னதான் ஆயுதங்கள் கொண்ட பாரிய பொருளாதார சக்தியாக இருந்தும் சாதாரண மக்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்னும் பாடத்தைப் புகட்டியிருக்கின்றது இது.

 

ஆயினும்கூட அமெரிக்கா வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. திரும்பவும் மேற்கு நாடுகளின் கூட்டுப்படைகளுடன்  ISISஸின் மீது விமானத் தாக்குதலினை ஆரம்பித்திருக்கின்றது. ISIS நிலை கொண்டுள்ளதோ மக்கள் செறிந்த பிரதேசங்கள். இங்கு எவ்வளவுதான் அச்சொட்டாக தாக்குதல் (precision bombing)  நடத்தினாலும் உயிரழிவுகளையும் சொத்து சேதங்களையும் தவிர்க்க இயலாது. அந்த அழிவுகளை எதிர்கொண்ட மக்கள் என்ன செய்வார்கள்? ISISஸினை ஆதரிக்கத் தொடங்குவார்கள். இன்றோ பலஸ்தீனத்திலும், லெபனானிலும் பாகிஸ்தானிலும் ஏன் இந்தியாவிலும்கூட அதற்கு ஆதரவுத் தளங்கள் உருவாகியிருக்கின்றன. மேற்கு நாடுகள் தாக்குதலை ஆரம்பித்த காரணத்தினால் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் ஆதரவாளர்கள் திரண்டு ISIS படைகளில் சேருவதற்கு வருகின்றார்களாம். ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு சவால் கொடுக்கக்கூடிய அமைப்பே அல்ல என ஐஎஸ் விளக்கியதன் பலனாக பலஸ்தீனத்தில் வைத்தியர்கள் போன்ற தொழில் செய்யும் வர்க்கத்தினர் கூட இதன் தற்கொலைக் குண்டுதாரிகளாக இணைந்திருக்கின்றனர் என செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும்  மேற்கு நாடுகளிலிருந்தும் நிதிகளும் ஆட்படைகளும் திரட்டப்படுகின்றன. இப்பிரச்சினை வெறுமனே விமானத் தாக்குதலினால் தீர்க்கப்படும் பிரச்சினையா என்ன?

 

ஆனால் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் அரபு ஆளும் வர்க்கங்களுக்கு தூக்குக் கயிறாகும் இன்னும் காத்திரமான பிரச்சினைகளை படிப்படியாக ISIS தூக்கிப் போட்டிருக்கின்றது. அதாவது, மெக்காவிலுள்ள புனித காபாவினை அழிப்போம் என அது பிரகடனம் செய்திருக்கின்றது. 'முஸ்லிம்கள் வேறு சமயங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கல்லை வணங்கத்தான் ஹஜ் யாத்திரையில் செல்கின்றார்கள், அல்லாவை வணங்கவல்ல' என அதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றது. எப்பொழுதும் வளர்ந்து வரும் புதிய மதங்கள் பழைய சடங்குகளை தனதாக சுவீகரித்துக் கொள்வதன் மூலமாகத்தான் தமக்கான மக்களின் அதரவினைப் படிப்படியாகப் பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக டிசம்பர் 25ந்தேதியானது ஆதிகாலம் முதல் பருவகால மாற்றத்திற்குக் காரணமான சூரியனின் பாதை மாற்றத்தினைக் குறிக்கும் பண்டிகையாக உரோம சாம்ராஜ்யம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. கிறிஸ்தவர்கள் அதனை இயேசுவின் பிறப்புக்கும் உரிய பண்டிகையாக அதனை மாற்றி மெல்ல மெல்ல கிறிஸ்தவ மயமாக்கினர். அதே போலவே காபாவானது முன்னர் அப்பிரதேசத்தில் கைக்கொள்ளப்பட்டு வந்த வழிபாட்டு முறையாகும். நபிகள் நாயகம் அவர்கள் மெக்காவினைக் கைப்பற்றியபோது அங்கிருந்த வழிபாட்டுச் சிலைகளை அகற்றக் கட்டளையிட்டாலும் காபாவினை வழிபடும் பாரம்பரியத்தினை அனுமதித்தார். இன்று இது சவூதி அரேபியா இஸ்லாமிய உலகில் தலைமையேற்கும் தகுதியை அந்நாட்டிற்குக் கொடுத்திருக்கின்றது. காபாவினை அழித்தால் அது சவூதியின் அதிகார மையத்திற்குப் பெரும் அடியாக அமைந்து விடும். இதனை ஏதோவொரு சிறு குழு சொல்கின்றது எனக் கவனிக்காமலும் இருக்க முடியவில்லை. சவூதி அரேபியாவிலிருந்தும் ஏராளமான ஆட்படைகள் ஐஎஸ்ஸுடன் இணைந்து போராடுகின்றனவாம். ஈராக் வரை வந்த இப்படைகள் சவூதிக்கு வரும் நாளும் தொலைவில் இருக்க முடியாது. இப்பொழுதெல்லாம் பாழாய்ப்போன ஆயுதப்படைகளைக் கூட நம்ப முடிவதில்லையே. எவ்வளவு பயிற்சி பெற்றாலும் அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிப்போனால் என்ன செய்வது?  

 

இப்பயத்தின் எதிரோலியாகவே இம்முறை ஹஜ் பக்தர்களுக்காக மெக்காவின் தலைமை முப்தீ ஆற்றிய தனது பிரதான உரையில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கெதிராக சகல முஸ்லிம்களும் போராட வேண்டும் என முதன் முதலாக அழைத்திருக்கின்றார். கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்களுக்கு அவர் விடுத்த பகிரங்க அழைப்பு இது. இதுவரைகாலமும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழுக்களை அவர்களின் ஆட்சியாளர்களுக்கெதிராகத் திரும்ப வைக்கப் பயிற்சி கொடுத்த வளர்த்தபோதெல்லாம் பார்க்காததுபோல இருந்துவிட்டு இன்றுதான் அதன் விளைவை உணர ஆரம்பித்திருக்கின்றனர் இவ்வர்க்கத்தினர். எப்படி இருந்தும் சர்வதேச அரசியல் செய்யப்படுகின்ற முறைகளையும் அதற்காக எற்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரக் கட்டமைப்புக்களையும் மாற்றும் ஒரு போக்கே ஐஎஸ்ஸின் நுழைவு எனலாம். மனித வரலாற்றின் ஒரு சுவாரசிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.  

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

 

anusha.sachithanandam@gmail.com

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112523/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.