Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்"

யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, சமூக, அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார். தற்போது நார்வேயில் வசித்துவரும் ஷெயபாலன், நார்வே அரசு எடுத்துவரும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதான முயற்சிகளில் சிலகாலம் ஆலோசகராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ‘சூரியனோடு பேசுதல்’ (1986) ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ (1986), ‘நமக்கென்றொரு புல்வெளி’ (1987), ‘பெருந்தொகை’ (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பும் இவரது சில நூல்கள். சென்றமாதம் இந்தியா வந்திருந்த வ.ஐ.ச. ஷெயபாலனை தீராநதிக்காகச் சந்தித்தோம்.

தீராநதி: இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு இருக்க வேண்டுமென்று தொடர்ந்து நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

வ. ஜ. ச. ஜெயபாலன: மிக முக்கியமான காரணம், இந்தியாவின் நலன்களும் இலங்கைத் தமிழர்களின் நலன்களும் ஒன்றையன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதுதான். இரண்டாவது காரணம், ஒரு கவிஞன் என்ற வகையில், ஈழத்தை என்னுடைய அரசியல் தாயகமாகவும் இந்தியாவை என்னுடைய கலாசார தாயகமாகவும் கொள்கிறேன்; நான் இந்தியாவை நேசிக்கிறேன் என்பதுதான். உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், எங்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் இந்தியாவின் நலனுக்காகவும் நான் சில விஷயங்களை இந்த நேர்காணலில் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, இந்திய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிராக அரங்கேறி வரும் உலக அரசியல் சதிகள் பற்றி. இதற்கு தீராநதி அனுமதிக்குமா?

தீராநதி: தாராளமாக நீங்கள் சொல்ல விரும்புபவற்றைச் சொல்லலாம்.

வ. ஐ. ச. ஜெயபாலன்: நன்றி. இந்தியா, தற்போது பாகிஸ்தான் தொடர்பாக கொண்டிருக்கும் வெளியுறவு கொள்கைகளையும், அந்நாடு தொடர்பாக உருவாக்கப்பட்ட வெளிவிவகார அமைப்புகளையும்தான் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் விஷயத்திலும் பயன்படுத்துகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கியமான தவறாக நான் கருதுகிறேன். இந்திராகாந்தி அம்மையார் இந்தியாவின் பிரதமராக இருந்த காலகட்டத்தில், தென்னாசியா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கைகள் நீண்டகால நோக்கில் இந்தியாவின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. பத்து விரல்களாலும் பத்து வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்க முடியாது. ஆனால், பிடிக்கக் கூடியவற்றைப் பிடிக்கவேண்டும் என்னும் அடிப்படையில் இந்திராகாந்தி செயல்பட்டார். அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி செழுமைப்படுத்தினார். தென்கிழக்காசிய நண்பர்களை அவர் எப்போதும் கைவிட்டதில்லை.

இலங்கையைப் பொறுத்து உறுதியான பாடங்களை இந்திராகாந்தி கற்றிருந்தார். இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடுவதற்குப் பதிலாக இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்தில் அவருக்கு இருந்தது. எனவேதான், தமிழ்நாட்டின் அனுமதியோ சம்மதமோ இன்றி கட்சத்தீவை அவர் இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் இலங்கை நடந்துகொள்ளவில்லை. கட்சத்தீவை விட்டுக் கொடுத்தும், இலங்கையை இந்திராகாந்தியால் வெற்றிபெற முடியவில்லை. பங்களாதேஷ§ம் பாகிஸ்தானும் மோதிக்கொண்டிருந்த, பங்களாதேஷ் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், இந்தியா, பங்களாதேஷை விடுதலை வீரர்களாக அங்கீகரித்து. ஆதரித்தது. ஆனால், இலங்கை ராணுவரீதியாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததுடன் பாகிஸ்தானுக்காக தனது தளங்களைத் திறந்துவிட்டது.

இலங்கை, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்கு அவர்களுக்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன. இலங்கைச் சிங்கள மக்களைப் பொறுத்தவரைக்கும், இந்தியா குறித்து, ஒரு பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற அச்சத்துடனேயே அவர்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள். எனவே, இந்தியாவின் எதிரிகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்வது, இந்தியாவிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள உதவும் என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா இந்நாடுகளுடன் உள்ள நெருக்கமான உறவுகளின் மூலம்தான் இந்தியாவை எதிர்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். இந்திராகாந்தியின் காலகட்டத்தில் பண்டார நாயக்காவின் குடும்பம் சீனா மற்றும் அமெக்காவுடனான உறவு மூலமாக இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை வைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) அமெரிக்காவுடனான உறவு மூலமாக இந்தியா தன்னைப் பாதிக்காத வகையில் வைத்திருக்கவேண்டும் என்னும் கருத்தை வைத்திருந்தது. இப்போதும் இந்த அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆக, இலங்கைச் சிங்கள கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா இந்நாடுகளுடனான உறவைப் பேணவே அவைகள் விரும்புகின்றன.

தீராநதி: இலங்கை சிங்களக் கட்சிகள் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் காரணமாக ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறதா, அதாவது அச்சுறுத்தல்கள் இந்தியாவிடமிருந்து வந்திருக்கிறதா?

வ. ஐ. ச. ஜெயபாலன்: சமீப நூற்றாண்டுகளில் இல்லை. ஆனால், வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த அரசுகள், இலங்கை மீது படையெடுத்து, அந்நாட்டைக் கைப்பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, சோழர்கள் பலம்பெற்றிருந்த காலங்களில் பலமுறை இலங்கை அவர்களின் ஆட்சிக்கு கீழே இருந்திருப்பதைப் பார்க்கிறோம். இதனடிப்படையில் வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் உறுதிப்பட்ட அச்சம் சிங்களக் கட்சிகளுடையது.

தீராநதி: இப்படியரு அச்சம் இருக்கும்பட்சத்தில் இந்திய அமைதிப்படையை அவர்கள் அனுமதித்ததை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?

வ. ஜ. ச. ஜெயபாலன்: இப்போது இந்தியாவுடனான இலங்கையின் உறவு என்பது, தமிழர்களை ஒடுக்குவதற்கு இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்ததும் இந்தியாவை வெளியேற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான். 1987இல் ஜெயவர்த்தனேயின் கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது. இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது, உண்மையில் சிங்களவர்களிடம் அச்சம் இருந்தது. அப்போது ஜெயவர்த்தனே சொன்னார்: “என்னுடைய அரசியல் அனுபவத்தின் வயது, ராஜீவ்காந்தியின் வயதைவிட அதிகம்’’. இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிங்களவர்கள் கவலைப்படத் தேவையில்லை; நமது தேவைகளுக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை வெளியேற்ற என்னால் முடியும் என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் செய்தி.

ஆனால், இந்தத் தந்திரம் இந்திராகாந்தி அம்மையார் காலகட்டத்தில் செல்லுபடியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் போரில் இலங்கை நடந்துகொண்ட விதத்திலிருந்து, இந்திராகாந்தி ஒரு தெளிவான பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கையை அவர் மீள் ஆய்வு செய்தார். இலங்கையிலுள்ள தமிழர்களும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களும் இந்தியாவின் நண்பர்கள் என்ற அடிப்படையில் அவர் மாற்றியமைத்த இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகள் அமைந்திருந்தன. இதற்கு, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினையே, அடிப்படையில் இந்தியா தொடர்பானதுதான் என்பது முக்கியக் காரணம்.

இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்களில் வாழ்கிறார்கள். தமிழ் முஸ்லிம்கள் எல்லாப் பகுதிகளிலும் சிதறி வாழ்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுத்தால், அவர்கள் இந்தியா பக்கம் போய்விடுவார்கள், தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தின் அடிப்படையில்தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கத் தயங்குகிறார்கள். தமிழர்களை எதிரியாகக் கருதுகிறார்கள். இதனை இந்திராகாந்தி மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தார். இதனடிப்படையில்தான் இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்துக்கான அவரது ஆதரவுக் கொள்கை அமைந்திருந்தது. இலங்கையில் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான ஓர் உரிமையைப் பெறும்பொழுது, இலங்கை, இந்தியாவுக்கு எதிராகப் போகாமல் பார்த்துக்கொள்ளும் வல்லமையை அவர்கள் பெறுவார்கள் என்று அவர் கருதினார். தமிழர்கள் தனி நாடாகப் போனாலும், அவர்களது தொப்புள்கொடி உறவு இந்தியாவுடன் உள்ளதால், இந்தியா சார்பான ஒரு நாடாகத்தான் அவர்கள் இருப்பார்கள் என்பது அவரது கருத்து. இந்த நோக்கில் காய்கள் நகர்த்தப்பட்டு, பணிகள் நடந்து கொண்டிருந்த போது, துரதிஷ்டவசமாக அவரது படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில், குறிப்பாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், மிகவும் பாரதூரமான விளைவுகளை இலங்கையில் மட்டுமல்லாமல் தென்னாசியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் அதிகாரவர்க்கத்தைச் செயல்படவைத்தார் இந்திராகாந்தி. அவருக்குப் பிறகு, அரசின் தீர்மானங்களை மீறி அதிகாரிகள் செயல்படுவது நிகழ்ந்தது. குறிப்பாக, நட்வர்சிங் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் தீக்சித் இலங்கைத் தூதுவராகவும் இருந்த காலகட்டத்தில், அரசின் தீர்மானங்களுக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படுவதற்குப் பதிலாக, உளவுத்துறை அதிகாரிகளின் தீர்மானத்துக்கு ஏற்ப இந்திய அரசு செயல்பட்டது. இந்திராகாந்தியின் காலத்துக்குப் பிறகு, அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் போக்கையும் இந்தியா பின்பற்றவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திராகாந்திக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரான ராஜீவ்காந்திக்கு, அப்போது மிகவும் இளம் வயது; இளம் இரத்தம் தந்த உற்சாகத்துடனும் உறுதியுடனும், இந்தியாவை மேம்படுத்துவது தொடர்பாகவும் தென்னாசியாவில் ஒரு பிரதேச வல்லரசாக இந்தியாவை முன்னிலைப்படுத்தி மாற்றுவது தொடர்பாகவும் மிகவும் கனவுகளுடன் அவர் இருந்தார். ஆனால், அவரை நட்வர்சிங் போன்றவர்களும் தீக்சித் போன்ற அதிகாரிகளும், சரியாகச் சிந்தித்த பார்த்தசாரதியையும் வெங்கட்ராமனையும் ஓரம் கட்டி, தொடர்ச்சியாகவே பிழையாக வழிநடத்தி விட்டார்கள். இப்போது நட்வர்சிங் கையில் படிந்திருக்கும் கறை, இராக் எண்ணெய்க் கறை அல்ல; அமைதிப்படை காலத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள், மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள் இவர்களின் இரத்தக் கறைதான்.

அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை வந்த இந்திய அமைதிப்படை அமைதியை ஏற்படுத்த முடியாதபட்சத்தில் வெளியேறிச் சென்றிருப்பதுதான் முறை. மாறாக, சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தை அவர்கள் நடத்தினார்கள். இது நடந்திருக்கக் கூடாது. யாருடைய நலனுக்காக இந்திய அமைதிப்படை போராடியது? ஆயிரக்கணக்கான இந்திய சிப்பாய்கள் மரணமடைந்ததும், கை கால்களை இழந்ததும் யாருடைய நலனுக்காக?

தீராநதி: இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது, இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால், விரைவிலேயே அங்கு காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்?

வ. ஜ. ச. ஜெயபாலன்: அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, திரைமறைவு வேலைகளும் உலக அரசியல் சதிகளும்தான் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் பணம் கைமாறி இருக்கிறது. பெண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு அரண்மனைப் படுக்கையறை வரைக்கும் திறந்திருந்தது எனக்குத் தெரியும். அதற்கு கைமாறாக, அவர் இந்திய பத்திரிகைகள் இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுக்காமல் இருக்கும் வகையில் நிறைய பங்காற்றினார்.

தீராநதி: உலக அரசியல் சதி என்று எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?

வ. ஐ. ச. ஜெயபாலன்: தென்னாசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியில், உண்மையில் காய்களை நகர்த்துவது சீனாவும் அமெரிக்காவும்தான். இந்த இரண்டு நாடுகளும் நேரடியாக இந்தியாவுடன் இராணுவ ரீதியாக முரண்படாமல், அதேநேரத்தில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஓரளவு பங்களாதேஷ் போன்ற நாடுகளை தங்களுடைய அம்புகளாகப் பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், முழுமையான ஒரு கையாளாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சதுரங்கத்தையும்கூட சீனாவும் அமெரிக்காவும்தான் ஆடுகின்றன. இதில் சீனாவின் கைதான் இலங்கையில் ஓங்கியிருக்கிறது. சீனாவின் உளவுத்துறையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் இலங்கையில் பலப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வல்லரசுகளுடன் உறவு இருப்பதால்தான், பங்களாதேஷ் யுத்தத்தில் இலங்கை துணிந்து பாகிஸ்தானுக்கு உதவியது. இதனை இந்திய அறிஞர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். நேபாளம், பங்களாதேஷ் போன்ற மற்ற தென்னாசிய நாடுகளிலும் இதுமாதிரியான போக்கு நிலவுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜதந்திரிகளாக இலங்கையிலும் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் பணிபுரிகிறார்கள். அவர்கள் அங்கே பணிபுரிவது நிச்சயம் அந்தந்த நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்காக அல்ல. இந்தியா தொடர்பாகத்தான் அவர்கள் அங்கே பணிபுரிகிறார்கள். (அப்படி இலங்கையில் பணியாற்றும் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியின் வாகனம் அண்மையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. பாகிஸ்தான், இதற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது. இலங்கை, விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.)

1956இல் நேரு கொண்டு வந்த மொழிவாரி மாநில அமைப்பு தொடங்கி, இன்றைக்கு எழுதப்படாத ஒரு விதியாக இந்தியா கூட்டாட்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதுவும் நீண்டகாலமாக வேரூன்றிய கலாசார உறவுகளும் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு பலம். என்றாலும், அகில இந்தியா என்பது சீனா மாதிரி நீண்டகால அமைப்பல்ல. அது அந்நியர்கள் இணைத்ததன் அடிப்படையில் அமைந்தது. எனவே, சில நிலைமைகளைப் பாதுகாப்பதன் மூலம்தான் இந்திய ஒருமைப்பாட்டை சிதையாமல் பலமாக வைத்திருக்க முடியும். இதனைப் புரிந்துகொண்டிருக்கும் இந்தியாவின் எதிரிகள், குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும், அந்த நிலைமைகளை உடைக்க விரும்புகிறார்கள். அதில் முனைப்பாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நேரடியாகச் செயல்படாமல் ஆதரவாளர்கள் மூலமாகச் செயல்படுகிறார்கள். தொடக்கத்தில் வடஇந்திய மாநிலங்களில்தான் சீர்குலைப்பு வேலைகள் அதிகம் நடந்தன. பாகிஸ்தான், நாகலாந்து, பங்களாதேஷ், நேபாளம் எல்லைகளின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும் என்ற அடிப்படையில் இந்தச் சதிகள் திட்டமிடப்பட்டன. கட்மாண்ட் போன்ற வடமாநிலப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி தீவிரமாக இருந்தது. மேலும், ஹிந்தி மொழி பேசும் பிரதேசங்களான வடமாநிலங்கள்தான் இந்தியப் பாராளுமன்றத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அப்போது வைத்திருந்தன. எல்லா இந்திய தேசிய கட்சிகளும்கூட வடமாநிலங்களை மையப்படுத்திதான் அமைந்திருந்தன. ஆனாலும், வடஇந்திய மாநிலங்கள் கடலை எல்லையாகக் கொள்ளாமல் நிலப்பரப்பை எல்லையாகக் கொண்ட மாநிலங்கள் என்பதால், பெரிய அளவில் இந்த யுக்தி வேலை செய்யவில்லை. மேலும், சீன பாகிஸ்தானிய பகைமை காரணமாகவும் காஷ்மீர் நெருக்கடி காரணமாகவும் இந்தியப்படை வளங்கள் வடக்கே குவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்திய எதிரிகளது அணுகுமுறை இப்போது மாறியிருக்கிறது. இன்றைக்கு இந்திய எதிரிகளின் கவனம் முழுவதும் கடலை எல்லையாகக் கொண்டிருக்கும் மாநிலங்கள் பக்கம்தான். கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.

கடல் சார்ந்த மாநிலங்களைப் பொறுத்தவரைக்கும், மீனவர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூகம் என்பதை எதிரிகள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதனை இந்தியா இன்றுவரை உணர்ந்து கொள்ளவில்லை. (இந்தியாவின் பல்வேறு உள்விவகார சிந்தனைகள் பெரும்பாலும் வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கிறத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நடக்கும் பிராமணர்களுக்கும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிரச்சினையை, இலங்கைப் பிரச்னையில் தீர்க்க முனைவது மிகவும் அபத்தமானது. இங்குள்ளது போலான பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையேயான பிரச்சினை இலங்கையில் இல்லை. எங்கள் போராட்டத்தில் அங்குள்ள பிராமணர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள், இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கிடைப்பது, தமிழகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியவாதத்தை வளர்க்கும் என்ற வாதத்துக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிற தலைவர்கள் அனைவரும், தமிழர்களாக இருக்கிற அதேநேரத்தில் இந்தியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் வன்னிக்கு வந்தபோது பேசியவற்றை நீங்கள் கேட்டால் இதனை உணரமுடியும். இங்கு தமிழ் தேசியம் ஒரு வன்முறை சார்ந்த தேசியமாக வளருமாக இருந்தால், அது காவிரியில் வராத தண்ணீரிலும், இராமநாதபுர மாவட்டத்து மீனவர்களின் கண்ணீரிலும் இருந்துதான் வருமேயழிய, நிச்சயம் இலங்கையிலிருந்து ஒருபோதும் ஏற்படப்போவதில்லை.

1956ஆம் ஆண்டு நேரு செய்த அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, குறிப்பாக மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைந்த பிறகு, தொடர்ந்து சீர்திருத்தங்கள் வராவிட்டாலும்கூட, நடைமுறையில் கூட்டாட்சிப் பண்புகளை நோக்கி இந்தியா நகரத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் வடமாநில கட்சிகளால் மட்டும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்ற சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இத்தகையை ஒரு நெகிழ்வுப் போக்கும் பத்திரிகை சுதந்திரமும் நீதித்துறையின் சுயாட்சியும் இருக்கிற வரைக்கும் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சினை வருவதுக்கான வாய்ப்பு இல்லை. மேலதிகமாக இந்தியாவுக்கு இருக்கும் உள்நாட்டுப் பிரச்சினை, நதி நீர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை அமுலாக்குகிற வல்லமையை இந்திய மத்திய அரசு இழந்திருக்கிறது என்பதுதான். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய இந்திய மாநிலங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. (கடல், நதி, காற்று ஆகியவை தொடர்பான சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துகிற வல்லமையை இந்திய அரசு பெறவேண்டும். ஏனெனில், அதுதான் இந்திய அரசுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.) இந்தியாவுக்கு இருக்கிற இன்னொரு முக்கியப் பிரச்சினை காஷ்மீர். அது இந்தியாவுக்கு ஒரு புற்றுநோய் மாதிரிதான். அதன் தொடர்ச்சியானது இந்து _ முஸ்லிம் பிரச்சினை. மற்றொன்று, நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தன்னுடைய மீனவர்களைக் கொலைசெய்கிற நாட்டின் கடற்படையைப் பலப்படுத்துகிற இந்திய அரசின் செயல். இதுபோன்ற சிறுசிறு தவறுகளை உடனுடனே அவ்வப்போது கவனிக்காவிட்டால், அது பெரிய தவறுகள் நிகழக் காரணமாகிவிடும். இது எதிரிகளுக்குதான் சாதகமாகப் போய்முடியும். (இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் முன், இந்தியா தன் மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியம். இந்திய மீனவர்களின் நம்பிக்கையைப் பெற இலங்கைக் கடற்படைக்கு இந்தியா கொடுத்த கப்பலையும் ஆதரவையும் திரும்பப்பெற வேண்டும்.) ஜனநாயகக் கூட்டாட்சி அடிப்படையிலான, பத்திரிகை சுதந்திரமுள்ள இந்தியா, இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாசிய மக்களுக்கும் அவசியமான ஒரு காலம் இது.

இந்திய மாநில இனங்களில் வங்காளிகளும் தமிழர்களும் மட்டும்தான் ஒரு பல்தேசிய தன்மையுள்ள மாநில இனங்கள். இவர்கள் பலமான கடல்வழித் தொடர்புகள் கொண்ட இனங்களும்கூட. எனவே, இவர்களை அணுகுவதில் விசேஷமான அணுகுமுறை இந்திரகாந்தி காலத்தில் இருந்தது. பங்களாதேஷ் பிரச்சினையின் போது, அதனை டில்லியின் பார்வையோடு மட்டும் கையாளாமல், கல்கத்தாவில் இருந்த இடதுசாரிகளின் ஆலோசனைகளோடும்தான் அவர் கையாண்டார்; அவர்கள் எதிரணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அவர் புறக்கணிக்கவில்லை. பாராட்டத்தக்க வகையில், வங்காளிகளின் பல்தேசிய தன்மையையே தனது பலமாகக் கொள்ளும் வகையில் அவர் வங்காளத்தைக் கையாண்டிருந்தார். அதுபோல், இலங்கைத் தமிழர் போராட்டத்திலும் இந்திராகாந்தி தமிழகத்தின் ஊடாகத்தான், குறிப்பாக எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் கலந்துதான், அதனைக் கையாண்டார். அந்த நாட்களில் யாரும் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சந்தேகிக்கவும் இல்லை. இந்திராகாந்தி காலகட்டத்துக்குப் பிறகுதான், இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கிடைத்தால் தமிழகத்தில் சிக்கல் உருவாகும் என்ற கருத்து தமிழகத்தில் உள்ள சிலராலும் டில்லியிலுள்ள சிலராலும் உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் விடுதலைப் போரில், அப்போது வங்காளத்தின் தலைமையில் இருந்த சி.பி.ஐ.யும் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், அதே போன்று பல்தேசிய தன்மையுள்ள தமிழர்கள் விஷயத்தில் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரிகள் நேர்மாறாக நடந்துகொண்டார்கள். வங்காளத்தில் எடுத்த நிலைப்பாட்டை தமிழகத்தில் எடுக்கத் தவறிவிட்டார்கள். வங்காளிகளைப் போல தமிழர்களை நம்பாத போக்கு இந்திய நலன்களுக்கு எதிரான போக்கு.

ஆனால், இடதுசாரிகள் மத்தியில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிக்கிற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. தமிழகத்திலுள்ள எங்களது நண்பர்களும் இடதுசாரிகளும் ஒன்று சேர்வார்களாக இருந்தால், அது டில்லி ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்களும் விடுதலைப்புலிகளும்கூட கடந்தகாலத் தவறுகளை, சில விமரிசனங்களுக்கு ஊடாகத் திருத்திக் கொண்டு, இந்தியா தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும்.

தீராநதி: ஆனால், சோனியாகாந்தி தலைமையில் செயல்படும் இன்றைய அரசு, ராஜீவ்காந்தி படுகொலையை மறந்துவிட்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அவ்வளவு சுலபத்தில் விடுதலைப்புலிகளுடன் உறவு பாராட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

வ. ஐ. ச. ஜெயபாலன்: ராஜிவ்காந்தி கொலை ஒரு மாபெரும் தவறு என்பதை நான் மறுக்கவில்லை. இரண்டு தரப்பிலும் அனேக தவறுகளைக் கடந்த காலங்களில் இழைத்துவிட்டோம். ராஜீவ்காந்தி கொலை என்னும் மாபெரும் தவறு தொடர்பாக தமிழகத்திடமும் இந்தியாவிடமும் ஈழத் தமிழ்க் கவிஞன் என்ற முறையில் நான் மன்னிப்பு கோருகிறேன். சோனியாகாந்தி, ஒரு பெரும்தாயின் மனதோடு மன்னிப்பார், இந்தப் பிரச்சினையை அணுகுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களை மன்னித்த வகையில், சோனியாகாந்தியின் பங்களிப்பு, ஒரு காந்திய நாட்டின் பெரும்தலைவியாக, தாயாக அவரது பண்பைச் சுட்டுகிறது. அவரது காலத்தில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, ஈழத்தமிழர்களும் இந்தியாவும் கைகோர்க்கும் நாட்கள் நிச்சயம் உருவாகும்.

இந்தியா எங்களின் கலாசார தாய்நாடு. அந்த உரிமையோடு நான் கேட்பது, ஒரு நீதியான தீர்வு இலங்கையில் ஏற்படுவதுக்கு உங்களது உதவியை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான். செஞ்சோலை போன்ற, குழந்தைகளைக் கொன்ற நிகழ்வுகள் நடக்கும்போதுகூட குரல்கொடுக்காமல் மௌனமாக இருக்கும் நிலையை மாற்றிக்கொண்டு இந்தியா குரல் கொடுக்கவேண்டும்.

தீராநதி: தமிழக முதல்வராக கலைஞர் மீண்டும் பதவியேற்றுள்ளார். மத்திய அரசிலும் அவரது குரல் சக்திவாய்ந்த ஒன்றாக இன்று இருக்கிறது. இந்நிலையில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

வ. ஐ. ச. ஜெயபாலன்: எங்கள் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு பெரும் ஆதரவு சக்தியாக இருந்த எம்.ஜி.ஆர். காலமான பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும், வல்லமையோடும் மனநிலையோடும் இன்று கலைஞர் மட்டும்தான் இருக்கிறார். எங்கள் உரிமைப் போராட்டத்தில் இந்திராகாந்தியின் மரணம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். மரணமும் நிகழ்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் நிகழாமல் இருந்திருந்தால், நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் நலன்களைப் பேணும் விதமாக 1980களின் கடைசிப் பகுதியிலேயே எங்கள் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டிருக்கும். அதனை நோக்கிய ஒரு அணுகுமுறை இந்திய அரசிடமும் விடுதலைப்புலிகளிடமும் இருந்தது.

இந்திராகாந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிறகு இந்திய அரசையும் தமிழ்நாட்டையும் எங்கள் சார்பாக செயல்படுத்தக்கூடிய தலைவராக கலைஞர் இருந்தார். இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதனை எதிர்த்தவர் கலைஞர் என்பதை நாங்கள் ஒருபோதும் மறக்க இயலாது. ஆனால், அவரது அரசு கலைக்கப்பட்டது. அவர் அரசு கவிழ எங்களுடைய பிழைகளும் காரணமாக இருந்தன. இதுவும் எங்களது போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு. எங்களது இன்னொரு பெரிய துரதிர்ஷ்டம் ராஜிவ்காந்தியின் கொலைத் தொடர்பான விஷயங்கள். இவைகள் அனைத்தும் நிகழாமல் இருந்திருந்தால் 1990களிலாவது எங்களுக்கு விடிந்திருக்கும். இந்தியாவுக்கும் ஒரு பலமான அணியாக இலங்கைத் தமிழர்கள் இருந்திருப்பார்கள். அன்று செய்யமுடியாமல் போன வரலாற்றுக் கடமையைச் செய்யக்கூடியவராக இன்றும் கலைஞர் இருக்கிறார். அன்று ராஜீவ்காந்திக்கும் கலைஞருக்கும் இருந்த உறவைவிட, இன்று அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு பலமாக இருக்கிறது. வை.கோ., ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் போன்ற தமிழக அரசியல் தலைவர்களும் இந்த வகையில் மிக முக்கிய பங்களிப்புகளைச் செய்ய முடியும்.

தீராநதி: கடைசியாக, இந்த நேர்காணலின் வழியாக நீங்கள் வலியுறுத்த விரும்பும் விஷயம் என்ன?

வ. ஐ. ச. ஜெயபாலன்: இந்தியா, சிறு மனிதர்களால் சூழப்பட்ட ஒரு கலிவர். மிகப்பெரிய சக்திகளைக் கொண்டவன்தான் என்றாலும், கலிவர், சிறு மனிதர்களைப் பகைத்துக்கொண்டு கண்ணை மூடித் தூங்க இயலாது. அதுபோல் கலிவரைச் சூழ்ந்திருக்கும் சிறு மனிதர்களாலும் அவனைப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ இயலாது. எனவே, சிறு மனிதர்களுக்கும் கலிவருக்குமான உறவு மிக முக்கியம். இந்தியா தனது வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்த்து நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண வேண்டும். இந்த உறவு இரண்டு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையவேண்டும். அவ்வகையில் இந்தியா வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

சீனாவில் மிகப் பெரும்பகுதியினர் சீன மொழி பேசுகிறார்கள். கிட்டத்தட்ட 94 சதவிகிதம். மேலும், ஐரோப்பிய காலனிய நாடுகளால்கூட வெல்லப்பட முடியாமல் இருந்தது, வரலாற்று காலம் தொட்டே அவர்கள் ஒரு பெரும் தேசமாக இருந்தது என்று நீண்ட கால அடிப்படையில் சீனாவுக்குப் பல்வேறு அனுகூலங்கள் இருக்கிறது. அண்மைக் காலங்களில் சீனாவின் வளர்ச்சி மிகவும் அசுரத்தனமானது. அதன் பலத்தின் அடிப்படையில்தான் சீனாவின் வெளிவிவகார கொள்கை அமைந்திருக்கிறது. எனவே மிகவும் நிதானமாக, தன்னுடைய நண்பர்களுடன் உறுதியாக நின்றுகொண்டு அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். ஆனால், மாறாக இந்தியாவின் வெளிவிவகார அணுகுமுறை பயம் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் பலத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையையே, ஏனைய தென்னாசிய நாடுகளுக்குமான வெளியுறவுக் கொள்கையாக இந்தியா வைத்திருக்கக்கூடாது. அதுபோல் பாகிஸ்தானைக் கையாள அமைக்கப்பட்ட ‘ரா’ போன்ற அமைப்புகளையே, மற்ற நாடுகளைக் கையாளவும் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. பாகிஸ்தான் தவிர்த்த மற்ற தென்னாசிய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளையும் அதனைக் கவனிக்கும் அமைப்புகளையும் இந்தியா மீளமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும்போது பல்வேறு ஊடுறுவல்களைத் தடுக்கிற வல்லமையை இந்தியா பெறும்.

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை இல்லை. அதே நேரத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கும் பணிகளில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு உதவ முடியும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். குறிப்பாக, உலக அளவில் இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் சதியில் விடுதலைப்புலிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தங்களுக்குக் கிடைக்கிற, இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறைச் சார்ந்த தகவல்களை, புலிகள் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவின் நலன்களுக்காக இலங்கைத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக இந்தியாவும் செயல்படும் ஒரு பொற்காலம் மிக அண்மையில் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சந்திப்பு: தளவாய் சுந்தரம்

- குமுதம் தீராநதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை PDFல் வாசிக்க

http://www.tamilnaatham.com/pdf_files/jeya..._2006_10_11.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.