Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னுதாரணம்மிக்க தமிழீழ மக்களும் கேள்விக்குறியாயுள்ள விடுதலைப் போராட்டமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுதாரணம்மிக்க தமிழீழ மக்களும் கேள்விக்குறியாயுள்ள விடுதலைப் போராட்டமும்!

சண்முகவடிவேல்

0781bc1b-caf9-45e3-962d-65c16cc1897b1.jp

ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன என்ற மிக எளிமையானதும் மிக அடிப்படையானதுமான இந்த வினாவை எழுப்பி இதற்கு விடைகாண முனைவார் யாருமில்லை. மேற்படி வினாவை எழுப்பி அதற்குப் பொருத்தமான பதிலைத் தேடாமல் சிலர் மனம்போனபடி பேசுகிறார்கள். சிலர் வெறும் விருப்பத்தின் அடிப்படையிற் பேசுகிறார்கள். சிலர் விரக்தியடைந்து ஏதோவெல்லாம் பேசுகிறார்கள். சிலர் எல்லாம் முடிந்துவிட்டது இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கைவிரிக்கின்றார்கள். சிலர் தம் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் பழிகூறலையும் திட்டித்தீர்த்தலையும் மேற்கொள்கிறார்கள். சிலர் தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் அல்லது எதிர்மறையாய் பேசுகிறார்கள். இதுதான் கடந்த ஐந்தாண்டுகளாக ஈழத்தமிழர் மத்தியில் நிலவும் வேதனை மிகுந்த யதார்த்தமாகும்.

எம்மிடம் காணப்படுவதைக் கொண்டும், கையில் இருப்பதை வைத்துக்கொண்டும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி சிந்திக்குமாறு வரலாறு எமக்குக் கட்டளை இடுகிறது. இதனை இருப்புநிலை நிர்ணயக் கோட்பாடு என்பர். அதாவது எது இருக்கிறதோ அதன் அடிப்படையிற்தான் தீர்மானம் எடுக்கப்பட முடியுமென்பதே இதன் பொருள். 'பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற தமிழ்ப் பழமொழி இக்கோட்பாட்டை மிக எளிமையாக விளக்குகிறது. 'வெறுங்கை முழம் போடாது' என்றும் இதனை இன்னொரு வகையில் விளக்கவல்ல கூற்றாகும். வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்துதான் நாம் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடர முடியுமே தவிர, வரலாறு எம்மை நிறுத்தியிருக்கும் இடத்திற்குப் புறம்பான வேறொரு இடத்தில் அல்லது எமது மனம் வரைந்த ஒரு கற்பனைக் கோட்டில் நின்று கொண்டு அடுத்த கட்டப் பயணத்தைத் தொடர முடியாது.

எமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் வரலாறு போதித்துள்ள கசப்பான பாடத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்று அதேவேளை வரலாறு எம்மை நிறுத்தி இருக்கும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கான பயணத்தை சாத்தியமான வேகத்தில் நாம் தொடர வேண்டும்.

உலகிலுள்ள முழுநாடுகளையும் தனது நண்பர்களாக்கி அத்தகைய அனைத்து உலகநாடுகளினாலும் ஈழத்தமிழர்களைச் சுற்றிவளைத்து உலக அரங்கில் அவர்களைத் தனிமைப்படுத்தியதன் மூலம், ஈழத்தமிழர்களை வரலாறு காணாத பேரழிவிற்கு எதிரியால் உள்ளாக்க முடிந்தது. ஒரு குறித்த தேவையின் பொருட்டு அல்லது ஓர் இலக்கின் பொருட்டு நண்பர்களைத் தேடும் வித்தையை - நண்பர்களை ஒருங்கிணைக்கும் வித்தையை நாம் எதிரியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முழுநீள நண்பன், அரைவழி நண்பன், தற்காலிக நண்பன், காலபோக நண்பன் என பல்வேறு அளவினரான நட்புகளையும் அடையாளம் கண்டு அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு யுத்தப்புள்ளியில் வெற்றிகரமாக இணைக்க எதிரியால் முடிந்தது. அதாவது முழுநீள நண்பனுக்காக எதிரி காத்திருக்கவில்லை. அதேவேளை தனக்குக் கிடைத்த ஒருசில முழுநீள நண்பர்களோடு மட்டும் எதிரி திருப்தியடைந்துவிடவில்லை. நாளை எதிரியாக இருக்கக்கூடியவரைக்கூட இன்று நண்பனாகப் பேணக்கூடிய வாய்ப்பை எதிரி கைநழுவவும் விடவில்லை. உலகில் எந்தவொரு நாடும் அது வல்லரசே ஆயினும் கூட தனித்தியங்க முடியாது. இன்றைய உலக ஒழுங்கின் வளர்ச்சிக் கட்டமானது Inter dependent world என அழைக்கப்படுகிறது. அதாவது உலகநாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று, இன்னொன்று தங்கிப் பின்னிப் பிணைந்துள்ளன. இங்கு எதிரியால் இத்தகைய தங்குநிலை நாடுகளை தன் நோக்கம் கொண்ட ஒரு நாரில் மாலையாகக் கோர்க்க முடிந்திருக்கிறது. அதுவே எதிரியின் வெற்றிக்கான அடிப்படையாகவும் இருந்திருக்கிறது. இராணுவ இயந்திரத்தின் மூலமாக இனப்படுகொலையை இத்தகைய பரந்த சர்வதேச வியூகத்தினாற்தான் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.

1990ம் ஆண்டிலிருந்து இற்றைவரை 27 தேசிய இனங்கள் பிரிந்து சென்று விடுதலையடைந்திருக்கின்றன. இவ்வாண்டு உக்கிரேனிலிருந்து கிரிமியா பிரிந்து சென்று ரஷ்ய அரசுடன் இணைந்து கொண்டமை இன்னொரு விதமான உதாரணமாகவும், நடைமுறையாகவும் உள்ளது. அதாவது பிரிந்து செல்லுதல் என்பதற்கு சர்வதேச அரசியல் ஒழுங்கில் இன்றுவரை பலமான நடைமுறை உதாரணங்கள் உள்ளன. இத்தகைய பிரிந்து செல்லல் என்பது தனித்த ஓர் இனத்தின் செயலால் மட்டும் சாத்தியப்பட்டதல்ல. அதற்கும் அப்பால் ஒரு சர்வதேச சூழலில் பலம்பொருந்திய அரசின் அல்லது அரசுகளின் ஆதரவின்றி பிரிந்து போதல் என்பதற்கு வரலாற்றில் இடமே இல்லை. ஆதலால் பிரிந்து சென்று போராடும் ஒரு தேசிய இனம் உயர்ந்தபட்ச சர்வதேச உறவில் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும். அதேவேளை அந்த இனம் தனக்குள்ளும் உயர்ந்தபட்ச ஐக்கியத்தைக் கொண்டிருக்கவேண்டும்

ஆக எமது எதிரியிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாம் உயர்ந்தபட்ச நட்பு வட்டங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சர்வதேச அரங்கிலும் தமிழீழ மக்கள் மத்தியிலும் நாம் எதிரிகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவோ அன்றி பகைமையை அறுவடை செய்யும் விளைநிலமாகவோ இருந்துவிடக்கூடாது. எம் மத்தியில் ஐக்கியம், வெளியுலகில் நல்லுறவு என்ற இரு அம்சங்களையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என இணைத்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

'எம்மிடையே விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு ஐக்கியப்படத் தவறுவோமேயானால் நாம் அனைவரும் எதிரியிடம் சரணடைய வேண்டி வரும்' என்று 1985ம் ஆண்டு யாழ்பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றின்போது கூறப்பட்ட கருத்தை இங்கு மேற்கோளாகக் கொள்வது நன்று.

நாம் எதற்கும் நல்ல முன்மாதிரிகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. எமது பண்பாட்டு வேரிலிருந்து செழிப்பான அரசியல் நாகரிகத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்தவை நல்லவை என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை முன்னிறுத்த வேண்டும். பொதுவாக முள்ளிவாய்க்கால் பேரழிவு யுகத்தின்போது ஓங்கி நின்ற பல முன்னுதாரணங்களை நாங்கள் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். முள்ளிவாய்க்காலில் முறைசார் மருத்துவர்கள், முறைசாரா மருத்துவர்கள் எனக் காணப்பட்ட மருத்துவர்களின் பணி உலக வரலாற்றிற்கே மிகச்சிறந்த முன்னுதாரணங்களைக் கொடுக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இத்தகைய மருத்துவர்களின் பணிகளை நான் நேரில் என் பச்சைக் கண்களால் கண்டுள்ளேன். அவர்கள் சில மணிநேரம்கூட தூங்க முடியாத அளவிற்கு அயராது பணியில் ஈடுபட்டிருந்தார்கள். குண்டுமழை பொழியும் போது அவர்கள் பதுங்குகுழிக்குள் பாய்வதும், குண்டுவீச்சு ஓய்ந்ததும் வெளியே வந்து மருத்துவம் செய்வதும் அவர்தம் உன்னத பணிகளாக அமைந்திருந்தன. உலர் உணவை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறு கையில் நோயாளிக்கான மருந்தைக் கையில் ஏந்தியவண்ணம் நின்று அவர்தம் பணி தொடர்ந்ததை நான் கண்டேன். உணவு, உறக்கம், மாற்றுடுப்பு என்பன இன்றிக் கூட அவர்தம் பணி அமைந்திருந்தது.

0781bc1b-caf9-45e3-962d-65c16cc1897b4.jp

வன்னிப் பெருநிலப்பரப்பு பாரிய மருந்துத்தடைக்கு உட்பட்டிருந்தபோதிலும் வன்னியில் மலேரியா, டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டிருந்தமைக்கு மருத்துவர்கள், சுகாதாரப் பிரிவினர்கள் போன்றோரின் கடும் உழைப்பும், மக்களின் ஒத்துழைப்பும் இங்கு பெரிதும் பாராட்டுக்குரிய மகத்தான பணிகளாகும்.

1,40,000க்கும் மேற்பட்ட மக்கள் வன்னியில் படுகொலைக்கு உள்ளானதான தகவல்கள் இருக்கின்ற போதிலும் தொற்றுநோயால் யாரும் இறந்ததற்கான தகவல்கள் இல்லை என்றே கூறக்கிடக்கின்றது. இத்தகைய பெருந்தொகை மக்கள் கொல்லப்படும்போது அங்கு தொற்றுநோய் பரவுவது இயல்பு. ஆனால் அவ்வாறு பரவாமைக்கான பிரதான காரணம் T.R.O. எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாகும். கொல்லப்பட்டோரது உடல்களின் சூடாறும் முன்பே, தமிழர் புனர்வாழ்க் கழகம் அவ்வுடல்களைப் புதைக்கும் பணியை மேற்கொண்டிருந்தது. ஓர் உழவுயந்திரப் பெட்டியில் 40-50 வரை இறந்தவர்களின் உடலங்கள் சேகரிக்கப்படும். உழவுயந்திர சாரதி உட்பட 5 பேர் ஓர் உழவுயந்திரத்தில் பணியாற்றுவர். அவ்வாறு ஒரு பெட்டி உடலங்களைப் புதைப்பதற்கு தலா ரூ.5000 என்ற வகையில் ரூ.25000 பணத்தையும் தலா ஒரு சாராயப் போத்தலையும் T.R.O. வினர் அவர்களுக்கு வழங்கினர். இதன்மூலம் உடனுக்குடன் கொல்லப்பட்டோரின் சடலங்கள் சேகரிக்கப்பட்டு சாத்தியமான கிட்டிய இடங்களில் அவை புதைக்கப்பட்டன. இவ்வாறு இறந்தோரின் சடலங்களைப் புதைக்கும் பணியை T.R.O. வினர் மேற்கொள்ளாது விட்டிருந்தால் யுத்தம் முடிந்த பின்பு எஞ்சி நின்ற 2,70,000 பேரும் தொற்று நோய்க்கு உள்ளாகி மாண்டிருக்கக்கூடிய துயரமே மிஞ்சியிருக்கும் இந்த வகையில் T.R.O. வினர் ஆற்றிய பணி மகத்தானதாகும்.

அதேவேளை சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் களத்தை விட்டு அகலும் வரை மக்களோடு இணைந்திருந்து பணியாற்றியமை மிகுந்த மதிப்புடன் போற்றப்படவும் நினைவுகூரப்படவும் வேண்டியவையாகும்.

இவற்றுக்கு அப்பால் சற்று பின்னோக்கிச் சென்றால் சுனாமிப் பேரழிவிலிருந்து வன்னி மீண்டெழுந்த விதம் அதிசயிக்கத்தக்கது. மருத்துவர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பொருண்மியம், நிர்வாக சேவையினர், தமிழீழ வைப்பகம், கிராம அலுவலர்கள் தொட்டு மேலதிக அரசாங்க அதிபர்கள் வரையிலான அதிகாரிகள், போராளிகள், ஆசிரியர்கள், மக்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரினதும் திரண்ட உழைப்பில் சுனாமிப் (ஆழிப்பேரலை) பேரழிவிலிருந்து வன்னி ஒருசில மாதங்களுக்குள் மீண்டெழுந்தது. இதில் மிகச் சிறந்த வினைத்திறனை வன்னிவாழ் ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தினர். 2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளை உள்ளடக்கி நிகழ்ந்த சுனாமிப் பேரழிவின் போது வன்னி மீண்டுடெழுந்த விதம் தனிச்சிறப்பான முன்னுதாரணத்திற்குரியது.

தமிழீழ மக்களின் வரலாற்றில் தலைவர்கள் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் மக்கள் திரண்டெழுந்து ஒன்றுபட்டு செயற்பட்ட உதாரணங்கள் மிகப்பல. உதாரணமாக 1961ம் ஆண்டு தமிழரசுக்கட்சி சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு மக்களை அழைத்தபோது ஈழத்தமிழ் மண்ணில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து ஒன்றுபட்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முழு அளவில் பங்குபற்றினர். இரண்டு மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் மக்கள் சலிப்பின்றிப் பின்வாங்கலின்றிப் பங்குபற்றியமை மக்களின் பணிசார்ந்த பக்கத்தில் அதற்குரிய உச்சத்தை அது தொட்டிருந்தது. அப்போராட்டம் தோல்வியடைந்தமைக்கு மக்கள் சிறிதும் பொறுப்பில்லை. அந்தளவிற்கு தலைவர்களின் அழைப்பின்போது மக்கள் முழு அளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இதில் தமிழ் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு சிறப்பாக நினைவுகூரத்தக்கது.

ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுத போராட்ட அமைப்புகளின் அழைப்புக்களை மக்கள் பின்பற்றினர். குறிப்பாக 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வலிகாமத்தை விட்டு வெளியேறி தென்மராட்சி நோக்கிப் புறப்படுமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தபோது தமது சொத்துப்பத்துக்கள் மற்றும் வளர்ப்புப்பிராணிகள் என்பன போன்றவற்றையெல்லாம் கைவிட்டு, இருதினங்களில் வலிகாமத்தைவிட்டு வெளியேறினர். பின்பு குடாநாட்டைவிட்டு வன்னிக்கு வெளியேறும்படி அழைப்பு விட்டபோது, அப்போதும் மக்கள் வன்னிநோக்கி ஆபத்துமிக்க கடல்மார்க்கமாக இடம்பெயர்ந்தனர். போராட்டதின் பாலும் இலட்சியத்தின்பாலும் மக்களுக்கிருந்த பற்ருறுதியும் தலைவர்களின் அழைப்புக்களின்போது எத்தகைய இழப்புக்களின் மத்தியிலும் அதனைப் பின்பற்றி முன்சென்ற மக்களின் உன்னத பங்களிப்புக்களும் வரலாற்றில் போற்றி புகழத்தக்க விடயங்களாகும்.

இவ்வாறு பரந்துபட்ட மக்களினதும் தனிமனிதர்களினதும் பல்வேறு பங்களிப்புக்கள் எமது நெஞ்சங்களை நெகிழ வைக்கவல்லவை. இவற்றுக்கு முதன்மை கொடுத்து மக்கள் நோக்கும் சிந்தனையிலிருந்து எதிர்காலம் பொறுத்து நாம் ஆழமாகப் பேச வேண்டியுள்ளது. இத்தகைய உன்னதமான பக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் குழுக்களாக பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் திட்டித் தீர்ப்பதும், ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்துவதும் வேதனை தரவல்லது மட்டுமின்றி வளர்ச்சிக்கும் எதிரானதும் கூட.

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவர் ஆற்றிய பணியை அக்குறிப்பிட்ட காலகட்ட சூழலிலிருந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இந்த வகையில் முள்ளிவாய்க்கால் காலத்து மனிதர்களின் மகத்தான பணிகளை அக்காலகட்டத்திற்குரிய பரிமாணத்தோடு ஏற்று அங்கீகரித்து போற்றத் தவறக்கூடாது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழீழ மக்களை சிங்கள அரசு தொடந்து தோற்கடித்து வரும் நிலையில் தமிழீழ தேசியக் கட்டுக்கோப்பானது குலைக்கப்பட்டு சிதைவுற்றுச் செல்வது அரசியல்ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நில ஆக்கிரமிப்பு ரீதியாகவும், கலவரங்கள் வாயிலாகவும் மற்றும் அடிப்படையான இன அழிப்புக்கள் வாயிலாகவும் தமிழீழத் தேசிய தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதில் சிங்கள அரசு இடையறாத செயல்முறைகளைக் கொண்டுள்ளது. ஈழத்தமிழர் ஒரு மில்லியனுக்கு மேலாக கடந்த இருபது ஆண்டுகளில் தம் தாயத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதற்கு அப்பால் யுத்த சூழலில் இயல்பான இனப்பெருக்கமும் வீழ்ச்சியடைந்து ஈழமண்ணில் தமிழ்மக்களின் சனத்தொகை வெகுவாகச் சரிந்துவிட்டது. இவையனைத்தும் சேர்ந்து தமிழ்த்தேசியக் கட்டுக்கோப்பை வெகுவாக உடைத்து சீர்குலைத்துள்ளன.

இவையனைத்துக்கும் அப்பால் பின்வரும் பாரதூரமான விடயங்கள் தேசியக் கட்டுமானத்தைக் கருவறுத்துள்ளன. அதாவது சமூக உணர்வுகொண்ட, முன்போகும் தன்மை கொண்ட, சிறந்த மூளைவளம் கொண்ட புதல்வர்களும், புதல்விகளும் போராட்டத்தில் இணைந்து தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களது இழப்பு சமூகத்திற்கு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதுடன் தலைசிறந்த இப்புதல்வர்களினதும் புதல்விகளினதும் முன்னுதாரணம் அவர்களை ஒத்த மற்றும் அடுத்த சந்ததியினர்க்குக் கிடைக்காது போய்விடும். முன்னேறும் ஓர் அயலவனைப் பார்த்து அவனது செயற்பாடுகளைப் பார்த்து அயலவர்கள் ஊக்கம்பெற்று செயற்படுவதன் மூலம் ஓர் இயல்பான சமூகத் தலைமைத்துவம் நிலவுவது இயற்கை. இவ்வாறு யுத்தத்தில் ஆகுதியான புதல்வர்கள் புதல்விகள், வெளிநாடுகள் சென்றுவிட்ட புதல்வர்கள், புதல்விகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் மத்தியில் காணப்பட்ட மேற்படி தலையாய புதல்வர்கள், புதல்விகள் என்போரின் வெற்றிடம் இயல்பான சமூக வழிகாட்டிகளையும் முன்னுதாரணம் மிக்கோர்களையும் எம்சமூகத்திற்கு இல்லாமலே ஆக்கிவிட்டது.

இத்துடன் யுத்தத்தின்போது திட்டமிட்டுக் கொல்லப்பட்ட குடும்பத் தலைவர்கள், குடும்பத்திற்கு சோறுபோடுவல்ல உழைப்பாளிகள் (Bread winners) இளம் கணவன்மார்கள் என்போர் கொல்லப்பட்டதன் வாயிலாகவும் பெற்றோரில் ஒருவரும் அல்லது இருவருமே கொல்லப்பட்ட நிலையிலுள்ள பிள்ளைகள் என்போரால் சமூகம் சத்தை இழந்து போயுள்ளது. தோலிருக்க சுளை பிடுக்கியதுபோல தமிழீழத் தேசியத்தின் இருப்பு நிலை காணப்படுகிறது. இவற்றையிட்டுத் தீவிரமாக சிந்தித்து இவற்றிலிருந்து மீண்டெழுந்து ஒரு புதுவளர்ச்சியை அடையக்கூடிய வகையில் அதிக ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய நிலையிலும் பொறுப்பிலும் இருக்கின்றோம்.

தமிழீழத் தேசியத்தின் முதன்மையான பிரச்சினைகளை முதன்மைப்படுத்திச் சிந்தித்தால் எங்கள் மத்தியில் எங்களுக்குள் குத்துவெட்டுப்பட நேரம் இருக்காது. புதிய அரசியல் நாகரீகத்துடனும் உன்னதமான விழுமியங்களுடனும் சனநாயக நல்லெண்ணங்களுடனும் இணைந்து விடுதலையை முதன்மைப்படுத்துவதற்கான, இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டிற்குள் வரப்போகும் மூன்றாவது பத்தாண்டிற்கும் பொருத்தமாக சிந்தித்தால் அன்றி வேறுவழியில் விமோசனம் இல்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு எதிரிகள் அதிகமாகின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு தோல்வி நிச்சயமாகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்கள் அதிகமாகின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு பாதுகாப்பு அதிகரித்து வெற்றிக்கான கதவுகள் திறவுபடுகின்றன.

எதிரிகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாக அல்லாமல் நண்பர்களை அறுவடை செய்யும் விளைநிலமாக வேண்டும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=0781bc1b-caf9-45e3-962d-65c16cc1897b

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...

நாம நீட்சியான ஒரு கட்டுரை எழுதுகின்றோமா? இல்லையா என்பதை விடுத்து சொல்லவேண்டிய விடயங்களை சிறிய பந்திக்குள் எழுதினால் நாமக்கு வாசிக்க முடியும்... கருத்தை அறியமுடியும்... அதை விடுத்து இப்படி எழுதினால் வாசிக்க கொஞ்சம் அலுப்படிக்குது நீங்கள் நல்ல கருத்துக்களை சொன்னாலும் கட்டுரையின் நீட்சி காரணமாக உங்கள் கருத்துக்களை மற்றவா்கள் படிக்காமல் விட்டுச் செல்கின்றனா்.

அவசர உலகில் வாழும் நாம் குறுகிய நேரத்தில் தகவல்களை பெறக் கூடியவாறு உங்கள் ஆய்வுகளை, கட்டுரைகளை எழுதுங்கள். இது தமிழ் கட்டுரை எழுதுதலில் ஒரு விதி விலக்காக அமையட்டும்.

இந்த கட்டுரையாளருக்கு மட்டுமல்ல... அதிகப்படியான செய்தி தயாாிப்பாளா்கள்... ஆய்வாளா்கள்... கட்டுரையாளா்கள்... விமா்சகா்களுக்கும் இது பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...

நாம நீட்சியான ஒரு கட்டுரை எழுதுகின்றோமா? இல்லையா என்பதை விடுத்து சொல்லவேண்டிய விடயங்களை சிறிய பந்திக்குள் எழுதினால் நாமக்கு வாசிக்க முடியும்... கருத்தை அறியமுடியும்... அதை விடுத்து இப்படி எழுதினால் வாசிக்க கொஞ்சம் அலுப்படிக்குது நீங்கள் நல்ல கருத்துக்களை சொன்னாலும் கட்டுரையின் நீட்சி காரணமாக உங்கள் கருத்துக்களை மற்றவா்கள் படிக்காமல் விட்டுச் செல்கின்றனா்.

அவசர உலகில் வாழும் நாம் குறுகிய நேரத்தில் தகவல்களை பெறக் கூடியவாறு உங்கள் ஆய்வுகளை, கட்டுரைகளை எழுதுங்கள். இது தமிழ் கட்டுரை எழுதுதலில் ஒரு விதி விலக்காக அமையட்டும்.

இந்த கட்டுரையாளருக்கு மட்டுமல்ல... அதிகப்படியான செய்தி தயாாிப்பாளா்கள்... ஆய்வாளா்கள்... கட்டுரையாளா்கள்... விமா்சகா்களுக்கும் இது பொருந்தும்.

அலசல்கள் என்றால் நீளமாகத்தான் இருக்கும். அவசரமான உலகில் களைத்து விழுந்து ஓடிக்கொண்டிருப்பவர்கள் தலைப்பை மட்டும் பார்த்து விடயத்தை உய்த்துணரவேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் இந்த குறுகிய செய்திகள் முழுமையாக விடயத்தைப் புரிந்துகொள்ள உதவாது. இதனால்தான் பலர் யானை பார்த்த குருடர்கள் போன்று ஒரு விடயத்தைப் பல்வேறு வகைகளில் புரிந்துகொள்கின்றார்கள்.

ம்ம்ம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.