Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன்

ஞாயிறு தினக்குரலில் வெளியானது. நேர்கண்டவர் மல்லிகா.

கேள்வி- எழுதத் தொடங்கிய ஆரம்பகாலம் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்- நான் பிறந்ததும் வளர்ந்ததும் புத்தகங்களிற்கு மத்தியில்த்தான். எங்கள் வீட்டில் நிறைய இந்தியசஞ்சிகைகளின் சேமிப்பிருந்தது. பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதங்களில் வந்த தொடர்கதைகள் எல்லாம் தொகுத்து கட்டப்பட்டிருந்தன. வரலாற்று நாவல்கள் எல்லாம் இருந்தன. அதனால் சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. நிறைய வாசிப்பவர்கள் எல்லோரும் எழுதிப்பார்ப்பார்கள். அப்படித்தான் பாடசாலை நாட்களில் அம்புலிமாமா பாணிக்கதைகள் சில எழுதினேன். அவற்றை கொப்பியில் எழுதி சிறிய சிறிய புத்தகங்களாக தொகுத்தும் வைத்தேன்.

பின்னர், சிறிய இடைவெளியின் பின்னர் இருபது வயதுகளில் கதைகள் பற்றிய ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. அந்த நாட்களில் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார், மற்றும் ஆசிரியர் ஆறுமுகம் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் சொல்வார்கள். குறிப்பாக அந்த நாட்களில் ஆதிலட்சுமி அக்கா சிறுகதை பற்றிய பயிற்சி வகுப்பொன்றை வாரந்தோறும் நடத்துவார். அந்த நாட்களில் ஒரு சிறுகதைப்போட்டி நடந்தது. எல்லோரும் கட்டாயமாக இரண்டு கதைகள் எழுதி அனுப்புமாறு ஆதிஅக்கா சொல்லியிருந்தா. எழுதிய கதைகள் பல இருந்தாலும் நான் எதையும் அனுப்பவில்லை. எனது நண்பனொருவன்தான் இரண்டு கதைகளை வாங்கிச் சென்று, அனுப்பி வைத்தான். அவை இரண்டும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துவிட்டது.

கேள்வி- தங்கள் படைப்புக்களுக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக்கின்றது?

பதில்- ஒரு படைப்பாளியாக எதிர்கொள்வதற்கு சிரமமாக கேள்வியிது. இதனை நீங்கள் படைப்பாளிகளிடம் கேட்பதே முறையற்றது. உண்மையை சொன்னால், படைப்பை யார் எதிர்க்கிறார்கள், யார் வரவேற்கிறார்கள் போன்ற விடயங்களில் நான் எழுதத்தொடங்கிய நாளில் இருந்து அக்கறை கொள்வதில்லை. எழுதுவது மட்டுமே எனது வேலையென நினைக்கிறேன்.

சில வருடங்களின் முன்னர்வரை நானும் இணையத்தில் நிறைய சண்டைபிடித்திருக்கிறேன். ஆனால் எனது படைப்பு ஒன்றை குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியது கிடையாது. எனது படைப்பு குறித்த எதிர்வினைகளிற்கு பதிலளித்ததும் கிடையாது. எழுதியதற்கு அப்பால் படைப்பை பின்தொடர்ந்து கொண்டிருக்க நான் விரும்பியதில்லை.

ஆனால், யுத்தத்தின் பின்னர் மீண்டும் எழுதத் தொடங்கியபோது, ஆதரவாகவும், விமர்சனங்களுடனும் நிறையக்குரல்கள் வந்தன.

கேள்வி- சமீபத்திய இலக்கியங்களின் போதாமையாகத் தாங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

பதில்- ஈழ இலக்கியத்தை மையமாக வைத்து இதனை பேச விரும்புகிறேன். முக்கியமாக உரைநடையில் நம்மவர்கள் மிகமிக பலவீனமானவர்கள். இதில் மூத்தவர்கள், இளையவர்கள் என்ற பேதம் கிடையாதென்பதே துயரமானது.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன், ஈழத்தமிழர்களினால் எத்தனை இணையத்தளங்கள் நடத்தப்படுகின்றன? கிட்டத்தட்ட வடக்கிலுள்ள தெருக்களின் எண்ணிக்கையினளவான இணையத்தளங்கள் ஈழத்தமிழர்களினால் நடத்தப்படுகின்றன. அவற்றை பார்த்தீர்களெனில், ஒன்றில் செய்திகள் இருக்கும். அல்லது கவிதைகள் இருக்கும். இரண்டையும் விட மேலதிகமாக இருப்பது மரணஅறிவித்தல் ஒன்றுதான். கட்டுரைகளை இந்தியத்தளங்களிலிருந்துதான் சுடுகிறார்கள். நமது பெரும் எழுத்தாளர்களில் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிருவரைத்தவிர மிகுதி யாருமே சுவாரஸ்யமாக கட்டுரைகள் எழுதத் தெரியாதவர்கள்தான். இதனை குற்றச்சாட்டாக வைக்கவில்லை. நம்மிடம் அதற்கான களமிருக்கவில்லை.

இப்பொழுது எழுதும் இளம் எழுத்தாளர்கள் பலருடன் நான் தொடர்ந்து உரையாடுவேன். அவர்களிடம் ஒரு படைப்பைக் கேட்டுப்பாருங்கள். அனைவருமே குரூப் டான்சர்கள் போல, ஒரேவிதமான பதில் சொல்வார்கள். கண்களை பாதி மூடி சற்றே தலையை உயர்த்தி ஒருவித மோனநிலையில் இப்பொழுது படைப்பு இல்லையென்பார்கள். எப்பொழுது தருவீர்களெனில், அது வரும்போது எழுதுவோம் என்பார்கள். என்னைக் கேட்டால் சொல்வேன், அப்படியானவர்கள் சிறந்த படைப்பாளிகளாக இருக்க முடியாது. அவர்கள் சொற்களிற்காக காத்திருப்பவர்கள். பயிற்சி பெற்ற எழுத்தாளனிடம் சொற்கள் காத்திருக்கும். நல்ல படைப்பாளியெனப்படுபவன் யாரென்றால், நன்றாக எழுதுபவனும், தொடர்ந்து எழுதுபவனும்தான்.

தஸ்தயேவ்ஸ்கியை பாருங்கள். அவரை பொருளாதார நெருக்கடி நிழல்போல துரத்திக் கொண்டிருந்தது. அவர் அதிலிருந்து மீள பத்திரிகைகளிற்கு எழுதித்தள்ளிக் கொண்டிருந்தார். அந்த சூழலில்த்தான் குற்றமும் தண்டனையும் எழுதினார். அவர் அவகாசமெடுத்து எழுதியிருந்தால், இன்னும் சிறந்த படைப்புக்களை தந்திருக்கலாமென யாரும் சொல்லலாம். ஆனால், நடக்காத ஒன்றை பேசிக்கொண்டிருக்க முடியாதல்லவா.

கேள்வி- இலக்கியப்பரப்பில் சுதந்திரமாக இயங்குவதாக உணர்கிறீர்களா?

பதில்- இதனை நீங்கள் என்ன நோக்கத்துடன் கேட்டீர்கள் என தெரியவில்லை. ஆனால் இன்றைய ஈழச்சுழலில் இந்தக்கேள்விக்கான அர்த்தமும், பயன்பாடும் வேறானவை. அதற்கு பதில் சொல்லும் போது, கயிற்றில் நடக்கும் வித்தைக்காரன் ஒருவன் கையாளும் அத்தனை அவதானம், சூட்சுமத்தை கைக்கொள்ள வேண்டிய நிலையில் படைப்பாளிகள் உள்ளனர்.

நமது இலக்கிய சூழலில் குறிப்பாக இணையத்தில் விவாதிப்பவர்களின் பிரமாஸ்திரமே இந்தக்கேள்விதான். இலங்கையிலிருக்கும் ஒருவனை விவாதத்தில் வீழ்த்த ஆகக்கடைசியாக பாவிக்கும் ஆயுதமாக இதனைத்தான் பாவிக்கிறார்கள். இதற்கு ஆம் என ஒருவன் சொல்லிவிட்டால், ஆள் அவுட். அரசாங்கத்தின கஜானாவிலிருந்து மாதாமாதம் ஒருபெரும் தொகையை வாங்கிக் கொள்கிறான் என்று தமக்கு வசதியாக விவாதத்தை முடித்து விடுவார்கள். இந்த வில்லங்கத்திற்கு பயந்து இல்லையென சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் அவர்களிடம் ஒரு ஆயுதமிருக்கும். இலங்கையில் சுதந்திரமில்லையென்பதால் நீ ஒருபக்கத்தைதானே சொல்லுகிறாய். நான் ஒருபக்கத்தைத்தான் எழுதுகிறேன் என பகிரங்கமாக கூறு என விடாப்பிடியாக நிற்பார்கள். சுதந்திரமாக எழுத முடியாத சூழலிலிருந்து வரும் படைப்புக்களை எப்படி நம்புவதென கேள்வியெழுப்பவார்கள். அதிலும் குறிப்பாக ஒருவன் விடுதலைப்புலிகளை விமர்சித்து விட்டான் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது அனைவரும் இந்த பிரமாஸ்திரங்களுடன் புறப்பட்டுவிடுவார்கள்.

நான் சுதந்திரமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இது சூழலை நியாயப்படுத்தும் கருத்தல்ல. சூழல்பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டுமல்லவா. சுதந்திரமாக இயங்க விரும்பினால் அதற்கான விலையை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

நான் சுதந்திரமானவனாக இயங்குவதால், எந்த அரசியல் நோக்கமுமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறேன். கதைகளில் எல்லாவிதமான தரப்புக்களின் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் அதல் சில தரப்புக்கள் அவற்றை தமககு வசதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். படைப்பாளி சுதந்திரமாக இயங்கினாலும், சூழல் கவலையளிக்கிறது. நான் சுதந்திரமாக இயங்குவதென்பது வேறு. எனது படைப்புக்களை யாராவது பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதென்பது வேறு.

கேள்வி- உங்கள் படைப்புக்களை அதிகமதிகம் விமர்சிப்பவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்- உலகத்தில் எல்லாவிடயங்களிற்கும் விமர்சனங்கள் உள்ளனதான். எல்லா உன்னதங்களின் மீதுமே விமர்சனங்கள் உள்ளன அல்லவா? அது அப்படித்தான் இருக்கும். ஆனால் படைப்புச்சூழலை பொறுத்தவரை ஈழச்சுழலில் விமர்சனமென்ற மரபே கிடையாது. எங்காவது சில விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. பெரும்பாலும் அணிசார்ந்த ஆதரவும், அவதூறுமே உள்ளது. அவதூறு சொல்பவர்கள் குறித்து நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அதனை பொருட்படுத்தாமல் விட்டால், இரண்டுநாளில் அவை காணாமல் போய்விடும். எனது படைப்புக்களிற்கு அதிகமான எதிர்வினைகள் வருகின்றனதான். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அவதூறுகள்தான்.

முதலாவது புத்தகம் வந்த சமயத்தில் கைத்தொலைபேசியை கூட நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. இணையத்தளங்களிலிருந்து அவதூறுகளை குறுஞசெய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இணையங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எத்தனையோ பேர் எத்தனையோ அவதூறு பேசினார்கள். ஆனால் பாருங்கள், நான் இப்பொழுதும் இந்த இடத்தில்த்தான் நிற்கிறேன். அந்த அவதூறாளர்கள் ஒருவரின் பெயரையாவது நினைவுபடுத்திப் பார்க்க விரும்புகிறேன். முடியவில்லை. யாரது முகவரியும் இல்லை.

இதனைவிட இன்னொரு வகையினரும் அதிகம் விமர்சிக்கிறார்கள். அதிதீவிர தமிழ்தேசியவாதிகளாக தங்களை கூறிக்கொள்பவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் தமிழ்தேசியமென்பது விமர்சனங்களிற்கு அப்பாலானதென. இவர்கள் குறித்து எந்தவிதமான வருத்தமும் என்னிடம் கிடையாது. மாறாக மிகுந்த பரிவே உள்ளது.

ஆனால், இந்தச்சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அவதூறாளர்களால் தொடர்ந்து இயங்க முடியாது.

கேள்வி- முள்ளிவாய்க்காலின் நேரடிச்சாட்சியமாக இருந்து கதை சொல்கிறீர்கள். இதில் தங்களுக்குத் திருப்தியுள்ளதா அல்லது இன்னும் சொல்லப்பட வேண்டுமா?

பதில்- யுத்தம் ஒரு மாபெரும் கொடுமை. குறிப்பாக இறுதி யுத்தகாலம். அது பலமுனைகளை கொண்டது. பல களங்களைக் கொண்டது. யுத்தம் ஏற்படுத்தும் விளைவுகள் மனிதர்களின் வாழ்வின் எல்லா முனைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். யுத்தம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான துயரத்தை கொடுக்கும். எல்லாத்துயரங்களையும் புரிந்தவர் யாரிருப்பார்? அவை பேசித்தீராத கதைகளாகவே இருக்கும்.

கேள்வி- ஈழப்போராட்ட அவலம் முழுமையாகப் பேசப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

பதில்- யுத்தம் நடந்த சமயத்தில் யார் அவலங்களை பேசினார்கள்? அப்பொழுது பெரும்போக்காக இரண்டுவகையான போக்குகள்தான் இருந்தன. ஒன்றில் அரசவைக்கவிஞர்களாக இருந்தார்கள். இல்லையெனில் அறம்பாடிகளாக இருந்தார்கள்.

அரசவைக்கவிஞர்கள் வெற்றிப்பரணிதான் எழுதினார்கள். மக்களின் துயரத்தை எழுதுவது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என நினைத்தார்கள். மற்றவர்கள், அதிகார அமைப்புக்கள் பற்றிய ஓயாத விமர்சனங்களைத்தான் வைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் மக்களின் அவலம் பேசப்பட்டிருக்கவில்லை. மக்களும் அப்படித்தான். எதோஒரு நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டவர்கள்தானே. அந்தவகையில் இதையும் பொறுத்துக் கொண்டார்கள்.

கேள்வி- சமகாலத்தில் தங்களைக் கவர்ந்த ஈழத்து- தமிழகப் படைப்பாளர்கள் யாவர்?

பதில்- உமாவரதராஜன், ரஞ்சகுமார், சோபாசக்தி போன்ற ஈழக்கதைசொல்லிகள் பிடிக்கும். முன்னையவர்கள் இருவரும் இப்பொழுது அவ்வளவாக எழுதுவதில்லை என்பது வருத்தமே. தமிழகத்தில் ஜெயமோகன் தொடக்கம் சாணக்கியா வரை ஏராளம் பேர் உள்ளனர்.

கேள்வி- உங்கள் எழுத்துப் பயணத்தில் அதிகம் துணைவருபவர்கள் குறித்துக் கூறுங்கள்….

பதில்- எழுதி சம்பாதித்ததென்று சொன்னால் நிறைய நண்பர்கள்தான். இவர்கள் எல்லோரிற்கும் அன்பை பகிர்ந்தளிக்க முடியாமல் நான் பலதடவைகளில் தடுமாறிப் போயிருக்கிறேன். எல்லா நண்பர்களும் எதோவிதத்தில் துணையாயிருப்பவர்கள்தான். அவற்றில் பேதம்காண முடியாது.

ஆனாலும் த.அகிலன் பற்றி குறிப்பிட்டு விட வேண்டும். அவர்தான் எனது பதிப்பாளர். அவரது வடலி பதிப்பகத்தால்த்தான் எனது புத்தகங்கள் அனைத்தும் வெளிவந்தது. அவர் இந்தியாவில் இருந்தபடி, சமூகவலைத்தளங்களின் உதவியினால் மீண்டும் என்னை கண்டுபிடித்தார். அது தேவதைகளின் தீட்டுத்துணி வெளியான சமயம். உடனடியாக புத்தகம் போடுவோம் என்றார். திட்டமிட்டு நான் கதைகள் எழுதியது கிடையாது. மூன்றாவது தொகுப்புவரை எதையும் திட்டமிட்டு எழுதியதில்லை. திடீர்திடீரென அவற்றை தொகுக்கலாமே அவர்தான் புத்தகமாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற நண்பர்கள்.

கேள்வி- போருக்குப் பின்னரான இலங்கைத்தீவில் படைப்பு முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

பதில்- இலக்கியத்தில் அப்படி ஒரு வகைப்பாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. போருக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் உள்ளது. பச்சைமிருகம், முள்சப்பாத்து, துப்பாக்கிகுழல் என முன்னரும் பூடகமாக கவிதை எழுதினார்கள். இப்பொழுதும் அப்படித்தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். முள்க்கம்மி வேலிப்படங்களைப் போட்டு அவை சஞ்சிகைகளில் பிரசுரமாகிக் கொண்டுதான் உள்ளன. முன்னரும் அப்படித்தான் இலக்கியத்தின் நிலைமை இருந்தது.

என்ன, போர்க்காலத்தில் நிறையப் பேர் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார்கள். அவர்களில் சிலர் படைப்பாளிகளானார்கள். இப்பொழுதும் நிறையப்பேர் எழுதுகிறார்கள். அவர்கள் பேஸ்புக்கில் எழுதுவதால், படைப்பாளிகள் உருவாகும் வீதம் மிகக்குறைவாக உள்ளது.

இப்பொழுதுள்ள மிகச்சிறியளவான மாற்றமென்றால் அதிகாரத் தரப்புக்களை அண்டியிருத்தல், அரசியல் கனவுகளை எழுதுதல் என்ற போக்கில் படைப்பாளிகளிடம் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறிய அளவில் மக்களின் பிரச்சனைகள் பற்றி எழுதுகிறார்கள்.

கேள்வி- சிங்கள- தமிழ் இலக்கியங்களிடையே தாங்கள் காணும் ஒப்புமை என்ன?

பதில்- இப்படியொரு கேள்வியே அடிப்படையற்றது. இலக்கியமென்பது தனியே எழுத்தில் வந்த பிரதிமட்டுமல்ல. இது ஒரு சூழல். சூழலுடன் பின்னிப்பிணைந்தது. தமிழகத்தில், சிங்களத்தில் இலக்கியத்திற்கான பலமான தளம் உள்ளது. நம்மிடம் அப்படியல்ல. நம்மிடமுள்ள இலக்கியவாதிகளெல்லாம் பகுதிநேர இலக்கியவாதிகள்தான். இதுதான் நமது சூழலில் கொண்டாடப்படத்தக்க பிரதிகள் உருவாகாதாதற்கான அடிப்படைக்காரணம். சிங்களம் மட்டுமல்ல, நமக்கு பரிச்சயமான அண்டைய இலக்கிய பிரதேசங்கள் எதனுடனும் ஈழஇலக்கியங்கள் எந்த ஒப்புவமையையும் காணமுடியாது. நம்மிடமுள்ளவையெல்லாம் மேலோட்டமான இலக்கியப்பிரதிகள்தான். இலக்கியமென்பதென்ன? நுண்ணுணர்வுகள்தானே? அந்த வகை இலக்கியங்கள் நம்மிடம் தோன்றவில்லை.

யுத்தம் பற்றி சிங்களத்தில் நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். அவற்றின் மொழிபெயர்ப்புக்கள் தாராளமாக தமிழிலும் இப்பொழுது கிடைக்கிறது. அவர்கள் தமிழர்களை ஆதரவுநிலையிலிருந்தும், எதிர்நிலையிலிருந்தும் பார்த்திருக்கிறார்கள். அதுவல்ல பிரச்சனை. அவை பேசும் மனிதஉணர்வுகள்தான் அவற்றின் இடத்தை தீர்மானிக்கின்றன. ஸிராணி ராஜபக்ச (இவர் ஒரு பத்திரிகையாளராகவும் கடமையாற்றியவர்) சேபாலிக்க என்றொரு கதையெழுதியிருந்தார். எல்லைப்புற கிராமங்களில் வாழும் சிங்களமக்களின் பிரச்சனைகளை பேசுகிறது. அந்த கதையில் பேசப்பட்டவிடயம் நடந்திருக்குமா இல்லையா என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. அதுஒரு இலக்கியப்பிரதியாக பேரதிர்ச்சியை தருவது. நம்மிடம் அப்படியான பிரதிகள் வெகுஅரிது.

இதற்கு இன்னொரு காரணம், நம்மவர்கள் பலர் படைப்பாளிகளாவதற்கு முன்னர் அரசியலாளர்களாகி விடுகிறார்கள். மற்றது, விமர்சகர்கள் என்ற பெயரில் உலாவுபவர்கள். அவர்கள் வைத்திருக்கும் ஒரே அளவுகோல் தேசியம். ஒரு பிரதி ஆராயப்பட முன்னர், அந்த எழுத்தாளரை ஆராய்கிறார்கள். அவரது கடந்த காலத்தை ஆராய்கிறார்கள். சொன்னால் அதிர்ச்சியாகவும், சிரிப்பாகவும் இருக்கும். ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். இணையத்தள பாவனை சகஜமானதன் பின்னர் இப்படியொரு கலாசாரம் உருவெடுத்துள்ளது. முதலில் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வை ஆராய்கிறார்கள். அவரிற்கு பெண் தொடர்புகள் இருந்ததா என அலசி ஆராய்கிறார்கள். அப்படியேதுமிருந்தால் சுலபமாக விடயத்தை முடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். இந்த காரியம் முடிவதற்குள் அவர்களிற்கு எந்தப்படைப்பை பற்றி பேச ஆரம்பித்தோம் என மறந்துவிடும். பின்னர் அடுத்தவர் மீது தாவிவிடுகிறார்கள். இந்த சூழலை வெகுசிலரால்த்தான் எதிர்கொள்ள முடிகிறது. மற்றவர்கள் அந்த சூழலிற்கிசைவாக தம்மை மாற்ற விரும்புகிறார்கள். அதனால் நமது படைப்பிலக்கியம் தனது தன்மைகளை வெகுவாக இழந்து கிட்டத்தட்ட அரசியல்க்கட்டுரைகளை ஒத்தவையாகிக் கொண்டிருக்கின்றன.

நாம் யாருடனும் நம்மை ஒப்பிட முடியாதென்பதே துரதிஸ்டவசமான உண்மையாகும்.

கேள்வி்- யுத்தகாலத்தில் எழுதியவர்கள் பலர் இப்பொழுது தமது நிலைப்பாடுகளுக்கு நேரெதிரான தன்மைக்கு வந்துவிட்டதாக- அல்லது இருவேறு காலகட்டங்களிலும் வேறுபட்ட விதத்தில் எழுதிக்கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்துத் என்ன கூறுகிறீர்கள்?

பதில்- நானறிந்தவரையில் நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை மிகநுணுக்கமாக ஆராய்ந்து சொல்பவர்கள் மிக அரிதானவர்கள்தான். இந்த விமர்சனத்தை வைப்பவர்களிடமுள்ள ஒரேயொரு அளவுகோல் என்ன தெரியுமா? நிவாரணஅட்டையை பார்ப்பதைப்போலத்தான் பார்க்கிறார்கள். அவர் எந்தப்பிரதேசத்தில் இருந்தார் என்ற ஒன்றை மட்டும்தான் பார்க்கிறார்கள். இங்கே யாரும் புவியல் எல்லைகள் பற்றிய விவாதம் நடத்தவில்லையல்லவா? அதனாலேயே இந்த விமர்சனங்கள் மிகமோலோட்டமானவையாக அவற்றின் அர்த்தங்களை இழந்து விடுகிறது. அதற்காக இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றுமல்ல. ஒரு குறிப்பிட்ட தொகையான படைப்பாளிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள். ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

படைப்பாளிகளில் பலர் முன்னர் அமைப்புகள் சார்ந்திருந்தவர்கள். கலை இலக்கிய செயற்பாடுகளெனிலும், அவர்கள் போஷிக்கப்பட்டவர்கள். யுத்தம் முடிவில் ஏற்பட்ட சடுதியான மாற்றத்தால் அவர்களில் பலர் நடுத்தெருவிற்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் பட்டங்கள் இல்லை. தொழில்தேர்ச்சிகள் இல்லை. பணவசதி பெற்றவர்களும் இல்லை. அவர்களிற்கு தெரிந்ததெல்லாம், அரசவைகளில் கவிபடிப்பது. அதனை செய்கிறார்கள். அவ்வளவே.

எல்லா இடங்களிலும் அரசவைக்கவிகளாக இருப்பவர்களும் தமிழ்தேசியத்தை விமர்சிக்கிறார்கள்தான். எந்த அரசியலடையாளமற்ற சிலரும் விமர்சிக்கிறார்கள். அவர்களால் சொல்லப்படும் விடயத்தையா? அதனை யார் சொல்கிறார்கள் என்பதையா பார்க்கப் போகிறோம் என்பதிலேயே அனைத்தும் உள்ளது. விடயத்தைப் பார்க்கப் போகிறோம் என்றால், நீங்கள் அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. பிரதியை மட்டும் படித்தால் போதும். எழுதியவரின் பின்னணியை அறிய வேண்டுமெனில், தற்போதைய தமிழ்ச்சூழல் தனது அளவுகோல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மவர்களிடம் இப்பொழுது உள்ளது இரண்டே இரண்டு அணிகள்தான். ஒன்று தியாகி. மற்றது துரோகி. புகழ்ந்தால் தியாகி. விமர்சித்தால் துரோகி. இந்த மனநிலையை கடந்தால்த்தான் மேலே சொன்ன வித்தியாசங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இப்படியான விளக்கங்கள் எல்லாவற்றையும் விட மிகச்சுலபமாக என்னால் சொல்லக்கூடியது, நீங்கள் படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் தொடர்பில் அதீத கற்பிதங்களோ, பிரமைகளோ கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றில் நமது சமூகமே பிரமிக்கத்தக்கதாக எழுத வேண்டும். அதனைவிட முக்கியமாக எழுத்திற்கும் வாழ்விற்குமிடையில் பேதமில்லாமல் இருக்க வேண்டும். நம்மிடம் அப்படியானவர்களோ அப்படியான சூழலோ கிடையாது. ரௌடிகளை ஏற்றும் வாகனம் வந்தால் நானும் ரௌடிதான் என்று ஏறுவார்கள். சாமியார்களை ஏற்றும் வாகனம் வந்தால் நானும் சாமியார் என்று ஏறுவார்கள். அவ்வளவுதான்.

கேள்வி- மேற்குறித்த இருவேறு காலகட்டங்களிலும் தங்கள் படைப்புக்கள் தொடர்பில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வரவில்லையா?

பதில்- நானும் சராசரி இளைஞனாகத்தான் எழுதத் தொடங்கினேன். அந்தப் பரவத்திற்கான எல்லாவிதமான இயல்புகளும் இருந்தன. ஆனால், எழுத ஆரம்பித்த ஓரிரு வருடங்களிலேயே எனக்கான அடித்தளத்தை கண்டடைந்து விட்டேன். வாழ்வும், வயதும், அனுபவமும் அதனைச்சாத்தியமாக்கியிருக்கலாம் என நினைக்கிறேன். அப்போது அப்படியெழுதினாய், இப்போது இப்படியெழுதுகிறாய் என்பது மாதிரியான மேலோட்டமான கேள்விகளெதுவும் இதனால் என்னை நோக்கி எழுப்பப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் எனது எழுத்தின் அடிப்படைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனால் இரண்டு காலகட்டங்களிலும் எந்தவிதமான பெரும் வித்தியாசங்களை காணவில்லை.

எந்தக்காலகட்டத்திலும் படைப்பாளியாக சுயாதீனமாக இயங்குவதொன்றுதான் எனது அடிப்படையான குறிக்கோள். அது முடியாமல் போனாலோ, அல்லது அதற்கான சூழல் இல்லாமல் போனாலோ எழுதுவதை நிறுத்திக் கொண்டுகூட விடலாம். நான் எழுதாமல் விடுவதால் யாருக்கும் எந்த நட்டமும் கிடையாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அப்படித்தான் முதலில் 2006இன் ஆரம்பத்தில் நிறுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

இதனை சொல்வதால், நான் இன்றைய சூழலை வரவேற்பதாக யாரும் கருதக்கூடாது. ஏனெனில், இப்பொழுதும் நான் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்தான். கடந்த ஆறுமாதமாக அப்படியொரு முடிவில் இருக்கிறேன்.

கேள்வி- யுத்தகாலத்தில் எழுதியதற்கும் தற்போது எழுதுவதற்கும் இடையில் ஏதாவது வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

பதில்- எல்லாக்காலத்திலும் நான் சுயாதீனத்தை விரும்புகிறேன். அப்படித்தான் எழுதுகிறேன். அது இல்லாத சமயத்தில் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன். மேலே உள்ள பதிலிலும் இதற்கான பதில் ஓரளவு உள்ளது. இந்த இரண்டு பதிலையும் தொகுத்துப்பார்த்தால் பதிலை உங்களால் தொகுத்துப்பார்க்க முடியும்.

கேள்வி- ஒரு எழுத்தாளன் சூழலுக்கேற்ப தன்னை மாற்றுகிறானா அல்லது சூழல் அவனை மாற்றுகிறதா?

பதில்- எல்லாவற்றையும் விட மனித வாழ்க்கைதானே உன்னதமானது? எழுத்திற்காகத் தெரிந்து உயிரைக்கொடுத்த நமது படைப்பாளி ஒருவரையாவது உங்களுக்குத் தெரியுமா? எழுத்தாளர்கள் என்றல்ல, எல்லா மனித உயிர்களுமே சூழலுக்குத்தக்கதாக மாற்றமடைகின்றன.

கேள்வி- படைப்புலகில் தாங்கள் சந்தித்த சவால்கள் குறித்துக் கூறுங்கள்?

பதில்- நிறைய உண்டு. ஆனால், சில சவால்களைக் குறித்துப் பேசுவதாலேயே இன்னும் அதிகமான சவால்களைச் சந்திக்க வேண்டிய காலமிது. அனைத்தையும் தயக்கமின்றிப் பேசுமொரு காலத்தில் எல்லாவற்றையம் பேசுவோம்.

கேள்வி- போர்க்காலத்தில் தங்கள் கைகளைத் தவறிச்சென்ற படைப்புக்கள் குறித்து வருத்தப்பட்டதில்லையா?

பதில்- எனது முதற்காலகட்டக் கதைகள் மொத்தமாகத் தவறிவிட்டதன. நான் கதைகளைப் பத்திரமாகச் சேமிப்பதில், ஒழுங்குபடுத்தி வைப்பதில் அக்கறையில்லாதவன். எழுதிய அனைத்தும் அச்சுப்பிரதிகளாகவே இருந்தன. பிரசுரமான, பிரசுரமாகாத சுமார் 150 கதைகள் மற்றும் சில கவிதைகள் தவறிவிட்டன.

நானும் இயந்திரத்தனமாக எழுதுவேன். கடந்தவை பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. அது எந்தப்பெரிய விபத்தாக இருந்தாலும். இரண்டு காரணங்களினாலும் அது என்னை நிலைகுலைய வைக்கும் இழப்பாக இருக்கவில்லை. ஆனாலும், சமயங்களில் ஒருவிதமான அங்கலாய்பை அவை ஏற்படுத்துவதுண்டுதான்.

கேள்வி- எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்- உண்மையைச் சொன்னால், நான் அப்படித் துளியளவுகூட நினைக்கவில்லை. தேவையெனில், அவை பலசரக்குக் கடைக்காரர்களுக்கு மட்டும் உதவலாம். எழுத்தின் பணியும் அதுவல்ல என்றுதான் நினைக்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில், யாரும் கதையோ கட்டுரையோ எழுதத் தேவையில்லை. பிரசாரக்கூட்டங்கள்தான் வைக்க வேண்டும். எழுத்திற்கு அதற்கப்பாலான அர்த்தங்கள் உள்ளன.

நமது சூழலைப்பற்றி முன்னரே சொல்லிவிட்டேனே. நம்மிடம் படைப்பிற்கான சூழல் இல்லை. அதனால் எந்தப்படைப்பும் அதிகளவில் மக்களைச் சென்றடையாது. அதனைவிட, அப்படியான படைப்புக்களை உருவாக்கும் படைப்பாளிகளும் இல்லை. அதனால்- இந்த விழிப்புணர்வு, புரட்சி என்று கதைவிட்டுக் கொண்டுவரும் போலிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கையைத்தான் என்னால் விடமுடியும்.

- See more at: http://yokarnan.com/?p=499#sthash.4rcTjaOb.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒரு சின்ன கேள்வி கேட்க ஆசை .......
 
நீங்கள் கிறுக்காவிட்டல் இலக்கியம் செத்திடுமா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.