Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இருந்திருந்தால் அரசியற்கட்சிகள் குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன் - புலிகளுடன் இணைந்து கொள்வதிலேயே ஆர்வம் இருந்தது: - இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
pal-richart-06114-350-article.jpg

இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில் இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது.

   

விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோரும் பழ. ரிச்சர்ட் , முன்னிலை சோசலிசக் கட்சியை இனவாதக் கட்சி எனவும் புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கும் சம உரிமை இயக்கத்தினரை சுயநலவாதிகள் எனவும் சாடுகின்றார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக, சகல இனங்களையும் இணைத்து ஓர் இடது போராட்ட வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென அறைகூவுகிறார். அரசுக்கு எதிரான மாற்று அரசியற் செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதுமான இலங்கைச் சூழலிலிருந்து ஒலிக்கும் குரல் ரிச்சர்ட்டுடையது.

இது இன்றைய இலங்கை இளைஞனின் குரல். ஓயாத அரசியற் செயற்பாடும் அர்ப்பணிப்புமுள்ள அரசியல் மனிதனின் குரல். இனவாத அரசின் அடக்குமுறைகளுக்குப் பணிந்துவிடாத இளம் கம்யூனிஸ்ட்டின் குரல்.

(‘எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்’ தொகுப்பு நூலுக்காக ஷோபாசக்தி அவர்களால் பழ. ரிச்சர்ட் அவர்களிடம் மின்னஞ்சல் வழியே நிகழ்த்தப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி)

நான், உலக முடிவு என அறியப்படும் ‘ஹோட்டன்’ பிரதேசத்தில் அமைந்திருக்கும் சந்திரி கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த இடமே இலங்கையில் இருக்கும் மிகப் பின்தங்கிய பகுதியாகும். எனது பெற்றோர்,வீட்டாரின் எதிர்ப்புகளை மீறிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். எனது தகப்பனாரின் குடும்பம் புத்தளம் பலாவி பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பம். தாயாரின் குடும்பம் பதுளை பிரதேசத்தில் வசித்தார்கள். எனது பள்ளிப் பருவம்வரை சமூகத்துடன் தொடர்புகளற்ற, ஒருவகையில் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையே எனக்குக் கிடைத்தது. எனக்குச் சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கையும் இருக்கவில்லை. இடைநிலைப் பாடசாலைக் கல்வியை கண்டியின் றோயல் கல்லூரியில் கற்றேன். அப்பாடசாலை ஒரு முன்மாதிரிப் பாடசாலையாகும். சிங்கள - தமிழ் -முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாகக்கூடியிருந்து கற்ற பாடசாலை. எனது பட்டப்படிப்பினை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கற்றேன்.

உங்களது அரசியல் ஈடுபாடு எங்கிருந்து ஆரம்பமாகியது?

எனது அரசியல் ஆர்வம் எனது குடும்பத்திலிருந்தே ஆரம்பித்தது. பெரியவர்களும் எனது வீட்டாரும் அரசியல் விடயங்களைக் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்த கதைகளிலிருந்து எல்.டி.டி.ஈ - ஆர்மி என்ற சொற்கள் எனக்கு அறிமுகமாகின. அவர்களின் கதைகளிலிருந்து எல்.டி.டி.ஈ என்பவர்கள் நல்லவர்கள் என்றும் ஆர்மி என்பவர்கள் கெட்டவர்கள் என்றும் அறிந்தேன். ஆனால் சிங்களவர்களைக் குறித்து அறியவில்லை. சிங்களவர்கள் என ஒரு மக்கள் இனம் இருக்கின்றது என்பதை எனது பத்தாவது வயதில் தான் அறிந்தேன். முதற் சிங்களவரை நான் சந்தித்த கணம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. முதலாம் வகுப்புப் படிக்கும் காலத்திலே, நல்லவர்களை எல்.டி.டி.ஈ என்றும் எனக்குப் பிடிக்காதவர்களை ஆர்மி என்றும் வகைப்படுத்தி வைத்திருந்தேன்.

பள்ளி நண்பர்களிடையே எல்.டி.டி.ஈ - ஆர்மி எனக் குழுக்களை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் எல்.டி.டி.ஈ - ஆர்மி என்பதன் அர்த்தங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அது எந்தளவிற்கு என்றால், எல்.டி.டி.ஈ என்பதும் ‘புலிகள்’ என்று அழைக்கப்படுபவர்களும் ஒரே ஆட்களே என்பது கூடத் தெரியாது. என் வீட்டில் பெரியவர்களின் கதைகளில் ‘புலிகள்’ என்ற சொல் உச்சரிக்கப்படும் போதெல்லாம் எங்களது பக்கத்து வீட்டில் இருந்த பயங்கரமான புலிப் பொம்மைதான் கண் முன்னேவரும். ஆனால் என் சக மாணவர்கள் பலர் அவர்களின் குடும்பங்கள் வாயிலாக எல்.டி.டி.ஈ என்பவர்கள் மோசமானவர்கள் என அறிந்து வைத்திருந்தார்கள். இதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையில் சண்டைகள் வரும். அந்தச் சண்டைகளில் ஏற்பட்ட சிறு தழும்புகள் இன்னும் என் உடலில் இருக்கின்றன.

அத்தோடு எனக்கும் என் மூத்த தங்கைக்கும் எப்போதும் சண்டை தான். வீட்டிற்கு வருபவர்களிடம் என்னையும் என் தங்கையையும் இவர்கள் எல்.டி.டி.ஈ - ஸ்ரீலங்கா போல என்றே எனது பெற்றோர்கள் அறிமுகப்படுத்துவார்கள். இவை எல்லாம் உள்ளீடு அற்ற சிறிய விடயங்கள் தான். ஆனால் இவை எனக்குள் பாரிய தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை இன்று உணர்கின்றேன். நான் தரம் இரண்டாவது படிக்கும் காலத்தில் ஜனாதிபதி பிரேமதாசா கொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிச் சடங்குகளை தொலைக்காட்சியில் பார்த்ததும் அவை எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.

எனது தந்தையார் கிளிநொச்சி, வவுனியாப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது ஆயுத இயக்கங்களுடன் அவருக்கு நேர்ந்த அனுபவங்களைக் கூறுவார். அந்தக் கதைகளைக் கேட்பதில் எனக்கு எப்போதும் அதிக ஆர்வம் . தந்தையார் வாகனத்துடன் ஆயுத இயக்கங்களிடம் அகப்பட்டு அந்த இயக்கங்களில் வாகனச் சாரதியாகச் செயற்பட நேர்ந்த அனுபவங்களையும் கூறுவார். எனது உறவினர்கள் சிலரும் இயக்கங்களில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற அனுபவங்களைக் கூறியிருக்கிறார்கள்.

இவை எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டன. பாடசாலைக் காலங்களில் வரலாறையும் சமூகக் கல்வியையுமே அதிகமாக விரும்பிப் படிப்பேன். அப்போதிலிருந்தே நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகிவிட்டது. எனக்குத் தெரிந்ததைக் கொண்டு நண்பர்களுடன் அரசியல் கதைப்பதுண்டு. எமது பாடசாலையில் கற்பித்த முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் உலக நடப்புகளை, உலகப்போர்களை, இஸ்லாமிய நாடுகளின் மோதல்களை கதைபோல விபரித்து வகுப்புகளை நடத்துவார். அந்த வகுப்புகளும் நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அரசியல் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தின. உயர்தரம் படிக்க ஆரம்பித்த போதே எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

ஆனால் பரீட்சையை இலக்கு வைத்த எமது கல்விமுறை எனக்கு அதற்கான சந்தர்ப்பங்களை வழங்கவில்லை. பாடசாலைக் கல்வியை முடித்த பின் அரசியல் தொடர்பான நிறைய நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் கால கட்டத்தில் தான் மார்க்ஸியக் கோட்பாடுகள் எனக்கு அறிமுகமாகின. அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. ஒரு மார்க்ஸியக் கட்சியாக எனக்குத் தெரியவில்லை. விக்ரமபாகு கருணாரட்னவும் , சிறிதுங்க ஜெயசூர்யாவுமே அப்போது நான் அறிந்திருந்த இடதுசாரிகள். பாடசாலைக் காலத்தில் சிங்கள மாணவர்களிடம் நிறையவே இனவாதத்தினைக் காணக் கூடியதாகயிருந்தது. தமிழன் என்ற காரணத்திற்காக புறக்கணிப்பிற்கு ஆளாகும் , ஒடுக்கப்படும் அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன.

ஆகவே அந்தக் காலப்பகுதியில் கட்சி ஒன்றில் இணைந்து அரசியல் செய்யும் நோக்கமிருக்கவில்லை. புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதிலேயே எனது முழு ஆர்வமும் இருந்தது. அப்போது தற்போதுபோல தொலைபேசிப் பாவனையோ இணையத்தளப் பாவனையோ இருக்கவில்லை. ஆகவே எனக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளும் எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை. 2005-ல் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எல்லா இடங்களிலும் உலவ ஆரம்பித்தார்கள். அந்தக் காலப்பகுதியில் கண்டி நகரத்தில் புலிகளின் அடையாள அட்டைகளுடன் பலர் நடமாடினார்கள். அவர்களில் சிலருடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டன.

கண்டி புகையிரத நிலையத்தில் புலிகளின் அடையாள அட்டையுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக உலவினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் உதவி என்ற பெயரில் பொய் கூறிப் பணம் பறிப்பவர்களாகவே இருந்தனர். என்னுடன் அந்த நோக்கத்திலேயே கதைத்தார்கள். அவர்கள் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி வேலை தேடிவந்தவர்கள் எனப் பின்னரே அறிய முடிந்தது. மறுபடியும் யுத்தம் ஆரம்பித்த பின்பு அவ்வாறானவர்களைக் காணமுடியவில்லை. தமிழ் மக்கள் மீதான அநீதிக்கு எதிரான போராட்டத்தில் என்னை இணைத்து கொள்ளும் நோக்கிலேயே யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினைப் பட்டப் படிப்பிற்காகத் தெரிவு செய்திருந்தேன். அது சிங்கள இனவாதம் உச்சத்தில் இருந்த காலம்.

சாதாரண சிங்கள மக்களும் தமிழர்களைக் கண்டால் மறித்து விசாரணை நடத்திய காலம். அடையாள அட்டையை பரிசோதனை செய்த காலம். இரண்டு பேர் சிறிது நேரம் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தாலே யாராவது சிங்களவர்கள் வந்து விசாரித்து விட்டு நோட்டமிடுவார்கள். எனக்குச் சிங்களவர்கள் மீது அதிகப்படியான கோபம் அந்த காலத்திலிருந்தது. பல்கலைக்கழகப் படிப்பை ஆரம்பிக்கும் போது இடதுசாரியக் கொள்கைகளால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். யுத்தம் ஆரம்பித்த காலத்திலேயே பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அந்தக் காலப்பகுதியில் விரைவாக, சிங்களம் பேசக் கற்றுக்கொண்டேன். பல்கலைக்கழகம் சென்று முதல் வருடம் நிறைவடையும் போது யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது. அதன் பின்னரே அரசியற் கட்சி ஒன்றில் இணைவது குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் தமிழ் அமைப்பொன்றோடு இணையாமல் ஜே.வி.பியோடு நெருக்கமானதிற்குகாரணங்களென்ன?

உண்மையில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் அரசியற்கட்சிகள் குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன். யுத்தம் முடிந்த பின்னரே அரசியற்கட்சி ஒன்றில் இணைந்து கொள்வது அல்லது புதிதாக அமைப்பொன்றை உருவாக்கிச் செயற்படுவது குறித்துச் சிந்தித்தேன்.

நான் ஜே.வி.பியில் உறுப்பினராக இணைந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் பல கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயற்பட்ட காலத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். 2009 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த துவாரகா என்ற மாணவியை விரிவுரைமன்றத்திற்கு வெளியே வைத்துப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றார்கள்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இராணுவம் கைப்பற்றிய இடங்களில் தேடுதல் நடத்திய போது குறிப்பிட்ட மாணவியின் வீட்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கையொப்பமிட்ட சான்றிதழ் ஒன்று இராணுவத்திடம் சிக்கியதின் பேரிலேயே அவரைப் புலனாய்வுப் பிரிவினர் கடத்தினர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி மாணவியின் பாதுகாப்பிற்குக் குரல் கொடுக்குமாறு பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டேன். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலரின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றேன். எனினும் யாரும் இதில் அக்கறை செலுத்தவில்லை.

‘அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ கடத்தப்பட்ட மாணவிக்காகக் குரல் கொடுத்தது. மாணவியைக் கடத்தவில்லை எனச் சாதித்துக் கொண்டிருந்த புலனாய்வுத் துறை விசாரணைக்காக மாணவியைக் கைது செய்ததாக, ஒன்றியத்தின் அழுத்தம் காரணமாக ஒப்புக்கொண்டது. இந்தப் போராட்டங்களின் போதே ஜே.வி.பியின் தலைவர்களுடன் எனக்குத் தொடர்புகள் ஏற்பட்டன. அதன் பின்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரைச் சேர்த்து ஜே.வி.பியினர் ‘நாம் இலங்கையர் ‘ எனும் அமைப்பினை உருவாக்கிக் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களிற்காகக் குரல் கொடுக்க முன்வந்தார்கள். இந்த அமைப்பில் நானும் செயற்பட்டேன்.

அதேவேளையில் பல தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்பில் இருந்தேன். நான் செயற்படக் கூடிய தளம் ஒன்றினை இனங்காண்பதே அந்தக் காலகட்டத்தில் எனது நோக்கமாக இருந்தது. தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் ஏமாற்றம் தருவனவாகவே இருந்தன. இடதுசாரி அரசியலில் எனக்கிருந்த ஈடுபாடு காரணமாக ஜே.வி.பியினருடன் சற்று நெருக்கமான தொடர்பு இருந்தது. பல்கலைக்கழக வாழ்வின் இறுதிக்கட்டங்களில் புதிதாக அரசியல் இயக்கமொன்றை உருவாக்கிச் செயற்படுவது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அது சாத்தியப்படாததால் நவ சமசமாஜக் கட்சியின் விக்ரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோசலிஸக் கட்சியின் சிறிதுங்க ஜெயசூர்ய போன்றவர்களுடன் இணைந்து செயற்பட முயற்சிகளை நான் மேற்கொண்ட வேளையிலே தான் ஜே.வி.பிக்குள் முரண்பட்டு ஓர் அணி வெளியேறியது. அவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியதன் பின்பாக அவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே அவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். அவர்கள் மக்கள் போராட்ட இயக்கமென்ற பெயரில் இயங்க ஆரம்பித்த நாட்களில் தான் உறுப்பினராக இணைந்து கொண்டேன்.

உண்மையில் தமிழ்க் கட்சித் தலைமைகளிடம் இடதுசாரி அரசியலையோ, ஆழ்ந்த அர்ப்பணிப்பையோ நான் காணவில்லை. மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. யாரிடமும் சமூகம் தொடர்பான நிலையான கொள்கைகள் இருக்கவில்லை. எழுந்தமானமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச் சமூகத்தை ஒன்று திரட்டி, சாத்தியமான சிங்களவர்கள் அனைவரினதும் ஆதரவைத் திரட்டி ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும் ஆளுமை தற்போதைய தமிழ்க் கட்சித் தலைமைகளிடம் இல்லை. அவர்கள் இனப்பிரச்சினை என்பதைத் தவிர வேறு சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. தமிழ்க் கட்சிகள் எதனையும் தெரிவு செய்ய முடியாத நிலையே ஜே.வி.பிக்குள் முரண்பட்டு வெளியேறியவர்களுடன், நான் இணையக் காரணமாக அமைந்தது.

‘மக்கள் போராட்ட இயக்கம்’ ஆரம்பித்த போது தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டியமை, இனவாதத்திற்கு எதிராகச் செயற்பட்டமை தந்த நம்பிக்கை மற்றும் அவர்கள் முன்வைத்த சுயவிமர்சனம் என்பன எனக்கு ஒரளவிற்கு நம்பிக்கை தந்ததாலேயே ஜே.வி.பியிலிருந்து வெளியேறியவர்களுடன் இணைந்து கொண்டேன்.

ஜே.வி.பி. உறுப்பினர்களோடு பணியாற்றும்போது, அவர்களிடையே இனவாதத்தை நேரடியாகஉணர்ந்தீர்களா?

உண்மையில் இது ஒரு சிக்கலான விடயமாகும். ஜே.வி.பியின் உறுப்பினர்களால் ஒரு தமிழ்க் குடிமகனாவது துன்புறுத்தப்பட்டானா? என ஜே.வி.பியினர் அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். ஜே.வி.பியின் கொள்கையை மேலோட்டமாக விளங்கி கொள்வது இலகுவானது. இனவாதத்தை உபயோகித்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அவர்களின் கொள்கை. ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை விளங்கி கொள்வது கடினமாகவே இருந்தது. தமிழ் மக்களை கடத்துவதும் துன்புறுத்துவதும் தான் இனவாதம் என்று கொள்வோமாயின் ஜே.வி.பி. உறுப்பினர்கள் எவரும் இனவாதிகள் அல்ல.

விடயம் வேறு மாதிரியானது. ஜே.வி.பி உறுப்பினர்கள் இடதுசாரிகளுக்கே உரிய பாணியில் ஏனையவர்களுடன் குரோதமின்றி பழகக் கூடியவர்களாகவே இருந்தனர். அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளையும் உரிமைகளையும் சிடுசிடுத்த முகத்துடன் அல்லாமல் புன்னகையுடன் மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டம் என்பதே ஜே.வி.பியின் புரட்சிக்கான மூலோபாயத் தந்திரமாக இருந்தது. தேசியப் போராட்டம் எனும் போது ஸ்ரீலங்கா என்றொரு தேசியம் இருக்கவில்லை. ஆகவே தேசியப் போராட்டம் என்பது குறுகலான தேசியவாதமாகியதுடன் இனவாதத்திற்குள்ளும் அவர்களை அழைத்து சென்றது. இந்த இனவாதம் தான் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வேக்காரர்களை ‘வெள்ளை புலிகள்’ என்று காயவும் , தென்னிலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சகல சிங்களவர்களையும் ‘சிங்களப் புலிகள்’ எனத் தூற்றி வீடுவீடாகச் சென்று இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் வைத்தது. ‘தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்’ என்ற இனவாத இயக்கத்தையும் ஆரம்பிக்க வைத்தது. இந்த மனோபாவமே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மறுக்கச் செய்து, தமிழ் மக்களின் பிரச்சினையை நிர்வாகப் பிரச்சினையாகச் சித்திரிக்க வைக்கின்றது.

தமிழர்கள் இந்த நாட்டில் தென்னிந்தியப் படையெடுப்புகளால் குடியேறிய வந்தேறு குடிகள் என்ற சிங்கள மக்களின் பொதுப்புத்தி மனநிலையிலேயே ஜே.வி.பி. உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது கட்டாயம், சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு மேலதிகமாக , மொழி ரீதியிலான நிர்வாகப் பிரச்சினைகளே தமிழர்களுக்கு இருக்கின்றன என்ற மனநிலையிலிருந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஜே.வி.பியினர் மறுக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் மகிந்த ராஜபக்சவை விட ஆபத்தான இனவாதிகள். மகிந்த அதிகாரத்தைக் கைப்பற்றவும் பாதுகாக்கவும் இனவாதத்தைப் பயன்படுத்துபவர்.

ஒருவேளை தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்கினால் தான், தனது ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்றால் அதனையும் மகிந்த செய்வார். ஆனால் ஜே.வி.பியினர் தீவிர இனவாதிகள். இயங்கியலின் அடிப்படையில் சிங்கள இனம் முதன்மை பெறும் என்பதும் சுதந்திரமான சூழ்நிலையில் தமிழ் மக்கள் சிங்கள மொழியை விரும்பி ஏற்று கொள்வார்கள் என்பதுவுமே அவர்களின் நிலைப்பாடாகும். இவர்கள் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல, தமிழ் மக்களின் எந்தப் போராட்டத்தையும் இதன் காரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஓர் இனம் தன் உரிமைகளையும் சுயநிர்ணய உரிமையையும் இன மேலாதிக்கத்திலிருந்து விடுதலையையும் கோருவதை இனவாதமாகக் குறிப்பிட முடியாது.

ஆனால் அந்த இனத்திற்கு அப்படி ஒரு பிரச்சினை இல்லை எனக் கூறுவதும் அவ்வாறு கோருவதை இனவாதமாகக் குறிப்பிடுவதும் அவர்களின் போராட்டத்தினை மறுதலித்து அதற்கெதிராகச் செயற்படுவதும் இனவாதம் என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு , சமூகக் கட்டமைப்புகள் குறித்த அடிப்படை விளக்கங்கள் கூட இல்லாமல் அவர்களின் போராட்டங்களை மறுதலிப்பதற்கு காரணம் ஜே.வி.பியினர் கோட்பாடு ரீதியாக நியாயப்படுத்தி வைத்திருக்கும் இனவாதமே ஆகும். இதனை வேறுவேறு வடிவங்களில் சொல்வார்களேயொழிய ஒருபோதும் மாறமாட்டார்கள். ஜே.வி.பியின் உயர் பீடத்திற்கு யார் சென்றாலும் அவர்கள் மாறுவார்களேயொழிய கட்சி நிலைப்பாட்டில் மாற்றம் வரப்போவதில்லை.

ஜே.வி.பி உறுப்பினர்களிடையே இனவாதம் இருக்கின்றதா என்று கேட்பதை விட , ஜே.வி.பி. உறுப்பினர்களிடையே இனவாதம் இல்லாத உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? என்பதே பொருத்தமான கேள்வி என்று நினைக்கின்றேன். அவ்வாறான உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

முன்னிலை சோசலிஸக் கட்சியின் உருவாக்கத்தில் உங்களது பங்கு என்ன?

ஜே.வி.பியிலிருந்து வெளியேறியவர்கள் ‘மக்கள் போராட்ட இயக்கம்‘ என்ற பெயரில் செயற்பட கலந்துரையாடல்களைநடத்திய காலத்திலே அவர்களோடு இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். மக்கள் போராட்ட இயக்கமானது,ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை புரட்சிக்கான வழிமுறையாகக் கொண்டிருந்தது. இந்தநோக்கத்தில் ஒடுக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அய்ம்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகள்ஒன்றிணைக்கப்பட்டன. வெகுசன அமைப்புக்களைக் கட்டும் பணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கட்சி ஒன்றின்அவசியம் விரைவாகவே உணரப்பட்டதால் நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களின் பயனாக ‘முன்னிலை சோசலிசக்கட்சி‘ உருவாக்கப்பட்டது.

கட்சியின் மாணவர் அமைப்பிலும் இளைஞர் அமைப்பிலும் முக்கிய பொறுப்புகளில்இருந்தேன். கட்சியை அமைப்புரீதியாகக் கட்டியெழுப்பும் பணியுடன், கடத்தப்பட்ட லலித் - குகன் விடுதலைக்கானபோராட்டங்கள், இலவசக் கல்விக்கான போராட்டங்கள், கட்சியின் இளைஞர் அணியை உருவாக்குவதற்கானவேலைகள், கட்சியின் தமிழ் உறுப்பினர்களிற்கு அரசியல் வகுப்புகளை நடத்துவது, கட்சியின் கோட்பாடு விவாதங்களில்முனைப்புடன் பங்களிப்பது என ஆரம்ப காலத்தில் எனது பணிகள் அமைந்திருந்தன.

லலித் மற்றும் குகனுடன் பணியாற்றிய நினைவுகள் குறித்து?

லலித்தை அவர் கடத்தப்படுவதற்கு முன்பு ஒன்றரை வருடங்களாக எனக்குத் தெரியும். லலித், இரத்தினபுரிபிரதேசத்தைச் சேர்ந்தவர். லலித்தின் தந்தை தமிழர், தாய் சிங்களவர். அவர்கள் இறப்பர் தோட்டத்தில் பால் வெட்டும்தொழில் செய்கின்றார்கள். லலித் சிங்கள மொழியில் படித்தவர். அவர் சிங்களக் கலாசாரத்துடன் வளர்ந்தவர். தமிழ்கதைக்கத் தெரியும். அவர் ஜெயவர்தன பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் பணியில் இருந்தபோது அந்தப்பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி. அமைப்பாளராக இருந்தவரால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

மார்க்ஸியக்கொள்கைகளில் ஏற்பட்ட பிடிப்பினால் வேலையை உதறிவிட்டு கட்சியில் முழுநேர உறுப்பினராக இணைந்து லலித்செயற்பட்டார். 2009-ற்கு பின்பு வட பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அவர் ஜே.வி.பியால்அனுப்பப்பட்டார். அந்தக் காலப் பகுதியில் ஜே.வி.பி. பின்னால் நின்று இயக்கிக்கொண்டிருந்த அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நான் செயற்பட்டுக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர்புகளால் லலித் என்னைச்சந்திக்க வருவார். சந்திக்க வரும் வேளைகளில் ஜே.வி.பி. தொடர்பாகக் கதைப்பார்.

அவரின் நிலைப்பாடுகளில் எனக்குஉடன்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு குறைந்தபட்சம் மன்னிப்புக்கோராமல் உங்களால் தமிழர்களை அணுக முடியாது என்று நிறையத் தடவைகள் அவரிடம் கூறியிருக்கின்றேன்.அதனை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் வேறுவேறானவர்கள் என்றஜே.வி.பியின் நிலைப்பாட்டையே மீண்டும் மீண்டும் கூறுவார். இந்த நிலைப்பாட்டுடன் என்னைச் சந்திக்க வரவேண்டாம்என்று அவருக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் சந்திக்க வருவார்.

கட்சித் தலைமை சொல்வதைத் தாரக மந்திரமாக ஏற்று வேலை செய்யப் பழக்கப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களில்ஒருவராகவே லலித்தும் இருந்தார். லலித்தின் தந்தை தமிழராக இருந்தாலும் நான் மேலே குறிப்பிட்ட இனவாதமனநிலையிலேயே லலித்தும் இருந்தார். இயல்பாகவே லலித்திடம் அமைப்பு ரீதியிலான பணிகளை மேற்கொள்ளும்திறமை இருந்தது. முதலில் லலித்துடன் நட்புரீதியான சந்திப்புகளே இடம்பெற்றன. ‘நாம் இலங்கையர்‘ அமைப்பில் நான்செயற்பட ஆரம்பித்த பின்னரே லலித்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தேன். காணாமற்போனவர்களின்உறவுகளைத் திரட்டி போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கின்றோம். லலித் கடத்தப்படுவதற்கு மூன்றுமாதங்களிற்கு முன்னால் கிளிநொச்சியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் வைத்தே அவர் குகனைச் சந்தித்திருக்கின்றார்.

குகன், விடுதலை புலிகளின் முன்னாள் போராளி. மணல் அகழும் தொழிலில் ஈடுபட்ட குகன், ஈ.பி.டி.பி.உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிறையில் ஏற்பட்ட நட்பின் வழியேகுகன் கட்சியுடன் இணைந்து செயற்படச் சம்மதித்தார். அதன்பின்பு லலித் அரசியல் பணிகள் செய்வதற்கு குகன்உதவியுள்ளார். ஜே.வி.பிக்குள் முரண்பட்டவர்கள் வெகுசன அமைப்பொன்றைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்களை நினைவுகூறும் நிகழ்வு நடந்தது. ஜே.வி.பியில்முரண்பட்டிருந்தவர்கள் தனியாக ஒரு நினைவுகூறல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்த நிகழ்வில் நான்கலந்துகொண்டிருந்தேன். அங்குதான் முதன் முதலாக குகனைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரமே உரையாடச்சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் கட்சி தமிழர்களின் பிரச்சினையைச் சரிவர விளங்கி கொள்ளாததைக்குறித்த தனது ஆதங்கத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த நிகழ்வு இடம்பெற்ற ஒரு மாதத்தின் பின்பாக, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு தொடர்பான ஊடகமாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு லலித் எனக்கு அழைப்புவிடுத்திருந்தார். நான் மக்கள் போராட்ட இயக்கத்தில் இணைவது தொடர்பாக அதுவரை எந்த முடிவையும்எடுக்காதிருந்ததால் ஊடக மாநாட்டில் பங்கு கொள்ள மறுத்திருந்தேன். லலித் அதற்கு முதல் தினமே யாழ்ப்பாணம்சென்று குகனுடன் ஊடக மாநாட்டிற்கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார். மனித உரிமைகள் தினத்தில் ஊடகமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வேறு அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும்ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் போராட்ட இயக்கத்தினர் பங்குபற்றுவதாக இருந்தது.ஊடக மாநாட்டிற்கான ஒழுங்குகளை செய்துகொண்டிருந்த லலித் என்னுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பில்இருந்தார். ஊடக மாநாட்டில் மொழிப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மொழிபெயர்ப்பு உதவிக்கேனும் வருமாறுகோரினார். அடுத்தநாள் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கும் நான் செல்லவிருந்ததால் வருகின்றேன் எனக்கூறினேன். அன்று இரவு பதினொரு மணிவரை என்னுடன் தொடர்பிலிருந்த லலித்தின் தொலைபேசி மறுநாள்காலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. காலை 11 மணியளவில் லலித்தும் குகனும் கடத்தப்பட்டதை அறிந்தேன்.

ஜே.வி.பி. உறுப்பினர்கள் தலைமை சொல்லும் வேலையைக் கேள்விகளின்றி செய்வதற்குக் கட்சி வகுப்புகள் வழியேபழக்கப்பட்டிருந்தார்கள். உறுப்பினர்கள் கட்சியைக் கடவுள் போல் நம்பினார்கள். சரி - பிழை குறித்துச் சிந்திக்கவில்லை.மாறி மாறி நாட்டை ஆட்சி செய்யும் முதலாளியக் கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் தமது வாழ்க்கையையேஅர்ப்பணிக்கத் தயாராகயிருந்த உறுப்பினர்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை ஒட்ட வைத்து,மகிந்தவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஜே.வி.பி. தலைமை உத்தரவிட்டது .

லலித்தும் அவ்வாறு கட்சிக்குக்கண்மூடித்தனமான விசுவாசியாகவேயிருந்தார். லலித் வடக்கில் மிக முனைப்பாகச் செயற்பட்டார். காணாமற்போனவர்களின் உறவினர்களை ஒன்றிணைத்துப் போராட்டங்களை நடத்த அவரால் முடிந்திருந்தது. ஆரம்பம் முதலேஅரசபடைகளின் கடுமையான அழுத்தம் அவருக்கிருந்தது. ஜே.வி.பியைப் பொறுத்த வரையில் பொது இடங்களில் தமதுஉறுப்பினர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்படுவதை ஊக்குவித்து வந்தார்கள்.

அதன் மூலம் அரசபடையினருக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்ள முடியும், மக்கள் மத்தியில் பிரச்சார வெளிச்சம் கிடைக்கும் என்பதே அவர்களின்கணிப்பாக இருந்தது. இதன் காரணமாக லலித்தின் பாதுகாப்புக் குறித்து கட்சி அசட்டையாகவே இருந்தது. லலித்திற்குத்துணையாகக் கட்சி மேலும் சிலரை அனுப்பியிருந்தால் நிலைமை வேறுமாதிரியானதாக இருந்திருக்கும்.எப்படியிருப்பினும் காணாமற் போனவர்களிற்காக லலித் குரல் கொடுத்த தீவிரம், காணாமற் போனவர்களின்உறவுகளிடையே லலித் மீது அதிகபடியான மதிப்பை உருவாக்கியிருந்தது. அவர்கள் அனைவராலும் லலித்நேசிக்கப்பட்டார்.

குகனின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துத் தெரியவில்லை. அவர் கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம்தெரிவித்த வேளையில் ஜே.வி.பியில் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. அவர் கட்சிச் செயற்பாடுகளில்பங்குகொள்ளும் முன்பே கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல்களில் அரச படைகளுடன் ஈ.பி.டி.பியினருக்கும் நெருங்கியதொடர்பு இருக்கின்றது.

லலித் - குகன் இருவரும் இறுதியாகப் பயணித்த உந்துருளி மீட்கப்பட்ட இடத்திலிருந்துதுப்பாக்கி சூடு நடத்தும் தூரத்திலேயே இராணுவ முகாம் அமைந்திருந்தது. லலித் - குகன் பிரச்சினை தொடர்பாக ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கட்சியுடன் பேரம் பேசியிருந்தார்கள்.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என லலித் உங்களிடம் சொன்னது சரிதானே. புலிகளது அரசியல்நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும் வேறுவேறானவை இல்லையா? புலிகள் இயக்கத்தைக் குறித்தஉங்களது முழுமையான மதிப்பீடு என்ன?

லலித்தும், ஜே.வி.பியும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. புலிகளை விமர்சித்துத் தமிழ் மக்களைத் தங்கள் பக்கம்வென்றுவிடலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே அப்படிக் கூறினார்கள். ஆனால் விடுதலைப் புலிகளைவிமர்சிக்கும் அளவிற்குப் புலிகள் குறித்த ஆய்வுகள் அவர்களிடம் இருக்கவில்லை. இப்படியான விமர்சனங்களைமுன்வைக்கும் போது யுத்தத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு தெரிவித்ததையும் தமிழ் மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதையும்நியாயப்படுத்தியிருந்தார்கள். புலிகளை விமர்சித்துக்கொண்டு தமிழ் மக்களைத் தங்களால் வென்றெடுக்க முடியாதுஎன்பதைக் காலபோக்கில் விளங்கிக்கொண்டு, பின்பு புலிப் புராணமும் பாடினார்கள்.

புலிகள், சிங்கள மக்களின்பிரச்சினைகளையும் கதைத்திருந்தால், அப்பாவிச் சிங்கள மக்களைத் தாக்காதிருந்தால் தாங்களும் புலிகளைஆதரித்திருப்போம் என்றெல்லாம் கூறினார்கள். வடக்கில் அரசியல் பணிகளில் ஈடுபட்ட போது பிரபாகரன் எங்களதுநண்பர் என்றே கூறினார்கள். பிரபாகரனின் தந்தையாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக உதுல் பிரேமரத்ன,சேனாதீர குணதிலக்க தலைமையில் ஒரு குழு பரந்தன் வரை சென்றிருந்தது. அவர்களைத் திடீரென்று ஜே.வி.பி.தலைமை செல்லவேண்டாம் என இடைமறித்து குழுவைத் திருப்பி வரவழைத்தது.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்குஉதுல் பிரேமரத்ன வழங்கிய செவ்வியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்என்று கூறினார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்க, பிரபாகரனின் மரணச் செய்தியைக்கேட்டுக் கண்ணீர்விட்டு அழுததாகக் கட்சிக்காரர்கள் கதையொன்றைப் பரப்பியும் வந்தார்கள். தற்போது ‘மாவீரர் தினம்‘அனுஷ்டிக்க உரிமை இருக்கின்றது என அறிக்கை வெளிவருவதெல்லாம் இதன் காரணமாகத் தான். தமிழ் மக்கள்தனியாட்சி கோரியதை மறுப்பதற்காக புலிகள் வேறு, மக்கள் வேறு என்று கூறினார்களே தவிர ஆழமான பார்வையுடன்கூறவில்லை.

விடுதலைப் புலிகளைத் தவிர்த்து விட்டுத் தமிழ் மக்களின் வரலாற்றையோ, பிரச்சினைகளையோ அணுக முடியாது. அவ்வாறு செய்வது தமிழ் மக்களை கடந்த முப்பது வருடங்களை மறக்க சொல்வதற்கு சமமானதாகும். சரி - பிழைஎன்பதற்கு முதல் நடந்தது போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத்தையும் ஏனைய தமிழ்இயக்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிராக உதித்த போராட்ட இயக்கங்களாகவேபார்க்கின்றேன். அந்த நிலையிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

நடந்த போராட்டங்கள்அனைத்திற்கும் மக்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். அதற்கு காரணம் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின்உணர்வு தான். அந்த வகையில் புலிகள் நடத்தியதும் அவ்வாறான போராட்டம் தான். இந்த நிலைப்பாட்டிலிருந்தேவிமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

ஆயுத அதிகாரத்தை அனுபவித்திருக்காத உழைக்கும் வர்க்கத்தினர் ஆயுதங்களைக் கையிலெடுக்கும் போதுபிற்போக்குத்தனங்கள் வெளிப்படவே செய்யும். புரட்சிகரமான முறையில் தயார்ப்படுத்தப்படாத போது இந்த நிலைமைஇன்னும் தீவிரமாகும். இந்தக் குணாம்சத்தை போராடிய தமிழ் இயக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது.

பதினாறு வயதில் ஆயுதம் தூக்கிய பிரபாகரனை கார்ல் மார்க்ஸ் அளவிற்கு எதிர்பார்த்து யாரும் விமர்சித்தால் அதுபயனுள்ளதாக இருக்காது. இனவொடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் இயக்கம் கோரக் கூடியஉச்சபட்சக் கோரிக்கையை புலிகள் முன்வைத்துப் போராடினார்கள். அவர்கள் தங்களை இடதுசாரிகளாகஅடையாளப்படுத்தவுமில்லை. திறந்த பொருளாதார கொள்கையைத் தான் அவர்களும் முன்னெடுத்திருப்பார்கள். உண்மையில் புலிகள் இயக்கம் விடுதலை பெற்றுத் தரும் என மக்கள் நம்பினார்கள், ஆதரவு அளித்தார்கள். புலிகள்முன்வைத்த தமிழீழத்தில் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்பதே பதில்.அத்தகைய பண்புகளடங்கிய போராட்டத்தை புலிகள் முன்வைக்கவில்லை.

ஆனால் அவர்களின் போராட்டம்இனவொடுக்குமுறைக்கு எதிரானது. இனவொடுக்குமுறை விடயத்தில் புலிகளினதும் மக்களினதும் அரசியல்அபிலாசைகள் ஒன்றானதாகவே இருந்தன. நடந்ததை இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக இனம்கண்டுசரியான விமர்சனங்களைச் செய்து கொள்வதன் மூலமே முன்செல்ல முடியும். விடுதலைப் புலிகளை முற்றாகநிராகரித்து, அழிவிற்குக் காரணம் புலிகள் என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை. ஒருவேளை புலிகள் தமிழீழத்தைவென்றிருந்தால் அங்கும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டக்களமும் வர்க்கப் போராட்டக்களமும் திறக்கப்பட்டேஇருந்திருக்கும்.

சரியானதைச் சரி எனவும் பிழையானதைப் பிழை எனவும் எப்பொழுதும் துணிச்சலுடன் சொல்லவேண்டும். அப்படியானவர்கள் ஒருசிலரே இருக்கின்றார்கள். ஆகவே புலிகள் இயக்கத்தினைத் தமிழர்களின் விடுதலைநோக்கிய பயணத்தின் ஒரு போக்காகவே நான் காண்கின்றேன். இதிற் கிடைத்த அனுபவங்களுடன் நாம் எம்மைத்திருத்திக்கொண்டு முன்செல்ல வேண்டும். அவ்வாறானவர்களிற்கு பிரபாகரனின் புகழ்பாடி அரசியல் செய்ய வேண்டியதேவை இருக்காது.

ஆனால் தற்போது தமிழர்கள் பின்னோக்கிச் செல்கின்றார்கள். புலிகளுக்கு முன்னான வரலாற்றில்போராட்டத்தில் முதன்மை வகித்தவர்கள் அதே பழைய பாதையில் பயணிக்கின்றார்கள். தற்போது தமிழ்ச் சமூகம்பின்னோக்கியே செல்கின்றது. புலிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக குறிப்பிட்டளவு வரலாற்றை முன்நகர்த்தியிருக்கின்றார்கள். அதன் படிப்பினைகளிலிருந்தும் உலக அனுபவங்களிலிருந்தும் நாம் முன்னோக்கியபாதையை உருவாக்க வேண்டும். அதற்கான கோட்பாடுகளை சமூகமயப்படுத்தல் வேண்டும்.

சம உரிமை இயக்கத்தின் உருவாக்கத்தில் உங்களது பங்களிப்புகள் எவை? சம உரிமை இயக்கம்உண்மையிலேயே சுயாதீன இயக்கமா? அல்லது முன்னிலை சோசலிசக் கட்சியின் துணை அமைப்பா?

சம உரிமை இயக்கம் சுயாதீன இயக்கம் அல்ல. சிலரால் பொதுவான தளம் எனப் பிரச்சாரப்படுத்தப்பட்டாலும்உண்மையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் துணை அமைப்பே சம உரிமை இயக்கம்.

சம உரிமை இயக்கத்தினைக் கட்டமைப்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நான்அங்கம் வகித்தேன். சம உரிமை இயக்கம் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கப்படவில்லை. தமிழ் மக்களின்பிரச்சினையில் முனைப்பான தலையீடுகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும், கட்சி எதிர்காலத்தில்இனப்பிரச்சினை தொடர்பான ஒரு தீர்வை முன்வைக்கும் போது ஏற்படக் கூடிய தடைகளை இல்லாதாக்கும் நோக்கிலும்,சகல இன மக்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுக்கவும், இதன் மூலம்குறிப்பிட்டளவு தமிழ் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதுமே கட்சியின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்,மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலருடன் நான்கு சுற்றுகள் கலந்துரையாடல்களைநடத்தினோம். இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்தவர்களின் கருத்துகளையும்உள்வாங்கி சம உரிமை இயக்கத்திற்கான அடிப்படை வேலைத்திட்டத்தை முன்வைத்தோம்.

தேர்வுசெய்யப்பட்டவர்களைக் கொண்டு இனவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கவும், சில கோரிக்கைகளைமுன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் திட்டமிட்டோம். இராணுவ ஆட்சியை நீக்கக் கோரி நாடெங்கும்பதாகைகளில் கையெழுத்திடல், ஹலால் பிரச்சினை குறித்த கருத்தரங்குகள் என்பவற்றை ஆறு மாதங்களாகத்தொடர்ச்சியாக முன்னெடுத்தோம். சம உரிமை இயக்கத்தின் இணை அமைப்பாளராக இந்தப் பணிகள் அனைத்திலும்நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.

நீங்கள் முன்னிலை சோசலிசக் கட்சியிலிருந்து விலகும் முடிவை எப்போது எடுத்தீர்கள் ?

முன்னிலை சோசலிசக் கட்சியில் செயற்பட ஆரம்பித்த சிறிது காலத்திலேயே இனப்பிரச்சினை விவகாரத்தில் கட்சியைவிட்டு வெளியேறிச் செயற்பட நேரிடும் என்பதை உணர்ந்து கொண்டேன். கட்சியை விட்டு வெளியேறிய பலர் இதனைஎனக்குக் கூறிச் சென்றிருந்தார்கள். ஆனால் இத்தனை விரைவில் வெளியேற நேரிடும் என நான் நினைத்தும்பார்க்கவில்லை.

தாய்க் கட்சியான ஜே.வி.பி மீது முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைத்த முதன்மையான விமர்சனமே, கட்சிஉறுப்பினர்களைக் கையாள ஏதேச்சாதிகார ஏமாற்றுத் தந்திரோபாயங்களை ஜே.வி.பி. வகுத்துச் செயற்பட்டதுஎன்பதாகும். அதே விமர்சனத்தைப் பின்பு நான் இவர்கள் மீதே வைக்க நேரிட்டது.

ஜே.வி.பியில் இருந்து பிரியும்போது ஜே.வி.பி. தலைமை பொது எதிரியாகயிருந்ததால் பிரிந்து வந்தவர்களிடையேஇருந்த கருத்து வேறுபாடுகள் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் சிறிது காலம் கடந்ததுமே ஜே.வி.பியில் நடந்ததுபோலவே முன்னிலை சோசலிசக் கட்சியிலும் குறுக்கு வழிகளில்அதிகாரத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள்ஆரம்பித்தன.

கட்சிக்குள் நடந்த மோதல்கள் கட்சியை நிர்வகிக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தின. புபுதுஜெயகொட , குமார் குணரத்தினம் தலைமையிலான குழு - அசோக்க தலைமையிலான குழு என இரண்டு பிரிவுகள்தோன்றின. புபுது ஜெயகொட தலைமையிலான குழு ஜே.வி.பியின் தலைமை போன்று தங்களது ஆதிக்கத்தைநிலைநாட்ட முயல அதற்கெதிரான கருத்துகளுடன் இருந்தவர்கள் அசோக்க தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள்.

இந்தமோதல்களில் குமார் குணரத்தினம் கடத்தப்பட்டது தொடர்பாகக் கட்சி கூறிய கட்டுக்கதைகள், மற்றும் குமார்குணரத்தினம்- திமுது ஆட்டிகல விவகாரங்கள் என்பன வெளிச்சத்திற்குவர இவை அமைப்புரீதியிலான கடுமையானபிரச்சினைகளாக உருவெடுத்தன.

இதனை மூடி மறைக்க குமார் குணரத்தினம் அணியினரால் ‘உட்கட்சி விவாதம்‘ என்றதந்திரோபாயம் திணிக்கப்பட்டது. சொல்வதைச் செய்யப் பழக்கப்பட்ட உறுப்பினர்கள் பலர் எந்தக் கேள்வியும்கேட்கவில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் ஒரங்கட்டப்பட்டார்கள். நெருக்கடிகள் தொடர்பாகக் கட்சித் தலைமைபொய்களைக் கூற ஆரம்பித்தது. போலியான விவாதச் சுற்றுகள் நடத்தப்பட்டன. கட்சிக்குள் தனிமனித ஒழுக்கம் சார்ந்தபிரச்சினைகள் தீவிரமாகத் தலைதூக்கின.

முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது தாய்க் கட்சியான ஜே.வி.பியின் நிலைக்கே சென்றுள்ளது. முன்னிலைசோசலிசக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஒருவரால் முடியுமாயின் அவர் ஜே.வி.பியுடனும் இணைந்து செயற்படமுடியும். கட்சியின் அதிருப்தியாளர்கள் பிரிந்து செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகள்அமையும்போது நிச்சயம் ஒரு பிளவு நடக்கும். பிரிந்து செல்பவர்கள் மீண்டும் முரண்படுவார்கள். இது ஒருதொடர்கதையாகவே இருக்கப் போகிறது.

இவ்வாறான எதேச்சாதிகாரப் போக்கும் அதன் காரணமாக் கட்சியின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளும்கட்சியில் தொடர்ந்தும் செயற்படுவதற்கான எந்த நம்பிக்கைகளையும் எனக்குத் தரவில்லை. தமிழ் பேசும் மக்களைஅரசியல்ரீதியாகச் சென்றடைய முடியாத, இடதுசாரியத் தார்மீக நெறிமுறைகளை மதிக்காத கட்சியில் செயற்படுவதுஅர்த்தமற்றது என்பதாலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இடதுசாரிய அரசியலை வலுவான முறையில் கொண்டுசெல்லும் பணியை ஆற்ற வேண்டும் என்ற இலட்சியத்தினாலுமே கட்சியிலிருந்து விலகிச் செயற்படும் முடிவைஎடுத்தேன். இதன் அர்த்தம் சிங்கள உழைக்கும் வர்க்கத்தினுடன் வர்க்க ஒற்றுமையை மறுப்பதும்அவர்களுடன்ஒன்றிணைந்து சாத்தியமான போராட்டங்களை நடத்துவதை மறுப்பதும் அல்ல.

உங்களது விலகலை முன்னிலை சோசலிசக் கட்சி எப்படி எதிர்கொண்டது, ஏதாவது அச்சுறுத்தல்கள்இருந்தனவா?

கட்சியின் பிழையான போக்கைச் சுட்டிகாட்டி நான் முன்னெடுத்த உட்கட்சிப் போராட்டம் கட்சித் தலைமைக்குநெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே என்னை மாணவர் அமைப்பிலிருந்து வெளியேற்றி, கேகாலை மாவட்டசெயற்குழுவிற்கு மாற்றம் செய்தார்கள். அதன்முலம் என்னால் எழுந்த நெருக்கடியைச் சமாளிக்கவும் மூடிமறைக்கவும்முயன்றார்கள். கட்சியின் இளையோர்கள் மத்தியில் எனது கருத்துக்களுக்கு ஆதரவு கிடைத்ததோடு கட்சியின் போக்கைஎதிர்த்து வெகுசனங்கள் மத்தியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் இணங்கியிருந்தார்கள். அவ்வாறான ஓர்ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த சமயத்திலேயே என்னை மாணவர் அமைப்பின் பணிகளில்இருந்து விடுவித்தனர்.

எனவே நான் அமைப்புரீதியான பணிகளில் இருந்து விலகியபோது கட்சி கவலை கொண்டது என்பதை விட நிம்மதிஅடைந்தது என்பதே உண்மை. எனினும் என்னைக் கட்சியுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணுமாறு கேட்டதோடுபிரச்சினைகள் விரைவில் தீரும் என்றும் கூறினார்கள்.

கட்சி நான் முன்வைத்த விமர்சனங்களிற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக எவ்வாறேனும் என்னைக் கட்சியில்தக்கவைக்கவே முயற்சி செய்தது. விலகிய பின்னும் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு என்னுடன் கதைத்தார்கள்.இதன்மூலம் நான் கட்சியிலிருந்து விலகவில்லை என்ற தோற்றத்தைக் கட்சிக்குள் ஏற்படுத்தினார்கள். நான்வெளியேறிய விடயம் கட்சி உறுப்பினர்களிற்கு பரவலாகத் தெரிந்ததுமே, நான் விரைவில் மீண்டும் கட்சியில்இணைந்துகொள்வேன் என்று கூறிச் சமாளித்தார்கள். இப்போதுவரை கட்சியில் இணைந்து கொள்ளுமாறுஅழைப்புவிடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

கட்சியினர் அச்சுறுத்தல்கள் எதையும் எனக்குத் தரவில்லை. அரசாங்கத் தரப்பிலிருந்து சில அமைச்சர்களும் அமைச்சின்செயலாளர்களும் கட்சியின் தகவல்களை, குறிப்பாக மாணவர் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத்தருமாறு என்னை அச்சுறுத்தினார்கள். புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் பலமாக இருந்தன. அச்சுறுத்தல்களிற்குப்பணிவது எனது இயல்பல்ல.

உண்மையிலேயே முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமையைஏற்றுக்கொள்கிறதா?

இல்லை! எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் நிர்வாகப்பிரச்சினையாகவே அவர்கள் பார்க்கின்றனர். தமிழ் மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் இனவாதப்போராட்டமாகவே காண்கின்றார்கள். முதலாளித்துவம் இனங்களிற்கு இடையிலான சுவர்களை உடைத்து இலங்கைத்தேசியத்தை ஏற்படுத்தும், இனங்கள் தமக்குள் ஒன்று கலக்கும் என்பதே முன்னிலை சோசலிசக் கட்சியின் அடிப்படைக்கொள்கை. அந்த வகையில் தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை இவர்கள் உள்ளூரவிரும்புகின்றார்கள். இவர்கள் ஜே.வி.பியிலிருந்த காலத்திலிருந்தே சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கான காரணம்இனவாதமேயாகும்.

இப்போது அதை மூடிமறைத்து வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். இலங்கைத் தேசியத்தைஉருவாக்குவதில் முதலாளித்துவம் இன்னும் வெற்றி பெறவில்லையாயினும் இனங்களுக்கிடையிலான சுவர்களைமுதலாளித்துவம் உடைத்து விட்டது, ஆகவே தனித்துவமான தேசியங்கள் எதுவும் இங்கில்லை, தேசியப் பிரசைகளேஇருக்கின்றனர், இந்த நிலையில் சுயநிர்ணய உரிமை பிரயோகிக்க கூடியதல்ல என்பதே இவர்களின் வாதம். சுயநிர்ணயஉரிமையை மறுப்பதற்காக ‘தேசிய பிரசைகளை‘ கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனைப் புலம்பெயர்ந்த தமிழர்கள்சிலரும் அப்படியே ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்திக்கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.

இப்போது நீங்கள் ‘ஈரோஸ்‘ அமைப்பில் இயங்குகின்றீர்கள். உண்மையிலேயே அதுவொரு செயலற்றஅமைப்பல்லவா?

ஆம்! ஈரோஸ் செயலற்ற அமைப்புத்தான். எண்பதுகளில் இருந்த ஈரோஸ் இன்றில்லை. அதன் பெயர் மட்டுமேபயன்படுத்தப்படுகிறது. அரசு சார்பு அரசியலை முன்னெடுக்க ஈரோஸின் பெயரில் சிலர் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.அவர்கள் இன்று பல கூறுகளாகப் பிளவுபட்டு விட்டனர். தற்போது ஈரோஸ் என்ற பெயரையும் ‘ஈழவர் சனநாயகமுன்னணி‘யையும் தனியொருவர் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். ஒரு செயற்குழுவேனும் இல்லாமல் கட்சிஒன்றை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அது எப்படியானது என்பதை நான் சொல்லித்தான் அறிய வேண்டும்என்பதில்லை. ஆனால், பழைய ஈரோஸின் ஆதரவாளர்கள் விவரம் தெரியாமல் ஈரோஸிற்கு ஆதரவளிக்கத் தயாராகஇருந்தார்கள். அந்தக் காரணத்திற்காகத்தான் ஈரோஸ் என்ற பெயரை அரசாங்கம் பயன்படுத்த நினைத்தது.

முன்னிலை சோசலிசக் கட்சியிலிருந்து நான் விலகியதன் பின்பாக, என்னுடன் தோழமையான அரசியல்செயற்பாட்டிலிருப்பவர்களையும் ஈரோஸிற்கு ஆதரவளிப்பவர்களையும் அமைப்புமயப்படுத்தி சகல சிறுபான்மைஇனங்களையும் உள்வாங்கக் கூடிய புரட்சிகர அமைப்பை உருவாக்கும் நோக்கிலேயே நான் ஈரோஸில் இணைந்தேன். ஈரோஸின் தற்போதைய செயற்பாடுகளைக் குறித்து விபரமாகக் கூறுவது சற்றுச் சிரமமானது. ஆனால் ஒருவிடயத்தைக் கூறலாம், முற்போக்குச் சிந்தனையாளர்களை அமைப்புமயப்படுத்தி விரைவில் வெகுசனச்செயற்பாடுகளை ஆரம்பிப்போம்.

அந்தப் பணியினை ஈரோஸின் பெயரில் செய்வதே எமது நோக்கம். தற்போது தமிழ்மக்கள் இருக்கும் மனநிலையில் இவ்வாறான அடையாளத்துடன் இயங்குவது மக்களைச் சென்றடைய எளிதானவழியாக இருக்கும். இப்படி உருவாகும் அமைப்பு பழைய ஈரோஸின் தொடர்ச்சியாகவன்றி சமகால நிலைமைகளிற்கு அவசியமான சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அமைப்பாகவும் புதிய சிந்தனைகளுடனும் அமையும். வெற்றி பெறமுடியும் என்பதே எனது நம்பிக்கையாகும். ஒருவேளை இந்த முயற்சி கைகூடாவிட்டாலும் நல்லதொருதொடக்கத்திற்கான படிப்பினையாகவேனும் இது அமையும்.

 

செய்தியறிக்கையிடல்,

 

-கவரிமான்-

http://seithy.com/breifNews.php?newsID=120187&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.