Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

Featured Replies

Tamil_News_large_111490720141114155554.j

 

 

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.
புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
 
சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.
 
  • தொடங்கியவர்
சில வருடங்களுக்குமுன் பிபிசி, 'இந்தியாவின் அதிசய நதி' என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. சரஸ்வதி நதியின் வறண்ட படுகை ராஜஸ்தான் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 'ஒரு கற்பனை நதியாக இருந்திருக்க முடியாது என்பதற்கு ஆச்சரியமூட்டும் புதிய சாட்சியங்கள் இருக்கின்றன'என்றும் பிபிசி அறிவித்தது.1990களிலிருந்து இந்தியச் செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட கட்டுரைகள் நிறைய இடம்பெற்றன. இதனை வாசித்த பொதுமக்கள் இந்தத் 'தொன்ம நதி' மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பத் தொடங்கினர். இது தொடர்பான முக்கியமான சில சாட்சியங்கள் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்தான் நமக்குக் கிடைத்துள்ளன. எனினும், உண்மையில் இந்த நதியைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
 
'பிரிட்டிஷ் ராஜ்'ஜை ஒருவர் பல காரணங்களுக்காகக் குறை கூறலாம். ஆனால் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட 'சாம்ராஜ்ஜியத்தின் மணிமகுடத்தை'ப் பற்றிய ஆவணங்களைப் பதிவுசெய்வதில் முழுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லவே முடியாது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து நில அளவையாளர்களும், புவியியலாளர்களும், இயற்கை விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், அரசு நிர்வாகத்தினரும் ராணுவ அதிகாரிகளும் இந்த மாபெரும் இந்தியத் துணைக்கண்டத்தின் மூலை முடுக்குகளுக்கும் சென்றிருக்கிறார்கள். அறிக்கைகள், கட்டுரைகள், கெஸட்டியர்கள், புத்தகத் தொகுப்புகள் என அந்தக் காலகட்டம் பற்றிய பெரு மதிப்பு வாய்ந்த ஏராளமான ஆவணங்களை விட்டுச்சென்றிருக்கிறார்கள். அற்பமான புல், பூண்டுகளில் ஆரம்பித்து வானளாவ உயர்ந்து நின்ற மலை உச்சிவரை எதுவும் அவர்களுடைய கழுகுக்கண்களில் இருந்து தப்பவில்லை.
அப்படியாக, நமக்குத் தேவையான அந்தப் பகுதியைப் பற்றிய சில ஆரம்பகட்ட ஆய்வு விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன: கிழக்கே 900 முதல் 2,300 மீட்டர் வரை உயரமுள்ள, ஷிவாலிக் மலைத்தொடர் என்று அழைக்கப்படும் இமயமலையின் அடிவாரப்பகுதி; மேற்கே இன்றைய ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள்; ராஜஸ்தானின் வடமேற்கு எல்லையிலுள்ள பாலைவனம்; இதன் தொடர்ச்சியாக இன்றைய பாகிஸ்தானிலுள்ள கோலிஸ்தான் பாலைவனம்; கடைசியில் சிந்து நதியும், அதன் கிளைகளும் பாய்ந்தோடும் பகுதிவரை அனைத்து இடங்கள் பற்றிய விவரங்களும் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.
இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான காட்சிகள் மேற்கண்ட பின்னணியில்தான் விரியப்போகின்றன. இன்று வறண்டு காணப்படும் இந்த மாபெரும் நிலப்பரப்பு தான் பற்பல வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவங்கள் நடந்தேறிய பகுதி. வரலாற்று காலத்துக்கு முந்தைய சம்பவங்களும் இங்கு நடந்திருப்பது ஆய்வாளர்களுக்கு விரைவில் தெரியவந்தது.
 
வேத ஸ்லோகங்களின் அடிப்படையில் இந்தியாவின் வடமேற்கிலுள்ள ஆதிகால மக்கள், பூமி சாஸ்திரம் மீதான ஓர் ஆய்வு (A study on the Geography and the primitive people of lndia's north west, According to vedic Hymns) என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் ரிக் வேத ஸ்லோகங்களில் சொல்லப்பட்டதையும் பிரிட்டிஷார் புதிதாகக் கையகப்படுத்தியிருக்கும் நிலப்பரப்பின் சர்வேக்களையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று முதல் முறையாக யோசனை கூறப்பட்டது.
அகாதெமி தெ இன்ஸ்கிரிப்ஷன் எ பெல்ஸாட்ர அமைப்புக்கு முன் 1885ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆய்வுக்கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 1860ல் அது வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் விவியன் தெஸான் மார்த்தான் 'எங்களுடைய முதல் முழு கவனமும் சமஸ்கிருத படைப்புகளில் இடம்பெற்றுள்ள புவியியலை ஆராய்வதிலேயே செலவிடப்பட்டது. மிகவும் தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக இருந்த அது, கிட்டத்தட்ட கன்னி முயற்சியாகவே இருந்தது. இடைவெளியே இல்லாமல் பத்து வருடங்கள் தீவிரமாகத் தொடர்ந்து முயற்சித்தும்கூட எங்களால் அந்த விஷயத்தைப் பற்றி முழுவதாக ஆராய்ந்து முடிக்க முடியவில்லை. இருப்பினும் வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகிய ஆய்வுகளுக்கு நாங்கள் இந்தியாவின் புராதன புவியமைப்பு தொடர்பாக உருவாக்கித் தந்திருக்கும் இந்த மிக விரிவான படைப்பு மிகவும் பக்கபலமாக அமையுமென்று நம்புகிறோம்' என்று எழுதினார்.
விவியனின் நம்பிக்கைகள் பூர்த்தியாகின. ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நிலப்பரப்பையும் வடமேற்குப் பிரதேசத்தின் நிலப்பரப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவருடைய புத்தகம் எடுத்துக்கொண்ட விடை தெரியா வினாக்களில் சரஸ்வதி நதி பற்றியதும் அடங்கும். மறைந்துபோன சரஸ்வதி நதியை இந்தியாவின் வரைபடத்தில் எந்த இடத்தில் காண்பிக்கவேண்டும்? நமக்கு மிகவும் முக்கியமான அந்தக் கேள்வி தொடர்பான விவியனின் அணுகுமுறை மிகவும் நேரடியானது.
விவியன் சொல்கிறார்: சரஸ்வதி நதிதான் 'வேத ஸ்லோகங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரிதும் மதித்து, வானளாவப் புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது' என்று சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே 'முழுவதுமாக வேத காலப் பகுதிகளில் இடம் பெறும் முதல் நதி'. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இதன் கரையில்தான் வேத பாடல்கள் சேகரிக்கப்பட்டு நான்கு வேதங்களாக வியாஸ மஹரிஷியால் தொகுக்கப்பட்டன.
 
சர்சுதி என்ற அழைக்கப்படும் அத்தனை முக்கியமல்லாத சிற்றாறைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, விவியன் இவ்வாறு தொடர்கிறார்:
'இந்த நதி சமவெளியைப் பார்த்தபடியிருக்கும் (அதாவது ஷிவாலிக் மலை) கடைசி செங்குத்தான சரிவுகளின் அடிவாரத்தில் ஜம்னா நதிக்கும் யமுனை நதிக்கும் சட்லெட்ஜுக்கும் சட்லெஜுக்கும் இடையேயுள்ள குறுகிய நிலப்பரப்பில் உற்பத்தியாகிறது.'
 
இந்தச் செய்தியும் சரிதான். இன்றும்கூட 'சர்சுதி' என்ற பெயரில் ஒரு மழைக்காலச் சிற்றாறு ஓடுகிறது. சரஸ்வதி தான் மருவி 'சர்சுதி'யாகிவிட்டது என்பது மிகத் தெளிவாகதெரிகிறது (சீர்ஸா நகரம் கூட மத்திய காலங்களில் 'சர்சுதி' என்று அழைக்கப்பட்டிருந்ததை முன்பே பார்த்திருக்கிறோம்). 1788லேயே சர்வேயர் ஜெனரல் ரென்னெல் இந்தச் சிற்றாறை 'இந்துஸ்தானத்தின் வரைபட'த்தில் சர்சூட்டி (அல்லது செராஸ்வட்டி) என்ற பெயரில் அடையாளம் காட்டியிருக்கிறார்.
 
அதாவது, சர்சுதி நதி ஷிவாலிக் மலைத் தொடரின் ஓர் அங்கமான சிர்மூர் மலையில் உற்பத்தியாகி, இன்றைய ஆதி பத்ரி* தானேஷ்வர், குருக்ஷேத்ரா ஆகியவற்றைத் தாண்டிப் பாய்கிறது. வழியில் பெஹோவா என்ற இடத்தில் பருவ மழைகளால் நிறையும் மார்க்கண்டா நதி இதனுடன் வந்து கலக்கிறது. கடைசியில் இந்த நதி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிடையே உள்ள ரஸூலா என்ற கிராமத்தினருகில் கக்கர் நதியுடன் சேர்கிறது. துல்லியமாகச் சொல்வதானால், கராக் (கத்தியால் மாவட்டம், ஹரியானா) மற்றும் சத்ரானாவுக்கும் (பட்டியாலா மாவட்டம், பஞ்சாப்) நடுப்பகுதியில் கலக்கிறது. படம் 1.3ல் 1862ல் வரையப்பட்ட படத்தில், சர்சுதி நதியின் படுகை குறிக்கப்பட்டிருந்தது (இன்று பெரும்பாலான வரைபடங்கள் சரஸ்வதி* என்றே அழைக்கின்றன). சமீபகாலம் வரையில் இந்திய அரசின் அதிகாரபூர்வ வரைபடங்கள் அந்தச் சிற்றாறை சரஸ்வதி நலா அல்லது 'சரஸ்வதி நதி' என்றுதான் குறிப்பிட்டு வந்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) ஏற்பாடு செய்த குழு சுட்டிக்காட்டியிருப்பதுபோல், அந்த வறண்ட படுகை வழியாகச் செல்லும் பழைய ரயில் மற்றும் தரைவழிப் பாலங்களில் இந்தப் பெயர்கள் இப்போதும் காணப்படுவது ஓர் காரணமாக இருக்கலாம்.
 
'இந்தியாவின் மேற்குக் கோடியில் பாய்ந்தோடும் பிரதான நதிக்கு சரஸ்வதி என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், மலைப் பிரதேசங்களிலிருந்து தனித்தனியாக ஓடி, பிறகு ஒன்று சேரும் சிறு நதிகள் அனைத்துக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான பெயராகவும் அது இருந்திருக்கலாம் என்று விவியன் சொல்வதில் இருந்து அவருடைய பூகோள அறிவுக்கூர்மை வெளிப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் இதுவரை பார்த்த மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் கக்கர், மார்க்கண்டா (டாங்ரி நதியையும் இந்த இரண்டுக்கும் இடையில் சேர்த்துக்கொள்ளவேண்டும்) சர்சுதி, சௌதங், இவற்றின் கிளை நதிகள் ஆகிய அனைத்துமே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சரஸ்வதி நதியின் மிச்சங்கள்' என்றுதான் கருதுகிறார் (சௌதங் நதியை த்ருஷத்வதி நதியுடன் பிற்பகுதியில் அடையாளப்படுத்திப் பார்க்கப்போகிறோம்).
=========
சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு
மிஷல் தனினோ
தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
பக்கம் 416
விலை ரூ.300
இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.html
ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.