Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது எதிரணியிடம் தமிழ் வாக்காளர்கள் கேட்கக்கூடிய கேள்விகள் - நிலாந்தன்

Featured Replies

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதே சமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்? அங்கேயும் எதிர்க்கட்சிகள் மத்தியில் துலங்கிக் கொண்டு தெரியும் ஆளுமைகளைப் பற்றி தமிழ் மக்களுக்கு ஏற்கனவே படிப்பினைகள் உண்டு. எனினும் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகளால் விடுக்கப்படும் அறிக்கைகள் ஊடக சந்திப்புக்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் என்பவற்றை தொகுத்துப் பார்க்கும் போது இலங்கைத் தீவின் கடந்த பத்தாண்டுகால நடைமுறையில் ஏதோ பெரிய தலைகீழ் திருப்பத்தை  கொண்டு வரப்போவதான ஒரு தோற்றம் காட்டப்படுகிறது.
 
இத்தோற்றத்தின் மீது கேள்விகளை எழுப்புவதே இக்கட்டூரையின் நோக்கமாகும்.
 
கேள்வி 1 – இனப்பிரச்சினைக்கான அவர்களுடைய தீர்வு என்ன?
 
இது தொடர்பாக இதுவரையிலும் அவர்கள் எதையும் துலக்கமாக கூறியிருக்கவில்லை. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துடனான சந்திப்புக்களின் போது சந்திரிக்காக 13பிளஸ்ஸைப் பற்றி உரையாடியதாக ஒரு தகவல் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கனவே அப்படித் தான் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்கள் 13ஆவது திருத்தத்தை அல்லது அதின் பிளஸ்களை தாண்டிப் போக மாட்டார்கள் என்ற ஓர் அபிப்பிராயம் அரசியல் விளக்கமுடைய தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.
 
ஆனால் எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரைக்கும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூறுவோரும் உண்டு. சில சமயம் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அவர்களால் தமிழ் மக்களை கவரக் கூடிய வாக்குறுதிகளை வழங்க முடியாதிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். யார் ஆகப்பெரிய இனவாதி அல்லது யார் சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலன் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பிரச்சார களமாகவே ஜனாதிபதித் தேர்தல் களம் அமையப்போகிறது. எனவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட கூடுதலாக எதையாவது வழங்கினால் அது அவர்களுடைய வாக்கு வங்கியை பாதிக்கும். இது காரணமாக தேர்தல் முடியும் வரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதை அவர்கள் தவிர்;க்க விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
சந்திரிக்கா ஏற்னவே அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்திருக்கிறார். அது 13 ஆவது திருத்தத்ததை தாண்டிச் செல்வதான ஒரு தோற்றத்தை கொண்டிருந்தது. அப்பொழுது அத்தீர்வுப் பொறியை எதிர்த்த ரணில் அதன் பிரதியை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொழுத்தினார். ஆனால் பின்னாட்களில் ரணில், விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையானது இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது சந்திரிக்கா அந்த உடன்படிக்கைக்கு இடைஞ்சலாக இருந்தார்.
 
எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது அரசாங்கம் செய்யும் எல்லாவற்றையுமே எதிர்ப்பது என்ற ஒரு குருட்டுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அவர்கள் அத்தீர்வுகளை எதிர்த்திருந்தாலும் கூட இப்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து செயற்படுகிறார்கள். வரப்போகும் தீர்வு அவர்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுகளின் கலவையாக அமையக் கூடும் என்ற ஓர் எதிர்பார்;ப்பும் தமிழர்களின் ஓர் பகுதியினரிடம் உண்டு.
 
ஆனால் அப்படிப்பட்ட ஒரு தீர்வைக் குறித்து தேர்தல் களத்தில் உரையாடுவது என்பது பொது எதிரணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்பதால் தேர்தல் முடியும் வரையும் அதை ஒரு ஒத்தி வைக்கப்பட்ட இரகசிய நிகழ்ச்சி நிரலாக அவர்கள் பேணி வருகிறார்கள் என்று கூறுவோரும் உண்டு.
 
 
இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைமைக்கு சில நம்பிக்கைகள் ஊட்டப்பட்டதாகவும் கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவோடு கூட்டமைப்பானது ஒரு கனவான் உடன்படிக்கைக்கு வந்தது போல இம்முறையும் ஒரு கனவான் உடன்படிக்கைக்கு வரக்கூடும் என்றும் ஓர் அபிப்பிராயமும் உண்டு.
 
மேற்கு நாடுகள் தலையிட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட எல்லா களங்களிலும் ஒப்பீட்டளவில் பரவாயில்லாத தீர்வுகளே முன்வைக்கப்பட்டிருக்கிறன என்பதை சுட்டிக்காட்டும் ஒரு பகுதி விமர்சகர்கள். இங்கேயும் எதிர்கட்சிகளின் கூட்டணியானது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருப்பதால் அவர்கள் கொண்டு வரக்கூடிய எந்தவொரு தீர்வும் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பவற்றை விட பெரியதாகவே இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தால் அவர் வளைக்கப்பட முடியாத ஒரு எதிரியாக இருப்பார் என்றும். எனவே வளைக்கப்பட முடியாத எதிரியை உலக சமூகம் முறிக்க முற்படுகையில் அதில் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் நன்மை கிடைக்கும் என்றும் வாதிடும் தரப்பினர் மேற்சொன்ன விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மைத்திரிபால சிறிசேனவை நோக்கி மேலும் கேள்விகளை கேட்கிறார்கள். 
 
கேள்வி 2 – போர்க்குற்றம் தொடர்பில் பொது எதிரணியின் முடிவு என்ன?
 
 
சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் கூறியவற்றையே ஒரு பொது நிலைப்பாடாக எடுத்துக் கொண்டால் பொது எதிரணி தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் நீதி எது? போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதிலிருந்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடங்குகிறது என்பதை பொது எதிரணி ஏற்றுக்கொள்கிறதா?
 
 
கேள்வி 3 – மைத்திரிபால சிறிசேனவின் இறந்த காலத்தை தொகுத்துப் பார்த்தால் சிங்கள மக்கள் அவர் மீது ஏதும் நம்பிக்கையை வைக்கக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கத்தக்க ஒரு முன்னுதாரணம் மிக்க இறந்த காலத்தை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அவர் வழங்கிய பேட்டிகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் இதுவரையிலும் எடுத்து வந்த நிலைப்பாடுகள் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அவர் தென்னிலங்கை அரசியலில் பொதுப் போக்காக காணப்படும் இனவாத தடத்திலிருந்து என்றைக்குமே விலகி நின்றதில்லை. அத்தகைய ஓர் இறந்த காலத்தைப் பெற்ற ஒருவர் வருங்காலத்தில் தலைகீழாக மாறுவார் என்று எப்படி நம்புவது?
 
 
கேள்வி 4 – கட்சிக்குள் ராஜபக்ஷ சகோதரர்;களின் ஆதிக்கம் காரணமாக தனக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதற்காகவே அவர் கலகக்காரராக மாறினார். இப்போது தனது கலகத்திற்கு பொன்முலாம் பூசுவதற்காக ஜனநாயக மீட்பு, ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, போன்ற கவர்ச்சியான கோஷங்களை முன்வைக்கிறார். அதாவது அவர் தனது தனிப்பட்ட பிரச்சினையை ஒரு பொதுப் பிரச்சினையாக மாற்றி இலாபம் தேட முற்படுகிறார். அதாவது அவர் ஒரு இலட்சியவாதியல்ல. அவர் தன்னைத் தானே பிரகடனம் செய்து கொள்வது போல மகாத்மா காந்தியோடு அல்லது மண்டேலாவோடு ஒப்பிடத்தக்க ஒரு தலைவராக  வருவார் என்று தமிழ் மக்கள் நம்பத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கில்லை. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி நம்புவது?
 
கேள்வி 5 – மேற்கு நாடுகளின் அனுசரணையோடு அல்லது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தோடு தீர்வுகள் முன்வைக்கப்படும் எல்லா இடங்களிலும் முதலில் ஏதோ ஓர் வகைப்பட்ட அசுவாசமான  ஒரு சூழலை அல்லது ஒப்பீட்டளவில் இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை உருவாக்குவதை மேற்கு நாடுகள் ஓர் உத்தியாக மேற்கொண்டு வருகின்றன.
 
இப்படியொரு இறுக்கம் தளர்ந்த நிலை உருவாகும் போது இறுக்கப்பிடிக்குள் இருந்த மக்களுக்கு அது ஒரு பெரிய வரம் போல் இருக்கும். ஆனால் இறுதித் தீர்வொன்று வரும் போது அந்த வரமே சாபமாக மாறும். அதாவது இறுக்கம் இல்லாத அல்லது அசுவாசமான ஒரு வாழ்க்கையே போதும் என்ற ஓர் மனோ நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு விடும்;. இதைத்தான் தமிழ் விமர்சகர்களில் ஒரு பகுதியினர் தர்மர் பொறி என்று அழைக்கிறார்கள். அண்மையில் இக்கட்டூரை ஆசிரியரோடு ஆட்சி மாற்றம் தொடர்பாக கதைத்த போது ஒரு மூத்த நாடக செயற்பாட்டாளர் கேட்டார் 'ரிலாக்ஸான' ஓர் அரசியல் சூழல் தானா தமிழ் மக்களுக்குரிய இறுதித் தீர்வு? என்று. இதுவொரு முக்கியமான கேள்வி. தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஆட்சி மாற்றம் என்று ஒன்று நிகழ்ந்தால் ஆட்சி மாற்றத்தின் உடனடி விளைவு இது தான். ஆனால் இதுவே இறுதித் தீர்வா இல்லையா என்பதை தீர்மானிக்கப்பபோவது சிங்கள பொளத்த மனோநிலையில் ஏற்படவேண்டிய மனமாற்றமே. அப்படியொரு மனமாற்றம் எதிர்;க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதா?  இது ஐந்தாவது கேள்வி.
 
இனி ஆறாவது கேள்வி, ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எவ்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று காட்டப்படுகிறது. அது ஒரு பகுதி உண்மை மட்டுமே. எனது கடந்த வார கட்டூரையில் கூறப்பட்டுள்ளது போல இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே ஒரு பிரச்சினை தான். ஏற்கனவே விமர்சகர்கள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இனஒடுக்குமுறையின் சட்டக் கருவியாகவே அரசியல் அமைப்பு இருந்து வந்துள்ளது. இனஒடுக்கு முறையின் தொடர் வளர்ச்சியாகவே அரசியல் அமைப்பானது பல்வகைமைக்கும், பல்லினத் தன்மைக்கும் எதிராக நெகிழ்ச்சியற்றதாகவும் மூடுண்டதாகவும் உருவாகியது.
 
 
தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜயவர்தன திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். இப்போதிருக்கும் அரசியல் தலைவரோ அதிருப்தியாளர்களின் குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்ட கோப்புக்கள் (பைல்கள்) தன்னிடம்  இருப்பதாக கூறி கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மிரட்டுகிறார்.
 
 
எனவே நாட்டுக்கு இப்போது தேவையாக இருப்பது ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மட்டுமல்ல அதைவிட பரந்தகன்ற தளத்தில் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே முற்றாக மீள வரையப்பட வேண்டும். அரசியல் அமைப்பை மாற்றுவது பற்றி சிந்திக்கப்படாத வரை இனப்பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. ஆயின், வெற்றி பெற்றால் சந்திரிக்காவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் அமைப்பை மாற்றத் தயாரா?
 
 
இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்பது சிங்கள உயர் குழாம் மற்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினை தான். சாதாரண சிங்கள மக்களுக்கு இவையெல்லாம் விளங்கப்போவதில்லை. அதைப் போலவே தமிழ் மக்கள் மத்தியிலும் இது போன்ற விவாதங்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசியல் ஆர்வமுடைய, அரசியல் விளக்கமுடைய தரப்பினர் மத்தியில் தான் கவனிப்பைப் பெறும். வளைய மறுக்கும் எதிர்த்தரப்பு  முறிக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றிய உரையாடல்களும்; அரசியல் விளக்கம் உடைய தரப்பினர் மத்தியில் தான் கவனிப்பைப் பெறும்.
 
மாறாக சாதாரண தமிழ் வாக்காளர்கள் இப்பொழுது இருப்பதை விட இறுக்கம் தளர்ந்த ஒரு வாழ்க்கைச் சூழலே பரவாயில்லை என்ற ஒரு முடிவுக்கு இலகுவாக தள்ளப்பட்டு விடுவார்கள். தமிழ் வாக்காளர்களை பொறுத்து பொது எதிரணிக்கிருக்கும் வாய்ப்பான ஓர் அம்சம் இது.
 
இத்தகையதொரு பின்னணியில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்;ந்தால் கிடைக்கக் கூடிய இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை பொது எதிரணி ஒரு பொறியாக கையாளப் போவதில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது ஆறாவது கேள்வி.
 
ஏழாவது கேள்வி, கடந்த சுமார் அறுபதாண்டுகளுக்கும் மேலான தமிழ் அரசியலில் கனவான் உடனபடிக்கைகள் எவையுமே அவற்றுக்குரிய கண்ணியத்தோடு பேணப்பட்டதில்லை. அதிலும் குறிப்பாக சிங்கள தலைவர்களுடன் கள்ளக் காதலை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட கனவான் உடன்படிக்கைகள் அநேகமாக முறிக்கப்பட்டிருக்கின்றன. வரும் நாட்களில் கூட்டமைப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையில் இப்படியொரு இரகசிய கனவான் உடன்படிக்கை செய்யப்படுமிடத்து அதற்கு மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் ஏதும் இருக்குமா?
 
எட்டாவது கேள்வி, தமிழ் மக்கள் தமது கடந்த அறுபதாண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு  கோரிக்கை தற்பொழுது வலிமையுற்று வருகிறது. வாக்களிப்பின் போது தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக அப்பொது வேட்பாளரை தெரிவு செய்து விட்டு. இரண்டாவது விருப்பத் தெரிவை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பேரம் பேசுவதற்குரிய ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பகுதி தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
 
இவ்வாறு தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏன் வருகிறது, எங்கிருந்து வருகிறது, என்பதைக் குறித்து பொது எதிரணி என்ன நினைக்கிறது? 
 
இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சில அரசியற் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தோடு உரையாடியதாகவும், கூட்டமைப்பின் உயர்மட்டம் இத்தெரிவை இக்கட்டூரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் சாதகமாக பரிசீலிக்க தயாரில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.
 
இனி ஒன்பதாவது கேள்வி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு பின்னணியில் அரங்கில் தமிழர்களின் எதிர்ப்புச் சக்தி மிகப் பலவீனமாக காணப்படும் ஒரு சூழலில்  கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனரீதியான அனைத்து வன் முறைகளுக்குமாக பொது எதிரணி தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா? அப்படி  மன்னிப்புக் கேட்பது என்பது நல்லிணக்கத்திற்கான மிகப் பிரதான முன்நிபந்தனைகளில் ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா?
 
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் பொறுப்பான இருபெரும் கட்சிகளின் இணைப்பே பொது எதிரணி என்பதால் தமிழ் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே அதிகம் உண்டு.
 
பத்தாவதும் இறுதியானதுமான கேள்வி, மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடையாக பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையுமா? அல்லது கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் சில தலைமுறைகளாக கேட்டுச் சலித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் வரிசையில் அதுவுமொரு புதிய இனிப்புப் பூசப்பட்ட இனவாத கொள்கை ஆவணமாக அமைந்து விடுமா?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.