Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லாமே எமோஷனல்தானா?

Featured Replies

DEC 3, 2014

எல்லாமே எமோஷனல்தானா?

சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார்.

பேசிக் கொண்டிருந்தோம். கொண்டிருந்தோம் என்றால் நான் மட்டுமில்லை. மூத்த எழுத்தாளர்கள் உள்ளிட்ட வேறு சிலரும். பெங்களூரில் அவர்களைச் சந்தித்தது பற்றி தனியாக எழுத வேண்டும். இப்பொழுது அந்த பேராசிரியர் பேசியதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

அந்தச் சமயத்தில்தான் தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள். தமிழகத்தில் பெரிய விழாவெல்லாம் நடத்தி விடுதலையான மீனவர்களுக்கு அரசு ஊழியர்கள் மாலையிட்டு அந்த விழாவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தார்கள். என்ன அரசியல் பின்னணி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ஐந்து மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் அல்லவா என்று நினைத்திருந்தேன்.

அதைப்பற்றிதான் அந்த பேராசிரியர் கேட்டார். ‘ஏன் இந்த மீனவர்களை அடிக்கடி இலங்கைக்காரன் பிடிச்சுட்டு போயிடுறான்?’

‘தமிழன்னாலே ராஜபக்‌ஷேவுக்கு வேப்பங்காய் சார்’ என்றுதான் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் அது பக்குவமில்லாத பதிலாக இருக்கும். அடக்கிக் கொண்டேன். சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. அவர் கேட்கிற கேள்வியில் உள்ளர்த்தம் இருந்தது. ‘நம்ம மீனவர்களிடம் தப்பே இல்லையா?’ என்கிற அர்த்தம் அது.

‘ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது அதனால் அந்த ஊர் மீனவர்கள் தெரியாத்தனமாக எல்லை மீறிவிடுகிறார்கள் போலிருக்கிறது’ என்று கூட அவரிடம் சொல்லலாம்தான். ஆனால் அதற்கு இடமே தராமல் ‘ஏன் இலங்கை மீனவர்கள் தெரியாத்தனமாக எல்லை மீறுவதே இல்லையா? அவர்களை ஏன் இந்தியா கைது செய்வதில்லை’ என்றார்.

அவரது நோக்கம் இந்திய மீனவர்கள் மீது குற்றம் சாட்டுவதில்லை. இதைப் பற்றி ஏன் எந்தவொரு தெளிவான விவாதமும் நடப்பதில்லை என்பதுதான்.

உண்மையிலேயே தமிழர்கள் என்பதால்தான் இலங்கை கப்பற்படை கைது செய்கிறதா? கேரள மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்வதற்கான வாய்ப்பே உருவாகுவதில்லையா? ஏன் அவர்கள் கைது பற்றிய எந்தச் செய்தியும் வருவதில்லை. பாகிஸ்தான்காரனும்தான் குஜராத்திலிருந்தும் மஹாராஷ்டிராவிலிருந்தும் செல்லும் மீனவர்களைப் பிடிக்கிறான். ஆனால் இலங்கையில் சிக்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது சொற்பம். பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் மீது இருக்கும் வெறுப்பைக் காட்டிலும் இலங்கைக்கு தமிழர்களின் மீது வெறுப்பு அதிகமா? அப்படியே வெறுப்பு இருந்தாலும் அதை மீனவர்களிடம் காட்டி அவன் என்ன செய்யப் போகிறான்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில்கள் தெரியும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்த அரசுகளும் அரசியல்வாதிகளும் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். இல்லையா?

தமிழகக் கடலில் ஓடும் பெரும்பாலான படகுகள் அரசியல்வாதிகளுடையது என்கிறார்கள். எல்லாவிதமான சட்டத்திற்கு புறம்பான வேலைகளையும் அந்தப் படகுகளின் மூலமாக செய்கிறார்களாம். போதைப் பொருள் கடத்தலிலிருந்து கட்டப்பஞ்சாயத்து வரை. சகலமும். இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று உலக அளவில் தடைசெய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். Destructive Fishing Practices என்று கூகிளில் தேடிப்பார்க்கலாம். அதில் ஒன்று Trawling. மிகப்பெரிய வலைகளை வீசி கடல் ஆழத்தில் இருக்கும் மண்ணோடு சேர்த்து இழுத்துவிடுவார்கள். கடல்பாசி, முட்டை, குஞ்சு, குளுவான் என்று எதுவும் மிச்சம் ஆகாது. இப்படி அடியோடு அழித்துவிட்டு வந்தால் அந்த நாட்டு மீனவன் என்ன செய்வான்? அதுதான் பிடித்து போடுகிறார்கள்.

இது ஒரு அனுமானம்தான்.

இப்படி எவ்வளவோ பிரச்சினைகள் பின்னணியில் இருக்கக் கூடும். ஆனால் பிரச்சினைகளை விரிவாக பேசாமல் அரசியல் ஆக்கிவிடுகிறோம். தொண்டை நரம்பு புடைக்க ‘அடேய்...எங்கள் மீனவர்களையா பிடிக்கிறாய்?’ என்று மேடையில் கத்தி உசுப்பேற்றுகிறார்கள். நாமும் அப்படியே நம்பிக் கொள்கிறோம். யாராவது ஒருவர் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் அவரைத் தமிழின துரோகி ஆக்கி மாநிலத்தை விட்டே துரத்திவிட்டுவிடுவார்கள்.

சரி விடுங்கள்.

நம் மீனவர்கள் நல்லவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்பாவிகள் என்றே இருக்கட்டும். எதனால் இத்தனை கைதுகள் நடக்கின்றன என்ற கேள்விக்கு நம்பும்படியான காரணம் என்ன இருக்கிறது? அதையெல்லாம் ஏன் எந்தப் பத்திரிக்கையிலும் எழுதுவதில்லை. அரசு மற்றும் உளவுத்துறையின் செய்திகளைத்தான் அப்படியே பதிப்பிக்கிறார்கள். மீனவர்களின் பின்னால் இருக்கும் பெருந்தலைகள் தப்பிவிடுகிறார்கள். நான்கு மீனவர்களைக் காட்டி கைது அல்லது விடுதலை என்று மொத்த தமிழகத்தையும் திசை திருப்பிவிடுகிறார்கள்.

எல்லாவற்றையும் எமோஷனலான சங்கதிகளாக மாற்றிக் கொள்கிறோம். இல்லையா? குஷ்பூ விவகாரம் மாதிரி.

அவர் விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம் என்று சொல்லிவிட்டார் என்பதால் பிராண்டித் தள்ளுகிறோம். அவர் சொன்னதை நியாயப்படுத்தவில்லை. இதே விஷயத்தைத்தான் ஷோபாசக்தி போன்றவர்கள் காலங்காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் விவாதித்தால் உருப்படியானதாக இருக்கும். அது அறிவுசார்ந்த விவாதமாக இருக்கும். அதைவிட்டுவிட்டு குஷ்பூவை பார்த்து ‘உன் யோக்கிதை தெரியாதா?’ என்று கேட்டால் அவர் என்ன செய்வார்? அடங்கிக் கொள்வாரா என்ன? நாளைக்கு இன்னமும் குதிப்பார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க குஷ்பூவால்தான் முடிகிறது. வேறு எந்த நடிகைக்கு இது சாத்தியம்? அவருக்கு அதுதான் தேவை. பத்து பேராவது அவரைப் பற்றி பினாத்த வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். நம்மவர்களும் இம்மிபிசகாமல் அவரது ஆசையை பூர்த்தி செய்கிறார்கள்.

http://www.nisaptham.com/2014/12/blog-post_3.html

  • தொடங்கியவர்

DEC 3, 2014

நம்மிடம் தவறே இல்லையா?

பேராசிரியர் சொன்னதை காதால் கேட்டு அப்படியே எழுதியிருக்கிறேன் என்று மேலே உள்ள கட்டுரையை வாசித்தவர்களில் சிலர் குழப்பிக் கொண்டார்கள். அப்படியில்லை. ‘எதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தான தெளிவான புரிதல் நம்மிடமில்லை’ என்பதுதான் அவர் பேசியதன் அடிப்படை. அது சரியான வாதம் என்றுதான் தோன்றியது.

உதாரணமாக கச்சத்தீவு என்கிற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறேன். ஆனால் கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்று தெரியாது. தமிழக மீனவர்கள் கைது என்று வாசிக்கும் அளவுக்கு பிற மீனவர்கள் ஏன் கைது செய்யப்படுவதில்லை என்று புரிந்ததில்லை. தினத்தந்தியிலும் சன் நியூஸிலும் சொல்லப்படும் செய்திகளை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொண்டு இலங்கை அத்து மீறுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சில நண்பர்களிடம் பேசினால் அவர்களுக்கும் தெளிவான பதில் இல்லை. ‘நீ ஏன் கண்டவர்களிடம் பேசினாய்? அறிவாளிகளிடம் பேச வேண்டியதுதானே?’ என்று கேட்கக் கூடாது. சாமானியர்களிடம் என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதுதான் நோக்கம். ஆக, பெரும்பாலும் ஒரே மாதிரியான புரிதல்தான்- ‘தவறு முழுக்கவும் இலங்கையிடம்’. இந்தப் புரிதல் எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்று தமிழகக் கட்சிகள் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இலங்கையின் பண்டாரநாயகாவுடன் நல்லவிதமான உறவைப் பேணிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரும்பாதவர்கள். பெண்மணிகள். இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்பொழுது பண்டாரநாயகாவுக்கு உள்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உருவாகியிருந்தது. தனது சரிந்து வரும் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக இந்திராவின் உதவியை நாடுகிறார். கச்சத்தீவு இலங்கை மக்களால் செண்டிமெண்டலாக பார்க்கப்பட்ட தீவு. அதன் உரிமையை வாங்கினால் தனது புகழ் மீண்டும் ஓங்கும் என நினைக்கிறார். இந்திராவும் அதற்கு சம்மதிக்கிறார். இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதல் எதுவும் பெறாமலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பு வெகு குறைவு. இதில் இந்த தாரைவார்த்தலின் காரணமாக இலங்கையின் எல்லை கச்சத்தீவு வரைக்கும் நீளத் தொடங்கியது. பொதுவாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் இருக்கும் கடற்பகுதி ஆழம் குறைவானது. Shallow water. அவ்வளவாக மீன்கள் கிடைக்காது. அதுவுமில்லாமல் கரையிலிருந்து சில கடல்மைல்கள் நாட்டுப்படகுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் விசைப்படகுகளை பயன்படுத்தும் இந்திய மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் செல்கிறார்கள். இந்தப் பயணமானது சர்வதேச கடல் எல்லை (International Maritime Boundary Line) தாண்டி இலங்கையின் கடற்பகுதி வரையிலும் நீள்கிறது.

இப்படி வரும் படகுகள் Trawlers ஐ பயன்படுத்துகின்றன என்பதுதான் இலங்கையின் முக்கியமான குற்றச்சாட்டு. சமீபத்தில் இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கும் இந்தப் பிரச்சினைதான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. வேண்டுமானால் Trawlerகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்கிறோம் என்று தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு இலங்கை மீனவர்கள் சம்மதிக்கவில்லை. மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்ச மீனவர்கள் இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படும் போது எப்படி ஒத்துக் கொள்வார்கள்?

தமிழக மீனவர்கள் ‘இந்த மீன்பிடி முறையை நம்பி ஏகப்பட்ட மீனவர்கள் இருக்கிறோம். திடீரென்றெல்லாம் நிறுத்த முடியாது. வேண்டுமானால் இரட்டை மடிப்பு வலையையும், சுருக்கு மடிப்பு வலையையும் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்கிறோம்’ என்கிறார்கள். ஆனால் Trawlers ஐ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் இலங்கை மீனவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். பேச்சுவார்த்தை தடைபட்டுவிட்டது.

அதே போல, இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கும் தங்கூசி வலையை இலங்கையின் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரித்து வைத்திருக்கும் வலைகளை கிழித்துவிட்டு வருகிறது.

இப்படி நிறைய விஷயங்களைப் பேசலாம். நான் கடற்கரை மாவட்டத்தைச் சார்ந்தவன் இல்லை. மீனவர்களிடையே எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் என் புரிதல் தவறானதாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒன்றை நிச்சயமாக நம்புகிறேன். தமிழக மீனவர்களின் மீதான மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இட்டுக்கட்டிச் சொல்லப்படுவதில்லை. மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்டவைதான். இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழக மீனவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய மீன்பிடி முறைகளைக் கைவிட முடியாது என்று அவர்கள் மறுப்பதுதான் பிரச்சினையை இழுத்துக் கொண்டு போவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

வலைகள் அறுக்கப்படுகின்றன. கொடூரமான மீன்பிடி முறைகளினால் கடல்வளம் சிதைக்கப்படுகிறது. இலங்கை வாழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இப்படி நிறையச் சொல்ல முடியும். இதைப் பற்றிய பரவலான புரிதல் தமிழகத்தில் உருகாகவே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் அந்தப் பேராசிரியரின் வாதம். இல்லையென்று என்னால் மறுக்க முடியாமல்தான் மேற்சொன்ன விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். கிடைத்த சொற்ப விவரங்களிலிருந்து யோசித்தால் கூட இந்தப் பிரச்சினையை நாம் ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே பார்க்கிறோம் என்று தோன்றியது. அதைத்தான் முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இதை தமிழக அரசியல் கட்சிகள் இருநாடுகளுக்கிடையேயான இனப்பிரச்சினையாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. உண்மையில் பிரச்சினை என்பது சிங்களர்களுக்கும் தமிழருக்குமான பிரச்சினையில்லை. ஈழத்தமிழ் மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமான பிரச்சினைதான். மீனவர்களை பகைத்துக் கொண்டால் மிகப்பெரிய வாக்கு வங்கியை இழந்துவிடுவோம் என்பது நம் கட்சிக்காரர்களுக்குத் தெரியாதா என்ன?

ஆனால் ஒன்று - தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமேயில்லை.

http://www.nisaptham.com/2014/12/blog-post_7.html

Edited by அபராஜிதன்

கட்டுரையாளர் சொல்வது சரியே. இரண்டு பக்கத்துக்கு தவறுகளையும் ஆரோக்கியமான விவாதத்துக்கு உட்படுத்தினால் தான் பிரச்னை என்னவென்பது எல்லோருக்கும் புரியும். நானும் கச்சதீவுதான் பிரச்னை என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் புதிய தலைமுறையில் நடந்த விவாதத்தில் ஒரு மீனவப் பிரதிநிதி சொல்லும்போது கச்சதீவு எல்லாம் பிரச்னை இல்லை உண்மையான பிரச்னை வேறு அதுபற்றி யாரும் விவாதிக்கவில்லை என்று கூறினார். அதையே தான் இலங்கையிலிருந்து வந்திருந்த மீனவப் பிரதிநிதியும் சொன்னார். ஆனால் சாதாரண மக்களுக்கு அது சிங்கள - தமிழர் பிரச்னை என்ற அளவில் மட்டுமே புரிய வைக்கப்படிருக்கிறது இந்த அரசியல் களம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.