Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு - செலவுத் திட்டமா ? வகுக்கப்பட்ட திட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வரவு - செலவுத் திட்டமா ? வகுக்கப்பட்ட திட்டமா?

 

வரவு செலவுத் திட்டம் என்றாலே இயல்பாகவே மக்களுக்குள் இனம்புரியாதவோர் எதிர்பார்ப்பினை தூண்டி விட்டு விடுகிறது. இது இலங்கையின் ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் இடம்பெறுகின்ற ஒன்றுதான்.

mahinda_9.jpg

என்றாலும் அண்மைக்கால தளம்பல் நிலை பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டங்களைப் பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையும் பற்றிக்கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டு அதனை எவ்வாறு நிர்வகிப்பது இதனூடாக எத்தகைய நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்குவது என்பவை குறித்து வருமானத்திற்கான வழி வகைகள் குறித்தும் ஆராய்ந்து இறுதி செய்யப்படுகின்ற வரவு -செலவுத் திட்டம் எத்தகைய செயல் வடிவத்தினைப் பெறப்போகின்றது என்றதொரு அனுமானத் திட்டமாகவே இது அமைகிறது.

எனினும் மிக அண்மைக்காலமாகவே இடம்பெற்று வருகின்ற அனுமானங்கள் செயல் வடிவங்கள் மக்கள் சேர் நன்மைகள் என்பவற்றில் நாட்டு மக்கள் திருப்தி கொண்டவர்களாக இருக்கின்றனரா என்பது பாரிய நெருடலுக்குள்ளாகியுள்ள கேள்வியாகும்.

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பத்தாவது வரவு செலவுத் திட்டமாக அமைந்துள்ள 2015 ஆம் நிதி ஆண்டுக்கான  திட்டமிடல் கருத்திட்டமானது ஒரு விதமான தளம்பல் போக்குடையதாகவே காணப்படுகின்றது.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டுக்கு கணிசமான நன்மைகளைப் பெற்றுத்தருவதாய் அமைந்துள்ள இவ்வரவு செலவுத் திட்டமானது தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களுக்கு இருட்டடிப்பு  செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது. 

1689 பில்லியன் ரூபாவை மொத்த தேசிய வருமானமாகவும் 2210 பில்லியன் ரூபாவை மொத்த தேசிய செலவினமாகவும் கொண்டுள்ள 2015 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதாரக் கொள்கை திட்டமானது 521 பில்லியன் ரூபாவை  நாட்டு மக்களின் தலைகளிலும் தோள்களிலும் சுமையாகவே ஏற்றி வைத்திருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றதான ஜனாதிபதித் தேர்தல் ஒன்று ஜனவரி மாதத்தில் இடம்பெறவிருப்பதாக அனுமானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நவம்பர் மாதத்தின் முற்பகுதியில் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டம் இம் முறை இரு வாரங்களுக்கு முன்பதாகவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அது மாத்திரமின்றி வரவு செலவுத் திட்ட விவாத நாட்களை 18 தினங்களுக்குள் வரையறுப்பதற்கும் அரசு தீர்மானித்திருந்தது. எனினும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாத நாட்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.

எப்படி இருப்பினும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதியே வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் கிடைக்கவிருக்கின்றது.

அதற்கு முன்பதாக ஜனாதிபதியின் பிறந்த நாளான நவம்பர் 19 இல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதன் பின்னர் ஜனவரி மாதம் 09 ஆம் திகதியில் தேர்தல் இடம்பெறும் என்றும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்தளவில் உண்மை பொதிந்திருக்கின்றது என்பது பொறுத்திருந்து  பார்க்க வேண்டியதொன்றாகும்.

நிலைமை இப்படியிருக்கையில் தான் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கென வகுக்கப்பட்ட திட்டமாக அமைந்துள்ளதென எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி என்பன இவ்வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து இது தேர்தலுக்காக வகுக்கப்பட்ட திட்டமே என்று கூறியுள்ளன.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு கூறுவதற்கு சாட்சி பகர்வனவாகவே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன. அரச ஊழியர்களை ஞாபகப்படுத்தியிருக்கின்ற இவ்வரவு செலவுத் திட்டம் தனியார் துறையினர் பற்றி சிந்தித்திருக்கவில்லை.

அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளவாறு அரச ஊழியர்களின் எண்ணிக்கை பதினான்கு இலட்சமாகவே உள்ளது. எனினும் தனியார் ஊழியர்களின் எண்ணிக்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்குகளால் அதிகரித்து காணப்படுகின்றது. நிலைமை இப்படி இருக்க தனியார் துறையினர்  குறித்து அலட்டிக் கொள்ளாதது ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் உள்ளிட்டோரும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீள் குடியேற்றப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் எந்த நன்மையான முன்மொழிவுகளும் உட்சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்ததுடன் இது தேர்தலுக்கான வரவு செலவுத் திட்டமே ஒழிய 2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டமல்ல என்று கூறியுள்ளனர்.

நடைபெறவிருக்கின்றதாக கூறப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே தற்போதைய வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் பாராளுமன்றத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணியும் தெரிவித்திருக்கின்ற நிலையில் சிங்கள ஊடகங்களும் சிங்களவர்களையே அடிப்படையாகக் கொண்டு வெளிவருகின்ற ஆங்கில ஊடகங்களும் மேற்படி வரவு செலவுத் திட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளன.

இதேநேரம் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள பரிசுப் பொதி என்றும் சிங்கள ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளன.

சிங்கள ஊடகங்கள் இவ்வாறு வர்ணிப்பதில் தவறும் இல்லை. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை.

நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்ததான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை இலகுவாய் உணரக் கூடியதாகவே உள்ளது. அதாவது வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அது இடம்பெறவில்லை.

இராணுவத்தினரின் மூன்றாவது பிள்ளை பேற்றுக்கென வழங்கப்பட்டு வந்த ஒரு இலட்சம் ரூபா என்ற தொகையினை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதற்கும் 2015 முதல் புதிய சம்பளத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் முன் மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸார் 50 ஆயிரம் ரூபா சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொள்வதற்கான சலுகையும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸார் மற்றும்  இராணுவத்தினர் உள்ளடங்கலான அரச ஊழியர்களுக்கான புதிய  சம்பளக் கட்டமைப்பு ஜனவரியில் அமுலாக்கப்படுவதாக குறித்துரைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவுகளை அரசு அவர்களது அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்துக்கொள்ளும் வகையிலான பரிந்துரை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைத்து அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கை செலவுக் கொடுப்பனவாக ஜனவரியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 2200 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக் குறைந்த சம்பளமாக ஜனவரி முதல் 25000 ரூபாவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்தார். 

அமைச்சர் பிலிக்ஸ்  பெரேரா பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின் பிரகாரம் 14 இலட்சம் அரச ஊழியர்களே இலங்கையில் உள்ளனர். அவர்களது வருமானத்தை மாற்றம் செய்து ஏற்றம் செய்துள்ள அரசாங்கம் தனியார் துறையினருக்கு எத்தகைய நன்மையினை பெற்றுக்கொடுத்திருக்கின்றது என்பது கேள்வி தான். 

தொழில் தருநனரால்  வழங்கப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியில் இரண்டு வீதத்தை அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ள வரவு செலவுத்திட்டம் தனியார்துறை ஊழியர்கள் மீதான அக்கறை காரணமாக அல்லாது அரச வருமானத்திரட்டலுக்கான வழி வகையே முயற்சிக்கப்பட்டிருக்கின்றது எனக் கூறலாம். 

சுமார் 65 இலட்சத்துக்கும் அதிகமான தனியார் துறை ஊழியர்களின் தொழில்  தருநர்களிடம் இருந்து  இரண்டு வீதத்திலான பணப்புரள்வினை இந்த பரிந்துரை எதிர்பார்த்திருக்கின்றது என்பதுதான் உண்மை. 

மேற்படி பரிந்துரையின் ஊடாக தொழில்தருநர்கள்  ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  

வடக்கு, கிழக்கிற்கு, மலையகத்துக்கு

ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம்  ஆகிய பாரிய நிலப்பரப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகியுள்ளன. 

வரவு செலவுத் திட்ட உரையில்  தமிழர் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டு விட வேண்டும் என்னும் ரீதியிலும் தோட்டத் தொழிலாளர்களை ஞாபகப்படுத்தி விட வேண்டும் என்ற தோரணையிலும் சில வாசகங்கள்  அமைந்திருப்பது கண்கூடாகும். 

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நீண்ட கால பிரச்சினைக்கு இவ்வரவு செலவுத்திட்ட உரையில் எதனையும் கூறாத ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார். 

ஆனாலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னுமே கூடாரங்களிலும் தற்காலிக முகாம்களிலும் வாழ்கின்ற நிலை குறித்தோ தமிழ் மக்களுக்கு சொந்தமான நில உரிமை குறித்தோ எதுவும் கூறவில்லை. மீள் குடியேற்றபட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தொடர்பிலும் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. 

அதே போன்று கடந்த வரவு செலவுத்திட்டத்தில் மலையகத் தொழிலாளர்களுக்கென 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் என்ற அறிவிப்பொன்றை அரசாங்கம் செய்திருந்தது. 

இந்நிலையில் மறு  வரவு செலவுத்திட்டம் ஒன்றும் வந்து  விட்டது. இப்படியான சந்தர்ப்பத்தில்தான் கடந்த இரு வார கால இடைவெளிப் பகுதிக்கு அவிசாவளை பகுதியில் மேற்படி 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்பட்டது. 

தோட்டத் தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றதான சம்பள விவகாரம் அடிப்படை சுகாதார பொருளாதார மேம்பாடுகள் குறித்து மறுக்கப்பட்டுள்ள மேற்படி வரவு செலவுத்திட்டத்தில் தரம் குறைந்த வீடுகளுக்கு மாற்றீடாக 50,000 வீட்டுத் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தற்போது மலையகத்தில் உள்ள வீடுகளின் துப்பரவேற்பாடு மற்றும் மலசலகூடங்களுடன் மேம்படுத்துவதற்கு பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்துக்கு 2000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு முன் மொழிவதாக ஜனாதிபதி  கூறியுள்ளார். 

இவ்வாறு முன் மொழியப்பட்ட நிதி எப்போது உரிய இடத்தை சென்றடைந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது எவருக்கும் தெரியாது. தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கென்று அரசாங்கம் எந்த கௌரவத்தையும் வழங்கியிருக்கவில்லை. 

ஒட்டு மொத்தத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாக இது அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்துள்ள அரசாங்கம் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கென மேன்மையான திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றது. அதேவேளை அரச ஊழியர்களின் மனங்களையும் குளிர வைத்துள்ளது.

இதனால்தான் அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிறுத்தியே அமைந்துள்ளன என அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை அது எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் நகர்ப்புற வாக்காளர்கள் தேவையில்லை  என்பதும் உறுதியாகியுள்ளது. 

ஆனாலும்  தனியார்துறை ஊழியர்களும் உள்ளனர். இவர்களின் மனங்கள் இவ்வரவு செலவுத்திட்டத்தில் குளிரச் செய்யப்படவில்லை. 

எப்படி இருப்பினும் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் உள்ளபடியே நடைமுறைக்கு வருமானால் அதன் பயனாளிகள் பயன்பெறுவர். 

அத்துடன் சிங்கள ஊடகங்கள் கூறியுள்ளவாறு ஜனாதிபதியின் பரிசுப் பொதியாக மட்டுமே அது இருந்து விடக்கூடாது. அது மாத்திரமன்றி தேர்தலுக்கான ஒரு சந்தர்ப்பவாத பாதை அமைக்கப்பட்டு மக்களை ஏமாற்றுவதாகவும் அமைந்து விடாது இருக்க வேண்டும் என்பதுடன் வரவு செலவுத்திட்ட உரையில் மறுக்கப்பட்டுள்ள அல்லது மறைக்கப்பட்டுள்ள இல்லா விட்டால் மறந்து போயுள்ள விடயங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள விவாதங்களுக்குள் உள்வாங்கப்பட்டால் சிறப்பாக அமையும். 

மேலும் பிரதேச ரீதியில் அந்தந்த சமூக மற்றும் மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

 

(ஜே.ஜி. ஸ்டீபன்)

http://www.virakesari.lk/articles/2014/10/27/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.