Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பைக் கோரலாமா? கோருவது எப்படி?

Featured Replies

தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பைக் கோரலாமா? கோருவது எப்படி?

screen-shot-2014-12-04-at-2-24-55-pm.png

(அடையாளம் – கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ‘தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மக்களின் நேரடி சனநாயகப் பங்கெடுத்தலை சாத்தியப்படுத்தல்: ஸ்கொட்லாந்து, கட்லோனிய பொது வாக்கெடுப்பு அனுபவங்கள் தரும் பாடங்கள்’ எனும் தலைப்பில் 19 நவம்பர் 2014 அன்று யாழப்பாணத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரை தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்திரிகையின் இணையத்தளம் ஒன்று தவறாக செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவ சுருக்கத்தையும் உரையின் ஒலி வடிவத்தையும் இங்கு பதிவிடுகிறேன்).

01. பொதுவாக்கெடுப்பொன்றை/ஒப்பங்கோடலொன்றை (referendum) தமிழர்கள் கோருவது (நடைமுறைச்) சாத்திமானதா என்ற கேள்விக்கு தற்போதைய சூழலில் இல்லை என்பதே விடையாக இருக்கும். எனினும் எமது அரசியல் நகர்வின் பாற்பட்ட வெளிப்படுத்தல்கள்/ கோரிக்கைகள் வெறுமனே எவை சாத்தியம் என்ற வெளிக்குள் நின்று செய்யப்படக் கூடாது. யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமாயினும் அதற்குள் சிறைப்பட்டு விடக்கூடாது. யதார்த்தத்தை மட்டும் முன்வைத்த நகர்வுகள் எமது அரசியலிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்; யதார்த்தத்தையும், செய்யப் பட வேண்டியவை எவை என்ற இரண்டையும் விளங்கிக் கொண்டு இன்றுள்ள சூழலை எமக்கு உதவும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். தூர நோக்குச் சிந்தனையில், என்னைப் பொறுத்த வரையில் பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கையை நாம், அரசியற் தீர்வுக்கான உரையாடலின் ஓர் அங்கமாக முன் வைக்கலாம், முன் வைக்கவும் வேண்டும். அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் எவ்வாறு முன் வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஓர் யோசனைப் பகிர்வொன்றை இவ்வுரையினூடாகப் முன்வைக்க விரும்புகிறேன்.

02. பொது வாக்கெடுப்பு தொர்பாக அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் பிரதான விமர்சனம் அது ஓர் ‘நிகழ்வை’ (event) முன்வைத்த ஓர் அரசியல் வைபவமாகவே இருக்குமேயன்றி மக்கள் பங்குபற்றலை அது சாத்தியப்படுத்தாது என்பதாகும். அரசியல் மேட்டுக்குடிகளின் (Political Elite Groups); பெற்றுக் கொள்ள விரும்பும் ஆதாயங்களைப் பெற்றுக் கொடுக்கும் ஒர் உபகரணமாகவே பொது வாக்கெடுப்பு இருக்கும் என்பது இவ்விமர்சனம் முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. அண்மையில் (18 செப்டம்பர் 2014) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து பொது வாக்கெடுப்புச் செயன்முறை உட்பட மேற்கத்தைய நாடுகளில் இடம் பெற்ற சில பொது வாக்கெடுப்பு முறைகளை உதாரணமாகக் கொண்டு, இவ்விம்ர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஓர் நிகழ்வு என்பதற்கப்பால் உண்மையான மக்கள் கலந்தாய்வுக்கான பங்குபற்றல் வெளியை (Deliberative Politics) பொது வாக்கெடுப்பு செயன்முறை ஒன்று உருவாக்கவல்லது என பேராசிரியர் ஸ்பீபன் டயர்னி (Prof Stephen Tierney) வாதிட்டுள்ளார். பொது வாக்கெடுப்பில் பங்குபற்றும் தரப்புகள் மனம் வைத்தால் உண்மையான மக்கள் பங்குபற்றுதலை உள்வாங்கும் கலந்தாய்வு சனநாயகமாக பொதுவாக்கெடுப்புச் செயன்முறையை மாற்றலாம் என்பதே பேராசிரியர் டயர்னியின் ஆய்வு முடிவாகும். ஸ்கொட்லாண்ட் தேசியக் கட்சி (Scottish National Party) ஸ்கொட்லாண்ட் பொது வாக்கெடுப்பை ஓர் ஆக்கபூர்வமான எதிர்கால ஸ்கொட்லாண்ட் தொடர்பான பரந்துபட்ட விவாதமாக மாற்றியமை பொதுவாக்கெடுப்புச் செயன்முறையை வெகுசன அரசியலை ஆக்கபூர்வமாக வழிப்படுத்துவதற்காக உபயோகித்தமைக்கு நல்லதோர் உதாரணம் எனப் பரவலாக மெச்சப்படுகின்றது.

03. மே 2009 இற்கும் பின்னரான தமிழரசியல் வெறுமனே ஓர் பதிலிறுக்கும், துலங்கும் (reactionary) அரசியலாகவே இருந்து வருகின்றது. தென்னிலங்கைச் சக்திகள், சர்வதேசம் எடுக்கும் நகர்வுகளுக்கு பதிலிறுக்கும் வகையிலேயே தமிழ் அரசியல் செயற்பாடுகள் சுருங்கிப் போய்க் கிடக்கின்றன. இச்சக்திகள் தமிழரசியலைத் தமது நலன்கள், தேவைகளுக்கேற்ப துருப்பு சீட்டாகப் பாவிக்கின்றனர். தமிழர்கள் தமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான நகர்வொன்றைத் தாமாக முன்னெடுப்பது எவ்வாறு? தென்னிலங்கை அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் எமது பிரச்சனை தொடர்பில் ஓர் நகர்வற்ற நிலைப்பாடு (stalemate) இருக்கின்ற பட்சத்தில் எமது சமூகத்திற்குள்ளிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றம் – உந்து விசை – ஒன்றின் மூலமாகவே நாம் இவ்வெளிச் சக்திகளை நகரச் செய்யலாம். அத்தகைய உந்து விசையானது வெகுசன அரசியல் இயக்கம் ஒன்றின் மூலமே சாத்தியமானதாகும்.

04. பொதுசன வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்ப் பரப்பில் வெகுசன அரசியலை சாத்தியப்படுத்துவது எவ்வாறு? பொதுசனவாக்கெடுப்பு ஒன்று சாத்தியப்படுத்துவது என்பது வெறுமனே அதனைக் கோருவதால் நடைபெறாது. அக்கோரிக்கை வலுவானதாக, தட்டிக்கழிக்கப்பட முடியாத ஒன்றாக மாற்றுவதற்கு நாம் ஓர் அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

1997 இல் ஸ்கொட்லாண்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்புச் செயன்முறையை நாம் இதற்கு ஓர் முன்னோடியாகக் கருதலாம் என நான் கருதுகிறேன். (ஸ்கொட்லாண்டில் 3 பொது வாக்கெடுப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. முதலாவது 1979 இலும் இரண்டாவது 1997 இலும் மூன்றாவது 2014 இலும் இடம் பெற்றது).

1997 இல் ஸ்கொட்லாண்ட் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கு நடைபெற்ற பொது சன வாக்கெடுப்பிற்கு முன்னோடியாக – அதைச் சாத்தியப்படுத்தும் வகையில் பாரிய வெகுசன அரசியல் இயக்கம் ஒன்று கட்டியெழுப்பப்படடது. ஸ்கொட்லாண்ட் சட்டப்பேரவைக்கான பிரச்சார அமைப்பு (Campaign for a Scottish Assembly) ஸ்கொட்லாண்ட் அரசியலமைப்பு சமவாயம் (Scottish Constitutional Convention) எனும் அமைப்புக்கள் ஸ்கொட்லாண்ட் மக்களினால் உருவாக்கப்பட்டது. ஸ்கொட்லாண்டின் முன்னணி அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மதக்குழுக்கள், வௌ;வேறு மக்கள் குழுமங்கள் இவ்வமைப்பில் அங்கம் வகித்தன. இச்சமவாயமானது பரந்துபட்ட ஓர் அரசியல் கலந்தாய்வொன்றை மக்கள் மத்தியில் செய்து அதன் விளைவாக ஸ்கொட்லாண்ட் பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான ஓர் ஆவணத்தை (‘Scotland’s Parliament, Scotland’s Right’) உருவாக்கினர். அவ்வாவணத்தின் சனநாயக வலிமையே ஸ்கொட்லாண்ட் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கும் அதன் வழியாக ஸ்கொட்லாண்ட் பாராளுமன்றம் அமைவதற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கும் வழி உருவாக்கப்பட்டது.

மேற் கூறிய அனுபவத்தின் பாற்பட்டு பொது வாக்கெடுப்பை நோக்கி நகரும் வகையில் நாம் முன்னேடுக்கக் கூடிய செயற்பாடு பற்றிய எனது முன் மொழிவு பின்வருமாறு:

1. தமிழ்த் தேசியத்தின் பாற்பட்ட அரசியற்கட்சிகள், சிவில் சமூகக் குழுக்கள், தொழிற் சங்கங்கள், மாதர் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடி சங்கங்கள் போன்றவற்றைக் கொண்டமைந்த தமிழ்த் தேசிய சபையொன்றை ஸ்தாபித்தல். (Tamil National Council) இத் தமிழ்த் தேசிய அவைக்கான ஆணையை தமிழர்களின் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வழங்கலாம்.

2. அச்சபையினூடாக தமிழ் மக்களுடன் கலந்தாய்வொன்றை விரிவாக நடாத்தி தமிழ் மக்களின் எதிர்கால அரசியல், பொருளாதார, கலாசார சமூகப் பார்வையையும் அபிலாசைகளையையும் வெளிப்படுத்தும் ஓர் ஆவணத்தைத் தயாரித்தல். இவ்வாவணத்தின் சனநாயக வலிமை கலந்தாய்வின் உள்வாங்கும் ஆழத்தில் தங்கியிருக்கும். தமிழ்த் தேசியவாதம் தொடர்பில் புதிய ஓர் கலந்துரையாடலைச் செய்வதற்கு – அதன் பிற்போக்குத் தனங்களைக் களைந்து முற்போக்குத் தேசியவாதமாக அதனை முன்னகர்த்த இந்தத் தேசியக் கலந்துரையாடல் உதவி செய்யும்.

3. அத்தகையவோர் ஆவணத்தின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை காத்திரமாக முன்வைத்தல்.

இன்று பிரதிநிதித்துவ அரசியல் மீதான தமிழ் மக்களின் சலிப்பு அதிகரித்து வரும் வேளையில், புறச்சக்திகள் தமிழர் பிரச்சனை தொடர்பில் பழமைவாத, மென் போக்கைக் கடைப்பிடிக்கும் சூழலில் எமது அரசியலை மீள்புதுப்பிப்பது எமது கடமையும் பொறுப்புமாகும். இதை வேறொருவரும் எமக்காகச் செய்ய முன் வரப் போவதில்லை. நாமே இதைச் செய்ய வேண்டும். ஸ்கொட்லாண்ட் போன்ற அனுபங்களிலிருந்து நாம் பிரதானமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது இதுவே. இவ்வுணர்வின் பாற்பட்டு மேற்படி முன்மொழிவை நான் விவாதத்திற்காக முன்வைக்கிறேன்.

மேற்படி எனது முன்மொழிவு நாம் வெகுசன அரசியலை சாத்தியப்படுத்துவதற்கு செய்ய வேண்டியதென்ன என்பதைப் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தும் ஒரேயொரு நோக்கத்திற்காக முன்வைக்கப்படுகின்றது. மேற்படி முன்மொழிவு பல கேள்விகளைக் கேட்கத் தூண்டும் நோக்கில் ஓர் முற்றுப் பெறாத முன்மொழிவாகவே முன் வைக்கப்படுகின்றது என்பதையும் வலியுறுத்திப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

—-

பிற்குறிப்பு:

ஆகஸ்ட் 2013 இல் நான் ஆற்றிய குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரையில் ‘பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான தமிழர்களின் உரிமை’ என்ற உப-பகுதியில் கூறியவை:

எடின்பரோ  பல்கலைக்கழகப் (University of Edinburgh) பேராசிரியர் ஸ்டீபன் டயர்னி கடந்த வருடம் வெளியிட்ட ‘அரசியமைப்பு ஒப்பங்கோடல்கள்: குடியரசுக் கதையாடல்களின் தத்துவார்த்துவமும் நடைமுறையும்’  என்ற நூலில் பொதுசன வாக்கெடுப்புக்கள் அண்மைக் காலமாக நான்கு வகையான அரசியமைப்புச் செயன்முறைகளுக்குப் பயன்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.

01. புதிய நாடுகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம்: மொன்டிநீக்ரோ 2006, தென்சூடான் 2011)

02. புதிய அரசியலமைப்புக்களை உருவாக்கல் அல்லது நிலவுகின்ற அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரும் பொருட்டு (உதாரணம்: ஈராக், 2005)

03. புதிய சிக்கலான உப-அரச அலகிற்கான சுயாட்சி மாதிரிகளை உருவாக்கும் பொருட்டு (உதாரணம்: ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் 2014)

04. அரசிடமிருந்து பல்லரசு நிறுவனங்களிற்கு அதிகாரங்களைக் கையளித்தல் பொருட்டு (உதாரணம்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய அரசுகள் அதிகாரங்களை கையளித்தல் தொடர்பில் நடாத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்புக்கள்)

மேற்கூறியவற்றில் முதலாம், மூன்றாம் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அனுமதியோடு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து போவதா என்பது தொடர்பில் ஸ்கொட்லாண்டில் 18 செப்டம்பர் 2014 அன்று பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது. அதே போன்றதொரு பொதுசன வாக்கெடுப்பை ஸ்பெயினில் இருந்து பிரிந்து போவது தொடர்பில் கட்டிலோனியா நடத்த உத்தேசிக்கின்றது. 2006இல் மொன்டிநீக்ரோ தனிநாட்டிற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியது. 2002இல் பெல்கிரேட் ஒப்பந்தத்தினூடாக யுகோஸ்லாவியாவின் உடைவு பூரணப்படுத்தப்பட்டதாக கருதப்பட்டாலும் மொன்டிநீக்ரோ, கொசோவோ பிரச்சினைகள் தொக்கு நின்றன. 2006இல் பொன்டிநீக்ரோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த பொன்டிநீக்ரோக்களும் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர். 55% மானவர்கள் சாதகமாக வாக்களித்தால் ஐரோப்பிய ஒன்றியம் தனிநாட்டை அங்கீகரிப்பதாக வாக்களித்திருந்தது. 55.5% மானவர்கள் சாதகமாக வாக்களித்தார்கள். பிராந்திய ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக இந்த பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்திருந்தது . 2011இல் தென்சூடானில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பு ஒரு சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெற்றது. தென்சூடானில் உள்ள எண்ணெய் மீது அக்கறையோடிருந்த மேற்குலகம் சூடானில் ஸ்திரத்தன்மை இருந்தால் தான் அவ் எண்ணெயைப் பிரயோசனப்படுத்தலாம் என்பதற்காகவே பொதுசன வாக்கெடுப்பையும் தனிநாட்டையும் ஆதரித்ததாகவே கூறப்படுகின்றது. எனினும் அமெரிக்க அரசாங்கத்தின் சக்தி தகவல் நிர்வாகப் பணியகத்தின் தகவல்படி தென்சூடானில் எண்ணெய்யைப் கூடுதலாகப் பாவிப்பவர்கள் சீனாவும் ஜப்பானும் இந்தியாவுமே . சீனாவும் ஜப்பானும் தென்சூடான் தனி நாடாவது தொடர்பில் அமைதிப் பங்காளிகளாக இருந்தமையை நாம் கவனிக்க வேண்டும். தென்சூடான் உருவாகிய மறுநாளே இந்தியா தென்சூடானை ஒரு நாடாக அங்கீகரித்தது . யுத்தத்னின் போது தென்சூடான் போராட்டக்குழுக்கள் இந்தியாவின் எண்ணெய் வயல்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1990களில் டார்பூரில் (Darfur) நடைபெற்ற கொடூரங்களைத் தொடர்ந்து சூடானுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைக் பயன்படுத்தி உள்நுழைந்த சீனா தனது பொருளாதார நலன்களைக் கவனிப்பதற்காக அடித்தளங்களை இட்டது. தென்சூடான் பிரிந்து போவது என்பது உறுதி செய்யப்பட்ட பொழுது சீனா தென்சூடானையும் அங்கீகரித்தது. அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகியன தமிழர்கள் தொடர்பில் இலங்கை தொடர்பில் கொண்டிருக்கும் வெளியுறவுக் கொள்கையை மேற் சொன்னவற்றிலிருந்து எப்படி விளங்கிக் கொள்ளலாம் என்ற வியாக்கியானத்தை நான் உங்களிடமே விட்டு விடுகின்றேன்.

மே 2009 இற்குப் பின்னரான சூழலில் பொது சன வாக்கெடுப்பைக் கோருவது என்ற உத்தி தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தமிழர்களது அரசியல் தீர்வு செயன்முறை ஒன்றை அணுகுவது என்பது சனநாயக ரீதியாக முன்வைப்பு (democratic articulation) என்ற வகையில் அறவியல் சார்ந்து மறுதலிக்க முடியாது. சனநாயகம் என்ற ஒற்றை சுலோகம் தாங்குபவர்கள் இதற்கு மறுப்பு சொல்வது என்பது முடியாத காரியம். ஸகொட்லாண்டில், கட்லோனியாவில, மொன்டிநீக்ரோவில், தென்சூடானில் அத்தேசங்களைச் சார்ந்த மக்களுக்கு இந்த சனநாயக வாய்ப்பு இருக்குமென்றால் சர்வதேச அரசியல், குடியியல் பொருத்தனை கூறுகின்ற ‘தாம் விரும்கும் அரசியல் தெரிவை மேற்கொள்வதற்கான’ சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்தும் கருவியாக தமிழர்கள் பொதுசனவாக்கெடுப்பை கோருவதற்கான தார்மீக உரிமை உண்டு. இந்தப் பொதுசனவாக்கெடுப்பில் தமிழர்கள் என்ன தெரிவு செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஒரு செயன்முறை சார்ந்த முன்வைப்பாக (process-related articulation) நாங்கள் இதனை முன்வைக்கவேண்டும்.

 

http://rkguruparan.wordpress.com/2014/12/04/referndumspeechjaffna/comment-page-1/#comment-7

இலங்கை மற்றும் புலத்தில் வாழும் தமிழ் மக்களே! வாக்கு அளிப்பது பற்றி என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்.ஒரே குழப்பமாயுள்ளது.எனது கற்பனையில் பிறந்த நினைவுகளை உங்களுடன் பகிருகின்றேன்.

மகிந்தாவா?எதிரணியா?

முதலில் மகிந்தா பக்கம் உள்ள நன்மை தீமைகளைப்பார்ப்போம். போற்குற்ற விசாரணை வெளி நாட்டு தலையீடு பொருளாதாரத்தடை என்பன மிக அருகிலேயே வந்து கொண்டிருக்கின்றது.ஏதோ அரை குறைத்தீர்வையாவது தமிழனுக்கு திணிப்பார்கள். சீனாவின் ஆதிக்கம் இருக்கும் வரை அன்னியத்தலையீடு இருந்து கொண்டே இருக்கும்.இதுவும் தமிழர் தரப்புக்கு ஆறுதலான விடயம் தான்.பட்ட கஸ்டங்களுக்கெல்லாம் முடிவு நெருங்கும் வேளையில் ஆட்சி மாறினால் குறைந்தது பத்து வருடங்கள்பின்னோக்கி சென்று அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்.தற்போதுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தை முதலில் விரும்பும் நாடு இந்தியாவே தான்.காரணம் தமிழர் தரப்பு பிரச்சனைகளுக்கு மேற்குலகும் ஐ நாவும் தலையீடு செய்வதால் உண்மைகள் நிரூபிக்கப்பட்டால் உள்ளூரிலும் வெளி நாடுகளிலும் உள்ள மக்களிடத்தில் இந்தியாவின் செல்வாக்கு சரிந்து விடும்.வெளி நாடுகளில் உள்ள இந்திய பிரஜைகள் ஏதோ ஒரு பாதிப்புக்குள்ளாவார்கள்.அடுத்து சீனாவின் பிரசன்னம் மட்டுப்படுத்தப்படும்.ஆகவே இந்தியா பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தரும் என்று இன்னும் யாராவது நம்புவீர்களானால் என்னிடம் வார்த்தைகள் இல்லை.காரணம் இலங்கைத்தமிழர்களுக்கு ஆயுதம் வழங்கி போரை ஆரம்பித்து வைத்த இந்தியாவே போரையும் முடித்து வைத்தது.எதிர் கட்சியின் பக்கம் பார்த்தோமானால் தேரருடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முக்கியமாக தமிழர்களின் நலம் சம்பந்தப்பட்டது.தற்போது தமிழர் இருக்குமிடத்திலிருந்து ஒரு படி கூட அடியெடுக்க முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது.அதையும் மைத்திரி பால என்ற அடுத்த சிங்களர் பின்வருமாறு உறுதிப்படுத்தியுள்ளார்:நானும் ஓர் பேரினவாதி தமிழர்களுக்கு ஆட்சி சம்பந்தமாக எந்தவித சலுகைகளையும் வழங்கமுடியாது என்று பொது மேடையிலேயே தெரிவித்துள்ளார்.இதற்கு மேல் என்ன செய்யலாம்.இந்தக்கட்சி வெல்ல மகிந்த விடமாட்டார்.இல்லையேல் ராணுவாட்சி உறுதி.அப்படி வென்றால் யாரும் தமிழர் பிரச்சனையில் தலையிட மாட்டார்கள்.காரணம் அவர்களது கன்னி உரையில் கொஞ்சம் கொஞ்சமாக ராணுவம் விலக்கப்படும் தனிமனித சுதந்திரம் பேணப்படும் (இந்த தனிமனித சுதந்திரத்தினுள் யாரும் எங்கும் போகலாம் வரலாம் எங்கும் குடியேறலாம்.இப்படி எல்லாம் அடக்கம்)தமிழர்களின் பிரச்சனை படிபடியாகத்தீர்க்கப்படும்.இதற்கு நான் முன்பு கூறிய பத்து வருடம் அடங்கி விடும்.இப்போ என்ன செய்வது.அதுதான் எனக்கும் தெரியவில்லை

 

புலிகளால் தான் எல்லாம் அழிந்து

போனது என குப்பாடு போடும் அன்பர்கள் வந்து இதற்கு கொஞ்சம் கருத்து எழிதினால் நல்லா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.