Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்னோகிராபியும் இலக்கியமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்னோகிராபியும் இலக்கியமும்

யமுனா ராஜேந்திரன

பீடபைல்கள் இன்று எல்லாச் சமூகங்களிலும் பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் குழந்தைகளோடு பாலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகளை நைச்சியம் செய்து உறவு கொள்வார்கள். முடியாது போனால் தந்திரமான முறையில் கடத்திச் செல்வார்கள். இங்கிலாந்தில் இந்த மனநிலை கொண்டவர்கள் பல பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கீத்தா ஸெரனி எனும் எழுத்தாளர், இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமி பற்றி நூலை எழுதியிருக்கிறார். மிகவும் சிறுவயதில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்பட்டிருந்ததை அவரது மனநிலைத் திரிபுக்கான காரணங்களில் ஒன்றாக கீத்தா ஸெரனி சொல்லியிருந்தார். சிறுமியின் தாய் ஒரு விலைமாது என்றும் அவள் இச்சிறுமியைத் தனது வாடிக்கையாளர்களின் வன்முறைக்கு இரையாக்கினாள் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். அதைப் போலவே பீடபைல்கள் தமது சிறுவயதில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதால் மனம் வக்கரித்துப் போகிறார்கள் என்று ஒரு உளவியல் விளக்கம் இருக்கிறது. இவ்வகையில் லோலிடா நாவல் இந்தப் பிரச்சினையை உளவியல் பரிமானத்திலிருந்து அணுகுவதால் இன்றளவும் முக்கியமான இலக்கியமாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பியச் சமூகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலுறவுக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்திருக்கிறது. அத்தோடு பீடபைல்கள் பற்றிய விவாதமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வருகிறது. பிரான்ஸில் தமிழ்ப் பெண்குழந்தையன்று இவ்வகையில் கொல்லப்பட்டதன் வேதனை அலைகள் நம் நினைவை விட்டு அகலவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் இங்கிலாந்தில் அதிகரித்ததை அடுத்து, ஒரு பெண் பத்திரிகையாளர் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து பீடபைல்களுக்குப் பொதுமக்களே தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு நிலைமை உருவானது. அவசரத்தில், சந்தேகிக்கப்பட்ட சில அப்பாவிகளும்கூட அடிக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து மனித உரிமையாளர்களும் தாராளவாதிகளும் பத்திரிகையாளரின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்தார்கள். இந்த விவாதங்களின் போது ஒரு விஷயம் தெளிவாக வலியுறுத்தப்பட்டது – குழந்தைகள் மீது பாலுறவுக் குற்றம் புரிபவர்களை உளவியல் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. குழந்தைகள் மீது பாலியல் குற்றம் புரிபவர்களை உளவியல் சமநிலை கொண்டவர்களாக இந்த மனித உரிமையாளர்கள், தாராளவாதிகள் எவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது கவனத்துக்குரியது.

பாலியல்பு குறித்த தீவிரக் கலைக்கும் போர்னோகிராபிக்கும் இடையிலான படைப்பியல் நோக்கிலான எல்லை குறித்த பிரச்சினை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து உலக அளவில் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு மற்றும் அந்த வன்முறையாளர்களின் தந்திரோபாயங்கள் குறித்த உளவியல் பகுப்பாய்வு, தேசியம் குறித்த கருத்தியல் மரணம், விமர்சன விழிப்பு அழிந்த நிலை, போர்னோகிராபியில் கரைகிற பரிதாபம் என்ற அவல நாடகம் குறித்த விவாதம்,பாலியல் தொழிலாளர்கள், திருடர்கள், மின்கம்பக் கொலைகள் குறித்து விமர்சனரீதியான, சரக்குவகை வழிபாட்டுக்கு எதிரான அறவியல் விசாரணை, சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் என்று தன்னைக் கோரிக்கொள்ளும் போர்னோகிராபி எழுத்து பற்றிய, ஒரு பீடபைலின் உளவியலை சரக்கு வழிபாடாக்கும் பிரதி பற்றிய பதிவுகள் என போர்னோகிராபிக்கும் போலித் தலித்தியத்துக்கான அபத்த உரிமைகோரலுக்கும் இடையிலான உறவைக் குறித்து சில அடிப்படைகளை விவாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பாலுறவைச் சித்தரித்த இலக்கியங்களில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய இரண்டு நாவல்கள் டி.ஹெச். லாரன்ஸின் லேடி சாட்டர்லிஸ் லவர் மற்றும் விளாதிமிர் நபக்கோவின் லோலிடா. சிந்திப்பவர்களிடையே மிகப்பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த இரண்டு உலகத் திரைப்படங்களைச் சொல்ல வேண்டுமானால், ஒன்று ஜப்பானிய இயக்குனர் நகிசா ஒஸிமாவின் அய்டோ கோரா, மற்றொன்று பெர்னார்டோ பெர்ட்டலூசியின் லாஸ்ட் டேங்கோ இன் பாரீஸ்.

1958 இல் வெளியான நபக்கோவின் லோலிடா நாவல், 1962 இல் சிறந்த கலைஞனான ஸ்டான்லி குப்ரிக்கால் திரைப்படமாக உருவானது. அதே கதை பேடல் அட்ராக்ஷன் போன்ற கமர்ஷியல் படங்களை எடுத்த அட்ரியன் லினால் 1997 இல் எடுக்கப்பட்டது. லேடி சாட்டர்லிஸ் லவர் நாவல், பிரெஞ்சு ஸாப்ட் போர்னோகிராபி நடிகையும் இம்மானுவெல் என்ற தொடர்நீலப்படங்களின் நாயகியுமான ஸில்வியா கிறிஸ்டல் நடிக்க, 1981 இல் ஜஸ்ட் ஜேக்கினால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதன் இன்னொரு வடிவம் 1993 இல் ஆங்கில இயக்குனர் கென் ரஸ்ஸலால் எடுக்கப்பட்டது.

லேடி சாட்டர்லிஸ் லவர் நாவல் அதன் அடிப்படையில் மனமுதிர்ச்சி பெற்ற ஆண்கள் பெண்களுக்கு இடையில் நடைபெறும் திருமணம் மீறிய பாலுறவை மிக வெளிப்படையாகச் சித்தரித்தது. அன்று நீதித்துறையின் கண்டிப்புக்கும் தணிக்கைக்கும் உள்ளான இந்த நாவல், இன்று மேற்கத்திய சமூகத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சினையைச் சித்தரிக்கும் ஒரு சாதாரண நாவலாக ஆகிவிட்டது. அய்டோ கோரா படம் போர்க்காலங்களின் வன்முறைக்கும் ஜப்பானிய கெய்ஷா விடுதிக் கலாச்சாரத்தின் மட்டுமீறிய பாலுறவு வேட்கைக்கும் இடையிலான சிக்கலை வரலாறு மற்றும் உளவியல் பின்னணியில் ஆய்வு செய்ய முற்பட்டது. அதன் இயக்குனர் ஒஸிமா உலகப் புரட்சிகளை ஆதரித்த மார்க்ஸிஸ்ட் புரட்சியாளராகவும் திகழ்ந்தார். மனமுதிர்ச்சி பெற்ற ஆண்கள் பெண்களுக்கு இடையில் நிகழும் பாலுறவு குறித்த மிக நேரடியான சித்தரிப்புகள் இப்படத்தில் இடம்பெற்றன.

இந்த நாவல்களும் படங்களும் சிந்திப்பவர்களிடம் எழுப்பிய கேள்விகள் சமூக அறவியல் சார்ந்தவை. இவை மனமுதிர்ச்சி பெற்றவர்களின் பாலுறவு வேட்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பானவை. லேடி சாட்டர்லிஸ் லவர் நாவலில் சொல்லப்படும் பாலுறவு வேட்கையையும் மீறலையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் மிக எளிதாக விளங்கிக்கொள்ள முடியும். டி.ஹெச். லாரன்ஸின் தொழிலாளி வர்க்க வாழ்வனுபவத்தையும் அவரது பெற்றோர்க்கிடையிலான உறவு குறித்த அவரது விமர்சன உணர்வையும் கோபத்தையும் அவரது பாலுறவுச் சித்தரிப்புகளில் காண முடியும். அவரது தாய் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். தந்தை தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் தன் கணவரை வாழ்நாள் முழுதும் உதாசீனப்படுத்தி வந்திருக்கிறார். விக்டோரியன் சமூகத்தின் இரட்டைநிலை மதிப்பீடுகள் மீதான மிக மூர்க்கமான தாக்குதலைத்தான் அந்நாவலில் நாம் பார்க்கிறோம். ஐரோப்பியச் சமூகத்தில் மிக அதிகமான போர்னோகிராபி எழுத்துக்கள் விக்டோரியன் மதிப்பீடுகள் நிறைந்த காலத்தில்தான் வந்தன. ஆட்சி செலுத்திய வம்சத்தவரின் பாலுறவு விகாரங்கள் அன்று தலைவிரித்தாடின. அதே வேளையில் மேட்டுக்குடி வர்க்கம், வம்சத்துக்குள்ளாக தூய பாலுறவை வலியுறுத்தியவர்களாகவும் அவர்களே இருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் வர்க்க வேறுபாடுகளைக் காறியுமிழ்ந்து பெருகும் உக்கிரமான உடலுறவையும் அதிலிருந்து விளையும் காதலையும் அழுத்தமாகச் சித்தரித்தார் லாரன்ஸ்.

நபக்கோவின் லோலிடா நாவல் எழுப்பிய பிரச்சினைகள் வித்தியாசமானவை. அதன் முதன்மைப் பாத்திரம் ஐம்பது வயது கடந்த ஓர் ஆண். பெண் பாத்திரம் பதிமூன்று வயதேயான குழந்தை. இவர்களுக்கு இடையில் ஏற்படும் பாலுறவை ஆண் பார்வையில் இருந்து, கணவானாக வாசகர் மனதில் தோற்றம் தருகிற ஓர் ஆணின் பார்வையில் இருந்து விவரித்தது இந்நாவல். அத்தகைய உறவினால் அந்த ஆணின் மனதில் ஏற்படும் குற்றவுணர்வு, சந்தேகங்கள், தற்சார்பான வாதங்கள், அந்த உறவின் காரணங்களைக் கண்டடைய அவன் மேற்கொள்ளும் முயற்சிகள், சந்தோஷங்கள், துயரங்கள் என அனைத்தையும் ஒரே தளத்தில் சித்தரித்தது என்பது அந்த நாவலின் மிக மிகக் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வேறுபட்ட உணர்வு நிலைகளையும் உளவியல் நெருக்கடிகளையும் உளவியல் தன்மையிலான மொழியில் இந்நாவல் விவரித்ததே அல்லாமல், ஆண் பெண் உறுப்புகள் சார்ந்த களியாட்டங்களைக் காட்சிப்படுத்தி விகாரப்படுத்தும் மொழிநடையில் சித்தரிக்கவில்லை. உறுப்புகள் சார்ந்த விஷயங்களைச் சித்தரிப்பதென்பது, வணிக நோக்கம் கொண்ட கிளர்ச்சி நோக்கம் கொண்ட போர்னோகிராபிப் பண்பு என்று இந்நூலின் பின்னுரையில் நபக்கோவும் கூறியிருக்கிறார்.

உடல் சார்ந்த நெருக்கடிகளை உளவியல் மொழியில் வெளிப்படுத்துவது என்பது இலக்கியத்தின் பண்பாக இருக்க, உறுப்புகள் சார்ந்த களியாட்டங்களை விவரிப்பது போர்னோகிராபியின் பண்பாக இருக்கிறது. பாலுறவு அனுபவத்தை ஒருவர் தனக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படும் கிளர்ச்சியை ஊட்டுவதே போர்னோகிராபியின் நோக்கமாக இருக்கிறது. பாலுறவு இங்கே ஓர் இயல்பனுபவமாக ஆவதில்லை சரக்கைப் போன்ற ஜடத் தன்மையை அது அடைகிறது எனும் நபக்கோவ், இவ்வகையில் தன் எழுத்துக்கும் போர்னோகிராபி எழுத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்தானதொரு போக்க இந்நாவலின் பாத்திரங்கள் சுட்டுகின்றன என்று இந்நாவலுக்கு முன்னுரை எழுதியவரும் நாவலில் ஒரு பாத்திரமாக வருபவருமான ஜான் ரே குறிப்பிடுகிறார்.

சமூகம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பொதுப் பாடம் இந்நாவலில் இருக்கிறது சாத்தியமான எதிர்கால பயங்கரம் இந்நாவலில் இருக்கிறது பாதுகாப்பான உலகில் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது உளவியல் ஆய்வுக்கு மிக அவசியமானதாக இந்நாவல் இருக்கிறது. கதை நாயகன் ஒரு பாலுறவு வெறியன் என்பதைக் காட்டி, நாகரிகமான சமூகத்தை உருவாக்கக்கூடிய மதிப்பீடுகளை உருவாக்குவதற்கு இந்நாவல் நமக்கு வழிகாட்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்டான்லி குப்ரிக்கின் லோலிடா படத்திலும் பதிமூன்று வயதுப் பெண்குழந்தையின் உடலுறவைச் சித்தரிக்கும் காட்சிகளோ காமிராக் கோணங்களோ இல்லை. அட்ரியன் லினின் லோலிடாவில் அந்தப் பதிமூன்று வயதுக் குழந்தை புஷ்டியான அமெரிக்கக் கிளர்ச்சி கொண்ட இளம் பெண்ணாகிறாள். அவள் உடல் மீதான குளோசப் காட்சிகள் காமிராக் கோணங்கள் ஆகின்றன. ஸில்வியா கிறிஸ்டல் நடித்த லேடி சாட்டர்லிஸ் லவர் போர்னோகிராபிப் படமாகிறது. பெண்கள் பற்றி மிகக் கேவலமான அபிப்பிராயமும் சித்தரிப்பும் கொண்ட கென் ரஸ்ஸலின் படமும் போர்னோகிராபித் தன்மையைத்தான் பெறுகிறது. அதே வேளை, வெளிப்படையாக பாலுறவைச் சித்தரித்தாலும் கூட, உளவியல் அதிர்ச்சிகளைக் கொண்டனவாக பெர்ட்டுலூசி மற்றும் ஒஸிமாவின் படங்கள் இருக்கின்றன.

விக்டோரியன் மதிப்பீடுகளுக்கு லேடி சாட்டர்லிஸ் லவர் தந்த அதிர்ச்சி இன்று மறைந்துவிட்டது. திருமணம் மீறிய பாலுறவு, வர்க்கம் கடந்த பாலுறவு என்பதெல்லாம் இன்று சாதாரணமாகி விட்டது. மேற்கில் அந்நாவலின் சமூகப் பொருத்தப்பாடு என்பது இன்று தேய்ந்து போய்விட்டது. லோலிடா பேசிய விஷயங்கள் இன்றளவும் பிரச்சினைக்குரியனவாகவே இருக்கின்றன் 1997 இல் கூட அது படமாக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மீதான பாலுறவுக் குற்றங்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் லோலிடா மிகவும் பொருத்தப்பாடு கொண்டதாகவே இருக்கிறது.

குழந்தைகளோடு பாலுறவு கொள்ள நினைக்கும் மேற்கத்தியர்களில் நிறையப்பேர் இன்று மூன்றாம் உலக நாடுகளுக்குத்தான் செல்கிறார்கள். பிலிப்பைன்ஸில் பெண்குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதும் இலங்கையில் ஆண்குழந்தைகள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தப்படுவதுமான கொடுமைகள் இன்று உலகின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன. இந்தப் பின்னணியில் லோலிடா இன்றளவும் விவாதிக்கப்பட வேண்டியதாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்நாவல் 1950-60 களில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அறவியல், உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்சினைகள் இன்று பூதாகரமான சமூக பயங்கரங்களாகவும் கொலைகளாகவும் வளர்ந்திருக்கின்றன. பாலுறவுச் சித்தரிப்பில் எது படைப்புத் தன்மை கொண்டது, எது போர்னோகிராபித் தன்மை கொண்டது என்று பிரித்தறிய வரலாறு நெடுகிலும் எழுத்துக்களும் படங்களும் காணக் கிடைக்கின்றன. போர்னோகிராபி குறித்த விவாதங்களுக்கு மேற்கில் ஒரு நீண்ட மரபு இருக்கிறது. ஸ்டான்லி குப்ரிக்கின் கிளார்க் கெவார்க்க ஆரஞ்ச் படத்தை பிரிட்டிஷ் தணிக்கை அமைப்பு தடை செய்தது. ரொமான்ஸ் எனும் படத்துக்கு எந்த நிபந்தைனையும் வெட்டும் இல்லாமல் சான்றிதழ் வழங்கியது. வன்முறையான பாலுறவு, குதப் புணர்ச்சி என்று காட்சிகளைக் கொண்ட அப்படத்தை இயக்கியவர் ஒரு பெண்.

படைப்பியல் கேள்விகள், விவாதங்கள் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் முற்றிலும் சுதந்திரமான முறையில் இன்னோர் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காமக் கிளர்ச்சியூட்டுவதையே முழு நோக்கமாகக் கொண்டு உலகெங்கும் செயல்பட்டுவரும் போர்னோகிராபிப் பட உலகம்தான் அது. உங்களுக்குக் கிளர்ச்சி, எங்களுக்குப் பணம் என்ற தூய வணிக நோக்கம் அல்லாது வேறு எந்தப் போலித்தனங்களும் இவ்வகைப் படங்களுக்கு இல்லை. இப்படைப்புகளைத் தயாரிப்பவர்கள் எவரும் தம்முடையவை கலைப் படைப்புக்கள் என்று கோரிக் கொள்வதில்லை.

அறுபது எழுபதுகளில் பெங்களூர் சரோஜாதேவியின் போர்னோகிராபிக் கதைகளைப் படித்துவிட்டுக் கிளர்ச்சி பெறாதவன் எவனுமேயில்லை எனச் சொல்லலாம் (வயதைச் சொல்லவில்லை, ஆண்டுகளைச் சொல்கிறேன்). பிற்பாடு எண்பதுகளில் இருந்து இன்றுவரை இத்தகையதொரு எழுத்து வகை வெகுஜன தளத்தில் நிலவித்தான் வந்திருக்கிறது. மூக்குத்தி’ பத்திரிகையிலிருந்து விருந்து வரை இதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன. இந்துநேசன், சிவப்புநாடா என்று மஞ்சள் பத்திரிகைக் கலாச்சாரம் இருந்தே வந்திருக்கிறது. புஷ்பா தங்கதுரை, பிரேமலதா என்று பாலுறவுக் கிளர்ச்சி எழுத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. புஷ்பா தங்கதுரையின் சிவப்பு விளக்குக் கதைகளுக்கு ஜெயராஜ் போட்ட சித்திரங்களை பிக்காஸோ பெயருடன் போட்டால் எவனாவது அதை உன்னதக் கலை என்று சொல்வானா? ஆங்கிலத்தில் பிளேக் லேஸ் எனும் பதிப்பகம் வெளியிடும் போர்னோகிராபிப் புத்தகங்கள் இன்று வெகுஜனத் தளத்தில் இலட்சக் கணக்கில் விற்கக் கூடியனவாக இருக்கின்றன. அமெரிக்காவில் ஹை ரிஸ்க் எனும் பெயரில் வரும் புத்தகங்களும் இத்தகையவைதான்.

இந்தப் புத்தகங்கள் எழுதுபவர்கள் யாரும் தாம் எழுதுபவை இலக்கியம் சார்ந்தவை என்றோ தமது எழுத்து இலக்கியம், தாம் செய்வது சமூகப் புரட்சி, நிறுவாதத்துக்கு எதிரானது, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரானது, தலித்தியம் சார்ந்தது, அதிகாரத்துக்கு எதிரானது, சின்னக் கதையாடல்கள் என்றெல்லாம் கோரிக் கொள்வதில்லை. உலகில் எந்த நாட்டில் எந்த மொழியில் எழுதினாலும் அதிர்ச்சி தருவதன் மூலம் கவனம் பெறுவதும், சமூகத்தில் இடம் கோருவதும், அதன் மூலம் இலாபம் பெறுவதும்தான் தமது நோக்கம் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இன்றைய தாராளவாத சமூகத்தில் போர்னோகிராபி என்பது அங்கீகரிக்கப்பட்ட மிகப் பெரும் வணிகச் சரக்காகி விட்டது. அதற்கென்றே தனித் தொலைக்காட்சிச் சேனல்கள், பாலுறவுச் சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். உலகளவில் நீலப்பட விழாக்களும் நடைபெறத் தொடங்கி விட்டன. கிளர்ச்சியூட்டுவதற்கென்று பாலுறுப்பு சார்ந்த விஷயங்களை விவரிக்கும் எந்த எழுத்தும் இலக்கியம் ஆகாது. தங்கள் எழுத்துக்கள் போர்னோகிராபிதான் என்று அவ்வாறு எழுதுபவர்கள் நாணயமாக ஒப்புக் கொள்கிறார்கள். இன்னும்கூட இத்தகைய எழுத்துக்களில் வயது வந்த, மனமுதிர்ச்சியடைந்த மனிதர்களே தங்கள் சொந்த விருப்புடன் அச்செயல்களில் ஈடுபடுவதாக விவரிக்கப்படுகிறது. குழந்தைச் சித்தரிப்புகளையும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலுறவு விகாரங்களையும் போர்னோகிராபித் தொழில் சார்ந்தவர்களே தவிர்க்கிறார்கள்.

மனித சமூகத்தின் நாகரிகம் கருதி, குழந்தைகள் மீதான பாலுறவு விகாரங்களை குற்றச் செயல்களாகவும் தண்டனைக்குரியனவாகவும் மேற்கத்திய கருதுகின்றன. குழந்தைகளின் சம்மதம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை மனமுதிர்ச்சியற்ற குழந்தைகளை ஏமாற்றி மயக்கி ஆட்கொள்ளும் தந்திரப் பொறுக்கித்தனமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். போர்னோகிராபியை அங்கீகரிக்கும் தாராளவாதிகள்கூட குழந்தைகள் மீதான பாலுறவு வேட்கைகளைக் கடுமையாகவே எதிர்கொள்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இக்குற்றம் புரிபவர்கள் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இங்கிலாந்தில் மனிதர்கள் நடமாடும் இடங்களில் இருந்து நிரந்தரமாகப் பிரித்து வைக்கப்படுகிறார்கள். இவர்கள் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள், பரிதாபத்துக்கு உரியவர்களோ படைப்பாளிகள் என்று அங்கீகரிக்கத் தக்கவர்களோ அல்ல.

பெண் உறுப்பை வழிபடுவதும் அவளது திரவங்களை ருசிப்பதும் பெண்ணைப் பெருமைப்படுத்தும் தமது தனித்தன்மை என்று மயக்கம் காட்ட விழைவார்கள். துரதிருஷ்டம் என்னவென்றால், மூத்திரம் குடித்தவர் இந்தியப் பிரதமராகவே இருந்திருக்கிறார். உறுப்புகள் குறித்து ரஜ்னீஷ் மேற்கொண்ட ஏராளமான சோதனைகள் பிற்பாடு அதிகார வர்க்க அமைப்பாக இறுகிப் போனது வரலாறாக இருக்கிறது. நிர்வாணக் கம்யூன்கள் குறித்துச் சோதனைகள் செய்த பல்வேறு ஆஸ்ட்ரிய மார்க்சிய அமைப்புகளில் நிலவிய பாலுறவுச் சுரண்டலும் அதிகார வர்க்க நிறுவன அமைப்புக் குறித்த விமர்சனங்களும் நிறைய இருக்கின்றன.

இது சித்தாந்தப் போலித்தனம் மட்டுமல்ல, இலக்கியப் போலித்தனமாகவும் முகம் காட்டுவதற்கான ஆதாரமாகவே இருக்கிறது இந்த போர்னோகிராபி எழுத்து. இக்கதை சாப்பினின் இசை பற்றிச் சிலாகிக்கிறது. கஸான்டாகிஸின் நாவல் பற்றிப் பேசுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் காலச்சுவடு இதழுக்கு சாரு நிவேதிதாவின் எழுதிய ஒரு கடிதத்தின் செய்தியான தான் எழுதிக் கொண்டிருந்த நாவலைப் பேசுகிறது. தனது சுய வரலாற்றுக்கும் புனைவுக்குமான இடைவெளியை மயங்க வைத்து தனது சொந்த அனுபவமாக கோரிக் கொள்கிறது. புத்த மதம் பற்றி, கிராமம் முழுதும் நிறைந்திருக்கும் தமிழ் விதவைகள் பற்றி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்ணைக் கண்டு மனம் மாறி புத்தத் துறவியாக மாறும் சிங்கள இராணுவத்தினன் பற்றிப் பேசுகிறது.

மிகவும் வேடிக்கை என்னவென்றால், இந்திய இராணுவம் தனது கர்ப்பினி மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததனால்தான் சிங்கள யோன் கொத்தலவாலா இராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறானாம். தமிழ் வீரர்கள் அவனது தாயையும் சகோதரியையும் கொல்கிறார்களாம்.

சிங்கள இராணுவத்தினர் தமிழ் மக்களைக் கொல்வதற்கான இராணுவ உளவியல் என்ன அற்புதமாகக் கட்டமைக்கப்படுகிறது! என்ன அற்புதமான வரலாற்று ஞானம்! இத்தகைய வரலாற்றுப் பொய்களும் தத்திரங்களும் அயோக்கியத்தனத்தின் உச்சம். கஸான்டாகிஸின் நாவல்கள் இந்த நூற்றாண்டு மனிதனின் ஆன்மிக நெருக்கடி பற்றிய விசாரணைகள். அவரது லாஸ்ட் டெம்ப்டேஸன்ஸ் ஆப் க்ரைஸ்ட் ஒரு மகத்தான காவியம். இசைக்கு மனம் பறிகொடுக்கும் மேதையாக பாவ்லா வேறு! கஸான்டாகிஸின் ஆன்மிக உன்னதம் பற்றி உணர்ந்ததாகப் பேத்தல்! பௌத்த மேலாதிக்கத்தைப் புனிதப்படுத்தும் வரலாற்றுப் பொய் இது. தமிழ்ப் பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதைத் தான் கொடுமையாகப் பார்ப்பதாக கதைக்கு தீம் பேலன்ஸ் பண்ணும் தந்திரம் இது. முழுக்க முழுக்க மிக நேரடியான போர்னோகிராபிக் நோக்கம் கொண்ட சரோஜாதேவி எழுத்து வர்ணனை இது. இதை இலக்கியம் என்று சொன்னால் தினமலர் வாசகன் நம்பலாம். ஆங்கில, பிரெஞ்சு, பிற ஐரோப்பிய இலக்கிய வாசனையற்றவன் நம்பலாம். தேசியம் குறித்து, பின்புரட்சி குறித்து எந்தப் படிப்பும் அனுபவ உணர்வும் அற்ற எவனும் நம்பலாம். உலக இலக்கியத்தில் பரிச்சயமுள்ள, சமகாலப் போக்குகள் குறித்த அறிவுள்ள எவனையும் ஏமாற்ற முடியாது.

இந்தப் போர்னோகிராபிப் பிரதியின் நாயகன் ஒரு பீடபைல் – குழந்தைப் புணர்ச்சி நாட்டமுடையவன். குழந்தையை நைச்சியமாக ஏமாற்றுகிறவன். தான் செய்திருக்கக்கூடிய குழந்தை மீதான பாலுறவு அத்துமீறலை தாந்திரீக மந்திரவாதி போல தாயே என விளித்து, உலகின் சகல ஜீவராசிகளது யோனிகளிலும் கலவி புரிவது ஒரே அனுபவம்தான் என்று கோருகிறவன் இவன். அது குழந்தையோ, கோழிக் குஞ்சோ, பொமரேனியன் நாய்க்குட்டியோ எதுவாயினும் ஒன்றே என்பதை இவன் அத்வைத நிலை என்றுகூடச் சொல்ல முயல்வான். துரதிருஷ்டம் என்னவென்றால், இந்தப் போர்னோகிராபரின் திரவ ருசிப்புச் சாதனையை இவரது ஸ்காண்டிநேவிய ஆசான்கள் ஏற்கெனவே நிஜமாகவே காட்சிரூபமாகவே நிகழ்த்தி விட்டார்கள். உடலின் திரவங்களை விவரிப்பது இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், திடக் கழிவுகளை ருசித்தபடி இந்தச் செயலை மேற்கொள்வதையும் சித்தரிப்பதையும் கூட இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

பெண்நிலைவாதிகளின் இலக்கியம் குறித்த அறிதல்களில் மிக முக்கியமானது, வரலாறு முழுதுமான இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துவது என்பதுதான். லோலிடா பற்றிய அவர்களது அணுகுமுறை இவ்வாறு இருக்கிறது : பெண்கள் மற்றும் அவர்களது உடல்களின் மீதான ஆண்களின் அணுகுமுறையில் இருந்து, அதில் இருந்து பெறப்படும் அவர்களின் மதிப்பீடுகளில் இருந்து, அந்த வழிப்பட்ட பார்வையில் இருந்துதான் பெண்களின் மீதான பாலுறவுரீதியிலான அவர்களது பார்வைகள் கட்டமைக்கப்படுகின்றன. இதற்கு ஷேக்ஸ்பியரும் விதிவிலக்கில்லை, நபக்கோவும் விதிவிலக்கில்லை.

1940-50களில் கன்ஸர்வேடிவ் கருத்துள்ள அமெரிக்க ஆண்களில் பலர் இன்செஸ்ட் என்று சொல்லப்படுகிற குடும்பத்துக்குள்ளான முறைமீறிய பாலியல் உறவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். அதே வேளை, வெளியுலகுக்குப் பாலியல் புனிதத்தைப் போதித்து வந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் பரபரப்பான நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஜெர்ரி ஸ்பிரிங்கரின் நிகழ்ச்சி சொல்கிறது : அமெரிக்காவில் இன்று – இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் – தமது சொந்த மகள்களையே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொன்றுவிட்டு அந்தப் பிணங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில், தமது தகப்பன்மார்களின் குழந்தைகளையே பெற்று வளர்க்கிற சில பெண்குழந்தைகள் தமது சோகத்தைச் சொன்னபோது நெஞ்சே வெடித்துவிடுகிற வேதனை ஏற்பட்டது.

ஒரு வகையில், இத்தகையவர்கள் பற்றிய நையாண்டியாகவும் லோலிடா நாவலை சில விமர்சகர்கள் விளக்குகிறார்கள். குழந்தைகள் மீதான பாலுறவு வேட்கை கொண்டவர்கள் சமப்பாலுறவாளர்களாக இருப்பார்கள் எனும் கூற்றை இன்று வெளிப்படையாக வந்திருக்கும் சமப்பாலுறவாளர்கள் கடுமையாக மறுக்கிறார்கள். காரணம், குழந்தைகளோடு உறவு கொள்வதில் உள்ள அவலத்தை இவர்கள் உணர்ந்திருப்பதால்தான். இந்திய மரபிலும் தமிழகத்திலும் பால்ய விவாகத்தையும் முதியவர்கள் சிறு பெண்களை மணந்து கொள்வதையும் காட்டுமிராண்டித்தனமானது என்று விமர்சித்து வந்திருக்கிறோம். சேகர் கபூரின் பன்டிட் குயின் படத்தில் வாலிபனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்ட சிறுமி பூலான் தேவியின் உடல் படும் வேதனையை நாம் உணர்ந்திருக்கிறோம்.

சிறுமிகளோடு உறவு கொள்பவர்களையும் குழந்தைகளைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துபவர்களையும் பற்றிய உளவியல் ஆய்வுகளில், இத்தகையவர்கள் சிறு வயதில் இவ்வாறான அனுபவங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. போர்னோகிராபி பற்றிய விவாதங்களில் கூட பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கும் போர்னோகிராபிப் படங்களைப் பார்ப்பதற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாகச் சுட்டப்படுகிறது. போர்னோகிராபியை ஆதரிக்கிற பெண்நிலைவாதிகளும் உண்டு. உடலுறவு குறித்த மர்மங்களையும் பல்வேறு உடலுறவு சாத்தியங்களையும் பெண்களுக்கு இந்தப் படங்கள் தெளிவாக்குகின்றன என்பதால் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருக்கிறது.

பாலுறவில் மிக வெளிப்படையான செயல்களை மேற்கொள்ளக்கூடிய மேற்கத்திய சமூகங்களிலேயே இத்தனை விவாதங்கள் நடந்து வருகிற சூழலில், பாலியல் விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தில், பாலுறவு குறித்த அறிவியல்பூர்வமான கல்வி இல்லாத ஒரு சமூகத்தில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை பற்றி விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தில் போலித் தலித்தியர்கள் குழந்தைகள் மீதான வன்முறைப் போர்னோகிராபியை இலக்கியம் என்று சொல்லி விற்பது ஆச்சரியமல்லதான்.

மானுடத்தின் சிக்கல்களை விசாரணை செய்யும், தேடல்களில் ஈடுபடும் வெளியான இலக்கியத்தில் அந்த விசாரணையின் தன்மை பல்லடுக்குத் தன்மை கொண்டதாக, பன்முகப் பரிமானங்கள் கொண்டதாக அமையும். போர்னோகிராபியில் வரும் உடல்களுக்கு வரலாறு இருக்காது. உளவியல் சார்ந்த பரிமானங்கள் இருக்காது கலாச்சாரக் கடந்தகாலம் இருக்காது. குறிகள் துருத்திய திறந்த உடல்களாகவே அவர்கள் வருவார்கள். உடலுறவு தவிர வேறெதையும் அவர்கள் பார்வையாளனுக்குத் தருவதில்லை. திரும்பத் திரும்ப விதவிதமான முறைகளில் வேறுவேறு தோற்றங்களில் உடலுறவு கொண்டபடியே இருப்பார்கள். உடலுறவின் திரவங்கள் பற்றிய வர்ணனைகளே இருக்கும்.

உன்னத சங்கீதம் கதையின் முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவர் மிகச் சாதாரணமாகக் காண முடியும். பின்பகுதியில் அயோக்கியத்தனத்துக்கு ஓர் அறவியல் தன்மையை, அடிப்படையைத் தருவதற்காகவே குற்றமனம் கொண்ட புத்தத் துறவியை உருவாக்கி பலாத்காரத்தின் மீது தான் விமர்சன உணர்வு கொண்டிருப்பதான பாவ்லாவைத் திட்டமிட்டு உருவாக்குகிறார் சாரு நிவேதிதா. சாரு நிவேதிதா எனும் நபர் மட்டுமே மையமானவராக, தன்னனுபவச் சொல்லியாக, உளவியல் அறிவு கொண்டவராக, தனது விகாரத்தை வழிபடுபவராக எனவும் சேர்த்துக் கொள்ளலாம், இக்கதையில் நீக்கமற நிறைந்திருக்கிற ஒரே விஷயம் போதும், இந்தக் கதையின் ஒற்றைப்பட்டைத் தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு.

இதன் போலித்தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்தச் சித்தரிப்பில் உள்ள வரலாற்றுப் பொய்மையை நாம் அறிந்து கொண்டாலே போதும். மனம் மாறும் சிங்கள இராணுவத்தினர்களும் சிங்களப் பெண்களைப் பலாத்காரப்படுத்தும் இந்திய இராணுவத்தினரும் முழுமையான வரலாற்றுப் பிழைகள். மனம் மாறிய சிங்கள இராணுவத்தினன் என்று எவனையும் எந்த வரலாற்று ஆதாரமும் காட்டியதில்லை. மாறாக, தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு வெற்றி என்று வெறிக்களியாட்டம் போட்ட சிங்கள இராணுவத்தினரையே பார்த்திருக்கிறோம். இந்திய இராணுவத்தால் பலாத்காரப்படுத்தப்பட்டவர்கள் ஈழத் தமிழ்ப் பெண்களே தவிர, சிங்களப் பெண்கள் அல்ல. சாரு நிவேதிதாக்கு ஈழமும் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. மிக மோசமான ஒரு பொறுக்கித்தனத்தை உன்னதப்படுத்தவே வாக்னரின் இசை குறித்த விவரணைகளும் சாப்பினின் இசை குறித்த குறிப்புகளும் கஸான்டாகிஸின் பெயரும் அர்த்தமற்ற வகையில் பொருத்தமற்று போலியான முறையில் திட்டமிட்டுக் கையாளப்படுகின்றன. உன்னத சங்கீதம், இயற்கை, யோனி, தெய்வீகம் என்று அத்வைத நிலை நின்று பிரபஞ்ச இரகசியத்தை விண்டு வைப்பதாக இந்த எழுத்து, அப்பட்டமான மானுட விரோதப் போலி எழுத்து என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தியத் தாந்திரிக மரபில் துறவிகள் பற்பல மிருகங்களுடன் யோனியிலும் புட்டத்திலும் உறவு கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மண்புழுக்கள், எறும்புகள் பாலுறவு கொள்வது குறித்து சாரு நிவேதிதாதனது கதையில் சிலாகிப்பதை இங்கு ஒப்புநோக்குவது நல்லது. ஓர் இடத்தில் தன்னையறியாமலே தனது நோக்கத்தை வெளிப்படுத்தி விடுகிறார் இந்தப் பிரகிருதி : தான் சமப் பாலுறவு கொள்ளும் ஜோன்ஸிடமிருந்துதான் கதை ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார்.

தன்னைக் காதலித்த இரண்டு அயோக்கியர்களும் தன்னை ஏமாற்றியதாலும் பொருளாதார ரீதியில் தன்னைச் சுரண்டியதாலும்தான் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண்ணைக் கனவிலும் நினைவிலும் சதா உரித்துப் பார்த்துக் கொண்டிருந்த எந்த நாயும் அவளது இறுதிச் சடங்குக்குச் செல்லவில்லை. சில்க் ஸ்மிதா மீது மரியாதை காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு ஒரு புத்தகத்தைச் சமர்ப்பிக்கும் இந்தப் போலி, இதில் இயேசு கிறிஸ்துவுக்கு முன் நிர்வாணமாக ஆடுகிற பெண்ணாகவும், ‘give me a hand’ என அவளைக் கிறிஸ்து அழைப்பதாகவும் சித்தரித்திருக்கிறார். கிறிஸ்தவத்தின் பாலுறவு அணுகுமுறை பற்றிய நையாண்டியாக இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம்! கனவுகளில்கூட சில்க் ஸ்மிதா நிர்வாணமாகத்தான் தோன்றுகிறார் என்றால் அது எவ்வளவு வேதனையானது என்பது இந்தக் குறி ஸ்பெஷலிஸ்டுக்குப் புரியாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மனித உரிமை குறித்த அதியக்கறை கொண்ட மேற்கத்திய நாடுகளில் சாரு நிவேதிதாயின் இம்மாதிரியான போர்னோகிராபி எழுத்து குற்றப்பிரிவின் கீழ் வரும். நாகரிகச் சமூகங்களில் சிறைச்சாலைகளையும் மனநோயாளிகள் காப்பகங்களையும் சிலரைப் பொறுத்து பாவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. தயவுசெய்து சிறை குறித்த பூக்கோவின் ஆய்வுகளையும் அல்தூசரின் உளவியல் சிகிச்சை நிலையங்கள் குறித்த விமர்சனங்களையும் இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அரசு உதிரும்போது சிறையும் உதிர்ந்து போகும் என்று நாமும் நம்புகிறோம். அப்போது சாரு நிவேதிதா போன்ற போலிகள் இருக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

உன்னத சங்கீதம் கதையில் மிஷேல் பூக்கோவின் பெயரெல்லாம் பாவிக்கப்படுகிறது. பிரசுரிக்கப்படாமல் எங்கோ ஏதோ ஒரு நண்பரிடம் இருப்பதாகச் சொல்லப்படும் அவரது போர்னோகிராபி நாவல் பற்றிய வதந்திகளும் இடம் பெறுகின்றன. எவ்வாறாயினும், பீடபைல்களைப் படைப்பாளிகள் என்று அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். ஆய்விலிருந்து சமூக மாற்றம் நோக்கிக் குரல் கொடுக்கிற எவரும் சிறுமியர் மீதான பாலியல் வக்கிரங்களுக்குச் சார்புரைப்பதோ அந்த வக்கிரங்களை வழிபாடு செய்வதோ இல்லை.

http://yamunarajendran.com/?p=770

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.