Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை- உண்மையான காரணம் என்ன? –நிராஜ் டேவிட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கின்றது.
2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனையின் பொழுது திரு.பரராஜசிங்கம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டபொழுது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நானும் இருந்தேன்.

திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய  கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் பலிப்பீடத்தில் தேவநற்கருனையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய பொழுதுதான் அவர் மீதான துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்பட்டன.

அந்த இடத்திலேயே அவர் சுருண்டு வீழ்ந்தார்.

ஒன்பது துப்பாக்கி வேட்டுக்கள் அவர் மீது பாய்ந்திருந்தன.

அவரது துணைவியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் மீது நான்கு துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்திருந்தன.

இரத்த வெள்ளத்தில் கிடந்த பரராஜசிங்கம் அவர்களை, அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான காமினியும் நானுமாக தூக்கியும், இழுத்தும்கொண்டு தேவாலய வாயிலை நோக்கிக் கொண்டுவரும் வழியில் அவருக்கு உயிரிருந்ததை என்னால் உணர முடிந்தது.

பலிப்பீடத்திற்கும் தேவாலய வாயிலுக்கும் இடையில் ஒருதடவை அவர் உடல் நடுக்கத்துடன் சடுதியான ஒரு அசைவைத் தந்தது. அவரிடமிருந்து முனகுவது போன்ற வித்தியாசமான ஒரு ஒலி வெளிப்பட்டது. அந்த நேரம்தான் அவரது உயிர் பிரிந்திருக்கவேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

எனது கைககளில் அவர் இருக்கும் பொழுதுதான் அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது என்பது இன்றுவரை எனக்கு ஜீரணிக்கமுடியாத ஒரு தாக்கம்.

கண்ணியமான ஒரு தமிழ் அரசியல்வாதியை, இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் ஒரு ஜாம்பவானை, தலைசிறந்த ஒரு இராஜதந்திரியை, ஒரு நல்ல மனிதனை, எனது சொந்த மாமாவை அவரது அருகில் இருந்தும் என்னால் காப்பாற்றமுடியாமல் போய்விட்டதே என்பது இன்றும் என்னை வதைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு ஆதங்கம்.

பொறியில்துறையில் கல்வியை முடித்துக்கொண்டு அந்தத்துறையிலேயே பணியாற்ற ஆரம்பித்திருந்த என்னை, எனது கரங்களைப் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து ஊடகத்துறைக்குள் பலவந்தப்படுத்தி அமரவைத்தவர் எனது மாமனார் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களே. எனது ஊடகப் பயணத்தின் ஆரம்ப காலங்கள் என்னைத் தனது அருகில அமர்த்திவைத்து எப்படி செய்தி எழுதவேண்டும், எப்படிக் கட்டுரைகள் எழுதவேண்டும், செவ்வி எப்படி எடுக்கவேண்டும் என்று- ஊடகத்துறையின் நுணுக்கங்களின் அரிச்சுவடியை எனக்குப் போதித்தவர் அவர்தான்.

அவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர்ந்துவிட்டதால் அவர் என்னையே பிள்ளையாகப் பார்த்தார். நேசித்தார். வளர்த்தார்.

அரசியலின் அடிச்சுவடி அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். ஆங்கிலத்தின் லாவகத்தையும் அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். அன்பாகப் பேசுவது முதல் தனது இனத்திற்கிற்காக ஆவேசப்படுவது, அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்புவது, சர்வதேச இராஜதந்திர நகர்வுகளை எவ்வாறு மேற்கொள்ளுவது- இவை அனைத்தையும் அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை அவரது இழப்பு என்பது மற்றய அனைவரையும் விட எனக்குத்தான் மிகவும் பெரியதொரு இழப்பு.

திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை யார் படுகொலை செய்தார்கள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமான பதில்களை தெரிவிக்கின்றார்கள்.

கருணா குழுவைச் சேர்ந்த சிலரது பெயர்களை வெளியிட்டு அவர்களே அந்தப் படுகொலைகளைச் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

பிள்ளையானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் பெயர்களும் இந்தப் படுகொலையில் வெளியாகியிருந்தன. சிறிலங்காப் புலனாய்வாளர்களின் பெயர்களும் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையில் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியாகியிருந்தன. விடுதலைப் புலிகளே பரராஜசிங்கத்தைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் கட்டளையையும் மீறி ரணிலை பரராஜசிங்கம் ஆதரித்ததால் விடுதலைப் புலிகளே அவரைப் படுகொலை செய்ததாக சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை என்பது முழுக்க முழுக்க சிறிலங்கா அரசபடைகளினாலேயே திட்டமிடப்பட்டு கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு நிறைய சாத்தியங்கள், ஆதாரங்கள் இருக்கின்றன.

அந்த படுகொலையை நிறைவேற்றியவர்கள் வேண்டுமானால் கருணா குழு உறுப்பினர்களாக, அல்லது பிள்ளையானின் தோழர்களாக அல்லது சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிடலின் பெயரில், சிறிலங்கா அரச கைக்கூலிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு படுகொலை அது என்பதில் சந்தேகம் இல்லை.

நான் இவ்வாறு கூறுவதற்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் நிறையவே இருக்கின்றன.

அந்தக் காலககட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு உயிராபத்து இருந்தது. அதனால் அவர் தனது நடமாட்டம் பற்றிய விடயங்களை மிகவும் இரகசியமாகவே வைத்திருப்பார். டிசம்பர் 24ம் திகதி மாலை 3மணி அளவில்தான் அவர் தனது துனைவியாருடன் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்தார். அவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்த விடயமும் அன்றை தினம் அவர் மரியாள் இணைப் பேராலயத்திற்கு திருப்பலிப் பூசைக்குப் போகும் விடயமும் எங்கள் உறவினர்கள் உட்பட யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த விடயங்கள் அவரது மெய்பாதுகாவலர்களான சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் தெரிந்திருந்தது.

தமது நடமாட்டம் பற்றிய தகவல்களை சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமது மேலதிகாரிகளுக்கு வழங்கிக்கொண்டே இருப்பதால், ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மட்டக்களப்பு வருகை கிறிலங்காப் படைத்தரப்பின் தலைமைக்குத் தெரிந்திருக்கச் சந்தர்பம் இருக்கின்றது. அதனால் படுகொலைக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்படுவதற்கான கால அவகாசம் அங்கு அவர்களுக்கு இருந்திருக்கின்றது.

சம்பவம் நடைபெற்ற புளியந்தீவு மரியாள் இணைப் பேராலயத்தின் அமைவிடம் மட்டக்களப்பின் அதி உச்சப் பாதுகாப்பு வலயத்திலேயே உள்ளது. பேராலயத்தில் இருந்து கிழக்காக சுமார் 200 மீற்றர் தொலைவில் சிறிலங்கா இராணுவத்தின் 23.2 பிரிகேட் தலைமைக் காரியாலம் அமைந்திருந்தது. மேற்காக சுமார் 150 மீற்றர் தூரத்தில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பணியத்தின் (directorate of military intelligence) கிழக்கு மாகாணத்திற்கான தலைமைக் காரியாலயம் அமைந்திருந்தது.  ஆலயத்தில் இருந்து வடமேற்காக சுமார் 500 மீpற்றர் தொலைவில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் மட்டக்களப்பு நகருக்கான தலைமைக் காரியாலயம் அமைந்திருந்தது. ஆலயத்தில் இருந்து வடக்காக சுமார் 250 மீற்றர் தொலைவில் மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையைம் அமைந்திருந்தது. தென்மேற்காக 150 மீற்றர் தொலைவில் சிறிலங்கா காவல்துறையின் எதிர் கெரில்லாப் போரியல் நடவடிக்கைப் பிரிவு(counter insurgency Unit -CSU) காரியாலயம் அமைந்திருந்தது. வடமேற்காக சுமார் 150 மீற்றர் தொலையில் ஈபீடிபி தலைமைக் காரியாலயம் அமைந்திருந்தது. இதனைவிட ஏராளமான காவல் அரன்கள், காவல் நிலையங்கள் இப்படியான ஒரு அதி உச்சப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த புனித மரியாள் இணைப் பேராலயத்தில் வைத்துத்தான் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 24ம் திகதி நள்ளிரவு 11 மணியளவில் மரியாள் இணைப் பேராலயம் அமைந்திருந்த மத்திய வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். வீதிச் சோதனை நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தார்கள். எனது வாகனமும் பரிசோதிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனை அன்றைய சமாதான காலத்தில் வழமைக்கு மாறானதாக எனக்குத் தென்பட்டது.

அத்தோடு கிறிஸ்மஸ் திருப்பலிப்பூசை நடைபெற்ற மரியாள் இணைப் பேராலயத்திற்கு வழமைக்கு மாறாக பொலிஸ் காவல் வழங்கப்பட்டிருந்தது.

24ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு அந்த இடத்தில் குவிந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரும், பொலிசாரும் ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடத்தில் இருந்து காணமல் போயிருந்தார்கள். 25ம் திகதி அதிகாலை ஒன்றரை மணியளவில் சுடப்பட்ட திரு.பரராஜசிங்கம் அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையை நோக்கி நான் விரைந்த பொழுது எந்த பாதுகாப்பு படைவீரரையும் மரியாள் இணைப் பேராலய வளாகத்திலேயோ, அல்லது மத்திய வீதி, வைத்தியசாலை வீதியிலோ நான் காணவில்லை. அந்தப் படுகொலைக்கோ அல்லது கொலையாளிகள் தப்பித்துப் போவதற்கோ இடைஞ்சல் இல்லாதபடி இருப்பதற்காக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்துப் படைத்தரைப்பும் அந்தப் பகுதியிலேயே இல்லாதபடி விலகிப்போகுப்படியான உத்தரவை சிறிலங்காப் பாதுகாப்புத் தலைமை வழங்கியிருந்ததா?

பொதுவாகவே அதிக உயிர் அச்சுறுத்தலில் இருந்த பரராஜசிங்கம் அவர்களுக்கு மூன்று சிறிலங்கா காவல்துறையினரும், மூன்று எம்.எஸ்.டீ. பிரிவைச் சேர்தவர்களும் பாதுகாப்பு வழங்குவார்கள். எம்.எஸ்.டீ. என்றால் Minister‘s Security Division. அதாவது அமைச்சர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காகவென்று விசேடமான பயிற்சி பெற்ற பிரிவினைச் சேர்ந்தவர்கள். எந்த நேரமும் பரராஜசிங்கம் அவர்களைச் சூழவே இருந்துகொண்டிருக்கும் இந்த மூன்று எம்.எஸ்.டீ. மெய்ப்பாதுகாவலர்களும் சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் பரராஜசிங்கம் அவர்களின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்கள் இணைப் பேராலயத்திற்கு அன்று கடமைக்கு வரவேயில்லை.

சம்பவ நேரத்தின் பொழுது திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் பாதுகாப்பிற்காக சீருடை தரித்த இரண்டு காவல்துறை வீரர்களும், சாதாரண உடையில் ஒரு காவல்துறை வீரரும் கடமையில் இருந்தார்கள். ஆனால் பரராஜசிங்கம் அவர்கள் சுடப்பட்ட பொழுது இருவர் மாத்திரமே அங்கு கடமையில் இருந்தார்கள். மற்றைய சீருடை தரித்த காவல்துறை வீரர் அந்தப் பகுதியிலேயே காணப்படவில்லை. அன்றைய தினம் குறிப்பிட்ட அந்தக் காவல்துறை வீரர்தான் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் வாகனத்தை செலுத்தி வந்தார். ஆனால் பரராஜசிங்கம் அவர்களை நாங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பொழுது பரராஜசிங்கம் அவர்களின் வாகனத்தின் சாவியுடன் அந்த பொலிஸ் வீரர் காணாமல் போயிருந்தார்.

25ம் திகதி காலை திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் வீட்டில் அவரது உறவினர் என்ற ரீதியில் நான் மாத்திரம்தான் இருந்தேன். எனது மாமியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் படுகாயம் உற்று உயிருக்குப் போராடியபடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மற்றைய உறவினர்கள் வைத்தியசாலையிலேய தங்கியிருந்தார்கள். பரராஜசிங்கம் அவர்களின் பிள்ளைகள் புலம்பெயர் தேசங்களில் இருந்து மட்டக்களப்பிற்கு விரைந்துகொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த சில அமைச்சர்கள், அதிகாரிகள் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பெடுத்தார்கள். திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தின் சார்பில் நானே பேசினேன். திரு.ஜோசப் பரராஜசிங்கம் நல்லதொரு மனிதர் என்றும், அவரது மரணம் தன்னை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் கவலை தெரிவித்துவிட்டு, திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு அரச மரியாதையுடன் கூடிய நல்லடக்கத்தை கொழும்பில் தமது அரசாங்கம்; ஏற்பாடு செய்வதாகவும், எனது மாமியை கொழும்பில் வைத்து விசேட சிகிச்சை அளிப்பதற்காக உடனடியாக உலங்குவானூர்தியை தாம் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் பிள்ளைகள் இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாகவும், முடிவுகளை அவர்களே எடுப்பார்கள் என்றும் நான் தெரிவித்துவிட்டேன்.

திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு கொழும்பில் அரசமரியாதையுடன் கூடிய ஒரு நல்லடக்கத்தைச் செய்வதன் ஊடாக விடுதலைப் புலிகளே அந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுக்கதைக்கு வலுச் சேர்ப்பதுடன் புலிகளுக்கு எதிரான ஒரு இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் செய்வதற்கு பரராஜசிங்கம் அவர்களின் மரணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் கபட திட்டத்தையும் இதில் புரிந்துகொள்ளமுடிந்தது.

இவை அனைத்துமே திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையின் பின்னணியில் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசாங்கமும், அதன் அரச படைகளுமே(அரச படைகளின் கூலிப்படைகளும்) இருந்தன என்பதை உறுதியாக வெளிக்காண்பித்து இருக்கின்றது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது.

எதற்காக திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்தது?

  • அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காகவா?
  • அவர் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை ஆதரிக்கவில்லை என்பதற்காகவா?
  • லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கு பழிவாங்குவதற்காகவா?

மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும் கடந்து திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.

அந்தக் காரணத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, முரண்பாட்டுத் தீர்வு (conflict resolution) சம்பந்தமான கற்கை நெறியில் ஒரு விடயத்தை நாம் பார்க்க வேண்டும்.

சமூகங்களுக்கு இடையிலோ அல்லது மதங்களுக்கு இடையிலோ அல்லது இனங்களுக்கு இடையிலோ முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது, அந்த முரண்பாட்டை உருவாக்குகின்றவர்களும் சரி, அந்த முரண்பாடுகளைத் தீர்ப்பவர்களும் சரி, இரண்டு விடயங்களைக் கவனமாகப் பரீசீலித்துச் செயற்படுவது வழக்கம்.

முதலாவது, முரண்பாடுகளுக்கு உள்ளான இரண்டு தரப்பினர்களிடையேயான தொடர்பாளர்கள்(connecters).

இரண்டாவது முரண்பாடுகளுக்கு உள்ளான இரண்டு தரப்பினர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவர்கள்(dividers).

பிளவுகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்துபவர்கள், இந்த இரண்டு தரப்பினரையும் அடிப்படையாக வைத்துத்தான் செயற்படுவது வழக்கம். உளவியல் யுத்தங்களுக்கும்(psychological operations), இந்த விடயங்களே அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

உதாரணத்திற்கு, கிழக்கில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தத் தலைப்பட்ட ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினர், ஆரம்பத்தில் இந்த connectors, dividers ஐ ஆராய்ந்து, அடையாளம் கண்டுதான் தமது சதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதாகத் திகழ்ந்துவந்த நிறைய அம்சங்களைத் திட்டமிட்டு உடைத்தார்கள். தகர்த்து அழித்தார்கள். அதேபோன்று தமிழ்- முசுலிம் சமூகங்களிடையே இயல்பாகவே காணப்பட்டு வந்த சிறிய சிறிய பிளவுகளை, மேலும், மேலும் வளர்க்கும்படி காரியம் ஆற்றினார்கள். முஸ்லிம்களுக்கு என்று தனியான பிரதேச சபைகள், தனியான பாடசாலைகள், சலுகைகள், அமைப்புக்கள்… என்று அரசாங்கமே உருவாக்கியதற்கு காரணம் இதுதான். தமிழ்- முஸ்லிம்  உறவுகள் அவசியம் என்று செயற்பட்ட முஸ்லிம் பிரமுகர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை, முஸ்லிம் ஆயுதக் குழுக்களை வைத்தே கொலை செய்து களத்தை விட்டு அகற்றினார்கள். தற்பொழுது கூட இந்த இரண்டு சமூகங்களிடையே உறவினை ஏற்படுத்தும்படியான connectors ஏதாவது அங்கு உருவானால், அதனை உடனடியாகவே அகற்றிவிடுவற்கு ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் எந்த காரியத்தையும் ஆற்றத் தயங்கமாட்டார்கள்.

இதேபோன்றுதான் கருணாவின் பிளவு என்ற பெயரில் கிழக்கில் ஒரு பாரிய புலனாய்வு யுத்தத்தை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட காலத்தில் நல்லதொரு connectors ஆகச் செயற்பட்ட, செய்படக்கூடிய ஊடகவியலாளர்களை, சமூகத் தலைவர்களை, அரசியல்வாதிகளை களத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை சிறிலங்காப் படைகள் மேற்கொண்டிருந்தார்கள்.

கிழக்கில் கருணாவின் பெயரில் நீண்ட கால நோக்கோடு ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த உளவியல் நடவடிக்கைகளுக்கு, தமிழ் ஊடகவியலாளர்கள், சில சமூகத் தலைவர்களை, அரசியல்வாதிகள் பாரிய ஒரு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்று அவர்கள் அறிவார்கள். “கருணாவின் பின்னால் மட்டக்களப்பு மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பிரதேசவாதத்தை ஆதரிக்கின்றார்கள். வடக்கு கிழக்கு பிளவுபடுவதையே அவர்கள் விரும்புகின்றார்கள்…”-என்கின்றதான ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் பொய்ப் பரப்புரைகளை, மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாமுனைகளும், சில அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பேச்சுக்களும் சுக்குநூறாக உடைத்தவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

மட்டக்களப்பை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக வைத்துக்கொண்டு, அங்கு வாழும் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான பரப்புரைகளை உலகிற்கு மேற்கொள்ளுவதற்கு சில தமிழ் ஊடகவியலாளர்கள் நிச்சயம் தடையாக இருப்பார்கள் என்பது ஸ்ரீலங்காத் தரப்புக்குத் தெரியும். அதனாலேயே இந்த ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மனித வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை இந்த அடிப்படையிலேயே சிறிலங்கா அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக ஒரு இருண்ட உலகிற்குள் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கும், வேறு பல தரப்புகளுக்கு இடையிலும் திரு.ஜோசப் பரராஜசிங்கம் ஒரு நல்ல connectors ஆகச் செயற்பட்டுவிடக்கூடும் என்கின்ற காரணத்தினாலேயே அவரை களத்தை விட்டு நிரந்தரமாக அகற்றிவிடும் முயற்சிகள் ஸ்ரீலங்காப் படைத்துiயினராலும், அதன் ஒட்டுப்படையினராலும் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மக்களுக்கும் வடபகுதி மக்களுக்கு இடையிலேயும், மட்டக்களப்பு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கு இடையிலும், மட்டக்களப்பு மக்களுக்கும் தென் இலங்கை மக்களுக்கு இடையிலும், மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையிலும், தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்  மக்களுக்கு இடையிலும் -பலம் வாய்ந்த ஒரு connectors ஆக திரு.ஜோசப் பரராஜசிங்கம் என்கின்ற அச்சத்தின் காரணத்தினால்தான், அவர் படுகொலை செய்யப்பட்டார்.

களத்தில் இருந்து கவனமாக அகற்றப்பட்டார். நல்ல connectors ஆகச் செயற்பட்டுக்கொண்டிருந்த- சிவராம் அகற்றப்பட்டதும் இதனால்தான். நடேசன் அகற்றப்பட்டதும் இதனால்தான். ஊடகவியலாளர்கள், சமூகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அகற்றப்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதனால்தான். ஆனால் இதில் என்ன வேதனை என்றால், திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் வெற்றிடம் ஈழத் தமிழர்களால் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதுதான்.

admin@nirajdavid.com

THANKS http://www.nirajdavid.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.