Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.வி.ராஜதுரையின் சர்வ-‘தேசியம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fig-5.jpg

I

இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் குறித்த அரசியல் மற்றும் கவிதை நூல்களைத் தமிழகத்ததில் எஸ்.வி.ராஜதுரைதான் பதிப்பித்தார். மனித உரிமைப் பிரச்சினையினாலும் இன்னபிற அரசியல் மாறுபாட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது கொண்ட விமர்சனத்தினால், ‘அவரது நாட்டில்’ செய்வதற்கு அவருக்கு நிறைய வேலை இருப்பதாலும் அவரது ‘சர்வதேசியம்’ அவரை முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் எதுவும் எழுதவியலாமலேயே செய்துவிட்டது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் சர்வதேசியத்தின் ஆன்மகீதம். முதலாளித்துவம் என்பது உலகவயமான அமைப்பு. எனவே உலகவயமான தொழிலாளர்களின் ஒற்றுமையே உலகவயமான முதலாளித்துவத்தை முறியடித்து உலகவயமான கம்யூனிச சமூகத்தை உருவாக்கும். அது அரசுகளற்ற சர்வதேசியத்தையும் உருவாக்கும். ஒரு நாட்டிலுள்ள தொழிலாளர்களின் நலன் என்பது இதனால் பிற நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களோடும் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே உலகு தழுவிய அடிப்படையிலான சர்வதேசீய அமைப்பும் போராட்டமுறையும் தேவைப்படுகிறது. மார்க்ஸ் துவங்கிய முதலாம் அகிலம் முதல் லெனின் பங்கு பற்றிய இரண்டாம் அகிலம், பிற்பாடாக ரஸ்யப் புரட்சி தோற்றுவித்த புதிய நிலைமைகளில் தோன்றிய மூன்றாம் அகிலம் போன்றன இந்த சர்வதேசீயத்தை நடைமுறைப்படுத்துவது என்பதற்கான திட்டங்களை வகுத்த அமைப்புக்களாகவே இருந்தன.

சோவியத் யூனியனது தோற்றத்தின் பின், தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்பது காலனியாதிக்க தேசிய விடுதலைப் போராட்டத்தினை, காலனியாதிக்க அரசுகளான உலக முதலாளித்துவ அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பதால் நிபந்தனையின்றி அதனை ஆதரித்தது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இரண்டு குணாம்சங்களைக் கொண்டிருக்குமாறு சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டது. முதலாவதாக, இந்த நாடுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சோவியத் யூனியன் சார்பு நிலைமையும் கொண்டிருக்குமாறு பார்த்துக் கொண்டது. இரண்டாவதாக தொழிலாளிவர்க்க சர்வதேசியம் என்பதனை, ஒரு வழிப்பாதையாக, சோவியத் யூனியனது இருத்தலுக்கு உகந்ததான ஒரு நிலைப்பாட்டைக் காலனியாதிக்க எதிர்ப்புத் தொழிலாளி வர்க்கம் ஏற்க வேண்டும் என்பதனையும் ஆக்கியது. உள்நாட்டில் தொழிலாளிவர்க்கம் தனது அதிகாரத்தைப் பெறுவது, தனது இருத்தலுக்காகப் போராடும்போது, தொழிலாளிவர்க்க சர்வதேசியக் கடமையைத் தான் ஆற்றுவது என்பதற்கு மாற்றாக, சோவியத் யூனியனைக் காப்பதற்காக ஒவ்வொரு நாட்டினதும் தொழிலாளி வர்க்கம் தமது சொந்தப் போராட்டத்தைக் கைவிடும் நிலைக்கு இதனால் வந்து சேர்ந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியசோசலிச அரசுகளின் கீழும், காலனியாதிக்க எதிர்ப்பு தேசிய அரசுகளின் கீழுமிருந்த தொழிலாளிவர்க்கம் இதனால் கடும் ஒடுக்குமுறைக்கும் அழிவுக்கும் ஆளாகியது. இதனை, சோவியத் யூனியனின் வெளிநாட்டுக் கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தொழிலாளிவர்க்க சர்வதேசியமாக வியாக்யானப்படுத்தப்பட்டது எனலாம். இந்த நிலைபாடு சமாதான சகவாழ்வு எனும் கொள்கையாகவும் பின்னாட்களில் ஆகியது.

இது குறித்த இடதுசாரி விமர்சனமாக மாவோயிசத்தைப் பார்த்தவர்கள் உண்டு. மூன்றாவது உலகக் கோட்பாட்டை முன்வைத்த மாவோ, அதனது நீட்சியில் அமெரிக்காவை விட சோவியத் யூனியன்தான் ஆபத்தானது என்ற அதீத எல்லைக்கும் வந்து சேர்ந்தார். சோவியத் யூனியனை விடவும் அதிபுரட்சிக்காரராகக் கோரிக் கொண்ட மாவோ, அமெரிக்காவுடன் நேரடியாக அரசியல் பொருளியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளத் துவங்கினார். சோவியத் யூனியனாவது வரலாற்றுரீதியில் குறைந்தபட்சம் அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தங்களை ஆதரிக்கும் நாடாகவாவது இருந்திருக்கிறது. ஆனால் சோவியத் எதிர்ப்பு எனும் போர்வையில் மாவோ கால சீனா ஏகாதிபத்திய ஆதரவு அரசியலையே மேற்கொண்டிருந்தது. மத்தியக் கிழக்கில் அமெரிக்க தாசனான ஈரான் மன்னர் ஷாவை மாவோ ஆதரித்தார். ஆப்ரிக்கக் கண்டத்தில் அங்கோலா பிரச்சினையில் அமெரிக்க ஆதரவாளரான, தென் ஆப்ரிக்க நிறவெறி அரசின் ஆதரவாளனான சாவிம்பியை அகஸ்டினோ நெட்டோவுக்கு எதிராக மாவோ ஆதரித்தார். தென் அமெரிக்காவில் சிலியில் கம்யூனிஸ்ட்டான அலண்டேவின் ஆட்சி அமெரிக்க உளவுப்படையின் ராணுவக் கவிழ்ப்பினால், இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டபோது, அமெரிக்க ஆதரவுக் கொடுங்கோலன் பினோசேவை மாவோவின் சீன அரசு ஆதரித்தது. சிலியிடமிருந்து நிக்கல் இறக்குமதியையும் மாவோவின் சீனா பெற்றுக் கொண்டது. இவையனைத்தும் மாவோவின் காலத்தில்தான் நடந்தன. சீனாவினது இருத்தலைத் தக்கவைத்துக் கொள்கிற நோக்கில், சீனாவினது வெளிநாட்டுக் கொள்கையின் பகுதியாகத்தான் மாவோவின் சீனா இந்த நிலைப்பாடுகளை மேற்கொண்டது.

அறுபதுகளிலும் எழுபதுகளிலுமான சீன-சோவியத் முரண்பாட்டை இன்றைய நிலையில் வைத்துப் பார்க்கிறபோது, இரண்டு நாடுகளும் தத்தமது தேசிய நோக்கங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலகப் புரட்சியாளர்களைக் காவு கொண்டிருக்கிறது எனும் நிலைப்பாட்டுக்குத்தான் நம் வரமுடியும். டெங்சியாவோ பிங்கின் காலத்தில் சீனா வியட்நாமின் மீது போர்தொடுத்ததோ அல்லது மே 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது இலங்கைக்கு சீனா ஆயுதம் வழங்கியதோ திடீரென்று நேர்ந்த மாற்றங்கள் அல்ல. மாவோ காலத்திலிருந்து சீனா தொடர்ந்து கடைப்பிடித்து வந்த தனது தேசிய நலன்களின் அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கையின் தொடர்ச்சிதான் சீனாவின் இன்றைய நிலை. வியட்நாமின் மீது படையெடுத்ததற்கு சீனா சொன்ன காரணம், சீன இனத்தவர் வியட்நாமில் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களைக் காப்பதற்காகத்தான் நாம் படையெடுக்கிறோம் என்பதுதான். போல்பாட்டின் இறுதிக்காலத்தில்; அமெரிக்காவும் சீனாவும் சேர்ந்துதான் அவரை ஆதரித்தன. இன்று பின்திரும்பிப் பார்க்கிறபோது சோவியத்-சீன-வியட்நாமிய முரண்பாடுகள் என்பது அவரவரது தேசிய நலன்களின் பாற்பட்டது தானேயொழிய உலகப் புரட்சியாளர்களின் நலன்களின் பாற்பட்டது என்று சொல்ல முடியாது.

முழு இலத்தீனமெரிக்க இடதுசாரிகளையும் எதிரியாக்கிக் கொண்டு, தமது நாட்டின் இடதுசாரிகளையே வேட்டையாடிய சைனிங்பாத் கெரில்லாக்களைக் கொண்டாடிய மாவோவின் சீனா, எல் ஸால்வடார் புரட்சி இயக்கமான எப்.எம்.எல்.என். ஐ திரிபுவுவாத இயக்கம் என்றது. சே குவேராவின் பொலிவிய நடவடிக்கையில் தனது ஆதரவை மறுத்த ரஸ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி சே குவேராவை பொலிவியன் அல்லாத அன்னியன் என்றது. சேவின் கெரில்லா நடவடிக்கையில் ஆரம்பத்தில் பங்கு பற்றி அதனை விட்டோடிய மாவோயிஸட்டுகள் குவேராவையும் தோழர்களையும் பொலிவிய ராணுவத்திற்குக் காட்டிக்கொடுத்தார்கள். இதனால்தான் சே குவேரா தனது கண்டம் தழுவிய புரட்சிக்கு சோவியத் யூனியனையோ அல்லது சீனாவையோ நம்பியிருக்கவில்லை. சே குவேராவின் மரணத்தைக் கூட சோவியத் யூனியன் மற்றும் சீன வெளிவிவகாரக் கொள்கைகளின் துரோகத்தினால் நிகழ்ந்தது என இன்று நாம் சொல்ல முடியும். அன்று முதல் இன்று வரையிலும் மாவோயிராகத் தன்னை முன்னிறுத்திவரும் எஸ்.வி.ராஜதுரை இந்த விடயங்கள் குறித்து என்ன கூறுகிறார்?

பாதுகாப்பு நலன்கள் என்ற முழக்கத்தின் கீழ்தான் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் விரிவாக்க நோக்கத்தை விரிவு செய்து வந்துள்ளன. சோசலிச நாடுகளும் கூட தமது தவறான நடவடிக்கைகள் சிலவற்றை நியாயப்படுத்த இந்த முழக்கத்தைப் பயன்படுத்தியதுண்டு (ஈழப் போராட்டமும் தேசபக்தியும் கம்யூனிஸ்ட்டுகளும் : எஸ்.வி.ராஜதுரை : முதல் பதிப்பிற்கான முன்னுரை : 21 டிசம்பர் 1987).

1987 ஆம் ஆண்டு இப்படிச் சொல்கிற எஸ்.வி.ராஜதுரை, சரியாக 22 ஆண்டுகளின் பின் என்ன சொல்கிறார்?

மாவோ காலத்தில் அதனது அயல் உறவுக் கொள்கைகள் அனைத்தும் சோசலிசத் தன்மை வாய்ந்தவையாக இருந்தன என்று கூறமுடியாது. உலகம் முழுவதும் முதலாளியக்; கட்டமைப்பு இருந்த சூழலில், அந்தக் கட்டமைப்புக்குள் சில சமரசங்களைச் செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலிசத்தை உருவாக்க வேண்டியிருந்தது

எஸ்.வி.ராஜதுரை இப்படிச் சொல்கிறபோது, இயல்பாகவே எழும் இரண்டு கேள்விகளுக்கு அவர் பதில் காண மறுத்துவிடுகிறார்.

முதல் கேள்வி : வெளிநாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவும், உள்நாட்டில் தனது பொருளியல் நலன்களுக்காகவும் செயல்படும் ஒரு நாடு, அந்த நாட்டுக்குள் கட்டுவது சோசலிசமாக இருக்குமா?

இரண்டாம் கேள்வி : அப்படியே மாவோ தனது சீனநாட்டில் சோசலிசத்தைக் கட்டினாலும், அவரது ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகளால், அந்தந்த நாடுகளில் உள்ள புரட்சியாளர்கள் அழித்தொழிக்கப்படுவது குறித்து அவரது ‘புரட்சிகரக்’ கோட்பாடு என்ன சொல்கிறது?

இந்த இரண்டு கேள்விகளில் இருந்தும் எழும் மிகப் பிரம்மாண்டமான மூன்றாவது கேள்வி இதுதான் : இப்படியான நிலைமையில், தத்தமது நாடுகளில் தமது புரட்சிகர இருப்பையும் தமது நடவடிக்கைகளையும் அழித்தொழிக்க உதவும் சீனப் புரட்சியை, அது சோசலிசப் புரட்சியாகவே இருந்தாலும் எதற்காக பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள புரட்சியாளர்கள் ஆதரிக்க வேண்டும்?

இந்த மூன்று கேள்விகளும் அந்தரத்தில் இருக்க, முள்ளிவாய்க்கால் பேரழிவு நடப்பதற்குக் கொஞ்சம் முன்பாக எஸ்.வி.ராஜதுரை இப்படி எழுதுகிறார் :

சீனா ஏன் இலங்கையில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு நவீன, வலுவான போர் ஆயுதங்களை வழங்கியிருந்தது? எல்லாம் அதனது சொந்த நலன்களை முன்னிட்டுத்தான். (ஈழத் தமிழ் மக்களும் நாடாளுமன்றத் தேர்தலும் : உயிரெழுத்து : மே 2009)

சீனா, மாவோ முதல் இன்று வரையிலும் உலகப் புரட்சிகர இயக்கங்களுக்குச் செய்துவருகிற துரோகங்களுக்குக் காரணம் என்ன? உலகம் முழுவதும் முதலாளியக் கட்டமைப்பு இருந்த சூழலில், அந்தக் கட்டமைப்புக்குள் சில சமரசங்களைச் செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலிசத்தை உருவாக்க வேண்டியிருந்தது என மாவோவின் செயல்படுகளை மட்டும் வெறுமனே தந்திரோபாயம் என நிரல்படுத்துவது நேர்மையான வாதமாகவா இருக்கிறது?

சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும், அதற்காக மத்தியக் கிழக்குப் புரட்சியாளர்கள் விலை தரவேண்டும். சீனாவில் மாவோ சோசலிசத்தைக் கட்ட வேண்டும், அதற்காக ஆப்ரிக்க இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்கள் விலை தரவேண்டும். இதன் பெயர் புரட்சிகர சர்வதேசியமா அல்லது தத்தமது நாட்டின் நலன் பேணும், அரசியல்- பொருளியல் நலன் பேணும் வெளியுறவுக் கொள்கை அரசியலா? அனைத்துக்கும் மேலாக, உலகின் ‘பிற’ புரட்சியாளர்களின் சவத்தின் மேல்தான் சீனாவின் சோசலிசம் கட்டப்பட வேண்டுமானால், அத்தகைய சோசலிசம் பற்றி எதற்காகப் ‘பிற’ புரட்சியாளர்கள் கவலைப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மாவோ என்ன காரணத்திற்காக சிலியின் சர்வாதிகாரி பினேசோவை ஆதரித்தாரோ அதே காரணத்திற்காகத்தான், மகிந்த ராஜபக்சேவுக்கு இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு நவீன ஆயுதங்களைக் கொடுத்துத் தமிழர்களைக் கொலை செய்திருக்கிறது. இங்கிருந்துதான் துவங்குகிறது ஈழப் பிரச்சினையில் எஸ்.வி.ராஜதுரைக்கு நேர்ந்த பின்னாளைய அரசியல் மாற்றம்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளைக் கடந்துவிட்ட நமக்கு முன், 1991 இல் துவங்கிய பின்-சோவியத், 2001 இல் துவங்கிய பின்-செப்டம்பர், 2009 மே 18 துவங்கிய பின்-முள்ளிவாய்க்கால் அனுபவங்களைப் பெற்றுள்ள நமக்கு முன்னால், நாம் இதுவரை நம்பிய சோசலிசம் குறித்த, உலகு குறித்த, இனத்தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த அடிப்படையான தந்திரோபாயக் கேள்விகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. மார்க்சியர்கள் முதல் விடுதலைப் புலிகள் வரை இந்த யதார்த்தங்களுக்கு முகம் கொடுத்துத்தான் தீர வேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் எஸ்.வி.ராஜதுரை இவ்வாறு எழுதிச் செல்கிறார் :

இன்றுள்ள சூழலில், ஈழப் புரட்சிகர மக்கள், சிங்கள மக்களும் சேர்ந்து ஒரே புரட்சிகர அமைப்பில் சேர்ந்தது சமூக மாற்றத்துக்காகப் போராட முடியாது என்பது உண்மை. மெய் நிலைமைகள் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தப் போராடுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் சிங்கள மக்களும் தம்மை ஒடுக்கிவருகின்ற இனவெறி அரசக்கு எதிராகக் கிளர்ந்தெழுகையில்தான் ஈழத் தமிழர்,மலையகத்தமிழர் இருவரது விடுதலையம் எளிதாகும்;, விரைவுபடுத்தப்படும். சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்று கடினமானதுதான். ஆயினும் இத்திசை நோக்கிய முயற்சிகள் இன்றே தொடங்கப்பட வேண்டும். விடுதலை என்பது எளிதாகச் சாதிக்கக் கூடியது அல்ல. தைப்பொங்கல் என்று நாள் குறித்து அடையப்பெறுவதும் அல்ல. இந்திய அரசு உட்பட யாராலும் வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படக் கூடியதுமல்ல! (இலங்கைத் தமிழ்ச் சிக்கல் : ஒரு வரலாற்றியல் ஆய்வை நோக்கி : 1985)

எண்பதுகளின் ஆரம்பத்தில் ‘நல்லெண்ணத்தின்’ அடிப்படையில், ‘இலங்கை யதார்த்தத்துக்கு ஒவ்வாத’ ஒரு அரசியல் அபிலாஷையை முன்வைத்த எஸ்.வி.ராஜதுரை, 22 ஆண்டுகளின் பின் 2007 ஆம் ஆண்டும் அதே கிளிப்பிள்ளை வாதத்தினையே முன்வைக்கிறார் :

ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்குப் பின்னும் விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள மக்களிடையே உள்ள முற்போக்கான, புரட்சிகர சக்திகளுடன் ஏதேனும் ஒரு வகையான உறவை வளர்க்க முயற்சி செய்யவில்லை. சிங்கள வெறியர்களின் இனவாதத்திற்கு எதிரான விடுதலைப்புலிகளின் பிரச்சாரங்களில் தொடர்ந்து தமிழ் இனவாதம்தான் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசின் சிங்கள தேசிய வெறிக்கு எல்லா சிங்கள மக்களும் அடிமையாகிவிட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஈழத்தமிழர்களில் கணிசமான பகுதியினர் சிங்களப் பகுதிகளில் வாழ்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அத்தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், புலிகளின் தாக்குதலைச் சந்திக்க நேருமே என்ற அச்சமல்ல, மாறாக சிங்கள மக்களின் சகிப்புணர்வே.

அதே போல விடுதலைப்புலிகள் 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிய பிறகும், மனித உரிமைப் போராளிகள் சிலரை ஒழித்துக் கட்டிய பிறகும், அந்த இயக்கத்தின் மீது எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட பற்றும் இல்லாது போயிற்று. தமிழ் ஈழம் கிடைக்கப்பெற்றால் எத்தகைய பண்பாட்டு அரசியல் சமூகப் பொருளாதார மாற்றங்களை அந்த இயக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் விடுதலைப் புலிகள் பற்றிய எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் நான் 1989க்குப் பிறகு தெரிவிக்கவில்லை.

எனினும், விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனம் எனும் பெயரால், ஈழத்தமிழர்களின் உரிமைகளையே மறுத்து, ஒற்றை ஆட்சி முறைக்குள் அவர்களைப் பிணைத்து வைக்க இந்திய அரசும் பார்ப்பனியச் சக்திகளும் செய்துவரும் முயற்சியை நான் கண்டனம்செய்து வந்திருக்கிறேன். விடுதலைப் புலிகள் பற்றிய எனது நிலைபாடு என்ன என்பதை தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகத்தினர் போன்றோர் நன்கு அறிவர். நமது நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன. பெ. மணியரசனைப் போல விடுதலைப் புலிகளை ஆதரித்து (அதுவும் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர்.மணி போன்றோரைப் போலல்லாமல்) வெகு ஜாக்கிரதையாகப் பேசி அதனையே தொழிலாகக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. இரண்டாவதாக, எனது தமிழ்-தமிழன் அடையாளத்தை நிலை நிறுத்த நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனாக மாற வேண்டியதுமில்லை. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழ் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், அனைத்திந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின், பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் இந்திய அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேறோர் விஷயம் (எஸ்.வி.ராஜதுரை : மார்க்சியம் – பெரியாரியம் – தேசியம் : ஜூலை 2007)

2007 ஆம்ஆண்டு இதனை எழுதிய எஸ.வி.ராஜதுரை 2009 ஆம் ஆண்டிலும் மீளவும் இதே விஷயங்களோடு, புலிகளின் ராணுவவாதம் குறித்தும் அவர்களது ஜனநாயக மறுப்பும் குறித்து கீழ்வருமாறு சொல்கிறார் :

விடுதலைப்புலிகள் ராணுவவாதத்திலேயே மூழ்கி அரசியலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான அவர்களது எதிர்வினைகள் சிங்கள முஸ்லிம் பாமர உழைக்கும் மக்களையும் சிங்களப் பேரழினவினவாதத்திற்குத் தாக்குப் பிடித்து நிற்கிற சிங்கள இடதுசாரிச் சக்திகளையும் அந்நியப்படுத்திவிட்டன. தமிழ் மக்களிடையே அவர்கள் உருவாக்கியிருந்த மேலாண்மை ஜனநாயக வழிமுறையின் மூலமாக அன்றி ராணுவ வலிமையின் மூலமே சாதிக்கப்பட்டதாக இருந்தது. 1991 ஆண்டுக்குப்பிற்கு உலக அளவில் ஏற்பட்ட பெரும்மாற்றங்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவோ உலக மக்களின் அபிப்பிராயத்தைத் தமக்குச் சாதகமாகத் திரட்டவோ செய்யவில்லை. மாறாக, ‘சர்வதேச சமூகம்’ எனத் தவறாக அழைக்கப்படும்; ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனத் தனது பதாகையில் பொறித்திருககும் அந்த அமைப்பின் அரசியல், பொருளாதார சமூகக் கொள்கைகள் என்ன என்பது ஒரு போதும் வெளியுலகத்திற்குத் தெளிவாக விளக்கப்பட்டதில்லை ( ஈழப் போராட்டமும் வர்க்கப் பிரச்சினையும் : எஸ்.வி.ராஜதுரை : தமிழர் முன்னணி முதல் இதழ் : தமிழ்நாடு : மே 2009 ).

மேற்கொண்ட இரு மேற்கோள்களையும் எதிர்கொள்வதற்கு முன்பாக இலங்கை அரசியலில் உள்ள இனக்குழுக்கள், அவர்களைப் பிரதநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் தொடர்பாக நாம் ஒரு நிலைபாட்டுக்கு வருவது நல்லது. சிங்கள மக்களுக்கு இடையிலும், முஸ்லிம் மக்களுக்கு இடையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நேசசக்திகளை அல்லது புரட்சிகர சக்திகளைத் தேடுவது என்பது சாத்தியமாகவா இருக்கிறது? இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்றவற்றில் ஈழத்தமிழர்களின் நேசசக்திகளைக் காண்பது என்பது சாத்தியமில்லை. இடதுசாரி-இனவாதக் கட்சியான ஜேவிபி தமிழ் மக்களின் நேசசக்தி என ராஜதுரை கருதுவார் என நினைக்கவில்லை. மகிந்த அரசில் இடம்பெற்றிருக்கிற சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இலங்கை-சிங்கள தேசபக்தக் கட்சிகள் ஈழத்தமிழர் நேசசக்திகள் ஆவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இந்த இடதுசாரி அமைப்புக்களின் கீழுள்ள தொழிலாளி; வர்க்கம் இனவாதம் பீடிக்கப்பட்டிருக்கிறது. மிஞ்சிய ஒரேயொரு கட்சியான நவ சமாஜக் கட்சி ஈழத்தமிழர்பால் நேசம் கொண்டிருக்கிறது. அவருடன் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் நேசம் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவன்றி மிஞ்சியிருக்கிற சிங்கள மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்களுடன் ஈழத்தமிழர் நேசம் கொண்டுதான் இருக்கிறார்கள். நவ சமாஜக் கட்சி, மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் மிகவும் சிறுபான்மையினர். பாராளுமன்ற அதிகாரம் அற்றவர்கள். இவர்கள் தொடர்ந்து அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். காணாமல் போகச் செய்யப்படுகிறார்கள். பெரும்பாலுமானோர் நாடுவிட்டு வெளியேறிவிட்டார்கள். இந்தச் சிறுபான்மையினர் குறித்து, அவர்களின் மீதான ஒடுக்குமுறை குறித்து, இலங்கை அரசுடன் இருக்கிற கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏதேனும் ஆதரவான நிலைபாடு எடுத்திருக்கிறதா? இல்லையே! சிங்கள அரசியல் தரப்பில் பின் எவரை ஈழத்தமிழர் தமது நேசசக்தியாகக் கொள்ள முடியும்? இலங்கை யதார்த்தத்தில் கால்பாவாத வெறும் சொல்லணிகள் எஸ்.வி.ராஜதுரையின் கோரிக்கைகள். தமிழ் இனப் பிரச்சினையை ஏகாதிபத்திய ஆதரவு எனப் பார்த்து, ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக மகிந்த ராஜபக்சேவை முன்னிறுத்தும் தேசபக்த அரசியல்தான் இலங்கை இடதுசாரிகளின் அரசியல். இதில் ராஜதுரை பேசுகிற நேசசக்திகளைத் தேடுவது என்பது வெறும் கானல் நீர்.

II

முஸ்லிம்களிடையிலான நேசசக்திகளைத் தேடுவது குறித்த பிரச்சினைக்கு வருவோம். இலங்கை முஸ்லிம் அரசியலைப் பொதுவாக பாதிக்கப்பட்டவரின் அரசியலாகப் பார்ப்பது என்பதுவே பிழையான அரசியல் என்றே கருதுகிறேன். இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு எதிர் நிலையில் தற்பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்திய முஸ்லிம்களின் நிலையுடன் இலங்கை முஸ்லிம்களை ஒப்பிட முடியாது. இலங்கை முஸ்லீம் அரசியல் எப்போதுமே தமது இருப்பிற்காக சிங்கள ஆளும் தரப்புடன் சமரசம் செய்துகொள்கிற, பல வேளைகளில் ஈழத்தமிழ் மீதான ஒடுக்குமுறைகளைப் பாராமுகமுடன் நோக்குகிற பேரம் பேசும் அரசியலாகவே இருந்து வருகிறது. இலங்கை அரசின் நீதியமைச்சர் ஹக்கீம், ஆளுனர் அலவி மௌலானா போன்றவர்கள் இந்த அரசியல் நிலைபாட்டின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆளும் தரப்பினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிற அவர்களால் தமக்கான அரசியல் தீர்வை அவர்களிடம் வலியுறுத்துவதன் மூலமே பெறமுடியும். அத்தகைய அரசியலை ஒருபோதும் அவர்கள் மேற்கொண்டது இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது என்பதன் பின்னுள்ள அரசியல் காரணிகளை நிதானமாக எவரும் அலசுவதில்லை, மாறாக முஸ்லிம்கள் எனும் ஒரு சமூகத்தையே குற்றவாளிகளாக்கி அவர்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகளின் பாரிய அரசியல் தவறு மட்டுமே எப்போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஓடுக்கப்பட்ட இனம் தமக்கு வெளியே நேசசக்திகளைத் தேடுவது என்பதும், ஒடுக்கும் இனம் சார்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதனையும் இலங்கைச் சூழலில் வெறுமனே ஜடவயமாகப் பிரயோகிக்க முடியாது. இந்த வகையில் அரசியல் யதார்த்தமற்ற ஒரு பார்வையையே எஸ்.வி.ராஜதுரை முன்வைத்து வருகிறார்.

கொழும்பில் சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளுக்குப் பயந்து தமிழர்களைத் தாக்காமல் இருக்கவில்லை, மாறாக, அவர்களிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது என்கிறார் ராஜதுரை. எஸ்.வி.ராஜதுரை சகிப்புத்தன்மை எனும் வார்த்தையை பிரக்ஞையுடன்தான் பாவித்திருக்கிறாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. சகித்துக் கொள்கிற அளவுக்குத் தமிழர்கள் என்ன அசுரர்களா? கொழும்பில் தமிழர்கள் மீளவும் தாக்கப்படாமல் இருப்பதற்கு சிங்களவர்களின் சகிப்புத்தன்மை மட்டும் காரணைமல்ல, எண்பதுகளின் பின் இலங்கைப் பிரச்சினை அதிக அளவில் சர்வதேசிய மயப்பட்டிருப்பது காரணம். இனக்கொலை என்பதனை முன்வைத்துத்தான் புதிய நாடுகள் உருவாகி இருக்கிறது என்பது ஒரு காரணம். நேரடியிலாக அல்லாமல் யாப்பின் அடிப்படையிலேயே தமிழர்களை ஓரங்கட்ட முடியும் என்பது ஒரு காரணம்.

முழு உலகமும் இலங்கையைக் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்பதும் காரணம்.

விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறியமை குறித்து எஸ்.வி.ராஜதுரையுடன் எவரும் முரண்பட அவசியமில்லை.

தமிழ் ஈழம் கிடைக்கப்பெற்றால் எத்தகைய பண்பாட்டு அரசியல் சமூகப் பொருளாதார மாற்றங்களை அந்த இயக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் விடுதலைப் புலிகள் பற்றிய எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் நான் 1989க்குப் பிறகு தெரிவிக்கவில்லை என்கிறார் எஸ்.வி.ஆர். 2007 ஆம் ஆண்டு இதனை அவர் எழுதுகிறார். அவர் சொல்கிற 1989-1991 என்பது ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம். எஸ்.வி.ராஜதுரைக்கே கூட மார்க்சியத்தின் எதிர்காலம் அல்லது இனியான சோசலிஷம் எத்தகையது என்பது குறித்த திட்டவட்டமான பார்வைகள் இருந்திருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எஸ்.வி.ராஜதுரை அறியாமல் இருக்கிறார் என்பதற்காக விடுதலைப்புலிகள் என்னவிதமாக தமது அரசியல்-பொருளியல் பண்பாட்டு மாற்றங்களைக் கொண்டிருப்பார்கள் என அவர்கள் சொல்லாமலும் இருக்கவில்லை.

சோசலிசத்தினுள் தனிநபர் உரிமையையும் ஜனநாயகத்தையும் குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவரான அப்துல்லா ஒச்சலான் இத்தருணத்தில் பேசினார். தனது மார்க்சிய-லெனினியக் கடந்த காலத்தை கிழக்கு திமோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் குஸாமா விட்டுவிலகியதும் இத்தருணத்தில்தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் யூனியனும், நிலவிய சோசலிசமும் வீழ்ந்த தருணமும் இதுதான். விடுதலைப் புலிகளின் அரசியல் பார்வையையும் இது மாற்றியமைத்தது. இன்னும் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலுக்குப் பின்னான உலகில் விடுதலைப் புலிகளின் இலட்சிய சமூகத் திட்டம் முற்றிலுமாகவே மாறிப்போனது.

1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அரசியல் குழுவுக்காக அவர்களது மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலையும் என ஒரு அறிக்கையை எழுதி வெளியிடுகிறார் (Liberation Tigers and the Tamil Eelam Freedom Struggle : Political Committee of the Liberation Tigers of Tamil Eelam: 1983 : written by Anton S. Balasingham).. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

எமது முழுமையான தந்திரோபாயம் என்பது தேசிய விடுதலையையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைப்பது, தேசியத்தையும் சோசலிசத்தையும் இணைப்பது, இதன் மூலம் இரு வகையிலும் எமது மக்களை விடுவிக்கும் ஒரு புரட்சிகரத் திட்டத்தை முன்வைப்பதாகும், தேசிய ஒடுக்குமுறையிலிருநதும், மனிதனை மனிதன் சுரண்டும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவிப்பதாகும். எமது சமூக உருவாக்கத்தில் தேசிய விமோசனத்தையம் சோசலிச மாற்றத்தினையும் உந்திச் செல்வதற்காக பரந்துபட்ட மக்களின் முற்போக்கான தேசிய உணர்வையும், பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் கலக்கச் செய்வதுதான் எமது தந்திரோபாயமாகும்.

இவ்வாறு தமது எதிர்கால சமூகத்திட்டம் பற்றி வரையறுத்த விடுதலைப் புலிகள் 1989 இன் பின்னும் 2001 இன் பின்பும் தமது எதிர்காலச் சமூகத்திட்டத்தை மாற்றித்தான் அமைத்துக் கொண்டார்கள். அமெரிக்க ராஜதந்திரப் பிரதிநிதியும் நோர்வே பேச்சுவார்த்தைகளின் காலகட்டங்களில் அதில் ஈடுபட்டவருமான ரிச்சர்ட் ஆர்மிடேஜின் கேள்வியொன்றுக்கு பதிலிறுக்கு முகமாக அன்டன் பாலசிங்கம் இவ்வாறு (Norwegian Peace Initiative : Anton Balasingham responds to US Ambassador : Tamil Net : 25 April 2003) சொல்கிறார் :

தாராளவாத ஜனநாயக மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளதாரத்திற்கு சாதகமாக இருப்போம் என்பதனை மட்டும்தான் நான் சொல்ல முடியும்.

இலங்கைக்குள் ஒரு பெடரல் அமைப்பினுள் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசும் வேளையில்தான் அன்டன் பாலசிங்கம் இதனைச் சொல்கிறார். குறிப்பான பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பிற்பாடுதான் விரிவாகச் சொல்ல முடியும் என்பதனையும் அவர் பேசுகிறார். தொண்ணூறுகளின் பின் புதிதாகப் பிறந்த எந்த நாடும் சோசலிச அரசியல் பொருளாதாரத்தைச் தேரவில்லை என்பதனை நாம் கவனம் கொள்வோமாயின் அன்டன் பாலசிங்கத்திடம் நேர்ந்த மாற்றத்தினையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

எஸ்.வி.ராஜதுரை பெரியாரிய ஆய்வாளர் எனும் அளவிலும், சாதிய ஒழிப்பில் கடப்பாடு கொண்டவர் எனும் அளவிலும், முஸ்லிம் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் கவனம் கொள்பவர் எனும் அளவில் இப்பிரச்சினைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நாம் பார்ப்பதும் இங்கு பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it) தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்தக் குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின்கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code, which were enacted in 1994 : criminalise caste descrimination : Tamil Eelam:A-De-Facto-State : Tamil Eelam Legal System : E.Pararajasingham, Head of Tamil Eelam Judicial Division : Tamil net : 30 October 2003) விடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக, விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாக் கொண்டு இரண்டாம் படசமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள். அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிசார்பற்ற மதச்சார்பற்ற (secuar) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் – இளைஞர்களையும் யுவதிகளையும் – விடுதலைப் புலிகள் தமது முள்ளியாவளை மாவீரர் நினைவில்லத்தில்; ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி, இஸ்லாமிய சமாதியில் அப்போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம் கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால் சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமியப் போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறு விதமாகச் செயல்பட்டிருக்க முடியாது.

சாதியைத் தாங்கள் ஒழித்துவிட்டதாக விடுதலைப் புலிகள் எங்கும் பிரகடனம் செய்யவில்லை. சாதி ஒதுக்குதலைக் குற்றமாக்கியிருக்கிறோம், சாதிய ஒதுக்குதலைத் தடை செய்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். சாதிய ஒதுக்குதலுக்குத் தண்டனை அளிப்போம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தமது அமைப்பை அவர்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அவர்களது அமைப்பில் அவர்கள் திட்டமிட்ட வகையில் கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமணச் சடங்குகளில் தாலியை நிராகரித்திருக்கிறார்கள் சாதிகடந்த வகையில் மாவீரர்களின் கல்லறைகளை அமைத்திருக்கிறார்கள். நடைமுறையில் தேசிய ஒற்றுமை கருதி சாதியப் பிரச்சினையில் மௌனம் காத்தினரே ஒழிய, அமைப்பில் சாதியையும் சாதி வெறியையும் அவர்கள் ஒருபோதும் கட்டிக் காக்கவில்லை. இஸ்லாமியர் தொடர்பாக அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒரு போதும் நியாயப்படுத்தியதில்லை.

சாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டும் உளவியல் மட்டத்திலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம். நிறவெறி ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு போன்றவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டஆக்கலின் மூலம்தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. சோசலிச நாடுகளிலும் கட்சியின் அதிகாரம் என்பதனை விடவும் சட்டத்தின் ஆட்சியைத்தான் அதனது விமர்சகர்கள் கோருகிறார்கள். அம்பேத்காரும் பெரியாரும் சாதியை ஒழிப்பதில் சட்டமுறைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அதனது நடைமுறைப் பண்புகளுக்கும் கோருதல்களுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் சட்ட ஆக்கலையும், இச்சூழலினான குறைந்தபட்சமான சுயாதீன ஆய்வுகளையும் கூட நாம் ஆக்கபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழ் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், அனைத்திந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின், பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் இந்திய அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேறோர் விஷயம் என்கிறார் ராஜதுரை.

சாதியத்தையும் இந்துத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கிற இன்குலாபும் தியாகுவும் விடுதலை. ராசேந்திரனும்; கொளத்தூர் மணியும் கோவை கு.ராமகிருட்டிணனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, எனில் விடுதலைப் புலிகள் பெரியாரினது வாரிசுகள் அல்லவா? தலித்தியக் கோட்பாட்டாளரான ரவிக்குமாரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, எனில் விடுதலைப் புலிகள் அம்பேத்காரின் வழித்தோன்றல்கள் அல்லவா? பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் பல்வேறு அரசியல் போக்குகளும் இயங்குகிற ஒரு புவிப்பகுதியில் நடக்கிற இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறும் சக்திகள் ஒற்றைப்பட்டைத் தன்மையுடன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? இதே நிலை அவர்களை ஆதரிக்கிற தமிழக சக்திகளிடமும் இருப்பதற்கு விடுதலைப்புலிகள் எவ்வாறு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் சாத்தியம்?

ஈழத்தமிழர்கள், சிங்கள-முஸ்லிம் மக்களினிடையில் நேசசக்திகளைத் தேடுவது, விடுதலைப்புலிகளின் ராணுவவாதம், ஜனநாயக மறுப்பு, அரசியல் தவறுகள், அவர்களது சமூகப் பொருளாதார- அரசியல்-பண்பாட்டுத் திட்டம் என்றெல்லாம் விமர்சனங்களை வைப்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இவையெல்லாம் இதுவரைத்திய அனுபவங்களிலான பகுப்பாய்வுகள் மட்டும்தான். எஸ்.வி.ராஜதுரை, ஈழத்தமிழ் மக்கள் அல்லது ஒரு விமரிசனபூர்வமான ஈழ விடுதலை இயக்கத்தின் முன் வைக்கிற மாற்று வழிமுறைதான் என்ன? அவர் சொல்கிறார் :

அவர்களது விடுதலை வேட்கை மீண்டும் கிளர்ந்தெழுகையில், அவர்கள் இலங்கைத்திவிலுள்ள சிங்கள் முஸ்லிம் உழைக்கும் மக்களுடனும் தென்னாசியப் பகுதியில்-குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள உழைக்கும் மக்களுடனும்-தங்களை இணைத்துக் கொள்ளும்போராட்ட வடிவத்தை மேற்கொள்வார்கள் என்று கருதலாம். எனினும் இந்தப் பிரதேசம் முழுவதையும் தழுவக் கூடிய அகநிலைச் சக்திகள் (subectiv forces) கருத்து நிலையிலேயே உள்ளது என்பதனை ஒப்புக் கொள்ளும் அதேவேளை அவை உறுதியான உருத்தோற்றம் கொள்ள வேண்டும் என்ற நமது அவாவையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை (ஈழத்தமிழ் மக்களும் நாடாளுமன்றத் தேர்தலும் : எஸ்.வி.ராஜதுரை : தமிழர் முன்னணி : தமிழ்நாடு : மே 2009)

மேற்கண்ட எஸ்.வி.ராஜதுரையின் கூற்றை வாசிக்கும்போது முற்றிலும் யதார்த்தங்களை மறுத்த மனோரதிய உலகில் அவர் வாழ்கிறார் எனவே சொல்ல முடிகிறது. இலங்கையில் சிங்கள-முஸ்லிம் மக்களில் நேசசக்திகளைத் தேடுவது ஈழத்தமிழர்களை மட்டுமே பொறுத்த விடயம் இல்லை. புறநிலையில் சிங்கள-முஸ்லிம் மக்களினிடையில் இருக்கிற அரசியல் பிரக்ஞையினாலும் அது தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. இன்றைய நிலையில் இலங்கையில் அதற்கான வாய்ப்புக்கள் மிக மிக அருகியே காணப்படுகிறது. இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்கள்-முஸ்லிம்கள் குறித்துப் பேசுகிறார் ராஜதுரை. இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து ராஜதுரை அறியாதவர் இல்லை. குறிப்பாக மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்திய-தமிழக முஸ்லிம் மக்களுடையதும் முன்னுரிமைகளை அவர் அறியாதவர் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்து ஈழத்தமிழர்கள் சாத்தியமான தந்திரோபாயத்தினையே கொண்டிருக்கிறார்கள். பெரியாரியர்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். தலித்துக்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். தமிழ் தேசியர்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருபடித்தான அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் இல்லை. இதுவன்றி சிறுபான்மையினரான இந்துத்துவவாதிகளும் ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறார்கள். அவர்களோடு நேசம் பாராட்டும் ஈழத்தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன, புகலிடத்தமிழர் அமைப்புக்களும் இருக்கின்றன. இந்திய அரசியலில் வேறுவேறு மட்டங்களில் இருக்கிற அனைவரதும் தமக்கான அரசியல் ஆதரவைத் திருப்புவதாகவே ஈழத்தமிழரது தந்திரோபாயம் இருக்க முடியும். இந்திய அரசியலில் அவர்கள் கட்டுப்பாடு கொண்டிருத்தலும் சாத்தியமில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் மேற்கோளிலுள்ள மிகப் பலவீனமான பகுதி இது : இந்தப்பிரதேசம் முழுவதையும் தழுவக் கூடிய அகநிலைச் சக்திகள் (subjective forces) கருத்து நிலையிலேயே உள்ளது என்பதனை ஒப்புக் கொள்ளும் அதேவேளை அவை உறுதியான உருத்தோற்றம் கொள்ள வேண்டும் என்ற நமது அவாவையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. தென்னாசியப் பிராந்தியத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லது நேபாளத்தில் எந்தவிதமான நேசசக்திகளை ஈழத்தமிழர் தேடுதல் முடியும்? தத்தமது நாடுகளின் நலனால் தீர்மானிக்கப்படும் அரசியல் கொண்ட இந்த நாடுகளில் ஈழத்தமிழர் நேசசக்திகள் யார்? நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களானால் அவர்கள் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பார்கள் எனச் சொல்ல முடியாது. இலங்கையில் கல்வி பற்றி விவாதிப்பதற்கு நான் கேட்டுக் கொண்டு மகிந்த ராஜபக்சேவைச் சந்தித்தேன் எனச் சொன்ன மாவோயிஸ்ட் தலைவர் பிரசன்டாவின் கூற்றையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. கருத்து நிலையிலேயே உள்ள ஒரு அரசியலைத் தேர்ந்து கொண்டு போராட வேண்டும் என, கடந்த அரைறூற்றாண்டாக இனக்கொலைக்கு உள்ளாகி வரும், இரண்டு இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்த ஒரு மக்கள் கூட்டத்திடம் சொல்வது ஒரு கனவுத்திட்டம் அன்றி வேறு இல்லை.

எஸ்.வி.ராஜதுரையைத் தொடர்ந்து கற்று வருபவன் எனும் அளவில், சர்வதேசியவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவரிடமிருந்து பின்வரும் சொற்களைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது:

நமது நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன. பெ. மணியரசனைப் போல விடுதலைப் புலிகளை ஆதரித்து (அதுவும் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர்.மணி போன்றோரைப் போலல்லாமல்) வெகு ஜாக்கிரதையாகப் பேசி அதனையே தொழிலாகக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. இரண்டாவதாக, எனது தமிழ்-தமிழன் அடையாளத்தை நிலை நிறுத்த நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனாக மாற வேண்டியதுமில்லை.

சர்வதேசியவாதி, தன்னையும் அறியாமல் தனது சொந்த நாட்டின் தேசியவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட தருணம் அது. நாவு தடுக்கிவிட்டது என இதனை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மார்க்சியத்தை நடைமுறைத் தத்துவம் (philosophy of Praxis) என்பார்கள். தமது கோட்பாடு உண்மை எனக் கருதுவார்களானால், அது ஒரு ஆக்க விளைவையும் தரும் எனில், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட வேண்டும். ஈழப் பிரச்சினையைப் பொறுத்து ஏகாதிபத்தியமும் மனிதாபிமானத தலையீடும் என்கிற பிரச்சினை தென் ஆசிய அரசியல் விவாதங்களிலும் நுழைந்திருக்கிறது என்பதனை நாம் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். ஈழ விடுதலையை ஆதரிப்பதில் அல்லது ஈழத்தமிழர்களுக்கெனத் தனிநாடு என்பதனை ஆதரிப்பதில் இலங்கை மார்க்சியர்களுக்கு உள்ள தயக்கம் மட்மல்ல இந்திய மார்க்சியர்களுக்கும் உள்ள தயக்கம் என்பது மனிதாபிமானம் அல்லது மனித உரிமை எனும் பிரச்சினையில் அவர்களது தளும்பலான, திடமான நிலைப்பாடுகள் எடுக்கவியலாமையில் இருந்து வருவதாக இருக்கிறது.

அவர்களது கட்டுரைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் இலங்கை அரசு இனக்கொலையில் ஈடுபடுகிறது எனச் சொல்வார்கள். இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது எனச் சொல்வார்கள். இந்த அரசியலை முன்னெடுப்பதில் தயங்கிப் பின்நிற்பார்கள். காரணமாக, ஏகாதிபத்தியம் இந்தப் பிரச்சினையைத் தனது பொருளியல் ராணுவ ஆதிக்க நலன்களுக்குப் பாவிக்கிறது என்பதனை அவர்கள் முன்வைப்பார்கள்.

நடைமுறையில் இனக்கொலை செய்கிற அரசுகளை எதிர்த்து செயலளவில் தயங்கி நிற்கிற இவர்கள் ஒப்பீட்டளவில் இதே மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்த போராளிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டேயிருப்பார்கள். அப்போது காலஞ்சென்ற மனித உரிமைப் போராளியான பாலகோபால் அவர்களையும் எஸ்.வி.ராஜதுரையும் மேற்கோள் காட்டுவார். இக்காரணத்தினால் நடைமுறையில் இவர்கள் ஒடுக்குமுறை அரசுக்கு எதிரான போரக்குற்றச்சாட்டுக்களையோ அல்லது மனிதஉரிமை மீறல்களையோ வலியுறுத்தாமல் மௌனமாகிவிடுகிற ஒரு அரசியல் நிலைபாட்டிலேயே வந்து முடிவார்கள்.

இவர்களது வாதத்திலேயே கூட இவர்கள் நேர்மையாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபையும், அம்னஸ்டி இன்டர்நேசனலும், மனித உரிமைக் கண்காணிப்பகமும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும், போர்க்குற்றங்களையும் இருவர் மீதும்தான் சொல்கின்றன. அதிகரித்த அளவில் இலங்கை அரசின் மீது சுமத்துகின்றன. எனில் ஏன் இந்த மனித உரிமை அரசியல் பற்றி மனித உரிமைகள் அக்கறை கொண்ட எஸ்.வி.ராஜதுரை மௌன அரசியல் நடத்துகிறார்?

III

சம சமாஜக் கட்சியின் திஸ விதாரண, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் டியூ குணசேகரா போன்றவர்கள் தமிழர்களின் பிரச்சினையில் அதிகாரப்பகிர்வு, உரிமைகள் பற்றிப் பேசினாலும் தமிழர்களின் இறையாண்மை, சுயநிர்ணயம் என்று வருகிறபோது தேசபக்தர்களாகி அந்தக் கோரிக்கையே ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டம் என்பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படித்தான் பேசும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த எஸ்.வி.ராஜதுரையின் கடந்தகாலத்திய வீராவேசமான விமர்சனங்களை இன்று வாசிக்க நகை முரணாக இருக்கிறது. தமிழீழத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை என்பதுதான் எஸ்.வி.ராஜதுரை அக்கட்சிகளின் மீது வைத்த விமர்சனம்.

பிரிந்து செல்வது உள்பட்ட சுயநிர்ணய உரிமை கோரும் தேசியம் குறித்த லெனினியக் கோட்பாட்டை உரத்துச் சொல்வதாகத் தொடர்ந்து கோரி வந்த எஸ்.வி.ராஜதுரை அவர் சொல்லிக் கொண்டிருந்ததற்கு மாறாக 2009 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அப்படி மாற்றிக் கொண்டதற்கான எந்தத் தர்க்கத்தையும் அவரது எழுத்துக்களில் தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஈழப் போராட்டமும் தேசபக்தியும் கம்யூனிஸ்ட்டுகளும் இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையில் கூட அவர் தமிழீத்திற்கு ஆதரவாகத்தான் எழுதுகிறார்.

இலங்கையில் எஸ்.வி.ராஜதுரையின் முகம் வேறாக இருந்தது என்பதைத் தனது கட்டுரையொன்றில் பதிவு செய்கிறார் ஈழ அரசியல் விமர்சகரான யதீந்திரா :

….அன்று மாலை ஒரு கலந்துரையாடல் ஒன்றும் எங்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. தான் பிரிந்து செல்லும் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரிக்கவில்லை. சேர்ந்திருப்பது குறித்துத்தான் யோசிக்க வேண்டும் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டார். அப்போது இடதுசாரி செயற்பாட்டாளர்கள் என்றால் சாதரணமாகவே அவர்கள் மீது எனக்கு நாட்ட மேற்படுவதுண்டு. அதிலும் ஈழத் தமிழருக்காகப் பேசும் இடதுசாரி அறிஞர் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் என்றால் சொல்லவா வேண்டும்? ஆனால் அன்றைய முதல் சந்திப்பிலேயே ராஜதுரை குறித்து எனக்குள் இருந்த பிரமிப்பு ஆட்டம் காணத் தொடங்கியது (யதீந்திரா : விமர்சனங்கள் உடைவுறும் பிரமிப்புகள் மற்றும் கொச்சைப்படுத்தலுக்கான காத்திருப்பும் : கீற்று இணையதளம் : 17 நவம்பர் 2009)

எஸ்.வி.ராஜதுரைக்கும், அவர் சதா விமர்சித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குமான, குறிப்பாக மாரக்சிஸ்ட் கட்சிக்கும் தனக்குமான முரண்பாட்டை இப்படித்தான் ராஜதுரை மேவி வந்தார். அவரில் நேர்ந்த இந்த மாற்றத்துடன், இலங்கையில் இனக்கொலையே நடக்கவில்லை என்று பேசியவர்களுடனும், இலங்கையினுள் இணக்க அரசியல் பேசியவர்களுடனும், புலிகளிடம் தலித்திய விரோதத்தையும் இந்துத்துவக் கூறுகளையும் கண்டவர்களிடமும் தன்னை அவர் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அவர்களது மேடைகளிலும் அவர் தோன்றினார்.

2007 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்ட அவர், பின்னாளில் தமிழீழக் கோரிக்கைகையும் புலிகள் விட்டுவிட வேண்டும் என்றதோடு நிற்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியையும் இலங்கை இணக்க அரசியல் பேசுபவர்களையும் இணைக்கும் மேடையில் சிறப்புப் பேச்சாளராக அவர் தோன்றிப் பேசினார். அது 2009 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த திருவனந்தபுரத்தில் நடந்த மாநாடு :

இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழக எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இலங்கையின் பிரச்சினை மேலும் சிக்கலடைவதற்கான அக புறச் சூழல்கள் இன்றைய உலகளாவிய போக்கில் அதிகரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான சரியான அணுகுமுறை அவசியமென வலியுறுத்திய அவர், தமிழ் சமூகம் புத்திசாதுரியமான அரசியல் தெளிவுள்ள தலைமைகளை உருவாக்காததும் அந்த நிலை மேலும் மோசமடைவதற்கு காரணமாகவிருந்தது என்றார். இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்திய, தமிழக ஊடகங்கள் ஒருபக்கம் சார்ந்தே நிகழ்வுகளை வழிப்படுத்துகிறது என்பதுடன் தமிழ் மக்களின் விடுதலையை ஆதரிப்போர் இந்துத்துவ சக்திகளிடம் போய் சரணடைந்திருப்பதாகவும் அதில் அரசியல் தலைவர்கள், இடதுசாரிகள், புத்திஜீவிகளும் அடங்குகிறார்கள் என்றார். இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசும் பங்களித்திருப்பதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் ஏற்பட்டுவரும் இந்திய ஆதிக்கத்தை எதிர்ப்பதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து கொள்வது அவசியம் என்பதையும் வலியுறுத்திப் பேசினார் (இலங்கை விவகாரம், நிலவரம் தொடர்பான மாநாடு நிகழ்வு பதிவு : தாஸ் : 19 அக்டோபர் 2009 : எதுவரை? இதழ் 2 செப்டம்பர் : அக்டோபர் 2009)

அந்த உரையிலும் திரும்பத் திரும்ப தனது மனோரதிய அரசியலையே அவர் முன்வைத்து வந்தார். சிங்கள-தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை குறித்து சூத்;திரவயமாகப் பேசினார். எப்போதும் குறிப்பாகப் பேசுகிற அவர் அக்கூட்டத்தில் மிகமிகப் பூடகமாகப் பேசினார். தமிழ் மக்களின் விடுதலையை ஆதரிப்போர் இந்துத்துவ சக்திகளிடம் போய் சரணடைந்திருப்பதாகவும் அதில் அரசியல் தலைவர்கள், இடதுசாரிகள், புத்திஜீவிகளும் அடங்குகிறார்கள் என்றும் பேசினார். இந்துத்துவச் சக்திகளிடம் சென்று சரணடைந்த இடதுசாரிகள் மற்றும் அறிவுஜீவிகள் யார் என்பதனை அவர் இறுதி வரையிலும் விவரிக்கவே இல்லை. விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்குச் சாதிய-இந்துத்துவ ஆயுதங்களை ஏந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களுடன் இவர் இணக்கத்திற்கு வந்ததும் இவ்வாறுதான்.

துரதிருஷ்டவசமாக இவருக்கு மேடை போட்டுக் கொடுத்தவர்களின் சுயவிலாசத்தை இவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை. இவருக்கு மேடை போட்டுக் கொடுத்தவர்கள் இலங்கையில் இனக்கொலை நடக்கவில்லை என்றவர்கள். மகிந்த ராஜபக்சேவுடன் இணக்க அரசியலை முன்னெடுப்பவர்கள். எஸ்.வி.ராஜதுரை பூடகமாகப் பேசுகிற இந்துத்துவ முத்திரையைப் புலிகள் மீதும் சுமத்துகிறவர்கள்.

இவர்களது பிறிதொரு முகம் எஸ்.வி.ராஜதுரையின் சமகால மனித உரிமையாளர் அ.மார்க்சுக்குப் புரிந்துதான் இருந்தது. அவர் அதனைத் தெளிவாக முன்வைக்கவும் செய்தார் :

தமிழ் ஈழப் பிரச்சினையில் தொண்டுநிறுவனங்கள் புகுந்து குட்டை குழப்பும் நிலை குறித்தும் நாம் எச்சரிக்கையாகவே இருப்பது அவசியம். இருமாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பல லட்சம் டாலர் செலவில் நடத்தப்பட்ட மாநாடு இன்னும் இது போன்ற பெரும் நிதிப் பின்புலத்துடன் நடத்தப்படும் பல மாநாடுகளின் உள்நோக்கங்கள் குறித்த ஆய்வு நமக்குத் தேவை (அ.மார்க்ஸ் : ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் : புலம் : நவம்பர் 2009 : பக்கம் : 27)

தொடர்ந்து இத்தகைய மாநாடுகளின் பின்னுள்ள நோக்கங்கள் குறித்த எச்சரிக்கையையும் அவர்களது நிதி ஆதாரங்கள் குறித்த எச்சரிக்கையையும் அ.மார்க்ஸ் சுட்டிக் காட்டவே செய்தார் :

அரசு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பெரும் ஊடக வலைப்பின்னல்கள் ஆகியவற்றை எதிர்த்து எவ்விதப் பெரிய நிதி ஆதாரங்களுமின்றி களத்தில் நிற்கிற மனித உரிமை அமைப்புகளின் ஒரே பலம் அவற்றின் நம்பகத்தன்மையே. இந்த நம்பகத்தன்மையை அவை இருவகைகளில் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசும் ஊடகங்களும் ஆயிரம் நாவுகளால் பிரச்சாரம் செய்தபோதும் எந்த ஒரு பிரச்சினையின் மீதும் மனித உரிமை இயக்கங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அதுவே உண்மையாக இருக்கும் என்கிற நம்பிக்கையை அவை மக்கள் மத்தியில் பெற வேண்டும். எந்த ஒரு குறிப்பான மக்கள் இயக்கம் அல்லது அரசியல் கட்சியின் முகப்பு அமைப்பாக அவை இல்லாததோடு அப்படி இல்லை என்பதை உறுதிசெய்யும் வகையிலும் அவை நடந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, அவை நிதி ஆதாரங்களில் சுயேச்சையாக இயங்க வேண்டும். வெளியிலிருந்து எந்தவிதமான நிதி உதவியையும் அவை பெறலாகாது. பெரிய அளவில் வெளிநாட்டு நிதி உதவியுடன் ஒருவகை கார்ப்பரேட் தன்மையிலான அரசுக்கு எதிராகத் தீவிர வசனங்களை உதிர்த்துக்கொண்டே அரசுடன் இணைந்து செயல்படுகிற தொண்டு நிறுவனத் தன்மையிலான மனித உரிமை அமைப்புகள் உருவாகியுள்ள நிலையில் நிதி ஆதாரம் குறித்த இந்தக் கவனம் முக்கியமானது (சிவில் உரிமைகள் குறித்த பன்மாநிலக் கருத்தரங்க அழைப்பிதழ் : அ.மார்க்ஸ் : ஜனவரி 2009)

எஸ்.வி.ராஜதுரை மனிதாபிமான ஏகாதிபத்தியம். தேசிய விடுதலை குறித்து நன்கு அறிந்தவர். ஏகாதிபத்தியங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களில் புகுந்து குட்டை குழப்புவதையும் தமது நலன்களை எய்துவதற்கு அவை செயல்படுகிறது என்பது குறித்தும் முழுமையான நூலொன்றினையும் எழுதியவர். யூகோஸ்யேவியப் பிரச்சினை குறித்த குறிப்பான கருத்துக்களையும் முன்வைத்தவர்.

யூகோஸ்லேவியாவின் உடைவில் உள்நாட்டுக் காரணிகள் என்ன பங்கு வகித்தனவோ அதைவிட அதிகமான பங்கை வெளிக்காரணிகள் வகித்ததை அவற்றின் நலன்களுக்காகச் செய்யப்பட்ட பிரச்சாரங்களை இராணுவ ஆக்கிரமிப்புகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டோம். அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சர்வதேச சட்டங்களை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் விதிகளைத் துச்சமாகக் கருதும் போக்கு பொஸ்னியாவிலும் கொஸோவோவிலும்தான் தொடங்கப்பட்டது (ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் : எஸ்.வி. ராஜதுரை : எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009)

2009 ஆம் ஆண்டு இப்படிச் சொல்வதற்கான தெளிவுகளை அவர் 2007 ஆம் ஆண்டு எழுதிய மனிதாபிமான ஏகாதிபத்தியம், தேசிய விடுதலை நூலிலும் குறிப்பிடுகிறார்:

யூகோஸ்லேவியாவின் உடைவுக்கு உள்நாட்டுக்காரணிகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. அதே வேளை வெளிக் காரணிகளான ஏகாதிபத்தியத் தலையீடு, நேட்டோ படைகளின் ராணுவத் தாக்குதல்கள் ஆகியன குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளன ………….. செர்பியர்களோ செர்பிய அரசியல் தலைவர்களோ குற்றம் ஏதம் இழைக்காதவர்கள் களங்கமற்றவர்கள் என்று நிறுவமாட்டோம். முற்றாக அவர்கள்மீது கொடுங்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அந்தக் குற்றச் செயல்களுக்குப் பலியானவர்கள் எனத் தங்களைக் கூறிக் கொண்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடக் கொடூரமான குற்றந்களைச் செய்தவர்கள் ஏகாதிபத்தியத்தின் அடியாட்களாகச் செயல்பட்டவர்கள் என்பதனைத் தாக்க சான்றுகளுடன் காட் முனைவோம் (மனிதாபிமான ஏகாதிபத்தியம், தேசிய விடுதலை : 2007 : பக்கம் 21).

இப்படியெல்லாம் ஏகாதிபத்தியம் குறித்த எச்சரிக்கை உணர்வு கொண்டவர், இனக்கொலை புரிந்தவர்களை விடவும் கொலை புரிந்தவர்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்றெல்லாம் பிரக்ஞை கொண்ட எஸ.வி.ராஜதுரை, அவர் வெறுக்கிற ஏகாதிபத்திய நிதி ஆதாரம் குறித்த அனைத்து அவதானங்களையும் உதறித்தள்ளிவிட்டு, அதே ஏகாதிபத்திய நிதி உதவி பெறும், இலங்கையில் அரச சார்பு அரசியல் நடத்துவர்களின் இணக்கம் பேணும் தன்னார்வ நிறுவன மாநாட்டில் சென்று உரையாற்றுவது என்பது ஒரு சர்வதேசியரும் ஏகாதிபத்திய ஆபத்து குறித்தும் பிரக்ஞை கொண்ட மார்க்சியர் தேர்கிற செயல்தானா? எஸ்.வி.ராஜதுரை இதுவரை பேசிவந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இது மிகப் பெரும் வீழ்ச்சி என்பதனை அசோக் யோகன் தெளிவாகச் சுட்டிக்காட்டினார் :

தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். ஐ.என்.எஸ்.டி. எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட்போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது. ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளில் இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது. உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள். மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டி.யின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி. தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி. இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு. இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி. இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டி.யின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது……

…..உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள் நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள். மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை……

……இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன். இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? (எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும் : அசோக் யோகன் : கீற்று இணையதளம ;: 9 அக்டோபர் 2009)

ஐ.என்.எஸ்.டி. எவாஞ்ஜலிக்கா அககாதமியாயுடன் என்ன உறவுகளை வைத்திருக்கிறது? ஐ.என்.எஸ்.டி. ஜெர்மனி பெடரல் ஏஜென்சியுடன் என்னவிதமான நிதி சார்ந்த உறவு கொண்டிருக்கிறது? இலங்கை அரசு பாசிச அரசு என ஐ.என்.எஸ்.டி. கருதுமானால் எவ்வாறு அவர்கள் நடத்திய கருத்தரங்கில் இலங்கை அரசின் தூதுவர் கலந்து கொள்வார்? ( எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள் : அசோக் யோகன் : கீற்று இணையதளம் : 8 நவம்பர் 2009)

விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் குறித்த விமர்சனங்களைக் கொண்டிருப்பது வேறு. அவர்களது எதிர்கால திசைவழி குறித்த மாறுபட்ட கருத்துக்களையும் நாம் தெரிவிப்பது வேறு. மாறாக, இலங்கை அரசுக்கும், அதனோடு இணக்க அரசியல் செய்வோருக்கும் ஆதரவான நிலைபாடு எடுப்பது வேறு. விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறலை விமர்சிப்பது வேறு. இனக்கொலையே நடக்கவில்லை என்று பேசுபவர்களுடன் சேர்ந்து நிற்பது வேறு. விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றியதனைக் கண்டிப்பது வேறு, அதற்காக அவர்களை இந்துத்துவவாதிகள், சாதியவாதிகள் என அவதூறு செய்பவர்களுடன் கைகோர்த்து நிற்பது வேறு. முன்னால் தான் வலியுறுத்தி வந்த பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணயம் எனும் லெனினியக் கோட்பாட்டைக் கைவிடுவதும் வேறு.

தமிழ்மக்கள் ஆயிரக் கணக்கில் உயிர் உடைமைகளை இழந்தபோது இந்த இரு கட்சிகளுக்கும் சர்வதேச உணர்வு பிறக்கவேயில்லை. தமிழ் மக்கள் சர்வதேச உணர்வு காட்டப்படுவதற்குத் தகுதியற்றவர்கள் என்று அந்த இரு கட்சிகளும் கருதின போலும்!

விடுதலைப் புலிகள் மீது நம்மைப் போன்றோருக்கும் அரசியல் கருத்துநிலை விமர்சனங்கள் உள்ளன. அவர்கள் தற்சமயம் அடைந்துள்ள பின்னடைவுகளுக்கு இராணுவக் காரணங்களல்ல, அரசியல் காரணங்களே முதன்மையானவை என்னும் கருத்து நமக்கு உள்ளது. ஆனால் இரண்டரை இலட்சம் (அல்லது அவரவர் வசதிக்கேற்பஇந்த எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம்) தமிழ் மக்களைத் துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறார்கள் என்பதை மட்டுமீறிய தயக்கத்ததுடனேயே ஏற்றுக் கொள்ள முடியும் (எஸ்.வி.ராஜதுரை : ஈழப் போராட்டமும் தேசபக்தியும் கம்யூனிஸ்ட்டுகளும் : இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரை : பக்கங்கள் 13-14 : பிப்ரவரி 2009).

2009 பிப்ரவரி மாதம் இருந்த ராஜதுரையின் புரட்சிகரக் குரல் 2009 மே முள்ளி வாய்க்கால் பேரழிவின் பின் தமது முன்னைய நிலைபாடுகள் அனைத்தையும் மறுத்த, ஈழச் சூழலைப் பொறுத்து இலங்கை இனக்கொலை அரசுடன் இணக்கம் காணுபவர்களுடனான ஆதரவு அரசியலாக மாறுகிறது. ராஜதுரையிடம் நேர்ந்த இந்த மாற்றத்திற்கான மெதுமெதுவான தர்க்கங்கள் எதனையும் அவரது எழுத்துக்களுக்கும் நடைமுறைக்கும் இடையில் காணமுடியவில்லை என்பதுதான் மிகப் பெரும் துரதிருஷ்டம்.

லெனின் கூறியது போல், ஒரு நாட்டின் புரட்சிக்கு உறுதியுடனும் முழுமையாகவும் பாடுபடுவதும், அதே சமயம் பிற நாடுகளின் புரட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – இது வெறும் சொற்கள், முழக்கங்கள் என்றளவிலல்ல – செயலளவிலான ஆதரவு தருவதுதான் சர்வதேசியம் (மார்க்சியம்-பெரியாரியம்-தேசியம் : ஜூலை 2007 : விடியல் பதிப்பகம்)

இப்படிச் சொல்கிற இதே ராஜதுரைதான் தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பது குறித்துச் சொல்லிவரும்போது இதனையும் சொல்கிறார் :

எந்த ஒரு தேசியப் போராட்டத்தையும், அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது எனும் ஒரு காரணத்துக்காக, மாரக்சிய-லெனினியவாதிகள் ஆதரிக்க வேண்டியதில்லை, ஆதரிக்கவும் கூடாது. எடுத்துக்காட்டாக காலிஸ்தான் போராட்டம். பஞ்சாப்பிலுள்ள தலித்துக்களையும் புரட்சியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒழித்துகட்டிய அந்தப் போராட்டத்தை மாரக்சிய லெனினியவாதிகளில் சிலர், அது இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்னும் காரணம் காட்டி அதனை ஆதரித்தது உண்மைதான். பிறகு அவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டனர். அதே போல பிற மாநிலங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீதும் தமது சொந்த மாநிலத்திலுன்ள பிற பழங்குடியினர் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் உல்பா இயக்கத்தையும் மார்க்சிய லெனினியவாதிகள் ஆதரிக்கக்கூடாது (மார்க்சியம்-பெரியாரியம்-தேசியம் : பக்கங்கள் 98-99.100 : ஜூலை 2007 : விடியல் பதிப்பகம்)

இதுதான் எஸ்.வி. ராஜதுரையின் எழுத்துப் பாணி. மேற்கோள்களாலும், வேறுபட்ட உதாரணங்களாலும் நிறைந்திருக்கும் அவரது நூற்களை நாம்தான் மௌன இடைவெளிகளை வாசித்ததின் பின்பு மறைபொருள்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஈழ தேசிய விடுதலைப் போராட்ட உச்சத்தில் இருந்தபோது, அதில் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளின் தலையீடு வந்தபோது, அவர் 2007 ஆம் ஆண்டு மனிதாபிமான ஏகாதிபத்தியம் தேசிய விடுதலை பற்றிய நூலை எழுதுகிறார். விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசம்போதுதான் அவர் காலிஸ்தான், உல்பா இயக்கங்கள் பற்றிப் பேசுகிறார். அவரது தர்க்கங்களின்படி அவர் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதும் ஆதரிக்காமல் போவதும் அவரது உரிமை. அதற்காக இலங்கை அரசு இணக்க அரசியல் செய்பவர்களோடும், ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கடுமையாகப்பேசிக் கொண்டு ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவன நிதியோடு நடத்தப்படும் மாநாடுகளில் சிறப்புரையாற்றுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனக்கொலை அரசு எதிர்ப்புப் புரட்சிகர நிலைப்பாடு என்று சொல்ல முடியாது.

ஈழக் கோட்பாட்டாளர் மு.திருநாவுக்கரசு தன்னுடைய ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் நூலில் (தமிழியல்-காலச்சுவடு பதிப்பகம் : 2008 மற்றும் 2009) இவ்வாறு குறிப்பிடுகிறார் :

ஒடுக்கப்படும் இனங்களைப் பொறுத்தவரையில் அத்தகைய மக்கள் திரளுக்கான ஜனநாயகமே முதலில் ஸ்தாபிதம் பெற வேண்டியதாகும். அந்த ஜனநாயகத்திற்கு அரசுகள் பணிய நேர்கின்றது. ஏனெனில் மக்கள் திரளில்தான் அரசுகள் உயிர் வாழ வேண்டியிருப்பதால், ஒடுக்கப்படும் இனங்கள் தமது இன அடையாளத்தின் பெயரால் ஆன ஜனநாயக உருவாக்கத்தின் மூலமே அரசுகளைப் பணிய வைக்க முடியும். தமிழீழ மக்கள் தமது விடுதலைக்காகத் தம்மை ஒரு மக்கள் திரளாகக் கொண்டு தமிழக மக்கள் திரளைப் பயன்படுத்தி இந்திய மத்திய அரசைப் பணிய வைத்து தமிழீழ விடுதலையை ஸ்தாபிக்க வேண்டும். தமிழக மக்களால் இந்திய மத்திய அரசைப் பணிய வைக்க முடியும்போது இந்திய மத்திய அரசுக்கு உலக அரசுகள் தலை சாய்க்க வேண்டிய நிலை நிலவும்.

ஈழவிடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவற்கான ஒரு தந்திரோபாயமாக மு, திருநாவுக்கரசு இதனை முன்வைக்கிறார். உள்ளக நிலைமையில் ஈழத்தமிழ் மக்கள்திரள் ஜனநாயக அரசியலை அவர் முன்வைக்கிறார். புறநிலையில் பிராந்திய அரசியல் யதார்த்தங்களைக் கவனம் கொண்டு, தமிழக மக்கள் திரளைப் பயன்படுத்தி இந்திய அரசைப் பணியவைப்பது, அதன் மூலம் உலக அரசுகளைத் தலைசாய்க்க வைப்பது என்பதனை அவர் முன்வைக்கிறார்.

இது குறித்து எஸ்.வி.ராஜதுரை ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார் :

இந்த நூல் நெடுக, மார்க்ஸிய ஆய்வு முறையையே மேற்கொண்டுள்ளதாகக் கூறும் நூலாசிரியர், அந்த அணுகுமுறையை மேற்சொன்ன வரிகளுக்கும் பிரயோகித்துப் பார்க்க வேண்டும் என்பதே நமது அவா. தமிழீழ மக்கள், தமக்கான நேசச்சக்திகளை, தமிழகத்திலும் கொஸோவோவிலும் தேடுவதற்கு முன் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே தேட முயல வேண்டும். ஒடுக்கப்படும் விடுதலைக்கான குறுக்கு வழி ஏதும் இல்லை. பெரிய அண்ணன்களை நாடுவது புதிய அடிமைத்தனத்துக்குக் கொண்டு சென்று விடும் (ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் : எஸ்.வி. ராஜதுரை : எதுவரை? : 2 செப்டம்பர் – அக்டோபர் 2009).

திருநாவுக்கரசு கொஸோவாவில் நேச சக்திகளைத் தேட வேண்டும் எனச் சொல்லவேயில்லை. எஸ்.வி.ராஜதுரை கொஸாவா ஒப்பீட்டைக் கொண்டு வருவதன் மூலம் அவர் 2007 ஆம் ஆண்டு எழுதிய மனிதாபிமான ஏகாதிபத்தியம்,தேசிய விடுதலை நூலில் அவர் முன்வைக்கும் கருத்தாக்கத்தினை இங்கு கொண்டு வருகிறார். இங்கு இந்திய அரசின் ஆதரவை மு.திருநாவக்கரசு கோரவில்லை. ஈழ மக்களுக்குச் சார்பாக இந்திய அரசை நிர்ப்பந்திப்பதற்கான தமிழக மக்கள் திரள் அரசியலையே மு. திருநாவுக்கரசு கோருகிறார். இன்றைய உலக அரசியல் நிலைமையில் உள்ளக மற்றும் புறநிலை சர்வதேசிய அரசியல் நிலைமைகளுக்கு ஒப்பத்தான் அரசியலை முன்னெடுக்க முடியும். பெரிய அண்ணன்களை எதிர்பார்த்து நிற்கும் அரசியலை திருநாவுக்கரசு பேசவில்லை. மாறாக, ஈழத்தில் மக்கள்திரள் ஜனநாயக அரசியலை முதலாகவும், தமிழகத்தில் இந்திய அரசு எதிர்ப்பு மக்கள்திரள் அரசியலையும் அவர் கோருகிறார். இலங்கை அரசு இதேவிதமான இரட்டை தந்திரோபாயத்தைத்தான் பாவிக்கிறது. ஈழப் பிரச்சினையைப் பொறுத்து இந்தியாவை மீறி இந்தப் பிராந்தியத்தில் எவரும் தலையிடமுடியாது. ஈழப் பிரச்சினையின் சர்வதேசியப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள நோர்வே அறிக்கையை ராஜதுரை வாசிப்பது நல்லது. சீனாவைத் தமிழக மக்கள்திரள் ஏதும் செய்ய முடியாது. அமெரிக்காவை-மேற்கத்திய நாடுகளை தமிழக மக்கள்திரள் அரசியல் ஏதும் செய்ய முடியாது. ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்கள்திரள் அரசியல் ஏதும் செய்ய முடியமானால், அது தாம் வாழும் இந்திய நிலப்பரப்பில் தமக்குள்ள அரசியல் சக்தியின் மூலம்தான் செய்ய முடியும்.

திருநாவுக்கரசு உள்ளக வெளியக நிலைமைகளில் மக்கள்திரள் அரசியல் எனப் பேசும்போது, இதனைப் பெரியண்ணன்களை எதிர்பார்க்கும் அரசியல் எனக் கொச்சைப்படுத்துவது அபத்தம்.. எல்லாவற்றையும் விட வேடிக்கையானது. இல்லாத சிங்கள-ஈழத்தமிர்-முஸ்லிம் ஒற்றுமை பற்றிக் கனவு காணும் ராஜதுரை, யதார்த்தத்தில் இருக்கும் தமிழகத் தமிழர் ஆதரவை எங்கேயோ இருக்கும் கொஸோவர்களுடன் ஒப்பிடுவது அரசியல் நாகரீகமாக இல்லை.

http://yamunarajendran.com/?p=1753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.