Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​

வீ. தனபாலசிங்கம்

- on January 3, 2015

10888950_579745308825952_810436751319026

படம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன என்று எவரும் கூறமாட்டார்கள். அவ்வாறு எவராவது கூறினாலும் கூட, யாருமே நம்பப் போவதுமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகள் குறித்தோ அல்லது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவமய சூழ்நிலையின் கீழ் மக்கள் அனுபவிக்கவேண்டியிருக்கின்ற இடர்பாடுகளுக்கு முடிவைக்கட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்தோ மைத்திரிபால முகாம் எந்தவிதமான உருப்படியான உறுதிமொழியையும் வழங்காத நிலையிலேயே கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் அவற்றின் ஆதரவை வழங்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தகையதொரு நிலைப்பாட்டுக்கு இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான கூட்டமைப்பும், முஸ்லிம்களின் பிரதான அரசியல் அணியான முஸ்லிம் காங்கிரஸும் ஏன் வரவேண்டியிருந்தது? வேறு நிலைப்பாடுகளை எடுப்பதற்கு ஏதுவாக அவற்றுக்கு மாற்று வழிகள் இருந்தனவா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் வேண்டுமானால் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு முறையே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கவோ அல்லது மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கேட்டிருக்கவோ முடியுமேயன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்பது பற்றி நினைத்துப்பார்த்திருக்கவே முடியாது என்பதில் சந்தேகமில்லை. கடந்த 9 வருடகாலத்தில் ராஜபக்‌ஷ நிருவாகம் கடைப்பிடித்த கொள்கைகளும் அணுகுமுறைகளும் தேசிய சிறுபான்மையினங்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாசைகளுக்கும் பாதுகாப்புக்கும் பேராபத்தைத் தோற்றுவிக்கின்ற பேரினவாத அரசியல் கலாசாரமொன்றை மேலோங்கச் செய்திருக்கின்றன. அதன் விளைவாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அரசின் மீது கடுமையாக வெறுப்புற்றிருக்கிறார்கள்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை நோக்கி ஆரோக்கியமான அரசியல் சமிக்ஞையைக் காண்பிக்கக்கூடிய பயனுறுதியுடைய செயற்பாடுகளில் இறங்குவதற்குப் பதிலாக, ராஜபக்‌ஷ நிருவாகம் அந்த மக்களை மேலும் இடர்பாட்டுக்குள்ளாக்கக் கூடியதாக இராணுவவாத அரசியலை முன்னெடுத்து, அவர்களை அரசியல் செயன்முறைகளில் இருந்து புறந்தள்ளி வைக்கும் கொள்கைகளிலும் செயற்திட்டங்களிலுமே தீவிர அக்கறை காட்டிவந்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்து ஐந்தரை வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையிலும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பு சூழ்நிலையின் கீழேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இராணுவமயத்தில் தளர்வைச் செய்யவேண்டுமென்பது தமிழ் மக்களின் இடையறாத கோரிக்கையாக இருக்கிறது. அந்தக் கோரிக்கையை முற்றாகவே அலட்சியம் செய்யும் அரசின் ஆட்சி நிருவாகச் செயற்பாடுகள் சகலவற்றிற்குள்ளும் இராணுவமயத்தை வியாபிப்பதிலேயே குறியாக செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு இணக்கபூர்வமான தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியம் பற்றி தென்னிலங்கை அரசியல் சமுதாயம் கிஞ்தித்தும் பிரக்ஞையின்றி இருக்கக்கூடியதான ஒரு போக்கையே அரசு ஊக்கப்படுத்தி வளர்த்திருக்கிறது.

இத்தகையதொரு பின்புலத்திலேயே கடந்த சில வருடங்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான குரோதப் பிரசாரங்களும் வன்முறைகளும் சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பொதுபல சேனா போன்ற காலத்துக்கொவ்வாத அரசியல் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்துகின்ற இந்தத் தீவிரவாத சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ நிருவாகம் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காமல் மெத்தனமான போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறது. தங்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற சிங்கள தீவிரவாதச் சக்திகளுக்கு ராஜபக்‌ஷ நிருவாகம் அனுசரணையாக இருக்கிறது என்று இது இயல்பாகவே முஸ்லிம் மக்களை நம்பவைத்தது.

மேலும், ஏற்கனவே இயங்கிவந்திருக்கக் கூடிய சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்குப் புறம்பாக, புதியதாக பல தீவிரவாத இயங்கங்களும் அண்மைக்காலமாக தோற்றம் பெற்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலும் பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய இந்த இயக்கங்கள் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான முற்றிலும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றன. நாட்டின் சட்டத்திலிருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று இவர்கள் செய்கின்ற அடாவடித்தனங்களை அரசு வேண்டுமென்றே அனுமதிக்கின்றது என்றுதான் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மாத்திரமல்ல, நியாயபூர்வமாக சிந்திக்கின்ற சிங்களவர்களும் நம்புகிறார்கள். இந்தச் சக்திகளின் செயற்பாடுகளினால் அண்மைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் மக்களே.

ஏறத்தாழ முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே ராஜபக்‌ஷ அரசில் அங்கம் வகித்து வந்தபோதிலும், நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் மக்கள் அரசின் மீது முன்னென்றுமில்லாத அளவுக்கு கடுமையாக வெறுப்புற்றிருக்கிறார்கள். தலைவர்கள் எடுத்திருக்கக்கூடிய தீர்மானம் எதுவாக இருந்தாலும் முஸ்லிம் மக்கள் அரசிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றதொரு சூழ்நிலை உருவாகியிருந்த பின்புலத்திலேயே முஸ்லிம் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறி எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றன. தொடர்ந்தும் அரசில் இருந்து பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டால், அடுத்துவரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களை நிராகரித்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் தெளிவாக உணர்ந்த நிலையிலேயே எதிரணி பக்கம் வருவதற்கான தீர்மானத்தை எடுத்தார்கள் என்பதிற் சந்தேகமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை அறிவித்த பிறகு ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களும் முன்னெடுத்திருக்கின்ற தீவிர எதிர்ப்பிரசாரங்கள் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டிய அவசியம் குறித்து அரசிற்கு இருந்திருக்கக்கூடிய உணர்வின் இலட்சணத்தை பிரகாசமாக அம்பலப்படுத்தி நிற்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் மைத்திரிபால முகாம் சேர்ந்து நிற்பதால் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படப் போகின்றது என்றும் – மீண்டும் பிரிவினைவாதமும் தமிழ்த் தீவிரவாதமும் தலையெடுக்கப்போகின்றன என்றும் – ஆளும் கட்சியினர் தேர்தல் மேடைகளில் கூறுகின்றார்கள். போரின் முடிவுக்குப் பிறகு ஒருபோதுமே தனி ஈழக்கோரிக்கை பற்றிப் பேசாமல், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பயனுறுதியுடைய அரசியல் இணக்கத் தீர்வொன்றே தங்களது இலட்சியம் என்று நாட்டுக்கும் உலகிற்கும் பிரகடனம் செய்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தென்னிலங்கை அரசியல் சக்திகள் இணக்கப்போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்பதா அரசின் நிலைப்பாடு?

மறுபுறத்திலே, சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் இணக்கப்போக்கைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும் – ஜனநாயக ரீதியாகச் செயற்படுகின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் – பதிற்கேள்வியெழுப்பி மைத்திரிபால சிறிசேன முகாம் உறுதியான முறையில் சிங்கள மக்கள் மத்தியில் ஆரோக்கியமான பிரசாரத்தை முன்னெடுக்கத் தயாரில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இன்னொரு முக்கியமான விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு எடுத்த முடிவு ஆளும் கட்சியையும் அதன் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகளையும் மாத்திரம் அல்ல, தமிழர்கள் மத்தியில் இருக்கக் கூடிய தீவிரவாத போக்குடைய அரசியல் சக்திகள் சிலவற்றையும் கூட சீற்றமடைய வைத்திருக்கின்றது. தமிழ்த் தீவிரவாதிகள் தமிழ்மக்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் நிராகரிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். சிங்களத் தீவிரவாதிகள் தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாமல் இருந்தால் அதனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அனுகூலமடையக் கூடியதாக இருக்குமென்று எதிர்பார்க்கிறார்கள். இரு தரப்பு தீவிரவாதிகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காக இத்தகைய நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்ற போதிலும், அவர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், அது எந்தப் புள்ளி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் வாக்குகள் 2015 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் வகிக்கக்கூடிய பாத்திரம் எதுவாக இருந்தாலும், இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்களும் குழுக்களும் ராஜபக்‌ஷ அரசுக்கு எதிராகவே பெரும்படியாகத் திரும்பியிருக்கின்றன என்ற செய்தி தெளிவாக உலகிற்கு கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் எதிரணியின் பொதுவேட்பாளருக்கு அளிக்கின்ற ஆதரவு குறித்து ஆளும் கட்சியினர் தீவிரப்படுத்தியிருக்கின்ற நச்சுத்தனமான பிரசாரங்கள், இலங்கையில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்த ராஜபக்‌ஷ அரசின் அக்கறையின் இலட்சணத்தை மீண்டும் உலகிற்கு அம்பலப்படுத்தி நிற்கின்றன.

இரு பிரதான வேட்பாளர்களில் எவருமே தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதனால், இருவரில் எவருக்குமே வாக்களிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற வாதம் ஒருபுறத்தில் முன்வைக்கப்படுகிறது. புதிய ஆட்சியாளர் வருவதனால் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கப்போவது என்ன என்பது பற்றிச் சிந்திப்பதில் தவறு இல்லை. ஆனால், தற்போதைய ஆட்சியாளரே தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் எத்தகையவையாக இருக்கும் என்பதை அசைபோட்டுப் பாராமல் எவ்வாறு இருக்கமுடியும்? கடந்த சுமார் ஒரு தசாப்தகால அவலங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குவதும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வரலாற்றில் இருந்து பாடங்கள் படிக்கப்படுவதில்லை என்பதே வரலாற்றிலிருந்து நாம் படித்தபாடமாக இருக்கக்கூடாது.

http://maatram.org/?p=2622

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.