உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி
பட மூலாதாரம்,Instagram mirzapur.police
படக்குறிப்பு,மிர்சாபூர் எஸ்பி அபர்ணா ரஜத் கௌசிக்
கட்டுரை தகவல்
சையத் மௌஜிஸ் இமாம்
பிபிசி செய்தியாளர்
21 மார்ச் 2026
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா ரஜத் கௌஷிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார்.
இந்த வீடியோவில், காவல் கண்காணிப்பாளர் விளக்கும் விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அவரின் உருவம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மிர்சாபூர் காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா கௌஷிக்கின் செய்தியாளர் சந்திப்பு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர்.
ஐந்து நாட்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ 47 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 65,000 கமெண்டுகளை பெற்றுள்ளது.
காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் தோற்றம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
உருவக் கேலி தொடர்பான இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, காவல்துறை அந்தப் பதிவில் கமெண்ட் இடும் பகுதியை முடக்கியது.
இந்த விவகாரம் குறித்து அபர்ணா ரஜத் கௌஷிக்கைத் தொடர்பு கொள்ள பிபிசி முயற்சித்தது, ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அலுவலகப் பணிகளில் மும்முரமாக இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, உடல் தோற்றத்தை இழிவுபடுத்துவது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.
சமூகம் எந்த அளவுக்குப் பண்பாடற்றதாகிவிட்டது?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதிலாக, பெரும்பாலான சமூக ஊடகப் பயனர்கள் காவல் கண்காணிப்பாளரின் உருவம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அமேதியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் தீபக் சிங், சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகளைக் கண்டித்துள்ளார். மேலும், இது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அபர்ணா ஜி அமேதியில் இருந்தபோது அவரைப் பலமுறை சந்தித்துள்ளோம். அவர் மிகவும் யதார்த்தமான பெண்மணி. ஓர் அதிகாரியைப் பற்றிய கருத்துகள் அவர்களின் வேலையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் இருக்கக்கூடாது. இப்போது பகிரப்படும் கருத்துகள் சரியானவை அல்ல," என்றார்.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூக ஆர்வலருமான ரூப் ரேகா வர்மா, "சமூகம் மிகவும் பண்பாடற்றதாக மாறிவிட்டது" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் மற்றும் பொதுமக்களில் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு பெண், இது போன்ற அநாகரிகத்திற்கும் இழிவான மொழிக்கும் ஆளாக்கப்பட்டு, அவரது கண்ணியம் புண்படுத்தப்பட்டால், சமீப காலங்களில் நமது சமூகம் எவ்வளவு தூரம் வீழ்ந்துள்ளது என்பதையும், அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது," என்றார்.
"ஒருவர் மற்றொருவரை எப்படிப் பார்க்கிறார் என்பது அந்த நபரின் பார்வையைப் பொறுத்தது," என்றும் ரூப் ரேகா வர்மா கூறுகிறார்.
இந்தச் சிக்கல் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா ரஜத் கௌஷிக்கோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதேபோல், பெண்கள் மட்டும் குறிவைக்கப்படுவதில்லை.
நமது உயரம், நிறம் அல்லது உருவம் குறித்து சமூக ஊடகங்களிலோ அல்லது அன்றாட வாழ்விலோ நாம் அனைவரும் ஏதோ ஒன்றைக் கேட்டிருப்போம்.
அன்றாட சமூகத்தின் ஒரு பகுதி
2019-ஆம் ஆண்டு ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, உருவக் கேலி என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்பதை வெளிப்படுத்தியது.
இந்தப் பிரச்னை சமூக ஊடகங்களில் மட்டும் காணப்படுவதில்லை, மாறாகப் பள்ளிகளிலும் பணி இடங்களிலும் பெரிய அளவில் காணப்படுகிறது.
இந்தக் கணக்கெடுப்பின்படி கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் இந்த எதிர்மறையான கருத்துகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமிருந்தும் வருகின்றன.
கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 47.5 சதவீதப் பெண்கள் பள்ளி அல்லது வேலை இடங்களில் உடல் உருவக் கேலியை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டிய இடங்கள், சில நேரங்களில் சங்கடமானதாகவும் மன ரீதியாகச் சவாலானதாகவும் மாறக்கூடும் என்பதை இது காட்டுகிறது.
அதே நேரத்தில், 32.5 சதவீத வழக்குகளில் எதிர்மறையான கருத்துகள் அறிமுகமில்லாதவர்களால் அல்லாமல் நெருங்கிய நண்பர்களால் தெரிவிக்கப்பட்டன என்பது இந்தக் கணக்கெடுப்பின் மற்றொரு உண்மையாகும்.
உடல் உருவக் கேலி என்பது வெறும் வெளிப்புறச் சமூக நடத்தை மட்டுமல்ல, அது நமது அன்றாட உறவுகள் மற்றும் உரையாடல்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது என்பதை இந்தக் கணக்கெடுப்பு காட்டுகிறது.
எடை, உடல் அமைப்பு, தோல் நிறம் மற்றும் முடியின் தரம் போன்ற அம்சங்கள் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒரு நபரின் தன்னம்பிக்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
லக்னோவில் உள்ள யூனிட்டி பிஜி கல்லூரியின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலி என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல, அது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் பொறுப்பான நடத்தை போன்றவை அவசரமாகத் தேவைப்படும் ஒரு பரவலான சமூகப் பிரச்னை" என்றார்.
ஷம்சி அக்பரின் கூற்றுப்படி, "உடலைப் பற்றிய இழிவான கருத்துகளைத் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம், ஒரு நபரின் சுயமரியாதை படிப்படியாக உடையத் தொடங்குகிறது. அவர் தன்னை மற்றவர்களை விடத் தாழ்ந்தவராகக் கருதத் தொடங்குகிறார் மற்றும் அவருக்குள் தாழ்வு மனப்பான்மை வேரூன்றுகிறது."
சட்டம் என்ன சொல்கிறது?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழக்கறிஞர் சைமா கான் கூறுகையில், அபர்ணா ரஜத் கௌஷிக் போன்ற ஓர் அதிகாரி மீதே இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்றால், சாதாரண பெண்களுக்கு ஆன்லைன் தளம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒரு பெண்ணின் உடல் தோற்றம் குறித்து அநாகரிகமான, இழிவான அல்லது ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பது, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். இது சட்டப்படி குற்றமாக கருதப்படலாம்." என்றார்.
சைமா கானின் கூற்றுப்படி, "இது போன்ற இணையக் கேலி மற்றும் உடல் உருவக் கேலிக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம், அப்போதுதான் ஒரு மூத்த பெண் போலீஸ் அதிகாரியின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமல்லாமல், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்."
உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
பேராசிரியர் ஷம்சி அக்பர் கூறுகையில், "உருவக் கேலியை எதிர்கொள்பவர்களுக்குப் பதற்றம் , மனச்சோர்வு மற்றும் குறைந்த சுயமரியாதை போன்ற பிரச்னைகள் உருவாகலாம். பல சந்தர்ப்பங்களில், இந்த நிலை 'பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர்' வடிவத்தை எடுக்கிறது, இதில் அந்த நபர் தனது உடலைப் பற்றி மிகவும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார். இதன் காரணமாக, அவர் மீண்டும் மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்கிறார், மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார் மற்றும் ஒருபோதும் திருப்தியடைவதில்லை," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினை ஈட்டிங் டிஸார்டர் போன்ற ஆபத்தான நடத்தைகளுக்கும் வழிவகுக்கும், அங்கு ஒரு நபர் தனது உடலை மாற்றிக்கொள்ள ஆரோக்கியத்திற்குப் புறம்பான முறைகளைக் கையாளத் தொடங்குகிறார்"என்றும் விளக்கினார்.
அபர்ணா ரஜத் கௌஷிக்கின் பின்னணி
பட மூலாதாரம்,Instagram mirzapur.police
படக்குறிப்பு,உடல் உருவக் கேலி ஒரு நபரின் மீது நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த அபர்ணா ரஜத் கௌஷிக், 2015-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி .
உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக அவர் எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர் அபர்ணா ரஜத் கௌஷிக்.
அவர் ஐபிஎஸ் அதிகாரியாவதற்கு முன்பு, குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஐபிஎஸ் அதிகாரியான பிறகு, உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றினார்.
அதன் பிறகு அமேதியில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். கஸ்கஞ்ச் மற்றும் அவ்ரையா போன்ற மாவட்டங்களிலும் அவர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், லக்னோவில் துணைக் காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரயாக்ராஜ் என்ஐடி-யில் பி.டெக் முடித்துள்ளார் அபர்ணா ரஜத் கௌஷிக்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c4gl9pnrqlwo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.