Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குள் M.G.R.! – ஒரு X – Ray தொடர் – கவிஞர் வாலி

Featured Replies

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி சிறப்புத் தொடர்

 

'துக்ளக்'கின் பக்கங்களிலிருந்து..

நன்றி> https://sundakka.wordpress.com/tag/எம்-ஜி-ஆர்/

 

1.கொசுவும், யானையும்!

 

enakkul_12_jan_2012_zps35872658.jpg

 

ரையும் ஆட்டுவிப்பதும்

ஆட்டுவித்து அடுத்தவரோடு கூட்டுவிப்பதும்

கூட்டுவித்துக் கொஞ்சிக்குலாவிப் பாட்டுவிப்பதும்

பாட்டுவித்துப்பின் பாசபந்தத்தைக் காட்டுவிப்பதும்

காட்டுவித்துப்பின் கட்டுண்டு ஒட்டிய உறவுகளை விடுவித்து ஓட்டுவிப்பதும்.... 

 

வல்லான் வகுத்த வாய்க்கால்களே அல்லாது - இவை எவரால் ஆவது? இவை குறித்து எவரை நோவது? இணக்குகள்; பிணக்குகள் - காலம் போடும் கணக்குகள். காலம் வேறு கடவுள் வேறு அல்ல; கடவுளுக்கே காலாந்தகன் என்ற பெயருண்டு! காலமோ, கடவுளோ - எம்.ஜி.ஆர். நாக்கில் அமர்ந்து, என்னைப் பற்றி அன்னணம் பேச வைத்து விட்டது! உடனே - ஒரு சில பத்திரிகைகள் என் மேலே விழுந்து, பிறாண்டிப் பிடுங்கின.‘பலே பாண்டியாபடப் பாட்டைக் கட்டம் கட்டிப் போட்டன.

 

யாரை எங்கே 

வைப்பது என்று 

யாருக்கும் தெரியலே! - அட

பீடிகளுக்கும் 

ஊதுவத்திக்கும் 

பேதம் புரியலே!’

 

தமிழ் சினிமாதிரு.கரீம் அவர்களும்; ‘மதிஒளிதிரு. சண்முகம் அவர்களும் - காங்கிரஸ் சார்பாகவும், கண்ணதாசன் சார்பாகவும் கச்சை கட்டிக் கொண்டு நின்று - என்னை வசை பாடித் தீர்த்தார்கள்! ‘கற்கண்டுக்கு மாற்று 

காஞ்சிரங்காயா?’ 

கட்டிப் பொன்னுக்கு மாற்று 

காக்காய்ப் பொன்னா?’ 

தளதள மேனியில், தகதகவெனப் பட்டுச் சட்டை பொன்னென அவிர - தலையணையில் சாய்ந்தவாறு, தளிர் விரல்களுக்கிடையே சிகரெட்டைச் செருகிக் கொண்டு - நொடிக்கொரு பல்லவியை, நுண்மாண் நுழைபுலத்தோடு - உதடுகள் வழி உமிழ்ந்த வண்ணம் - கோடம்பாக்கத்தில் கோலோச்சும் கவியரசு கண்ணதாசனுக்கு மாற்று - கோலெடுத்தால் ஆடும் குரங்கா? நூலோரும் மேலோரும் நீர் வார்த்து வளர்த்த வண்ணத் தமிழ்ச் சோலையில், வாலியெனும் வானரத்தை விளையாட விட்டு, விஷப் பரீட்சை பார்க்கிறார் எம்.ஜி.ஆர்; பூணூலைக் கொண்டு போர்வாளை வீழ்த்தலாம் எனும் எம்.ஜி.ஆரின் நப்பாசை, தப்பாசையாகப் போகிறது.

 

இனி - அவரை வைத்துப் படமெடுக்கும் படாதிபதிகள் - காஷாயம் கட்டும் மடாதிபதிகளாகி, இல்லந்தோறும் இரந்துண்டு வாழ்வார்கள்.’ - இப்படியெல்லாம் திரு.அவிநாசி மணி அவர்களும், திரு.பஞ்சு அருணாசலம் அவர்களும் - தங்கள் வார்த்தை வாணலியில் போட்டு என்னைத் தாளித்து எடுத்தார்கள்

 

படகோட்டிபடத்தின் அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பரவி - பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது - என் அன்பிற்குரிய நண்பர் திரு.சின்னஅண்ணாமலை அவர்கள், ‘பனகல் பார்க்அருகே நடந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் - ‘சில நேரங்களில், நொண்டிக் குதிரைகளும் கிண்டி ரேஸில் - Nose Finishing- ல் ஜெயிப்பதுண்டு. வாலி, அப்படித்தான்!’ என்று ஆரூடம் கூறிஅப்ளாஸ்களை அள்ளினார்

 

ஆனால் - ‘தென்றல் திரைநடத்திய என் நண்பர் திரு.கே.ஆர்.பாலன் அவர்களும், மற்றும் சில பத்திரிகைகளும்- திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்து நின்று, என்னைத் தாங்கிப் பிடித்தன!

காரணம் - வேலூர்க் கூட்டத்திற்குப் பின், திரு.கண்ணதாசன், திரு.சம்பத்தோடு - கழகத்தை விட்டு வெளியேறி தனியியக்கம் கண்டிருந்ததுதான்! இப்படி- எவர் எவருக்கோ நடந்த சண்டைகளில் - தேவையில்லாமல் என் தலை உருண்டது. யாரும் தாயக் கட்டையைக் கேட்டுக் கொண்டு உருட்டுவதில்லையே

 

கண்ணதாசனுக்கு நேரே, கடை விரிப்பது என்பது - பத்மா சுப்பிரமணியத்துக்கு நேரே, பாண்டி ஆடுவது மாதிரி! காலம் - என்னை அத்தகு களத்தில் நிறுத்தியதே தவிர, நானாக என்னை இன்னொரு கண்ணதாசனாக நினைத்துக் கொண்டு, விம்மிய மார்போடும் வீங்கிய மண்டையோடும் அலைந்தவனல்லஇருந்தாலும், இந்தக் குதிரை ஜெயிக்கும் என்று, என் மீது பணம் கட்டிவிட்டார் எம்.ஜி.ஆர்.! இரைக்க இரைக்க ஓடலானேன்.

 

அந்த ஓடலே ஒரு தேகப் பயிற்சியாகி, என் உடலுக்கு உரமும் உள்வலியும் சேர்த்தன.கல்யாணமான பிறகு ஒரு பெண் கலவியைக் கற்பது போல் - கவிஞனென்று ஆகிவிட்ட பிறகு நான் கற்கத் தொடங்கினேன். நிறையப் படித்தேன். நிறைய விஷயங்களைப் புதுக்கோணத்தில் சிந்தித்து - எனக்கென்று ஓர் Identity வேண்டுமென்று, வித்தியாசமாய்ப் பாட்டெழுத ஆரம்பித்தேன்அவை, வெகுவாக எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போக - பாட்டுகளும்ராக்கெட்வேகத்தில் பிரபலமாக - இவையெல்லாம் இறைவன் திருவுள்ளம் என்று அமைதி காத்தேனே தவிரதருக்கும், செருக்கும், இருக்கும் புகழைச் சுருக்கும், கருக்கும் என்று கிஞ்சித்தும் ஓராமல் உணராமல் - தடுப்புக்கட்டை இல்லாத தேர்போல் தறிகெட்டு ஓடியதில்லை

இருப்பினும் - ஒரு வாரப் பத்திரிகையின் கேள்வி பதிலில் - கீழ்க்கண்டவாறு, வினாவும் விடையும் வெளியாகியிருந்தன. ‘கண்ணதாசன் இடத்தை வாலி பிடிப்பாரா?’ ‘கண்ணதாசன், யானை; வாலி, கொசு!’ 

 

சில காலங்கள் சென்ற பிறகு -

 

சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில், எம்.ஜி.ஆர். நடித்தஇன்று போல் என்றும் வாழ்க!’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நடந்ததுநானும் - அந்தப் படத்தில் பாட்டு எழுதியிருந்ததால், விழாவில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். என்னைக் கொசுவோடு ஒப்பிட்டு எழுதியிருந்த பத்திரிகை ஆசிரியர் என் பக்கத்து ஸீட்டில் வந்து அமர்ந்தார்பரஸ்பரப் புன்னகைக்குப் பிறகு - அந்த ஆசிரியர்என்னங்க வாலி! கண்ணதாசனை யானை என்றும், உங்களைக் கொசு என்றும் எழுதியிருந்தேனே - அதனாலே, என்மேலே உங்களுக்கு ஏதாவது வருத்தமா?’ என்று என்னைக் கேட்டார்அதற்கு நான் - ‘வருத்தமில்லே!.... ஆனா, ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்பறேன்; கொசு கடிச்சா, ஆனைக்கால் வரும்!’ என்றேன்

 

உடனே அவர் - தன் கறுப்புக் கண்ணாடியையும், தொப்பியையும் சரி செய்து கொண்டு -

பாசமோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு - ‘இந்த விநாடி முதல், உங்களைப் பற்றிய என் கருத்தை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்!’ என்று மனமாரச் சொன்னார்.அவர்தான் அமரராகி விட்ட என் அன்பிற்கினிய நண்பர் திரு.தமிழ்வாணன்! ஆம்; ‘கல்கண்டின் கண்களுக்குத்தான் நான், காஞ்சிரங் காயாய்த் தென்பட்டேன்

 

இன்று - கண்ணதாசன் பாட்டுக்கும், என் பாட்டுக்கும் பேதம் தெரியவில்லை என்கிறார்கள்பீடி, ஊதுவத்தியான கதையை, வரும் வாரங்களில் பேசத்தான்இந்த வாரத்தில் -

இவ்வளவு பீடிகை

 

 

(தொடரும்)

  • தொடங்கியவர்

2. என் ஊர், என் வேர்!

 

ழக்கத்தில் 

புழக்கத்தில் இருக்கின்ற – 

ஊர்ச் சொல் ஒவ்வொன்றுக்கும் 

ஒரு வேர்ச்சொல் இருக்கும். இதிலிருந்து இது; அதிலிருந்து அதுஎன்றெல்லாம் எடுத்தோதுகிறதுமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின்... 

வேர்ச் சொல் கட்டுரைகள்’! 

 

சொல்லுக்கு வேரிருக்கையில், சொல்லாடுவோர்க்கும் வேரில்லாமற் போகுமா? மனிதர்களின்மாண்புகளும் மரபுகளும் கூட, அவரவர்தம் மண் சார்ந்தவையாகத்தான் இருக்கும்.எல்லோருக்கும் ஒரு ‘Root’ உண்டு; அதை ஒட்டித்தான் அவரவர் பயணிக்கும் ’Route’ இருக்கும்! என் வேர் 

என் ஊர்

 

திருவரங்கம் ஒரு தீவு; அதன் நடுவே, அரவணையில் அறிதுயிலில் அரங்கனென்னும் தேவு! வைணவர்க்கு வையமிசை வாய்த்த வைகுந்தம். மதுரகவிகள் தவிரமற்ற ஆழ்வார்கள் அத்துணை பேரும், மங்களாசாஸனம் செய்த திவ்விய க்ஷேத்திரம்.

கள்ளர் குலத்தில் தோன்றிய கலியன்திருடிய பொருளில் திருக்கோவிலுக்குத் திருச்சுற்று எழுப்பித்திருமங்கையாழ்வார் எனத் திருநாமம் பெற்ற ஊர்

 

முத்தியோ சிலரின் 

சொத்தென இருக்கையில் – 

இத்தமிழ் நாடுதான் 

இருந்தவப் பயனாய் – 

இராமா னுசனை 

ஈன்ற தன்றோ!’ – என்று... பாரதிதாசன் பாடிப் பரவிய, இராமானுஜர்இருந்து நடந்து கிடந்து, பின்னர் திருநாடலங்கரித்த ஊர்

 

நினைவு தெரிந்த நாள்முதல்என் உடலும் உள்ளமும் பூசிக் கொண்டதெல்லாம், திருவரங்கத்துத் தெருப் புழுதிதான். கூடல் மாநகரில்சங்கம் கூட்டி வைத்துவழுதி வளர்த்த வண்ணத் தமிழைஎன் ஊர்ப், புழுதி வளர்த்ததென்று சொன்னால்அது அரிச்சந்திர சத்தியம்!

 

திரும்பிய பக்கமெலாம் திருவாய் மொழி கேட்கும்; அது, தாய்ப் பாலைப் போலே தமிழ்ப்பாலைகண்ணாமூச்சிப் பருவத்திலேயே நம் காதுகளில் வார்க்கும்! இன்னணம்இயற்றமிழ் என்னுள் இறங்கியது என்றால், இசைத்தமிழ் இறங்கக் காரணமாயிருந்ததுஅரங்கநாதர் கோயில் அரையர் சேவையும்; ஆண்டுதோறும் நடக்கும் தியாகராஜ உற்சவமும்

 

மஹா வித்வான்வயலின் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர் வீட்டு வாசற்பந்தலில்அரியக்குடி; செம்மங்குடி; மகாராஜபுரம்; முசிறிஎன்று அஞ்சு நாள்கள், திருவரங்கம் திருவையாறாய் மாறிப் போகும்! நாளும்நானும், கிருஷ்ணசாமியும், ரங்கராஜனும்ஜமக்காளம் விரித்தவுடன் முதல் ஆளாய்ப் போய் உட்கார்ந்து விடுவோம். கிருஷ்ணசாமியோட தம்பி, ரங்கராஜன்தான்

எழுத்தாளர் சுஜாதா

 

கீழ அடையவளஞ்சான் வீதியில்மாலையில் திராவிடர் கழகக் கூட்டம் நடக்கும்; அதற்கும், நாங்கள் மூவரும் ஆஜராவோம்.எங்களுடன் வெகு சௌஜன்னியமாகக் கிரிக்கெட் விளையாடும், பாலகிருஷ்ணனோகறுப்புச் சட்டையணிந்து கழக மேடையில் கர்ச்சிப்பான்: ‘ஸ்ரீரங்க நாதரையும் 

தில்லைநட ராசரையும் – 

பீரங்கி வாயில் வைத்துப் 

பிளந்தெறிவ தெந்நாளோ?’ 

 

நானும், சுஜாதாவும்பாட்டின் இறைச்சிப் பொருளைப் புறம் வைத்து விட்டு – ‘ஸ்ரீரங்கம்’; ‘பீரங்கி’; எனும் எதுகையை ஏகமாய் சிலாகித்துக் கிடப்போம். விளக்கடியில் இருட்டிருப்பது இயல்பு என்றுஅதிகம் அலட்டிக் கொள்ளாது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊர்

 

இந்தச் சூழலில்இரண்டு தமிழ் உள்ளே இறங்கிய பிறகு, மூன்றாம் தமிழ் முளைவிடாமல் இருக்குமா?

 

நாடகம் எழுத ஆரம்பித்தேன்; அந்த ஆசை, ஒரு Stain போல்அல்ல அல்லஒரு Stigma போல், அகற்ற முடியாக்கறையாய் என்னுள் அப்பிக் கொண்டது! ஏற்கெனவேயேஎன் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட, என் வேண்டுகோளை ஏற்று என் வீட்டிற்கு வந்தகல்கியும், சின்ன அண்ணாமலையும் Manuscript Magazine- ல் நான் எழுதியிருந்த கதை, கவிதை மற்றும் படங்களைப் பார்த்து விட்டு என்னைப் பாராட்டிய கையோடு – 

 

திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய நிர்வாகியாக இருந்த திரு. பார்த்தசாரதி அவர்களிடம் என்னை அழைத்துப் போய், வானொலியில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்

 

திரு. பார்த்தசாரதி அவர்கள்நடிகர் திரு. Y.G. மகேந்திரனின் தந்தையார் திரு. Y.G. பார்த்தசாரதியின் சகோதரியின் கணவர்

 

திரு. சிட்டி அவர்களின் கீழேதான் நான் பணியாற்றினேன்

அக்கிரகாரத்தின் அதிசயப் பிறவிஎன்று அண்ணாவால் விளிக்கப் பெற்ற, திரு. .ரா. அவர்களின்மணிக்கொடிகாலத்து எழுத்தாளர் திரு.சிட்டி அவர்கள்.அண்ணாவும், சிட்டியும்பச்சையப்பன் கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்கள். அகவை நூறைத் தொட இருக்கையில், சமீபத்தில்தான் திரு. சிட்டி அவர்கள் அமரரானார்கள்

 

திருச்சி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில்தான்மதியம் இடைவேளையில், எதிர் கட்டிடத்தில் இருந்த திரு. அரு. ராமனாதன் அவர்களின்காதல்பத்திரிகை அலுவலகத்தில்ஒல்லியாய்; உயரமாய்; நெற்றி நிறையத் திருநீறோடுகண்ணதாசனை சந்தித்தேன்; அப்போது அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தியசண்ட மாருதம்பத்திரிகையின் ஆசிரியராயிருந்தார். அவர்நாத்தழும்பேற நாத்திகம் பேசத் தொடங்கியதெல்லாம் பிற்காலத்தில்

 

நாடகம் எழுதுவதற்கான பிள்ளையார் சுழியைநான் ரேடியோவில்தான் போட்டேன்

 

என்முதல் நாடகத்திற்கு நடிப்பதற்காகத் திருச்சி வானொலி நிலையத்திற்குத் தன் தாயோடு ஒரு பெண் வந்திருந்தார். என் உரையாடல்களைசரித்திரக் கதை அதுஅதிகமாககரம்; ‘கரம்; ‘கரம் நிறைந்த வாக்கியங்களை வல்லோசை மெல்லோசையோடுஅந்த நடிகை வெளுத்துக் கட்டினார். உச்சரிப்பு, ஸ்பஷ்டமோ ஸ்பஷ்டம்அப்படியொரு ஸ்பஷ்டம்; வேதாத்தியயனம் செய்யலாம்! வியந்தேன் நான். சென்னைதேனாம்பேட்டை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பின்புறம் இருந்த அவர் வீட்டிற்கு, நான் சென்னை வரும்போதெல்லாம் செல்வேன்.

 

ஏகமாய் என்னுள் எம்.ஜி.ஆர். influence! போதாக்குறைக்குபார்ப்பதற்கு எம்.ஜி.ஆர். போலவே சிவந்த மேனியோடு ஒரு சினேகிதன் – ‘மேலூர் வரதன்என்று!நடை, உடை, பாவனைமூக்கை, ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒருசேரச் சேர்த்து அடிக்கடி கீழ்நோக்கி வழித்தல்இப்படி எல்லாவற்றிலும் அந்த வரதன்ஒரு Replica! 

 

என் நாடகங்களுக்கு அவ்வப்போது வந்து பார்த்து விட்டு –‘டேய், வாலி! இதுதான் உனக்கு சோறு போடப் போறது; ஜமாய்ச்சுட்டே!’ என்று, எம்பார் விஜயராகவாச்சாரியார் அவர்கள்அவர் பங்குக்கு ஏகமாய் அட்சதை தூவ... நான் மந்திரித்து விட்ட கோழியாய்ப், பட்டி தொட்டியெல்லாம் படுதாவைத் தூக்கிக் கொண்டு திரிந்தேன்

 

சொந்த வீடு

சோற்றுக்கு வயல்!’– என்றிருந்ததால், என் பெற்றோர் என்னை என் போக்கிலேயே விட்டு விட்டனர். என் தந்தைஅரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவராயினும்அடிநாள்களிலிருந்தே ஆன்மானு பூதி பெற்றவர்; புத்தங்கோட்டகம் ஸ்வாமிகளிடம் காலக்ஷேபம் செய்தவர். ஆகவே என் விஷயத்தில்கர்மானுசாரம் காரியங்கள் நிகழ்கின்றன என்று திடசித்தராயிருந்தார்

ஆனால்என் தாயாரால் அப்படியிருக்க முடியவில்லை. நாடகம் நாடகம் என்று அலைகின்ற பிள்ளையின் நாளைய பொழுது என்னவாக இருக்கும் என்றுவிடையறியா வினாவோடும்; விழிநிறையக் கனாவோடும்தினம் தினம் தாயார் சந்நிதியைப் பிரதட்சிணம் பண்ணி வந்தாள்

 

எனக்கும் என் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம்உள்ளத்தே மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது. காவேரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு காற்றாடி விடும் பையன்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.அதன் நூல் கண்டுஅவர்கள் கையில் இருந்தது! என் வாழ்க்கைப் பட்டமோ, வாலுமின்றி நூலுமின்றி, காற்று இழுத்த இழுப்புக்குக் கண் மண் தெரியாமல் போய்க் கொண்டிருந்தது

 

அற்றை நாளில்...ஆரேனும்அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்னம்இந்த ஊரைச் சேர்ந்த இருவரில்ஒருவரைக்கோடம்பாக்கத்தின் உச்சத்திலும்; ஒருவரைக்கோட்டையின் உச்சத்திலும்; அமர்த்தி 

அழகு பார்க்கப் போவதுஎம்.ஜி.ஆர்.தான் என்று...கிளி ஜோசியமோ; சோழி ஜோசியமோ; அல்லது கோழி ரத்தம் குடித்து விட்டுக் கோடங்கி யொருவன், கொட்டும் கொட்டுகளுக்கிடையே அருள் வாக்காகவோ சொல்லியிருந்தால்....‘பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்; போகட்டும்; விட்டு விடு!’ என்று – 

 

நான் பின்னாளில் பாடிய படப் பாட்டை அந்நாளிலேயே பாடியிருப்பேன்

 

ஆனால்,

அது நடந்தது; இந்த ஊரைச் சேர்ந்த இருவரின் எதிர்காலத்தை எம்.ஜி.ஆர்.தான் எழுதினார்

 

(தொடரும்)

  • தொடங்கியவர்

3. ‘இரட்டை இலை

 

enakkul_26_01_2012_zps76a33222.jpg

 

னக்கான அன்னம் – 

எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும்

எனக்கான ஆடை – 

எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும்

விளைய வேண்டுமென 

விதித்தது எது

 

ரங்கநாதர் கோயில் – 

ராயகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு – 

ராமாவரம் தோட்டத்து 

ராஜகோகில மாகி – 

ராப் பகல் 

ராமச்சந்திரன் புகழைக் – 

கூவிக் கிடக்கும் கொடுப்பினையைக் 

கூட்டி வைத்தது எது

 

பார்ப்பன எதிர்ப்பு

பரம்பொருள் மறுப்பு!’ 

எனும் கொள்கைகளை ஏந்திக் கொண்டிருந்த ஓர் இயக்கத்தில் இருந்த ஒருவரோடுஅந்தணனாகவும்; ஓர் ஆத்திகனாகவும் இருந்த என்னைப் பின்னிப் பிணைத்தது எது

 

ஒன்றல்ல; இரண்டல்ல

அறுபத்து மூன்று படங்களில், எனக்கும் எம்.ஜி.ஆருக்குமானஓர் அற்புத ரசாயனக் கலவைஒரு Chemistry - Work-out ஆக, உந்து சக்தியாயிருந்தது எது

 

என் நெருங்கிய நண்பர் – 

எம்.ஜி.ஆர். கொடியைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்திரு. கிருஷ்ணகுமார். அவரிடம் கேட்டால், ‘அண்ணா! உங்க ஜாதகம், யோக ஜாதகம்!’ என்பார்.நானோஜாதகத்தை ஏற்காதவன்; பரிகாரங்கள் என்னும் பேரால், சடங்குகளை நோற்காதவன்.‘நாளென்ன செய்யும்

கோளென்ன செய்யும்

நாதன் திருவடி 

நம்பியிருப் பார்க்கே?!’ எனும் – 

சமயக் குரவரின் கருத்தைச் சார்ந்து நிற்பவன்.

அடுத்த விநாடி ஆண்டவன் வசத்தில் என்பதிலும்; அதனை ஆராலும் முன்கூட்டியே ஓர்ந்து உரைக்க ஒண்ணாது என்பதிலும்நசுக்க முடியாத நம்பிக்கை உள்ளவன்

 

பின்எதுதான் எம்.ஜி.ஆரையும் என்னையும் இணைத்தது? பிணைத்தது? அதுதான் – 

ஊழ்

 

ஊழிற் பெருவலி யாவுள?’ என - வாசுகி மணாளனின் வாய் மொழிந்ததை – ‘ஊழ்வினை உறுத்து வந்து 

ஊட்டும்!’ – என்று, சிலம் பிசைத்த சேரன் தம்பி வழிமொழிகிறான்! ‘ஊழ்வினை ஒருவரால் 

ஒழிக்கற் பாலதோ?’ – என்பது, நாட்டரசன் கோட்டையில், நீள் துயிலில் இருக்கும் பாட்டரசன் கம்பனின் வாக்கு! ஓர் 

உயிரை... 

வாழ்என – 

வாழ்த்துவதும்

தாழ்எனத் – 

தாழ்த்துவதும்

வீழ்என – 

வீழ்த்துவதும் 

ஊழ்!

ஊழ், இரு வகையாகும் நல்லூழ்; வல்லூழ் என்று.எம்.ஜி.ஆரோடு என்னை இணைத்து வைத்ததுநான் ஆற்றிய நல்லூழாகும்

 

எம்.ஜி.ஆரைத் தவிர்த்து விட்டு என்னைப் பற்றிஎன்னை மட்டும் தனித்தெழுத, என்னால் ஆகாது.ஏனெனில் – 

என் – 

உணவில் உப்பாகவும்; உதிரத்தில் வெப்பாகவும்; அவரும் நானும்இரட்டை இலை’; ஒருவரே எனும்படிஎன்னுள் இருக்கிறார் எம்.ஜி.ஆர். – கலந்து; கரந்து; கரைந்து

 

அனுமன்தன் அகண்ட மார்பை, உகிர்கள் கொண்டு உரித்துக் காட்டஉள்ளே உட்கார்ந்திருந்தானாம்...காகுத்தன் 

கால் மடக்கி

அஃதே போல்என்னுள் X - Ray -க் கதிர்களை ஊடுருவ விட்டால், எம்.ஜி.ஆர். எட்டிப் பார்ப்பார்! என்ன Irony பாருங்கள்; அனுமனுக்குள்ளும் ஒரு ராமச்சந்திரன்அடியேனுக்குள்ளும் ஒரு ராமச்சந்திரன்

 

இவ் 

இருவருக்குள்ளும் – 

ஒருசில ஒற்றுமை வேற்றுமை உண்டு! அந்த ராமச்சந்திரன் – 

இந்தியாவில் பிறந்து இலங்கை புகுந்தவன்

இந்த ராமச்சந்திரன் – 

இலங்கையில் பிறந்து இந்தியா புகுந்தவன்

இது, வேற்றுமை

இவ் 

இருவருமே – 

விட்ட இடத்தை 

வில்பவரால் பிடித்தவர்கள்

இது, ஒற்றுமை

இவ் 

இருவருக்கும் – 

இன்னோர் ஒற்றுமை உண்டு; அதை 

இறுதியில் சொல்கிறேன்

 

ராமரைப் பற்றிப் பேசினாலே, ராமாயணம் நினைவிற்கு வராதா? ராமாயணம் நினைவிற்கு வந்தாலேகம்பர் விழா நடத்தும் கம்பனடிப் பொடி திரு. சா.கணேசன் நினைவிற்கு வரமாட்டாரா? 1964 – டிசம்பரில் ஒரு சம்பவம்

 

வாஹினியை ஒட்டியிருந்த விஜயாவில் – ‘பணம் படைத்தவன்படப்பிடிப்பு.ஒப்பனையறையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்க்க உள்ளே போனேன்.ஒரே வியப்பு

பி.ஆர்.பந்துலு உட்கார்ந்திருந்தார்!

என்ன ஆண்டவனே! ஆச்சரியமா இருக்கா? பந்துலு மாமாக்குப் படம் பண்றேன்!’ என்று, என் அய்யப்பாட்டை அகற்றினார் எம்.ஜி.ஆர்.பந்துலு அவர்களை, பந்துலு மாமா என்று விளிப்பது வழக்கம்.திடீரென்று எம்.ஜி.ஆர். சுழல் நாற்காலியிலிருந்து இறங்கி, என் தோளைப் பற்றி – ‘இப்பத்தான் - காரைக்குடி சா.கணேசன் வந்துட்டுப் போறாரு! கம்பராமாயணம், உங்க ஸ்ரீரங்கத்திலே அரங்கேற்றம் ஆகல்லியாமே?’ என்று என்னை வினவினார். திரு. சா.கணேசன் அவர்கள் வருடா வருடம் காரைக்குடியில், கம்பர் விழா நடத்துபவர். அவர் சுதந்திராப் பார்ட்டியைச் சேர்ந்தவர். ராஜாஜிக்கு வெகு ஆப்தமானவர்.சுதந்திராக் கட்சியும்; தி.மு.. வும்நெருங்கிய காலமது.அது விஷயமாக வந்தவர் – ‘கம்பர் விழாபற்றி எம்.ஜி.ஆர். விசாரிக்கையில்மேற்கண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்

 

எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன்.

அண்ணே! கம்ப ராமாயணம், ஸ்ரீரங்கத்துலதான் அரங்கேற்றம் ஆச்சு; இப்பவும், அது அரங்கேறின மண்டபம் அங்க இருக்கு; அதற்கெல்லாம் ஏகப்பட்ட ஆதாரம் இருந்தாலும்சா.கணேசன்அது, சடையப்ப வள்ளல் வீட்டு வாசல்லேதிருவெண்ணெய் நல்லூர்ல, அரங்கேறினதாகத்தான் சொல்வாரு; அவர் பெரியவர். அதெ நான் மறுத்துப் பேச விரும்பல்லே! ஆனாஒரு வரலாறு கல்வெட்டிலேயே இருந்துமாலிக் காபூர் படையெடுப்பிலே சிதிலமடைஞ்சு போச்சு.அதுஎன்னான்னா....தன்னை ஆதரிச்ச சடையப்ப வள்ளலுக்குத் தன் நன்றியைக் காட்டகம்பன், கம்பராமாயணத்துல நூறு பாட்டுக்கு ஒரு தடவை அவர் பேரைப் பயன்படுத்திப் பாடினானாம்.அவையிலிருந்த – 

வைணவர்களெல்லாம், ‘ஆயிரம் பாட்டுக்கு ஒரு தடவை, அவர் பேரெச் சொன்னால் போதாதா?’ என்று வினவஉடனே கம்பன் உவகைப் பெருக்கோடு,

அடடா! நான் சடையப்ப வள்ளலை, நூற்றில் ஒருவன் என எண்ணிப் பாடினேன். நீங்கள் சொல்லிய பிற்பாடுதான் உணர்ந்தேன்அவர் ஆயிரத்தில் ஒருவன் என்று!’ எனச் சொல்லி வைணவர்களை வாழ்த்தினானாம். இப்படிப் பல ஆதாரம் உண்டு!’ – இன்னணம் நான் சொன்னதைக் கேட்ட பந்துலு – “நம்ம படத்துக்கு, டைட்டில் கிடைச்சாச்சு; ‘ஆயிரத்தில் ஒருவன்’ – ‘ஆயிரத்தில் ஒருவன்’ – அபாரம்!’ என்று குதுகலித்தார்.‘ஆயிரத்தில் ஒருவன்’ – படத் தலைப்பு பிறந்த கதை, நாற்பத்தேழு வருடங்களுக்குப் பின்னும், என் நினைவில் நிற்கிறது

 

இரு – 

இராமச்சந்திரன்களுக்கும், இன்னோர் ஒற்றுமையுண்டு; இறுதியில் சொல்கிறேன் என்றேனே

அது இதுதான்! ‘அரக்கர் பிடியில் 

அகப்பட்டுப் பரிதவித்த – 

ஈழத்து மாந்தர்பால் 

ஈவிரக்கம் காட்டியதுதான்!’ 

 

ஒருநாள் – 

ஒரு சாயங்கால வேளையில்எம்.ஜி.ஆர். என்னைப் பார்க்க விரும்புவதாக Phone வந்துஎன் Fiat நானே ஓட்டிக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றேன்.அங்கு.

வித்வான் லட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.எம்.ஜி.ஆர். நாங்கள் இருந்த அடுத்த அறையில், யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்; வருவார் என்று சொல்லிஎனக்கும் வித்வானுக்கும் மாணிக்கம் Coffee கொடுக்கஅதைப் பருகியவாறே வித்வானோடு நான் விவாதத்தில் இறங்கினேன்.‘வித்வான் சார்! மந்திரி பிறந்த நாளையே, மகத்தான நாளாகக் கொண்டாடுகிற இந்த மண்ணுலகண்ணன் பிறந்த அஷ்டமியையும்; ராமன் பிறந்த நவமியையும்நல்ல நாள்கள் இல்லேன்னு ஒதுக்கறது, அபத்தமாயிருக்கே!’ என்று நான் கேட்டவுடன் – ‘இருங்கோ! வெத்தலெ துப்பிட்டு வந்து சொல்றேன்!’ என்று வெளியே வித்வான் போக

பக்கத்து அறையிலிருந்து இருவர் வெளியே வந்தனர்.இருவரில் ஒருவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நான் எண்ணுங்கால்அந்த ஒருவரே எனக்கு வணக்கம் போட்டார்; நானும் அவருக்கு வணக்கம் போட்டேன்.உடனேஅவர்களைத் தொடர்ந்து அவ் அறைக்குள் வந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம், ‘இவர்தான் வாலிஎன்று என்னை அறிமுகப்படுத்தஅந்த ஒருவர் – ‘தெரியுமே! அண்ணன் படத்துல இவரு எழுதற பாட்டெல்லாம், எங்க மக்களுக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்!’ என்று என்னை சிலாகித்துப் பேசினார்.எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறே, என்னிடம் அவ் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.ஒருவர்திரு. ஆண்டன் பாலசிங்கம்;

ஒருவர் திரு. பிரபாகரன்

 

 

(தொடரும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.