Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகையாளன் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கான கதையல்ல நிஜம் இது..

Featured Replies

இறுதிப் போர்

மூர்த்தியை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். பிரபலமான புத்திரிகை ஒன்றில் செய்தியாளனாக இருக்கிறான். அது ஒரு புலனாய்வுப் பத்திரிகை. வாரம் இருமுறை வரும். அந்தப் பத்திரிகையில் மூர்த்தியின் பெயரைத் தாங்கி வரும் செய்திக் கட்டுரைகளை உங்களில் பலர் படித்திருக்கலாம்.

கட்டுரைகளை வாசிக்கும் பரபரப்பில் எத்தனை பேர் அதை எழுதியவர்களின் பெயர்களை கவனிக்கிறார்கள்? மூர்த்தி அந்தப் பத்திரிகையில் சேர்ந்து நாலு வருஷம் ஆகிவிட்டது. 2007-ம் ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம். அங்கே மூர்த்தி வேலைக்குச் சேர்ந்தான்.

சென்னை போன்ற பெருநகரத்தில் வீட்டு வாடகை, உணவு, உடை என அன்றாட செலவுகளுக்கு தாக்குப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் வேலைக்கு சேர்ந்த அடுத்த ஆண்டே அவனுக்கு கல்யாணமும் ஆகிவிட்டது. அரேஞ்ச் மேரேஜ் தான். காதல், கீதல் எல்லாம் அவனுக்கு கொடுப்பினை இல்லை.

பெரும்பாலான பத்திரிகையாளனையும் போல அநியாயங்களை கண்டு பொங்குபவன் தான் மூர்த்தியும். மற்றபடி மாத சம்பளத்தை மீறி ‘கவர்’, ‘கவனிப்பு’ என மேற்படி வருமானங்களை உருவாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மூர்த்திக்கு வாய்க்கவில்லை.

2008 அக்டோபர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணா விரதப் போராட்டம் அறிவித்த நாளில் இருந்தே ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கத் தொடங்கியிருந்தான் மூர்த்தி. 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆயுதப் போராட்டம் எல்லாம் எதற்கு என்றுதான் நினைத்திருந்தான்? அதுவும் மவுண்ட் ரோடு தேவி தியேட்டரில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை பார்த்த போது அந்த எண்ணம் உறுதியாகியிருந்தது.

அப்போதெல்லாம் ஈழத்தைப் பற்றி, அங்கு நடக்கும் போராட்டத்தைப் பற்றி இவன் பெரியதாக அலட்டிக் கொண்டது கிடையாது. ஏதோ தாய் மொழிப் பற்று கொஞ்சம் உண்டு. அதுவும் தமிழ் மீடியத்தில் படித்ததால் ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாததால் ஏற்பட்ட கழிவிறக்கத்தில் வந்திருக்கலாம்.

ஆனால், அங்கே போர் உச்சகட்டத்தை அடைந்த போது அதுதொடர்பான செய்திகள், புத்தகங்களைத் தேடித் தேடி படிக்கத் தொடங்கியதும் உண்மை நிலவரத்தை ஓரளவு புரிந்து கொண்டான்.

“கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரத இருக்காங்க. வைகோ மறியல் போராட்டம் நடத்தறாரு. அதைப் பத்தி ஏதாவது எழுதலாமா சார்…”என்று கேட்ட போது, “அதுக்கெல்லாம் சீனியர் ரிப்போர்ட்டர்ஸ் இருக்காங்க. லோக்கல் நியூஸை ஒழுங்க கவர் பண்ணுங்கய்யா போதும். ஆமா… கமிஷனர் ஆபிசுக்கு ரெகுலரா போறீங்களா இல்லயா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார், பத்திரிகை ஆசிரியர்.

ஆனால், சீனியர் ரிப்போர்ட்டர்ஸ் அப்படி எதையும் எழுதி கிழித்து விடவில்லை. இணைய தளங்களில் போர் செய்திகளையும், ரத்தம் தோய்ந்த படங்களையும் பார்க்க மூர்த்திக்கு ஆவேசமும் அழுகையும் முட்டிக் கொண்டு வரும். வயசும் அனுபவமும் பத்தாது என எண்ணினார்களோ என்னவோ மூர்த்திக்கு கடல் கடந்த செய்திகளை எழுதுவதற்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டது.

போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்தது. கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக போர் பக்கம் கவனத்தைத் திருப்பத் தொடங்கிய பத்திரிகை ஆசிரியரால் மூர்த்தியை ஒதுக்க முடியவில்லை. அவன் கொண்டு வரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்.

இணைய தளங்களில் மூழ்கி ரத்தம் தோய்ந்த பக்கங்களை படித்து செய்திகளை சேகரித்தான். வைகோ, சீமான், பெ.மணியரசன், திருமாவளவன் என தமிழீழ ஆதரவு தலைவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டான்.. சிங்கள பத்திரிகையாளன் லசந்தா கொல்லப்பட்டத்தை கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாதகை ஏந்தி கோஷமிட்டான்.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக குழந்தைகளும் பெண்களும் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் இருந்தனர்.

“மூர்த்தி, நீங்க விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?”

“அப்போ… நீங்க ராஜபக்சே ஆதரவாளரா?”

“உங்கள மாதிரி எழுதற நம்மூர் ரிப்போட்டர்ஸுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருதாமே?”

“அது தெரியாது. எங்கள மாதிரி எழுதாம இருக்கறதுக்கு. இலங்கைத் தூதரக அதிகாரி நெறைய பணம் தர்றதா கேள்விப்பட்டேன். நீங்க கூட இதுவரைக்கும் இந்தப் போர் பத்தி ஒண்ணு எழுதினது இல்லையே சார்?”

அலுவலகத்தில் நடக்கும் இந்த மாதிரி சம்பாஷணைகளுக்கு மூர்த்தி கடுகடுப்புடன் இப்படித்தான் முற்றுப் புள்ளி வைப்பான்.

“நீங்க எல்லாம் ஆடு கோழிகளை கொன்னு சாப்பிடறேளே, அது சரின்னா, ஸ்ரீலங்கன் கவர்மெண்ட் 

டமிலியன்ஸை கொல்றதும் சரிதான்”

ஆங்கில பத்திரிகை ஒன்றில் ரிப்போட்டராக இருக்கும் தன்னுடைய கல்லூரி தோழி இப்படி சொன்னதற்காக அவளுடைய நட்பை அந்த வினாடியே முறித்துக் கொண்டான். “இனி அந்த நட்பு துளிர்விட வாய்ப்பே இல்லை” என்று சமாதானம் பேச முனைந்த நண்பர்களிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டான். 

முத்துக்குமார் தீக்குளித்த அன்றைக்குக் கூட, “மூர்த்தி, ‘பெண்ணே நீ’ ரிப்போர்ட்டர் ஒருத்தர் இலங்கைப் பிரச்னைக்காக சாஸ்திரி பவனுக்குள்ள தீக்குளிச்சிட்டாருப்பா” என்று சக செய்தியாளர் ஒருவர் தகவல் சொன்னார்.

அந்த இதழுக்கான இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த இணையாசிரியர் முன்பு மூர்த்தி ஓட்டமும் நடையுமாக போய் நின்றான். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல... சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். இந்த இஸ்யூல தீக்குளிப்பைப் பத்தி எழுத இடம் இருக்காது” 

எடிட்டரிடம் ஓடினான். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்.

“இந்த இஸ்யூல சேக்க முடியாது. ஒரு பிட் நியூஸா எழுதிக் கொடுங்க பாக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”. 

திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தான்.

“சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க”

“நானும் போகட்டுமா சார்”

“எதுக்கு வேஸ்ட்டா? செய்தி போட மாட்டாங்க. வேணா சும்மா போயிட்டு வாங்க”

அப்புறம் முத்துக்குமார் எழுதிய கடித நகலை எடிட்டரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

“ என்னய்யா… இப்படி எழுதியிருக்கான். பெரிய எழுத்தாளனா இருப்பான் போல. இங்க வந்திருந்தா வேலை கொடுத்திருக்கலாமே?” என்ற போது மூர்த்தி தலையில் அடைத்துக் கொண்டே முத்துக்குமார் பற்றிய செய்திக் கட்டுரையை எழுதத் தொடங்கினான். 

முத்துக்குமார் பற்றிய மூர்த்தியின் கட்டுரை கவர் ஸ்டோரியானது. அறிமுகமே இல்லாத பலரும் மூர்த்தியிடம் பேசினார்கள். எப்படி எப்படியோ செல்போன் நெம்பரை வாங்கிக் கொண்டு புலம் பெயர் தமிழர்கள் மூர்த்தியிடம் கண்ணீர் வடித்தார்கள்.

இந்த நேரத்தில் தான் மூர்த்தியின் மனைவி உண்டாகியிருந்தாள். மகப்பேறுவை சிக்கலுக்குரிய விஷயமாகவே அணுகும் நவீன மருத்துவர்கள், “ரொம்பக் கவனமாக இருக்கணும்” என்று மகப்பேறு மருத்துவர் எச்சரித்திருந்தார்.

ஒரு நாள், அந்தப் பிரபல கவிதாயினியிடம் இருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்தது. மூர்த்தியின் ஈழத்து செய்திக் கட்டுரைகளால் ஏற்பட்ட நட்பு. எளிமையானவர். ஈழப் பிரச்னையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

“மூர்த்தி... ஒரு முக்கியமான விஷயம். அதை போன்ல பேச முடியாது. ஒருத்தர் வந்திருக்காரு. உடம்பால, மனசால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காரு. உங்களை பத்தி சொல்லி சந்திக்கச் சொல்லியிருக்கேன். உங்க கிட்ட பேசுவாரு”

“அவர் பேரு என்ன தோழர்”

“அறிவு”

அறிவை கண்ணகி சிலை அருகே மூர்த்தி முதல் முறையாக சந்தித்தான். எல்லோரிடமும் கண்களைப் பார்த்து பேச வேண்டும் என்று விரும்பும் மூர்த்திக்கு அந்த இரவு நேரத்தில் அறிவின் முகத்தைப் பார்ப்பதே கஷ்டமாக இருந்தது. 35 வயதிருக்கலாம். சராசரியான உயரம். தொப்பி அணிந்திருந்தான். சற்று குண்டான உடல் வாகு. தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று அக்கம் பக்கம் நோட்டமிட்டபடி இருந்தான்.

“என்ட பேரு அறிவழகன். நீங்க அறிவுன்னு கூப்பிடலாம். உங்க கட்டுரைகளை படிச்சிருக்கென். ரொம்ப மகிழ்ச்சி. போர் நிறுத்தம் நடக்கணும். அதுக்காக தலைவர் என்னை இங்க அனுப்பி வச்சிருக்கார். இங்குள்ள தலைவர்களை சந்திக்கணும். நீங்க ஹெல்ப் பண்ணனும்.”

“நிச்சயம் தோழர்” என்றான் மூர்த்தி. அதன்பின்பு பேச்சு எங்கெங்கோ போய் மூர்த்தியைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான், அறிவு.

“உங்களுக்கு என்ன சம்பளம் தர்றாங்கள்?”

“12 ஆயிரம்”

“ஐயோ.. அதை வச்சுக் கொண்டு என்ன பண்றீங்க? எப்படி சமாளிக்கிறீங்க? எங்களோட நாட்டில் ரிப்போர்ட்டர்ஸுக்கு நல்ல சேலரி உண்டு. நானும் ரிப்போர்ட்டரா இருந்தவன் தானே” என்று தன்னுடைய பிரஸ் ஐடென்டி கார்டை எடுத்துக் காண்பித்தார். மூர்த்தி அதை வாங்கி செல்போனை அன் லாக் செய்து அதன் டிஸ்பிளே வெளிச்சத்தில் அந்த கார்டை பார்த்தான்.

“பாவம் தான் நீங்கள்” என்று எழுந்து நின்ற அறிவு பின்புறத்தைத் தட்டிக் கொண்டான்.

அந்த முதல் சந்திப்புக்குப் பின் அறிவு அடிக்கடி மூர்த்திக்கு பேசத் தொடங்கினான். சந்திப்பும் நடந்தது. மூர்த்தி தனக்குத் தெரிந்த ஈழ ஆதரவாளர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

போரில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்திடம் சிக்கி அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பி வந்த கதையை அறிவு சொன்ன போது மூர்த்திக்கு ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்ப்பது போல் இருந்தது.

“ஆர்மிக் காரன் அடிச்சதில இன்னும் உடம்பு வலிக்குது” என்றபடி, பேண்ட் பாக்கெட்டிலிருந்து மாத்திரை ஒன்றை எடுத்து சிறுவர்கள் மிட்டாயை கடிப்பது போல் கடித்து மென்று விழுங்குவதை மூர்த்தி அடிக்கடி தரிசிக்க வேண்டியிருந்தது.

“இந் நேரம் என்ட மனைவிக்கும் எட்டு வயசு மகனுக்கும் என்ன கதி ஆகியிருக்குமோ. தெரிய இல்ல. ஆர்மிக்காரங்க அவங்கள பிடிச்சிட்டு போயிருந்தா கொன்னிருப்பாங்க தானே. பாவம் என்ட மனைவி நல்ல வடிவானவள்”

உண்மையிலேயே மூர்த்தி கண் கலங்கிவிட்டான். 

ஒருநாள். “மூர்த்தி, மனைவியிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். செல்போன் கட்டாயிடுச்சு. பேலன்ஸ் தீர்ந்து போச்சு. அங்கிருந்து பேச அவளன்ட காசு இல்ல. எனக்கு ஐநூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விடுங்கோ. முடிஞ்சா செய்கோ. பாவம்.. நீங்களும் கொறச்ச சம்பளக்கார் தானே”

மூர்த்தி உடனடியாக ரீசார்ஜ் பண்ணிவிட்டான்.

அதன்பின்பு அடிக்கடி ரீசார்ஜ். பண்ண வேண்டி இருந்தது. ஒவ்வொரு முறையும் ஐநூறு ரூபாய்க்குத்தான் ரீசார்ஜ் பண்ணச் சொல்லுவான் அறிவு. திடீரென கொஞ்ச நாள்கள் அறிவைப் பற்றி எந்த செய்தியும் இல்லை.

“மூர்த்தி, அறிவை க்யூ பிராஞ்ச் போலீஸ் பிடிச்சிட்டாங்க. செங்கல்பட்டு அகதி முகாம்ல வச்சிருக்காங்க. பாவம் உடம்பு முடியாதவரு. அவரை எப்படியாவது மீட்கணும்னு அதிகாரிங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றார் கவிதாயினி.

சில நாட்கள் கழித்து கவிதாயினி மீண்டும் மூர்த்தி லைனுக்கு வந்தார்.

“அறிவை வெளியே எடுத்தாச்சு. ஸ்ரீபெரும்புதூர்ல ஒரு கிளினிக்ல ட்ரீட்மெண்ட்ல இருக்காரு. போலீஸ் பயங்கரமா அடிச்சிருக்காங்க. இனி பிரச்னை இல்ல. இந்த நெம்பருக்கு உடனே பேசிட்டு… முடிச்சா அறிவைப் பாருங்க”

அறிவு புதிய எண்ணுக்கு மாறியிருந்தான். கவிதாயினி கொடுத்த அந்த எண்ணில் தொடர்பு கொண்டான் மூர்த்தி. அறிவு பேசவே சிரமப்பட்டார். “பயங்கர அடி. போலீஸ்கிட்ட நான் வாயே திறக்க இல்ல. உங்க தோழிதான் இங்கே சேத்தாங்க. உடனே வாங்க பேசணும். கொஞ்சம் ரீ சார்ஜ் பண்ணிடுங்க”

மாலை ஆறு மணி இருக்கும். கோயம்பேடு பஸ் நிலையம் போய். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் போய் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு எதிரே உள்ள அந்த மருத்துவமனைக்குப் போய் சேரும் போது இரவு ஒன்பது. போனில் பேசியதற்கும் நேரில் பார்ப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் உற்சாகமாக இருந்தான் அறிவு. போகும் வழியிலேயே அறிவின் புது எண்ணுக்கு மூர்த்தி ரீசார்ஜ் செய்திருந்தான்.

தனியறையில் தங்க வைக்கப்பட்டிருந்த அறிவு அரைமணி நேரத்தில் நாலைந்து சிகரெட்டுகளை ஊதித் தள்ளியிருப்பான்.

“சிகரெட் பிடிச்சாத்தான் போராளி இல்லேன்னு இங்கே நம்புவாங்க. அதான் செங்கல்பட்டுல இருந்து ஊதிட்டே இருக்கேன்”

ஆனால், அறிவு சிகரெட் பிடிப்பது புதிதாக சிகரெட் பிடிப்பவர் போல் தெரியவில்லை. அறைக்கு வெளியே இருந்த க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்கள் ஜன்னல் வழியாக மூர்த்தியை உற்று பார்த்தபடியே இருந்தார்கள்.

“முள்வேலி முகாம்ல இருக்கற நம்ம பெண்டுகள் என்ட கூட கதைச்சாங்க. பாவம் மாத்து உடை கூட இல்லாம கஷ்டப்படறாங்க. நைட்டி வாங்கி அனுப்புகோ அண்ணான்னு கண்ணீர் வடிக்கறாங்க. உங்கனால முடிஞ்சா அஞ்சாயிரம் கொடுங்கோ. நைட்டி வாங்கி அனுப்பிடறேன்”

ஏடிமில் எடுத்து கொடுத்துவிட்டு, வந்தான் மூர்த்தி. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதும், செலவுக்குப் பணம் தருவதும் என மூர்த்தியின் சம்பளப் பணம் கறையத் தொடங்கியது. பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பனிடம் அக்கௌண்டில் பணம் போடச் சொல்லி சமாளித்துக் கொண்டான்.

2009 மே மாதம் 16ம் தேதி காலையில் மூர்த்தி மனைவிக்கு லேசான வயிற்று வலி வரவே பெரம்பூர் ரயில்வே மருத்தவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டாள். மூர்த்திக்கு பார்லிமெண்ட் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்குச் செல்ல வேண்டிய அசைன்மெண்ட். நிலைமையை எடிட்டரிடம் விளக்கி லீவ் எடுத்துக்கொண்டான்.

பிரசவ வலியிலும் தேர்தல் முடிவுகளை மூர்த்தியிடம் அவன் மனைவி கேட்டுக் கொண்டே இருந்தாள். தேர்தல் முடிவுகளை மூர்த்தியால் நம்பமுடியவில்லை. ஈழத்திலிருந்தும் மோசமான செய்திகள் வந்து கொண்டிருந்தன.

நள்ளிரவு மூர்த்தி மனைவி ஆண் குழந்தையை பிரசவித்தாள். மறுநாள் காலையில் தான் பிரசவ அறையிலிருந்து வார்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.

“போர் நின்னுடுச்சா?… தலைவர் எங்கே இருக்காரு? எப்படி இருக்காரு?” என்ற மனைவியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போன் பண்ணுவது போல் வார்டுக்கு வெளியே வந்து, ஒரு தூண் மறைவில் நின்று அழுதான்.

அதன்பின்பும் அறிவு அவ்வப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். ஒரு மத்தியான வேளையில், திரைப்பட இயக்குநர் பிரபாகரனை மூர்த்தி சந்தித்தான். அறிவைப் பற்றி பேச்சு வந்தது. ஆர்மிக்காரர்களிடமும் செங்கல்பட்டு முகாமிலிருந்தும் மீண்டு வந்த அறிவைப் பற்றி சொன்னான்.

அறிவை வரவழைத்து இயக்குநரிடம் அறிமுகம் செய்து 

வைத்தான். போர்க்களத்தில் நடந்த தன்னுடைய சாகசக் கதைகளை அறிவு சொல்லும் போது டெப்பில் பதிவு செய்து கொண்ட, இயக்குநர். “மூர்த்தி, அறிவுக்கு நேர்ந்த அனுபவங்களை திரைக்கதையா எழுதி, படமாக்கினா, சர்வதேச அளவில் அளவில ஈழப் பிரச்னைக்கு கவனம் கிடைக்கும்” என்றார்.

அதன்பின்பு அந்த இயக்குநரை அறிவு அடிக்கடி சந்திக்கத் தொடங்கினான்.

சில வாரங்களுக்குப் பின் மூர்த்தியை வரச்சொல்லிய இயக்குநர், “நாம நினைக்கற மாதிரி இல்லே. இந்த அறிவு டக்லஸ் பத்தி என்கிட்டயே பெருமையா பேசறான். அவன் ஒரு ஏஜெண்ட்ன்னு நெனக்கிறேன். டபுள் ஏஜெண்ட்டா இருக்கலாம். வேற வீடு பாத்திட்டேன். புது வீட்டு அட்ரஸை அறிவுக்கு கொடுத்திடாதீங்க. அவன் போன் பண்ணினா நான் எடுக்க மாட்டேன். நீங்களும் ஜாக்கிரதையா இருங்க”

மூர்த்திக்கு இது பயங்கர ஷாக்! தவறான ஆளிடம் பழகிவிட்டோமோ என்று தன் மேலேயே கோபமாக இருந்தது. அறிவும் ஏனோ அதன் பிறகு பேசுவதை குறைத்துக் கொண்டான். வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக கவிதாயினி மூலம் தகவல் கிடைத்தது.

அதன்பின்பு சில மாதங்கள் கழித்து. திரைப்பட இயக்குநர் மணியரசு மகளின் திருமணத்துக்கு மூர்த்தி சென்றிருந்தான். கவிதாயினியும் வந்திருந்தார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“மூர்த்தி, அறிவு வந்திருக்காரு பாத்தீங்களா? மனைவி, குழந்தையை அழைச்சிட்டு வந்திருக்காரு” 

இயக்குநர் பிரபாகரன் அறிவைப் பற்றி சொன்னதை இவரிடம் சொல்லலாமா என்று மூர்த்தி யோசித்துக் கொண்டிருந்தான். அங்கு அறிவு வந்தான். பளபளவென சட்டை அணிந்திருந்தான். மூர்த்தியைப் பார்த்து சம்பிரதாயத்துக்குப் புன்னகை செய்து விட்டு, கவிதாயினியிடம் சிரித்து சிரித்து பேசினான். ஏற்கெனவே சாப்பிட்டு முடித்துவிட்டான் போல, பீடாவை மென்று கொண்டிருந்தான்.

“என் வொய்ஃப் இங்கேதா இருந்தா…”

காற்றில் கையை அசைத்து யாரையோ அழைத்தான். கோட் சூட் அணிந்த எட்டு வயது சிறுவனின் கையை பற்றி இழுத்தபடி அந்தப் பெண் அறிவை நோக்கி வேகமாக வந்தாள்.

உதடு நிறைய சாயம் பூசியிருந்தாள். அவளும் பீடாவையும் குதப்பிக் கொண்டிருந்தாள். கவிதாயினியிடம் அவளும் ஆர்வமாக பேசத் தொங்கினாள். மூர்த்தி அவளை ஏறிட்டான்.

அறிவு சொன்னது போல் வடிவானவள்தான். நெற்றிச்சுட்டி, கழுத்து நிறைய நகைகள், கைகள் நிறைய தங்க வளையல்கள், ஒட்டியாணம் என கல்யாணப் பெண் போல் அலங்கரித்திருந்தாள்.

எல்லாம் தங்க நகைகள். கோட் சூட் அணிந்த அந்தச் சின்ன பையனும் கழுத்தில் கையில் நகை அணிந்திருந்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 60, 70 பவன பவுன் தேறும்! இவர்களைப் பார்த்தால் ஆர்மிக்காரர்களிடம் இருந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்தவர்கள் போல் தெரியவில்லை.

மூர்த்திக்கு ஏனோ அந்த நேரத்தில் கழுத்தில் வெறும் தாலிச் சரடு மட்டும் அணிந்திருக்கும் தன் மனைவியின் முகம் நினைவில் வந்து போனது.

https://www.facebook.com/velu.vetrivel/posts/3282553681814?fref=nf&pnref=story

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.