Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும் - நிலாந்தன்

சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்சாக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள்.

முதலாவது, சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்தையும் ஓரளவுக்கு வறிய சிங்கள மக்களையும் கவர முற்படுகின்றார்கள்.

வரப்போகும் பொதுத் தேர்தலை நோக்கிய ஒரு தயாரிப்பே இது. இது விடயத்தில் ஆட்சிமாற்றத்தை பின்னிருந்து நிகழ்த்தி பொது எதிரணியை தத்தெடுத்து வைத்திருக்கும் சக்திமிக்க வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக முண்டு கொடுக்கும் என்று நம்பலாம்.

இரண்டாவது ராஜபக்சாக்களை அம்பலப்படுத்துவது. நாட்டின் பொதுச்சொத்தை ராஜபக்ச சகோதரர்கள் தனிச்சொத்தாக்கி அனுபவித்தார்கள் என்ற ஒரு தோற்றம் விரைவாக கட்டியெழுப்பப்பட்டு விட்டது. அவர்கள் நவீன ஆட்சியாளர்களைப் போலன்றி பூர்வகாலத்து மன்னர்களைப் போல நடந்துகொண்டார்கள் என்ற ஒரு தோற்றம் உருவாகக்கூடிய விதத்தில் செய்திகளும் வதந்திகளும் பெருகிச் செல்கின்றன.

ராஜபக்ச சகோதரர்கள் பேராசைக்காரர்களாக உல்லாசப்பிரியர்களாக வாழ்ந்ததோடு ஜோதிடம், மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றின் துணையோடுதான் ஆட்சி புரிந்தார்கள் என்ற ஒரு சித்திரத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஆழப்பதிக்கும் விதத்தில் செய்திகளும் வதந்திகளும் பரவி வருகின்றன.

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க ஆட்சியாளர்கள் பலரும், அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடம், மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள்தான். கிட்லர் தனது கடைசிக் காலத்தில் தனது தளபதிகள் சொன்னதைவிடவும் ஜோதிடர்கள் சொன்னதையே அதிகம் செவிமடுத்ததாக ஒரு தகவல் உண்டு.

பொதுவாக படைத்துறை பரிமாணத்தை அதிகம் கொண்ட எல்லா ஆட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் மூடுண்டவைதான். இராணுவ இரகசியங்களும் புலனாய்வு இரகசியங்களும் மர்மங்களும் சூழ்ந்த மூடுண்ட அமைப்புக்களாகவே அவை காணப்படுவதுண்டு. ராஜபக்ச ராஜ்ஜியமும் ஏறக்குறைய அத்தகையதே. அது அதிகம் படைத்துறை பரிமாணத்தைக் கொண்டது. அதாவது யுத்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டது. அதேசமயம் அந்த வெற்றியை குடும்பச் சொத்தாகப் பேண முற்பட்டு அதிகம் உட்சுருங்கிய ஓர் ஆட்சியாகவும் அது காணப்பட்டது. தவிர, மகிந்த ராஜபக்ச பொதுமக்கள் மத்தியில் தோன்றும் போது அவருடைய கைகளில் எதையோ அணிந்திருக்கிறார் என்பது ஊடகவியலாளர்களால் அவதானிக்கப்பட்டும் உள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவையை அவர் தொடக்கி வைத்த போது அவர் தோன்றிய படங்களில் அவரது ஒரு கையில் ஏதோ ஒன்றை அணிந்திருந்தது அவதானிக்கப்பட்டது. இப்பொழுது அவருடைய வீழ்ச்சிக்குப் பின் இவையெல்லாம் அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. அவருடைய ஆட்சியானது நவீன ஆட்சிகளைப் போலன்றி நாகரீகம் அடையாத காலத்து ஆட்சிகளைப் போல ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கை கொண்ட ஓர் ஆட்சியாக இருந்தது என்பதை உருப்பெருக்கிக் காட்டும் விதத்தில் செய்திளும் வதந்திகளும் வந்தவண்ணமுள்ளன.

<p>ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும்</p>

இது தொடர்பில் ஒரு தமிழ் ஊடகவியலாளர் இணையத்தில் பின்வரும் தொனிப்பட எழுதியிருந்தார். 2009 மே க்குப் பின் வன்னிக்குள் கிண்டக் கிண்ட தங்கம் வருகிறது, ஆயுதங்கள் வருகின்றன, வெடிப்பொருட்கள் வருகின்றன என்றவாறாகச் செய்திகளை தென்னிலங்கை ஊடகங்கள் அதிகம் பரப்பின. ஏதோ ஒரு மாயக் கோட்டைக்குள் உள்நுழைய உள்நுழைய புதிது புதிதாக மர்மங்கள் முடிச்சவிழ்வது போல ஒரு தோற்றம் அப்பொழுது உருவாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது ஜனவரி 08 இற்குப் பின் அலரி மாளிகையக் கிண்டக் கிண்ட காசு வருகிறது, தங்கம் வருகிறது இன்னும் என்னவெல்லாமோ வருகிறது என்றவாறான செய்திகள் வருகின்றன.... என்று. இதில் பலவற்றில் உண்மையை விடவும் ஊகங்களும் கட்டுக்கதைகளுமே அதிகம் என்று தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

எனினும் ராஜபக்ச சகோதரர்களைக் கடந்த ஐந்தேமுக்கால் ஆண்டுகளில் தமிழ் மக்கள் அவமதித்ததற்குச் சற்றும் குறையாத விதத்தில் அவரை இப்பொழுது அவருடைய எதிரிகள் அவமதித்து வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு ராஜபக்சாக்களை அம்பலப்படுத்துவது என்பது வரப்போகும் பொதுத் தேர்தலுக்கான ஒரு பிரதான முதலீடாகவே காணப்படுகின்றது.

கடந்த ஒன்பதாண்டுகால தீமைகள் அனைத்திற்கும் ராஜபக்சாக்களே காரணம் என்ற தோற்றம் கட்டி எழுப்பப்படுகின்றது. ஆனால் இது ஒரு பகுதி உண்மை மட்டுமே. ராஜபக்ச ஒரு விளைவு மட்டுமே. அவர் ஒரு காரணம் அல்ல. சில சமயங்களில் விளைவானது ஒரு காரணமோ என்று மயக்கம் தரும் விபரீத வளர்ச்சிகளை பெறுவதும் உண்டு. ராஜபக்சாக்களின் விடயத்திலும் அதுதான் நடந்திருக்கின்றது. நாட்டின் எல்லாத் தீமைகளுக்கும் அவரே காரணம் என்று காட்டப்படுகின்றது. ஆனால் அது ஒரு முழு உண்மை அல்ல. அவர் ஒரு விளைவு மட்டுமே. ஆயின் மூலகாரணம் எது?

மூலகாரணம் இனப்பிரச்சினைதான். ராஜபக்சவும் சந்திரிகாவும், மைத்திரியும் அதன் விளைவுகள்தான். ஜெயவர்த்தனா கொண்டு வந்த மூடுண்ட அரசியல் யாப்பும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையும் அதன் விளைவுகள்தான்.

இனப்பிரச்சினையின் விளைவாகவே சந்திரிகா தலைவியானார். பண்டாரநாயக்காக்கள் தமது ஆண் வாரிசான அனுராவையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு மேலுயர்த்தினர். ஆனால் அவரிடம் தலைமைப் பண்பு இருக்கவிலலை. மற்றொரு சகோதரியான சுனித்திராவுக்குப் பெரியளவில் அரசியலில் ஈடுபாடு இருக்கவில்லை. கணவன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏறக்குறைய அஞ்ஞாதவாசம் பூண்டு ஒதுங்கியிருந்த சந்திரிகா யூ.என்.பி.யின் வீழ்ச்சியை அடுத்து அரங்கினுள் இறங்கினார். யூ.என்.பியின் வீழ்ச்சி எனப்படுவதும் இனப்பிரச்சினையின் விளைவுதான்.

ஆட்சிக்கு வந்த சந்திரிகா, தனது மாமனாரின் உதவியோடு புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஒரு கட்டம் வரையில் வெற்றிகளைப் பெற்றார். ஆனால் புலிகளின் ஓயாத அலைகள் படை நடவடிக்கை, மற்றும் கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீதான படை நடவடிக்கை போன்றவற்றில் ஏற்பட்ட கடும் தோல்விகளின் விளைவாக சந்திரிகா தனது பொலிவை இழந்தார். அதுவே ரணிலுக்கு வாய்ப்பாக அமைந்தது. ரணிலுக்கு மட்டுமல்லாத, மகிந்தவுக்கும் அதுதான் வாய்ப்பாக அமைந்தது. சந்திரிகாவின் அமைச்சரவையில் மகிந்தவை அவர் ரிப்போட்டர் என்றே பூடகமாக அழைப்பதுண்டாம். உட்கட்சி ரகசியங்களை வெளியில் சொல்பவர் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு மகிந்த அழைக்கப்பட்டாராம்.

போரில் ஏற்பட்ட தோல்விகளை அடுத்து சந்திரிகா கட்சிக்குள் பலவீனமுற்றபோது, அதை வாய்ப்பாகக் கையாண்டு மகிந்த மேலெழுந்தார். பண்டாரநாயக்காக்களின் குடும்பச் சொத்தாகக் காணப்பட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ராஜபக்சாக்கள் கைப்பற்றியதும் போரின் ஒரு விளைவுதான். தமிழ் மக்களே ராஜபக்சாவைத் தெரிந்தெடுத்தார்கள். இப்பொழுது தமிழ் மக்களே தோற்கடித்தும் இருக்கிறார்கள். அதாவது ராஜபக்சாக்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் இனப்பிரச்சினையே தீர்மானித்திருக்கின்றது. எனவே மூலகாரணம் இனப்பிரச்சினைதான். அதற்குத்தான் தீர்வு காணப்பட வேண்டும். மாற்றம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் மூலகாரணத்தை இல்லாமல் செய்வதுதான். ஆனால் பொது எதிரணியின் நூறு நாள் திட்டத்திற்குள் அது இல்லை. நூறுநாள் திட்டத்திற்குள் அதை உள்ளெடுக்க முடியாமல் போனது தான் பிரச்சினையே.

ஆனால் மாற்றத்தை ஆதரிக்கும் தரப்புக்களும் அதைப் பின்னிருந்து திட்டமிட்ட தரப்புக்களும் பொது எதிரணியைத் தத்தெடுத்து வைத்திருக்கும் நாடுகளும் இது விடயத்தில் பொது எதிரணிக்கு மேலும் ஒரு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது. அப்படியொரு கால அவகாசம் குறித்து இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஏதும் கனவான் உடன்படிக்கை இருக்கக் கூடும். ஆனால் விளைவை முற்றாகத் தோற்கடிப்பதற்காக நூறு நாள் திட்டத்தை வரைய முடிந்த ஒரு நாட்டினால் மூலகாரணத்தைக் குறித்து கால எல்லையுடன் கூடிய வெளிப்படையான ஒரு வழிவரைபடத்தை உருவாக்க முடியவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தவரைக்கும் தென்னிலங்கையில் ஏற்படக் கூடிய ஆட்சிமாற்றம் தொடர்பாக அந்த இயக்கம் தனக்கென்று ஒரு முடிவை எடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையிலும் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறியும் போது மறுபடியும் போர் வெடிக்கும். ஆனால் இம்முறை ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு எதையும் கொண்டுவரவில்லை என்று தெரியவருமிடத்து அதற்கு வலிமையான எதிர்ப்பைக்காட்ட தமிழ் மிதவாதிகளால் முடியுமா? அதற்குரிய கால எல்லை எது?

தமிழ் எதிர்ப்பு எனப்படுவது கடந்த ஐந்தே முக்கால் ஆண்டுகளாக ஏறக்குறைய பூச்சியமாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் எதிர்ப்புத் தீவிரமாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரங்கில் இப்பொழுது தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு தூலமான வடிவத்தில் இல்லை. தமிழ் எதிர்ப்பு எந்தளவிற்கு உயர்வாக இருக்கிறதோ அந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் பயப்பிராந்தியும் அதிகம் இருக்கும். இனப்பதட்டமும் அதிகரிக்கும்.

ஒவ்வொரு ஜெனிவாத் தீர்மானத்தின் போதும் தமிழ்நாடு கொந்தளிக்கும் போது தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பயப்பிராந்தி அதிகரிக்கக் காணலாம். இம்முறை தேர்தலில் ராஜபக்ச தரப்பு மேற்படி பயப்பிராந்தியை அதிகப்படுத்த முயற்சித்தபோதிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள். இதன் அர்த்தம் சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதல்ல. ராஜபக்ச பெற்ற வாக்குகளை உற்றுப் பகுப்பாய்ந்தால் அது தெரிய வரும். தமிழ் எதிர்ப்பு உள்நாட்டில் அதிகரிக்கும் போது சிங்கள பயப்பிராந்தியானது மறுபடியும் விஸ்பரூபம் எடுக்கும். அது ராஜபக்சாக்களுக்கே வாய்ப்பாக அமையும்.

எனவே, இனப்பதட்டத்தைத் தாழ்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பொது எதிரணியைத் தத்தெடுத்திருக்கும் சக்திமிக்க நாடுகளின் பிரதான இலக்காகும். அவர்கள் அதை இரண்டு தளங்களில் செய்ய முயற்சிப்பார்கள்.

முதலாவது, ராஜபக்ச அணியின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது. அதாவது, போர்க்குற்ற விசாரணையை ஒரு பேரமாகப் பயன்படுத்தி ராஜபக்ச அணியை ஒருகட்டத்திற்கு மேல் தலையெடுக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கலாம்.

இரண்டாவது, தமிழர்கள் தரப்பில் அரங்கிலும் அரங்கிற்கு வெளியிலும் எதிர்ப்பு அரசியலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். இவ்விதம் இலங்கைத் தீவில் இனப்பதட்டத்தை ஒரு தாழ்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஓர் இறுதித் தீர்வுக்குரிய வழிகளை இலகுவாக்க முயற்சிக்கலாம்.

பொது எதிரணியைப் பொறுத்தவரை அது பல்லினத்தன்மைமிக்க வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, அவர்கள் இனவாதத்தை அதன் அசிங்கமான வடிவத்தில் முன்னெடுப்பதற்கு ஒப்பீட்டளவில் வரையறைகள் உண்டு. ஆனால் மகிந்தவிற்கு அது இல்லை. எனவே சக்திமிக்க நாடுகள் மகிந்தவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளைச் சமாளிக்கலாம் என்று நம்பக் கூடும். இது போலவே தமிழர்கள் தரப்பிலும் தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கக் கூடிய சக்திகளைக் கையாளவே முற்படுவார்கள். இது விடயத்தில் என்.ஜி.ஓக்களையும், ஊடகங்களையும், புத்திஜீவிகளையும் கருத்துருவாக்கம் செய்யவல்ல அமைப்புக்களையும் மனிதஉரிமை அமைப்புக்களையும் செயற்பாட்டு இயக்கங்களையும் மதநிறுவனங்களையும் படைப்பாளிகளையும் அவர்கள் கையாள முற்படுவார்கள்.

பொது எதிரணியானது ஏற்படுத்தக் கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த ஒரு சிவில் வெளிக்குள் ஐ.என்.ஜி ஓக்களும் என்.ஜி.ஓக்களும் கருத்துருவாக்க நிறுவனங்களும் புதுப்பலத்தோடு இயங்க முற்படும். இவ்விதம் கிடைக்கக் கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான ஒரு சிவில் வெளியை மேற்சொன்ன அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் நல்லிணக்கத்தை உபதேசிக்கும் புதிய போதகர்களிடம் கையளிப்பதா அல்லது அதற்குள் தமிழ் மென்சக்தியை அதன் மெய்யான பொருளில் கட்டி எழுப்புவதா இல்லையா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

அதாவது புதிய ஆட்சி கொண்டுவரக்கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான சிவில் வெளியை தமிழ் மக்கள் எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பதே இனிவரும் காலங்களில் அதிகம் கவனிப்புக்குரியதாக இருக்கும்.

ஆட்சிமாற்றத்தை தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து கையாள்வது என்பது அங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் அகப் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்தும். அதுதான் தமிழ் மக்களை வெளியாருக்காகக் காத்திருப்பதில் இருந்து ஒப்பீட்டளவில் விடுவிக்கும். அதுதான் வெளிச்சக்திகள் தரக்கூடிய எந்தத் தீர்வையும் எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவித கையறுநிலையில் இருந்த தமிழ் மக்களை விடுவிக்கும். அதுதான் தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து மாற்றத்தை அதன் சரியான பொருளில் ஏற்படுத்தும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=dd73610c-dc77-478d-82f6-7de7a38c8895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.