Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசாங்கத்தின் புதிய வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறீலங்கா அரசாங்கத்தின் புதிய வியூகங்களும் தமிழர்களுக்கான நெருக்கடிகளும்
Feb 08, 20150

Sampathan-Ranil-Maithri-e1423401233747.j

-நிர்மானுசன் பாலசுந்தரம்
 
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம் தொடக்கம் உலகெங்கும் பரந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்களிடம் பாதிக்கப்பட்டோர் என்ற கூட்டு உளவியலை (Psychology of collective victimization) உருவாக்கியிருந்தது. அந்த உளவியல், அதிர்ச்சிக்குள்ளும் தமது பொது எதிராளி யார் என்ற விழிப்பு நிலையுடன், எமது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அல்லது ஏக்கம் பல்வேறு தரப்பிடமும் ஆழப் பதிய காரணமாகியது. அந்த நிலை படிப்படியாக போராடும் மனப்பாங்கை உண்டுபண்ணியது.
 
 
tamil-people-300x184.jpg
தமிழர் தாயகத்தில் தொடர்ந்த திறந்தவெளிச் சிறைச்சாலை நிலைமை அங்கு வாழ்ந்த மக்களின் புறச்செயற்பாடுகளை அடக்கி வைத்திருந்தாலும், அவர்களுடைய அகஉணர்வென்பது தமக்கான எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்ற கேள்விக்கு மத்தியிலும், அவலத்தை தந்த மிகப் பிர-தானமானவருக்கு தக்கபதிலை வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. இதுவே, 2010 சனாதிபதித் தேர்தல் தொடக்கம் அண்மையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் வரை, தமிழ் மக்கள் தமது வாக்குகளை ஆயுதமாக பயன்படுத்தத் தூண்டியது. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான உணர்வை தமக்கிருந்த ஒரேயொரு வெளிப்பாட்டுத் தளமான தேர்தலில் வாக்குகள் ஊடாக ஈழத்தமிழர்கள் பதிவுசெய்தனர். இதுவே ஈழம்வாதிகள் தன்னை தோற்கடித்துவிட்டனர் என மகிந்த தனது சொந்த ஊரில் புலம்பியதற்கு காரணமும் ஆகும்.
 
ஆயினும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகள் சர்வதே ரீதியில் சரியான முறையில் மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக, புதிய சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை தமிழ்மக்கள் அங்கீகரிக்கிறார்கள், அவரது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நீதியும் நிலையான தீர்வும் கிட்டும், ஒற்றையாட்சி முறைமைக்குள் தொடர்ந்தும் வாழமுடியும் போன்ற கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது நீண்டகாலத்தில் தமிழர்களின் தனித்துவ அடையாளம், பண்பாடு, நியாயமான அரசியல் அபிலாசைகள் போன்ற ஒரு இனத்தின் அடிப்படைகள் அருகிப் போவதற்கான சூழலை ஏற்படுத்துவதோடு தமிழ்த் தேசியத்தை பலவீனமடையச் செய்யும்.
 
 
mangala-300x169.jpg
அத்துடன், தமிழர் தேசம் மீது சிங்கள தேசம் மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி தேடும் சர்வதேசரீதியான நடவடிக்கைகள் படிப்படியாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டு, இறுதியில் இல்லாமல் போவதற்கான ஆபத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை மைத்திரி-ரணில் அரசாங்கம் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் மிகக் கைங்கரியமாக மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு அங்கமே, சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட சந்திப்பும், வொசிங்டனில் மேற்கொள்ளவுள்ள சந்திப்பும் ஆகும். இதன் இன்னொரு அங்கமே சனாதிபதியின் விசேட ஆலோசகர் ஜயந்த தனபால ஐ.நா.மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புடைய தரப்புகளை அண்மையில் ஜெனிவாவில் சந்தித்தமையாகும். இவை வெளித் தெரிந்த சிறீலங்காவின் சர்வதேச நகர்வுகள். இதனைவிட தீவிரமாக திரைமறைவில் பல சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.
 
 
LLRC-3-1-300x200.jpgமறுபுறம், இலங்கைத் தீவுக்குள் நல்லாட்சி (Good governance), சனநாயகம் (Democracy), தேசிய ஒருமைப்பாடு (National unity), அபிவிருத்திp(Development) மற்றும் மீள்நல்லிணக்கம்(Reconciliation) போன்ற கருத்தாடல்களை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்குவதன் ஊடாக, உள்நாட்டு பொறிமுறை(Domestic mechanism) அடிப்படையில் சுயாதீன நீதிமன்றங்கள்(Independent judiciary) அமைக்கப்பட்டு உள்நாட்டு பொறுப்புக்கூறும் கடப்பாடு(National accountability) பேணப்பட்டு நீதி வழங்கப்படும் என்ற மாயை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நிலைமாற்று கால நீதி (Transitional justice) போன்ற விடயங்கள் அரங்கேற்றப்பட்ப் போகிறது. இவையெல்லாம் பேரவலங்கள், பெரும் அர்ப்பணிப்புகள் ஊடாக சர்வதேசமயப்பட்ட தமிழரின் உரிமைக்கும் நீதிக்குமான போராட்டங்களை மீண்டும் உள்நாட்டுக்குள் கட்டுப்படுத்துவதற்கான சிறீலங்கா ஆட்சியாளர்களின் உபாயங்கள்.
 
2002 ல் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழிப்பதற்காக சர்வதேச பாதுகாப்பு வலை (International Safety Net) ரணில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது போல, தற்போது, மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் உள்ளக பாதுகாப்பு வலை (Internal Safety Net) உருவாக்கப்பட்டுவருகிறது. புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள், நாட்டைவிட்டு வெளியேறிய முன்னால் போராளிகள் மற்றும் உயிராபத்து காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஊடாகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தது. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுத் தளத்துக்கு தமிழ்நாட்டிலுள்ள ஈழஅகதிகளும் ஒரு காரணம். இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் முன்னால் போராளிகளில் கணிசமான எண்ணிக்கையினர் இனஅழிப்பின் சாட்சிகளாக உள்ளனர். அடுத்து உயிராபத்து காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஊடாகவியலாளார்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புலம்பெயர்ந்து வாழும் சில சிங்கள ஊடகவியலாளர்களுடன் கூட்டிணைந்து சிறீலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற ஆதாரங்களை அம்பலப்படுத்தி வந்துள்ளதோடு சிறீலங்காவுக்கான அழுத்தத்தை அதிகரிக்கும் முகமாக இராசதந்திரிகளுடனும் தொடர்புகளை பேணிவருகின்றனர். இத்தகைய செயற்பாடுகளை முடக்கும் நோக்குடனேயே, மேற்கூறிப்பிட்;ட மூன்று தரப்புகளையும் நாடுதிரும்புமாறு சிறீலங்காவின் புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
 
 
Ruwan-Wijewardene-300x193.jpg
மேற்குறிப்பிட்ட காரணிகள், வரலாற்றில் என்றுமே சந்தித்திராத சர்வதேச கண்டனங்களையும் அழுத்தங்களையும் சிறீலங்கா மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முகம்கொடுப்பதற்கு வழிகோலியது. அவற்றை சரிவர கணிப்பீடு செய்துள்ள புதிய அரசாங்கம் தமிழர்களை உள்நாட்டுக்குள் கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயமாகவே (Containment strategy) மேற்குறிப்பிட்டுள்ள மூன்று தரப்பினரையும் இலங்கைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், சர்வதேச பரப்பில் வேறுசில முக்கிய நகர்வுகளையும் முடுக்கிவிட்டுள்ளது. அதேவேளை, சிறீலங்காவின் இராணுவ புலனாய்வுத் துறை, பயங்கரவாத விசாரணை திணைக்களம் போன்றவற்றின் செயப்பாடுகள் தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்துடைப்பு நடவடிக்கைகளுக்காக சில செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் தமிழர் நலன்சார்ந்து பொருமாற்றங்கள் நிகழப் போவதில்லையென்பதையே திரைமறைவில் அரங்கேறும் காட்சிகள் புலப்படுத்துகின்றன.
 
 
Sampanthan-with-Ranil-300x168.png
எமக்குரிய பெரும் சவால்களையும், அது நீண்டகாலத்தில் எம்மை எவ்வாறு பாதிக்கப்போகிறது, அதனை உருவாக்குவோர் யார் போன்ற விடயங்களை தமிழ் மக்கள் உணரமுடியாத வகையில் ஒரு உளவியல் போரரங்கு மிகநுட்பமாக திறக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்த சூழலுக்கு, தம்மையறியாமலேயே பாதிக்கப்பட்ட தமிழர்களும் காரணமாகிவிட்டார்கள். அல்லது இத்தகைய சூழலுக்கு தமிழ்மக்கள் வழிநடாத்தப்பட்டு விட்டார்கள். தமக்கு எதிராக கருக்கட்டும் உச்சக்கட்ட நெருக்கடிகளையும் அதற்கு காரணமானவர்களையும் அறியாமல், ஒரு பொறிவலைக்குள் சிக்குண்டுள்ளதையும் புரியாமல் வாழும் சூழலே ஒரு இனம் சந்திக்கக்கூடிய பேராபத்தாகும். அத்துடன், முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் எமக்கென எந்தப் பலமும் இல்லையென தமிழர்களை நம்பவைக்கும், தோல்வி மனப்பான்மையை அதிகப்படுத்தும் உளவியல் போர் முன்னெடுக்கப்பட்டது. அது, தமது பலத்தையும் தமிழினம் புரியாமல் இருப்பதற்கு வித்திட்டது. குறிப்பாக தமிழர்கள் சார்பாக அமைந்த பூகோள அரசியலையே புரிந்து செயற்படாமல் அது கட்டுப்படுத்திவிட்டது. ஆனால், தமிழர்களை விட தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களின் பலத்தை நன்கு கணிப்பிட்டு தமக்கு சார்பான முறையில் காய்களை நகர்த்தியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது என்ற அடிப்படையின் கருவுக்கான காரணங்கள் இதுவே.
 
 
GUE-NGL6-93598-445-300x199.jpg
இத் தருணத்தில், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழர் தேசத்தை நீண்டகாலத்தில்  பலவீனப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் நகர்வுகளையும், உள்நாட்டு பொறிமுறைகள் தமிழ்மக்களுக்கு நீதியை வழங்காது என்ற கடந்தகால படிப்பினையையும், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்;தோரின் குள்ளநரித்தனத்தையும் கருத்தில்கொண்டு, தமது உரிமைக்காகவும் நீதிக்காகவும் என்றுமே இல்லாத அளவுக்கு தமது அறவழிப் போராட்டங்களை தமிழ் மக்கள் வலுப்படுத்த வேண்டும். எமது நிலம், எமது கடல், எமது நீர் எமக்கு வேண்டும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், காணமல் போன உறவுகளுக்கான பதில் மற்றும் சர்வதேச சுதந்திர விசாரணையே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பது பயனுள்ளதாகும்.  இத்தகைய போராட்டங்கள் தாயகம், தமிழகம் மற்றும் புலம் ஆகிய மூன்று தளங்களிலும் கூட்டிணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு செயற்திறன் மிக்க தொடர்பாடல் அவசியம். இத்தகைய போராட்டங்களை தாயகத்தில் முன்னெடுக்க முடியாமல் போகுமிடத்து, அதற்குதரிய காரணங்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Assembly) , கருத்துச் சுதந்திரம் (Freedom of Expression) போன்றவை சனநாயகத்தின் பண்புகள். புதிய அரசாங்கம் சனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்ற கோசத்துடனேயே ஆட்சிக்கு வந்தது. ஆகவே, இந்த ஆட்சியிலும் தமிழர்களுக்கு உரிமை, நீதி, சுதந்திரத்தை உள்ளடங்கிய சனநாயகம் மறுக்கப்படும் போது அதனை வெளியுலகுக்கு காலதாமதமின்றி வெளிப்படுத்துவதன் ஊடாக சிறீலங்கா ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தலாம்.
 
 
tamils-protest-300x199.jpg
அதேவேளை, தாயகத்தமில் வாழும் உறவுகளின் அடிப்படைக் கட்டுமானங்களை மீளக்கட்டியெழுப்பவும், மனிதாபிமான உதவிகளை பூர்த்தி செய்யவும் புலம்பெயர் தமிழர்கள் வினைத்திறன் மிக்க கட்டமைப்பொன்றினை பொதுத்தளத்தில் இதயசுத்தியுடன் கூட்டிணைந்து உருவாக்க வேண்டும். அத்துடன், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமது உத்திகள், உபாயங்கள் நடைவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். ஏனெனில், சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழின அழிப்பை மேற்கொள்வதையே இலக்காக கொள்ளினும், அதனை முன்னெடுப்பவர்களும், அவர்களின் திட்டங்களும் புதிய அணுகுமுறைகள், உத்திகள், உபாயங்களோடு புதிய செயல்வடிவம் பெறுகின்றன. ஆகவே, அதனை எதிர்கொள்ளக் கூடிய வகையில் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்கால செயல்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். சிறீலங்கா அரசை பாதுகாப்பதற்காக கீரியும் பாம்பும் போல் ஜென்ம விரோதிகளாக இருந்த சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றிணையும் போது, ஒரு இலக்குக்காகவே போராடிய போராடும் தமிழர்கள், ஏன் தமிழர்களின் எதிர்காலத்தை பேணிப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய முடியாது?

http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%9F%E

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசை பாதுகாப்பதற்காக கீரியும் பாம்பும் போல் ஜென்ம விரோதிகளாக இருந்த சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றிணையும் போது, ஒரு இலக்குக்காகவே போராடிய போராடும் தமிழர்கள், ஏன் தமிழர்களின் எதிர்காலத்தை பேணிப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய முடியாது?

 

பதில் ரொம்ப சுலபம்...

அவன் நாட்டுக்கு என்ன நன்மை என வாழுகின்றான்

நாம்

இதனால் நமக்கு என்ன நன்மை என்ற கேள்வியே முதலில் எழுப்புகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.