Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை

10.02.2015

வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப் பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய் மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும் ஆகியிருக்கிறது. அந்தவகையில் கௌரவம் மிக்க இந்தச் சபையி;ல் இதுபற்றிச் சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சுன்னாகம் அனல் மின்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளில், இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால் (Srilanka Standard Institute) குடிநீரில் இருக்கலாம் என அனுமதிக்கப்பட்ட எண்ணெய் மாசின் அளவைவிட (1மில்லிகிராம்ஃ இலீற்றர்) அதிக அளவில்  எண்ணெய் மாசாக உள்ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் நீர்ப்பகுப்பு ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. இதே கிணறுகளில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொண்ட ஆய்வுகளிலும் எண்ணெய் மாசு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாசுக்கான காரணம்

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்திருப்பதற்கு சுன்னாகத்தில் உள்ள அனல் மின்நிலையமே காரணமாகக் கருதப்படுகிறது 1958ஆம் ஆண்டுமுதல் சுன்னாகத்தில் அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது.

1.    ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான டீசல் அனல் மின்பிறப்பாக்கியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. யுத்தகாலத்தில் விமானக்குண்டு வீச்சால் சேதமடைந்த எரிபொருள் தாங்கியில் இருந்து 1500 கன மீற்றருக்கும் அதிகமான டீசல் வெளியேறியுள்ளது. ஒருபகுதி டீசல் எரிந்துபோக, பெரும்பகுதி அருகாமையில் உள்ள தாழ்வான குளத்தை நோக்கி வடிந்தோடியுள்ளது. இது ஊர்மக்களால் எண்ணெய்க் குளம் எனஅழைக்கப்பட்டுள்ளது.

2.    இதன்பின்னர் சுன்னாகம் அனல்மின் நிலைய வளாகத்தில் 2009ஆம் ஆண்டுவரை அக்றிக்கோ (யுபபசமைழ)  என்னும் நிறுவனத்தால் டீசல் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. போர்க்காலம் என்பதால் இப்பகுதியினுள் வேறுயாரும் சென்று வரமுடியாத நிலையால் சுற்றாடல் அதிகாரிகளால் எவ்வித கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். நிலத்தடி நீரை மாசுறுத்தியதில் அக்றிக்கோ நிறுவனத்துக்கும் பங்கு இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 12.11.2014 திகதியிட்ட அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

3.    அக்றிக்கோ நிறுவனத்தின் பின்னர் நொதேண் பவர் (Northern Power)  என்ற நிறுவனம் நீதிமன்றால் அண்மையில் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை டீசல் மின்பிறப்பாக்கிகளின் மூலம் மின் பிறப்பித்து வந்துள்ளது. 2013ஆம் ஆண்டே இந்நிறுவனத்துக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி (Environmental Protection License) இலங்கை முதலீட்டுச் சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் இந்நிறுவனமும் சுற்றாடல் தொடர்பான அக்கறையின்றியே இயங்கியிருக்கின்றது. அக்றிக்கோ நிறுவனம் எண்ணெய்க் கழிவுகளை வெளியேற்றிய இடத்திலேயே இந்நிறுவனமும் தொடர்ந்து வெளியேற்றிவந்திருக்கிறது. அத்தோடு இந்நிறுவனத்தின்  மின்பிறப்பாக்கி, புதியது அல்ல. வெளிநாட்டில் இருந்து பாவித்தநிலையிலேயே தருவிக்கப்பட்டுள்ளது.

4.    சுன்னாகம் அனல் மின் நிலையவளாகத்தில் 2014ஆம் ஆண்டுமுதல் இலங்கை மின்சாரசபை உத்துறு ஜனனி என்ற மின்நிலையத்தை இயக்கி வருகிறது. நவீன இலத்திரனியல் தொழில்நுட்பத்துடன்கூடிய புதிய மின்பிறப்பாக்கி என்பதால் இதனால் இதுவரையிலும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகள்

தூய குடிநீர் பெறுவது ஒருவரின் அடிப்படை மனிதஉரிமைகளில் ஒன்று. அதை வழங்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை.  அந்த வகையில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசாக் கலந்திருக்கும் இவ்விவகாரத்தை உரிய முறையில் எதிர் கொண்டு மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரைக் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு, இலங்கை மத்திய அரசுக்கு மாத்திரம் அல்லாமல் வடக்கு மாகாண சபையினராகிய எங்களுக்கும் உண்டு. அதனடிப்படையில், நாம் இது தொடர்பாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. குடிநீர் விநியோகம் - பாதிக்கப்பட்ட வலிதெற்கு, வலிவடக்குப் பிரதேசசபைகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் குடிநீரை விநியோகித்து வருகின்றன. இப்பிரதேச சபைகளுடன் இணைந்து எனது அமைச்சுக்கு உட்பட்ட நீர்வழங்கல் பிரிவின் நீர்த்தாங்கி வாகனங்களின் மூலமும் நீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. மத்திய அரசின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் நீர்வழங்கல் வடிகால்சபையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மருதங்கேணியில் அமையவுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம்      பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்குக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதும்  இங்கு குறிப்பிடத்தக்கது.

2. நிபுணர் குழு - விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் பெறப்படும் துல்லியமான முடிவுகளே சரியான தீர்வுக்கும், சட்ட நடவடிக்கைகளுக்கும் அவசியம் என்பதால் வடக்குமாகாண கௌரவ முதலமைச்சரின் பணிப்பின்பேரில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்வதற்காக நிபுணர்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம்,  பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துறைசார் வல்லுநர்களைக் கொண்டுள்ள இந்நிபுணர்குழு எண்ணெய் மாசின் மூலம், அது பரவும் திசை, குடிநீரில் உள்ள மாசுக்களின் வகைகள் மற்றும் அளவுகள், எண்ணெய் மாசு இப்போதும் பரவுமாயின் அதனைத் தடுப்பதற்கான பொறிமுறைகள், எண்ணெய் மாசை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றைக் கண்டறியும் நோக்கில் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவர்களது ஆய்வுக்கு கொழும்பில் இயங்கும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகமும் (Industrial Technology Institute-ITI)  அனுசரணை வழங்கிவருகிறது. இது இலங்கை மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள்  யாழ்ப்பாணம் வந்து எமது நிபுணர்குழுவுடன் இணைந்து நீர்மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், தொண்டைமானாறில் அமைந்துள்ள வடமாகாண நீரியல் ஆய்வு மையத்திலும் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Ground Penetration Radar (GPR) என்ற றேடார் உபகரணத்தைப் பயன்படுத்தி நிலத்தின்கீழ் உள்ள எண்ணெயின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக நேற்றைய வடமாகாண அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

நீரில் எண்ணெய் கலந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுக்குத் தற்போது 5மணித்தியாலம் செலவாகிறது. இதைக்கருத்திற்கொண்டு எண்ணெய் கலந்துள்ளதா இல்லையா என்பதை உடனடியாகவே தெரிந்து கொள்ளக்கூடிய 1.3மில்லியன் ரூபா பெறுமதியான கருவி ஒன்று அமெரிக்காவில் இருந்து உடனடியாகத் தருவிப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகள்  அன்பளிப்பாக இதனை வழங்க உள்ளனர்.

சுன்னாகம் அனல் மின்நிலையம் தவிர்ந்த வேறு காரணிகளும் எண்ணெய் மாசுக்குக் காரணமாக அமைந்துள்ளனவா என்பது தொடர்பிலும் நிபுணர்குழு கவனம் செலுத்தும். ஆய்வுகள் யாவும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை ஒருமாதக்காலத்தினுள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. தூய குடிநீருக்கான செயலணி - மாகாணசபை தனித்து இயங்காமல் மத்திய அரசின் துறைகளும் இணைந்து செயற்பட்டாலே தீர்வினை விரைந்து எட்டமுடியும் என்பதால் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சரின் இணைத்தலைமையின் கீழும் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரின் துணைத்தலைமையின் கீழும் தூய குடிநீருக்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டள்ளது. இச்செயலணி வாராந்தம் ஒன்றுகூடி இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்பற்றி மீளாய்வு செய்வதோடு, அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தீர்மானிக்கிறது.

வடக்கு மாகாண சபை எதிர்கொள்ளும் சவால்கள்

1.    நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு என்பது வடக்குக்கு மாத்திரம் அல்ல, இலங்கைக்கே இதுவரையில் முன்னுதாரணம் அற்ற ஒரு அனர்த்தம் என்பதால் இதனை எதிர் கொள்வதில்; சில தடங்கல்களும் தயக்கங்களும் நிலவுகின்றன. இதனால் பொருத்தமான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு செயற்படுத்துவதில்; கால தாமதம் ஏற்படுகிறது.

2.    குடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றும் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களும், மருத்துவர்களும் கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளை தூயநோக்கோடு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இது அவசியமானதும்கூட.

ஆனால், இந்த ஜனநாயக வாய்ப்பைப் பயன்படுத்திப் பிரச்சினையின் பரிமாணத்தை மிகப்பன்மடங்காக உருப்பெருப்பித்துச் சுய இலாபம் பெறப் பல்வேறு சக்திகளும் களம் இறங்கியுள்ளன. இவற்றில் சில குடிநீர் வணிகநிறுவனங்களும், இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று  எப்பாடுபட்டாவது யாழ்ப்பாண மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படவேண்டும் என்று படாதபாடுபட்டவர்களும், வடமாகாண சபைக்கு எதிராகக் மக்களைத் திசைதிருப்பவேண்டும் என்று காத்துக் கிடப்பவர்களும் அடங்குகின்றனர். இவர்களது பரப்புரையால் மக்கள் பதட்ட நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுக் கிணற்றில் மிதக்கும் தூசிப்படலத்தையும்கூட எண்ணெய் என்று நம்பிக் குடிநீருக்கு அலையும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆய்வின் செல்திசையைக் குழப்புவதாக அமைவதோடு, உண்மையாக எண்ணெய் மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எங்களால் போதிய கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்பதையும் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்து, எல்லாத் தடங்கல்களையும் தாண்டி இக்குடிநீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு விரைவில் எட்டப்படும் என்று உறுதிகூறி அமர்கின்றேன்.

பொ.ஐங்கரநேசன்

அமைச்சர்

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,

உணவு வழங்கல், நீர் வழங்கல் நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு,

வடமாகாணம்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116479/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.