Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்துவிட்ட மகேந்திர ஜாலக்காரன்

Featured Replies

காட்சி 1

அதிகாலை நேரம்

இருள் விலகத்துவங்கியிருக்கிறது

திருநெல்லி மலைப்பகுதி

வயநாடு மாவட்டம்

கேரளம்

வளைந்து நெளிந்து கரடுமுரடான மலைப் பாதைகளுடன் மல்லுக்கட்டி, முகடுகளை நோக்கி இரைந்துசெல்லும் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் கார்.

அதில் ஐந்துபேர் நெரிசலாக அமர்ந்திருக்கிறார்கள்.

தோ பிகா ஜமீன், மதுமதி, ஆனந்த், செம்மீன் போன்ற இந்திய சினிமாவின் எக்காலத்திற்குமுறிய படங்களுக்கு அதிசய இசையமைத்த மாமேதை சலில் சௌதுரி, பல தேசிய விருதுகள் பெற்ற செம்மீன் திரைப்படத்தின் இயக்குநர் ராமு காரியாட், அவரது துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது பெற்ற எஸ் எல் புரம் சதானந்தன். இவர்களுடன் பெஞ்சமின் பாலநாதன் மகேந்திரா எனும் இளைஞன். வரும் காலத்தில் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளனாகப் போவதை கனவு கண்டோ என்னவோ அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்! அந்த ஆழ்ந்த அதிகாலைத் தூக்கத்தை சலில் சௌதுரியின் குரல் கலைத்து விடுகிறது.

“ஆகா.. என்னவொரு அற்புதமான காட்சி! காலைச் சூரியன் பச்சை மலைகளுக்கு பின்னாலிருந்து அதோ எழுந்து வருகிறது. ஆழ்தடத் தாழ்வாரங்கள் ஒளிர்ந்து மின்னுகிறது.. பாலு.. இதை நீங்கள் இப்போதே படமெடுக்க வேண்டும். நாம் இன்றைக்கு படப்பிடிப்பு துவங்கப்போகும் ’நெல்லு’ படத்திற்காகவே“.

கார் நிறுத்தப்படுகிறது. பாலு மகேந்திரா வெளியே இறங்கி அக்காட்சியைப் பார்க்கிறார். தனது கேமராவை எடுத்து அதை படமாக்க ஆயத்தமாகிறார். இருள் விலகிவரும் அந்த தாழ்வாரங்களை விட, புல்நுனிகளிலிருந்து உதிரும் பனித்துளிகளுக்குமேல் விழும் சூரிய ஒளியை படமாக்கத்தான் அவர் விரும்புகிறார். ஆனால் புல்களில்மேல் போதுமான அளவிற்கு பனித்துளிகள் இல்லை! ஒரு கணம் யோசித்த பாலு மகேந்திரா அனைவரையும் வரிசையாக நின்று புல்களின் மேல் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார்! அனைவரும் ஒத்துழைக்கிறார்கள்! சிறுநீர் துளிகளின்மேல் சூரியக் கதிர்கள் விழுந்து மஞ்சள் ஓளி பரப்புவதை பாலு மகேந்திராவின் கேமரா படமாக்குகிறது...

காட்சி 1/1

இரவு

திருவனந்தபுரம்

கேரளம்

1974ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா.

சிறந்த வண்ணத் திரைப்பட ஒளிப்பதிவாளனுக்கான விருது பெற்றுக்கொள்கிறார் பாலு மகேந்திரா. சிறுநீர்த்துளிகளை தனது கேமராவினால் பனித்துளிகளாக்கிய அந்த மகேந்திர ஜாலத்திற்காக...

காட்சி 2

அந்தி சாயும் நேரம்

1982 காலம்

சாகரா திரையரங்கம்

கட்டப்பன

கேரளம்

பதிமூன்று வயதான ஒரு சிறுவன், பாலு மகேந்திரா இயக்கிய ’ஓளங்ஙள்’ மலையாள திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். திரையில் அழகான ஒரு ஆண்குழந்தை அசாத்தியமான முறையில் கால்பந்து விளையாடுகிறது. அக்குழந்தையின் மின்னல்வேகம் கொண்ட கால்களின் அசாத்தியமான காட்சிகள்... இருட்டில் தெரியும் ஒரு நீர்வீழ்ச்சி மெல்ல மெல்ல ஒளிமயமாகிறது! இருட்டை விலக்கி ஒரு புது பகல் பிறப்பதுபோல்! இளையராஜாவின் அற்புதப் பாடல்கள்.. அவற்றிற்கு பாலு மகேந்திரா அளித்த கனவு போன்ற காட்சிகள்... ஒரு காட்சி பாதியில் முறிந்துபோகிறது! ஆனால் அதில் பேசப்பட்டுகொண்டிருந்த வசனங்கள் அடுத்த காட்சிக்குமேல் அசரீரியாக தொடர்கிறது! இதெல்லாம் என்ன மாயவித்தை என்று வியந்துபோகிறான் அச்சிறுவன். அதுவரைக்கும் பிச்சாத்திக் குட்டப்பன், தெம்மாடி வேலப்பன், ரௌடி ராஜம்ம, பட்டாளம் ஜானகி, மனுஷ்ய மிருகம், இடிமுழக்கம் என மலையாள அடிதடிப் படங்களை மட்டுமே பார்த்து வந்த அவனது சினிமா ரசனையை பாலு மகேந்திராவின் ’ஓளங்ஙள்’ என்றைக்குமாக மாற்றியமைக்கிறது.

காட்சி 3

சென்னை மாநகரம்

காலம் 2004

முந்தைய காட்சியில் பார்த்த சிறுவன் இப்போது 34 வயது முதிர் இளைஞனாக காட்சியளிக்கிறான். இக்காலகட்டங்களுக்கிடையே அவர் நெல்லு, ப்ரயாணம், ராகம், சட்டக்காரி, சுவந்ந ஸந்த்யகள், சீனவல, உள்க்கடல் போன்ற மலையாளப் படங்களில் பாலு மகேந்திரா கையாண்ட இயல்பானதும் வித்தியாசமானதுமான ஒளிப்பதிவின் தீவிர ரசிகனாகியிருந்தார். பாலு மகேந்திரா முதன்முதலில் இயக்கிய திரைப்படமான கோகிலா (கன்னடம்), அதன் மலையாள வடிவம் ஊமக்குயில், அவர் இயக்கிய தெலுங்கு படமான நிரீக்‌ஷணா, அதன் மலையாள வடிவம் யாத்ரா, இந்திப்படமான ஸத்மா, அதன் தமிழ் வடிவம் மூன்றாம் பிறை போன்றவற்றை பார்த்திருந்தார் அவர். அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி போன்ற பாலு மகேந்திராவின் தமிழ்ப் படங்களையும் அவர் ஆழ்ந்து ரசித்திருந்தார்.

இசைமேதை சலில் சௌதுரியின் அதிதீவிர ரசிகனான அந்த இளைஞன், பாலு மகேந்திராவுக்கும் சலில் சௌதுரிக்குமிடையே இருந்த ஆழ்ந்த உறவைப் பற்றி நன்கு அறிந்தவர். நெல்லு, ராகம் போன்ற படங்களினூடாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட புரிதலும் நட்பும் தான் கோகிலாவின், அழியாத கோலங்களின் அதிசய இசையாக வெளிப்பட்டது என்பது அந்த இளைஞனுக்கு தெரியும். 1995ல் மறைந்துபோன சலில் சௌதுரியின் நினைவிலான அற நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளராகயிருக்கிறார் அந்த இளைஞன் தற்போது. அவர் முகத்தில் ஒரு வகையான பதற்றத்தைக் காணலாம். ஏன் என்றால் அவர் தனது ஆதர்சங்களில் ஒருவரான பாலு மகேந்திராவிடம் முதன்முறையாக தொலைபேசியில் பேசப்போகிறார்.

பாலு மகேந்திராவுக்கு இப்போது 65 வயது. மூளையில் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நிற்கவும் நடக்கவும் பேசவும் கூட சிரமப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார். அந்த இளைஞனின் தொலைபேசி அழைப்பு வருகிறது. சலில் சௌதரியின் நினைவு நாளையொட்டி நடக்கப்போகும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வேண்டுதல் தான் அது. சலில் சௌதுரியின் பேரைக் கேட்டதும் உற்சாகமடைகிறார் பாலு மகேந்திரா! “எனக்கு நிற்பதும் நடப்பதும் கூட கடினம். இருந்தும் சலில்தாவின் நினைவிற்காகத் தானே. அவசியம் வருகிறேன்” என்று சொல்கிறார்.

காட்சி 4

2004 நவம்பர் 19

மாலை நேரம்

சென்னை மாநகரம்

ம்யூசிக அகாடமி அரங்கம்

மேடையில் பாலு மகேந்திரா, இளையராஜா, பத்மா சுப்ரமணியம், சலில் சௌதுரின் மனைவி சபிதா சௌதுரி. மேடைக்கு பின்னால் சலில் சௌதுரியின் மகன், மகள். அவர்களுடன் முன் காட்சிகளில் பார்த்த அந்த இளைஞன்.

உடல் நலக்குறைவினால் அமர்ந்துகொண்டே உறையாற்றுகிறார் பாலு மகேந்திரா.

” கடந்த கால் நூற்றாண்டு காலமாக எனது படங்களின் இசையமைப்பு சார்ந்து நண்பர் இளையராஜாவுடன் அமர்ந்த ஒவ்வொரு முறையும் சலில் சௌதுரி பற்றியும் அவரது இசை வல்லமை பற்றியும் நாங்கள் மணிக்கணக்காக பேசாத நாட்களில்லை. சலில்தாவைப் போன்ற ஒரு இசை மேதையை, இனிமையான மனிதரை எனது வாழ்நாளில் நான் சந்தித்ததேயில்லை. அவர் போன்ற மாமேதைகள் ஒருபோதும் இறக்கப் போவதில்லை” என்று கண்ணீர் துளிர்க்க தன் உரையை முடிக்கிறார் பாலு மகேந்திரா. தொடர்ந்து வரும் இசை நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்களுக்காக சலில்தா இசையமைத்த அழியாப் பாடல்கள் பாடப்படுகிறது...

...நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை

எண்ணங்களும் மறைவதில்லை.....

காட்சி 5

2006 காலம்

மதிய நேரம்

சென்னையில் ஒரு உணவு விடுதி

பாலு மகேந்திரா, எழுத்தாளர் ஜெயமோகன், முன் காட்சிகளில் பார்த்த அந்த இளைஞன்.

சில மணி நேரம் நீண்ட உரையாடல். இலக்கியம், இசை, சினிமா, தனது திரைப்படங்கள், தனது வாழ்க்கை, மனித உறவுகள், பெண்கள், காதல், காமம் என பரந்து ஒழுகிய பேச்சு அது. தான் ஆரம்பிக்க விரும்பும் திரைப்படக் கல்லூரியைப் பற்றியான தனது கனவுகளை விரிவாக பேசுகிறார் பாலு மகேந்திரா. திரைப்படமாக்கத் தகுந்த சில கதைகளைப்பற்றி ஜெயமோகனிடம் விவாதிக்கிறார். ”சலில்தாவின் குழந்தைகள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்களா?” என்று சலில் சௌதுரியின் குடும்பத்தினரை பற்றி அந்த இளைஞனிடம் நலம் விசாரிக்கிறார்.

காட்சி 6

ஒட்டிணைப்புக் காட்சிகள் (Montages)

சென்னை நகரில் நடக்கும் பல இலக்கிய, சினிமா நிகழ்வுகள்.

சிலவற்றில் மேடை விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருக்கிறார் பாலு மகேந்திரா. மேடைப் பேச்சுகளில் “எனக்கு இனி காலம் அதிகமில்லை. அதனால் நான் இதை இங்கு சொல்லித்தான் தீரவேண்டும்” என்று சிலவற்றை தொடர்ந்து சொல்கிறார். பொதுவான உடல் நலக்குறைவும், சில நேரம் மன அழுத்தமும் அவரது உடல்மொழியிலும் வார்த்தைகளிலும் தென்படுகிறது. பல இலக்கிய நிகழ்ச்சிகளில் தனியனாக உள்ளே வந்து பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்துகொள்கிறார். ஆனால் அவரது நீண்டு மெலிந்த உருவமும், என்றும் இளமையான உடைகளும் எந்தவொரு கூட்டத்திற்கு நடுவேயும் அவரை தனித்து அடையாளம் காட்டுகின்றன! மங்கலான உரப்புப் பருத்தி கால்ச் சட்டையும் தொப்பியும், தடித்த பருத்திச் சட்டை.

சில நிகழ்வுகளில் முன் காட்சிகளில் பார்த்த இளைஞனும் இருக்கிறார். அவர் பாலு மகேந்திராவின் பக்கத்தில் அமர்ந்து பேசுகிறார். இசை, இலக்கியம், அன்றைக்கு நடக்கும் நிகழ்ச்சி என பலதரப்பட்ட விஷயங்கள். மலையாள சினிமாவின் சமகாலப் போக்குகள் பற்றி அந்த இளைஞனிடம் ஆர்வமாக கேட்கிறார் பாலு மகேந்திரா.

காட்சி 7

பகல்

காலம் 2013 செப்டம்பர்

சென்னை

’பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை’ திரைப்படக் கல்லூரி.

முன் காட்சிகளில் பார்த்த அந்த முன்னாள் இளைஞன் இப்போது 44 வயதாகி தொப்பையும் தொந்தியுமாக நடந்துவருகிறார். 74 வயதான பாலு மகேந்திராவோ உடலில் தளதளப்பேதுமில்லாமல் கம்பீரமாக தனது அறைக்குள்ளே அமர்ந்திருக்கிறார். எப்போதும்போல தனித்துவமானது, இனிமையானது அவரது ஆங்கிலப் பேச்சு. அந்த முன்னாள் இளைஞனிடம் அவர் உரையாடுகிறார்.

முன்னாள் இளைஞன்: ஐயா.. தரமான மலையாள சினிமாவில் எனது ஆதர்ச இயக்குநரான கே ஜி ஜார்ஜைப் பற்றி சில நண்பர்கள் ஒரு ஆவணப் படமெடுக்கிறார்கள். அதில் அவரைப்பற்றி நீங்கள் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று உங்களிடம் வேண்டித்தான் வந்திருக்கிறேன். நீங்கள் பணியாற்றிய முதன்முதல் திரைப்படத்தின் துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ். உங்களது நெருங்கிய நண்பர். பின்னர் அவர் இயக்கிய சில படங்களுக்கு நீங்கள் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள். குறிப்பாக உள்க்கடல் என்ற படம். அப்படத்தின் கதாநாயகி உங்களது கண்டுபிடிப்பான சோபா. சோபாவுடன் உங்களுக்கு இருந்ததாக கூறப்பட்ட உறவையும், பின்னர் நிகழ்ந்த சோபாவின் தற்கொலையையும் கதைக்கருவாக்கி கே ஜி ஜார்ஜ் 1983ல் ’லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக்’ என்ற திரைப்படம் இயக்கினார். அத்துடன் உங்களுக்கிடையேயான நட்பு உடைந்துபோனது. அல்லவா?

பாலு மகேந்திரா: ஆமாம். அப்போது அவன் மீது எனக்கு மிகுந்த வருத்தமும் கோபமும் இருந்தது. ஒரு நண்பனின் தனிமனிதத் துயரத்தை அவன் எப்படி வணிக நோக்கத்துடன் பொதுமக்கள் நுகர்வுக்கு வைக்கலாம் என்று யோசித்து ஆத்திரம் அடைந்திருக்கிறேன். ஆனால் இப்போது ஜார்ஜ் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு நேர்ந்த மூளை ரத்த அழுத்தத்தாலான பக்கவாதம் சமீபத்தில் அவனையும் கடுமையாக தாக்கியது என்று அறிந்து நான் மிகவும் சங்கடமடைந்தேன். ஜார்ஜ் ஒரு மகத்தான கலைஞன், மகத்தான இயக்குநர். அதில் எந்த சந்தேகமுமில்லை.

முன்னாள் இளைஞன்: ’லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக்’ படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பாலு மகேந்திரா: இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை.

முன்னாள் இளைஞன்: ஐயா.. என்னோட திரை ரசனையின் படி ’லேகயுடெ மரணம் ஒரு ஃப்லாஷ் பேக்’ ஒரு மிகச் சிறந்த படம். அப்படத்தில் நீங்கள் என்று சொல்லப்படும் பாத்திரத்தை நடித்திருப்பவர் மலையாள சினிமாவின் ஆகச் சிறந்த நடிகரான பரத் கோபி. அப்பாத்திரம் மிக வலிமையாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று. தவறான எந்த விஷயத்தையும் அப்பாத்திரம் செய்வதில்லை. படத்தில் அந்த நடிகைப் பாத்திரத்தின் குடும்பத்தினரும், துயரம் மிகுந்த அவளது பதின்பருவ அனுபவங்களும், மன அழுத்தங்களும் முதிற்சியின்மையும் தான் அந்த பரிதாபமான முடிவிற்கு காரணமாகிறது.

பாலு மகேந்திரா: அந்த நாட்களில் எவ்வளவு கற்கள் என்மேல் வீசப்பட்டன! சோபாவின் மரணத்திற்கு எவ்வகையிலும் நான் காரணமில்லை என்று எல்லா சட்ட விசாரணைகளிலும் நிரூபணமான பின்னரும், பாலு மகேந்திரா இலங்கைக்காரன், சட்ட விரோதமாக இங்கு தங்கியிருக்கிறான், அவனை இலங்கைக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்று என்மேல் வழக்குகள் தொடரப்பட்டன! அவ்வழக்குகள் எதுவுமே வெற்றிபெறவில்லை என்றாலும் அந்த ரணங்கள் என்னுள் ஒருபோதும் ஆறப்போவதில்லை. கே ஜி ஜார்ஜ் என்மேல் பெரும் கற்களை வீசவில்லை என்று இப்போது தெரிந்ததில் சிறு ஆசுவாசம்!

முன்னாள் இளைஞன்: அப்படத்தின் சிறந்த பிரதி என்னிடம் இருக்கிறது. இப்போது இணையத்திலும் அப்படம் வந்துள்ளது. நீங்கள் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

பாலு மகேந்திரா: கொடுங்கள், பார்க்கிறேன். முடிந்தால் நெல்லு, உள்க்கடல் போன்ற எனது படங்களையும் கொடுங்கள். அவற்றையும் நான் முழுசாகப் பார்த்ததில்லை!

காட்சி 8

ஒரு முன் நிகழ்வு (Flash Back)

பகல்

கண்டி மாகாணம்

இலங்கை

க்வாய் நதிப் பாலம் (The Bridge on the River Kwai) எனும் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. சுற்றுலாவிற்கு வந்த பள்ளி மாணவர்களின் கூட்டம் ஒன்று அப்படப்பிடிப்பைப் பார்க்க அங்கு வந்து குவிகிறது. அவர்களுக்கிடையே 13 வயதான சிறுவன் பாலநாதன் மகேந்திரா. அத்திரைப்படத்தின் இயக்குநர் டேவிட் லீன் “மழை பெய்யட்டும்” என்று மெகஃபோணில் ஆணையிடுகிறார். உடன் மழை பொழியத் துவங்குகிறது. பாலுவிற்கு அடங்காத ஆச்சரியம். ’இதுபோல் ஒருநாள் நான் சொன்னவுடனும் மழை பொழியப்போகிறது’ என்று அவன் உறுதிகொள்கிறான்.

குறிப்பு

பாலு சார் கேட்ட எல்லாத் திரைப்படங்களையும் எடுத்துக்கொண்டு ஒருநாள் அவரது திரைப்படக் கல்லூரிக்கு மீண்டும் சென்றேன். ஆனால் மீண்டும் ஒருமுறை அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. திரைப் படங்களை அவரது உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அப்படங்களை பாலு சார் பார்த்திருப்பாரா? தெரியவில்லை.

தனிப்பட்டமுறையில் நெருங்கிய உறவு எதுவும் எனக்கு பாலு சாருடன் இருந்ததில்லை. அவருடன் நின்று ஒரு புகைப்படத்தைக் கூட நான் எடுக்கவுமில்லை. ஆனால் 2014 பிப்ரவரி 13 அன்று, அவரது மரணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அச்செய்தி அறியநேர்ந்து நான் கதறி அழுதேன். பாலு மகேந்திரா எனும் அற்புதக் கலைஞனுடன் எனக்கிருந்த உறவு அக்கண்ணீர் துளிகளைப்போன்றது. வார்த்தைகளால் விளக்க முடியாதது அது. அவரது உயிரற்ற உடலைப் பார்க்க நான் விரும்பவில்லை. அந்த இறுதிச் சடங்குகளுக்கு நான் போகவுமில்லை. பாலு மகேந்திரா எனும் மகா கலைஞன் இந்த எளிய ரசிகனின் இதயத்தில் என்றென்றும் உயிருடன் நீடித்திருப்பார்.

http://musicshaji.blogspot.in/2014/03/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.