Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்!

Featured Replies

உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்!
 

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இன்று அதுதான் யதார்த்தம். 11-வது உலகக் கோப்பைப் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானுக்கும் கீழே ஆறாவது இடத்தில் இருக்கிறது.

2wprteg.jpg

 

ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இத்தோடு முடிந்து விடவில்லை. ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ஆடுகளங்களில் இந்தியா எக்கச்சக்கமாக அடிவாங்கித் தள்ளாடப்போகிறது என்று கிரிக்கெட் பண்டிதர்கள் பலரும் நினைத்தார்கள். குறிப்பாக, அதன் பந்து வீச்சுக்கு இரங்கற்பா எழுதும் அளவுக்கும் சென்றார்கள். ஷாஹித் அஃப்ரிதியும் ஏபி டிவிலியர்ஸும் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுக்கப் போகிறார்கள் என்று ஆரூடம் சொன்னார்கள். பாகிஸ்தானின் ஏழடி உயர முகம்மது இர்ஃபானையும் அதிவேக டேல் ஸ்டெயினையும் இந்திய மட்டையாளர்கள் எப்படித்தான் சமாளிக்கப்போகிறார்களோ என்று அனுதாபப்பட்டார்கள். ஆனால், ஆடிய மூன்று போட்டிகளிலும் அலட்டிக்கொள்ளாமல் வென்று தன் பிரிவில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது இந்தியா. இதே பிரிவில் ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் பின்தங்கியிருக்கிறது. இரட்டைச் சதம் எடுத்த கிறிஸ் கெய்ல் போன்ற ஆட்டக்காரரைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் காட்டிலும் சற்று மேலான நிலையில் அயர்லாந்து அணி நேற்றுவரை இருந்தது. என்னதான் நடக்கிறது?

 

 

அடித்து நொறுக்கப்பட்ட ஆரூடங்கள்

இதுதான் 2015 உலகக் கோப்பை என்னும் பரபரப்பான நாடகத்தின் விறுவிறுப்பான முதல் கட்டம். ஆரூடங்களும் கணிப்புகளும் டிவிலியர்ஸும் பிராண்டன் மெக்கல்லமும் அடிக்கும் பந்துகளைவிடவும் அதிக வேகத்தில் சிதறி ஓடிய கட்டம் இது. போரால் சின்னாபின்னமான ஆப்கானிஸ்தான் சர்வதேச அரங்கில் தன் ஆட்டத்துக்காகப் பேசப்படும் வரலாறு அரங்கேறிய களம் இது. சிறந்த பந்து வீச்சு, மட்டை வீச்சு இரண்டும் இருந்தும் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வென்றிருக்கிறது. அரை இறுதிக்கு வரும் எனக் கணிக்கப்பட்ட இந்த அணி, கால் இறுதியை எட்டுவதே சந்தேகம் என்னும் நிலையில் அதிர்ந்துபோயிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் அடித்தும் போட்டியில் வெல்ல முடியவில்லை. ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலங்கை இலக்கை அநாயாசமாக அடித்து நொறுக்கியது. இந்தியாவிடமும் மேற்கிந்தியாவிடமும் தோற்ற பாகிஸ்தான், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 237 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறியது.

பந்து வீச்சு கைகொடுத்ததால் 20 ரன் வித்தியாசத்தில் வென்றாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணிக்கு இது பின்னடைவுதான் என்பதில் சந்தேகமில்லை.

 

 

66 பந்துகளில் 162 ரன் அடித்துப் பேயாட்டம் ஆடிய டிவிலியர்ஸும் அவருக்குப் பக்கத் துணையாக டேவிட் மில்லர், ஹஷிம் ஆம்லா, ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகிய மட்டையாளர்களும் நன்றாகவே ஆடினாலும் இந்தியாவிடம் பெற்ற தோல்வியால் தென்னாப்பிரிக்க அணி சற்றே பின்தங்கியிருக்கிறது. ஸ்டெயின், மோர்னி மார்க்கல் கூட்டணி எதிர்பார்த்த அளவு மிரட்டவில்லை. குறிப்பாக, இந்தியாவின் ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இவர்களைத் திறமை யாக எதிர்கொண்டார்கள். ஜிம்பாப்வே அணிகூட 277 ரன்களைக் குவித்துத் தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது.

 

 

உறைந்து நிற்கும் உச்ச அணி

 

ஆஸ்திரேலியாவின் நிலை இதை யெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படியான அதிர்ச்சி என்று சொல்ல வேண்டும். 1999-ல் தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி காணாமல் முன்னேறிய இந்த அணி, அதன் பிறகு 2011-ல் பாகிஸ்தானிடம் தோற்றதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை. கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று பெரும் பாலானவர்களால் கணிக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆடிய மூன்று ஆட்டங் களில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையில் நான்காம் இடத்தில் நிற்கிறது. ஆட்டத்தின் எல்லாத் துறைகளிலும் வல்லமை பெற்றுள்ள இந்த அணி இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று கனவிலும் நினைத்திருக்காது. நியூஸிலாந்துடனான போட்டியில் இந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்னுக்குச் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க்கின் பொறிபறக்கும் பந்து வீச்சால் கிட்டத்தட்ட வெற்றிபெறும் நிலைக்கு வந்தாலும், இறுதியில் கான் வில்லியம்ஸின் பதறாத ஆட்டத்தால் தோல்வி கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

 

முதல் சுற்றில் இன்னும் பாதிச் சுற்று பாக்கி இருக்கும் நிலையில், அணிகளின் நிலை மாறலாம். ஆஸ்திரேலியா வீறுகொண்டு எழலாம். பாகிஸ்தானும் இங்கிலாந்தும் சுதாரித்துக்கொண்டு முன்னேறலாம். ஆனால், சர்வதேசத் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்றுள்ள இரண்டு அணிகளேனும் கால் இறுதியில் இடம்பெறாமல் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வலுவற்ற அணிகள் எனக் கருதப்படும் இரண்டு அணிகள் கால் இறுதியில் இடம்பெற்றுவிடலாம். அடுத்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்படும் நிலை உருவாகலாம்.

 

சிறிய அணிகளின் நிலை

 

அந்த விமர்சனம் இப்போதே தொடங்கிவிட்டது. சிறிய அணிகள் என்று சொல்லப்படும் அணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் விதம் விசித்திரமாக உள்ளது. உலகக் கோப்பை என்னும் பெயரைத் தாங்கியிருந்தாலும் பல சமயங்களில் ஒரு டஜன் அணிகள் மட்டுமே ஆடும் தொடர் இது. கிரிக்கெட்டைத் தவிர, பிரபலமான வேறு எந்த ஆட்டத்துக்கும் இந்த நிலை இல்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட்டை மேலும் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதைத் தன் கடமையாகக் கருதுவதுதான் இயல்பானது. ஆனால், இருக்கும் அணிகளைக் கழித்துக் கட்டும் வேலையை அந்த அமைப்பு மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருக் கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பத்து அணிகளைத் தவிர அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் ஆடுகின்றன. இந்த நான்கு அணிகளும் கென்யா, நெதர்லாந்து போன்ற இதர அணிகளும் அடுத்த தொடரில் இடம் பெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகலாம் எனத் தெரிகிறது. சிறிய அணிகளைக் குறைக்கும் விதத்தில் அடுத்த தொடர் நடக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியானதைச் சிறிய அணிகள் ஆட்சேபித்திருக்கின்றன.

 

உலகக் கோப்பை என்பது கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கு ஒரு திருவிழா போன்றது. தங்கள் நாட்டின் அணி ஆடும் ஆட்டங்களை மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா ஆட்டங்களையும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்துவரும் தருணம் இது. கிரிக்கெட்டின் ஆகப் பெரிய களமான இந்தப் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் வேட்கை ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இருக்கும். இந்தக் களத்திலிருந்து சிறிய அணிகளை அப்புறப்படுத்திவிட்டால் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கலாம். ஆனால், புதிய திறமைகள் வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிடும். உலகக் கோப்பையின் சுவாரஸ்யங்களும் வண்ணங்களும் குறைந்துவிடும்.

 

பெரிய அணி என்று சொல்லப்படும் அணிகளைச் சிறிய அணிகள் வெல்லும்போதோ அவற்றுக்குக் கடுமையான சவாலாக விளங்கும்போதோ கிடைக்கும் பரவசம் ஈடிணையற்றது. இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை அயர்லாந்து அணி வென்றது. பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடம் திணறிப் பிறகு வென்றது. ஆப்கானிஸ்தான், அரபு அணிகள் வெளிப்படுத்தும் துடிப்பு கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களும் நிபுணர்களும் பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் தங்களது ஆட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கான பெரும் உத்வேகத்தைச் சிறிய அணிகளுக்கு இந்த உலகக் கோப்பை தருகிறது. இந்த உத்வேகம் இந்த அணிகளை மட்டுமல்ல, ஆட்டத்தையும் வளர்க்கக்கூடியது. விரிவுபடுத்தக்கூடியது.

 

தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், அதற்கு வழி பலவீனர்களை வெளியேற்றுவது என்பது மேட்டுக்குடித் தனமான அணுகுமுறை. தகுதி, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிலரை ஒதுக்கும் பாரபட்சத்துக்கு இணையானது இது. அனைவரையும் உள்ளடக்கும் அணுகு முறையுடன் போட்டியின் தரத்தைப் பேணுவதற்கான வழிகளைக் காண வேண்டியதே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடமை. இந்தத் தொடரிலும் பெரிய அணிகள் மிகவும் மோசமாக ஆடினாலொழிய அவை அடுத்த சுற்றுக்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்னும் விதத்தில்தான் தொடர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்தின் தரத்தைக் கூட்டுவதைப் போலவே ஆச்சரியங் களை அதிகரிக்கச் செய்ய வேண்டியதும் முக்கியம்தான்.

 

புதிய யதார்த்தங்கள்

 

முதல் கட்டத்தின் ஆட்டங்களைப் பார்க்கும்போது வேறு சில யதார்த்தங்களும் புலனாகின்றன. ஆஸி, நியூஸி ஆடுகளங்கள் பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் அதிக ரன் குவிப்பது சாத்தியமில்லை என்றும் சொல்லப்பட்டது. களத் தடுப்பில் புதிய கட்டுப்பாடுகள் இருந்தாலும் இரு முனைகளிலும் புதுப் பந்துகள் வீசப்படுவதும் ரன் குவிப்பை மட்டுப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு பந்தும் தலா 25 ஓவர்களே வீசப்படும் என்பதால், சுழல் பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டது. இதுவரையிலான போட்டிகள் இந்தக் கணிப்புகளையும் பெருமளவு கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றன. பல ஆட்டங்களில் முதலில் ஆடிய அணியின் ஸ்கோர் 300-ஐத் தாண்டியது. தென்னாப்பிரிக்கா இரண்டு முறை 400-ஐத் தாண்டியது. ஜிம்பாப்வே மூன்று முறை 270-ஐத் தாண்டியது. அயர்லாந்து ஒரு முறை 300-ஐத் தாண்டியது. 124 என்னும் இலக்கை மெக்கல்லம் அதிரடியால் 12.2 ஓவர்களில் தாண்டியது நியூஸிலாந்து. டேனியல் வெட்டோரி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

 

இன்னும் ஒரு வாரத்துக்குள் கால் இறுதிக்குச் செல்லும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு இன்னமும் சில சவால்கள் காத்திருக்கின்றன. பின்தங்கியிருக்கும் அணிகள் சுதாரித்துக்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கியபடி நடந்துகொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் கிரிக்கெட் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளின் தொடர் ஆதிக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இதைத் திருப்புமுனைத் தொடர் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6958012.ece?homepage=true&theme=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.