Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலித்தொகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலித்தொகை

 

சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர்.

கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் கூறிநிற்கின்றது.

 

கலித்தொகை பாடிய புலவர்கள் விபரம் பின்வருமாறு:

 

பாலைக்கலி: பெருங்கடுங்கோன், குறிஞ்சிக்கலி: கபிலர், மருதக்கலி: மருதனிளநாகன், முல்லைக்கலி: அருஞ்சோழன் நல்லுருத்திரன், நெய்தற்கலி: நல்லந்துவன். கலித்தொகையைத் தொகுத்தவர் நெய்தற் கலிபாடிய நல்லந்துவனார் என்றும், முதலில் உரைசெய்தவர் நச்சினார்க்கினியரென்றும் கூறப்படுகின்றது. பழஞ்சுவடிகளைத் தேடியெடுத்து முன்முதலில் பதிப்பித்தவர் பெருந்தகை சி வை தாமோதரம்பிள்ளையாவார்.

 

கலித்தொகையின் இலக்கியப் பரப்பினுட் சென்று அதன் நயங்களைக் கூறுவதை ஏனைய நண்பர்களிடம் விட்டு கலித்தொகை போன்ற நூல்கள் உருவான பின்னணியை ஆய்வு செய்வதே என்பங்கில் இங்கு முதன்மை பெறுகின்றது.

 

அகத்திணைப் பிரிவுகள்

 

தமிழரின் அகவாழ்வில் காதலும் காமமும் பெரும்பங்கு வகித்தன. ஆடவர் பெண்டிரிடையே ஏற்பட்ட ஒருதலைக்காதல் கைக்கிளையெனப்பட்டது. வயது வித்தியாசம் மிக அதிகப்பட்ட நிலையில் அல்லது மனம் ஒருமைப்படா நிலையில் ஏற்படும் பொருந்தாக் காமம் பெருந்திணையெனப்பட்டது. கருத்தொருமித்து ஆதரவுபட்ட அன்புடைக்காதல் அன்பின் ஐந்திணைக் கூறுகளாய் வகுக்கப்பட்டு ஐவகை நிலங்களுக்குமேற்ப அவ்வச் சூழல்களுடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் குறிப்பனவாய் புலவர்களால் இலக்கியம் சமைக்கப்பட்டது. ஆதலின் அத்திணை இலக்கியங்கள் அவ்வந் நிலத்தின்தன்மைக்கேற்ப அந்நிலம் வாழ் மாந்தர்களின் காதல், காமவுணர்வகளை ஊட்டும் முதற்பொருளெனும் காலமும் பொழுதும், அந்நில மாந்தர்களின் உள்ளத்தேயெழுகின்ற வேறுபட்ட உணர்வுகள் என்னும் உரிப்பொருள், நிலங்களின் கருப்பொருள்களான தெய்வம், உயர்குடி, தாழ்குடி, பறவை, விலங்கு, ஊரைக்குறிக்கும் பெயர், அம்மாந்தர் அருந்த நீர்பெற்ற இடங்கள், உண்ட உணவுவகை, நிலங்களுக்குரிய பூக்கள், மரங்கள், பறை, யாழ், பண், தொழில் போன்றன தொடர்பாய் வேறுபட்டமைந்தன.

 

மேற்கண்ட பொருட் பிரிவுகள் புறத்திணை இலக்கியங்களுக்கும் பொருந்துவனவாம். அன்பின் ஐந்திணைகளுக்கும் புறம்பே தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கூறும் கைக்கிளை, பெருந்திணையுட்பட அகப்புறத் திணைகளை மொத்தம் பதின்மூன்றாக வகுப்பர். மேலும் தொல்காப்பியம் 'மாயோன் மேய காடுறை உலகம(முல்லை), சேயோன் மேய மைவரை உலகம்(குறிஞ்சி), வேந்தன்(இந்திரன்)மேய தீம்புனல் உலகம்(மருதம்), வருணன் மேய பெருமணல் உலகம்(நெய்தல்) என நான்கு நிலங்களையே கூறுகின்றது.

பாலை நிலமென்பது நாம் பொதுவாகக் கருதும் பாலைவன நிலமன்று. அத்தகைய பாலை தமிழகத்திலில்லை. அதனால் பாலையென்பது சிலப்பதிகாரக் கூற்றுப்படி 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்து வெம்மையாலே தண்மையிழந்து காலத்திற்கேற்ப பாலையென்பதோர் கோலங்கொண்ட வரண்ட நிலத்தையே குறிக்கும். அக்காலத்திற்கேற்ப அந்நிலத்திற்குரிய மக்களின் வாழ்வியலும் மாறியமைந்ததென்றே கொள்ளவேண்டியுள்ளது.

இவ்வாறமைந்த நிலத்தியல்புகளும் மக்கட்பண்பும் அக்காலத் தமிழிலக்கியத்தின் போக்கை வழிப்படுத்தி குறித்த நியமங்களினூடாக இட்டுச் சென்றதால் அம்மரபையொட்டியே சங்க இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

 

இந்த ஒத்த பண்பு எம் பண்டைய இலக்கியங்களில் காணப்பட்டதாலேயே இதனை நெறிப்படுத்த ஆன்றோர்கூடியவோர் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டுமென்னும் ஊகம் ஏற்பட்டது. அது உண்மையென்றே இன்று தோன்றுகின்றது. அவ்வகையில், கலித்தொகை பாடிய புலவர்களின் இலக்கிய ஆக்க முறைமை அக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் இருப்புக்கு மேலும் சான்றாயமைகின்றது.

 

சங்கம் இருந்தது உண்மையா?

 

ஆன்றோர் அன்று பேணிய இலக்கிய மரபையும் அதனை நிருவகித்த சங்கத்தையும் சீர்தூக்கிப் பார்க்காது, சிலர் தமிழர் காட்டு வாழ்விலிருந்து நகரங்களை உருவாக்கி நகர்ந்த பரிணாமப் போக்கில் காணப்பட்ட ஐந்து வித்தியாசமான படிமுறைகளின் விளைவே இத் திணைசார் இலக்கியங்கள் என்கின்றனர். அப்படி நோக்கும்போது சமகாலத்தில் இப்படிமுறைச் சமுதாயங்கள் வாழ்ந்திருக்கவில்லை என்று பொருள்படுகின்றது. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார், தொல்காப்பியர் உட்படப் பல தனிப்பட்ட புலவர்கள் திணைவழி இலக்கணமும் பல்திணை இலக்கியங்களும் செய்திருப்பதன்மூலம் அக்கால அன்றோர் மத்தியில் ஓர் எழுதப்படாத வரன் முறையாகவேனும் இந்த இலக்கியமரபு நிர்வகிக்கப்பட்டும் பேணப்பட்டும் வந்துள்ளமை புலனாவதோடு பல்வேறு காலகட்டங்களுக்கேற்ப அவ்விலக்கியங்கள் தோன்றவில்லையென்பதையும், ஓர் மரபு வழிப்பட்ட இலக்கியப்பண்பின் அடிப்படையிலேயே அவை உருவாகியுள்ளனவென்பதையும் கூறக்கூடியதாயுள்ளது. இந்தப் பண்பைக் கட்டிக்காத்தது யார்? ஓர் எழுதப்படாத யாப்புடன்கூடிய சங்கமாய் அது ஏன் இருந்திருக்கக்கூடாது?

தற்காலத்தில் தலித்துவம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்குகள் சமகால எழுத்தாளர்களிடையே காணப்படுவதைப்போன்று அக்காலத்திலும் இத்தகைய திணை இலக்கியப் பிரிவுகளை அவரவர்  சமகாலப் பெரும்புலவர்கள் தெரிந்தெடுத்திருக்கக்கூடும்.

 

மேற் குறித்தவாறு சங்கம் என்னும் போது பலரும் சேர்ந்து யாப்புடன் உருவாக்கி மாதாமாதம் அன்றேல் வாராவாரம் ஓரிடத்திற்கூடி தமிழாய்வு செய்தவோர் நிறுவனமாயியிருந்திருக்க வேண்டுமென்னும் உருவகத்தை மனதிற்கொண்டோர் அதன் அடிப்படையிலேயே எமது பண்டைய தமிழ்ச்சங்கத்தை அது அப்படி இருந்திருக்கவில்லையென்று வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை அத்தகையதன்று. திணை மரபைப்பேணி இலக்கியஞ் சமைத்தலும் அதனை அக்கால முன்னணி இலக்கியகர்த்தாக்கள் பார்வையிடலும் அதற்கு அங்கீகாரம் வழங்கலுமாய் இருந்தவோர் திணை இலக்கணம் எழுதப்படாத காலத்திலிருந்து பரிணாமம் பெற்று, ஆன்றோரின் அங்கீகாரத்துடன் தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் உருவாகி மரபைப் பேணவேண்டிய விதிமுறைகள் எழுத்தில் கொணரப்பட்ட காலம்வரை இருந்த புலவோரின் ஒத்த கருத்தையும் அக்கருத்துக்கள் காலங்காலமாய்ப் பேணப்படக்காலாயிருந்த பொதுக்கொள்கையை நிருவகித்த ஆன்றோர் கூட்டத்தையுமே சங்கமெனக் கொள்ளல் வேண்டும். அந்த வகையில் நோக்கும்போது சங்கத்தைப்பற்றிய மருட்சி ஏற்பட இடமேயில்லை. மேலும் இந்தோனேசியாவில் கிடைத்தவோர் கல்வெட்டுப்படி தமிழ் வணிகர்சங்கம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் இலக்கியச் சங்கமும் தமிழர் மத்தியில் இருந்தமையை அதிசயமாகக் கொள்ளமுடியாது. மேலும் புத்தரின் காலத்தில் அவரது இனத்தவர்களான சாக்கியர் சங்கம் இருந்தது என்றும் அதனைப் பின்பற்றியே புத்தரும் தனது சீடர்களுடன் சேர்ந்து பெளத்த சங்கத்தை நிறுவினாரென்றும், அச்சங்கத்தை அழிந்து விடாமல் பாதுகாக்கும் நோக்குடனேயே "சங்கத்தை" மும்மணிகளுள் ஒன்றாகப் பேண  "சங்கம், சரணம், கச்சாமி" என்ற சுலோகம் கூறப்படுகின்றது என்பதையும் அவதானிக்கலாம். இதிலிருந்து புத்தரின் காலத்திற்கு முன்பதாகவே பல சாதி, சமய , மொழி வாரிச் சங்கங்கள் இந்தியாவில் இருந்திருக்கினறன என்பது ஊர்ஜிதமாகின்றது.

 

கடவுளர்கள் சங்கத் தலைவர்களாயிருந்தார்களாவென்று நகையுற நோக்கும் புத்தி ஜீவிகள் ஏன் அக் கடவுளர்கள் எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களாயிருந்திருக்கக் கூடாது? என்று பகுத்தறிவுடன் நோக்குவதாகத் தெரியவில்லை. பின்னாளில் அம்மனிதர்கள் கடவுளர்களாக்கப்பட்டதற்குத் தமிழன்னை பொறுப்பாளியாகமாட்டாள் என்று இவர்கள் உணர்வார்களாக.

 

திணை மயக்கமாவது யாது?

 

ஒரு குறித்த நிலத்திற்கு அதாவது திணைக்கு உரிய மாந்தரின் முதல் உரி கருப் பொருள்களை வேறொரு திணக்குரியதாய் இலக்கியஞ் சமைத்தல் திணை மயக்கத்தின் பாற்பட்டதாம். உதாரணமாக மருதநில மாதொருத்தி கடலிற் சென்ற தலைவனுக்காய் இரங்கல் அல்லது நெய்தல் நிலப்பெண்ணாள் கடலினின்றும் மீண்டு பசியோடு களைத்து வந்த கணவனுடன் ஊடுதல் போன்றன இத்திணை மயக்கத்தைக் குறிப்பனவாம்.

 

மேலும் தத்தம் நிலத்திற்குப் பொருந்தாத பூக்களை மாதர் அணிதல் - உதாரணமாக மருதத்திற்குரிய தாமரையை பாலைப் பெண் சூடியுள்ளதாக வர்ணித்தல், குறிஞ்சித் தெய்வமாம் சேயோனை(முருகனை) வழிபடவேண்டிய குறக்குலமாது நெய்தற் கடவுளாம் வருணனைப் பணிந்ததாகக் காவியம் சமைத்தல் போன்றன மரபு பிறழ்வுபட்ட திணை மயக்கங்களாக அந்நாளில் கருதப்பட்டது எனலாம். இம்மரபை மீற முற்பட்ட புலவர்களைச் சங்கப் பலகையிற் சாடி அக்காலத்தைய புலவர்கள் நியமங் காத்தனர். இதனாலேயே தமிழன்னையைச் சங்கம் வளர்த்த தமிழ் என்று அடைமொழியிட்டு இன்றுவரை ஆன்றோர் கூறுகின்றனர்.

 

இனிக் கலித்தொகைக்கு வருவோம்:

 

கலித்தொகை தரும் ஐந்து திணைகளுக்குமான உரிப்பொருள்களை அஃது, காதலர் மனவுணர்வுகளின் வகையறாக்களை இங்கே நோக்குவது அவசியமாகின்றது.

அவை முறையே: குறிஞ்சிக்கு – புணர்தலும் புணர்தல் நிமித்தமாகவும், பாலைக்கு – பாலையுட் சென்ற தலைவனைப் பிரிதலும் பிரிதல் நிமித்தமாகவும், முல்லைக்கு – காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமாகவும், மருதத்திற்கு – ஊடலும் ஊடல் நிமித்தமாகவும், நெய்தலுக்கு - கடலிற் சென்ற தலைவன் வராதபோது இரங்கலும் இரங்கல் நிமித்தமாகவும் உணர்வு வழிப்படுவதாக புலவோர் இலக்கியஞ் செய்தனர். இவ்வாறு ஓர் நியம வரைமுறையின் கீழ் கூடியவரை திணை மயக்கங்கள் உருவாகாதவாறு பண்டைய புலவோர் இலக்கியஞ் செய்துள்ளமை தமிழ் தவிர்ந்த வேறெந்த மொழிக்குமில்லாத பெருஞ்சிறப்பாகும். அதனாலேயே சங்கம் இருந்திருக்கின்றது என்று அடித்துக் கூறக்கூடிதாயுள்ளது.

பாலைக்கலி

 

கடவுள் வாழ்த்தாய்ச் சிவனைப் பணிதலோடு தொடங்கும் கலித்தொகையில் முதன் வருவது பெருங்கடுங்கோவின் பாலைக்கலியாகும். ஆறலைகள்வர் களவும் கொலைத் தொழிலும் புரியும் வரண்ட பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடுவான் பொருட்டுச் செல்லும் அல்லது செல்ல முயலும் தலைவனது பிரிவாற்றாமையான் வருந்தும் தலைவி அவனைத் தடுத்து நிறுத்த முயலுதல் அல்லது தலைவி சார்பாய் தோழி தலைவனிடம் தலைவியின் வருத்தம் கூறல், பிரிவின் வாடும் தலைவியைத் தேற்றல் போன்றன பாலைக்கலியின் உரிப்பொருளாகும். மேலும் காதலனுடன் உடன்போக்கிலீடுபட்ட தலைவியைத் தேடும் பெற்றோரின் அவல நிலைகளும் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.

 

பாலையின் கொடுமை, வெம்மை, வரட்சி போன்ற புறச்சூழல்களும், தலைவியின் பிரிவுத்துயர், தலைவனின் பிரிவால் அவளுக்கேற்படும் கையறுநிலை உட்பட்ட அகச்சூழல்களும் பெருங்கடுங்கோனால் பாலைக்கலியில் விபரிக்கப்படும் அதேவேளை தலைவனை பாலையுள் விடுத்து அவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வளமிக்க வாழிடம் தொடர்பான வர்ணனைகளுக்கும் குறைவில்லை. பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களைக் கொண்டது.

 

குறிஞ்சிக்கலி

 

கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி மலைப் பிரதேச மக்களின் காதல் வாழ்வை மையப்படுத்தி எழுதியதாகும். குறவன,; குறத்தி வேட்டுவன், வேட்டுவிச்சி போன்ற தலைவன் தலைவியரைச்சுற்றிப் பின்னப்பட்ட அழகிய காதற் குறிப்புகளாய்க் குறிஞ்சிக்கலி அமைந்துள்ளது. கிளி, மயில், மான்கள், புலி, கரடி, சிங்கம், யானையென்று பல சாதுவானதும், கொடியவையுமான காட்டுவிலங்குகள் வாழும் கானகத்தில் சந்தனம், அகில் போன்ற வாசனை மரங்கள் நிறைந்த சூழலில் தினைப்புனங்காக்கும் வஞ்சியருக்கும் வேட்டையாடும் வாலிபருக்குமிடையில் நிகழ்ந்த களவொழுக்கம் மக்கட்பண்பின் தகைமை குன்றாவகையில் இருபத்தியொன்பது கலிப்பாக்களடங்கிய அழகிய இலக்கியமாகக் கபிலர் பெருமானால் படைக்கப்பட்டுள்ளது.

 

மருதக்கலி

 

மிகுந்த பொருள் வளமுடைய பெருநிலக்கிழார்கள் வாழ்ந்த பிரதேசம் மருதநிலமாகும். நீர் நிலவளங்கள் நிறைந்து உழைப்பும் உற்பத்தியும் மிகுந்திருந்த சூழலில் வாழ்ந்த இம்மாந்தர் கூட்டம் இல்வாழ்விலீடுபட்டு அறம் வளர்த்த அதேவேளை காமக்களியாட்டங்களிலும் ஈடுபட்டது. அதனால் பரத்தமை இம்மாந்தர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று. இல்லங்களில் கற்பின் செல்வியர் கணவன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வரைவின்மகளிர் மாடங்களில் கணிகையருடன் களியாட்டம் நடாத்திவிட்டு பொழுது புலரும் வேளையில் வீடுதிரும்பும் தலைவன்பால் தலைவியர்; காட்டும் ஊடலே மருதக்கலியின் உரிப்பொருளாயிற்று. அறம் பேசும் குறளும் இப்பரத்தமையை அதன் விளைவான 'ஊடுதல் காமத்திற்கின்பம்' என்னுமாறாய் அங்கீகரிததுள்ளமையினால்; தமிழர் வாழ்வில் இதுவோர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பாகவே கொள்ளல் வேண்டும். சிறியதோர் ஊடலுடன் கணவனின் இப்பரத்தமைப் பண்பை மன்னித்து அவனை இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும் அன்புடை நெஞ்சர்களான தலைவியரின் தாபங்களை அழகுறச் சித்தரிக்கும் மருதனிளநாகர் உரிப்பொருளான ஊடல் விடுத்து நகைச்சுவை ததும்பும் பாடலும் பாடியுள்ளார். முப்பத்தைந்து அழகிய பாடல்கள் மருதக்கலியில் காணப்படுகின்றன.

 

முல்லைக்கலி

 

மந்தைகளை மேய்க்கும் ஆயர் குலத்தவர் பாடிகளமைத்து வாழ்ந்த இடம் முல்லையாகும். அதனால் இவர்கள் நாடோடிகளாகவே இருந்திருக்க வேண்டும். பசும்புற்றரை வரட்சியினால் பாலையாகும்போது தமது மந்தைகளை வேற்றிடம் கூட்டிச்செல்லும் வழக்கத்தைக் கொண்ட இவர்களின் காதல் வாழ்வில் தலைவன் தலைவியரது திருமணம் நிறைவேறக் காளையர் ஏறுதழுவித் தம்வீரத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதால் தலைவி தலைவனை அடைதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகின்றது. அதனால் தலைவியர் தமக்குரிய தலைவன் அல்லது காதலன் வந்து ஏறு தழுவித் தம்மை வெற்றி கொள்ளும்வரை களவொழுக்கங்களில் ஈடுபடாது நிறைகாத்து இருத்தல் முல்லையின் உரிப்பொருளாகின்றது. காதலும் கூடலும் இம்மாந்தர் வாழ்விலே இல்லாமலும் இல்லை. ஆயினும் இத்தகைய களவொழுக்கத்தினரும் உடன்போக்கிலீடுபடாது ஏறுதழுவி வெற்றிவாகை சூடும் திருமண நாள்வரை காத்திருக்க நேரிடுகிறது. இத்தகைய காதலரின் மனவுணர்ச்சிகளைச் சித்தரிக்கும் குறுங்கதைக் கூறுகளை பதினேழுபாடல்களில் புலவர் நல்லுருத்திரனார் தமிழுலகு மகிழத் தனது முல்லைக்கலியிற் தந்துள்ளார்.

 

நெய்தற்கலி

 

நெய்தநிலம் வாழ் மாந்தர் கடற்றொழில் செய்தனர். மாலையிற் கடல் ஓடி மறுநாட் காலைவரை அலைகளுடன் போராடி மீன்கொணரும் தம் தலைவரின் வரவை நாளும் மிகுந்த பதட்டத்துடன் எதிர்பார்க்கும் தலைவியர் தம் காதலர் திரும்பும்வரை அவரை நினைந்து இரங்கலே நெய்தற்கலியின் உரிப்பொருளாயமைகின்றது. காதலன் பிரிவால் கலக்கமுற்று கடலைக் காற்றை நிலவை விலங்குகளை விழித்துத் தம் துயர்கூறல், பொருள்தேடி அன்றேல் போர்புரியக் கடல்மீது கலஞ் செலுத்திச் சென்ற கணவனுக்காக வருந்துதுல் போன்ற காட்சிகளைக் கொண்ட நெய்தற்கலியை முப்பத்திரண்டு பாடல்கள் கொண்ட சொற்சித்திரங்களாக வகுத்தவர் நல்லந்துவனார் ஆவர்.

 

முடிவாக:

இவ்வாய்வில் கலித்தொகையின் கட்டமைப்பே சுருக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனுட் சென்று அதன் இலக்கிய நயங்களை நண்பர்கள் சுவைபடத் தருவார்களாக. உலகின் நாகரீகங்கள் தோன்றிய அன்றேல் அதற்கும் முற்பட்ட காலத்தே எம் புலவர் பெருமக்கள் ஓர் செழுமை மிக்க மொழியாகத் தமிழன்னையை இத்தகைய தமிழிலக்கியக்கங்கள் மூலம் வளர்த்தெடுத்தனர். இன்தமிழின் பெருமையறிந்து எம் எதிர்காலச்சந்ததி இப்பொக்கிசங்களை நன்கறிந்து, ஆய்ந்து உலகமுள்ளவரை அன்னை தமிழின் இருப்பை உறுதிசெய்யுமாக.

 

-ஆக்கம் கரு-

நன்று. சில நயமிக்க பாடல்களையும் இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே! கட்டுரை விரிவுபடாமலிருப்பதற்காக அதைச் செய்ய முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.