Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு

11-300x140.jpg

எமது விசேட செய்தியாளர் ஜெரா

 

100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பை மையப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர்களின் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி அடிமுடி எதுவும் தெரியாது.

காரணம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதாரணர்களை இலக்குவைத்தவை மிகச் சாதாரணம். அத்துடன் 100 நாள் திட்டத்தின் அனேக சாரங்கள் ஆட்சியியலுடனும், அதன் இருப்பைத் தக்கவைத்தலுடன் தொடர்புபட்டது. எனவேதான் தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து இந்த 100 நாள் திட்டம் பற்றியும் 100நாட்களின் ஆட்சி பற்றியும் கொழும்புமிரர் வினவ திட்டமிட்டது.

இந்த ஆட்சி மாற்றம் இலங்கை மக்களால் கொண்டுவரப்பட்ட போதிலும், மேற்கும், இந்தியாவும் இணைந்தே இந்த மாற்றத்தினைக் கொண்டுவந்தது என்றே பரவலாக நம்பப்படுகிறது. அதன் முக்கிய ஆட்சிச் சுலோகமே சட்டத்தின் ஆட்சி என்பதுதான். எனவே இந்த 100 நாள்களில் சட்டத்தின் ஆட்சி எப்படியிருக்கின்றது என்பது பற்றி குமாரவடிவேல் குருபரன் அவரிடம் வினவினோம்.

 

Kuruparan1.jpg

 

தமிழ் இளம் ஆளுமையாளர்களுள் ஒருவரான குமாரவடிவேல் குருபரன் யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், பிரிட்டன் பல்கலைக்கழக கல்லூரியின் துறைசார்ந்த ஆய்வுநிலை (கலாநிதி) புலமையாளரும் ஆவார்.

“நல்லாட்சியைக் கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வராத அரசாங்கங்களை   இலங்கையில் விரல் விட்டு எண்ணலாம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியில் தொடர்ந்து எப்படி தொடர்ந்து இருப்பது என்பது தான் மேலோங்கும். இம்முறையும் அதுவே நடந்திருக்கின்றது. பொதுவாக அனைத்து ‘சனநாயக’ நாடுகளிலும் நடக்கும் விடயம் இது. ஆனால் இலங்கையில் இதற்கொரு மேலதிகமான முக்கிய குணாம்சம் உள்ளது. தமிழர்கள் நலன் சார் விடயங்களில் நல்லாட்சி அமைக்க முடியாமைக்கும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட முடியாமைக்கும் இனப்பிரச்சனையையும் போரையும் அதன் விளைவான அரசியல் சூழலையும் சாட்டுச் சொல்வதே அது.

 

கடந்த நூறு நாட்களில் அரசாங்கத்திற்கு இருந்த பிரதான இலக்கு பொதுத் தேர்தலில் மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பது மட்டுமே. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எந்தவொரு விடயத்திலும் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்படாமைக்கு சொல்லாமல் சொல்லப்படும் காரணம் அப்படி செய்தால் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்பதே. தமிழ் மக்கள் விடயத்தில் நீதியின் வழி செயற்படுவது சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு சமனாகும் என்ற கணக்கு இந்த அரசாங்கத்தின் மனதிலும் உள்ளது. அதனால் தான் தமிழர் சார்ந்த பிரச்சனைகளில் மேலோட்டமாக சில நடவடிக்கைகளோடு மைத்திரி அரசாங்கம் சுருண்டுவிட்டது.

 

நூறு நாள் திட்டத்தில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் சொல்லப்பட்டிருந்த சில விடயங்களில், இந்த ஆட்சி எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. பல்வேறு தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டங்களில் இவ்விடயம் பேசப்பட்டதாக திரு. மனோ கணேசனும், திரு. சுமந்திரனும் சொல்லி வந்தனர். ஆனால் எத்தனை பேர் விடுதலை செயப்பட்டனர்? சுதந்திர தினம் அன்று சிலர் விடுவிக்கப்படக் கூடும் என்று கூட்டமைப்புக்கு சொல்லப்பட்டாலும் அது நிறைவேறவில்லை (ஆனால் அது எமது தலைவர்கள் சுதந்திர தினத்தில் பங்கெடுக்கும் தீர்மானத்தைப் பாதிக்கவில்லை)

 

Jeyakumari-release-e1429975299431.jpg

 

திருமதி. ஜெயக்குமாரி பாலேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால் அவருக்கெதிரான வழக்கு முற்றாகக் கைவிடப்படவில்லை. சட்டத்துக்கு முரணாக ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டதற்காக உண்மையில் அவருக்கும் விபூசிகாவுக்கும் அரசு நட்டஈடு வழங்க வேண்டும். செய்யப்படுமா என்பது சந்தேகமே. சட்டமா அதிபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பிணை விண்ணப்பத்தை ஆட்சேபிப்பதில்லை என்ற பொதுவான கொள்கை முடிவை (பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரிவு 7 (1) இன் கீழ்) எடுத்திருக்க வேண்டும்.

 

ஆனால் அவ்வாறு எடுக்காமல் ஜெயகுமாரியை மட்டும் விடுவிக்க எடுத்த முடிவைப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்கு முன் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் முடிவாகவே கருத வேண்டியுள்ளது. தொடர்ந்து அரசியல் கைதிகள் விடயத்தில் முன்னேற்றம் இல்லாதிருக்கின்றமை இதனையே காட்டுகின்றது. புனர்வாழ்வை ஏற்றுக்கொள்ள அரசியல் கைதிகளை இந்த அரசாங்கம் நிர்ப்பந்தம் செய்வதாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பயங்கரவாதத் தடை சட்டம் இல்லாதொழிக்கப்படுவதே சுமூக நிலைக்குத் திரும்புவதற்கான உண்மையான குறியீடாக இருக்கும். ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குக் கூட அரசாங்கம் தயாரில்லை.

 

சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம்

 

சாட்சிகளைப் பாதுக்காக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளமையை இந்த அரசாங்கத்தின் சாதனையாகச் சொல்லுகின்றனர். சட்டப் புத்தகங்களில் இவ்விடயம் சேர்க்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டமையால் நடைமுறையில் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்றே கேட்கத் தோன்றுகின்றது. சாட்சிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையிடமே இருக்குமென்றால் காவல் துறையை நம்பி சாட்சி சொல்ல எத்தனை பேர் தயார்? குற்றச்சாட்டுக் காவல் துறைக்கு எதிராக எனின் யார் பாதுக்காப்பளிப்பது?

 

தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக சொல்லப்படுகின்றது. கொண்டுவரப்பட்டாலும் உதாரணமாகக் காணமல் போனோரைக் கண்டறிய அச்சட்டம் உதவுமா என்றால் விடை இல்லை என்பதே – தேசிய பாதுகாப்பு என்று காரணம் சொல்லி தகவல் வழங்க மறுக்கலாம். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அனைத்து மனித உரிமைகளும் (சட்டப் பிராகாரமும், சட்டத்திற்குப் புறம்பாகவும்) மீறப்பட்டமையை எமக்கு வரலாறு சொல்லுகின்றது. தகவலறியும் உரிமைக்கும் அதே கதி தான்.

 

நீதித் துறையின் சுயாதீனம் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரச வலிமையைப் பாவித்து அன்று மொஹான் பீரிஸை பிரதம நீதியரசர் கதிரையில் மகிந்த ராஜபக்ச அமர்த்தினார். அதே அரச வலிமையை பாவித்து சிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக்கினார்கள். சனாதிபதி சிறிசேன மொஹான் பீரிசின் நியமனம் ஆரம்பத்திலிருந்தே செல்லுபடி அற்றது என்று கடிதம் அனுப்பியமை சட்ட ரீதியில் சரியானது என வாதிட முடியும். எனினும்   அதன் பின் மொஹான் பீரிஸ் இல்லாத நேரம் பார்த்து அவரின் கதிரையில் சிராணி பண்டாரநாயக்கவை இருத்தியமை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு வலுச் சேர்க்கும் நடவடிக்கை அல்ல என்றே கருதுகிறேன். அதனை உணர்ந்து தான் போலும் சிராணி பண்டாரநாயக்க ஒரே நாளில் பதவியைத் துறக்குமாறு கேட்கப்பட்டார். தமிழ்ப் பார்வையில் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து அகற்றப்பதுவதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முதலே நீதித்துறையின் சுயாதீனம் பறிபோய்விட்டது என்பதே உண்மை. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற உயர்நீதிமன்றம் ஒத்துழைத்த போதிருந்து நீதித்துறை தமிழர் விடயங்களில் சுயாதீனமற்ற நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது.

 

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்கும் திட்டத்திலும் எந்தக் கொள்கையும் கோட்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. வலிகாமம் வடக்கில் குளறுபடிகளோடு செயப்பட்டுள்ள சில காணிகளின் விடுவிப்பு இவ்விடயம் தொடர்பில் இந்த அரசாங்கத்திடம் நீண்ட காலத் திட்டமில்லை என்பதையே காட்டுகின்றது. வேறு பல இடங்களில் இராணுவத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்வதாக தகவல்கள் உள்ளன. காணி விடுவிப்பு தொடர்பில் பொதுவான காத்திரமான நிலைப்பாடு இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

 

ராஜபக்ஷ அளவுகோல்

100 நாட்களை வைத்து இந்த அரசாங்கத்தை எடை போடக் கூடாது என்று சொல்பவர்கள் உண்டு. நீண்ட காலம் புரையோடிப் போன பிரச்னைகளுக்குத் தீர்வுகள் காலமெடுக்கும் என்று சமாதனப்படுத்தப்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் உண்மை உண்டு. ஆனால் மாற்றத்துக்கான ஆரம்ப அறிகுறிகளாவது தென்பட வேண்டும். ராஜபக்சவோடு ஒப்பிட்டால் இந்த அரசாங்கம் பரவாயில்லைத்தான். ஆனால் ராஜபக்சவை வைத்துத் தான் எது சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி என முடிவு செய்யப் போகின்றோமா?’

 

குருபரன் கேட்ட கேள்வியின் உண்மைத்தன்மையும், அவர் தன் கருத்துக்கு சொல்லப்பட்ட முடிவும் தமிழர் பக்கமிருக்கின்ற சந்தேகங்கள்தான். அந்த சந்தேகம் எப்படி உறுதியாகிறதெனில் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான அ.யோதிலிங்கமும், குறிப்பிடும் விடயத்திலிருந்துதான். என்னதான் மக்கள் நலன்சார்ந்த விடயங்களாக 100 நாள் திட்டமும், ஆட்சியும் இருந்தாலும் அதைச் சுற்றி முழுக்க முழுக்க சிங்கள மயப்பட்ட அரசியல் உண்டு என்பதை நிறுவுகின்றார் திரு. அ. யோதிலிங்கம்.

 

sothilingam.jpg

 

“புதிய அரசாங்கத்தின் 100 நாள் அரசியல் என்பது முழுக்க முழுக்க சிங்கள அரசியலையே மையமாகக் கொண்டிருந்தது. இந்த 100 நாட்களில்; பிரதானமாக நான்கு விடயங்கள் முக்கிய பேசுபொருளாக இருந்தன.

19 ஆவது திருத்தம், 20 ஆவது திருத்தம் என அழைக்கப்படுகின்ற தேர்தல் மறுசீரமைப்பு, மஹிந்தவின் மீள் எழுச்சி, ஜே.வி.பிக்குள் ஏற்பட்ட உடைவு என்பவையே அவை.

 

19 ஆவது சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன. ஒன்று நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுதல், இரண்டாவது சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்குதல். இதில் சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்குவதில் முரண்படாத சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்த பின்னரே 19 ஆவது சீர்திருத்த சட்டத்துக்கு தாம் ஆதரவு வழங்க முடியும் எனக் கூறியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவது கடினம்.

 

எனவே அந்தக் கடினமான சூழலில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைதான் அரசாங்கத்துக்கு ஓர் அரசியல் உறுதிப்பாட்டை வழங்குகின்றது. ஆகவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றும்போது தேர்தல் முறையை மாற்றாமல் வந்தால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதபோது கூட்டரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை வரும். கூட்டரசாங்கத்தில் இணைந்துகொண்ட கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் நாட்டினுடைய அரசியல் உறுதித்தன்மை பலவீனமடையும். ஆகவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுவதென்றால் தேர்தல் முறையையும் மாற்றவேண்டும் என அவர்கள் இதற்கு நியாயம் கூறுகின்றனர்.

 

ஆனால் இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது போன்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் சாதகமானது. ஆந்தக் கட்சிக்கு சிங்கள மக்களைவிட ஏனைய தமிழ், முஸ்லிம் மக்களிடமும் கணிசமான வாக்கு வங்கி இருக்கின்றது. இதனாலே அவர்களின் வாக்குகள் அதிகரிப்பதற்கான சூழல் இருக்கின்றது. எனவே வாக்குவீதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேர்தல் முறை எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் சார்பாக இருக்கும்.

 

Flag5.jpg

 

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நாம் இதனை அவதானிப்போமாக இருந்தால் 1956 ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்தாலும் கூட வாக்குவீதம் ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் கூடுதலாக இருந்தது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டு தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 18 ஆசனங்கள்தான் கிடைத்தது. ஆனால் வாக்குவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி 38 வீதமான வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி 37 வீதமான வாக்குகளையுமே பெற்றிருந்தது.

 

ஆகவே இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தங்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்பதனாலேயே ஜே.ஆர்.ஜெயவர்தனா இந்த முறையைக் கொண்டு வந்தார். ஆகவே இந்தக் காரணங்களினால்தான் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது இதனைக் கடுமையாக எதிர்க்கின்றது போல தெரிகின்றது.

 

19 ஆவது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான எந்தவித சமிக்ஞைகளும் இதுவரை காணப்படவில்லை. 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட சட்டம் நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மீள் எழுச்சியைப் பொருத்தவரை, போர் வெற்றியின் கதாநாயகன் மஹிந்த ராஜபக்ச தான். அவர் சென்ற தேர்தலில் தோல்வியடைந்திருக்கலாம்.

 

ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவர் தோல்வியடையவில்லை. போர் வெற்றிக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கணிசமான வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு விழுந்துகொண்டிருந்தது. ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சொந்தமான வாக்குகள் மீளவும் அந்தக் கட்சியிடம் வந்தமைதான் காரணம். அத்துடன் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் ஒரு காரணம். ஆனால் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்த வாக்குகள் மீளவும் மஹிந்த ராஜபக்வை நோக்கி செல்வதற்கான ஏதுநிலைகள் உருவாகி வருவதாகத் தென்னிலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குளினால் தோற்கடிக்கப்பட்டமை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

மஹிந்தவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்கும், அவருக்கு சார்பாக எழுந்திருக்கும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ளவுமே அவர் விரும்புவார். எனவே எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றே நான் கருதுகின்றேன். அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்; வெற்றிலைச் சின்னத்தை எடுப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முந்திக்கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் பதவியை அவர் எடுத்துக்கொண்டார். ஆகவே மஹிந்த வெற்றிலைச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது. இதனால் பொதுஜன முன்னணியின் சின்னமான கதிரை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடவே முயற்சிப்பதாகத் தெரிகின்றது. அப்படி போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 75 வீதமான வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு விழுவதற்கே வாய்ப்புகள் உண்டு.

 

எனவே மஹிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சி சாத்தியப்பட்டுக்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. அதற்கான காய்நகர்த்தல்களாகவே தெற்கில் இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் கொதிநிலை அவதானிக்கப்படுகின்றது. அத்துடன் ஜே.வி.பியிலிருந்து உடைந்து சென்ற சோமவன்சவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்களும் மஹிந்தவுக்கு ஆதரவளிப்பர் என்றே கருதுகின்றேன்.

 

இதில் புவிசார் அரசியல் விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீனா இவ்வளவு நீதி மூலங்களையும் இலங்கையில் செலவழித்துவிட்டு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது. எனவே அந்த நாடு எப்போதும் தன் விசுவாசியான மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாக இருக்கவே செய்யும். தென்னாசியாவைப் பொருத்தவரையிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் பெரும் பனிப்போர் நடப்பது அனைவரும் அறிந்ததே.

 

மாலைதீவில் சீனாவுக்கு சார்பான தலைவர்தான் ஆட்சியில் இருக்கிறார். இந்தியாவுக்கு சார்பான தலைவர் தூக்கியெறியப்பட்டார். இலங்கையில் சீனாவுக்கு சார்பான தலைவர் தூக்கியெறியப்பட்டு, இந்தியாவுக்கும் மேற்கிற்கும் சாதகமான தலைவர் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டார். எனவே இந்த ஆட்சி மாற்ற போட்டியும் நீடித்து நிலைக்கப் போகின்றது. உலகளவில் அமெரிக்கா – சீனப் பனிப்போரும், பிராந்தி அளவில் சீன – இந்திய பனிப்போரும், தேசிய அளவில் சிங்கள – தமிழ் பனிப்போரும் இலங்கையை மையப்படுத்தி உச்சம் பெற்ற ஒரு காலமாகவே இந்த 100 நாள் ஆட்சி இருந்தது’

 

திரு.யோதிலிங்கம் இங்கு குறிப்பிட்டு முடிக்கும் புவிசார் அரசியலின் உச்சத்தில்தான் ஆட்சிமாற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதனையொட்டிய வாதப்பிரதிவாதங்களும், ஆய்வுகளும் ஆட்சி மாற்றத்துக்கு முதலும், ஆட்சிமாறிய பின்னரும் பரவலாக பேசப்பட்டிருந்தன. இந்த நிலையில் சர்வதேச அனுசரனையுடன் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் 100 நாள் ஆட்சிக்குள் தமிழ் மக்களின் உள்ளக – வெளியக அரசியலின் இராஜதந்திரப் போக்கு எப்படியிருந்தது என்றும், இந்தக் காலப்பகுதியில் தமிழர்களின் பிரச்சினையை ஆட்சி மாற்றத்தை உருவாக்கியவர்கள் எப்படியெல்லாம் கையாண்டார்கள் என்பது குறித்தும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் அவர்களிடம் கேட்டேன்.

 

nilanthan-a-e1429974350627.jpg

 

“ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் தமிழ் மக்களின் வெளிப்பேரம் பேசும் சக்தி வீழ்ச்சி கண்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்கு முன்புவரை தமிழ் மக்களின் பிரச்சினையை மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஒரு துருப்பாக மேற்குநாடுகளும், இந்தியாவும்; பயன்படுத்திவந்தன. ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அந்தத் தேவை பெருமளவுக்கு குறைந்துவிட்டது. இப்போது மாற்றத்தைப் பலப்படுத்துவதற்கு மட்டுமே தமிழ் மக்கள் தேவைப்படுகின்றனர். அடுத்துவருகின்ற பொதுத் தேர்தல் வரையில் தமிழ் மக்களின் தேவையிருக்கின்றது. ஆக ஒரு கட்டம் வரை தமிழ் மக்களை அரவணைக்க வேண்டியுள்ளது. அதுகூட சிங்கள கடும்போக்காளர்களை சீண்டாத எல்லை வரையிலும் தான் தமிழ் மக்களை அரவணைக்கலாம்.

 

ஆட்சி மாற்றத்தின்போது தமிழ் மக்கள் தரப்பில் எந்தப் பேரமும் நடக்கவில்லை. பேரம் என்றில்லை, நிபந்தனையின்றியே ஆட்சிமாற்றத்துக்கு தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள். உண்மையில் இந்தச் சந்தர்ப்பம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இராஜதந்திரத் தவறு. இந்த இடத்தில் தமிழர்கள் ஜனாநாயகத் திசையில் பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள்.

 

இப்போது மீளவும் ஒரு பேரத்துக்கான சந்தர்ப்பம் வருகின்றது. பொதுத் தேர்தலையொட்டி இந்தப் பேரம்பேசலை செய்யலாம். ஆனால் பேரம்பேசலை செய்கையில் மீளவும் ஒரு பிரச்சினை வரும், தமிழ் மக்களுடன் இணைந்தால் அது சிங்கள கடும்போக்காளர்களுக்கு அது வலுச்சேர்க்கும் என்று. மாற்றத்தை உறுதிப்படுத்தும் தரப்பினர் திரும்பத்திரும்ப ஒரு விடயத்தை வலியுறுத்துகின்றார்கள். பாதிக்கப்பட்ட தரப்பை காத்திருக்கக் கேட்கிறார்கள். பாதிக்கப்பட்ட தரப்பையே சுதாகரிக்கவும் கேட்கிறார்கள். பாதிக்கும் தரப்புக்கு அதாவது உலகம் முழுவதும் தெரியவந்ததும், ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் எந்தவொரு தரப்புக்கு எதிராக முழுக் குற்றச்சாட்டுக்களையும் தொகுத்தார்களோ, அந்தத் தரப்பு மீள வந்துவிடும் என வெருட்டியே தமிழர்களுக்கு எல்லையிடுகிறார்கள். இனியும் அதைத்தான் கேட்கப் போகிறார்கள். பொதுத் தேர்தல் வரையிலும் தமிழ் மக்கள் சுதாகரிக்க வேண்டும் என்பர்.

 

ஆனால் கடந்த தேர்தலில் தமிழர்கள் அளித்த வாக்குகள் தீர்க்கப்படாத பழிவாங்கல் உணர்ச்சி. அதையொரு புத்திசாலித்தனமிக்க முடிவென்று கூட நாம் எடுக்க முடியாது. அது மாற்றத்துக்கான வாக்குகள் என்பதை விட, ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான உணர்ச்சி.

 

இதற்கு முன்னரும் சிங்கள தலைவர்கள் அடிக்கடி ஆட்சி மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். அப்போது ஜனாதிபதிகளின் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானித்தது யுத்தகளம்தான். யுத்தகளத்தில் அவர்கள் தோற்கையில் ஜனாதிபதிக்கான போட்டியிலும் தோற்றார்கள். தமிழ் மக்களைப் பொருத்தவரை, யுத்தகளத்தில், ஒருகட்டத்தில் தோற்றுப் போனாலும், இன்னொரு கட்டத்தில் தம்மை வெற்றிகொண்ட அதே சிங்களத் தலைமையை வென்றார்கள். ஆனால் ராஜபக்ச சகோதரர்களின் வருகை, தமிழர் பக்கமிருந்து வெற்றியை உறுதிப்படுத்திய தரப்பையே இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே தமிழர்களுக்கு இதுவொரு தீர்க்கப்படாத பழிவாங்கும் உணர்ச்சி. இந்தப் பழிவாங்கும் உணர்ச்சி நீண்டகாலத்துக்கு நீடிக்கப்போகின்றது.

 

இவ்வாறு தமிழ் மக்கள் எப்போதும் ராஜபக்சக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது மேற்குநாடுகளுக்கும், இந்தியாவுக்கும் சாதகமான அம்சம். இதை வைத்துக்கொண்டு இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, அரசியல் தலைவீதியை தீர்மானிக்க தமிழர்களிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவை அவர்கள் பெறுகின்றார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே நடந்தது. தமிழர்கள் எந்த நிபந்தனையுமின்றி வாக்களித்து பெரும் இராஜதந்திரத் தவறுக்குரியவர்களானார்கள். இதேநிலைமைதான் மீளவும் உருவாகிறது. அடுத்துவரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியில் நின்று தேர்தலில் போட்டியிட்டு, வென்றதன் பின்னர் அரசுக்கு வெளியில் நின்று ஆதரவு கொடுக்க வேண்டிவரும். இவ்வாறு ஆதரித்தால் மாத்திரமே ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான பொது எதிரணி நின்று பிடிக்க முடியும். எனவே சர்வதேசத்துக்குத் திரும்பத் திரும்ப தமிழ் மக்களின் தேவையிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பற்றி பேச யாரும் தயாரில்லை. ஓர் எழுத்து மூலமான ஆவணம் கூட இல்லை. 100 நாள் திட்டத்திலோ, அதற்குப் பின்னர் இனி வரப்போகின்ற பொதுத் தேர்தல் வரையிலான காலத்திலோ அதற்கான சாத்தியங்கள் இல்லை.

 

மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் ஒரு காரியம் நிறைவேறிவிட்டது. தமிழ் மக்களிடம் செல்வாக்குப்பெற்ற, தங்களால் கையாளக் கடினமான ஒரு தரப்பை, சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த, தங்களால் கையாளக் கடினமான தரப்பொன்றின் மூலம் தோற்கடித்தார்கள். பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த கையாள இலகுவான தரப்பொன்றைப் பயன்படுத்தி, கையாள கடினமான தரப்பை தோற்கடித்தார்கள். இப்போது இலங்கைத் தீவு அவர்களுக்கு முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டது. 2009 மே மாதத்துடன் தமிழ் பகுதிகள் அவர்களுக்கு திறக்கப்பட்டுவிட்டது. இப்போது முழு இலங்கையும் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நிலைமையைப் பாதுகாக்க வேண்டுமானால், ராஜபக்ச சகோதரர்கள் மீள எழாதபடிக்கு கீழே கொண்டு செல்ல வேண்டும். அதற்கான காட்சிகளையே இப்போது காண்கிறோம்.

 

Sampathan-Ranil-Maithri.jpg

 

அவர்களின் இப்போதைய முழுத் தேவையும் மாற்றத்தைப் பலப்படுத்துவதும், அதனைக் காப்பதற்கான பங்காளிகளைக் கூட்டுச்சேர்ப்பதும் ஆகும். அவர்களுடைய நிகழ்ச்சிநிரலுக்குள் இப்போது தமிழ் மக்கள் இல்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நீர்த்துப் போனமைக்கும், இனி கொண்டுவரப்போவதாக சொல்லப்படும் தீர்மானம் குறித்த காலப்பகுதியில் கொண்டுவரப்படமுடியாமல் இருப்பதற்கும் இதுவே காரணம். அப்படியொரு காரமான தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மாற்றத்துக்கான அணியில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை வரும். எனவே இந்த மாற்றத்துக்கான அணியைப் பாதுகாப்பவர்களுக்கு அவர்களைத் தண்டிக்க வேண்டிய, விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

இந்த இடத்தில் தமக்கு சார்பான ஆட்சி மாற்றத்திற்கானவர்களை பாதுகாப்பதா? தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதா என்கிற கேள்வி மேற்கு நாடுகளிடத்தும், இந்தியாவிடத்தும் எழுகிறது. கொழும்பை கையாளுவதுதான் அவர்களின் தேவையே தவிர, தமிழர்களல்ல. ரணில்- பிரபா உடன்படிக்கை தவிர இதுவரையான அனைத்து இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்களிலும் கொழும்பை கையாளுவதுதான் மையமாக இருந்ததே தவிர, தமிழர்களல்ல. 2009க்குப் பின்னரான நிலமையும் அதுதான்.

 

கொழும்பை கையாளுவதற்காகத் தமிழர் பிரச்சினையைக் கையிலெடுத்தார்கள். அதில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். இப்போதும் மாற்றத்தின் உறுதித் தன்மையை பேணுவதாயின் தமிழர்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடாது. மொத்தத்தில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரலுக்காகத் தமிழ் மக்களினுடைய நிகழ்ச்சி நிரல் பின்தள்ளப்படுகின்றது’.

 

இந்த இடத்தில் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்சவை மாற்றுவதனால் மட்டும் இன முரண்பாட்டிற்குத் தீர்வு வந்துவிடப்போவதில்லை. மஹிந்த ராஜபக்ச பௌத்த மேலாதிக்கவாதக் கட்டமைப்பின் ஒரு கருவிதான். அந்த சிங்கள பௌத்த மேலாண்மைவாதக் கட்டமைப்பு எப்போதும் பலமாகவே இருக்கிறது.

 

அது பலமாக இருக்கின்றபடியினால்தான் 19 ஆவது சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியவில்லை. ராஜபக்சக்களை தண்டிப்பதனால் மட்டும் சிங்கள பௌத்த மேலான்மைவாதம் பலவீனப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது. எந்த அரசு மாறினாலும் அந்த அடிப்படைக் கட்டமைப்பில் இருந்துதான் செயற்படமுடியும். ஆட்சியாளர் எவ்வளவுதான் முற்போக்குவாதிகளாக பீடமேறினாலும், அவர் சிங்கள மேலான்மைவாதத்தின் கைதியாகவே தொழிற்பட முடியும். அதனால்தான் 100 நாள் வேலைத்திட்டம் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்வியை மறைக்கவே ராஜபக்சக்கள் மீதான கைதுகள் நடக்கின்றன. சிங்கள பௌத்த மேலான்மைவாதம் மிகவும் கட்டமைப்புப் பெற்ற வகையில் தொழில்படுவதனால் இந்தக் கைதுகள் கூட ராஜபக்சக்களுக்கே சாதகமாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கின்றது’.

 

பௌத்த மேலான்மைவாதத்தை தோற்கடிப்பதன் ஊடாகவே நிலையான நல்லிணக்கத்தை, இனப்பிரச்சினை தீர்iவு ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனை ஏற்றுக்கொள்ளத்தக்கவொன்று. அதுவே இந்தப் பிரச்சினையின் மூலத்தைதத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றது. ஆனால் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டுடன் இந்த அரசாங்கத்துக்கு தன் முழு ஆதரவையும் வழங்கி வரவேற்றது என்ற கேள்வியும், இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்படி என்னதான் இந்த அரசிடம் உண்டு என்பதையும் கேள்வியாக எழுப்பலாம். ஆனால் அதற்கு பதில் தரக்கூடிய தரப்புக்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. 100 ஆட்சிக்காலம் கூட்டமைப்புடனான இலங்கை அரசின் உறவுகள் எப்படியிருந்தன என்பது குறித்து வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் சில விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

Ananthan.jpg

 

“புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 19வது திருத்தச்சட்டம் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றதுக்கும் அமைச்சரவைக்கும் ஜனாதிபதியை பொறுப்புக்கூற வைக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குரிய மாற்றங்களை செய்வதாகக் கூறியிருந்தனர்.

 

நூறுநாள் வேலைத்திட்டத்தில் சுயாதீன ஆணைகுழுக்கள் உள்வாங்கப்பட்டு அதன் தலைவர்கள் நியமனத்தை சுயாதீனமாக நடத்துவதற்கும், நிறுவனங்களின் சுயாதீன செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் உரிய சட்ட திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதும், உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை நியமித்து, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து அதன் நியாயத்தை நம்பகத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும், நாட்டு மக்களின் இறைமையை மீட்டெடுத்துப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் பாதுகாப்பைக் கௌரவத்தைப் பேணச்செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரிய விடயங்களாகும்.

இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் இந்த விடங்கள் நன்மை அளிப்பனவாக இருந்தாலும்கூட, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் விருப்பங்கள், தேவைகள், அபிலாசைகள், இலக்குகள் வேறுவிதமானவை.

 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்துக்குப் பின்னரான பாதிப்புகள் அழுத்தும் சுமைகளிலிருந்து மக்களை மீண்டெழுந்து வரச்செய்து அவர்களுக்கென்று பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை, இப்படி அத்தியாவசிய பிரச்சினைகள் இருந்த போதிலும், 19வது திருத்தச்சட்டத்தில் இனப்பிரச்சினைக்கான பொறிமுறை எதுவும் காணப்படாத போதிலும், மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துதல், காணிகள் விடுவிப்பு, வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் ஊடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிச்செல்வதற்கான நல்லெண்ணத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிய அரசுக்கு ஆதரவு வழங்கினோம்.

ஆனால் புதிய அரசின் செயல்பாடுகள் பூச்சிய பெறுபேற்றை வெளிப்படுத்தி ஏமாற்றத்தைத் தந்துள்ளதால் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாலும்கூட, துரிதகதியில் எமது மக்களின் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே அச்சட்டம் ஆரோக்கியமானதாக, வலுவுள்ளதாக அமையும்.

இல்லாவிட்டால் 19வது திருத்தச்சட்டமும் 13வது திருத்தச்சட்டம் போன்றே அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டுப் பேசப்படும் ஒரு இழுநிலைப்பறி விவாதப்பொருளாகி கிடப்பில் போடப்படும்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் அரசிடம் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என்று விமர்சனமெழுப்பி வருகின்றனர். ஆனால் தேர்தலுக்கான பரப்புரை காலத்தில் எந்த வாக்குறுதிகளும், எழுத்து மூலம் வாங்காமல் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிக்காக ஆதரவு கோரியது. அந்த ஆதரவு வீணான ஒன்று என்று குறிப்பிடுகிறார் அனந்தி சசிதரன்.

anathy-e1429974632534.jpg

 

காணமல் போனோர் விவகாரம் பற்றி இந்த அரசு எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் நடத்திய போராட்டங்களுக்குக்கூட எந்தப் பதிலையும் தராது இந்த 100 நாட்களைக் கடத்தியிருக்கிறது புதிய அரசு.

ஜனாதிபதி வேட்பாளாரக மைத்திபால சிறிசேனாவை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கோரிய தமிழ் தலைமைகள் யுத்தக் குற்றங்கள் குறித்தோ, காணாமல் போனோர் குறித்தோ, கைதிகள் குறித்தோ எந்தவித பேரம்பேசல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இறுதியாக, அதிகளவில் மக்கள் மத்தியில் சென்றுவரும் ஒருவராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறியப்படுகின்றார். அவர் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களிடம் என்னமாதிரியான மாற்றத்தை எதிர்கொண்டார், உண்மையில் இந்த 100 நாட்களுக்குள் வடக்குப் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்துப் பேசினோம்.

 

Gajan1-e1429974985890.jpg

 

“நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை.

 

தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை நடத்தி இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சவை நாமும் தண்டிக்க மாட்டோம், சர்வதேச தண்டனைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கமாட்டோம் என்று சொல்லியே மைத்திரி ஆட்சியைப் பிடித்தார். அவரின் 100 நாள் ஆட்சி தமிழர்களுக்கு எதுவும் தந்துவிடவில்லை. கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி வடக்கில் எப்படியிருந்ததோ, அப்படியேதான் இப்போதும் இருக்கின்றது. மக்கள் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனுவித்த அதே துயரத்தைத் தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள். வடக்கில் இராணுவப் பிரசன்னம் அப்படியே தான் இருக்கின்றது. கொக்கிளாய் பகுதிக்குள் இப்போதும் நில அபகரிப்புத் தொடர்கின்றது. காணிகள் விடுவிப்பதாக சொல்லப்பட்டாலும் புதிதாக எவையும் விடுவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் விடுவிப்பதற்கெனத் திட்டமிட்ட, காணிகளின் ஒரு பகுதியையே இந்த அரசு விடுவித்திருக்கின்றது.

 

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் இரண்டுபேர் சேர்ந்து கதைத்தாலே புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். ஜனநாயக வழிப் போராட்டங்களை மக்களும், அரசியல் கட்சிகளும் நடத்தினாலும் உடனடியாகவே அந்த இடத்தை இராணுவப் புலனாய்வாளர்கள் சுற்றிவளைத்துக்கொள்கிறார்கள். இந்த 100 நாளுக்குள்தான் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலளாரகள் 3 பேர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஆகவே நடைமுறையில் சுதந்திரமற்ற நிலைதான் ஒட்டுமொத்த தாயகப் பரப்பிலும் இருக்கின்றது. இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்றன. தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத் தலையீடு தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

எனவே இந்த அரசு நிலைப்பதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ, அடிப்படை வாழ்வாதார உரிமைகள் பேசாது. பேசவும் முடியாது. அப்படிப் பேசினால் பெரும்பான்மையினத்தவரின் பலத்தை இழக்க நேரிடும்’

 

இந்த 100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது என்பதையும், எதை உணர்கிறார்கள் என்பதையும் உலகின் முன்கொழும்பு மிரர் பதிவிடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.