Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வட பகுதியில் இரசாயன ஆயுதப் பிரயோகம் செய்யப்பட்டதா?

Featured Replies

கொழும்பிலிருந்து எமது விசேட செய்தியாளர்கள் அருணன் நிமலேந்திரா மற்றும் அம்ரித் பெர்னாண்டோ:-

Npower1_CI.JPG

 

 
இந்தத் தலையங்கத்தைப் பார்த்ததும் உங்கள் நினைவுகள் 2009 இற்குச் சென்றுவிடும். இலங்கையில் மக்களுக்காகக் குரல்கொடுத்த பத்திரிகையாளர்கள்  பலர் கொல்லப்பட்டார்கள்; பலர் காணாமற் போகச் செய்யப்பட்டார்கள். மகிந்த இராஜபக்சவும் அவரது சகோதரர்களும் தமிழர்களை மட்டுமல்ல அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிங்களவர்களையும் அழிப்பார்கள் என்று எழுதிய லசந்த விக்கிரமதுங்க 2009 சனவரி 8 இலே கொல்லப்படுகிறார். விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த வன்னிப் பெருநிலத்தின் மீது மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இந்த நூற்றாண்டின் இரகசியக் கொலைக்களங்களை விட்டுச் சென்ற மக்களுக்கெதிரான மிகவும் வெட்கக்கேடான யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதை வெளிப்படுத்தியவரும் லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தில் பத்தி எழுத்தாளராகவும் கேலிச்சித்திர ஆசிரியராகவும் இருந்த பிரகீத் எக்னெலியகொட 2010 இலே இலங்கையின் சனாதிபதித் தேர்தலுக்கு 2 தினங்கள் முன்னதாக அதாவது சனவரி 24 இல் காணமற் போகச் செய்யப்படுகிறார்.
 
இன்று வன்னி யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகத் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள். தங்களது பிள்ளைகளை‚ கணவன்மாரை படையினரிடம் ஒப்படைத்த தாய்மாரும்‚ வெள்ளைவானில் கடத்தப்பட்ட பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோரும் சகோதரனைத் தேடும் சகோதரிகளும் சனவரி 8 ‚ 2015 இற்குப் பின்னர் வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
 
தமிழர்கள் நிலத்தை மீட்கப் போராடினார்கள்.  இன்று நீருக்காகப் போராட முடியாத நிலையில் உள்ளனர். தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துவோர் தமிழ்மக்களை படுகுழியில் தள்ளுகின்றனரோ என்ற ஐயம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
 
நீருடன் கலக்கப்பட்டுள்ள மெல்லக் கொல்லும் இரசாயனம் யாழ்ப்பாண மக்களின் உணவுடன் - உடலுடன் சேர்ந்தமை  பற்றிய  எமது ஆய்வினை இங்கு முன்வைக்கின்றோம். சுன்னாகம் மின்சாரசபை வளாகத்தில் புதைக்கப்பட்ட மின்னுற்பத்திக்குப் பயன்படுத்திய கழிவு எண்ணெயும் அதில் கலந்துள்ள நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனப் பதார்த்தங்களும் வலிகாமம் நீர்ப்படுக்கையுள் கலந்தமை பற்றிய எமது தேடலின் சாராம்சமே இவ் ஆவணம்.
 
இதற்காக ஒருமாத காலம் பயணங்களை மேற்கொண்டோம். அரச அதிகாரிகள்‚ உள்ளூர் ஊடகவியலாளர்கள்‚ வலிகாமம் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தோம். நாமும் எமது உதவியாளர்களும் நெருக்கடியை சவாலை எதிர்கொண்டது தமிழ் அரசியல்வாதிகளாலும் உயர்பதவியில் இருக்கும் சில அரச அதிகாரிகளாலுமே என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.  பொதுமக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கும் அப்பால் ஒரு இனத்தையே அழிக்கும் மெல்லக் கொல்லும் விசம் குறித்து மக்களை எச்சரிக்காது மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் மருத்துவர்களை அரசியல்வாதிகளான அதிகாரிகள் அச்சுறுத்துவது என்பது தென்பகுதியைச் சேர்ந்த எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துன்னானவிலும் ரதுபஸ்ஸ வலவிலும் இப்படி ஒரு நிலையை நாம் காணவில்லை. வலிகாமத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் கிணற்றுநீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமையை அறியாது குடிப்பதற்கும் உணவுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பில் விழிப்புணர்வு அற்றே உள்ளனர்.
 
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான தயா சோமசுந்தரம் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறாது மறைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். புகுஷிமா அழிவுகள், செர்னோபில் அணு பேரழிவுகள், போபால் விச வாயு கசிவு போன்ற ஏனைய இடங்களில் நடந்த சுற்றுச் சூழல் பேரழிவுகளைப் போல வலிகாமம் மக்களும் பாதுகாப்பான சுற்றுச் சூழலை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எதிர்வு கூறியிருக்கிறார்.
 
யாழ்குடாநாடும் நன்னீர்ப்படுக்கைகளும்
 
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான நன்னீர்ப் படுக்கைளில் வலிகாமம் பிரிவிலுள்ள சுன்னாகம் மற்றும் அதன் அயற் பிரதேசம் முதன்மையானது. (Chunnakam aquifer is the main lime stone aquifer of Jaffna Peninsula.) வடமராட்சி கிழக்கின் வல்லிபுரம் மற்றும் மணற்காட்டுப் பிரதேசத்திலும் தென்மராட்சியிலும் நன்னீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன. தீவகத்தின் சாட்டி மற்றும் அல்லைப்பிட்டியும் குடிப்பதற்குகந்த நன்னீர்ப் படுக்கைகளைக் கொண்டுள்ளது. இவை நான்குமே குடாநாட்டுக்குத் தேவையான நீர் வழங்கிகள். இலங்கையைின் ஏனைய பிரதேசங்களைவிட முதன்மையான நிலக்கீழ் நன்னீர்ப் படுக்கை சுன்னாகத்தினைச் சூழ்ந்த வலிகாமத்தில் காணப்படுகிறது. வலிகாமத்து நன்னீர் இப்பிரதேச மக்களுக்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். இன்று இந்த நீர் மூலம் மாசுபடுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தீர்ந்து போகததும் குடிப்பதற்கு உகந்ததுமான மிகச்சிறந்த நன்னீர்ப்படுக்கையே சுன்னாகத்தில் உள்ளது. இந்நீர்ப் படுக்கை பிற பகுதிகளுக்கும் வழங்கத் தக்க கற்பகதருவை ஒத்தது. சுன்னாகம் நன்னீர்ப்படுக்கையின் எல்லைகளாக சங்குவேலி‚ அச்சுவேலி‚ நீர்வேலி‚ திருநெல்வேலி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பிரதேசங்களில் நிலத்திற்கு அடியில் காணப்படும் சுண்ணக்கற் பாறைகளே சமுத்திரம் போன்ற நீரைத் தேக்கிவைத்துள்ளது. 1990கள் வரை சுன்னாகத்தில் இருந்து தண்ணீர்‚ புகையிரதம் மூலம் காங்கேசன் துறை முதல் மதவாச்சி வரை புகையிரத நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இங்கிருந்தே காரைநகருக்கும் வேறு தீவுகளுக்கும் அண்மைக்காலம் வரை நீர் விநியோகம் நடைபெற்றது.
 
சுன்னாகம் மின்னிலையமும் ஒயில் குளமும்
 
சுன்னாகத்தில் மின் உற்பத்தி செய்யும் உப மின்நிலையம் 1958 இல் ஆரம்பிக்கப்பட்து. 1990 கள் வரை இங்கு மின் உற்பத்தி சீரான முறையில் நடைபெற்றது. இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் (1987 – 1989) மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலால் எண்ணெய்த் தாங்கி சேதமடைந்து எண்ணெய் நிலத்திலே சிந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த எண்ணெயால் அயலில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த முறைப்பாடும் ஏறத்தாழ 20 வருடங்களில் கிடைத்ததில்லை என்கிறார் சுன்னாகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச ஊழியரான நடராசா. 1990 களின் முற்பகுதியில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் எண்ணெய்த் தாங்கிகள் சேதமடைந்தாக இங்கு பணிபுரிந்த பொறியியலாளர் தெரிவிக்கின்றார். எனினும் அது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத்தக்க அனர்த்தமல்ல  என்றும் கூறுகின்றார்.
 
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 1995 பிற்பகுதியில் யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னர் 1996 முதல் யாழ்குடாநாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதி  கூல்எயர் என்ற நிறுவனத்தின் மூலம் காங்கேசன் துறையிலிருந்து விநியோகிக்கப்ட்டு வந்தது. சுன்னாகதத்திலிருந்து 2002 முதல் கூல்எயர் நிறுவனம் அல்ஸ்ரோம் நிறுவனத்தடன் இணைந்து 20 MW  மின்சாரத்தை உற்பத்தி செய்து யாழ்குடாநாட்டுக்கு வழங்கி வந்தது.
 
 
காலத்துக்குக் காலம் இலங்கை மின்சார சபை வெவ்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து மின்சாரத்தை  பெற்றுள்ளது.
 
2003 முதல் 2012 டிசம்பர் வரை சுன்னாகத்தில் இலங்கை மின்சாரசபைக்காக அக்றிக்கோ நிறுவனம் மின்னுற்பத்தியில் ஈடுபட்டது. சுன்னாகத்தில் 2007 இல் நொதேண் பவர் நிறுவனம் 6 MW  மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 6 இராட்சத மின்பிறப்பாக்கிகளை பொருத்தி 2008 ஏப்பிரல் ஓராம் திகதியில் இருந்து மின்னுற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இக்காலப் பகுதியில் ஏறத்தாள 150 சீனர்கள் இங்கு பணிபுரிந்தார்கள். சீன அரசு வடக்கிலே சுன்னாகத்தில் மின்னுற்பத்தி செய்யும் மின்பிறப்பாக்கிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்ட அதேவேளை தெற்கிலே அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.
 
நொதேண் பவர் நிறுவனம் வெளியேறும் கழிவு ஒயிலை வெறும் நிலத்திலே விட்டது. நிலத்திலே விடப்பட்ட ஒயில் வடிந்து சென்று அங்கிருந்த கிணற்றினை நிறைத்தது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுன்னாகம் மின்னிலைய வளாகத்தில் ஒயில் குளம் ஒன்று இருப்பது 2012 இல் தெரிய வந்தது.
 
இன்று கழிவு ஒயில் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட பல கிணறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. நிலத்தடியிலே பாரிய கழிவு ஒயில் சேமிப்புத் தாங்கிகள் அமைக்கப்பட்டு அவை கொங்கிறீற்றினால் மூடப்பட்டு அவற்றுக்கு மேலே மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டு மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேறும் கழிவு ஒயில் நேரடியாக நிலத்திலே இறங்குமாறு செய்யப்பட்டுள்ளன.  இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை வெறும் கண்ணால் அவதானித்து கண்டறிந்து விடமுடியாது.
 
கிணற்று நீரில் ஒயில் - பொதுமக்களின் முறைப்பாடு
 
2007 இல் சுன்னாகம் மின்னிலைத்திற்கு அருகே வசிக்கும் சோதிமலர் என்ற குடியிருப்பாளர் தனது வீட்டுக் கிணற்றினுள் எண்ணெய் படலம் தெரிவதாக வலிதெற்குப் பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்துள்ளார். 2008 இலே சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமது விவசாயக் கிணறுகள் கழிவு ஒயிலால் பாதிக்கப்படுவதாக எழுத்து மூலம் அறிவித்தனர்.
 
2011 – 2012 இலே சுன்னாகம் கிழக்கு பகுதியில்  மேலும் பல கிணறுகள் கழிவு ஒயிலால் பாதிப்படைந்தன.  பொது மக்கள் உடுவில் சுகாதரா வைத்திய அதிகாரி பணிமனைக்கும் வலிதெற்குப் பிரதேச சபைக்கும் முறைப்பாடு செய்தனர்.   பொதுமக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து சுன்னாகம் மின் பிறப்பாக்கி நிலையத்திற்கு அண்மையிலுள்ள கிணறுகளில் நீர் மாசடைந்துள்ளமை தொடர்பான கலந்துரையாடல் வலிதெற்குப் பிரதேச சபை தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் 29.08.2012 அன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி‚ பொறியிலாளர்‚ மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர்‚ நீர்வளச்சபை பொறுப்பதிகாரி‚ பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர்‚ மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முதலான 24 பேர் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் நிறைவில் 11.30 மணியளவில் தவிசாளர் உள்ளிட்ட கலந்துரையாடல் குழுவினர் மின்பிறப்பாக்கி நிலையத்தைப் பார்வையிடச் சென்றனர்.
 
 மின்பிறப்பாக்கி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் ‚ எண்ணெய் என்பன உரிய முறையில் அகற்றப்படாது தரையில் தேங்கியிருந்தமையை இக்குழுவினர் கண்டனர். இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தவிசாளர் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் கோரினார்.  கலந்துரையாடலும் களஆய்வும் நடைபெற்று 2 வருடங்கள் ஆகியும் எந்த வித உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
 
2014 இலே சுன்னாகத்தைத் தாண்டி வடக்காக சூராவத்தை‚ ஏழாலை‚ மல்லாகம் தெல்லிப்பழை‚ கட்டுவன் என்று மேலும் பல இடங்களுக்கும் கழிவு எண்ணெய் பரவியது.
 
பொது மக்களும் சமூக நலன் விரும்பிகளும் இப் பிரச்சினையை பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு 2 வருடங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தினர். உயர்நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் சட்ட ஆலோசனையை மேற்கொண்டனர். இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனைத் தொடர்புகொண்டு வேண்டிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஐங்கரநேசன் ஒருவருடகாலமாக காலத்தைக் கடத்துவதை உணர்ந்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். தெல்லிப்பழை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் சுன்னாகம் கிழக்குப் பகுதியில் பாதிக்கப்பட்ட 11 பொது மக்களும் இலங்கை மின்சாரசபை மற்றும் நொதேண் பவர் என்பவற்றுக்கு எதிராக தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
 
கார்த்திகை 11‚ 2014 அன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஜெ.ஜெயரூபன் ஊடாக 11 மனுதாரர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்கள் பிரதிவாதிகளாக நொதேண் பவர் கம்பனி‚ இலங்கை மின்சாரசபை (உதுறு ஜெனனி)‚ பிரதம பொறியிலாளர் (உதுறு ஜெனனி) ஆகியோரைக் குறிப்பிட்டு வழக்கினைப் பதிவு செய்தனர்.
 
சுத்தமான குடிநீர் கேட்டு வழக்குத் தாக்கல் செய்தவர்கள் பயங்கர வாதிகளாயினர்
 
கிணறுகளில் “கழிவு எண்ணெய்” கலந்த நிலையில் வாழ்வதில் அவதியுறும் வலி –வடக்கு, வலி-தெற்கு மக்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை அரசியல் மயப்படுத்தும் “நொதேண் பவர் கம்பனி (பிறைவற்) லிமிற்ரெட்” வழக்கு மனுதார்களையும், வழக்குத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளையும் “பயங்கரவாதிகள்” எனச் சத்தியக் கூற்றில் மிரட்டியிருந்தது.
 
தமது கிணறுகளில் “கழிவு எண்ணெய்” கலந்தது தொடர்பாக “நொதேண் பவர் கம்பனி (பிறைவற்) லிமிற்ரெட்,” இலங்கை மின்சார சபை (உதுறு ஜெனனி), பிரதம பொறியியலாளர் உதுறு ஜெனனி என்பவர்களுக்கு எதிராக 11 பேரினால் தொடரப்பட்ட வழக்கில் சுண்ணாகத்தில் இயக்கப்படும் மின் பிறப்பாக்கிகளை தொடர்ந்தும் இயக்குவதை தடைசெய்யக் கோரியிருந்தனர்.
 
வழக்கிற்கு “நொதேண் பவர்” கம்பனியின் முகாமையாளர் 27.11.2014 வியாழனன்று அணைத்துள்ள சத்தியக்கூற்றில் பின்வரும் இரண்டு விடயங்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்:
 
(தமிழ், எழுத்து, சொல், இலக்கணப் பிழைகள் மலிந்த இந்த சத்தியக் கூற்றினை சுண்ணாகத்தைச் சேர்ந்த என். சண்முகவேல் என்ற சத்திய ஆணையாளர் தனக்கு வாசித்து தெளிவுபடுத்தியதின் பின்னர் தான் கையொப்பமிடுவதாக “நொதேண் பவர்” கம்பனியின் முகாமையாளர் கையொப்பமிட்டுள்ளார்!)
 
பந்தி – 9 இனைப் பொறுத்தமட்டில், யாழ் குடாவுக்கு மேலதிகமான மின் சக்தியானது மத்திய வலையமைப்பிலிருந்து விநியோகிக்கப்படுவது இலங்கை மின்சார சபையால் உறுதிப்படுத்தப்பட்டது.
 
 
 
இந்தநிலையில், சுண்ணாகத்தில் ஏன் எண்ணெய் எரிவூடாக இயங்கும் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன? இது எவர்களின் வருவாய்க்காகச் செய்யப்படுகிறது என்பது முக்கியமானது!
 
 
இவற்றுள் பந்தி – 11 இல் கூறப்பட்டிருப்பவைகள் பாதிக்கப்பட்ட மனுதாரர்களையும், வழக்குத் தாக்கல் செய்யத சட்டத்தரணிகளையும் எல் டி. டி. ஈ பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்படுவர் என மறைமுகமாக மிரட்டுவதாக அமைகிறது!
 
ஒரு நீதி மன்றச் சத்தியக் கூற்றில் இப்படிப் பகிரங்கமாக மிரட்டுவது, இந்தக் மின் உற்பத்திக் கொம்பனியுடன் இலங்கை அரசின் மிக மிக்கியமான ஒருவர் (அன்று ஆட்சியில் இருந்த) தொடர்பாக இருப்பதைத்தான் உறுதிப்படுத்துவதுடன் அவரின் மிரட்டுகை இந்தச் சத்தியக்கூற்றூடாக வெளிவருவதுதான் உறுதியாகிறது!
 
நொதேண் பவரும் மறைக்கப்படும் உண்மைகளும்
 
நொதேண் பவர் லிமிட்ரெட் ஆனது பல்தேசியக் கம்பனியான எம் ரி டி வோர்க்கர்ஸ் லிமிட்டட்டின் ஒரு உப நிறுவனம். இலங்கை மின்சாரசபைக்காக 2008 இலிருந்து மின்னுற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இம் மின்னிலையம் இலங்கை படையினருக்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் ஒரு தொழிற்சாலை. இதன் நிறைவேற்று முகாமையாளர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி எயர் வைஸ் மார்சல் லால் பெரேரா. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாயவின் உத்தரவுக்குக் கீழ் இயங்கும் நிறுவனம். இங்கு ஒரு அலகு மின் உற்பத்திக்காக ரூபா. 26 செலவாகிறது. அறிவிக்கப்படாத பாதுகாப்பு வலயம் போல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியது. 2008 இல் நொதேண் பவர் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் விவசாயிகள் தங்கள் கிணற்று நீரில் ஓயில் தெரிந்ததை அடுத்து நொதேண் பவர் நிறுவனத்துக்குள் நுழைந்து பார்வையிட முற்பட்ட போது பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்கள்.
 
 
 
நொதேண் பவர் நிறுவனத்தில் இயங்கும் மின் பிறப்பாக்கிகள் சீனாவில் இருந்து தருவிக்கப்பட்டவை. 2008 இல் 150 இற்கும் அதிகமான சீனர்கள் இங்கு தங்கியிருந்து பணிபுரிந்த வேளை அயலில் உள்ளவர்களிடம் உணவுக்காகப் பாம்பு கேட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆலோசனையில் நிலத்தடியிலே 150 அடி ஆழத்திற்கு துளைகள் பல இடப்பட்டு நன்னீர்ப்படுக்கையினுள் கழிவு ஒயிலை செலுத்தியிருக்கிறார்கள். 150 அடிக்கு மேல் துளைகள் இடப்பட்டதை இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
ஒயில் பரவிய விதத்தை ஆராய்கிற போது ஆழக் கிணறுகளும் குழாய்க் கிணறுகளுமே ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மல்லாகம் நீதி மன்ற வளாகத்தில் உள்ள கிணற்றில் எண்ணெய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 3ஆவது படுக்கையிலேயே எண்ணெய்ப் பரவல் இருந்து.  குறிப்பாக நீர் போதாமை காரணமாக குண்டடிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் கிணற்றுக்குள் வெட்டப்பட்ட கிணறுகளிலேயே எண்ணெய்ப் பரவல் அதிகமாக இருந்தது.
 
தற்போது 2015 பெப்பிரவரியில் கழிவு எண்ணெய்  நிலத்தடி நீரில் சுன்னாகம் மின்னிலையத்தை மையமாகக் கொண்டு 7 கி.மீ. ஆரையாகக் கொண்டு பகுதியில் வட்டமாகப் பரவியுள்ளமை ஆய்வுகள் முலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுன்னாகம் மின்னிலையத்திற்கு வடக்கே  மாவிட்டபுரம்‚ கீரிமலை வரையும் கிழக்காக அச்செழு‚ கோப்பாய்‚ நீர்வேலி வரையும் மேற்கே மானிப்பாய்‚ சங்குவேலி வரையும் தெற்கே இணுவில் தாவடி சுதுமலை கொக்குவில் வரையும் நிலத்தடி நீரிலே கழிவு எண்ணெய் பரவியுள்ளது. 
 
படம் 5
 
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் சுன்னாகம் பகுதியில் 2013 – 2014 காலப்பகுதியில் 150 கிணறுகளில் செய்த ஆய்வில் 109 கிணறுகளில் அனுமதிக்கத் தக்க அளவிலும் அதிகளவில் ஒயிலும் கிறீசும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கைச் சட்டங்களின் படி ஒரு இலீற்றர் நீரில் 1 மிகி ஐ விட கூடுதலாகப் பெற்றோலியக் கழிவுகள் காணப்படுமெனில் அந்நீரை மனித பாவனைக்கு அனுமதிக்க முடியாது. எனினும் இப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வில் 2 தொடக்கம் 30 மில்லிகிராம் வரை ஒயில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
2015 பெப்பிரவரியில் சுகாதார அமைச்சினால் தெல்லிப்பழை‚ உடுவில்‚ கோப்பாய்‚ சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு உட்பட்ட 30 கிணறுகளின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரச இரசாயான பகுப்பாய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டதில் 27 கிணறுகளில் 2மிகி இலிருந்து 5.9 மிகி வரையும் ஏனைய 3 கிணறுகளில் 11.3 மிகி, l4.2 மிகி மற்றும்  l5.6 மிகி.  அளவிலும் எண்ணெய் அபாயகரமான அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
 
வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமை திட்டமிடப்பட்ட செயலா?
 
ஒரு பல்தேசிய நிறுவனம் - பல பில்லியன் ரூபா முதலிட்டு மின்பிறப்பாக்கிகளை பொருத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவிய  ஒரு நிறுவனம் – அதுவும் இலங்கை அரசுக்காக மின்னுற்பத்தி செய்த நிறுவனம் முறையற்ற விதத்தில் சுமார் 400‚000 லீற்றர் கழிவு ஒயிலை - அதாவது எஞ்சினில் இருந்து வெளியேறிய ஒயிலை வெற்று நிலத்தில் பொறுப்பற்ற முறையில் விட்டிருக்குமெனின் அதற்கு காரணம் இருக்க வேண்டும்
 
    2012 இல் காணப்பட்ட ஒயில் குளம் மர்மாக மறைந்தது எங்கனம்?
 
*   நிலத்தடி நீரையே குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் உபயேகாகிக்கும் மக்கள் குடியிருப்பு நிறைந்த பிரதேசதத்தில் இயங்கும் ஒரு அரச நிறுவனம் நிலத்திற்குக் கீழ் 150 அடிகளுக்குத் துளையிட்டு நன்னீர்ப்படுக்கையினுள் கழிவு ஒயிலை செலுத்துவது என்பது திட்டமிடப்படாத செயலா? இவ்வாறு தென்னிலங்கையில் எந்த ஒரு நிறுவனம் ஆவது செய்துள்ளதா? ஒரு அரசாங்கம் நன்னீர்ப் நீர்ப்படுக்கையினுள் கழிவு ஒயில் செலுத்தியமை உலகில் எங்காவது நிகழ்ந்துள்ளதா? மகிந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கின் முதலீடுகள் அனைத்திலும் கோத்தபாய இராஜபக்கசவின் கைகள் இருப்பது இரகசியமான விடயம் அல்ல
 
*   2015 சனவரி 8 சனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களால் எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்முடியாமைக்கு கோத்தபாய இராஜபக்கசவின் நேரடியான முதலீடு நொதேண்பவரில் இருந்தததை இப்பிரதேச மக்களும் அரச வைத்திய அதிகாரிகளும் கூறுகின்றனர். சனவரி 8 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் பொதுமக்கள் இவ்விடயம் குறித்து எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடிந்திருக்குமா என்ற  கேள்வியும் முன்வைக்கப்படுகிறது
 
பொதுமக்கள் முறையிட்டு 7 வருடங்களாகியும் ஏன் ஒயில் பரவுவதை தடுக்க அரசாங்க அதிகாரிகளால் முடியாமற் போனது.
 
 
 
*  முன்னாள் அரசாங்க அதிபர் கே.கணேஸ் மின்சாரசபைக்கு எழுதிய கடிதத்திற்கு உரிய நடவடிக்கையை மின்சாரசபை எடுக்கத் தவறியது ஏன்? பதிலாக அரச அதிபருக்கு எவரிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது?
 
*    வடக்கிலே பணியாற்றிய ஓய்வு பெற்ற மூத்த சிவில் சேவை அதிகாரியால் சுன்னாகம் பகுதியில் பொது மக்களுக்கு அழிவை ஏற்படுத்த வல்ல ஒரு இரசாயன ஆயுதப் பிரயோகத்தை ஒத்த நிகழ்வு நடைபெற்று வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இன்று வரை மௌனமாக இருப்பது ஏன்?
 
*   முன்னைய ஆட்சியில் மின்சக்தி அமைச்சராகவிருந்த சம்பிக்க ரணவக்கவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராஜபக்கசவும் இணைந்து வலிகாமத்தை விட்டு மக்களை வெளியேற்ற மேற்கொண்ட வெளித்தெரியாத திட்டமே நிலத்தடிநீரில் கழிவு ஒயில் கலந்தமையாகும். 2009 இலே வன்னிப் பகுதியில் பொதுமக்களை இலக்குவைத்து அழித்தது போல் வடக்கிலே யாழ்ப்பாணத்தில் பொது மக்களை நேரடியாக அழிக்க முடியாமற் போனமை இவர்களுக்கு பெருவலியாக இருந்தது. இலங்கையை ஒரு பௌத்த  சிங்கள நாடாக மாற்றும் திட்டத்தை முன்னெடுப்பதற்கும் தமிழ்த்தேசிய உணர்வை இல்லாமற் செய்வதற்கும் வடக்கிலே யாழ்ப்பாணத்தில் உள்ள 6 இலட்சம் தமிழர்கள் பெரும் இடையூறாக இருப்பதாக சிங்களத் தேசியவாதிகள் கருதினர். கடந்த தாசாப்தங்களில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் “மாகாவம்ச மனநிலை” என்று இதைத்தான் கூறுவார்கள்.
 
மெல்லக் கொல்லும் நஞ்சு கலந்த நீரை அருந்தும் வலிகாமம்
 
வலிகாமம் தெற்குப் பகுதியில் வாழும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது குடிநீரில் மெல்லக் கொல்லும் நஞ்சாகிய ஈயம்‚ குரோமியம் கலந்துள்ளமையை அறியாது அந்நீரையே குடிப்பதற்கும் உணவுத்தேவைக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நீரையே கால்நடைகளுக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்துகிறார்கள்.
 
சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திற்கு வடக்காக உள்ள சுன்னாகம் கிழக்கு‚ சூராவத்தை மற்றும் தெல்லிப்பழையைச் சேர்ந்த பெரும்பாலானோர் தமது கிணற்று நீரைக் கண்களால் பார்த்துவிட்டு தமது கிணற்றில் ஒயில்(எண்ணெய்) இல்லை என்று கருதுகின்றனர். நிலத்தடி நீரில் ஒயில்(பெற்றோலியம்) கலக்கிற போது அதிலுள்ள ஆபத்தானதும் எளிதில் பிரிகையடையாததுமான ஈயம்‚ குரோமியம்‚ கட்மியம்‚ ஆசனிக்  முதலானவை நீருடன் கலந்துவிடும். இவை கண்களுக்குத் தெரியாது. உண்மையில் எண்ணெயால் ஏற்படும் பாதிப்பை விட அதிலுள்ள பார உலோகங்களாலேயே பாரதூரமான பாதிப்பு ஏற்படுகிறது.
 
யாழ்ப்பாணத்தின் நிலவியல் அமைப்பானது சுண்ணக் கற்பாறைகளால் ஆனது. சுண்ணக் கற்பாறைகள் நீரை ஊடுபுகவிடும் தன்மையைக் கொண்டவை. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோட்டமானது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது (Inter connected). சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்தடி நீருடன் கலக்கவிடப்பட்ட கழிவு ஒயில் யாழ் குடாநாடு முழுமையும் பாதிப்பை ஏற்படுத்தும்; யாழ்ப்பாணத்தின் மூன்றிலொரு பங்கு நன்னீர்க் கிணறுகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது. எண்ணெயின் பரவல் இல்லாத இடங்களிலும் பார உலோகங்களான ஈயம்‚ குரோமியம்‚ கட்மியம்‚ ஆசனிக்  பரவும் அபாயம் உள்ளது.
 
நச்சு உலோகங்கள் நீரில் கலந்திருப்பது கண்ணுக்குத் தெரியாது. இதனால் உடனடிப் பாதிப்புத் தெரியாது. இவற்றின் செறிவு அதிகரிக்க சிறுநீரகம் செயலிழந்து போகும்‚ ஈரல் பாதிப்படையும்‚ நரம்பு மண்டலம் பாதிப்படையும்‚ படிப்படியாக நினைவாற்றல் இழப்பு ஏற்படும்‚ குறைமாதப் பிரசவம் ஏற்படுவதுடன் அங்கவீனமான பிள்ளைகள் பிறக்கும்.
 
இப்பாதிப்பைக் குறைக்க ஒயில் பாதிப்பு காணப்பட்ட பகுதி மக்களின் குருதி மற்றும் சிறுநீரில்  கலந்துள்ள  ஈயம்‚ ஆசனிக்‚ குரோமியம்‚ கட்மியம் முதலான நச்சு உலோகங்களின் செறிவு காலத்துக்குக் காலம் பரிசோதிக்கப்படுவதுடன் நோய்த் தாக்கங்கள் குறித்துக் கண்காணித்தலும் வேண்டும். சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு ஒயில் பாதிப்பு காணப்பட்ட பகுதி மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை.
 
யாழ் குடாநாட்டுக்குத் தேவையான விவசாய விளைபொருள்கள் குறிப்பாக மரக்கறி‚ கிழங்கு வகைகள் வலிகாமத்திலேயே உற்பத்தியாகின்றன. பாரஉலோகங்கள் கலந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறன்ற போது இந்த நச்சு உலோகங்கள் விவசாய விளைபொருள்களிலும் செறிவூட்டப்பட்டுச் சேர்கின்றன. இவ் விவசாய விளைபொருள்களே யாழ் குடாநாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதனால் யாழ்குடாநாடு முழுமையுமே பெரும் பாதிப்பை எதிர்நோக்கும்.
 
முழு இனத்தையுமே அழிவுக்கு இட்டுச் செல்லும் கழிவு ஒயில் பாதிப்புக் குறித்து யாழ்ப்பாணத்தின் கல்விமான்களும் படித்த அரசியல் வாதிகளும் மௌனமாக இருக்கிறார்கள்.  தமிழ் அரசஅதிகாரிகள் பாதிப்புக்கு உடந்தையாக இருக்கிறார்கள். நொதேண் பவர் நிறுவனத்தின் 2 பெரிய முதலீட்டாளர்கள்- (Stakeholders) - தமிழர்கள் இலண்டனில் வாழ்கிறார்கள். இவர்கள் தமது இனத்தையே அழிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள படைத்தளங்களில் உள்ள படையினருக்கு கடந்த  பல வருடங்களாக தென்பகுதியில் இருந்து கப்பல் மூலம் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது! ஏன் ?
 
உசாத்துணை
 
1.       Analysis of Status of Groundwater Quality which was contaminated with the waste oil in the Chunnakam area
 
2.       Water Reports by Regional Laboratory National Water Supply & Drainage Board
 
3.       Ecological Disaster – In Vallikamam, North Sri Lanka https://www.colombotelegraph.com/index.php/ecological-disaster-in-vallikamam-north-sri-lanka/
 
4.       Chunnakkam Power Plant: A point source of oil contamination of wells? NWANY Wijesekara, V Murali, HDB Herath
 
5.       Jaffna Peninsula use of fuels and leaks by Eng.Gnanalingam
 
6.      Professional Discussion with Stakeholders on "Oil Pollution of Ground Water in the Jaffna Region” organized by Institution of Engineers of Sri Lanka (IESL) and JAFFNA MANAGERS FORUM (JMF) 3rd February (Tuesday)2015 – Euroville Conference Hall
 
 
 
 
 
 
12.  By letter Re: water samples testing reports from suspected oil contaminated wells in the
 
            Jaffna district dated on 10/04/2015 ,Ministry of Health Colombo
 
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.