Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரினை நினைவுகூருதலும் அதன் அரசியல்களும்

மகேந்திரன் திருவரங்கன்

05d05489-efac-4481-a0fb-fc8b1c0c2e3d1.jp

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில், இலங்கையின் முப்பதாண்டு கால சிவில் யுத்தம் பொது மக்கள், விடுதலைப் போராளிகள், இராணுவத்தினர், அரசியற் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பட்ட, ஆயிரக்கணக்கானோரினைப் பலியெடுத்ததன் பின்னர் ஓய்ந்தது. போரின்போது கொல்லப்பட்ட அனைத்து உயிர்களும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும், அரசியல் ரீதியிலான சமூகங்களுக்கும் மிகவும் முக்கியமானவர்கள். மனித உயிர்கள் யாவும் பெறுமதி மிக்கவை. எனவே போர் எமது சமூகங்களிலே விட்டுச் சென்றுள்ள இழப்புக்களை நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்ற அதேவேளை, எமது நினைவுகூரற் செயன்முறைகள் மீளவும் ஒரு முறை இவ்வாறான இழப்புக்கள் நேராதபடி எமது சமூகங்களிலும், அரசிலும் மாற்றங்களைத் தோற்றுவிக்கக்கூடிய வழிமுறைகளுக்கான திறவுகோல்களாகவும் அமைய வேண்டும்.

அரசாங்கத்தின் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் போது மரணித்த சிங்கள, முஸ்லிம் மக்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்கங்களின் உள்ளேயும், அவற்றுக்கு இடையிலான வன்முறைகளின் போதும் இடம்பெற்ற படுகொலைகள் என இந்தப் போராட்டம் பல்வேறு தரப்பினர்களின் ஞாபகங்களினை எம்மத்தியிலே விட்டுச் சென்றுள்ளது. இந்த ஞாபகங்கள் தொடர்பாகவோ, அல்லது இவர்களில் யாரை நாம் நினைவுகொள்ள வேண்டும் என்பதிலே வேற்றுமைகளைக் காண்பிப்பது சில உயிர்களின் பெறுமதியினை நாம் குறைத்து மதிப்பிடுவது போலாகிவிடும்.

கூட்டு நினைவுகூரற் செயன்முறைகள் எமது சமகால அரசியல் நிலைப்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றன. இங்கு அரசியல் நிலைப்பாடு நினைவின் தன்மையினையும் உள்ளடகத்தினையும் தீர்மானிப்பதாக அமைகிறது. கூட்டு நினைவுகூரற் செயன்முறைகள் நினைவின் உள்ளடகத்தினை ஒரு பக்கச் சார்புடையனவாக மாற்றுகின்றன என்பதற்காக கூட்டு நினைவுகூரலினை நாம் கைவிட முடியாது. நினைவுகூரல் என்பது எவ்வாறு எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்பங்களிலும், போர் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களையும், வெறுமைகளினையும் பற்றியதாக இருக்கின்றதோ, அதேபோலவே அது நாம் சமூகமாகவும், கூட்டாகவும் எதிர்நோக்கிய இழப்புக்கள் பற்றியதாகவும் இருக்கின்றது. ஆனாலும் சமகாலத்தில் நிகழும் கூட்டு நினைவுகூரலின் உள்ளடக்கப் போதாமைகள் எமது அரசியல் நிலைப்பாடுகளின் பலவீனங்களினை வெளிக்காட்டுவதாக உள்ளன. எனவே நினைவின் உள்ளடக்கத்தினை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரு வகையிலே எமது அரசியல் நிலைப்பாடுகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதனைச் சுட்டிக்காட்டுகின்றன.

தனி நபர்களாக நாம் இறந்தோரினை நினைவுகூருவது எவ்வாறு ஒரு தனிநபர்வாதத் தாராளவாத அரசியலுக்குள் எம்மைத் தள்ளிவிடுமோ, அதேபோன்று கூட்டு நினைவுகூரலினை நாம் தேசியவாதம் போன்ற ஒரு குறித்த சமூகத்தினை மட்டும் சார்ந்த மூடப்பட்ட அரசியலுடன் மாத்திரம் இணைத்து நோக்குவதும் ஒரு விதமான குழுநிலைசார் தாராளவாதத்தின் வடிவமே. இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் போன்ற மிகவும் சிக்கலான, பல தரப்பினராலும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலிலே, யார் நண்பர் - யார் பகைவர், யார் நியாயத்தின் பக்கம் நின்றார் - யார் அநியாயத்தின் பக்கமாக நின்றார், பாதிக்கப்பட்ட சமூகம் எது - பாதிப்பினை மேற்கொண்ட சமூகம் எது என்ற கேள்விகளுக்கு நாம் தெட்டத் தெளிவாக எல்லைக்கோடுகள் வரைந்து பதில்களைச் சொல்ல முடியாது. எனவே வன்முறைகளினையும், இழப்புக்களினையும் நாம் நினைவுகூரும் போது, தமிழ்ச் சமூகத்தினைப் பொறுத்தவரையில், யாரெல்லாம் தமது உயிர்களை எமது விடுதலைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லது எமது சமூகத்தினைச் சேர்ந்த யாரெல்லாம் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று நோக்குவதுடன் மாத்திரம் நினைவுகூருவது முற்றுப்பெற்றுவிடக் கூடாது. இந்த நிலையில் யாருடைய உயிர்கள் எமது விடுதலைக்காக, எமது பெயரிலே காவு கொள்ளப்பட்டன என்ற கேள்வியினையும் நாம் கேட்க வேண்டும். அந்த உயிர்களும் பெறுமதியானவையே என்பதனை நாம் எமது நினைவுகூரற் செயன்முறைகளின் ஊடாக வெளிக்கொண்டுவரல் அவசியம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசாங்கம் மே மாதம் 19ஆம் திகதியினை சற்று வித்தியாசமான முறையிலே கொண்டாட/நினைவுகூர முற்படுவது போன்று தோன்றுகிறது. சில அறிக்கைகளின்படி மே மாதம் 19ஆம் திகதி போரில் இறந்த அனைவரினையும் நினைவுகூரும் நாளாக அமையும் எனப்படுகிறது. வேறு சில அறிக்கைகள் இந்த நாள் போரில் இறந்த அனைவரினையும் நினைவுகூரும் நாளாக இருக்கின்ற அதேவேளை, இராணுவத்தினரின் தினமாகவும், பிரிவினைவாதம் அழிவுற்ற தினமாகவும் இருக்கும் என்று சொல்கின்றன. போரின் இறுதிக்கட்டத்திலே இடம்பெற்ற வன்முறை தமிழர்களின் ஒரு தரப்பினரை நேரடியாக மிகவும் ஆழமாகப் பாதித்தது. இந்தப் பாதிப்பினை நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் தமது சமூகத்துக்கு ஏற்பட்ட ஒரு துன்பியல் நிகழ்வாகப் பார்க்கின்றனர். சிறிய நிலப்பரப்பிலே அகப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், எந்த விதமான மனிதாபிமானமும் அற்ற ஓர் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலினை முன்னெடுத்த ஓர் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டனர். எனவே கடந்த அரசாங்கம் போரினை மேற்கொண்ட முறையும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் இறப்பின் மூலமாகப் பெற்றுக்கொண்ட வெற்றியினை பல ஆண்டுகளாகப் பெருமிதத்துடன் கொண்டாடியமையும் அது தனது பிரசைகளில் ஒரு தரப்பினரை, அதாவது போர் வலயத்திலே அகப்பட்டிருந்த தமிழ் மக்களினை, தேவையற்ற உயிர்களாகவும், பலியிடக் கூடிய உயிர்களாகவும் (அச்சிலே ம்பெம்பே என்ற அறிஞரின் வார்த்தைகளிலே சொன்னால் Disposable Lives) கருதியமையினை வெளிக்காட்டின.

இந்த முறை போரின் முடிவினை வெற்றியாகப் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டினைப் புதிய அரசாங்கம் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், போரிலே இறந்த எல்லோரினையும் நினைவு கூரும் நாளாகப் பிரகடனப்படுத்த நாளினை, இராணுவ வீரர்களின் தினம் எனவும் அரசாங்கம் பெயரிட்டுள்ளமை, அரசின் உத்தியோகபூர்வ நினைவுகூரலில் இராணுவத்தினருக்குப் பிற உயிர்களை விடவும் முன்னுரிமை அளிக்கப்படுவதனையே காட்டுகிறது. அதே போன்று பிரிவினைவாதத்தின் முடிவினை நினைவுகூரும் நாளாக மே 19 பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், நாட்டிலே பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அரசு இன்னும் முன்வைக்கவில்லை என்பதனையும் அது நினைவிலே வைத்திருக்க வேண்டும்.

முன்னைய அரசாங்கம் தமிழ் மக்கள் கூட்டாக நினைவுகூரற் செயற்பாடுகளைத் தடுத்தமையும், இன்றைய அரசாங்கம் இந்த நினைவுகூரல் செயற்பாடுகளின் மீது இராணுவ ரீதியிலான கெடுபிடிகளை ஏவிவிடுகின்றமையும், தமிழ் மக்கள், தமது கடந்த காலத்தினை நினைவுகூருவதன் மூலமாக அரசு மீதும் அதனுடைய சிங்கள-பௌத்த மேலாண்மைவாதக் கட்டமைப்புக்கள் மீதும் முன்வைக்கும் விமர்சனங்களை அடக்கிவிட அரசாங்கம் எத்தனிக்கின்றமையினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் மக்களின் மீது ஆயுதப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் அரசு மேற்கொண்டு வருகின்ற வன்முறைகளும், அவை விட்டுச்சென்றுள்ள நினைவுகளும் அரசிலிருந்து தமிழர்கள் தொடர்ந்தும் புறமொதுக்கப்படுகிறார்கள் என்ற செய்தியினை எமக்குச் சொல்கின்றன. இந்த நினைவுகள் அரசினை அனைவரினையும் உள்வாங்கிய, சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தினை நீக்கிய ஓர் அமைப்பாக மீள் வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தினை எமக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

தமிழ்த் தேசியவாதச் சிந்தனையினை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரற் செயன்முறைகளினால் தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது கடந்தகால அரசியல் பற்றி சுயவிமர்சனத்தினை உருவாக்குவதற்கான வெளிகளை உருவாக்க முடியவில்லை. இங்கு சில சந்தர்ப்பங்களிலே விடுதலைப் புலிகள் மாவீரர்களாகவும் தேசப் பற்றாளர்களாகவும் வர்ணிக்கப்படுகின்ற அதே சமயத்திலே புலிகளினையும், தமிழ்த் தேசியவாத அரசியலின் போதாமைகளை விமர்சித்தோரினைத் தேசத் துரோகிகளாக சித்திரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதி யுத்தத்திலே மக்களினை அவர்கள் விரும்பும்படி இயங்குவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்காமையும், அவர்களைப் புலிகள் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்தமையும் மக்களின் அழிவினை அதிகரித்தன. இறுதி யுத்தத்தின் போது போர் வலயத்திலே இருந்து தப்பி ஓடிய பொதுமக்களிற் சிலர் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொன்றனர். பல சிறுவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலே பலவந்தமாக இணைக்கப்பட்டு அவர்கள் விரும்பாத மரணத்தினுள் அவர்கள் சிக்கவைக்கப்பட்டனர்.

05d05489-efac-4481-a0fb-fc8b1c0c2e3d4.jp

போரின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளினையும், அவற்றின் போது பறிகொடுக்கப்பட்ட உயிர்களையும் நினைவுகூரும் போது விடுதலைப் புலிகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்து தமிழ்த் தரப்புக்களிலே எதுவுமே சொல்லப்படுவதில்லை. அரசாங்கத்தினைப் பொறுத்தவரை எவ்வாறு இந்த மக்கள் காவுகொடுப்புக்கு உள்ளாக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்க்கப்பட்டார்களோ, புலிகளும் வன்னியிலே போரில் அகப்பட்ட மக்களை காவுகொடுப்புக்கு உள்ளாக்கப்படக் கூடியவர்களாகவே நோக்கினர் என்பதனை போர் வலயத்திலே இருந்து தப்பி வந்த மக்களின் அனுபவப் பகிர்வுகள் எமக்குச் சொல்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியவாத நோக்கிலே முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகள் போரின் இறுதியில் இடம்பெற்ற துயரத்துக்கு அரசாங்கத்தின் மீது மாத்திரம் முற்றுமுழுவதுமாகக் குற்றம் சுமத்துவதன் மூலம், நினைவுகூரல் நிகழ்வுகள் மூலமாக உருவாகக்கூடிய சுயவிமர்சனச் செயன்முறையினை மூடிவிட முற்படுகின்றன.

அரசாங்கத்தின் நினைவுகூரற் செயன்முறைகளில் இருந்தும், தமிழ்த் தேசியவாதத் தரப்புக்களின் நினைவுகூரற் செயன்முறைகளில் இருந்தும் வேறுபட்ட முறையிலே நினைவு கூரல் எவ்வாறு மேற்கொள்ளப்படலாம் என்பது பற்றி நாம் சிந்திப்பது முக்கியமானது. நினைவுகூரலின் மூலமாக வெளிப்படக்கூடிய அரசியல் அரசின் மீதான விமர்சனமாகவும், ஆயுதப் போராட்டத்தினதும், தமிழ்த் தேசியவாதத்தின் வறுமைகள் மீதான விமர்சனமாகவும் அமைவது அவசியம். இவ்வாறான செயன்முறைகள் தமிழ் அரசியலினை எதிர்காலத்தில் புரட்சித்தன்மை மிக்கதாக முன்னோக்கி நகர்த்தும். இந்த வகையிலே நினைவு கூரலினை தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தளத்திலே மாத்திரம் வைத்து செய்வது போதாது. சில சமயங்களிலே பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலே மாத்திரம் எம்மை நிலைநிறுத்தி நாம் கடந்த காலத்தினை நினைவுகூரும் போது நாம் அரசியலினை மிகவும் இலகுவாகச் செய்ய முடியும். மற்றவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இலகுவான செயல். அதேபோன்று வெளியில் இருந்து வரும் வன்முறையினை சமூகமாக நினைவுகூருவது சமூக மனநிலையில் பிளவுகளை ஏற்படுத்தாது. ஆனால் எமது உள்ளிருந்து எழும் வன்முறையினையும், எமது பெயரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினையும் நாம் நினைவுகூரும் போது மாத்திரமே நாம் எமது அரசியல் நிலைப்பாடுகளின் அடியில் புதைந்திருக்கும் வன்மத்தினையும், புறமொதுக்கும் குணங்களினையும், கசப்புணர்வுகளையும் இனங்காண முடியும்.

இந்தச் செயன்முறையின் மூலமாகவே எமக்கு உள்ளே இருக்கின்ற முரண்களை நாம் தீர்க்க முடியும். இதுவே எதிர்காலத்தில் நாம் ஒரு சமூகமாக மட்டுமல்லாது, பல சமூகங்களின் கூட்டாகவும் இணைந்து செயற்படுவதற்கான பாதைகளினை எம்மத்தியிலே உருவாக்கும். இந்த வகையிலே, முள்ளிவாய்க்கால் துயரத்தினைப் போலவே, தென்னிலங்கையிலே புலிகளின் குண்டுத் தாக்குதல்களின் போது சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, முஸ்லிம்கள் வட பகுதியில் இருந்து புலிகளினால் விரட்டப்பட்டமை போன்ற நிகழ்வுகள் தமிழ் மக்களினால் நினைவுகூரப் படவேண்டிய நிகழ்வுகளாக இருக்கின்றன.

ஒவ்வொரு சமூகமும் தன்மீது இழைக்கப்பட்ட வன்முறையினையும், தனது பெயரினால் ஏனைய சமூகங்களின் மீது இழைக்கப்பட்ட வன்முறையினையும் நினைவுகூரும் போது, நினைவுகூரல் சமூக வரையறைகளைத் தாண்டிய ஒரு அரசியல் முயற்சியாகப் பரிணமிக்கும். எமது சமூகம்- மற்றையவர்களின் சமூகம் என்ற இருமையினை வளர்த்தெடுக்காது, நேர்மையாகவும், இதயசுத்தியுடனும், உண்மைகளினைப் பகிரக்கூடிய வெளிகளினை உருவாக்குபவையாக நினைவுகூரற் செயன்முறைகள் அமைய வேண்டும். பாதிப்பினை மேற்கொண்டவர்களும் அவர்களது சமூகங்களும் தம்மைத் திறந்த முறையிலே விமர்சனம் செய்துகொள்ளுவது எவ்வளவு அவசியமோ, அதேபோன்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் தமக்கான நீதியினைப் பெற்று, கடந்த காலத்தின் பிடியில் இருந்து வெளியேற முயற்சி செய்து எதிர்காலத்திலே நல்லிணக்கத்தினை உருவாக்கும் செயன்முறைகளிலே ஈடுபடுதல் அவசியம்.

கடந்த காலம் விட்டுச்சென்றுள்ள இழப்புக்களில் இருந்தும், அந்த இழப்புக்களின் ஞாபகங்களில் இருந்தும் தனிநபர்களாகவோ அல்லது சமூகமாகவோ மீளெழுவது மிகவும் கடினமான செயன்முறையே. எனினும் கடந்த காலத்தின் அடிப்படையில் சமூகங்கள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டியபடி இருப்பது எதிர்காலத்தினைச் சூனியமாக்கிவிடும். கடந்த காலத்தினை தாராளவாதக் கண்ணோட்டத்துடன் கடந்து செல்லாது, அதேநேரம் அதனுடைய பின்னோக்கி இழுக்கும் பிடியினுள் தொடர்ந்தும் அகப்படாது, நீதிக்கான கோரிக்கைகளினையும், சுயவிமர்சனத்தினையும் ஒரு சேர இணைத்து நினைவுகூரல் இடம்பெறும் போது அரசிலும், எமது சமூகங்களின் உள்ளும் நாம் கூட்டாக சில ஆரோக்கியமான மாற்றங்களினைக் கொண்டுவர முடியும். இது தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டில் உள்ள எல்லா சமூகங்களின் மத்தியிலும் இடம்பெற வேண்டும்.

முஸ்லிம்கள் எங்களுடன் இணைந்து அரசியல் ரீதியாகப் பயணிக்கத் தயாராக இருக்கிறார்களா அல்லது சிங்களவர்கள் எமது இன அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலே இணைந்து பங்குபற்ற விரும்புகிறார்களா என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பதற்கு வழிசெய்யக் கூடிய ஒரு எதிர்காலம் பற்றியதாக எமது அரசியல் இருக்கின்றதா, அல்லது அவர்கள் எம்முடன் அரசியல் ரீதியாகச் சங்கமிக்கும் வகையில் நாம் எமது கடந்த காலம் பற்றி சிந்தித்திருக்கிறோமா என்ற கேள்விகளினை நாம் எம்மைப் பார்த்துக் கேட்க வேண்டும். இந்த வகையிலே அரச வன்முறையினால் தமிழ் மக்கள் கூட்டாகச் சந்தித்த இழப்புக்களையும், ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களையும் நினைவுகூரும் அதேவேளை தமிழ் மக்களின் பெயரினால் தமிழ்ச் சமூகத்தின் உள்ளும், ஏனைய சமூகங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளினையும் அந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்டோரினையும் தமிழ் மக்கள் சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் நினைவுகூருவதும் இன்றைய காலத்தில் அவசியம்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=05d05489-efac-4481-a0fb-fc8b1c0c2e3d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.