Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 நினைவாக.... - - முருகண்டியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை......

Featured Replies

 
may%2018_CI.jpg


சித்திரை – வைகாசி மாதத்தின் உச்சிப்பொழுது.


வவுனியா செட்டிக்குளம்பகுதியில் காட்டின் நடுவே...மரங்களை அழித்து, அவலங்களுடன் அலறியபடி வந்த மக்களை  இராணுவம்  முகாம்களுக்குள் அமுக்கிய காலப்பகுதி...


மூத்த தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிய முகாம்களில் ஒன்று அது.


நான்குபுறமும் பளபளக்கும் தகரக்கொட்டில். போதாததற்கு மேற்கூரையும் பளபளத்தது..கையில் கொண்டுவந்த சிறிய கைப்பையை வைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்தபோது, அவளிடம் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது.


அவள் தன் கையில் கிள்ளிக்கிள்ளிப் பார்த்தாள். கிள்ளும்போது வலித்ததால் தான் உயிருடன் இருப்பதை அவள் உறுதிப்படுத்திக்கொண்டாள்........


“வர விரும்பாத வரக்கூடாத இடத்திற்கு வந்தாயிற்று...இனி எக்கணமும் எதுவும் நடக்கலாம்....” என அவளின் மனதில் சிந்தனை ஓடியது....


மன்னாரில் தொடங்கி வட்டுவாகல்வரை நடந்தும் ஓடியும் களைத்துப்போனவர்கள் தண்ணீருக்கும் உணவுக்கும் அலைந்தார்கள்.....தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரிக்கவேண்டும் என சீற்றம் கொண்டவன் பாரதி. அன்றோ ஓர் இனமே உணவின்றித் தவித்தது. உலகில் உயிருடன் இருந்த எவருக்கும் சீற்றம் வந்ததாக அவளுக்கு தெரியவில்லை.....


குழந்தைகள் ஈனக்குரலில் அழுதன. தலைமுடி அவிழ்ந்த நிலையில் சோர்வுற்று அமர்ந்திருந்தனர் தாய்மார். வரிசையாய்க் கிடந்த கழிப்பறைகளின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம். பிளாஸ்டிக் போத்தல்களுடனும், பிளாஸ்டிக் பையுடனும் குடிதண்ணீர் தேடி அலைந்தது இன்னொருகூட்டம்....


தெருநாய்களுக்கு வீசுவது பேல சில பிஸ்கட்பைகளை ஆங்காங்கே வீசி, அதை பொறுக்க முண்டியடிக்கும் சனத்தை பெருமிதத்துடன் ரசித்தனர்  இராணுவத்தினர்.....


முகாமின் கொட்டகைகளை ஊடறுத்து செல்லும் பாதைகளின் சந்திப்புகளில் வெற்றிப் பெருமிதத்துடன் கையை உயர்த்தியபடி சகல அதிகாரம்மிக்க பெரும்பான்மையின ஆட்சித்தலைவரின் பெரிய கட்அவுட்டுகள்....


வந்திருப்பவர்களின் தொகையை கணக்கெடுக்கும் அரச அதிகாரிகள்.......அரசஅதிகாரிகளுக்கு உதவியாக நின்ற இளைஞர்கள்...


;முகாமைச்சுற்றி பளபளக்கும் கூர்கொண்ட முட்கம்பிவேலிகள்.... முட்கம்பிகளின் ஓரமாக வெட்கத்தை பாராமல் கடன்கழித்த சனங்கள்.... அவர்களை கடன்கழித்த குறையில் தடிகொண்டு விரட்டியடித்த சில இராணுவத்தினர்...


அவள் சுற்றிவர வெயிலில் பளபளத்த முட்கம்பி வேலியை பார்த்தபடியே... முருகண்டியில் இருந்து முள்ளி வாய்க்கால்வரை ஓடிக்களைத்த தன் கால்களை தடவிக்கொண்டாள்.....


மன்னாரில் தொடங்கிய போர் மெதுமெதுவாய் ஊர்ந்து மாங்குளத்துக்கு வந்தது 2008 பிற்பகுதியில்....


முருகண்டிப்பகுதியில் புதிதாக வாங்கிய வீட்டில் மிகசிறிய குடும்;பமாக அவளின் குடும்பம் இருந்தது....ஏழ்மையான ஆனால் அன்பான அயலவர்கள்.......


செல்கள் வந்தன...கூடவே வீட்டுக்கு ஐநூறு மீற்றர் தொலைவில் அதிகாலையில் கிபிர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் அவளின் குடும்பம் நடுங்கிப்போனது...


“இனி இஞ்ச இருக்கேலாது....” என்று முடிவெடுத்து அவள் நகர்ந்து சென்றது முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுக்கு.


அவளுடைய அந்த வீட்டிலும் பலகுடும்பங்கள்....அனைவரும் ஊடகங்களுடன் சம்பந்தமுடையவர்களாகவே இருந்தனர்... அதனால் சுடச்சுட செய்திகளும் ஆய்வுக்கருத்துகளும் அவளை எட்டின...


எப்போதும் அமைதியாக கிடக்கும் உடையார்கட்டு இடம்பெயர்மக்களால் ஆரவாரப்பட்டது. வீடுகளின் தாழ்வாரங்கள் நிரம்பின.....காளான்களைப்போல நாளுக்கு நாள் புதிய புதிய குடில்கள் முளைத்தன....


அங்கும் தொடர்ந்து இருக்கவிடாமல் விமானங்களும் குண்டுகளும் துரத்தின.... அவளின் வீடிருந்த தெருவில் குண்டு விழுந்து அதன்போது வெடித்த துண்டு அவளருகே விழுநததை தொடர்ந்து....அடுத்த நகர்வு 2009 தையில் சுதந்திரபுரத்துக்கு....


தென்னைமரங்களுக்கு பிரசித்தமான இடம். தேங்காய், தேங்காய் எண்ணைக்கு பேர்போன இடம்... தென்னந் தோப்புக்குள் தஞ்சமடைந்த ஆயிரம் ஆயிரம் குடும்பங்களில் அவளும் அடக்கம்.


இலங்கையின் சுதந்திரநாள் என சொல்லப்படுகின்ற பெப்ரவரி 4ம் நாள் சுதந்திரபுரத்தில் சிங்கக்கொடியை ஏற்றிவிட வேண்டும் என்கின்ற முனைப்பில், குண்டுகளையும் செல்களையும் தூவிக்கொண்டிருந்தன அரசபடைகள்....


பதுங்குகுழியே வாழ்வாகிப்போக....இயற்கைக்கடன்களை கூட கழிக்கமுடியாத அவலத்திற்குள் சிக்குண்டாள்.... இரண்டுக்கு நான்கு விஸ்தீரணமுள்ள பதுங்குகுழியில் பத்துப்பதினைந்துபேர் முடங்கிய அவலம்....


அதுவும் பொறுக்காமல் நள்ளிரவில் அவளிருந்த பதுங்குகுழியின் வாயிலில் விழுந்து வெடித்தது ஓர்குண்டு....


பதுங்குகுழி பாதிசிதைந்தது... .அவள் அப்போதும் சாகவில்லை..... அரவணைத்தது ஓர் அருட்தந்தையின் குடும்பம்.... ஆண்டவர் அனுப்பிய தூதுவர்களாய் அவர்கள் நடந்துகொண்டனர்... அன்னை தெரசாவை நினைவுபடுத்தும் அந்த வயதுமுதிர்ந்த அந்த தாயாரின் கனிவுததும்பும் உள்ளம்....


அத்தனைபேரையும் அரவணைத்து அன்பை பரிமாறிய அந்த அன்னையின் அன்பில் அவள் தன் துயரங்களை ஒத்திவைத்திருந்தாள்....


“அயலானை நேசி” என்ற போதனையை பின்பற்றி அவர்கள் பொழிந்த அன்பில் அவள் திக்கு முக்காடிப்போனாள்....
அன்று மாலை தேவிபுரத்துக்கு நகர்ந்தார்கள்... அங்கும் .நிலைக்க முடியவில்லை... உடையார்கட்டு வடக்கு பகுதிய}டாக இராணுவத்தின்ன துப்பாக்கி குண்டுகள் காற்றை கிழித்து ஒலியெழுப்பியபடி வந்தன....


ஒரு இரவில் அரை மணி நேரத்துக்குள் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை இராணுவம் ஏவியது....


சிறிய மண்மூடைகளுக்கு நடுவே தவளையைப்போல் பதுங்கிக்கிடந்தாள் அவள்...அப்போதும் அவள் சாகவில்லை..... அன்றிரவே அடுத்த நகர்வு இரணைப்பாலைக்கு.....


தேவிபுரத்திலிருந்து இரணைப்பாலைக்கு செல்வது தற்கொலைக்கு ஒப்பானது....எதுவும் நடக்கலாம் என தெரிந்துகொண்டே தேர்வுசெய்த பயணத்தில் உயிர் ஊசலாடியது....


ஆனாலும்....இரணைப்பாலைக்கு வந்துவிட முடிந்தது......


இரணைப்பாலை சனங்களால் நிரம்பி வழிந்தது....உயிரை மட்டும் பாதுகாப்பதற்கான துயர் சூழ்ந்த நெடும்பயணம்......
அது மார்ச் மாதமாக இருக்கவேண்டும்......


இரவும் பகலுமாய் பரவிவீழ்ந்த குண்டுகளின் பேரொலியில் பீதியுற்று....அடுத்த நகர்வு அர்த்த சாமத்தில் நடந்தது....


இரணைப்பாலையில் இருந்து விடைபெற்று வலைஞர்மடத்துக்கு....


மழையாக பொழிந்த துப்பாக்கி சன்னங்களின்  நடுவே நகரவேண்டும். குண்டுகள் சல்லடைபோடும்....ஆனாலும் பயணித்தே ஆகவேண்டும்....


பிணங்களைப்போல நகர்ந்தார்கள்.... கடற்கரையை கொண்ட வலைஞர்மடம் அவளை ஏந்திக்கொண்டது..... இரண்டிரண்டாக வந்து குண்டுபோட்ட அதிவேக விமானங்கள் அப்போது எட்டுப்பத்தாக சேர்ந்துவந்து தாறுமாறாய் குண்டுகளை போட்டன.


அதிலும் அவள் சாகவில்லை....
சனங்கள் செத்துக் கொண்டிருந்தார்கள்.... படுகாயமுற்று மருத்து வவசதியின்றி  அழுந்தினார்கள்.....


வலைஞர்மடத்தில் மரம் ஒன்றின்கீழ் வாழ்வு.... அடுத்தவளவில் கூட்டுறவுச்சங்கம் இயங்கியது..... ஆனால் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு கூட்டம்...உயிர் ஊசலாடும் கணத்தில்கூட உணவுக்கான அந்தரிப்பு....


கைநீட்டித் தொடும் அளவில் கடல். இரவில் கடலின் இரைச்சலை கேட்டபடியே அவள்விழித்திருப்பாள்... தூக்கத்தை தொலைத்து பல நாட்களாகிவிட்டிருந்தன.......


பதுங்குகுழி வெட்டுவதற்கு இடமில்லை...ஆள் உதவியுமில்லாதிருந்தது...... அப்படி சரிவந்து பதுங்குகுழி அமைத்தாலும் மணல் உதிர்ந்து கொட்டிவிடும்....
அருகருகே பல குடும்பங்கள்....பல ஆயிரக்கணக்கில் சனம்.....


பறந்துவரும் செல்களின் மத்தியிலும் கைவசமிருகந்த பொருட்களை விற்று வயிற்றுப்பாட்டை பார்க்க நடைபாதைக்கடைகள் முளைத்தன.... .கூறைச்சேலை துவங்கி சமைத்த பாத்திரங்கள் ஈறாக விற்பனைக்கிருந்தன....
பன்னிரண்டு வயதுள்ள, அவளின் மாணவன் கரிபடிந்த சமையல் பாத்திரங்களை விற்பதற்காக கூவி அழைத்தபடி இருந்தான்... அவளின் இதயம் நொருங்கிச் சிதற அவள் பார்த்தாள்....


பத்துப்பன்னிரண்டுவயதுச் சிறுவர்கள் அந்தரித்து திரிந்தார்கள்.....


மழைகாலம் வேறு....ஏதோ அடம்பிடிப்பதுபோல மழையும் அடித்துக்கொட்டியபடியே இருந்தது....மழையில் நனைவதும் பின்னர் காய்வதுமாக இருந்தார்கள்.


குளிப்பதற்காக அவள் ஒருநாள் ஒருகிலோமீற்றர் தூரம் நடந்து பழக்கமான ஆட்களின் கொட்டிலுக்கு போனாள்....எந்தமறைப்புமில்லாத குளியல்..மற்றும் உடை மாற்றுதல்....


குளித்துவிட்டு வரும்போது வலைஞர்மடம் ஆலடிச்சந்தியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருபெண் இவளைப் பார்த்ததும் ஓடிவந்து கையில் பிடித்தாள்.


“அன்ரி....எனக்கு ஒருத்தருமில்லை...என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோ....சத்தங்கள் கேக்க பயமாக இருக்கு.....” என்று குழந்தையை போல் கெஞ்சினாள் அப்பெண்....


எவ்வளவோ சொல்லியும் வரப்போவதாக அடம்பிடித்தாள்....
“சரி...நான் இருக்கிற வீட்டுக்காரரிட்ட கேட்டுவிட்டு பின்னேரம் வந்து கூட்டிப்போறன்...” தாவாரமில்லை. தனக்கொரு வீடில்லை என்ற நிலையில் என்று கூறி சமாளித்து வந்தாள்...


அவளை ஏதோவொரு நிறுவனத்தில் பார்த்த ஞாபகம்மட்டும் வந்தது.


ஒரு பத்துஅடிதான் எடுத்து வைத்திருப்பாள்.....விரைந்துவந்த செல் ஒன்று தலைக்குமேலால் கூவிக்கொண்டு சென்று பெருஞ்சத்தத்துடன் வெடித்தது. இதயம் வாய்க்கூடாக வெளியே விழுந்துவிட்டமாதிரி அவள் உணர்ந்தாள்....


தொடர்ந்து செல்கள் வரலாம் என்றுநினைத்து சடாரென நிலத்தில் விழுந்து படுத்தவளை மிதித்தபடி சிலர் ஓடினார்கள்....செல் வெடித்து கிளம்பிய புகைமண்டலம் அடங்கிய பிறகு, எழுந்தாள்.


அப்போதும் அவள் சாகவில்லை......


அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஈரத்தலையில் மணல்ஒட்டி பாரமாக இருந்தது.....அடிஎடுத்து வைக்கவே ஊயிர்க்குலை நடுங்கியது....


கடற்கரையோரமாக மெதுவாக நடந்தாள். கடலலைகள் குமுறிக்குமுறி அழுவதுபோல மனதில்பட்டது.  


ஒருவாறு இருந்த இடத்துக்கு போய்ச்சேர்ந்தாள். அன்றிரவு மக்கள் கூட்டத்தை இலக்குவைத்து இராணுவத்தின் கடுமையான தாக்குதல்கள்.....


இரவு பதுங்கிக்கிடந்த மண்அரணைவிட்டு வெளியே வந்த அவளின் இடதுகையில் துப்பாக்கிச் சன்னம் ஒன்று உரசியது. இரத்தம் முழங்கையூடாக வழிய அவள் கையையையே பார்த்துக்கொண்டிருந்தாள்....


அருகிலிருந்த தாய்மையுற்றிருந்த இளம் பெண்ஒருத்தி இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்போட்டாள். மருந்து கட்ட வசதியில்லை... பெருகிக்கிடந்த இலையான்களால் காயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக வெறுமனே துணியால் கட்டியிருந்தாள் அவள்.   


அவளை தங்களுடன் தங்கவைத்திருந்தவர்கள் வலைஞர்மடத்திலும் இனி இருக்கமுடியாது என தெரிவித்தனர். அவர்களுடன் இணைந்தே அவள் அடுத்த நகர்வுக்கு தயாரானாள்....


அடுத்த நகர்வுக்குரிய பாதை மிகமிக ஆபத்தானது. இரட்டைவாய்க்கால் என்ற இடத்தில் மிகப்பெரிய அரணை இராணுவம் அமைத்திருப்பதாகவும் அதை தாண்ட முயற்சிப்பவர்கள் உயர்தப்ப முடியாது எனவும் கதைத்தார்கள்...


“போகப்போற உயிர்.. எப்பபோனால்தான் என்ன?...” என அவள் நினைத்துக்கொண்டாள்....


ஆனால், அந்த இடத்தையும் மின்னல்வேகத்தில் கடந்தார்கள்..... துப்பாக்கிகள் முழங்கியபோதும் ஆபத்து ஏற்படவில்லை.....


போய்ச்சேர்ந்த இடம் கரையாமுள்ளிவாய்க்கால் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.  


அங்கு அருட்தந்தையர்கள் சிலர் தமது இல்லங்களில் இருந்த சிறுவர்களை வைத்திருந்தனர். அங்கு மதிய உணவு வழங்கினார்கள். தனக்கு மிகவும் பழக்கமான சகோதரி ஒருவர் சிலநூறுமீற்றர் தூரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு  அங்கு சென்றாள்....


அந்த சகோதரி அன்போடு அழைத்து உணவுகொடுத்தாள்..... திரும்பிவந்தபோது கிளம்பிய இடம் தெரியவில்லை... திரும்பத்திரும்ப சுற்றிச்சுற்றி வந்தாள்... முதலிருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை....


அவளுக்கு உறவினரான ஒருபெண் தலையிலும் கையிலும் காயத்துக்கு கட்டுப்போட்டபடி நிலத்தில் கிடந்தாள்...அவளின் இரண்டுவயதுக்குழந்தை அவள்டியில் உறங்கிக்கிடந்தது. 
அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிவிட்டு நடந்தாள்...


நீண்ட பல மணித்தியாலங்களின் பின்னர் இருந்த இடத்தை வந்தடைந்தாள். நடந்த களைப்பில் இரவு கடந்துபோனது....


கரையாமுள்ளிவாய்க்காலில் கூட நிலைக்கமுடியுமா என்கின்ற கேள்வி அவளைத்துளைத்தது.


இலட்சக்கணக்கான மக்களின் இரைச்சல் இரவும் பகலுமாக தொடர்ந்தது.


அவள் மூடாதபதுங்குகுழி ஒன்றினுள் அவள் எப்போதும் அமர்ந்திருந்தாள். அவர்களுக்கு அருகே உறுப்பிழந்த சிலரும் தங்கியிருந்;தனர்.


இரண்டொரு நாட்கள் செல்களுடனும் விமான இரைச்சல்களுடனும் கழிந்தன...


கரையாமுள்ளிவாய்க்காலிலும் மிக நெருக்கமாக குண்டுகள் விழுந்தன....


ஒரு நள்ளிரவு......


இராணுவம் ஏவிய செல்கள் இரண்டு அவர்கள் தங்கியிருந்த பகுதியில் விழுந்தது... கூக்குரல்களும் அவலங்களுமாக... அல்லோலகல்லோலம்

நிகழ்ந்தது... அதுவரை அவளை பாதுகாத்த அருட்தந்தையின் குடும்பம் அவளை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு அவளைபிரிந்து வேறிடம் சென்றனர்...


அவள் வேறொரு குடும்பத்தினருடன் இணைந்து தொடர்ந்து சிலநாட்கள் அங்கிருந்தாள்.....


மீண்டும் ஒரு நள்ளிரவு.....


சின்ன சின்னதாய் தொடங்கிய வெடிப்பொலிகள் பேரோசையாக மாறின..... இதயத்துடிப்பு நின்று....உடலில் ஓடிக்கொண்டிருந்த இரத்தம் முழுவதும் உறைந்துபோனமாதிரி அவள் உணர்ந்தாள்....


குண்டுச்சத்தங்கள் ஓய.....கரையா முள்ளிவாய்க்காலுக்கும் விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்தது....


ஒருகாலைப்பொழுதில் நந்திக்கடலை நோக்கி நகர்ந்தவர்களுடன் அவள் போனாள்.... இறந்தவர்களை  புதைக்க வழியின்றி அருகில் வைத்துக்கொண்டு உணவை சமைத்தவர்கள் பலர்... இறந்தவரை அப்படியே விட்டுவிட்டு ஓடிய உறவுகள் பல...


ஒரே நேரத்தில் பலநூறு குண்டுகள் ஏவப்பட்டன.... நந்திக்கடலுடன் தன் வாழ்வு முடிந்துவிடும் என்பது அவளின் கணிப்பு...


நந்திக்கடலோரம் முழுவதும் இலட்சக்கணக்கான சனங்கள்.... ஒவ்வொருவருக்கும் இறந்தால் ஆறடிகூட கிடைக்காது என அவள் நினைத்துக்கொண்டாள்...இப்போது அவளிடம் உயிரைத்தவிர எதுவும் இருக்கவில்லை... கையிலிருந்த சில நகைகளும் பணமும்கூட காணாமற்போய்விட்டிருந்தது..... அவள் கிட்டத்தட்ட மனம் பேதலித்த நிலையிலிருப்பவளாக தன்னை உணர்ந்தாள்......


நந்திக்கடல் அருகிலும் ஒருநண்பகலில் அளவுகணக்கற்ற எண்ணிக்கையில் செல்கள் விழுந்தன....கூக்குரலுடன் இரத்தம் வழியவழிய ஓடியவர்களைப்பார்த்து அவள் துடித்து நின்றாள்.... அப்போதும் அவள் சாகவில்லை...


சிலநாட்களுக்கு முன்னர் காயப்பட்டவர்கள் மருந்தின்றி துர்நாற்றம் வீச கூடவந்தனர்.


ஓடியவர்களுடன் அவளும் ஓட அவளுக்கு முன்னால் முருகனின் கைவேல் வடிவில் ஒரு சிறிய குண்டு விழுந்தது. ஆனால் அது வெடிக்காததால் அவளின் உயிர் நிலைத்தது. விழுந்த குண்டையே வெறித்துப்பார்த்தபடி நின்றவளை, “ஓடுங்கோ....” என அருட்டிவிட்டான் பின்னால் ஓடிவந்த இளைஞன்.


இனி எதுவுமில்லை.....பின்னால் இராணுவம் துரத்திவருவதாக எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனர்.... இராணுவத்தினரின் பகுதிக்குள் செல்லும் நிலை உருவாகிவிட்டது.


வெடிச்சத்தம் வந்த திசையை அவள்பார்த்தாள். சிறுபற்றைகளினுள் இராணுவ தொப்பிகள் தெரிந்தன...சாகவில்லை...இனி எதுவும் செய்யமுடியாது என அவள் நினைத்துக்கொண்டாள்....


இராணுவத்தினரின் பகுதிக்குள் செல்லக்கூடாது என ஒருமனம் தடுத்தாலும், எப்படியாவது உயிரைக்காப்பாற்றி வெளியே செல்லவேண்டும்...இன்னும் ஏதோ கடமைகள் உள்ளன என உள்மனம் அடம்பிடித்தது...
அதன்படி....2009 மே 17ம் திகதி...


அவள் வட்டுவாகல் இராணுவத்தினரின் பகுதிக்குள் ஆடையிழந்த உணர்வுடன் கூடவே கூடஇருந்த  இன்னொரு குடும்பத்தவர்களுடன் நுழைந்தாள்..... இதுவரை பாதுகாத்த அத்தியாவசியப்பொருட்களையும் இழந்தவளாக.......


அங்கு ஏற்கனவே சென்ற அனைவரையும் தரையில் அவர்கள் அமரவைத்திருந்தனர். அவர்களுடன் அவளும் அமர்ந்தாள்.


-    ஆதிலட்சுமி 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119740/language/ta-IN/article.aspx

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.