Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் சிற்பி திரு.லீ குவான் யூ

Featured Replies

மஜுலா சிங்கப்புரா : தீயினில் வளர் சோதியே! - எம்.கே.குமார்

பாகம்-1

'ஒரு சிறு விதைக்குள்ளே எப்படி ஒரு மாபெரும் சந்ததியின் பசி தீர்க்கும் மரம் இருக்கிறதோ அது போலத்தான் நமக்குள்ளே கிடக்கின்றன சாதிக்கவேண்டிய விஷயங்கள்' என்கிறார் மகான் அரவிந்தர். மனிதனின் மனமும் ஒரு விதைதான். எதைப்போட்டீர்களோ அதுவாகவே தான் அது வளரும். 'அதுவேதான் அது' என்றாகிப்போகும். 'தன்னம்பிக்கையையும் சாதிக்கும் மனப்பான்மையையும்' விதைகளாக்கிக்கொண்டு முளைவிட முயன்றால் அது தரும் பலன்களை நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பகிர்ந்துகொள்வார்கள்; பசியாறி மகிழ்வார்கள். காலம் காலமாய் அதனைப் பின்தொடர்ந்து வருபவர்களும் அதை மனதில்கொள்வார்கள். உண்டு மகிழ்வார்கள் சரி; உண்டு மகிழ்ந்தவர்கள் அப்படியே உறங்கிவிடலாமா? உண்டு, உறங்கி, மகிழ்ந்து, கழிந்து, இறந்துபோய்விட்டால் அடுத்த தலைமுறை உணவுக்கு என்ன செய்யும்?

இந்திய சுதந்திரத்தின் இன்றைய நாட்களில் சொகுசாக அப்படி உண்டு உறங்கிப்போய்விட்டவர்கள் எத்தனை பேர்? ஒரு நிமிடம் எண்ணிப்பார்ப்போமா?

lky%201.jpgசிங்கப்பூருக்கு 1819 ஜனவரியில் முதல் விதையை விதைத்தார் 'ரா·ப்பிள்ஸ்'. வழக்கம் போல 'கிழக்கிந்திய வாணிபக் கம்பெனி' இவருடைய நெற்றியிலும், 'வியாபாரம் செய்யவே இவர் அங்கு வருகிறார்' என்று எழுதித்தான் இவரையும் அனுப்பிவைத்தது. நெற்றியில் எழுதி இருந்தது சரி, மனதில் அவர் என்ன எழுதியிருந்தார் என்ற கேள்விக்கு, பதவி ஆசை பிடித்திருந்த 'ஜோகூர் துங்கு சுல்தான்' சகோதரர்களைப் பிரித்து உறவை முறித்து, பகைமை வளர்த்து, '1819 பிப்ரவரி 6-ல்' சிங்கப்பூரை ஆங்கிலேய காலனியாக்கினார்' என்பதை சொல்லியா நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்?

முகத்தில் வியாபாரக்களையும் முதுகில் 'நாடு பிடிக்கும் கலை'யையும் அவர் சுமந்து வந்தாலும் அன்று அவர் போட்ட விதை ஒரு 'துறைமுக சதுப்புநில கழிவார'க் காட்டை 'நாடு' என்ற நிலைக்குக் கொண்டு வந்தது. கட்டளையிடுவதற்கு ஆங்கிலேயர்களுக்கும், அடிபணிந்து அடிமாடாய் பாடுபடுவதற்கு இந்தியர்களுக்கும் சொல்லியா தரவேண்டும்? விதையை ஆழமாக ஊன்றினார் ரா·ப்பிள்ஸ். அதற்கு உறுதுணையாய் பாடுபட்டார்கள் இந்திய விடுதலைக்குற்றவாளிகள். சாலை போட்டார்கள்; காடுகளை அழித்து ரோடுகளை அமைத்து நாடு என்ற ஒன்றைக் கண்டார்கள். ஆக 'ரா·ப்பிள்ஸ்' வந்தார்; நாடு வந்தது.

நாடு என்று பெயர் வைத்துவிட்டால் போதுமா? தானாய் வளர்வதற்கு அது, தாவரமா என்ன? நிலையற்ற ஆட்சி கொண்டதாய், அயோக்கியர்களும் சுயநலவாதிகளும் ஆளுமை கொண்டதாய், உணவுப்பஞ்சத்திலோ இனச்சஞ்சலத்திலோ இன்னும் மூழ்கிக்கொண்டிருந்திருக்கவ

அருமையான ஒரு பதிவு ஈழவன்..முதலில் அஜீவன் அண்ணா இவரை பற்றி எழுதி படித்த நினைவு...

இதனைப் போன்றே மலேசியாவின் தந்தை என்று அழைக்கப்படக் கூடிய இளவரசர் துங்கு என்பவர் பற்றி ஆக்கம் ஒன்றை அண்மையில் தமிழில் வாசித்தேன். அதில் அவர் இலங்கையின் இனப்பிரச்சனையைக் கூட ஒரு நல்ல கருத்தை தெரிவித்திருந்தார்.

அதை யாராவது முடிந்தால் இந்த இடத்தில் இணைப்பது மேலும் சிறப்பாகவிருக்கும்.

  • தொடங்கியவர்
200px-Lee_Kuan_Yew.jpg

இதனைப் போன்றே மலேசியாவின் தந்தை என்று அழைக்கப்படக் கூடிய இளவரசர் துங்கு என்பவர் பற்றி ஆக்கம் ஒன்றை அண்மையில் தமிழில் வாசித்தேன். அதில் அவர் இலங்கையின் இனப்பிரச்சனையைக் கூட ஒரு நல்ல கருத்தை தெரிவித்திருந்தார்.

அதை யாராவது முடிந்தால் இந்த இடத்தில் இணைப்பது மேலும் சிறப்பாகவிருக்கும்.

அது என்னிடம் PDF file வடிவில் இருகிரது. இணைக்க முற்ற்சிகிரேன். முடியவில்லை.

post-3028-1164103452_thumb.jpgமன்னிகவும். என்னிடம் லீ குவான் யூ சொன்னது தான் இருக்கு. எனினினும்

அதை இதில் இணைக்கிரென்.

மலேசிய இளவரசர் சொன்ன அந்த ஆக்கத்தின் அல்லது புத்தகத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். முடிந்த வரை தேடி பார்கிரேன்.

  • தொடங்கியவர்

பாகம் 4 இன் இறுதிப்பகுதி முழுமையாக வரவில்லை இதனை சுட்டிக்காட்டிய மோகன் அண்ணாவுக்கு நன்றிகள்.பாகம்-4 இனை முழுமையாக இங்கே பதிப்பிகிறேன்

பாகம்-4

சிங்கப்பூர் என்ற நாடு உருவானதில் இருந்து இன்றுவரை செழித்து தழைத்துக் கொண்டிருக்கும் அதன் முன்னேற்றத்தை எளிதில் உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் சிங்கப்பூரின் விமான நிலையத்தை உதாரணமாக நாம் எப்போதும் எடுத்துக்கொள்ளலாம். திடமான நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளாலும் ஆரோக்கியமான தரத்தாலும் இன்று உலகின் சிறந்த விமான நிலையங்களுல் ஒன்றாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் 'சாங்கி விமான நிலையம்' சிங்கப்பூரின் வரலாற்றில் நான்காவது விமான நிலையம்.

விமானங்களையும் ரயில்களையும், தான் போகும் இடத்திற்கெல்லாம் 'கையிலெடுத்துச்செல்வதை' வாடிக்கையாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்தான் இங்கும் அதை முதலில் கொண்டுவந்தனர். ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரை ஆட்சி செய்துகொண்டிருந்தபொழுது இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் சிங்கப்பூரில் 'ரேஸ்கோர்ஸ்' என்னுமிடத்தில் முதன் முதலாக அந்த விமானத்தை இறக்கி சிங்கப்பூர் மண்ணின் விமான 'முதல் முத்தமிடலுக்கு' 1919 ல் அடிகோலி வைத்தார் 'ரோஸ் ஸ்மித்' எனப்படும் இங்கிலாந்து நாட்டு விமானி. அதுதான் சிங்கப்பூருக்கு வந்த முதல் விமானம். அவர்தான் முதல் விமானி!

1919ல் 'ரேஸ்கோர்ஸில்' வந்து அது இறங்கினாலும், முறையான விமான தளமாக எதுவும் இல்லாது கிடந்த வேளையில், 'சிலேத்தார்' விமானத்தளம் கிபி. 1929 ல் கட்டிமுடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரானது. 1930ல் '·போக்கர் F-7A' என்னும் 'ராயல் டச்சு இண்டீஸ் ஏர்லைன்ஸ்' (KNILM) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், 'படாவியா' நகரிலிருந்து (தற்போது ஜகார்த்தா-இந்தோனேசியாவின் தலைநகர், டச்சுக்காரகள் சூட்டிய பெயர் அது!) எட்டு நபர்களுடன் சிங்கப்பூரில் வந்திறங்கி 'முதல் வர்த்தக விமானம்' என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.

அதற்குப்பிறகு, 1937ல் 'கல்லாங்' விமானதளம், 1955 ஆகஸ்டில் 'பாயா லேபர்' விமான தளம் ஆகியனவும் கட்டி விமான சேவைக்குப் பயன்படுத்தப்பட்டன. 1966ல் 'மலேசியா ஏர்வேஸினுடன்' சிங்கப்பூர் அரசாங்கம் இணைந்து 'மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்க, அவற்றின் விமானங்களனைத்தும் இங்கிருந்துதான் முதலில் இயக்கப்பட்டன. பிறகு 1972 ல் 'மலேசியா-சிங்கப்பூர்' ஏர்லைன்ஸிடமிருந்து சிங்கப்பூர் தனது பங்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' என்ற ஒன்றைத் தனியாக ஆரம்பித்தது.

இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூர், அதன் பொருளியலில் வானுயர பறக்க ஆரம்பிக்க, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாலாவதும், தரம், குணம், வேகம், சேவை என எல்லாவற்றிலும் மற்ற எல்லாவற்றையும் எல்லாவிதத்திலும் மிஞ்சும் பெரியதும் பிரமாண்டதுமான ஒரு விமான நிலையம் சிங்கப்பூருக்குத் தேவைப்பட்டது. அதன்படி 1975 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அரசு, ஒரு நிபுணர் குழுவோடு 'வேலையை' ஆரம்பித்தது. ஏறக்குறைய 870 ஹெக்டேர்கள் நிலத்தை கடலுக்குள்ளிருந்து உருவாக்க, சுமார் 40 மில்லியன் கனமீட்டர் அளவு மணல் கடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக 12 மில்லியன் கனமீட்டர் அளவு கெட்டியான பாறைகள் உடைக்கப்பட்டு நிரப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து 7 மீட்டர் உயரத்தில் 'நான்கு' மீட்டர் 'ரன்வேயுடன்' சுமார் 150 கோடி வெள்ளி (1.5 பில்லியன் டாலர்) செலவில் 'ஆறே' ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு, 1981 ஜூலை முதல் திகதி முதல் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, டிசம்பர் மாதம் 29ம் நாள் பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறத

  • தொடங்கியவர்

பாகம்-7

இடையூறுகள் இன்றி கிடைக்கும் இன்பமோ தடைகளற்று வந்தடையும் நன்மைகளோ கஷ்டங்கள் காணாத வெற்றிகளோ அனுபவங்கள் தராத முதுமையோ முழுதான பயனை எப்போதும் உணரத் தருவதில்லை. நேராக விமானத்தில் போய் இமயமலை உச்சியில் இறங்கி கொண்டாடுவதில் என்ன இன்பம் இருந்துவிட முடியும்? நான்குசுவர் அறைக்குள்ளே உண்டு உறங்கி சிந்தனையற்று வாழ்ந்துவரும் மனிதன் ஐம்பது வயதில் வெளியில் வந்தால் பூனையைப்பார்த்து பயப்பட மாட்டானா?

'இன்றும் கிடைக்கும், நாளையும் கிடைக்கும் பொருள்' என்று ஒன்றிருந்தால் அது இன்பமானது என்றாலும் கூட கணம் தோறும் ரசிக்கத்தோன்றுமா அதை? ஓடி ஒளிய வேண்டும். மறைந்துகொள்ள வேண்டும். கிடைக்க முடியாத பொருளாய் அவ்வளவு சீக்கிரம் அது அடைய முடியாத பொருளாய் பழிப்புக் காட்ட வேண்டும். அப்போதுதானே பறிக்கத்தோன்றும். தினம் தோறும் பௌர்ணமி என்றால் எத்தனை பேர் நம்மில் கடற்கரையில் படுத்துக்கொண்டு அதை ரசித்துக்கொண்டிருப்போம்? 'மாதத்தில் ஒருநாள் மட்டும் தான் தம்பி, வாய்ப்பை நழுவவிடாதே' என்ற அந்நிலாவின் கோரிக்கையை ஏற்றல்லவா பௌர்ணமியை ரசிக்கக் காத்திருக்கிறோம். நிமிடந்தோறும் கிடைக்கும் பொருள் இல்லை என்பதால் அல்லவா காதலியின் ஒற்றைப்பார்வைக்கு ஏதாவது ஒரு தெருவின் மூலையில் மணிக்கணக்காய் நின்றுகொண்டிருக்கிறோம். சுற்றி யாரும் பார்த்துவிடும் அபாயத்தின் உணர்வோடு இருப்பவனுக்கல்லவா காதலியின் ஒரே ஒரு மெய்த்தீண்டலில் உயிர் உடல் உலகங்கள் ஒன்றாக விழித்துக்கொள்கின்றன!

அவ்வளவு ஏன்? எப்போதும் பங்களாதேசத்திற்கெதிராகவே ஒருவன் செஞ்சுரி அடிப்பதால் என்ன பெரிய பேட்ஸ்மேனாய் அவன் ஆகிவிட முடியும்? குறிபார்த்து குச்சியைத்தூக்கும் ஆஸ்திரேலியா பௌலர்களுக்கும் பாகிஸ்தான் பௌளர்களுக்கும் எதிராக அல்லவா நல்ல பேட்ஸ்மேன் என்பவன் அடித்து ஆடவேண்டும்? அல்லது திறமையான ஒரு பேட்ஸ்மேனை 'அவுட்' ஆக்குவதல்லவா ஒரு நல்ல பந்துவீசுபவனின் உண்மையான ரசிக்கத்தகுந்த வெற்றி. அந்தச்சுவை தருவதை கத்துக்குட்டிகளிடம் பெறும் வெற்றி தருமா என்ன? மட்டையடிக்கவே தெரியாத பதினோராவது ஆளுக்கு 'யார்க்கர்' போட்டு ஸ்டம்பைப் பறக்கவைப்பதில் என்ன பெருமை இருக்கமுடியும்?

டாக்டர் வின்சிமியுஸ் சொன்ன முதல் ஆலோசனைக்கு எவ்விதத்திலும் பிரச்சனை இல்லை என்பதை உணர்ந்து சந்தோசப்பட்ட திரு. லீ குவான் அவர்கள், வின்சிமியுஸின் இரண்டாவது வார்த்தை கேட்டு மனதுக்குள் சிரித்தார். வெளியில் அதன் சீரியஸ் நிலையை உணர்த்த மென்முறுவல் பூத்தார். ஆயினும் மனதுக்குள் அவர் போட்ட 'கணக்கு' அதுதான் என்பது அவரது நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எவ்விதமாய் மனதுக்குள் கணக்குப்போட்டாலும் அதனைப் பயன்படுத்துவதற்கு ஒரு காலம் என்பது வரவேண்டுமல்லவா? கட்டாந்தரையில் நெல்லைப் போட்டால் எப்படி முளைத்து நாற்றாகும்? அதற்குந்தகுந்த காலம் இப்போது இல்லை என்பதை உணர்ந்த லீ அவர்கள் டாக்டர் வின்ஸிமியுஸ்க்கு சொன்ன அமைதியான பதில்தான் அந்த மென்மலர்புன்னகை.

இது எல்லாம் நடந்தபோது சிங்கப்பூர் தனி நாடு இல்லை. 1959 ல் ஆங்கிலேய ஆளுமையிலிருந்து விடுதலை கிடைத்து சிங்கப்பூர் மலேயா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நடந்தவைகள். 1960 ல் சிங்கப்பூர் வந்திருந்த டாக்டர் வின்சிமியுஸ் சொன்னவைகள் இவை. இவற்றையெல்லாம் கண்டு அப்போது நாட்டின் பிரதமராய் இருந்த திரு. லீ அவர்கள் மனதிற்குள் சொல்லிக்கொண்ட கணக்குதான் என்ன? அவ்வளவு பிரச்சனையுள்ள டாக்டர் வின்சிமியுஸின் அக்கோரிக்கைதான் என்ன?

இன்று இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் நோக்கும் அதே பிரச்சனைதான் அது. குதிரைக்கு கடிவாளம் வேண்டும் தான். ஆனால் அக்கடிவாளத்தின் ஒருமுனை ஏதாவது ஒரு மரத்தில் இறுக்கமாக கட்டிப்போட்டிருக்கக்கூடாது. குதிரை ஓட வேண்டும். கடினமாக ஓடும்போது கடிவாளம் பயன்படவேண்டும். குதிரை ஓடாமலிருப்பதற்காய் கடிவாளம் இல்லை. இதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இதை லண்டனில் தான் படித்தபோதே மிகவும் நன்றாக உணர்ந்துகொண்டார் திரு.லீ அவர்கள். சிங்கப்பூரின் 'அரசியல் சமுதாயப் பார்வைகள்' பற்றி லண்டனில் படிக்கும் சகநாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களிடையே இதுபற்றியெல்லாம் விவாதிக்கும் ஆர்வம் அவருக்கிருந்தது. அவ்வப்போது நடத்திய இத்தகைய விவாதங்களில் இரு விஷயங்கள் அவரது மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துபோயின. ஒன்று சிங்கப்பூருக்கு ஏற்ற வாழ்க்கைச்சூழ்நிலை மலேசியாவைப் போன்றதாய் இருக்கமுடியாது என்பதாகும். இரண்டாவது டாக்டர் வின்சிமியுஸ் கோரிக்கையின் காரணகர்த்தாக்கள். அவர்களை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் என்ன எவ்வித வேலையும் பார்க்கமுடியாது என்பதாகும். 'என் குதிரைக்கு எப்போதும் கடிவாளம் தேவையில்லை. அது என் மனத்தின் படி எப்போதும் நல்லவிதமாய்த்தான் இயங்கும்' என்ற திரு.லீ குவான் அவர்களின் உள்மனது 'அக்கடிவாளத்தையே' லண்டனில் தான் பயின்ற காலம் முதல் வெறுத்தது.

ஆயினும் அரசியல் என்று வந்துவிட்டபின் குதிரையாவது கடிவாளமாவது? அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை நிரந்தர எதிரிகளுமில்லை என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சொன்னதாய் எப்போதும் எடுத்துக்கொள்ளாதீர்கள். காலம் காலமாய் அழிபடாமல் வரும் உலக ஆட்சியலின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக அது எப்போதும் இருந்து வந்திருக்கிறது; வருகிறது. 1959 ல் பிரதமாரான திரு. லீ அவர்களின் ஆட்சியிலும் அதுதான் நடந்தது.

திரு. லீ அவர்களின் 'மக்கள் செயல் கட்சி' ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதில் கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஆதரவு கொண்ட பெரிய தலைவர்கள் பலரும் சேர்ந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக ஆங்கிலேயர்களிடமிருந்து சுய ஆட்சி பெறுவதற்காகவே அவர்கள் அப்போது கூடி புதுக்கட்சி அமைத்து முயன்றார்கள் என்றாலும் அது அப்போதைய தீர்வு மட்டுமே! பிறகு அக்கட்சியின் முடிவு, பயணம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதும் குறிப்பாக கம்யூனிச சித்தாத்தங்களின் அடிப்படையில் ஆட்சியை அமைத்தலே தமது 'இரண்டாம் பணி'யாய் இருக்க வேண்டும் என்ற உள் எண்ணத்துடனே அவர்கள் அப்போது திரு. லீயின் கட்சியிலும் கொள்கைகளிலும் அமைதியாயிருந்து ஏற்றுக்கொண்டவர்கள் போலிருந்தனர்.

ஏற்கனவே தான் மனதுக்குள் கொண்டிருந்த தீர்மானத்தின் படி கம்யூனிசத்தின் ஆட்சி எக்காலத்திலும் சிங்கப்பூருக்கு ஒத்து வராது என்பதும் அவர்களின் ஆட்சியமைப்பு சீனாவிலும் ரஷ்யாவிலும் வெற்றிபெற்றிருந்த போதிலும் இங்கு சாத்தியமாகாது; சாத்தியமாக்கக்கூடாது என்பதிலும் திரு. லீ அவர்கள் உறுதியாய் இருந்தார். ஆனாலும் தனது கட்சிக்கு 'ஆரம்ப சிறப்பு அந்தஸ்தையும் அதிகார மையங்களாக நிலவி வந்த தொழிலாளர் சங்கங்களின் ஆதரவும்' வேண்டி அவர் கம்யூனிச சக்திகளோடு சேர்ந்திருக்க வேண்டியிருந்தது. அத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற 43 வேட்பாளர்களில் 13 பேர் அதிதீவிர கம்யூனிச இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள். தொழிற்சங்கங்களின் பின்புலம் உள்ளவர்கள். தகுந்த நேரம் பார்த்து காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்கும் இருக்கிறது என்பது அதிகம் தெரிந்ததால்தானோ என்னவோ திரு. லீ அவர்கள் டாக்டர். வின்சிமியுஸ் சொன்ன அந்த இரண்டாவது கருத்துக்கு மென்முறுவலாக புன்னகைத்தார்.

'எந்தவித பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள். அவர்களை முதலில் இங்கிருந்து நீக்கினால் போதும் சிங்கப்பூர் பொருளியல் முழு வெற்றி பெற்றுவிடும்' என்பதுதான் டாக்டர் வின்சிமியுஸ் சொன்ன முக்கியமான அந்த 'செகண்ட் பாய்ண்ட்.' அதை அப்போது நிறைவேற்றுவது எவ்வளவு கடினமான காரியம் என்பதை திரு. லீ உணர்ந்திருந்தாலும் காய் கனிந்துதானே ஆகவேண்டும் என்று 'அதற்காகக்' காத்திருந்தார்.

ஆக, 1960 ஆம் ஆண்டு வந்து டாக்டர் வின்சிமியுஸ் செய்துவிட்டுப்போன ஆய்வின்படி 1961ல் லீ குவான் அவர்களின் கைகளுக்கு வந்த அவ்வறிக்கை கூறியிருந்தபடி, அதை நிகழ்த்திப்பார்ப்பதற்கு சிங்கையின் சூரியனும் சில மாதங்கள் காத்திருந்தார். இடையில் தனது கட்சியில் இருந்த அக்கம்யூனிச சக்திகள் வாயிலாக அவர் பெற்ற இன்னல்களும் இடைஞ்சல்களும் ஏராளம். அதையெல்லாம் தாண்டி 1961 ஆகஸ்டு மாதம் 'ஈடிபி' எனப்படும் 'பொருளியல் வளர்ச்சி வாரியம்' (எகனாமிக் டெவலப்மெண்ட் போர்டு) ஏற்படுத்தப்பட்டது.

இதன் அவசியம் என்ன, ஏன் இதை ஒரு நிறுவனமாக முதன் முதலில் டாக்டர் வின்ஸிமியுஸ் ஏற்படுத்தச்சொன்னார், அவ்வாறு ஏற்படுத்தியபின் அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதெல்லாம் இந்த அத்தியாயத்தோடு முடிந்துவிடும் சமாச்சாரம் இல்லை. அப்படியே 'ஒரு நாளோடு, ஒரு அத்தியாத்தோடு முடிந்து விடும் வேலைதான் அது' என்றிருந்தால் 'ஐக்கிய நாட்டு நிறுவன தொழில் ஆய்வுக்குழு (UNDP)' வேலை முடிந்தும், சிங்கப்பூர் அரசு எதற்கு டாக்டர் வின்சிமியுஸை, 'தேசிய பொருளியல் ஆலோசகராக' நியமித்து தொடர்ந்து இருபத்துமூன்று வருடங்கள் (1984 வரை) அவரை வைத்துக்கொண்டிருந்திருக்கவ

  • தொடங்கியவர்

saanakiyan

மக்தீர் முகமட்

modern Malaysia's founding father என அழைக்கப்படுபவர் மகதீர் முகமட் அவர்கள் அவர்தான் மலேசியாவை வளர்ச்சிப்பாதையில் செல்ல வித்திட்டவர்

0527-03.jpg

இவர்தான் இலங்கை இனப்பிரச்சினை பற்றி அண்மையில் கருத்து சொன்னவர் நானும் அதை வாசித்திருந்தேன்

துங்கு அப்துல் ரகுமான்

201a_1d.jpg

துங்கு அப்துல் ரகுமான் அவர்கள்Father of Independence (or Bapak Malaysia - Father of Malaysia). என அழைக்கப்படுகிறார்.இவர்தான் மலேசியாவின் முதலாவது பிரதமர்.இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக கருத்துக்குற சாத்தியமல்ல ஏனேனின் இவர் 1990 ஆண்டு இறந்துவிட்டார்(http://www.mykedah.com/e_20hall_fame/e201a...பந்தி)

201a_1e.jpg

துங்கு அப்துல் ரகுமான் மற்றும் மக்தீர் முகமட்டும்

நீங்கள் சொல்லுபவர் நவீன மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் மகதீர் முகமட் என்றுதான் நினைகிறேன் இவர் இன்னும் உயிருடன் இருகிறார்

Edited by ஈழவன்85

நல்லதொரு இணைப்பு ஈழவன்! :)

ஆம் ஈழவன் நீங்கள் சொன்னது சரி. விளக்கியமைக்கு நன்றி.

அந்த ஆக்கத்தை தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

அந்த ஆக்கத்தில் அவர் குறிப்பட்டிருந்தார்,

"இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது புகையிரதம் உள்ளது, இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவையும் கொழும்பு போல ஆக்குவேன்" என்று கூறி அதன்படியே செய்தும் காட்டி இன்று அதையும் தாண்டி உலகிலேயே உயரமான கட்டிடம் உள்ள ஒரு நாடாக அது இருக்கிறது.

  • 8 years later...

லீ: சிங்கப்பூரின் சிற்பி!

 

leee_2351274f.jpg

 

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

 
உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!
 
லீயுடன் ஓர் உரையாடல்
 
உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ - சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் - நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.
 
மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் - இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”
 
மாறாத வடு
 
சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”
 
தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.
 
ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்
 
19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.
 
சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை - இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.
 
அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.
 
அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?
 
அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”
 
இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.
 
வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை
 
“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.
 
இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.
 
இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.
 
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
 
சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.
 
தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.
 
கல்லறையிலிருந்து வருவேன்
 
தன் மீதான விமர்சனங்கள் மீது - கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு - பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.
 
சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”
 
இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!
 
லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.
 
“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!
 
நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்' என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.
 
இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.
 
- ஏ. ஆதித்யன்,
 
சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்,
 
இந்தோனேசிய www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com
 
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யாமாகும் என்ற லீ குவான் இயூ சீங்கப்பூரின் விடிவெள்ளி! – கி. சீலதாஸ்.

 

lee4சுமார்  1954ஆம்  ஆண்டு  காலஞ்சென்ற,  சிங்கப்பூரின்  முன்னாள்  பிரதமர்  லீ  குவான்  இயூ  அவர்களை  நேரில்  சந்தித்துப் பேசும்  வாய்ப்பு  கிட்டியது.  சிங்கப்பூர்  துறைமுகத்  தொழிலாளர்  சங்கத்தில்  அமைக்கப்பட்டிருந்த  நூல்  நிலையத்துக்கு  நான்  அன்றாடம்  போவது  வழக்கம்.  என்னோடு அந்த  நூல்  நிலையத்தின்  பலனை  அனுபவித்தவர்களில்  கவிஞர் ஐ.உலகநாதன்,  நூல்  நிலையத்தின்  அருகாமையிலேயே  இருந்து  தொழிலாளர்கள்  வாழும்  அடுக்கு  மாடி  கட்டடத்தில்  வசித்து  வந்தார் செ.வே  சண்முகம்  என்ற  வள்ளிமணாளன்,  ஆகியோர்  அடங்குவர்.  என்னோடு  அந்த  நூல்  நிலையத்தின்  பயனை  அனுபவித்தவர்களில்  ஒருசிலர்  மட்டுமே  எஞ்சியுள்ளனர்.  ஐ.உலகநாதன்  பெங்களூரிலும்,  நாராயணசாமி  என்கின்ற  தமிழ்வாணன்  இப்போது  ஜாசினில்  உணவகம்  நடத்துகிறார்.

1954ஆம்  ஆண்டு  முற்பகுதியில்  சிங்கப்பூர்  சட்ட  மன்றத்திற்கானத்  தேர்தல்  நடக்குமென  அறிவிக்கப்பட்டது.   துறைமுகத்  தொழிலாளர்  சங்கத்தின்  தலைவர்  வி.மாரியப்பன்,  பொதுச்  செயலாளர் அ.துரைசாமி  இருவரும்  சிங்கப்பூர்  தொழிற்  கட்சியில்  இருந்தார்கள்.  தொழிற்கட்சிக்கு  ஈடுகொடுக்கும்  அளவில்  இயங்கிக்  கொண்டிருந்தது  வழக்கறிஞர்  சி.சி.டானின்  தலைமையிலான  முற்போக்குக்  கட்சி  இதன்  பிரமுகர்களில்    எஸ்.எம்.வாசகர், எஸ்.எல்.பெருமாள்  போன்றோர்  அடங்குவர்.

siladassதேர்தல்  வரப்போகிறது  என்ற  அறிவிப்பானது   துறைமுகத்  தொழிற்சங்க  அலுவலகத்தில்  பல  சுறுசுறுப்பான  நடவடிக்கைகளுக்கு  வித்திட்டது.  பிரபல  வழக்கறிஞர்  டேவிட்  மார்ஷல், லிம்  யூ  ஹாக்  ( இவர்கள்  பின்னாளில்  சிங்கப்பூரின்   முதலமைச்சர்களாகச்  சேவையாற்றியவர்கள் )  சங்க  அலுவலகத்திற்கு  அடிக்கடி  வருவார்கள்.  துரைசாமியுடன்  வரும்  தேர்தலைப்பற்றி  பேசுவார்கள்.  இதையெல்லாம்  செவிமடுக்கும்  வாய்ப்பு  என்னைப்போன்ற  இளைஞர்களுக்கு  உற்சாகமளித்தது.

பொதுச்  செயலாளர்  துரைசாமிக்கு  தனி  அலுவலக  அறை  ஏதும்  கிடையாது.  ஒரு  தற்காலச்  சுவர் – அதை  விரும்பும்  போதெல்லாம்  நகர்த்திக்  கொள்ளலாம்.  இதனால்  துரைசாமி,  மாரியப்பன்  ஆகியோருடன்  புகழ்மிக்க  டேவிட்  மார்ஷல், லிம்  யூ ஹாக்  ஆகியோரின்  உரையாடல்  எங்கள்  காதுகளுக்கு  விருந்தாக  அமைந்திருந்தது.  அப்போது  டேவிட்  மார்ஷல்  இச்சங்கத்தின்  சட்ட  ஆலோசகராக  இருந்தார்.

லீ குவான்  இயூ அறிமுகமானார்

இப்படிப்பட்டச்  சூழலில்தான்  ஒரு  புது  முகம்  அறிமுகமாகியது.  சுமார்  முப்பது  வயதை  நெருங்கிக்  கொண்டிருந்த  லீ குவான்  இயூ,   நாங்கள்  கூடாரம்  அடித்து  தங்கியிருந்த  தொழிற்சங்க அலுவலகத்திற்கு  வரத்  தொடங்கினார்.  அவருடைய  உரையாடலும்  பெரும்பாலும்  துரைசாமியுடன்தான்.

தேர்தல்  நெருங்கிக்  கொண்டிருந்த  போது  டேவிட்  மார்ஷல்,  லீ குவான் இயூ  இணைந்து  ஒரு  புது  வலுவுமிக்க  இடதுசாரி  அரசியல்  இயக்கத்தைக்  காண  ஆர்வத்துடன்  செயல்படுகின்றனர்  என்ற  நம்பிக்கை  என்னைப்போன்ற  இளைஞர்களுக்கு  இடதுசாரி  அரசியல்மீது  பற்று  வலுப்பெறச்  செய்தது.  துரைசாமி  இடதுசாரி  ஒற்றுமையைப்  பற்றியும்  சிங்கப்பூரின்  புதிய  அரசியல்  நோக்கத்தைப்  பற்றி  உற்சாகத்துடன்  விளக்கமளிப்பார்.

lee 3டேவிட்  மார்ஷல்  அரசியலுக்குப்  புதியவர்  ஆனால்  புகழ்பெற்ற  வழக்கறிஞர்.  லீ  குவான்  இயூவும்  சிங்கப்பூர்  அரசியலுக்குப்  புதியவரே.  இவர்  சிங்கப்பூர்  முற்போக்குக்  கட்சியின்  பொதுச்  செயலாளராக  இருந்திருக்கிறார்  என்பதைப்  பிறகுதான்  தெரிந்துகொள்ள  முடிந்தது.  லீ  குவான்  இயூ  முன்னேறி  வரும்  இளம்  வழக்கறிஞர்களில்  முன்னோடியாக  விளங்குவதாகவும்  குறிப்பிடப்பெற்றது.  அன்னார்  சிங்கப்பூர்  துறைமுகப்  பணியாளர்  சங்கத்தின் (Singapore  Harbour  Board  Staff Association)  சட்ட  ஆலோசகராக  இருந்தார்.

வருகின்ற  பொதுத்தேர்தலில்  இடதுசாரி  சக்திகள்  ஒன்றுகூடி  வலதுசாரி  அரசியல்  பிரதிநிதிக்கும் முற்போக்குக்  கட்சிக்கு  பலத்த  போட்டி  வழங்குமென்ற  நம்பிக்கை  பரவியிருந்தது.  டேவிட்  மார்ஷலும்  லீ  குவான்  இயூவும்  அடிக்கடி  சந்தித்து  இடதுசாரி  சக்திகள்  ஒன்றுகூடும்  பொருட்டு  பேச்சு  நடத்துவதாக  செய்திகள்  வலம்  வந்தன.

தேர்தல்  நெருங்கிவிட்டக்   காலம்.  புதிய  இடதுசாரி  இயக்கத்தின்  எதிர்பார்த்துக்  கொண்டிருந்தபோது   லீ  குவான்  இயூ  மக்கள்  செயல்  கட்சியின்  தோற்றத்தை  அறிவித்தார்.  டேவிட்  மார்ஷல்  சினம்  கொண்டு,  லீ  குவான்  இயூ  இடதுசாரிகளின்  ஒற்றுமையை  விரும்பவில்லை  என்று  கடிந்து  கொண்டார்.

ஆங்கிலம் மட்டுமே பேசினார்

மக்கள்  செயல்  கட்சி  புதிய  கட்சி.  ஆள்பலம்  இல்லை.  கட்சி  இயந்திரம்  துவங்கப்படாத  காலம்.  லீ குவான்  இயூ  தஞ்சோங்  பகார்  தொகுதியில்  போட்டியிட்டார்.  அப்போது  அவருக்கு  ஆங்கிலம்  மட்டும் தான்  தெரியும்.  சீன  மொழியில்   சரளமாகப்  பேச  முடியாது.  அவர்  பிரானாக்கான்  சமூகத்தைச்  சேர்ந்தவர்.  அதாவது  மலாக்காவில்  “பாபா”க்கள்  என்று  அழைக்கப்படுபவர்கள்  போன்ற  சமூகத்தைச்  சேர்ந்தவர்.

பொது  மேடைகளில்  பேசும்போது  அவருக்கு  சீன  மொழிபெயர்ப்பாளர்  இருப்பார்.  சில  சீனச்  சொற்களை  ஆங்கிலத்தில்  எழுதி  வாசிப்பார்.  அன்றைய  சிங்கப்பூரின்  மேயராக  இருந்த  ஓங்  எங்  குவானோடு  ஏற்பட்ட  கருத்து  வேறுபாடு  லீ  குவான்  இயூவை  சீன  மொழியைக்  கற்க  ஊக்குவித்தது.  காரணம்  சீன  மொழியில்  புலமை  கொண்டவர்  ஓங்  எங்  குவான்.  தமக்கு  சீன  மொழியில்  புலமையில்லாத  குறையை  தீர்த்துக்  கொண்டார்.

தேர்தல்  காலத்தின்போது  சங்க  அலுவலகத்துக்கு  அடிக்கடி  வருவார்  லீ  குவான்  இயூ.  தேர்தல்  நடவடிக்கையைப்  பற்றி  துரைசாமியுடன்  பேசுவார்.  அவருடையத்  தேர்தல்  பிரச்சாரத்தில்  நானும்  பங்குபெற்றேன்.  அமோக  வெற்றி  கண்டார்.

சிங்கப்பூர்  துறைமுகப்  பணியாளர்  சங்கத்தில்  ஜமிட்  சிங்  என்பவரைப்  பொதுச்  செயலாளராக  நியமிக்கக்  காரணமாகயிருந்தார்  லீ குவான்  இயூ,  அதே  வேளையில்  துறைமுகத்தில்  இனவாரியாக    பலத்  தொழிற்சங்கங்கள்  இருப்பதைத்   தவிர்த்து   ஒரே  தொழிற்சங்கத்தை  உருவாக்க  வேண்டுமென்ற  எதிர்பார்ப்பு  பலமடையவே  அதற்கான  ஆரம்பக்  கூட்டத்தை   கெண்டன்மண்ட்   ரோட்டிலிருந்த  சங்க  அலுவலகத்தில்  நடந்தது.  இது  தேவையான  மாற்றம்  என லீ  குவான்  இயூ  கூறினார்.

Lee 1மக்கள்  செயல்கட்சி  பலமான  எதிர்க்கட்சியாக  விளங்கியது  மட்டுமல்ல  அது  துரிதமாகவே  மக்களிடம்  பரவி  நன்மதிப்பைப்  பெறத்  தொடங்கியது.  இந்த  முன்னேற்றமானச்  சூழல்  வலுவடைந்து  கொண்டிருந்தபோது  தீவிர  இடதுசாரிகள்  எனறு  சொல்லப்படுபவர்கள்  மசெகட்சியின்  நிர்வாகத்தைக்  கைப்பற்றினார்கள்.  லீ  குவான்  இயூ  பொதுச்  செயலாளர்  பதவியை  இழந்தார்.  லிம்  சின்  இயோங்,  டி.டி.ராஜா  போன்றோர்  கட்சியின்  தலைமைத்துவத்தை  ஏற்றனர்.

இதற்கிடையில்  பிரிட்டனுடனான  சிங்கப்பூருக்கானச்  சுதந்திர  பேச்சு  முறிவு  பெறவே  டேவிட்  மார்ஷல்  முதலமைச்சர்  பதவியைத்  துறந்தார்.  லிம் யூ  ஹாக்  முதலமைச்சரானார்.

ஊரடங்குச் சட்டம்

சிங்கப்பூரில்  எங்கும்  ஆர்ப்பாட்டம்  பரவியபோது  லிம்  யூ  ஹாக்  ஊரடங்கு  சட்டத்தை  அமல்படுத்தி  இடதுசாரி  அரசியல்வாதிகளைக்  கைது  செய்து  சிறையில்  அடைத்தார்.  பிற்காலத்தில்  லிம்  யூ  ஹாக்  இதைப்  பற்றிச்  சொல்லும்போது  தாம்  இதுசாரிகளைக்  கைது  செய்ததால்  லீ  குவான்  இயூ  மக்கள்  செயல்கட்சியை  கைப்பற்ற  முடிந்தது  என்று  குறிப்பிட்டார்.

மீண்டும்  மசெகட்சியின்  பொதுச்  செயலாளர்  பொறுப்பை  ஏற்ற  லீ  குவான்  இயூ  பிற்காலத்தில்  கட்சியில்  பிரச்சினைகள்  எழாமல்  இருக்கவேண்டுமென்ற  எண்ணத்தோடு  கட்சி  தேர்தல்  முறையை  மாற்றி  அமைத்தார்.

தீவிர  இடதுசாரிகள்   எண்ணிக்கையில்  பெருகிவிட்ட  காலத்தில்   அவர்கள்  உண்மையில்  யார்?  சோஷலிஸ்டுகளா  அல்லது  கம்யூனிஸ்டுகளா  என்ற  கேள்வியும்  எழுந்தது.  தாம்  கம்யூனிஸ்டுமல்ல  அதன்  எதிரியுமல்ல  என்று  சாதுரியமாகப்   பதில்  அளித்தார்  லீ  குவான்  இயூ.  சிங்கப்பூர்  அரசியல்  குழம்பிய  குட்டைபோல்  இருந்தது.    யார்  எந்த  கொள்கையை  பேணுகிறார்  என்று  உறுதியாகச்  சொல்லமுடியவில்லை.  ஆனால்,  இடதுசாரி  அரசியலுக்குக்  கடும்   சோதனை  எழும்  என  நம்பியவர்களில்  பெரும்பாலோர். நான்  சிங்கப்பூரைவிட்டு  சிகாமட்டிற்கே  திரும்பிவிட்டேன்.  அங்கு  மலாயா  தொழிற்கட்சியில்  இணைந்து  செயல்படத்  தொடங்கினேன்.

அடுத்து (1959)  வந்தத்  தேர்தலில்  மக்கள்  செயல்கட்சி  ஆளும்  கட்சியாகப்  பலம்  பெற்றது.  ஆனால்,  சிறையில்  அடைக்கப்பட்டிருக்கும்  தமது  சகாக்கள் – தேவன்  நாயர்,  லிம்  சின்  சியோ,  ஜேம்ஸ்  புதுச்சேரி,  வுட்டால்  மற்றும்  ஏனையர்  விடுதலை  செய்யப்பட்டாலன்றி  மக்கள்  செயல்   கட்சி  ஆட்சி  பொறுப்பை  ஏற்காது  என்று  அறிவிக்கப்பட்டது.  தேர்தல்  காலகட்டத்தில்  இந்த  அரசியல்  கட்சிகளின்  விடுதலை  ஒரு  நிபந்தனையாகவே  பிரச்சாரம்  செய்தது  மக்கள்  செயல்  கட்சி.  அவர்கள்  விடுவிக்கப்பட்டதும்  சிங்கப்பூரின்  பிரதமரானார்  லீ  குவான்  இயூ.

தீவிர  இடதுசாரிகள்  என  நம்பப்பட்டவர்கள்  சிங்கப்பூர்  அரசின்  நிர்வாகத்தைப்  பாதிக்காத  அளவுக்கு  சேர்த்துக்கொள்ளப்பட்டனர்  பெரும்பான்மையினர்  அரசியல்  செயலாளராக  நியமிக்கப்பட்டனர்.

மலேசியா  இணைப்பின்றி  சிங்கப்பூரின்  எதிர்காலம்  சூன்யமாகும்   

lee outமலாயாவின்  அன்றையப்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  27.5.1961இல்  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த  மலேசியா  இணைப்பு  அறிவிப்பை  வெளியிட்டபோது  அதற்கு  ஆதரவும்  எதிர்ப்பும்  இருந்தன.  மலாயா,  சிங்கப்பூர், புருணை, சாபா(வட போர்னியோ)  சரவாக்  ஆகிய    பிரதேசங்களை  இணைத்து  சுதந்திர  நாடாகத்  திகழவேண்டுமென்பதே  இந்த  அறிவிப்பின்  குறிக்கோளாக  இருந்தது.  காலப்போக்கில்  புருணை  இந்த  இணைப்பில்  பங்கு  பெறுவதைத்  தவிர்த்தது.  கொள்கை  அளவில்  ஆதரவு  நல்கிய  இடதுசாரிகள்  பிறகு  மலேசியா  இணைப்பில்  இருக்கும்  கோளாறுகளை  வெளிப்படுத்தி,  கடுமையாக  எதிர்த்தனர்.  புருணையில்  அஸஹாரி  ஆயுதப்  போராட்டத்தை  முடுக்கிவிட்டார்.  இதற்கிடையில்  இந்தோனேஷியா,  பிலிப்பின்ஸ்  ஆகிய  நாடுகள்  மலேசியாவுக்குப்  பதிலாக  இந்தோனேஷியா,  பிலிப்பின்ஸ்,  மலாயா,  புருணை  சாபா,  சரவாக்  ஆகிய  பிரதேசங்களைக்  கொண்ட  அகண்ட  நாட்டைக்  காண  விழைந்தன.  இந்தத்  திட்டம்  பிசுபிசுத்துவிடவே  மலேசியா  இணைப்புக்கு  எதிரான  இயக்கத்தைத்  தீவிரப்படுத்தியது  இந்தோனேஷியா.  அந்தக்  காலகட்டத்தில்  மலேசியாவுடனான  இணைப்பை  ஆதரித்த  லீ  குவான்  இயூ,  மலேசியா  இணைப்பின்றி  சிங்கப்பூரின்  எதிர்காலம்  சூன்யமாகிவிடும்  என  பகிரங்கப்படுத்தினார்.

மலேசிய  இணைப்பின்  பிரச்சாரத்தின்  போது  மக்கள்  செயல்  கட்சியில்  பிளவு  ஏற்பட்டது.  தீவிர  இடதுசாரிகள்  சோஷலிஸ  முன்னணி  இயக்கத்தைக்  கண்டனர்.  இவர்களை  கம்யூனிஸ்டுகள்  என  லீ  குவான்  இயூவும்,  துங்கு  அப்துல்  ரஹ்மானும்  பகிரங்கமாகவே  குற்றம்  சாட்டினர்.

16.9.1963இல்  மலேசியா  உதயமாயிற்று.  பலவிதமானச்  சந்தேகங்கள்;  அதிருப்தி  மேலோங்கிய  நிலை; இந்தோனேஷியாவின்  ஒத்துழையாமை  இயக்கம்;  கம்யூனிஸ்டுகள்  மீது  கடும்  நடவடிக்கை  யாவும்  இந்நாட்டு  அரசியலை  ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.  அப்போது  நிகழ்ந்தவைகளை  நினைத்துப்  பார்க்கும்போது  மலேசியாவின்  பிறப்பில்  நல்ல  சகுனம்  தென்படவில்லை  என்ற  கருத்தும்  பரவியிருந்தது.

lee shattredபுதிதாக  உருவான  மலேசியாவில்  அரசியல்  சித்தாந்தம்  என்ற  ஒன்று  இருந்ததாகத்  தெரியவில்லை.  வெள்ளைக்காரர்கள்  தங்களின்  நலனில்  கண்ணும்  கருத்துமாகச்  செயல்பட்டு  முதலாளித்துவத்தை  தக்க  வைத்துக்  கொண்டனர்.  அதற்கு  உதவியாக  விளங்கியது  துங்கு  அப்துல்  ரஹ்மான்  தலைமையில்  செயல்பட்ட  அம்னோ,  மசீச, மஇகா  உள்ளடக்கிய  கூட்டணி.  கூட்டணியின்  கொள்கை  இன  ஒற்றுமை,  இருக்கும்  சமுதாய,  பொருளாதாரச்  சூழ்நிலையில்  எந்த  மாற்றமும்  இருக்கக்கூடாது   என்பதாகும்.  மலேசியா  அமைந்த  பிறகும்  இதே  கொள்கையை  கூட்டணி  பின்பற்றியது.  ஆனால்  இதில் மாற்றத்தைக்  காண  விரும்பினார்  லீ  குவான்  இயூ.

 

சிங்கப்பூரின்  மலேசியாவுடனான  இணைப்பு  மக்கள்  செயல்  கட்சி  மலாயா  மாநிலங்களில்  கால்  பதிய  உதவியது.  மலேசிய  நாடாளுமன்றத்தில்  லீ  குவான்  இயூவின்  குரல்  ஒலித்தது.  1964ஆம்  ஆண்டு  நடந்த  பொதுத்  தேர்தலில்  மக்கள்  செயல்  கட்சி  போட்டியிட்டது.  தேவன்  நாயர்,  சோஷலிஸ்ட்  முன்னணியின்  புகழ்மிக்க  வேட்பாளர்  வி.டேவிட்டை  எதிர்த்துப்  போட்டியிட்டார்.  அந்தத்  தேர்தலில்  தேவன்  நாயர்  வெற்றிவாகை  சூடினார்.  அந்தப்  பொதுத்  தேர்தலுக்குப்  பிறகு  மலாயா தொழிற் கட்சி  ஒரு கம்யூனிஸ்டுக்கு  முன்னோடி  என்ற  முத்திரைக்  குத்தப்பட்டது.  அது  செல்வாக்கு  இழந்தது.  இறுதியில்  இருக்கும்  இடம்  தெரியாமல்  போய்விட்டது.

இருப்போர் – இல்லாதோருக்கு இடையிலான போராட்டம்

lee tar2இந்தக்  காலகட்டத்தில்  மலேசியாவுக்குத்  தேவையானது  என்ன?  சித்தாந்த  அரசியலில்  அல்லது  சித்தாந்தம்  சேராத  நடுநிலை  அரசியலா?  நடுநிலை  அரசியலுக்குக்  கொள்கை  தேவைப்படுமே?  அது  என்ன?  கூட்டணி  ஆட்சி  பிரிட்டிஷாரின்  கொள்கையைப்  பின்பற்றி  தனது  ஆயுள்  காலத்தை  நீட்டிக்  கொள்ளத்  தீர்மானித்திருக்கலாம்.  அதற்கானச்  சான்றுகள்  நிறையத்  தென்பட்டன.  இந்த  சூழலில்தான்  லீ  குவான்  இயூ  வசதியானவர் – வசதியற்றவர் (haves  and have nots)  என்ற  சுலோகத்தை  அறிமுகப்படுத்தினார்.  நடக்கவேண்டிய  போராட்டம் வசதி  உள்ளவர்களுக்கும்  வசதி  இல்லாதவர்களுக்கும்  ஏற்பட்டிருக்கும்  போராட்டம்  என்றார்.  இதுவே  சூடுபிடிக்கத்  தொடங்கியது.

கூட்டணியைச்  சேர்ந்த  சில  தலைவர்கள்  லீ  குவான்  இயூவை  கண்டபடி  வைதனர்,  வீண்பழி  சுமத்தினர்.  அவர்கள்  மீது  அவதூறு  வழக்கைத்  தொடுத்தார்  லீ  குவான்  இயூ.  வெற்றியும்  பெற்றார்.

lee and tarமக்கள்  செயல்  கட்சியின்  மலேசிய  பிரவேசம்  அம்னோ  தலைவர்களுக்குப்  பேரிடராகத்  தோன்றியது.  அப்போதெல்லாம்  சமயப்  பிரச்சினைக்கு  இடமிருக்கவில்லை.  சமயச்  சர்ச்சை  ஏதும்  இருக்கவில்லை.  மக்களின்  தேவை  என்ன?  பல  இனங்கள்,  மொழி,  பண்பாடு  வாழும்  நாட்டில்  நல்லிணக்கம்  காண்பது  எவ்வாறு?  இவை யாவும்  மலேசியர்களை  உறுத்திய  கேள்விகள்.   மனிதன்  கவுரத்துடன்  நடத்தப்படுவதற்கு  உதவுவது  சமயமல்ல,  பொருளாதார   செழுமையே.  அதைத்  தான்  லீ  குவான்  இயூ  கண்டார்.  உணர்த்தியுள்ளார்.  அது  மலேசியாவின்  இனவாத  அரசியலைச்  சப்புக்  கொட்டுவோர்  இருக்கும்  வரை  லீ  குவான்  இயூ  சமுதாயப்  புரட்சிக்கு  செவிமடுக்கும்  திராணி  இல்லாதவர்கள்  மலிந்து  கிடந்த  காலம்  அது. இன்று  வேறு  திசையில்  இனவாதம் பரவுவதைக்  காணமுடிகிறது. கவலையாக  இருக்கிறது.

சிங்கப்பூர்  மலேசியாவை  விட்டு வெளியேற்றப்பட்டது

கருத்து  வேற்றுமை  முற்றிவிடவே  9.8.1965இல்  சிங்கப்பூர்  மலேசியாவை  விட்டு  பிரிந்து  செல்ல  நேரிட்டது.  அதுவாக  பிரிந்து  சென்றதா  அல்லது  வெளியேற்றப்பட்டதா?  அதுவும்  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த  கேள்வியே!  நடந்தவைகளை  கூர்ந்து  கவனிக்கும்  பட்சத்தில்  வெளியேறியது  என்பதைக்  காட்டிலும்  வெளியேற்றப்பட்டது  என்பதற்கான  ஆவணங்கள்  தெளிவாக  உள்ளன  எனலாம்.

இயற்கை  வளம்  கிஞ்சித்தும்  இல்லாத  நாடு, சித்தாந்த  கோட்பாட்டில்  சிக்கல்கள்  மலிந்து  கிடந்த  அந்த  வேளையில்,  கம்யூனிஸ்டுகளின்  மருட்டல்  கடுமையாக  இருப்பதாக  எல்லோரும்  ஒருமித்துக்  குரல்  எழுப்பிக்  கொண்டிருந்தபோது  சுதந்திர  சிங்கப்பூர்  எப்படி  சமாளிக்கும்.  மலேசியாவின்  ஓர்  அங்கமாக  இருந்தாலன்றி  சிங்கப்பூருக்கு  எதிர்காலமே  இல்லை  என்று  உரக்க  வாதிட்டவர்  லீ  குவான்  இயூ.  மலேசியா  அமைக்கப்பட  வேண்டும்  என  துங்கு  அப்துல்  ரஹ்மான்  சொன்னது  உண்மை.  ஆனால்  அதற்கு  ஆசிய – ஆப்பிரிக்க  நடுகளில்  ஆதரவு  திரட்டும்  பணியை  மேற்கொண்டவர்  லீ  குவான்  இயூ.  யார்  கண்ட  கனவு?  துங்கு  அப்துல்  ரஹ்மானா  அல்லது  அந்தக்  கனவைக்  காணும்படி  உசுப்பிவிட்டது  காலனித்துவ  கோட்பாட்டைக்  கட்டிக்  காப்பதில்  சாணக்கியர்களான  பிரிட்டிஷ்  ராஜதந்திரமா?  அந்தக்  கேள்விக்கும்  இதுவரை  பதில்  கிடைக்கவில்லை.  ஆனால்,  மலேசியா  என்ற  கனவு  உருபெற  வேண்டுமென  உழைத்தவர்களில்  முக்கியமானவர்  லீ  குவான்  இயூ.

மலேசியாவுக்கு  எதிரான  கொள்கையைக்  கடைபிடித்த  மலாயா  தொழிற்கட்சி,  மக்கள்  கட்சி  இணைந்த  சோஷலிஸ்ட்  முன்னணியின்  பிரச்சாரத்தில்  நான்  தீவிரமாக  செயல்பட்டது  உண்மை.  மலேசிய  அமைந்த  பிறகு  அதை  ஆதரிக்கத்  தவறியதில்லை  நான்;  காரணம்  மலேசியாவை  அனைவரும்  ஏற்றுக்கொண்டுவிட்டனர்  என்பதை  1964ஆம்   ஆண்டு பொதுத்  தேர்தல்  உறுதிப்படுத்துவதாகக்  கருதினேன்.

விரிசல் விரிவடைந்தது

lee6சுதந்திர   சிங்கப்பூர்  குடியரசின்  கதி  என்ன?  அதன்  எதிர்காலம்  என்ன?  லீ  குவான்  இயூவின்  மலேசிய  அரசியல்   பிரவேசமும், விலகலும்  எப்படிப்பட்ட  அரசியல்  மாற்றத்தை  ஏற்படுத்தியது?  என்பன  போன்ற  கேள்விகள் வருத்தத்   தொடங்கின.

முதலில்  சிங்கப்பூரின்  கதியும்  அதன்  எதிர்காலமும்  எப்படி  இருக்குமென  திட்டவட்டமாகக்  கணிக்க  முடியவில்லை.  ஆனால்,  லீ  குவான்  இயூவும்  அவர்  சகாக்களும்   ஒரு  மாற்றத்தைக்  காண  துணிந்தனர்.  சிங்கப்பூர்  குடியரசு  கப்பல்  கரைசேராது  கவிழ்ந்துவிடும்  என  ஆருடம்  சொன்னவர்கள்  ஏராளம்.  எதிலெல்லாம்  சிங்கப்பூரும்  மலேசியாவும்  ஒன்றாகச்  செயல்பட்டனவோ  அவை  ஒன்றன்பின்  ஒன்றாக  கலைக்கப்பட்டன.  மலேசிய  சிங்கப்பூர்  நாணய  ஆணையம்,  மலேசிய  சிங்கப்பூர்  விமானச்  சேவை  போன்றவை  பிரிந்தன.  பயண  கட்டுப்பாடு  அறிமுகப்படுத்தப்பட்டது.  இரு  நாடுகளுக்கு  இடையிலான  விரிசல்  விரிவடைந்தது.

படிப்படி  முன்னேற்றம்  என்பது  போல்  சிங்கப்பூர்  இந்த  வட்டாரத்திலேயே  சிறந்த  தொழிற்சாலை  மயமாக  மாறியது.  பொருளகங்கள்  புது  திட்டங்களை  அறிமுகப்படுத்தின.  இதன்வழி  பொருளகங்கள்  அந்நிய  முதலீட்டை  கவர்ந்தன.

கடும்  உழைப்பு,  நேர்மையானத்  தொழிற்முறை,  ஊழலற்ற  அரசு,  குற்றவியலைக்  கட்டுப்படுத்தும்  அணுகுமுறை,  சமுதாயப்  பாதுகாப்பு,  சிங்கப்பூர்  என்ற  நாட்டில்  எல்லோருக்கும்  திறமயைப்  பொருத்து  முன்னேற்றம்  காணமுடியும்  என்ற  அரசியல்  தத்துவத்தை  நிலைநிறுத்தப்பட்டதைக்  காணமுடிந்தது.  திக்கற்ற  நிலைக்கு  உந்தப்பட்ட  சிங்கப்பூர்  குடியரசு,  நாளாவட்டத்தில்  உலகமே  போற்றும்  ஒரு  அற்புத  நாடாக  உருமாறியது.  இந்த  முன்னேற்றத்துக்குப்  பலியானது  பேச்சுரிமையும்  கருத்துரைக்கும்  உரிமையும்  என்பதை  மறக்க  இயலாது.

மலேசியாவில்  நிலவிய  அரசியல்  சூழ்நிலையின்  காரணமாகப்  பிரிந்துபோன  சிங்கப்பூர்  அதைக்  குறித்து  வருந்தியது  உண்டா?  ஏமாற்றத்தில்  முடிந்த  சிங்கப்பூர்  இணைப்பு  எப்படிப்பட்ட  விளைவுகளச்  சமாளிக்க  வேண்டியிருந்தது.  அந்த  விளைவுகள்  சிங்கப்பூருக்கு  நன்மையாகவே  மாறிவிட்டதை  நாம்  காணமுடிகிறது.  மலேசியா  மலேசியர்களுக்கு  என்ற  முழக்கத்தை  தொடக்கிவைத்தார்.  அது  இன்றும்  ஒலித்துக்கொண்டிருப்பதை  ஒதுக்கிவிடமுடியாது.

மலாயா – சிங்கப்பூர்  வழக்கறிஞர்கள்  மன்றங்களின் கூட்டு  முயற்சியில் 9.6.1996இல்  இழப்பீடு   சட்டத்தைப்  பற்றிய  கருத்தரங்கு  நடத்தின.  அதில்  கலந்துகொண்டு  உரையாற்றினேன்.  அக்கருத்தரங்கின்  முந்தின  நாள்  சிங்கப்பூர்  மலேசியாவுடன்  மீண்டும் இணையும்  என  எதிர்பார்ப்பதாகச்  சொன்னார்  லீ  குவான்  இயூ.  இந்தச்  செய்தி  பத்திரிக்கைகளில்  வந்தன.  இழப்பீடு  குறித்து  இருநாடுகளின்  சட்டங்களும்   வித்தியாசம்  கொண்டிருப்பதால்  அதில்  மாற்றம்  காண வேண்டியது  எங்ஙனம்   என  குறிப்பிட்டிருக்கிறேன்.

சிங்கையை சுய காலில் நிற்க வைத்தவர் லீ  

Lee2மலேசியாவில்  இருந்து  பிரிந்து  போகும்  நிலை  உருவாக்கியது  யார்/  இதனால்  யாருக்குப்  பலன்  கிடைத்தது  என்ற  ஆய்வு  மேற்கொள்ளப்படுமானால்  பிரிந்து  போனதால்  லீ  குவான்  இயூவின்  சிறந்த  தலைமைத்துவம்   அனைத்துலக  ரீதியில்  மற்ற  உலகத்  தலைவர்களோடு  உயர்வு  கண்டது.  அவர்களுக்கு  இணையாக  தலைதூக்கி  நிற்கும்  ஆற்றலை  லீ  குவான்  இயூ  அடைந்தார்  என்பது  வெள்ளிடைமலை.  மலேசியாவிலேயே  இருந்திருந்தால்  அவர்  புகழின்  உச்சிக்குச்  செல்வது  தடைபட்டிருக்கும் – அவரின்  முழு  திறமையை  வெளிப்படுத்த  முடியாமல்  போயிருக்கும்.  அதே  சமயத்தில்,  ஒரு  நல்ல,  திறமைவாய்ந்த  ஊழலற்ற  நிர்வாகத்துக்கு  உதவிடத்  தயாராக  இருந்த  லீ  குவான்  இயூவை  இழந்தப்  பழியை   மலேசியா  தாங்கிக்  கொள்ளவேண்டியுள்ளது.  லீ  குவான்  இயூ  ஒரு  தூரநோக்கு,  அதை  கணிக்க  மறுத்தவர்களை  வரலாறுதான்  அடையாளம்  காணவேண்டும்.  எனவே,  இழந்தது  யார்?  மலேசியாவா  சிங்கப்பூரா?  லீ குவான்  இயூவா  அல்லது  மலேசியாவா?  இதற்கான  விடை  தேடலை  மலேசியர்களிடமே  விட்டுவிடுகிறேன்.

வாழ்க்கை  ஒரு  பயணம்.  அது  நின்றுவிடும். ஆனால், சிங்கப்பூரர்களுக்கு  அவர்  உசுப்பிவிட்ட  உற்சாகம்,  தன்  காலிலேயே  நிற்க  முடியும்  என்ற  நம்பிக்கை,  எதிர்வரும்  சங்கடங்களை  சமாளிக்க  முடியுமென்ற  உத்வேகம்  அனைத்தையும்  நல்கினார்  லீ  குவான்  இயூ.  அதுவே  குழப்பம்  மலிந்த  இவ்வுலகில்  பயணிக்கும்  சிங்கப்பூரின்  அடிப்படை  நோக்கமாகத்  திகழும்.

http://www.semparuthi.com/?p=120881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.