Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நீர்மாசடைதலில் அறிவியல், அரசியல் மற்றும் சூழ்ச்சியான செயற்பாடுகள் - DR முரளி வல்லிபுரநாதன்

Featured Replies

அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் நீர் தொடர்பாகவே இருக்கும் - இஸ்மாயில் செரகேல்டின், உலக வங்கியின் உப தலைவர் 1995 (1)

water_CI.jpg


 
விவசாயம், அதிகரிக்கும் குடித்தொகை, சக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் அதிகரித்த தேவைகளினால் தண்ணீர் பற்றக்குறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது (2). 2007 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் அல்லது பூமியில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வசிப்பதாக கணிப்பிடப்பட்டிருந்தது (3). மேலும் 2025 அளவில் 1.8 பில்லியன் மக்கள் முழுமையான நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வசிப்பார்கள் என்றும் உலக குடித்தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிப்பார்கள் என்று எதிர்வு கூறப்பட்டு உள்ளது (4). இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் 22 பங்குனி 2015 இல் கொண்ட்டாடப்பட்ட உலக நீர் தினத்தில் "தண்ணீரும் நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியும்" என்னும் தொனிப்பொருள் பிரேரிக்கப் பட்டு இருந்தது (5).  நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியானது "எதிர்கால சந்ததியினர் அவர்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஆற்றலை பாதிக்காதவண்ணம் நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்யும் அபிவிருத்தி" என வரையறுக்கப்பட்டுள்ளதுடன் (6) ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவு செய்யப்பட்ட தொனிப்பொருளானது தண்ணீரைப் பாதுகாப்பதுடன் நீர் மாசடைதலை இயன்றளவு குறைத்து எதிர்கால சந்ததியினர் வசிக்கக்கூடிய ஒரு கிரகமாக பூமி இருப்பதை உறுதி செய்யும் விழிப்புணர்ச்சியை தோற்றுவிப்பதை வலியுறுத்துகிறது.
 
வளர்ந்துவரும் நாடுகளில் 70 வீதமான தொழிற்சாலைக் கழிவுகள் எந்தவித சுத்திகரிப்புமின்றி நீரினுள் விடப்பட்டு பயன்படுத்தக்கூடிய நீர் வழங்கலை மாசு படுத்துகிறது (7). நீர் மாசுபடுதலுக்கு காரணமாக இருப்பதனால் சீன அரசாங்கத்தினால் கறுப்புப் பட்டியலிடப்பட்ட 33 பல்தேசியக் கம்பனிகளுள் பானசோனிக், பெப்சி மற்றும் நெச்ட்லெ போன்ற உலக நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளும் அடங்கும் (8). பல்தேசியக் கம்பனிகள் தங்களுடைய கூட்டு முயற்சிகளை விரிவாக்குவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளை விட வளரும் நாடுகளை மிகவும் விரும்புவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலல்லாது வளரும் நாடுகளில் தொழிற்சாலை மற்றும் விவசாய நடவடிக்கைகளின் போது  ஏரிகள், ஓடைகள் , ஆறுகள் மற்றும் ஏனைய நீர் மூலங்களில் மாசுக்களை ஊற்றுவதை கட்டுபடுத்தும் கடுமையான ஒழுங்கு விதிகள் இல்லாமல் இருப்பதே காரணம் (7) என்பது  இரகசியமான விடயமல்ல. சில பல்தேசியக் கம்பனிகள் தங்களுடைய வணிக முயற்சிகளின் இலாபமீட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் தடைகளை மேவுவதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (9). இலங்கையில் நிகழ்ந்துள்ள நீர் மாசடைதல் விவகாரங்களை இந்தப் பின்புலத்திலேயே நாங்கள் பார்க்கவேண்டும்.
 
இலங்கையில் தொழிற்சாலைகளினால் உருவாக்கப்பட்ட இரு பாரிய சம்பவங்கள் மக்களின் அமைதியின்மைக்கும் பாரிய எதிர்ப்புக்கும் இட்டுச் சென்றது (10). முதலாவது பாரிய எதிர்ப்பு 2013ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் ரதுபஸ்வலவில் உள்ள ஹெய்லீஸ் குழுமத்துக்கு சொந்தமான டிப்ட் ப்ரோடக்ட்ஸ் பிஎல்சி எனப்படும் இறப்பர் கையுறைத் தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு 3 பொதுமக்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதில் முடிவடைந்தது (11) (12). ரதுபஸ்வலவின் தாழ்ந்த நீர்த் தரத்துக்கு தனியார் கம்பனிதான் பொறுப்பாளி என்று எந்த ஒரு அரசாங்க பரிசோதிக்கும் நிறுவனமும் திட்டவட்டமாக குறிப்பிடாததுடன் அரசியல் செல்வாக்கானது கம்பனியை அரசாங்க நிறுவனங்கள் பொறுப்பாளி ஆக்குவதை தடுத்திருக்கலாம் (13). அரசாங்கம் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க சம்மதித்த போதிலும் (14) எதிர்கட்சிகள் பாராளுமன்றத்துக்கு சூழலைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான அரசாங்க நிறுவனங்கள் தமது கடமையை செய்வதற்குரிய சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டும் பிரேரணையை சமர்ப்பித்தார்கள் (15). இறுதியாக சம்பந்தப்பட்ட கம்பனி எந்தவித தண்டமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நட்டஈடோ செலுத்தாமல் முழுமையாகத் தப்பிவிட்டது.
 
ரதுபஸ்வலவுடன் ஒப்பிடும் போது சுண்ணாகம் நீர் மாசடைதல் பிரச்சினையானது மிகப் பெருமளவு மக்களை அண்ணளவாக 250,000 பேரை பாதிக்கிறது (16) என மதிப்பிடப்பட்டு இருந்த போதிலும் கிட்டத்தட்ட ரதுபஸ்வலவில் இடம்பெற்றது போன்ற சூழ்ச்சியான செயற்பாடுகள் இப்போது சுன்னாகத்தில் இடம்பெறுகிறது. தேசிய நீர் வழங்கல் சபையின் தலைவரினால் 2012 இல் பரவும் எண்ணெய் மாசுபடுதலின் பேரிடர் பயக்கவல்ல பின்விளைவுகள் பற்றிய எச்சரிக்கையானது உதாசீனம் செயப்பட்டு அதற்குப் பதிலாக அவரை பதவியில் இருந்து மாற்றும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தது (16). யாழ்ப்பாணத்தில் மக்களின் எதிர்ப்புகள் புரிந்துகொள்ளக் கூடியவகையில் பழைய ஆட்சியின் வெள்ளை வான் யுகம் 2015 தை 8ம் திகதி முடிவுக்கு வந்ததன் பின்னர் விறுவிறுப்பாக மேலெழுந்து வந்தது. MTD வால்க்கர் பிஎல்சி நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயற்படும் நோர்தேர்ன் பவர் கம்பனி (17) தன்னுடைய தனியார் மின்னுற்பத்தி நிறுவனத்தை சுன்னாகத்தில் கொண்டிருப்பதுடன் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் இலங்கையில் உள்ள ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தனது இயக்குனர் சபையிலும் கொண்டுள்ளது (18), (19). இதனால் சமீபத்தில் இந்த விடயம் பாராளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போதிலும் (20) 2008ம் ஆண்டு முதலாவது முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து மத்திய அரசியல்வாதிகளின் இந்தப் பிரச்சினை தொடர்பான செயலற்ற தன்மையை விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
 
தமிழர் இனப்படுகொலைத் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய (21) பெரும்பான்மையான தமிழர்களினால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபையின் நிலைப்பாடானது இந்தப் பிரச்சினையில் தமிழர் மத்தியில் முரண்பாடு உடையதாக ஆகிவிட்டது. ஆரம்பத்தில் 2014 மார்கழி 4ம் திகதி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நோர்தேர்ன் பவர் கம்பனி சுற்றுச்சூழல் விதிகளைக் கருத்தில் கொள்ளாது கழிவு டீசலை சுத்திகரிக்காமலேயே வெளியேற்றி வந்தது என்றும் சுன்னாகம் பிரதேசத்து நிலத்தடி நீரில் மனித ஆரோக்கியத்துக்கும், விவசாயத்துக்கும், சமூக அமைதிக்கும் பெருந் தீங்குகளை விளைவிக்கக்கூடிய விதத்தில் எண்ணெய் மாசாகக் கலந்துள்ளமைக்குச் சுன்னாகம் அனல் மின்நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிய கழிவு டீசலே காரணம் என்றும் குற்றம் சாட்டி வட மாகாண சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றி இருந்தார் (22). மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும், நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் தொடர்பான பகுப்பாய்வுகளுக்கும், சுத்திகரிப்புக்கும், குடாநாட்டின் நீர்வள மேம்பாட்டுக்கும் செலவிடுவதற்கு வடக்கு மாகாணசபையிடம் போதிய நிதி இல்லை. எனவே, வணிக நிறுவனங்களுக்குரிய சமூகக்கடப்பாடு என்ற ரீதியில் நொதேர்ண் பவர் கம்பனி மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு நிதிப்பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அத்துடன் நொதேர்ண் பவர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி 2017 இல் 10 வருட முடிவில் காலவதியாகும்போது மேலும் நீடிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து இருந்தார். ஆயினும் 2 மாதத்தின் பின்னர் அமைச்சரின் நிலைப்பாடு மிகவும் மாறி இருந்ததுடன் யுத்த காலத்தில் இடம் பெற்ற விமானக் குண்டுவீச்சே நீர் மாசடைதலுக்கு பிரதான காரணம் என்று குற்றம் சாட்ட தொடங்கியதுடன் நோர்தேர்ன் பவர் கம்பனி செயற்பாடுகளை தொடங்கமுன் இயங்கிய அக்ரிகோ கம்பனியின் மின்னுற்பத்தி தொழிற்சாலை மீதும் மேலதிக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் (23). 2015 மாசி 12 இல் நோர்தேர்ன் பவர் கம்பனி தங்களுக்கு எதிரான தவறான தகவல் பரப்புரையை கண்டித்ததற்காகவும் நீர் மாசடைதலுக்கு எதிரான போராட்டங்கள் அரசியல் நோக்கம் உடையவை என்று தெரிவித்தமைக்காகவும் திரு ஐங்கரநேசனை பாராட்டி இருந்தது (24).  2015 பங்குனி 7 இல் அவர் மாகாண சுகாதார அமைச்சருடன் இணைந்து சுண்ணாகம் நிலத்தடி நீரில் நச்சுப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் விழிப்புணர்வு என்ற பெயரில் சிலர் கிணற்று நீரில் மிதக்கும் கல்சிய வெண் பொடிப்படிவுகள் மற்றும் தூசிப் படலத்தையும்கூட எண்ணெய் மாசு என அப்பாவிப் பொதுமக்களைச் சந்தேகம் கொள்ள வைத்துள்ளனர் என குற்றம் சாட்டியும் அறிக்கை ஒன்றை வட மாகாண சபைக்கு சமர்ப்பித்து இருந்தார் (25). குறிப்பாக இந்த நேரத்தில் திரு ஐங்கரநேசன் நோர்தேர்ன் பவர் கம்பனிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றாக விலக்கியிருந்தார் என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
 
இதனால் மக்கள் மற்றும் எதிர் காலச் சந்ததியினரின் நன்மை கருதி எந்த வித பக்கச் சார்பு மற்றும் நலன் முரண்பாடுமற்ற நிலையில் இந்தப் பிரச்சினையின் பின்னணியில் உள்ள உண்மையையும் விஞ்ஞானரீதியான விடயங்களையும் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. முதுகெலும்பு இல்லாத அநாமதேய எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பதிலளிப்பது எனது பழக்கம் இல்லை என்றாலும் இந்தக் கட்டுரையின் ஏற்புடைமையை உறுதி செய்வதற்காக ஈழநாட்டுக்காரன் என்ற புனைபெயரில் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சாகாவினால் எனக்கும் யாழ் மருத்துவச் சங்கத்துக்கும் சேறு பூசும் வகையில் வெளியிடப்ப்பட்ட பல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கட்டுரைக்கு (26), (27) பதிலளிக்க விழைகிறேன். முதலாவது குற்றச்சாட்டாக கடந்த 30 வருட காலமாக வன்னியில் தமிழ் மக்கள் இறந்து கொண்டு இருந்த போதும் யாழ் மருத்துவச் சங்கம் பொதுமக்களின் பிரச்சினைகளில் மௌனமாக இருந்ததுடன் மருத்துவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அவர்களுடைய உத்தியோகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நியாயப் படுத்தி வந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது மருத்துவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அவர்களுக்கு ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் ஒரு போதும் பொது மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் மௌனமாக இருந்தது இல்லை என்பதே இந்தக் குற்றச்சாட்டுக்கு எனது பதிலாகும். உண்மையில் 2009-10 காலப் பகுதியில் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்ட முகாம்களில் இருந்த தமிழரின் அவலநிலைக்கு சார்பாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதன் காரணமாக 13 மாதங்கள் சம்பளமும் இன்றி வேலையால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்தேன் (28). உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தினால் குற்றம் அற்றவன் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரே மீண்டும் வேலைக்குச் சேர்க்கப்பட்டேன். மேலதிகமாக 2011 இல் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியம் அளித்து இருக்கிறேன் (29). யாழ் மருத்துவச் சங்கமானது 2013 இல் இருந்து மாதம் தோறும் யுத்தத்தில் இருந்து தேறிவரும் மிகவும் ஊறுபடத்தக்க நிலையில் உள்ள சமுதாயங்களை இலக்கு வைத்து விசேடமாக வன்னிப் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம்களை நடாத்தி வருகிறது. இரண்டாவது குற்றச்சாட்டு தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைத்து நான் வட மாகாண சுகாதார செயலாளர் பதவியை நாடிச்சென்றதாகவும் நான் இலங்கை நிர்வாக சேவை (SLAS) தகுதி பெறாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் இதனை மனதில் வைத்துக் கொண்டு மாகாண சுகாதார அமைச்சரை பழி வாங்குவதற்கு இந்த நீர் மாசடைதல் பிரச்சினையை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான உண்மையான விபரங்கள் பின்வருமாறு.
 
2013 இல் வட மாகாண சபை உருவாக்கப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பங்காளிக் கட்சித் தலைவர்கள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் என்னுடன் தொடர்பு கொண்டு வட மாகாண சபையின் சுகாதார செயலாளராக என்னை சேவையாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நான் ஏற்றுக் கொண்டு எனது சுய விபரக் கோவையை மின்னஞ்சல் மூலமாக வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சருக்கு அனுப்பி இருந்தேன். பின்னதாக வட மாகாண சபை அதிகாரிகளால் எந்த ஒரு பதவி நியமனத்தையும் முன்னைய ஆளுநர் அனுமதிக்கவில்லை என்பதை அறிந்துகொண்டேன். மிகவும் அண்மைக் காலத்தில் முதலமைச்சர் சுகாதார செயலாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடுவதாக எனக்கு மீண்டும் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மின்னஞ்சல் மூலமாக எனது சுய விபரக் கோவையை மாகாண சுகாதார அமைச்சருக்கு ஒரு பிரதியுடன் அனுப்பினேன். மற்றப்படி நான் எந்த அரசியல்வாதிக்குப் பின்னாலும் சென்று இந்தப் பதவிக்கு என்னை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. நான் இந்தப் பதவியை வகிப்பதற்கு பட்டப் பின் படிப்பு தராதரங்களுடன் முழுமையாக தகுதி பெற்று இருப்பதுடன் இலங்கை நிர்வாக சேவை (SLAS) தகுதி எனக்கு தேவைப் படாது. உண்மையில் வட கிழக்கு மாகாணத்தின் முதலாவது சுகாதார செயலாளராக பதவி வகித்த வைத்திய கலாநிதி C.S. நச்சினார்கினியன் இலங்கை நிர்வாக சேவை (SLAS) தரமற்று மருத்துவத் துறையில் தரம் பெற்று இருந்தார். மத்தியில் உள்ள சுகாதார செயலாளர் பதவியானது பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் இலங்கை நிர்வாக சேவை (SLAS) தரமற்று மருத்துவத் துறையில் தரம் வாய்ந்த அதிகாரிகளினால் நிர்வகிக்கப் பட்டது. நான் ஏற்கெனவே மருத்துவ நிபுணர் தரத்தில் இருப்பதுடன் செயலாளர் பதவிக்கு என்னை நியமனம் செய்வது எனது ஊதியத்தை அதிகரிக்காது. பட்டப் பின் படிப்பு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் எனது ஈடுபாட்டுடன் நான் கொழும்பில் சௌகரியமாக இருந்த போதிலும் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்தமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக வட மாகாணத்தில் எனது துறையைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிபுணரும் வேலை செய்யவில்லை என்பதுடன் இரண்டாவதாக சுகாதாரத் திட்டமிடுதலில் எனது நீண்ட அனுபவம் யுத்தத்தின் விளைவுகளில் இருந்து தேறிவரும் ஒரு மாகாணத்துக்கு பயனுள்ள சொத்தாக இருந்திருக்கும்.
 
எனக்கு இந்தப் பிரச்சினையில் எந்த நலன் முரண்பாடும் இல்லை என்பதை தெளிவாக்கிய நிலையில் திரு ஐங்கரநேசன் அவர்களினால் நியமிக்கப்பட்ட "நிபுணர் குழு " என்றழைக்கப் படுபவர்களின் பொதிவையும் அறிக்கைகளையும் பின்வரும் காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. முதலாவதாக "நிபுணர்கள் " என்று நியமிக்கப்பட்ட எவருமே எண்ணெய் கழிவுகளினால் நீர் மாசடைதல் பற்றி முன் அனுபவம் எதுவும் இன்றி இருப்பதுடன் திரு ஐங்கரநேசன் அவர்களினால் எந்தவித கட்டளைவிதிகளும் (criteria) இன்றி தனிப்பட்ட முறையில் பொறுக்கி எடுக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். நிபுணர்கள் தங்களுடைய துறைகளில் நிபுணர்களாக இருந்த போதிலும் பெரும்பாலானோர் பிரச்சனைக்கு தொடர்பு உடைய துறையில் நிபுணத்துவம் அற்று இருக்கிறார்கள். உதாரணமாக மருத்துவத் துறையில் மருத்துவ நிர்வாகத்தில் அனுபவம் உடையவர் நியமிக்கப் பட்டிருக்கிறார். ஆனால் குடிநீரில் எண்ணெய் மாசடைதலானது மிகவும் பொருத்தமாக சூழல் மருத்துவம் அல்லது நஞ்சியல் அல்லது நோய்பரவலியலில் வல்லுனரான ஒரு மருத்துவரினால் ஆராயப் பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக குழுவின் உறுப்பினர்கள் நலன் முரண்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை மின்சார சபை பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு பிரச்சினையை ஆராய இலங்கை மின்சார சபையுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவரும் ஒருவர் நிபுணர் குழுவில் நியமிக்கப் பட்டு இருக்கிறார். தனியார் மின்னுற்பத்தி கம்பனி சுற்றுச்சூழல் விதிகளை மீறி இருந்தாலும் இலங்கை மின்சார சபையே அவர்களைப் பணியில் அமர்த்திவிட்டு மேற்பார்வை செய்யாத தவறுக்கு பொறுப்பாளி ஆவார்.  மூன்றாவதாக நிபுணர்கள் குழுவுக்கு ஆய்வு நோக்கம் மற்றும் விசாரணை வரம்பு (terms of reference) எதுவும் இருக்கவில்லை என்பதுடன் ஆய்வுப் படிமுறையானது முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கவில்லை. நான்காவதாக ஆய்வு மாதிரிகள் எடுக்கப்பட்ட முறையானது தவறானது என்பதுடன் மாதிரிகளின் அளவானது போதுமானதாக இல்லை. தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 150 கிணறுகள் பரிசோதிக்கப்பட்டு 109 கிணறுகளில் எண்ணைக் கழிவுகள் காணப்பட்டன. மேலும் 50 கிணறுகளில் ஈயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 4 கிணறுகளில் அதிகளவு செறிவில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திரு ஐங்கரநேசனின் குழுவினர் இந்த ஆய்வு பெறுபேறுகளுக்கு சவால் விடுக்க வேண்டுமாயின் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் பரிசோதிக்கப்பட்ட அதே கிணறுகளை பரிசோதிக்க முயற்சி எடுத்திருக்க வேண்டும். மேலும் ஆய்வுப் புள்ளிவிபரவியல் மற்றும் நிகழ்தகவு தொடர்பான அடிப்படை அறிவு உள்ள எவரும் முன்னைய ஆய்வு முடிவுகளை தவறு என்று நிருபிப்பதற்கு அதைவிட அதிகளவு கிணற்று மாதிரிகள் எடுக்கப் படவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான்கு சுகாதார வைத்திய பிரிவுகளைச் சேர்ந்த பரந்துபட்ட புவியியல் பிரதேசத்தில் 30 கிணறுகளில் ஆய்வு மாதிரிகள் எடுக்கப்பட்டபோது நான் நேரடியாக அங்கே பிரசன்னமாகி இருந்ததுடன் அந்தக் கிணறுகளில் எண்ணெய் மாசு இருப்பது கண்ணுக்கு தெரியக் கூடிய வகையிலும் எண்ணெய் மணம் வீசுவதை உணரக்கூடியதாக இருந்ததுடன் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு அனைத்து மாதிரிகளிலும் எண்ணையும் கிரீசும் அதிகளவில் இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஐங்கரநேசனின் குழுவினரின் அறிக்கைகளை முற்றாக நிராகரிப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லாமல் செய்து விட்டன. இவ்வாறான முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில் எண்ணைக் கழிவுகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட இதே போன்ற சூழல் மாசடையும் நிலைமையை எதிர்கொண்ட நாடுகளில் இருந்து சர்வதேச நிபுணர்களை தருவிக்ககூடிய வல்லமையை கொண்டதாகவும் பல்தேசியக் கம்பனிகளினால் இலகுவில் சூழ்ச்சித்திறத்துடன் கையாள முடியாத ஒரு சர்வதேச நிறுவனத்தின் உதவியை கோரிப் பெற்றுக் கொள்வதே மதிநுட்பமான இலக்கை நோக்கிய செயலாக இருக்கும். யாழ் மருத்துவச் சங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற வகையில் நான் ஏற்கெனவே இந்த செயலை உலக சுகாதார ஸ்தாபனத்தை ஒரு முறையான ஆய்வை இந்த விடயத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதன் மூலமாக ஆரம்பித்துள்ளேன். ஆயினும் இந்தப் பிரச்சினையில் உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடுவதற்கு மத்திய அல்லது மாகாண அரசாங்கத்தில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும் என்பதுடன் என்னுடைய கடிதத்தின் பிரதிகளை பெற்றுக்கொண்ட மாகாண மற்றும் மத்திய அதிகாரிகள் எனது வேண்டுகோளுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 
மறுபுறமாக பார்க்கும் போது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் குறைகளையும் நடவடிக்கைகள் இந்த விவகாரங்கள் தீர்க்கப்படும் வரை தாமதிக்கப்படக்கூடாது. மாசி 20, 2015 இல் வட மாகாணத்தின் மாண்புமிகு முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டிய 6 குறை களையும் நடவடிக்கைகளை நான் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியுள்ளேன் (30).  பல தடவை வேண்டுகோள் விடுத்தும் இன்று வரைக்கும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் அதிக செறிவில் ஈயம் காணப்பட்ட கிணறுகளை அடையாளம் காட்டவில்லை என்பதே மிகவும் கவலை அளிக்கக் கூடிய அம்சமாக இருக்கிறது. இந்தக் கிணறுகளை சூழ வசிப்பவர்கள் ஈயம் கலந்த நச்சு நீரை கடந்த 5 வருடங்களாக பருகிக் கொண்டிருக்கலாம் என்பதுடன் ஈய நஞ்சூட்டலுக்கான குணம்குறிகள் உடலில் தோன்றுவதற்கு முன்னரே குருதியில் உள்ள ஈயத்தின் அளவைப் பரிசோதிப்பதன் மூலமாக ஈய நஞ்சூட்டலை இலகுவாக நிரூபிக்க முடியும். ஈய நஞ்சூட்டலுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் பட்டால் அது பல்தேசியக் கம்பனி பெருந்தொகையை நட்டஈடாக செலுத்துவதற்கு இட்டுச் செல்லும் என்ற காரணத்தினால் இந்தக் கிணறுகள் தொடர்பான விபரங்கள் சூழ்ச்சியினால் மறைக்கப் பட்டுள்ளன என்று நம்புகிறேன்.
 
சில வாரங்களுக்கு முன் இந்த விவகாரம் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சர் CMR கனடிய வானொலிக்கு வழங்கிய செவ்வியை கேட்டு இருந்தேன் (31). ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த செவ்வியில் பல விடயங்கள் திரித்துக் கூறப்பட்டு இருந்தது. முதலாவதாக அவர் இந்தப் பிரச்சினை ஐம்பதுகளில் தொடங்கியதாக தெரிவித்து இருந்தார். அந்தக் காலப் பகுதியில் இலங்கை மின்சார சபையின் கழிவுப் பொருட்கள் தொடரூந்து வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணடித் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டதை இலங்கை மின்சார சபையில் இருந்து இளைப்பாறிய அதிகாரிகளுடன் சரிபார்த்து உறுதி செய்துள்ளேன். இரண்டாவதாக சுகாதார அமைச்சர் யாழ் பல்கலைகழகத்தில் எண்பதுகளில் எண்ணெய் கழிவுகளினால் நீர் மாசடைதல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவத்திரிந்தார். சுயாதீனமாக இதை நான் சரிபார்த்த போது 2008 இலேயே நீர் மாசடைதல் தொடர்பான முதலாவது முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது என்பதுடன் சம்பவங்கள் நடந்த காலவரிசையை திரித்துக் கூறுவது 2007 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த தனியார் கம்பனிக்கு உதவும் செயல் ஆகும். மேலும் அவர் எண்ணெய் கழிவுகள் கோப்பாய்யையும் தெல்லிபளையையும் அடைந்து விட்டதாக நபர்கள் பொய் வதந்தி பரப்புவதாக தெரிவித்து இருக்கிறார். எண்ணெய் கழிவுகள் கோப்பாயையும் தெல்லிபளையையும் அடைந்து விட்டது என்பது பொய் வதந்தி அல்ல என்றும் 2015 மாசியில் மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகளினால் இந்த இடங்களில் எடுக்கப்பட்ட கிணற்று நீர் மாதிரிகள் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு எண்ணெய் கழிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நான் ஆணித்தரமாக தெரிவிக்கிறேன். மேலும் அவர் நீர் மாசடைதல் மலட்டுத்தன்மைக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவை பாதிக்கும் என்று சிலர் மிகைப்படக் கூறுவதாக தெரிவித்து இருக்கிறார். ஈய நஞ்சூட்டல் மலட்டுத்தன்மைக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவில் பாதிப்புகளுக்கும் இட்டு செல்லலாம் என்பதை நான் உறுதிப் படுத்துவதோடு இந்த உண்மையானது எந்த ஒரு தரமான நச்சியல் மருத்துவ நூலிலும் உறுதி செய்யப்படலாம். கொழும்பு டெலிக்ராப் இணைய தளத்தில் புவி என்ற பெயரில் தனது கருத்துகளை பதிவு செய்து வரும் அவருடைய உறவினர் பொதுமக்கள் தங்களுடைய கிணற்றினுள் தாங்களே கழிவு எண்ணையை ஊற்றி இருக்கலாம் என தெரிவித்து மின்னஞ்சலை அனுப்புவதுடன் அதன் மூலமாக சுன்னாகத்தை சூழ உள்ள மக்கள் கடுமையான உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டு இருப்பதாக எங்களை நம்பவைக்க எத்தனிக்கிறார். பல்தேசியக் கம்பனியை காப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சிகள் எல்லாம் நீர் மாசடைதலினால் பாதிக்கப் பட்டுள்ள ஏழை மக்களின் மீதான அக்கறைக்காக நிறுத்தப்படும் என்று நம்புகிறேன்.
 
25 சித்திரை 2015 இல் வட மாகாணத்தின் முதலமைச்சரை சந்தித்து இந்த விடயத்தை கலந்துரையாடுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் கம்பன் கழகத்தினால் பெரும் தலைவர் என்ற பட்டம் வழங்கப்பட்டவர் (32) என்பதுடன் அவர் முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற காலத்தில் இருந்து அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டு நடக்கும் ஒரு ஆட்சியாளராகவும் பெருந்தகை போல ஆளும் ஒரு இராம இராச்சியத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலை சிறந்த இதிகாசமான இராமாயணத்தில் மன்னர் இராமர் அவருடைய மதியூக அமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று வந்த போதிலும் நீதியான முறையில் ஆட்சி செய்வதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாலையும் சாதாரண குடிமகனைப் போல உடை அணிந்து மாறுவேடத்தில் நகர் வலம் வந்து பொது மக்களின் நாடித்துடிப்பை அறிந்தார் என குறிப்பிடப் பட்டு இருக்கிறது (33). எமது முதலமைச்சரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு சென்று சுன்னாகத்தில் உள்ள கிணறுகளைப் பார்வை இட்டு அவதிப் படும் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து கொள்வதுடன் அடிப்படைத் தேவையான குடிநீர் இன்றி தவிக்கும் மக்களின் எதிர்வினையை உணவு விடுதியில் கரப்பான் பூச்சியை காணும் பெண்களின் எதிர்வினையுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் (34) என்று விரும்புகிறேன்.
 
இறுதியாக மத்தியில் அல்லது மாகாணத்தில் யார் பதவியில் இருந்தாலும், இலங்கையின் வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும் பல்தேசியக் கம்பனிகளின் கூட்டாண்மைக்குரிய உலகத்தில் சூழலும் ஏழை மக்களும் சுரண்டப் படுவது தொடரவே செய்யும். ஆதலால் நான் இந்த சுரண்டலுக்கும் அநீதிக்கும் எதிராக எழுந்து நிற்பதற்கு அனைத்து நியாயமாக செயற்படும் மக்களையும் என்னுடன் கரம் கோர்க்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
"உலகம் ஒரு ஆபத்தான இடமாக இருக்கிறது, கொடியவர்களின் காரணமாக அல்ல; அதைப் பற்றி ஒன்றும் செய்யாமல் இருப்பவர்கள் காரணமாகத் தான்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் MBBS, PGD (குடித்தொகையியல்), MSc, MD (சமுதாய மருத்துவம்), FCCP
சபையினால் உறுதி செய்யப் பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்
தலைவர், யாழ் மருத்துவச் சங்கம்
ஆனி 3, 2015

 

 

References:

1.     http://www.usnews.com/opinion/blogs/clark-judge/2013/02/19/the-next-big-wars-will-be-fought-over-water

2.     http://www.theguardian.com/environment/2014/feb/09/global-water-shortages-threat-terror-war

3.     http://www.un.org/waterforlifedecade/scarcity.shtml

4.     http://www.unwater.org/publications/publications-detail/en/c/204294

5.     http://www.unwater.org/worldwaterday/about/en/

6.     http://www.un.org/waterforlifedecade/water_and_sustainable_development.shtml

7.     http://environment.nationalgeographic.com/environment/freshwater/pollution/

8.     http://www.china.org.cn/english/news/186247.htm

9.     http://www.acton.org/pub/religion-liberty/volume-2-number-5/multinational-corporations-third-world-predators-o

10.                        http://oneislandtwonationsblogspotcom.typepad.com/blog/2015/03/ecological-disaster-in-vallikamam-north-sri-lanka.html

11.                        http://www.lankatruth.com/home/index.php?option=com_content&view=article&id=6454:rathupaswala-factory-shifted-&catid=42:smartphones&Itemid=74

12.                        http://www.ceylontoday.lk/59-39888-news-detail-the-story-of-the-rathupaswala-incident.html

13.                       http://www.lawandsocietytrust.org/PDF/resource/Winning%20Submission%20Call%20for%20Papers%20-%20Ratupaswala.pdf

14.                        http://www.dailynews.lk/?q=local/president-orders-compensation-weliveriya-victims

15.                        http://dailynews.lk/?q=political/parliament-6

16.                        https://www.colombotelegraph.com/index.php/ecological-disaster-in-vallikamam-north-sri-lanka/

17.                        http://www.mtdwalkers.com/walker-sons-co-ltd

18.                        http://democracyandclasstruggle.blogspot.com/2014/12/sri-lank-nirj-deva-mep-and-crimes.html

19.                        http://www.sundaytimes.lk/150301/columns/former-vip-mp-opens-tax-files-now-138189.html

20.                        http://www.ceylontoday.lk/51-89810-news-detail-chunnakam-ground-water-contaminated.html

21.                        https://www.colombotelegraph.com/index.php/full-text-npcs-resolution-on-genocide-of-sri-lankan-tamil/

22.                        http://www.pathivu.com/news/35836/57/d,article_full.aspx

23.                       http://www.acmc.lk/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/

24.                        http://www.news.lk/news/business/item/6149-wrong-steps-could-aggravate-jaffna-water-contamination-issue-northern-power

25.                        http://www.pathivu.com/news/39047/57/d,article_full.aspx

26.                        http://www.battinaadham.com/2015/04/blog-post_758.html#

27.                       http://kathiravan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A123/

28.                        https://sunandadeshapriya.wordpress.com/2009/12/09/tamil-doctor-on-the-mat-for-expressing-private-opinion/

29.                        https://llrclk.files.wordpress.com/2011/02/submission-murali-vallipuranathan.pdf

30.                        https://www.colombotelegraph.com/index.php/on-water-pollution-issue-in-chunnakam/

31.                        https://www.youtube.com/watch?v=0XhluWsel4I&feature=youtu.be

32.                        http://www.omlanka.com/kamban-festival.html

33.                        http://ramalila.blogspot.com/2007/03/chapter-15-return-to-ayodhya.html

34.                        https://www.colombotelegraph.com/index.php/drinking-water-contamination-issue-in-jaffna-reactions-and-responses/

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120463/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.