Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்காலத்துக்குத் திரும்பும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்காலத்துக்குத் திரும்பும் இலங்கை
[ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:10.34 AM GMT ]
gota_galagoda_001.jpg
“மூன்றாம் உலகப் போரில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. நான்காம் உலகப் போரில் பயன்படுத்தப் போகும் ஆயுதங்கள் எவை எவை என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

ஆனால், ஐந்தாம் உலகப் போரில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது, இப்போதே தெளிவாகத் தெரிகிறது. அந்தப் போரில் கற்களைத் தான் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் போகிறோம்....."

உலகின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர் வேதனையுடன் சொன்ன வார்த்தைகள் இவை.

ஓரிரு வாரங்களுக்கு முன்தான் இதைப் படித்தேன் என்றாலும், நான் ஒரு ஞாபக மறதிப் பேர்வழி. அதற்குள் அந்த அறிஞரின் பெயர் மறந்துவிட்டது! (ஐன்ஸ்டீன்?)

மனித இனமே அழிந்துவிடும் ஆபத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்குள் இருக்கும் அழிவுசக்திக்கு மட்டுமே கொம்பு சீவுகிறான் மனிதன். இதன்விளைவாக, அவன் மீண்டும் கற்காலத்துக்கே திரும்ப நேரிடும் - என்பதை இதைவிட அழகாக எவரும் எச்சரிக்க முடியாது.

ஒட்டுமொத்த உலகமும் இப்படி கற்காலத்துக்குத் திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால், தன்னுடைய தாறுமாறான நடவடிக்கைகளால், உலகை முந்திக்கொண்டு, கற்காலத்துக்கு இலங்கை திரும்பிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மைத்திரிபால அதிபரானதிலிருந்து, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை வரிசையாக விசாரித்து வருகிறது, இலங்கை அரசின் நிதி மோசடி தடுப்புப் பிரிவு. (இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையைத் திசைதிருப்பும் நாடகத்தில் இதுவும் ஒரு காட்சி.)

அரசாங்கப் பணத்தை எப்படியெல்லாம் ராஜபக்ச குடும்பம் சூறையாடியது என்பது குறித்த இந்த விசாரணை நீண்டுகொண்டே போகிறது. இதுவரை, பசிலை மட்டும்தான் சிறையிலடைக்க முடிந்திருக்கிறது மைத்திரிபால அரசால்!

இந்தவாரத் தொடக்கத்திலேயே, மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தியிடம் 2 மணிநேரம் விசாரணை. இந்தத் தகவல் வெளியானதும் கொதித்துப் போய்விட்டது மகிந்த தரப்பு.

"இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் நிதி மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் யார்யார் என்கிற பட்டியலை நாமல் ராஜபக்ச எடுத்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மகிந்த ராஜபக்ச பிரதமர் ஆனவுடன், அந்த அதிகாரிகள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்" என்று பாசத்தோடு எச்சரித்திருக்கிறது மகிந்தனின் கைத்தடி ஒன்று. அந்தக் கைத்தடி, மாகாண சபை ஒன்றின் அமைச்சர் பதவியில் வேறு இருக்கிறது.

சாம பேத தான தண்டம் என்பது உருட்டல் மிரட்டல்களின் வரிசைக் கிரமம். பௌத்த சிங்களப் பொறுக்கிகள் எடுத்தவுடன் தண்டத்துக்குப் போய்விடுகிறார்கள். அதைத்தான் இந்த 'கல்லால் அடிப்போம்' மிரட்டல் சொல்லாமல் சொல்கிறது. (விசாரணை அதிகாரிகளைக் கல்லால் அடிக்கப் போவதாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள் யுவர் ஹானர்! அவர்களை ஏவிவிடும் மைத்திரியையும் ரணிலையும் எதனால் அடிப்பீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது யுவர் ஹானர்!)

அதிகாரிகளுக்கு மட்டுமல்ல.... ஓரளவேனும் நியாயம் பேசும் பௌத்த பிக்குகளுக்கும் இதே கதிதான்! சென்ற ஆண்டு, கோத்தபாய ராஜபக்சவின் அதிகாரபூர்வ அடியாளான 'பொது பல சேனா' பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களையும் குறிவைத்துத் தாக்கியபோது, அதைத் துணிவுடன் கண்டித்த பௌத்த பிக்கு, வத்தரேக விஜித தேரர். கோத்தபாயவின் அடியாட்களால் கடத்தப்பட்டு, அடி உதை வாங்கிக்கொண்டு அவர் திரும்பி வந்ததெல்லாம் பழங்கதை.

இப்போது விஜித தேரர் - இரண்டாம் பாகம் தொடங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன், தொடர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் முஸ்லிம்களுக்கு நியாயம் கேட்க செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் விஜித.

கூடியிருந்த செய்தியாளர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அரங்குக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடினார்கள், பொதுபல சேனாவின் பிக்குகள். நமக்கெதற்கு வம்பு - என்பதைப்போல, அந்த வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்தார்கள் மைத்திரியும் ரணிலும்!

செய்தியாளர் சந்திப்பில் நடத்திய வெறியாட்டத்தை விட, விஜித தேரருக்கு பொதுபல சேனா விடுத்திருக்கும் எச்சரிக்கைதான் மிகவும் கடுமையானது. "விஜித இதேபோன்ற தேசத் துரோக நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால், மகாவலி நதியில் முக்கிவிடுவோம்" என்பது விஜிதவுக்கு பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் வெளிப்படையாகவே விடுத்திருக்கும் மிரட்டல்.

சிங்கள அரசியலின் இழிவான வரலாற்றை அறிந்த எவரும், மகாவலி நதியின் வரலாற்றை மறந்திருக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இடதுசாரி இளைஞர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.

 'அடக்கப்பட்டனர்' என்று சொல்வதுகூட தவறு.... உண்மையில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். அப்போது 'காணாமல் போன' சுமார் அறுபதாயிரம் இளைஞர்களில் பலரது உடல் மகாவலி நதியில்தான் வீசப்பட்டிருந்தது. சிங்களப் பொறுக்கிகளின் நதிக்கரை நாகரிக லட்சணம் இது!

மகாவலி நதியை, மகாவலி கங்கை - என்றுதான் அழைக்கிறார்கள் சிங்களவர்கள். கங்கை என்றாலே பிணங்கள் மிதக்கும் நதி என்பதை அங்கேயும் நிலைநாட்ட முயற்சிக்கிறார்களோ என்னவோ!

இப்போது, மகாவலியை நினைவூட்டி விஜித தேரருக்கு ஞானசார தேரர் விடுத்திருக்கும் எச்சரிக்கை ஒரு பகிரங்க கொலை மிரட்டல். ரணிலும் மைத்திரியும் "நல்லாட்சி" நடத்துவதிலேயே கவனம் செலுத்துவதால் இதைக் கண்டுகொள்ளவில்லை. (மைத்திரியின் ஆழ்ந்த மௌனம் மெய்சிலிர்க்க வைப்பதாக டுவிட்டர்ல ஒரு கோடு போடுங்க மோடி! இதைக்கூட செய்யாட்டா, அப்புறம் நட்புநாட்டுக்கு எப்படித்தான் ரோடு போடுறது!)

கோத்தபாய கண்ணில் இருக்கும் அதே கொலைவெறி, இந்த ஞானசார தேரர் கண்ணிலும் இருப்பதை யாராவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு சிங்களப் படத்துக்கு அனிருத் இசையமைத்து, 'கொலவெறி' பாடலை ஞானசாரரையும் கோத்தபாயவையும் பாடவிட்டால், படம் எக்குத்தப்பாக வசூலைக் குவிக்கும் என்பது நிச்சயம். அப்படியொரு கொலவெறி இருவர் கண்களிலும்!

சென்ற வாரம் பி.பி.சி.க்கு ஞானசாரர் கொடுத்துள்ள பேட்டி, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அடிமனத்து அபிலாஷையைப் பறைசாற்றுகிறது.

"இது சிங்களவர்களின் தேசம். இதில் வேறு எவருக்கும் உரிமையில்லை. இந்த நாட்டை, இந்தக் கலாச்சாரத்தை நாங்கள்தான் உருவாக்கினோம். அந்நியர்களான வெள்ளையர்களால்தான் வீண் குழப்பம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு, சிங்களத் தேசத்துக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறோம்" என்று, அந்தப் பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஞானசாரர்.

எந்தக் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்? 'நியாயம் கேட்பவர்கள் நிரந்தரமாகவே காணாமல் போய்விடுகிறார்களே' - அந்தக் கலாச்சாரத்தையா? மனித உடல்களை முக்கும் மகாவலி கங்கைக் கலாச்சாரத்தையா?

13 வயதுக் குழந்தையாயிற்றே என்றுகூட பாராமல், புனிதவதிகளைக் கூட்டு வன்முறைக்கு இரையாக்கினார்களே, அந்தக் கலாச்சாரத்தையா? காந்தள் மலர் மாதிரியே மலர்ந்த முகத்துடன் இருந்த எங்கள் சகோதரி இசைப்பிரியாவை அணு அணுவாகச் சிதைத்தார்களே, அந்தக் கலாச்சாரத்தையா?

காணாமல் போன மகளைத் தேடிச்சென்ற எங்கள் கிருஷாந்தியின் தாயையும், அவளது தம்பியையும் அவளுடன் சேர்த்தே புதைத்திருந்தார்களே, அந்தச் செம்மணிக் கலாச்சாரத்தையா?

எந்தக் கலாச்சாரத்தை அவர்கள் உருவாக்கிக் கிழித்தார்கள்? அந்தக் கலாச்சாரத்தைத்தான் போதிசத்துவன் போதித்தானா? புரியவில்லை.

ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிகிறது. பிரபாகரனின் தோழர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தவரை, பௌத்தப் பொறுக்கிகளின் இழிவான கலாச்சாரம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தது. எங்கள் சகோதரிகளும் எங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர், மகாவலி கங்கையில் நீர் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது எம் இளைஞர்களிடம் ஆயுதங்கள் இல்லை.... இதயம் முழுக்க கழிவுநீரை அடைத்து வைத்திருக்கும் பிக்குகள் பேசும்போது, கழிவு வாடையும் ரத்த வாடையும் சேர்ந்து வெளிப்படுகிறது.

பேட்டியை வெளியிட்ட பி.பி.சி., அகிம்சை குறித்தே அதிகம் பேசும் பௌத்தத்தைக் கடைப்பிடிக்கும் தேரர்களின் நேர்மாறான மனநிலை குறித்து வியப்பு தெரிவித்துள்ளது.

ஒரே கட்டடத்தில், கீழே பௌத்த மடம். மேலே பொதுபல சேனா அலுவலகம். கீழே இருக்கும் புத்தர் உருவச் சிலைகளின் புன்னகைக்கும், மேலே பேட்டி கொடுக்கும்போது வெறுப்பை உமிழும் பௌத்த பிக்குகளின் நச்சு வார்த்தைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை அவதானித்து செய்தியாக்குகிறது பி.பி.சி.

இது சிங்களவர்களின் தேசம் - என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வரலாற்று மோசடி. தமிழினத்தின் மூதாதைகளான நாகரும் இயக்கரும் மட்டுமே வாழ்ந்த, அவர்கள் மட்டுமே ஆண்ட அந்தத் தீவில், வந்தேறிகளான சிங்களவர்கள் எப்படிக் கால் பதித்தார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக ஒரு சித்திரம் போலவே வரைந்து வைத்திருக்கிறது வரலாறு. அதை அழித்து எழுத, பொதுபல சேனாவால் மட்டுமல்ல, உலகின் எந்த சக்தியாலும் இயலாது.

பொதுபல சேனா போன்ற அமைப்புகள், இனப்படுகொலை செய்த-செய்கிற கொடியவர்களைக் காப்பாற்றத் தலைகீழாக நிற்கின்றன. உலகெங்குமிருக்கும் இனப்படுகொலைக் குற்றவாளிகளுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன.

மியான்மரில், ரோஹிங்கிய பிரிவு முஸ்லிம் மக்களைக் கொன்று குவிக்கும் '969' என்கிற கொலைவெறி இயக்கத்தின் தலைவர் ஷின் விராத்து, சென்ற ஆண்டு பொதுபலசேனா மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோதே சேனாவின் இந்தக் கோர முகம் அம்பலமாகிவிட்டது.

'பௌத்தம் ஆபத்தில் உள்ளது.... 

அதைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' 

என்பது பொதுபல சேனாவின் இனவெறி வாதம்.

தமிழ் மக்களை எல்லாச் சமயத்திலும் உயிரச்சத்துடனேயே இருக்கச் செய்கிற இவர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் உடைமைகளுக்கும் நிரந்தர ஆபத்தாக இருக்கிற இவர்கள் இப்படியெல்லாம் பேத்துமாத்து வேலைகளில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல!

ஆபத்திலிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற எம் இளைஞர்கள் திருப்பி அடிக்கிற கணத்தில்தான் இவர்களுடைய வாய்ச் சவடால்கள் முற்றுப் பெறும். கடந்தகால வரலாற்றிலிருந்து இதை பலமுறை நாம் அறிய நேர்ந்திருக்கிறது. அந்தக் கணத்தைத்தான் உங்கள் ஒவ்வொருவரையும்போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த வாரத்தின் மிக முக்கியச் செய்தி ஒன்று தமிழ் ஊடகங்களின் பார்வைக்கு வராமலேயே போய்விட்டிருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொண்டாக வேண்டும்.

பெல்ஜியத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று, மனித நேய ஜனநாயக இயக்கம் (சி.டி.ஹெச்.). அந்தக் கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. மஹினூர் ஓஸ்டெமிர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

1915ல் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து, மஹினூர் தெரிவித்த முரணான கருத்துக்காகவே இந்த நடவடிக்கை.

ஆர்மீனிய மக்களை இனப்படுகொலை செய்தவர்கள், துருக்கியின் இனவெறி ஆட்சியாளர்கள். 'அதை இனப்படுகொலையாக எடுத்துக் கொள்ள முடியாது' என்று மஹினூர் சொன்னதாலேயே இந்த நடவடிக்கை.

'நடந்த இனப்படுகொலையை ஏற்க மறுப்பது, கட்சியின் அடிப்படை மாண்புகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிரானது' என்கிற நியாயமான குற்றச்சாட்டுடன் அந்த அம்மணியை நீக்கியிருக்கிறது - மனிதநேயத்தின் பெயரால் நடத்தப்படும் அந்த இயக்கம்.

ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கத் தயங்குகிற பேர்வழிகளெல்லாம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களாக இருப்பதையும், 'இனப்படுகொலை என்றெல்லாம் சொல்லக்கூடாது.. மூச்...' என்று நம்மை மிரட்டுபவர்கள் தமிழினத்தின் பிரதிநிதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள வெட்கமேயில்லாமல் முயல்வதையும் பார்த்து வெறுத்துப் போயிருப்பவர்கள் நாம்.

இன்னும் ஒருபடி மேலே போய், 'ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்' என்று தெளிவாகத் தெரிவித்ததற்காக முதல்வர் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்றெல்லாம் கூட அந்த அதிமேதாவிகள் மந்திராலோசனை நடத்திப் பார்த்தார்கள்.

இந்த இனத்தின் நல்லகாலம் - விக்னேஸ்வரன்மீது அவர்களது நகம் கூட பட முடியவில்லை.

ஆர்மீனிய இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என்று ஏற்க மறுத்தவரை கட்சியிலிருந்தே நீக்கும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் இயக்கத்தையும், தமிழினப் படுகொலையைக் கண்டிக்கும் தமிழர்களின் முதல்வரைக் கட்சியிலிருந்தே நீக்கலாமா என்று யோசித்த சமந்தகர்களையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்!

புகழேந்தி தங்கராஜ்

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.