Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்ததை எழுதுங்கள் - அறிவியல் அறிமுக தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்ததை எழுதுங்கள் ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் )

 

 

480498_10151261068171644_1937474422_n

 

மலைகள் இதழில் வெகு நாளாக ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் என நண்பர் சீனிவாசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே எளிமையாக தற்கால நடைமுறை அறிவியல் விஷயங்களை அனைவருக்கும் பயன்படுகிற வகையிலும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இருக்கிறார்
இவர் தனியாக கணிணி துறை சார்ந்த எளிமையான தமிழில் கற்றுக்கொள்கிற வகையில் சில கணிணி மொழிகளைப் பற்றிய பாடங்களை எழுதியிருக்கிறார் ( கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com  )
இன்னும் நிறைய அறிவியல் விஷயங்களுக்கு தமிழில் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமுடையவர்

மலைகள் இதழில் ஒரு அறிவியல் தொடர் எழுத வேண்டும் அது தற்போதைய தொழில் நுட்பங்களைப் பற்றிய ஒரு அறிமுகளவில் வாசகர்களுக்கு பயன்படுகிற வகையில் இங்கே தொடர்ந்து எழுத இருக்கிறார் நண்பர் சீனிவாசன்

காஞ்சீபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட சீனிவாசன் ஒரு மென்பொருள் வல்லுநர். அவருடைய மனைவி நித்யாவும் மென்பொருள் வல்லுநர். அவரும் கணிணி மொழிகளை எளிமையான தமிழில் எழுத வல்லவர்.

தற்போது மென்பொருள் பணிநிமித்தமாக சீனிவாசனும் அவர் குடும்பமும் லண்டனில் இருக்கிறார்கள்

இனி சீனிவாசனின் எளிய தமிழில் அறிவியல் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்

சிபிச்செல்வன்

மலைகள் ஆசிரியர்

 

 

•••

எழுத்து. மனித இனம் தான் பெற்ற அறிவை, பிறருக்கு தருவதற்காகக் கண்டுபிடித்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. ஒலியானது வரி வடிவம் பெற்ற பின்புதான், தலைமுறைகளைத் தாண்டி வாழும் சிறப்பு பெற்றது. இயல்பாகவே மனிதருக்கு தாம் அறிந்தவற்றை பிறருக்கும் தரும் பரந்தமனம் உள்ளது. அதன் வெளிப்பாடுகளே இன்றும் நாம் படித்த புத்தகம், பார்த்த திரைப்படம், கேட்ட பாடல் போன்றவை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம்.

பனை ஓலை காலங்களைத் தாண்டி, காகித வடிவம் பெற்றதுமே, உலகினில் பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது. உலகின் எல்லா அரசியல் புரட்சிகளுக்குப் பின்னும் சிறந்த எழுத்தாளர்களும், புத்தகங்களுமே இருந்து வருகின்றன. தமிழிலும் எல்லா அறிவுகளும் புத்தகவடிவில் கிடைத்து வந்தன. போனதலைமுறை வரை.

சங்ககால இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள், சோதிட, வானியல் நூல்கள், சித்தமருத்துவம், விவசாயம், ஆன்மீகம், சிறுதொழில்கள் என பல்வேறு துறையினரும் தம் துறைசார் படைப்புகளை உருவாக்கி, நூல்களாக வெளியிட்டு வந்தனர். ரேடியோ ரிப்பேர் செய்வது முதல் நீச்சல், வீணை, காதல் வரை அனைத்தையும் சொல்லித்தரும் நூல்கள் பெருமளவில் வந்தன. எங்கோ உள்ள ரஷ்யாவில் எழுதப்பட்ட பல்வேறு உயர்தர அறிவியல் நூல்கள், மிர் பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு, எல்லா சிற்றூர்களின் கிளை நூலகங்களையும் சென்று அடைந்தன.

உலக அரசியல் முதல் உள்ளூர் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தையும் தமிழிலேயே பெறச் செய்தனர் போன தலைமுறையினர். ஆனால் இன்றைய இளைய இணைய தலைமுறைக்கு, இணையத்தில் கிடைப்பது என்ன?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிய போது, சில அதிர்ச்சியான உண்மைகளை அறிந்தேன்.
‘நான் ஏன் தமிழைக் கற்றுக் கொள்ளவேண்டும்? உலக அறிவு அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. என் அறிவுத் தேவைகளை தமிழ் தீர்ப்பதில்லை. நூலகங்களில் குவிந்து கிடக்கும் போன தலைமுறை நூல்கள் இணையவாசிகளான எங்களுக்கு கிடைப்பதும் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு அவை என்றும் கிடைக்கப் போவதே இல்லை.’

‘இணையத்தில் இல்லாத எந்த ஒரு விஷயமும் எங்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை தான். எளிதில் பெற இயலாமல் எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி, நூலகங்களிலும், புத்தகக்கடைகளிலும் ஒளிந்து கிடைக்கும் அறிவைப் பெற இங்கு தேவை மிகவும் குறைவு. அறிவியல், இலக்கிய ஆய்வு செய்வோர் இவற்றை தேடி எடுத்து அவற்றை நுகர முடியும். இன்றைய நவீனத் தேவைகளுக்கு, தேடுபொறியில் தேடி கிடைப்பவை மட்டுமே மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.’

‘உண்மைதான். ஆனாலும் இப்போது தமிழில் நிறையபேர் எழுதுகிறார்களே.!’

‘ஆம். இணையத்தில் இப்போது எழுதுபவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சினிமா. அரசியல். இவற்றிலும் இவர்கள் சாதிச் சண்டைகள், சினிமா கதாநாயகரைத் தொழும் அடிமைத்தனங்களே அதிகம். கொஞ்சம் இலக்கியம் வகையான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கள். அறிவு சார்ந்து எழுதுபவர்கள் 1 அல்லது 2 சதம் மட்டுமே. எங்கே தமிழில் ஒரு கணிணியை Assemble செய்வது பற்றியோ, ஒரு பைக் டயருக்கு பங்சர் ஒட்டுவது பற்றியோ, இணையவழியில் ஒரு சினிமா டிக்கட் பதிவு செய்வது பற்றியோ தேடிப் பாருங்களேன். ஒன்றுமே கிடைக்காது. கணிதம், அறிவியல் போன்றவற்றுக்கு பள்ளிப் பாடநூல்கள் தவிர, அவற்றை விளையாட்டாக சொல்லித் தரும் ஒரு தளமும் இல்லை. பல்லாயிரம் கைத்தொழில்களும் குலத்தொழில்களும் அழிந்து வரும் இந்த நிலையில் அவற்றைத் தமிழில் ஆவணப் படுத்த எவரும் இல்லை.’

‘டிரான்சிஸ்டர் காலத்தில், அவற்றை நாமே உருவாக்கவும், அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவும், பழுது பார்க்கவும், பல புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இப்போது Raspberri Pi, Arduino காலத்தில் ஏன் அவை பற்றி தமிழில் இல்லை? அட ஒரு நல்ல ஸ்மார்ட் போன், மடிக்கணிணி, மின்சாரகுக்கர், வாஷிங் மெஷின், மிக்ஸி வாங்க, அவற்றின் நிறை குறைகளை அலசும் தளம் கூடஇல்லையே. இவை எளிய தேவைகள். பல்வேறு மென்பொருட்கள், கணிணி மொழிகள், நோய்கள், மருத்துவ ஆலோசனைகள், பொருளாதாரம், வணிகம், மார்க்கெட்டிங் என துறைசார்ந்த அறிவு எதுவும் தமிழில் பதியப் படுவதில்லையே.’

‘ஆம். பட்டு சேலைகள் நெய்வது எப்படி? என்று தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. “How to weave silk saree?” என்று தேடினால் பல வீடியோக்களும் இணையதளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. காலம் காலமாக பட்டு நெசவு செய்யும் எமது காஞ்சிபுரம் மக்கள் ஒருவர் கூட தமிழில் தம் தொழிலையும், திறமையையும், அறிவையும் பகிராதது வருத்தமே.’

‘இவ்வாறு அறிவு சார் விஷயங்கள் மிகக் குறைவாகக் கிடைக்கும் மொழி இன்னும் எத்தனை தலைமுறைகள் தாண்டும்? ‘ தக்கன தழைக்கும் ‘ என்ற டார்வின் விதி மொழிக்கும் பொருந்தும். தமிழில் அறிவைப் பெற இயலாதபோது, ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? கற்கவேண்டும்?’

‘என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி அல்லவா? அதைக் கற்காமல் விடலாமா?’

‘ஹாஹாஹா. என் மம்மி, டாடிதான் தமிழர். ஆனால் என் தாய்மொழி ஆங்கிலம். என் மம்மி, டாடி வீட்டில் என்னிடம் ஆங்கிலம்தான் பேசினர். பள்ளியிலும் அதேதான். என் சொந்த ஆர்வத்தில்தான் ஓரளவு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழில் அறிவூட்டும் இணையதளங்கள் இல்லாதபோது, தமிழைப் பயன்படுத்துவது பெரிதும் குறைகிறது. என்னளவில் பேச்சு மொழியாக மட்டும் இருந்து விட்டு, என் பிள்ளைகளிடம் போய்ச் சேருவது கடினமே.’

உண்மைதானே. கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய தமிழ், ஒவ்வொரு தலைமுறையினரும் செய்த பங்களிப்புகளால் மட்டுமே அடுத்த தலைமுறைக்குச் சென்றது. இதன் பல்வேறு இலக்கியச் செல்வங்கள் மட்டுமே இந்ததலைமுறைக்குப் போதுமானதல்ல. நூற்றாண்டுகள் பழமையான மொழி, நம் தலைமுறையினர் தம் அறிவைப் பகிராமல் போவதால், அழிந்து போனால், அது மிகவும் சோகமானது.

வாருங்கள். நமக்குத் தெரிந்த யாவற்றையும் தமிழில் எழுதுவோம். WordPress.com, blogger.com, medium.com என அட்டகாசமான வலைப்பதிவுகள் உள்ளன. தமிழில் எழுத உதவும் மென்பொருட்களும் நிறைய உள்ளன. உங்கள் மொபைலில் கூட தமிழில் வலைப்பதிவு எழுதலாம். விக்கிப்பீடியாவும் அறிவைப் பகிர ஒரு சிறந்த தளம்.

ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுனர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆ்ங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்தை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே.

இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்.
போன தலைமுறை தம் அறிவைப் பகிர புத்தகங்கள் உருவாக்க எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

http://www.dailymotion.com/video/x2tvgff_pretty-sure-you-can-t-do-this-to-a-kindle_lifestyle

நமக்கு அப்படியெல்லாம் இல்லை. சும்மா, தட்டச்சினாலே போதும்.
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சுப் பழக்கம்.

அட. தட்டச்சு கடினம் என நினைத்தால், எடுங்கள் உங்கள் மொபைல் போனை. உங்கள் துறை சார் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து YouTube.com போன்ற தளங்களில் வெளியிடுங்கள். மென்பொருள் பாடங்கள், பைக் ரிப்பேர், புது மொபைல் போன் அறிமுகம், வேட்டி, சேலை நெய்தல், மர வேலை, வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், போன், மோட்டார் பழுது பார்த்தல், நடனம், உடற்பயிற்சி, விளையாட்டு என உங்களுக்குத் தெரியும் அனைத்தையும் தமிழில் பேசி, பதிவு செய்து வெளியிடுங்கள்.

இணையத்தில் இல்லாத எதுவும் இல்லை என்றே ஆகிவிடும்.

நம்மிடம் இருக்கும் வெள்ளித் தட்டில், போன வாரம் என்ன உணவு இருந்தது என்பது முக்கியம். அதைவிட இப்போது என்ன உணவு இருக்கிறது என்பதே நம் உயிரின் தேவை. மொழிக்கும் அதேதான்.

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா நமக்குத் தந்ததை விட இன்னும் அதிகமாக நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் தரலாம் வாருங்கள்.
பின்குறிப்பு -

கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com
தமிழில் புகைப்படக்கலை – http://photography-in-tamil.blogspot.co.in
தமிழில் பங்கு வணிகம் – https://kaalaiyumkaradiyum.wordpress.com/

இது போல உங்களுக்குத் தெரிந்த துறைசார் தளங்கள் பற்றிய விவரங்களை பின்னூட்டமாகத் தரலாமே.

••

பின்குறிப்பு – 2

முகநூல் வருகைக்குப் பின், வலைப்பதிவுகள் குறைந்து விட்டன. இது மிகப்
பெரும் இழப்பு. வலைப்பதிவுகளில் எழுதுபவை மட்டுமே இணையத் தேடுபொறிகளில்
கண்களில் கிடைப்பவை. முகநூலில் நீங்கள் எழுதுபவற்றை, உங்களாலேயே கூட தேடி
எடுக்க இயலாது. தேடுபொறிகளிலும் கிடைக்காது. எனவே, முகநூலில் மட்டும்
எழுதி, உங்கள் எழுத்துகளை ஒரு மாபெரும் பாழும் கிணற்றில் எறிந்து
விடாதீர். வலைப்பதிவாகவும் உங்கள் எழுத்துகளை சேமித்து வாருங்கள்.

••••••••••

http://malaigal.com/?p=6928

 

Edited by கிருபன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னூல் உலகம் / 2 / ( அறிவியல் அறிமுக தொடர் ) / சீனிவாசன் ( லண்டன் )

 

download (3)

 

 

மின்னூல் உலகம்
===========

இணையத்தின் வளர்ச்சிக்குப்பின், மின்னூல்களின் புதுயுகம் வந்துள்ளது. அச்சு நூல்கள் உருவாக்க ஆகும் காலம், உழைப்பு, பணம், விற்பனைச் சிக்கல்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி தரும் தீர்வு மின்னூல்கள்.

மின்னூல் படிக்கும் கருவிகள்
———————————–

HTML வடிவில் இணையதளங்களில் உலாவி(Browser) மூலமும் PDF வடிவிலும் கணிணியில் மின்னூல் படித்த காலங்கள் போய், இப்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்றே சிறப்புக் கருவிகள் உள்ளன. அமேசான் கிண்டில், நூக், சோனி, கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் பல்வேறு திரை அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் E-Ink என்ற சிறப்புத் திரை உள்ளது. இது காகிதத்தில் படிப்பது போன்ற இனிமையைத் தருகிறது. டேப்லட், கணிணி, திறன்பேசி போன்றவற்றில் உள்ள LCD திரையானது, ஓரிரு மணிகள் கூட, தொடர்ந்து படிக்கவிடாமல், கண்களுக்கு சோர்வு தருகின்றன. ஆனால் E-Ink திரையானது, அச்சு நூல் தரும் அதே இனிமையைத் தருவதால், பல மணி நேரங்கள் சோர்வின்றிப் படிக்க முடிகிறது.

பேட்டரியை காலி செய்யும் திறன்பேசிகள் போலன்றி, ஒரு இரவு முழு சார்ஜ் செய்தாலே, ஒரு மாதம் முதல் இரு மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படவல்லவை இந்தக் கருவிகள்.

திறன்பேசிகளிலும் மின்னூல்கள் படிக்கலாம். ஆனால், நம் குரங்கு மனம், சிறிது நேரத்திலேயே அதில் மின்னஞ்சல் பார்க்கவோ, சமூக ஊடக செயலிகளை இயக்கவோ, தூண்டும். நொடிக்கொருமுறை notification வந்து ஆசை காட்டும். மின்னூல் படிக்கும் கருவிகளில், இந்தத் தொல்லை இல்லவே இல்லை. நீங்களும் நூலாசிரியரும் மட்டும்தான். நூல்களில் உலகில் நீங்கள் தடையின்றி உலாவிக் கொண்டிருக்கலாம்.

இந்தக் கருவிகள் பெரும்பாலும் 6 அங்குலத் திரை அளவில் கிடைக்கின்றன. 5 அல்லது 7 அங்குல அளவிலும் சில நாடுகளில் கிடைக்கின்றன. 2GB/4GB கொள்ளளவில் கிடைப்பதால் உங்கள் பாக்கெட்டில் ஒரு நூலகத்தையே கொண்டு செல்லலாம்.

மின்னூல் வகைகள்
———————–

கணிணியில் நாம் படிக்கும் A4 அளவு PDF கோப்புகளை, இந்தக் கருவிகளில் படிக்க இயலாது. இவற்றுக்கென்று சிறப்பு கோப்பு வகைகள் உள்ளன.

mobi

அமேசான் நிறுவனம், தன் கிண்டில் கருவிகளில் படிப்பதற்கேற்ப mobi என்ற புது கோப்பு வகையை அறிமுகம் செய்தது. இது கிண்டில் கருவி/மென்பொருளில் மட்டும் இயங்கும்.

epub

mobiக்கு மாற்றான ஒரு திறந்தமூல வகையான கோப்பு இது. பல HTML கோப்புகளை ஒன்று சேர்த்து zip செய்த வடிவமே இது.

இதை கிண்டில் தவிர பிற கருவிகளான nook, kobo, sony போன்றவை ஆதரிக்கின்றன. ஆன்டிராய்டில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks, குனு/லினக்ஸ், விண்டோஸில் fbreader, readium.org(chrome plugin) மூலம் எல்லாக் கருவிகளிலும் படிக்கலாம்.
PDFல் இருப்பது போல, இந்தக் கோப்புகளில், பக்கஅளவு ஏதும் இல்லை. 3 அங்குல மொபைல் முதல் மிகப் பெரியகணிணித் திரைகளிலும் படிக்கும் வகையில், திரை அளவிற்கேற்ப தம் நீள, அகலத்தை மாற்றிக் கொள்கின்றன.

மேலும் எழுத்துரு அளவையும் நாம் விரும்பும் வகையில், ஏற்றி இறக்கிப் படிக்கலாம்.

எங்கே மின்னூல் வாங்கலாம்?
————————————

amazon.com, store.kobobooks.com, www.nook.com/gb/store/books, Google Play Books போன்ற தளங்களில் மின்னூல்கள் வாங்கலாம். இவை பெரும்பாலும் DRM என்ற கைவிலங்குடன் வருவதால், நூல்களை அந்தக் கருவிகளில் மட்டுமே படிக்க முடியும். பிறருக்குப் பகிர இயலாது.

இவை தவிர,

http://www.gutenberg.org/

http://archive.org/details/texts

http://openlibrary.org/

போன்ற தளங்களில் பல்லாயிரம் ஆங்கில நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

 

download (4)

மின்னூல் உருவாக்கம்
————————–

அமேசான் போன்ற மின்னூல் தளங்களில், தினமும் பல்லாயிரம் நூல் ஆசிரியர்கள் தம் மின்னூல்களைத் தாமே உருவாக்கி, வெளியிட்டு வருகின்றனர். உரை ஆவணமாக நூலை எழுதியவுடன், epub, mobi வடிவங்களில் மாற்ற PressBooks.com, Sigil, Calibre போன்ற அட்டகாசமான, இலவச கட்டற்ற மென்பொருட்கள் உள்ளன.

PressBooks.com மூலம் மின்னூல் உருவாக்குவதைத் தமிழில் விளக்கும் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

தமிழில் மின்னூல்கள்
————————-

கிண்டில், நூக், கோபோ என எந்த ஒரு கருவியும், தமிழை ஆதரிப்பதில்லை. kindle paperwhite ல் மட்டும் ஒரு நகாசு வேலை செய்து தமிழ் mobi கோப்புகளைப் படிக்கலாம்.
விவரங்கள் இங்கே-.

http://freetamilebooks.com/how-to-fix-tamil-in-kindle-paperwhite/

ஆனால் 6 inch PDF கோப்புகளை நாமே உருவாக்கி, மின்னூல் கருவிகளில் படிக்கலாம். LibreOffice, Firefox, k2pdfopt போன்ற கட்டற்ற மென்பொருட்கள் இதற்கு உதவுகின்றன. முழு விவரங்கள் இங்கே – http://freetamilebooks.com/how-to-read-tamil-in-kindle-and-other-ebook-readers/
FreeTamilEbooks.com
——————————–

நாங்கள் ஒரு குழுவாக இயங்கி, தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் எழுதும் வலைப்பதிவுகளைத் தொகுத்து, மின்னூல்களாக மாற்றி, FreeTamilEbooks.com தளத்தில், வெளியிட்டு வருகிறோம்.
DRM கைவிலங்குகள் ஏதும் இன்றி, epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் மின்னூல்களை வெளியிடுகிறோம்.

எந்தக் கருவி வாங்கலாம்?
——————————-

மிகவும் சாதாரண E-Ink திரை கொண்ட கருவியே போதும். கிண்டில் ரூ 6000 வரை ஆகலாம். Kindle Paperwhite என்பது, E-Ink திரைதான். ஆனால் இரவில் ஒளிரும் திரை கொண்டது. கும்மிருட்டில் படிக்க விரும்புவோர் இதை வாங்கலாம். Kindle Fire என்பது சாதாரண ஆன்டிராய்டு டேப்லட்தான். இதற்குப் பதில், Apple ipad, Samsung, Nexus டேப்லட்களே மேல். ஆனால் கவனச் சிதறல், குறைந்த பேட்டரியுடனே வாழ வேண்டும்.

புது முயற்சிகள்
——————

Newshunt எனும் நிறுவனம் மொபைல் செயலி உருவாக்கி, பல இந்திய மொழிகளில் குறைந்த விலையில் மின்னூல்களை விற்று வருகிறது. Pratilipi.com இப்போது இணையதளமாக மட்டும் செயல்படுகிறது. விரைவில் செயலியாகவும் வர இருக்கிறது.

இவை தவிர scribd.com, issuu.com போன்ற பல தளங்களும் மின்னூல்களை விற்பனை செய்கின்றன. இவை DRM உடன் வருவதாலும், ஆன்டிராய்டு, ஐஓஎஸ் -இல் மட்டுமே கிடைப்பதாலும், என் போன்ற E-Ink திரைக் காதலர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.

புதுக் கருவி வாங்கும் முன் ebay.co.in, olx.in போன்ற தளங்களிலும், சென்னை ரிச் தெரு போன்ற சந்தைகளிலும் தேடி, பழைய கருவிகள் கிடைத்தால், வாங்கலாம்.

நண்பரிடம் இரவல் வாங்கியாவது, ஒரு முறை E-Ink திரையில் ஒரு புத்தகம் படித்துப் பாருங்கள். உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்வதை உணர்வீர்கள்.
படங்கள்-

https://pixabay.com/en/kindle-amazon-e-reader-ereader-381242/

Amazon Kindle PDF

 

 

 

http://malaigal.com/?p=7005

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புகைப்படங்களைப் பகிரலாமா? ( அறிவியல் அறிமுக தொடர் 3 )  - சீனிவாசன் ( லண்டன் )

[ A+ ] /[ A- ]

 
images (5)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய நவீன வாழ்வு நமக்கு அளித்துள்ள பெரும் வசதிகளில் ஒன்று புகைப்படங்கள். பிலிம் ரோல்களைப் பயன்படுத்தி, படம் எடுத்து, சில மாதங்கள் கழித்து, நிறைய பணம் செலவழித்து அவற்றை அச்சடித்து பார்த்து மகிழ்ந்த காலங்கள் இனிய நினைவுகளாகி விட்டன.

திறம்மிக்க DSLR முதல் Point & Shoot அல்லது கைபேசிக்காமிரா வரை அவரவர் வசதிக்கேற்ற கருவிகளில் இன்று படம் எடுத்து மகிழ்கிறோம். உடனுக்குடன் பார்க்கும் வசதி, கருவிகளிலேயே மெருகேற்றும், திருத்தும் வசதி, இணையத்தில் பகிரும் வசதி என மன்னர்களுக்குக் கூட இல்லாத வசதிகள் இன்று சாமானியருக்கும் கிடைக்கின்றன.

நாம் உண்ணும் உணவு, பார்க்கும் இடங்கள், நண்பர்கள் என அனைத்தையும் சுட்டுத் தள்ளி விடுகிறோம். Facebook, Flickr, Instagram, 500px, snapchat எனப் பல தளங்களில் பகிர்ந்து Like களுக்காகத் தவம் இருக்கிறோம்.

இவ்வாறு நாம் எடுக்கும் புகைப்படங்களை, பிறர் தமது வலைப்பதிவுகளிலோ, நூல், மின்னூல்களிலோ பயன்படுத்த அனுமதிக்கிறோமா?
பெரும்பாலோர் அனுமதிப்பதில்லை.  © Copyright என்று அறிவித்து விட்டு, படங்களின் மறுபயன்பாட்டைத் தடுத்து விடுகிறோம்.

இவ்வாறு அனுமதி மறுப்பதால் பலவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. சில உதாரணங்களைக் காண்போம்.

திரு.சகாயம் IAS அவர்களைப் பற்றி ஒரு மின்னூல் உருவாக்கத் திட்டமிட்டு இருந்தோம். அவர் படங்களை இணையத்தில் தேடினால், காப்புரிமை கொண்ட படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. search.creativecommons.orgதளத்தில் பகிரும் உரிமை உள்ள படங்கள் கிடைக்கும். அதில் தேடினால், விக்கிப்பீடியாவில் உள்ள ஒரே ஒரு சின்ன படம் மட்டுமே கிடைக்கிறது.

கலெகடர் திரு உ. சகாயம்https://www.youtube.com/watch?v=mLf58wZEhQ4

https://upload.wikimedia.org/wikipedia/commons/b/b0/Sahyamias.JPG

https://upload.wikimedia.org/wikipedia/commons/b/b0/Sahyamias.JPG

இதே போல யோகாசனம் பற்றிய மின்னூலுக்கும் போதிய படங்கள் கிடைக்கவில்லை.

இறையன்பு IAS, நடிகர் விஜயகாந்த், பாடகர் SPB, இசைஆனி இளையராஜா போன்றோருக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் 200×200 போன்ற சிறிய அளவிலேயே கிடைக்கின்றன. images.google.com ல் தேடினால், எல்லாப் படங்களும் உயர்தரத்தில் கூட கிடைக்கின்றன. ஆனால் அவை காப்புரிமை எனும் விலங்கினால் கட்டப்பட்டுள்ளன. http://www.google.com/advanced_image_search ல் usage rights: free to use or share தந்து தேடிப்பாருங்கள்.

உலகின் அறிவையெல்லாம் கட்டற்ற உரிமையில் தொகுக்கும் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் ஏதேனும் படங்களைச் சேர்க்க, அவை Creative Commons Attribution ShareAlike என்ற உரிமையில் இருத்தல் வேண்டும். இந்த உரிமையில் படங்கள் கிடைக்காததால், பெரும்பாலான கட்டுரைகள் படங்கள் இல்லாமலேயே எழுதப் படுகின்றன. இது சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் இழப்பு தானே.

சில கேள்விகளும் பதில்களும்;

நான் படங்களை இணையத்தில் ஏற்றுவதே பிறர் பகிரத்தானே. ஏன் தனியாக உரிமம் பற்றி சொல்லவேண்டும்?

உரிமம் பற்றி சொல்லாத படங்கள், தாமாகவே காப்புரிமை விலங்கு பெறுகின்றன. பிறர் பகிரவும் பயன்படுத்தவும் விரும்பினால் Creative Commons  உரிமையை சொல்ல வேண்டும்.

Creative Commons உரிமை என்றால் என்ன?

உங்கள் படைப்புகளை பிறர் பகிரவும், பயன்படுத்தவும் தரும் அனுமதியே இது.  மேலும் அவற்றில் மாறுதல் செய்யலாமா? கூடாதா?, வணிகரீதியில் பயன்படுத்தலாமா? கூடாதா? என்றும் வரையறுக்கலாம். இதற்கேற்ப பின்வரும் 6 உரிமைகள் உள்ளன.

http://ontheline.trincoll.edu/wp-content/uploads/2012/02/cc-licenses-terms.png

http://ontheline.trincoll.edu/wp-content/uploads/2012/02/cc-licenses-terms.png

பிறர் உங்கள் படைப்புகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயரை கட்டாயம் சொல்லியாகவேண்டும். எனவே படைப்புத் திருட்டு பற்றி பயப்படவேண்டாம்.

சிலர் எனது படங்களைத் திருடி, தம் பெயரில் வெளியிட்டால் என்ன செய்வது?
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம். அந்தந்த நாட்டு சட்டங்களை இந்த creative commons உரிமைகள் ஆதரிக்கின்றன.
இணையத்தில் திருட்டைத் தடுக்க இயலாது. ஆனால் 100% விதிகளுக்கு உட்பட்டே பகிரவிரும்பும் நண்பர்களுக்கு உங்கள் படைப்புகள் உதவட்டுமே. உங்கள் படங்கள் விக்கிப்பீடியா பக்கங்களிலும், பல வலைப்பதிவுகள், நூல்கள், மின்னூல்களில் உங்கள் பெயருடன் பகிரப்படுவது மகிழ்ச்சிதானே.

எப்படி creative commons படங்களைத் தேடுவது?

search.creativecommons.org
https://www.flickr.com/creativecommons/
images.google.com போன்றவற்றில் பகிரும் உரிமை கொண்ட படங்களைத் தேடலாம்.

http://searchengineland.com/figz/wp-content/seloads/2014/01/google-images-usage-rights.jpg
http://searchengineland.com/figz/wp-content/seloads/2014/01/google-images-usage-rights.jpg

சரி, நான் என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் படங்களை commons.wikimedia.org ல் பதிவேற்றுங்கள்.

* Flickr ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.wikihow.com/Apply-the-Creative-Commons-License-to-Flickr-Photographs

* Google+ images  ல் உரிமைப் பகுதியில் creativecommons  தெரிவு செய்யுங்கள்
http://www.stevegillphotos.co.uk/2012/03/using-creative-commons-license-on.html

இவ்வாறு பகிர்வதால் உங்கள் பெயரும் படங்களும் பரவுவதோடு, வணிகவாய்ப்புகளும் கிடைக்கும்.

உலக அளவில் புகழ் பெற்ற காட்டுயிர் புகைப்படக்கலைஞர், கல்யாண் வர்மா, தம் படங்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுவதால் பெறும் பலன்களை TED உரையில் விளக்கும் காணொளி இதோ.

https://www.youtube.com/watch?v=mLf58wZEhQ4

 

 

http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable

 

உங்கள் புகைப்படங்களும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்பட அனுமதியுங்கள். பகிர்தலை ஆதரியுங்கள்.

ஐயங்களுக்கு தயங்காமல் எழுதுக.

http://malaigal.com/?p=7205

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.