Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலிலிருந்தே என் கதைகள்: ஷோபா சக்தி நேர்காணல்

Featured Replies

shobasakthi_2486956f.jpg

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள்.

முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கின்றன. அதை இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறேன்.

எண்ணற்ற உயிரபாயச் சூழல்களைத் தாண்டி வந்தவர் நீங்கள். இப்போது அந்த அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

16 வயதில் எனது குடும்பத்திலிருந்து பிரிந்து போனேன். அதற்குப் பிறகு குடும்பத்துடன் சேரவேயில்லை. எனக்கென்று குடும்பமும் இதுவரை இல்லை.

நான் மிகச் சிறிய தீவுக் கிராமமான அல்லைப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவன். 16 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். இயக்க வேலைகளுக்காக இலங்கை முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினேன். 1987 வரை தாயகத்தை விட்டு வெளியே போக வேண்டும் என்று நான் நினைத்ததேயில்லை. முதலில் இந்திய அமைதிப் படையின் கைகளிலிருந்து தப்பி கொழும்புக்கு ஓடி வந்தேன். கொழும்பிலிருந்து சாய்பான் என்னும் தீவைத் தேடிப் போனோம். சாய்பானில் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டுப் போனார்கள். எங்களைக் கூட்டிப்போன முகவர் ஹாங்காங்கில் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். மீண்டும் கொழும்பு வந்தேன். இந்திய அமைதிப்படை வெளியேறியது. எங்களைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் என்னைப் பிடித்தார்கள். எங்கள் மீது பெரிதாக எந்தக் குற்றங்களும் இல்லை என்பதை வைத்தும், சில சிபாரிசுகளை வைத்து கடிதம் கொடுத்து நான்கு மாதங்களில் விடுதலையானோம். சிறையில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் வந்துகொண்டிருந்ததால் இடப் பற்றாக்குறை வேறு.

சிறையிலிருந்து வந்ததற்குப் பிறகு தாய்லாந்து சென்றுவிட்டேன். அங்கே மூன்றரை ஆண்டுகள் இருந்தேன். எதிர்காலம் என்னவென்றே தெரியாது. தாய்லாந்துக்குப் போகும்போது என்னுடன் இரண்டே இரண்டு தமிழ்ப் புத்தகங்களைத்தான் எடுத்துப் போனேன். ஒன்று பைபிள், இன்னொன்று பாரதியார் கவிதைகள். இரண்டு புத்தகங்களையும் ஐநூறுக்கும் மேற்பட்ட முறை படித்திருப்பேன்.

பிரான்சுக்கு எப்போது வந்தீர்கள்?

தாய்லாந்தில் போலீஸ் கெடுபிடிகள் அதிகமாகின. ரௌடிகள் பட்டியலிலும் எனது பெயர் இடம்பெறத் தொடங்கிவிட்டது. ஒரு துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இருபது பேர் கைது செய்யப்பட்டோம். நான் படுகாயம் அடைந்தேன். ஒரு சிறுநீரகம் சேதமடைந்ததால் நீக்கிவிட்டார்கள். தாய்லாந்திலிருந்து வெளியேறியே ஆக வேண்டும். ஜெர்மனியில் அகதியாக இருந்த எனது அண்ணனின் பண உதவியோடு, போலி பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் 1993-ல் பாரீஸ் நகரம் வந்திறங்கினேன்.

ஒரு எழுத்தாளனாக உங்கள் கருத்துலகம் எப்படி உருவானது?

பாரீசுக்குப் போன பின்பாக ட்ராட்ஸ்கிய இயக்கத்துடன் ஏற்பட்ட தொடர்பால் ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினேன். 90-களில் நிறப்பிரிகை, தலித் இலக்கியம், பெரியார் எழுத்துகள் எல்லாம் பாரிசில் எனக்கு அறிமுகமானது. சாதி குறித்து எனது டிராட்ஸ்கியவாத தோழர்களுடன் பேச ஆரம்பிக்கும்போது முரண்பாடுகள் வருகிறது. அப்போதுதான் தமிழகத்திற்கு முதல்முறையாக வந்தேன். நேரடியாக தஞ்சாவூரில் வசித்துவந்த அ.மார்க்சின் வீட்டுக் கதவைத் தட்டினேன். இந்தக் காலப்பகுதியில்தான்(1997) நான் மிகவும் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்ததும் எழுத ஆரம்பித்ததும். என்னுடைய முதல் கதையாக நான் கருதும் எலிவேட்டை கதை அப்போதுதான் பிரசுரமானது.

உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?

இங்கு போலவே அங்கேயும் ஜெயகாந்தன் காய்ச்சல் அடித்துப்போட்ட காலம் தான் எங்கள் இளம் வயதுகள். என்னை மிகவும் பாதித்த தமிழின் உச்சகட்ட கதை எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவரைத் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளராகக் கருதுகிறேன். ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி என்னை மிகவும் பாதித்தது. இவையெல்லாமே 1997க்குப் பிறகுதான்.

என்னுடைய எழுத்தைப் பாதித்தவர் எஸ்.பொன்னுத்துரை. எழுத வரும்போது எப்படி தொடங்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் என்னுடைய வழிகாட்டிகள் என்று எஸ்.பொன்னுத்துரை, சாரு நிவேதிதா, ரமேஷ் ப்ரேம் ஆகியோரைச் சொல்ல முடியும்.

உங்கள் படைப்பு மொழியில் பைபிளின் தாக்கம் பற்றி சொல்லுங்கள்...

கத்தோலிக்கக் குடும்பமாக இருந்தபோதும் எங்கள் வீட்டில் பைபிள் இருந்ததில்லை. தேவாலயத்தில் மட்டும்தான் பைபிளிருக்கும். வழிபாட்டின்போது அதை உபதேசியார் வாசிக்கும்போது எனக்குப் பெரிய சித்திரவதையாகத் தோன்றும். எனக்கு மத நம்பிக்கை அற்றுப்போன பின்புதான் நான் பைபிளை முழுவதுமாகப் படித்தேன்.

பைளின் கதைசொல்லும் அமைப்பு மிகக் கச்சிதமானது. சில கதைகளில் திட்டமிட்டு அந்த உரைநடையைப் பயன்படுத்தியுள்ளேன். 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்' என்கிறது பைபிள்.

பிரான்ஸ் வாழ்க்கை உங்களை அரசியல்ரீதியாகவும் இலக்கியரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் போனவன். எனக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பிரான்சுக்குப் பதில் ஆஸ்திரேலியாவுக்குப் போவதற்கான கள்ள பாஸ்போர்ட் கிடைத்திருந்தால் அங்கே போயிருந்திருப்பேன். பிரான்ஸ் வாழ்க்கைக்குள் பொருத்திக்கொள்ள வேண்டுமென்றெல்லாம் நான் போராடவேயில்லை. இன்றுவரை எனக்கு பிரெஞ்சு மொழி முழுமையாகப் பேசத் தெரியாது. நான் பிரான்சுக்குச் சென்றாலும் தமிழ் மனத்தோடும், ஈழத்து நினைவுகளுடனும், பிரான்சுக்குள்ளேயே குட்டி ஈழத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ்க் கடைகள், தமிழ் உணவு விடுதிகள், தமிழ் சலூன்களில் வாழுபவர்களில் ஒருவன்தான் நான். பிரான்சில் பல்வேறு தேசிய இனங்கள் இப்படித்தான் தங்களுக்குள் மூடிக்கொண்டு வாழ்கிறார்கள். பிரான்சின் வாழ்க்கை கண்காணிப்புக்குள்ளாக இருந்தாலும் தனிமனித சுதந்திரம் ஒப்பீட்டு ரீதியாக நன்றாக உள்ளது. தனிப்பட்டவர் வாழ்க்கையில் அரசு பெரிதாக தலையிடுவதில்லை. பொருளாதார ரீதியாக அடுத்த வேளை சோற்றுக்குக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

90-களின் இறுதி முதல் தற்போது வரை தொடர்ந்து தமிழகம் வந்து போய்க்கொண்டிருப்பவர் நீங்கள். இங்குள்ள அரசியல் மற்றும் வாழ்க்கைநிலைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த ஆறேழு ஆண்டுகளில், இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் சகிப்புத்தன்மையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண குரு, வைகுண்டசாமி, தந்தை பெரியார், வள்ளலார், அம்பேத்கர், காந்தியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், ஞானியர் இந்திய மண்ணில் ஆண்டுக்கணக்காகப் பேசிய விஷயங்கள் இங்குள்ள மக்களின் நனவிலியில் இருந்துகொண்டிருப்பவை. அதனால்தான் இங்கே சகிப்புத்தன்மை அதிகம் என்று நான் நினைப்பேன். அந்த சகிப்புத்தன்மை தற்போது குறைந்திருக்கிறது. எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் வட்டத்திலேயே கருத்து வெளிப்பாடு தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்துவருகிறது. ஒரு புத்தகம் போட பயப்படும் சூழல் உள்ளது. பெரும் பெரும் அரசியல் எதிரிகள் ஒன்றாக மேடையில் பேசிய நாடு இது.

அரசியல் உணர்வு, கலையுணர்வு, வெகுஜன கலாசாரத்திலும் திளைத்த உணர்வில் உங்கள் கட்டுரைகளும் கதைகளும் பெரும் துயரங்களையும் மீறிய நகைச்சுவையோடு மண்ணில் வேர் கொண்டவையாக உள்ளன..?

பிரெஞ்சுப் படமான தீபனில் நான் நடித்தது குறித்த நேர்காணல் ஒன்றில் எனக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டனர். நான் எம்ஜிஆர் என்று சொன்னேன். எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பை கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். எனக்கு தமிழ் சினிமாப் பாடல்கள் ஆயிரம் மனப்பாடம். ஒரு கிராமத்துச் சிறுவன், ஒரு கூத்துக் கலைஞன் விடுதலை இயக்கப் போராளி, தீவிர மார்க்சியக் கட்சி உறுப்பினர், எழுத்தாளன், கான் திரைப்பட விழாவுக்குப் போன நடிகன் என வாழ்க்கை திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. அதனால் இந்த வண்ணங்கள் வந்திருக்கலாம்.

உங்களின் அரசியலுக்கும் உங்களது படைப்புக்குமான தொடர்பு என்ன?

நான் என்னுடைய அரசியல் பார்வையிலிருந்துதான் என்னுடைய கதைகளைக் கண்டடைகிறேன்.

இந்த யுத்தம் தமிழனை மட்டும் அல்ல, அப்பாவிச் சிங்களனையும் பாதிக்கிறது. யுத்தத்தில் முன் அரங்கில் நிற்கும் ராணுவ வீரன் யாரென்றால் ராணுவச் சீருடை போர்த்த ஏழைச் சிங்கள விவசாயி என்ற ஒரு வரியின் மீது எழுதப்பட்ட கதைதான் தங்க ரேகை. இதுதான் எனது அரசியலுக்கும் கதைகளுக்குமான தொடர்பு.

http://tamil.thehindu.com/general/literature/அரசியலிலிருந்தே-என்-கதைகள்-ஷோபா-சக்தி-நேர்காணல்/article7464777.ece?widget-art=four-rel

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.