Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூடியூப் பகிர்வு

Featured Replies

யூடியூப் பகிர்வு: கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்!

 
kodaikanal_2495364f.jpg
 

"அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு 'பதில்' சொல்வதில் இருந்து சிலர் போக்குக் காட்டலாம்... ஆனால், இணையத்தில் வெறும் 2 நிமிட வீடியோ பதிவால் உருவான போக்கு (ட்ரெண்டிங்), அந்தச் சிலரை உலுக்குவது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது, அட்டகாசமான ஒற்றைப் பாடல் வீடியோ" | அந்த வீடியோ இணைப்பு கீழே |

இந்த முயற்சியெல்லாம் நமக்கு மிகவும் நெருக்கமான கொடைக்கானலுக்காக என்கிறபோது, நம் கவனம் அனிச்சையாக அதிகரிக்கிறது. அந்த வீடியோ பதிவைப் பார்க்கும் முன் அவலம் மிகு ஃப்ளாஷ்பேக் - சுருக்கமாக:

"என் பொண்ணு இவாஞ்சலினுக்கு வயசு 26. ஆனா பார்த்தா பெரிய பொண்ணாட்டம் தெரியாது. அவளுக்கு உடல் வளர்ச்சியும் இல்ல. மன வளர்ச்சியும் இல்ல. அவ இன்னும் வயசுக்கு வரல" - ஜூலி போன்ற எந்த ஒரு தாயும் இந்த வார்த்தைகளை உணர்ச்சி கலக்காமல் சொல்ல முடியாது.

"என் பேரு லட்சுமி (38). கல்யாணமாகி 16 வருசம் ஆச்சு. ஆனா, இன்னும் குழந்தைங்க இல்ல. இரண்டு தடவை கரு கலைஞ்சுடுச்சு. என்கிட்ட எந்தப் பிரச்சினையும் இல்ல. என் கணவருக்குத்தான் போதிய விந்தணுக்கள் இல்லைன்னு சொல்றாங்க" - எதிர்காலத்தில் தனக்கு யார் இருப்பார்கள் என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டு லட்சுமி யோசிக்க முடியாது.

"என் பேரு உமா மகேஸ்வரி (22). காலேஜ்ல படிக்கிறேன். வாழ்க்கையில நல்ல ஸ்டேஜுக்கு வரணும்னு நினைக்கிறேன். ஆனா, நான் இன்னும் ஏஜ் அட்டெய்ன் பண்ணலை" - காரணம் புரியாமல் குழம்புகிறார் உமா மகேஸ்வரி.

இவையெல்லாம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'தான். கொடைக்கானலில் இறங்கியவுடன் நாலா திசைகளிலும் இருந்து, இது போன்ற பிரச்சினைகளைப் பேசும் குரல்கள் நம்மைச் சூழ்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே காரணம் பாதரசம்!

1983-ம் ஆண்டு கொடைக்கானலில் 'பாண்ட்ஸ் இந்தியா' (பின்னாளில் அது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்துடன் இணைந்தது) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மாமீட்டர் உற்பத்தி நிறுவனத்தில், அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்பட்டது. முறையான பாதுகாப்புடன் அது கையாளப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கிருக்கும் மக்களை உருக்குலைத்துவருகிறது.

இப்படி வெளியான பாதரசம், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வகைகளில் தீங்கிழைத்துவருகிறது. மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர், அவர்களுடைய குடும்பத்தினர் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

கொடைக்கானலில் இன்றைக்கு 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களில் உள்ள முன்னாள் பாதரசப் பணியாளர்களின் குடும்பங்களில் 120 பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. சுமார் 60 குடும்பங்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றன.

கணவருக்குப் பாதரசத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக, பெண்கள் குடும்பத்தைப் பிரிந்துபோன நிலையும் இங்கே ஏராளம். பெற்றோரை இழந்து அநாதரவாக விடப்பட்ட குழந்தைகள் மற்றொரு பக்கம். பாதரச நிறுவனத்துக்குத் தங்கள் பிள்ளைகளைப் பலிகொடுத்து, தற்போது தனிமரமாய் நிற்கும் மனிதர்கள் இன்னொரு பரிதாபம். இப்படி ஒரு தலைமுறை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க, அடுத்த தலைமுறை அங்கே தழைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

"இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக் கூறி மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், 'இங்கே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று அந்த நிறுவனம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகிறது.

இங்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க நோய் காரணவியல் (எபிடெமாலஜி) ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய காதுகளில் விழ வேண்டுமோ அவர்களுடைய காதுகளில் அது விழவில்லை... நீதிமன்றம் உட்பட!" என்றார் டெல்லியைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர் உஷா ராமநாதன்.

உடல் வெப்பத்தை அறிந்துகொள்ளப் பாதரசத் தெர்மாமீட்டரை உற்பத்தி செய்த நிறுவனம் கொடைக்கானலில் உருவாக்கியுள்ள வெப்பம், இன்னும் கொதிநிலையிலேயே இருக்கிறது என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

சரி, இப்போது வீடியோ முயற்சிக்கு வருவோம். கொடைக்கானல் அவலத்தையே லிரிக்ஸில் பரப்பி, வசீகரமான குரலில் கவனம் ஈர்க்க வழிவகுத்துள்ளார் சோபியா அஷ்ரஃப். 2 நிமிடம் காண்போரின் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் வகையில், பாடலை உக்கிரமாக காட்சிப்படுத்தியிருகிறார் சினிமா படைப்பாளியும், சுற்றுச்சூழல் போராளியுமான ரதீந்திரன் ஆர்.பிரசாத் மற்றும் அவரது குழுவினர்.

இணையவாசிகளால் ஈர்க்கப்பட்ட இந்த வீடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டதால், ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ட்ரெண்டிங் இடம்பெற்றது. இதன் பலானாக, பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டே நாளில் 5 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது

Kodaikanal Won't பாடல் வீடியோ.

"சில நிமிடங்களைச் செலவிடுவதன் மூலம் நீங்கள் காட்டும் அக்கறை, ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பது நிச்சயம். அதற்காக, jhatkaa.org/unilever என்ற இணைப்பின் பக்கத்தின் வலப்புறம் உள்ள ஆன்லைன் மனுவை நிரப்பி, மக்களின் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து, நம் உறவுகளைக் காத்திடும் கரங்களை வலுப்படுத்துங்கள்!" என்று கோருகின்றனர், கொடைக்கானலைக் காக்க இணையக் களத்தைப் பயன்படுத்தும் இந்தச் சுற்றுச்சூழல் ஆர்வலர் படை.

 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கொடைக்கானல்-கலக்கத்தை-பரப்பும்-பெண்/article7491736.ece?ref=relatedNews

 

  • Replies 158
  • Views 29.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அகல்யா - ஜில்லுனு ஒரு த்ரில் குறும்படம்!

 
 
tril_2482240h.jpg
 

இணையத்தில் ரசிகர்களை வியக்கவைத்து, யூடியூபில் பிரபலம் அடைந்து வரும் ராதிகா ஆப்தே நடித்த 14 நிமிட த்ரில்லர் வகை குறும்படம். | வீடியோ இணைப்பு கீழே.|

ராமர் கால் பட்டு கல்லாக இருந்த அகலிகை உயிர்பெற்ற கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இது ராமாயண காலக் கதை. இன்று இந்தக் கதை, ஒரு தரப்பினரால் பெண்ணியதுக்கு எதிரான கதையாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கௌதம முனிவரின் மனைவி அகலிகையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவன் இந்திரன். அவள் அழகை அனுபவிக்க வேண்டும் என வீட்டில் முனிவர் இல்லாதபோது வருகிறான். ஆனால், அவன் வந்தது அந்த முனிவரின் உருவத்திலேயே... அப்படியிருக்க குற்றம் இழைக்காத அகலிகை கல்லாகப் போகவேண்டிய தண்டனை ஏன்..?

தமிழ் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம்' தொடங்கி சமகால பெண்ணியவாதிகள் வரை எல்லோரும் கேட்கும் கேள்வி இதுதான்.

இக்கதையையே இயக்குநர், 'அகல்யா' குறும்படத்திறான கருவாக தேர்ந்தெடுத்துள்ளார். இந்தக் குறும்படம், அந்தக் கதையை மிகவும் நவீனப்படுத்தியுள்ளது. கதையிலோ திரைக்கதையிலோ, வசனத்திலோ, காட்சி உருவாக்கத்தின் அழகியலிலோ மட்டுமில்லை... இன்றுள்ள பெண்ணியவாதிகளோடு மாற்றி யோசிக்கும் இளைய தலைமுறையினரின் புருவங்களையும் உயர்த்தும் விதமாக!

இங்கும்கூட போலீஸ் அதிகாரியாக வந்தவன் துப்பறியும் தனது கடமையிலிருந்து சற்றே நழுவிய அவனது மனதில் கள்ளம் புகுந்துவிட இங்கேயும் அந்த சாபம்... வேறு வடிவில்!

பண்பட்ட கௌதம் ஆக நடித்துள்ள சௌமித்திர சாட்டர்ஜி, அகல்யா எனும் இளம் மனைவியாக தோன்றி வசீகரித்த நின்ற ராதிகா ஆப்தே, இந்திரனாக வந்து தந்திரங்களில் சிக்கிய டொடா ராய் சௌத்ரி என மூன்றே கலைஞர்கள் முக்கியப் பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

நகரில் சில நாட்களாக காணாமல் போன ஒருவனை போலீஸ் அதிகாரி தேடிவரும் விதமாக குறும்படத்தின் திரைக்கதை நம்மை திரைக்குள் இழுத்து நிறுத்துகிறது. ஒரு காவியக் கதையை துப்பறியும் கதைபோல மர்ம முடிச்சுகளை அவிழ்த்துச் செல்லும் இயக்குநர் சுஜாய் கோஷ்ஷின் இயக்கம் விறுவிறுப்பான ஹாட் கேக் குறும்படம் இதோ...

 http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அகல்யா-ஜில்லுனு-ஒரு-த்ரில்-குறும்படம்/article7451882.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மலையுடன் மோதிய மாமனிதன் மாஞ்சி!

 
 
majhi_2475381h.jpg
 

தன் கிராம மக்களுக்காகத் தனியொரு மனிதனாகப் போராடிய மாமனிதர் தாஷ்ராத் மாஞ்சி. | வீடியோ இணைப்பு கீழே |

பிஹாரின் காயா நகருக்கு அருகில் உள்ள கெஹ்லவுர் கிராமம். அந்தக் கிராமத்தில் இருந்துக்கும் நகருக்கும் இடையே ஒரு மலை இருந்தது. இதனால், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பெற, அந்த மலையைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை.

ஒருநாள், ஏழைக் கூலித்தொழிலாளியான மாஞ்சியின் மனைவி ஃபல்குனி தேவிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. ஆனால், நீண்ட தூரம் பயணித்துதான் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க முடியாத காரணத்தால் மனைவி இறந்துவிட, தன் கிராம மக்களுக்கும் இந்த அவல நிலைமை வந்துவிடக்கூடாது என்று நினைத்தார் மாஞ்சி.

கெஹ்லவுர் மலையைக் குடைந்து, பாதையை ஏற்படுத்தி, முறையான போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர ஆசைப்பட்டார்.

மனைவி இறந்ததற்கு அடுத்த ஆண்டு ஒற்றை மனிதராக தன் வேலையைத் தொடங்கியவரைப் பைத்தியக்காரனைப் போல பார்த்தனர் கிராம மக்கள். 1960 முதல் 1982 வரை தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளை மலையைக் குடைய மட்டுமே செலவிட்டார் மாஞ்சி.

கேலி கிண்டல்களையும், இளக்காரமான பார்வைகளையும் மட்டுமே மாஞ்சிசந்திக்க நேர்ந்தது. பாதிக்கும் மேற்பட்ட மலைப்பகுதிகளைத் தகர்த்த பின்னர், ஊர் மக்கள் மாஞ்சியை மலைப்பாகப் பார்த்தனர். மெல்ல மெல்ல மக்களின் உதவிகளும் மாஞ்சிக்குக் கிடைக்கத் தொடங்கின. முடிவில் காயா மாவட்டத்தின் அத்ரி மற்றும் வாசிர்கன்ச் இடையிலான தடைகளைத் தகர்த்தெறிந்தன அவரின் கைகள்.

55 கிலோ மீட்டர் தொலைவு இருந்த பாதை வெறும் 15 கிலோ மீட்டருக்கு சுருங்கி போக்குவரத்து எளிதானது. மக்களும் அரசும் மாஞ்சியைக் கொண்டாடத் தொடங்கினர். பல்வேறு விருதுகளை வழங்கி பீகார் அரசு மாஞ்சியைக் கவுரவித்தது.

ஆமிர்கானால் வழங்கப்பட்ட சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடின் முதல் அத்தியாயம் மாஞ்சிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அரசால் மாஞ்சியின் குடும்பத்துக்கு, பல உதவிகள் வழங்கப்பட்டன.

பிகாரில் பிறந்தவரான பிரபல இயக்குநர் மணிஷ் ஜாவா, மாஞ்சியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க ஆசைப்பட்டார். மாஞ்சியின் மரணப்படுக்கையின் போது அவர் கைரேகையை வாங்கி படத்துக்கான உரிமையையும் பெற்றுக் கொண்டார்.

தனுஷை வைத்து தமிழிலும், இந்தியிலும் இதைப் படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில காரணங்களால் மணிஷ் இதைப் படமாக எடுப்பது தடைபட, மாஞ்சியின் வரலாற்றைக் கையில் எடுத்தார் தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் கேத்தன் மேத்தா.

வித்தியாசமான முயற்சிகளுக்குச் சொந்தக்காரரான நவாசுதீன் சித்திக், மாஞ்சியாக நடிக்க, ராதிகா ஆப்தே, ஃபல்குனி தேவியாக நடித்திருக்கிறார். சந்தேஷ் சந்தேலியாவின் இசை மற்றும் ராஜீவ் ஜெயின் ஒளிப்பதிவில், மாஞ்சியின் தனி மனிதப்போராட்டம் ஆத்மார்த்தமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மாஞ்சி- ஃபல்குனி தேவி இடையிலான காதல், மனைவியைப் பிரிந்து வாடும் மாஞ்சி, ஒற்றை மனிதனாக மலையைத் தகர்க்கும் மாஞ்சி, உண்ண உணவில்லாமல் இலை தழைகளைத் தின்ன நேரும் நிலையில் எல்லாரின் கண்களும் ஒரு நிமிடம் கலங்கிவிடுகின்றன

"முயன்றால் முடியாதது என்று எதுவுமே இவ்வுலகத்தில் இல்லை" என்னும் உண்மையை, தன் வாழ்க்கையிலேயே நிரூபித்த மாஞ்சி, இப்போது திரையிலும் சொல்ல வருகிறார்.

மாஞ்சி படத்தின் ட்ரெயிலர் இணைப்பு:

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: HusBANned | கண்டிப்பாக கணவர்களுக்கு மட்டும்!

 
 
husband_2468794h.jpg
 

உலகத்திலேயே தன் வாயால் கெடும் ஜீவராசிகள் இரண்டு என்றுதான் படம் தொடங்குகிறது. அந்த இரண்டு எவையெவை தெரியுமா?

தவளை ஒன்று; ஹஸ்பண்ட் எனப்படும் ஜீவராசி மற்றொன்று. தவளையை எங்கு பார்க்கிறீர்களோ இல்லையோ, கண்டிப்பாய் இந்த ஜீவராசியை அமேசான் காடுகளில் ஆரம்பித்து அமிஞ்சிக்கரை மார்க்கெட் வரை சகல இடங்களிலும் பார்க்கலாம்.

ஹஸ்பண்ட் ஜீவராசியின் இயல்புகளையும், நடவடிக்கைகளையும் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றனர். தன் வீட்டுச் சொந்தங்கள் வந்தால் கொடுக்கும் ஆனந்த ரியாக்‌ஷனையும், மனைவி வீட்டுச் சொந்தங்கள் வந்தால் கொடுக்கும் கேவலமான ரியாக்‌ஷனையும் பார்க்கும்போது கதாநாயகன் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பது புரிகிறது.

இந்த ஜீவராசியின் மோசமான நிலைக்கு எதைக் காரணமாகச் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ காரணங்கள் ஆயிரம்!

ரேடியோ ஜாக்கி, சின்னத்திரைத் தொகுப்பாளர், குணச்சித்திர நடிகர் எனப் பல அவதாரங்களை எடுத்த பாலாஜி வேணுகோபால், இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். பரிதாபக் கணவராக நடித்திருப்பவர் திருவனந்தபுரம் பாலாஜி.

கல்யாணத்துக்கு முன்னால் பெண்களைக் கிண்டல் செய்து மட்டம் தட்டுவதற்கும், கல்யாணம் ஆனதற்குப் பின்னர், மனைவிக்கு அடங்கியவராய்த் தன்னைக் காட்டிக் கொள்ளவும், பெருந்திரளான ஆண்கள் கூட்டம் உண்டு. அவ்வகையில், உறுத்தாமல், ஹஸ்பண்ட் எனப்படும் ஜீவராசியைக் கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

கண்டிப்பாய் இந்தக் குறும்படத்தில் வரும் ஹஸ்பண்ட் ஜீவராசியைப் போல, பல ஜீவராசிகள் இந்த அண்டத்தில் உலவிக்கொண்டிருக்கும். இதைப் பார்க்கும்போது உங்களையோ, உங்கள் கணவரையோ, அப்பாவையோ, நண்பரையோ, அக்கா கணவரையோ நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் அங்கேதான் இக்குறும்படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-husbanned-கண்டிப்பாக-கணவர்களுக்கு-மட்டும்/article7407948.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம்

 
 
 
jaihind_2510288h.jpg
 

ஒவ்வோர் ஆண்டும் வருகிறது ஆகஸ்ட் 15. அன்று மட்டும் மிடுக்காக நாம் குத்திக் கொள்கிறோம் தேசியக் கொடியை, 'நம் இதயத்துக்கு பக்கத்தில்'. ஆனால், என்றாவது யோசித்திருக்கிறோமா, சுதந்திரம் கிடைக்காமலே போயிருந்தால் என்னவாகியிருக்கும். இன்னமும் ஆங்கிலேயரிடமே கட்டுண்டு இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று?

6 நிமிடங்கள் ஒதுக்கி மனோஜ் பாஜ்பாய், ரவீனா டான்டன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தைப் பாருங்கள். நிழலின் அருமை வெயிலில் காயும் போதுதான் தெரியும் என்பதைப் போல சுதந்திரத்தின் மகிமையும் ஒருவேளை நாம் அடிமையாக இருந்திருந்தால் என்று எண்ண அலைகளை சற்று கரடுமுரடான யோசனைக்கு திசை திருப்பிவிட்டு யோசித்துப் பார்க்க வைக்கிறது இக் குறும்படம்.

சொந்த மண்ணில் அந்நியனுக்கு தலை வணங்கி நிற்கும் தர்ம சங்கடமான சூழ்நிலை எவ்வளவு கொடூரமானது.

ஓர் இனிய இரவில், இருசக்கர வாகனத்தில் மெலிதாக ஏதோ பாடிக் கொண்டு கணவருடனான அந்த பயணத்தை சிலாகித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். சட்டென மாறிய சூழலில் ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படுத்திய காரின் 'கொய்ங்' என்ற ஓசை அடங்கியவுடன் கேட்ட முதல் வார்த்தை... அருகே இருக்கும் நட்சத்திர ஓட்டலுக்குள் மனைவியை தூக்கிக் கொண்டு செல்கிறார் அந்த நபர்...

என்ன நடந்திருக்கும்? நடக்கும்? நீங்களே பாருங்கள்...

அடிமை இந்தியாவையும் சுதந்திர இந்தியாவையும் சித்தரிக்கும் இந்தக் குறும்படம் கேட்கிறது... இப்போது புரிகிறதா சுதந்திரம் எனப்படுவது யாதெனில்?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-6-நிமிட-குறும்படத்தில்-சுதந்திரத்தின்-மகத்துவம்/article7539875.ece

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சொர்க்க வாசல் - ஒரு 'முக்கிய' குறும்படம்

 
 
tile_2467061h.jpg
 

படம் பார்க்கும் முன் படிக்க...

காலையில் பெருமாள் கோயிலில் பாடப்படும் பாடல்தான் நம் கதாநாயகனை எழுப்பி விடுகிறது. சிரமப்பட்டுக் கண்விழித்து, பல் துலக்கி, குளித்து முடித்துக் காலை உணவாக பூரிக்கிழங்கைச் சாப்பிட்டு முடிக்கிறார்.

இயல்பிலேயே மறதி அதிகம் கொண்ட அவர் முக்கியமான ஒரு வேலையைச் செய்ய மறக்கிறார். அவசரமாய் அலுவலகம் கிளம்ப கதவைப் பூட்டிக் கீழே வந்தவருக்கு பர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டது ஞாபகத்துக்கு வருகிறது. திரும்பவும் வீட்டுக்குச் செல்பவர், பர்ஸை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிச் செல்கிறார். அப்போது, அவர் மறந்து வைத்த மற்றொரு பொருளால் எழுகிறது புதுச் சிக்கல்.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது தொடங்குகிறது மற்றொரு மகா சிக்கல். செய்யத் தவறிய பணியொன்று அவரைப் பிணியாய்ப் படுத்தியெடுக்கிறது. அம்முக்கியப் பணியை முடிக்க அவர் தெருத்தெருவாய் அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கும் ரகம். கூடவே சிந்திக்கவும் வைக்கிறது.

அந்த வேலைக்காக அவர் தேடிப்போகும் வாசல்களில் சில மூடியிருக்கின்றன. சில பூட்டியிருக்கின்றன. சிலவற்றுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.

கடைசியாக என்னவாயிற்று? நாமும் திறப்புக்குள் நுழையலாமா?

படம் பார்த்த பின் படிக்க...

இந்நவீன யுகத்தில்எங்கெல்லாம் கழிப்பறைகள் இருக்கின்றன என ஆண்ட்ராய்ட் செயலிகள் மூலம் கண்டறியலாம். ஆனால் எவ்வளவு கழிப்பறைகள் பூட்டப்படாமல் பயன்படுத்த முடிகின்றவையாய் இருக்கின்றன; திறந்திருந்தாலும் எந்தளவிற்குப் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பொட்டிலறைந்து சொல்கிறது இக்குறும்படம்.

விழிப்புணர்வுப் படங்களில், கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படத்தில் நடித்துள்ளவர் கதாபாத்திரத்தின் வேதனை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரின் அவசரத்துக்கு ஏற்றாற்போல கார்த்திக் ஆச்சார்யாவின் இசை பரபரத்து ஒலிக்கிறது.

சமூகத்தில் இருக்கும் முக்கியக் குறையை, அதன் அத்தியாவசியத் தேவையை, இயக்குநர் குரு சுப்பு நேர்மறையான விதத்தில் சித்தரித்தமைக்காக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்க் குறும்படப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறது இக்குறும்படம்.

இது போன்ற சமூக அக்கறையுள்ள படங்களுக்குக் கண்டிப்பாய் சொர்க்க வாசல் திறக்கத்தான் வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சொர்க்க-வாசல்-ஒரு-முக்கிய-குறும்படம்/article7399426.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வரும் ஆனா வராது... தமிழ் சினிமாவுக்காக ஒரு குறும்(பு)பட குரல்!

 
 
youtube_2438661h.jpg
 

 

அறிமுக இயக்குநர் ஒருவர் தனது முதல் படைப்பை வெள்ளித் திரைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகள், அதற்காக அவர் கடக்க வேண்டிய 'நபர்கள்', 'சம்பவங்கள்'...

ஒருவேளை படத்தை எடுத்துவிட்டால், அந்தப் படத்துக்காக காத்திருக்கும் 'தடைகள்' குறித்து 'கலாசார' ரீதியில் கலாய்ப்புடன் சொல்கிறது இந்தக் குறும்புக் குறும்படம்.

தமிழ் சினிமா மீது அக்கறை கொண்ட சாதாரண ரசிகராக, இந்தக் குறும்படத்தை தயாரித்ததாகச் சொல்கிறார், இப்படத்தின் தயாரிப்பாளர் அருண் பிரகாஷ்.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-வரும்-ஆனா-வராது-தமிழ்-சினிமாவுக்காக-ஒரு-குறும்புபட-குரல்/article7315181.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'குற்றம் கடிதல்' பாடலில் நகர வாழ்க்கையின் விடியல்

 
 
kalainila_2432133h.jpg
 

காலங்கள் மாறலாம். பொழுதுகள் ஓடலாம். கணங்கள் மறையலாம். ஆனால் புவியின் காலை விடியலும், இரவுத் துயிலும் மாறியதில்லை. 'கடல் தாண்டிக் கரையேறும் காலை நிலா'வில் தொடங்கும் 'குற்றம் கடிதல்' படப்பாடல் நகர வாழ்க்கையின் வெவ்வேறான வாழ்க்கை நிலைகளில் வாழும் மனிதர்களின் காலை எவ்வாறானதாக இருக்கிறது என்பதை அழகான வரிகளுடன் பொருத்திச் செல்கிறது. | வீடியோ இணைப்பு கீழே |

அதிகாலையில் பூஜை வழிபாடுகளைச் செய்யக் கிளம்பும் மனிதர், தெருவோரங்களில் ஓடிப் பிடித்து விளையாடும் சிறுவர்கள், காலை வெயிலில் கடலில் குதித்தாடும் பையன்கள், மெல்ல விழிக்கும் சூரியனின் சிணுங்கலில் பறந்தாடும் பறவைகள், ஆர்ப்பரிக்கும் அலைகள், இன்னும் பலப் பல பாத்திரங்களின் காலைப் பொழுதுகள் எப்படித் துவங்குகின்றன?

"நாளை என்பது இன்று உன்னிடம்; இன்று எனும் இந்தக் கவிதை யாரிடம்?"

வண்டியில் பயணிக்கும் புதிதாய் திருமணமான தம்பதி, பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்து, மிட்டாய் சாப்பிட்டு சமாதானமாகிச் செல்லும் சிறுவன், ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நிர்வகிக்கும் அவனின் அம்மா, பேருந்தில் புத்தகம் படித்துக் கொண்டே வருபவர், பள்ளி முதல்வராக இருக்கும் கணவர், அங்கேயே ஆசிரியையாக வேலை பார்க்கும் மனைவி, இருவரும் இருசக்கர வண்டியில் வேலைக்கு வரும் காட்சிகள் என காலைப் பொழுதை இன்னும் இனிமையாக்கிக் காட்டுகின்றன.

அதே நேரம் ''பூச்செண்டு தருமா? போர்க்களம் தருமா? வாழ்க்கையை மாற்றும் நினைவுகள் தருமா, நாள்தோறும் பல கேள்விகள்தானே?!'' என்று வினா எழுப்பவும் செய்கின்றன.

குற்றம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லும் திருவள்ளுவரின் 44வது அதிகாரமான குற்றம் கடிதலைத் தலைப்பாகக் கொண்ட இப்படம், 16ஆவது ஜிம்பாவே பன்னாட்டுத் திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் திரைப்படம். நவம்பர் 20, 2014 முதல் நவம்பர் 30, 2014 வரை நடந்த கோவா திரைப்பட விழாவில் இந்தியப் பனோரமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம். 12ஆவது சென்னைத் திரைப்படவிழாவில் கடைசி நாளன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டு சிறந்த தமிழ்ப்படம் என்ற விருதைப் பெற்ற படம். இந்தியாவில் 62ஆவது திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற படம். இத்தனை பெருமையும் குற்றம் கடிதல் என்னும் ஒற்றைத் திரைப்படத்துக்கே!

அத்துடன், 16ஆவது மும்பை திரைப்பட விழாவில் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் திரைப்படங்களுடன் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை ஜே. சதீஸ் குமாரும் கிறிஸ்டி சிலுவப்பனும் தயாரிக்க, ஜி. பிரம்மா இயக்கியிருக்கிறார். இதில் சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா, சாய் இராஜ்குமார், பவல் நவகீதன் நடித்துள்ளனர்.

ஜெரால்ட் தீரவ் எழுதியிருக்கும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நகரத்தின் காலையையும், வாழும் வாழ்க்கையையும் காட்சிகளோடு அழகாய்ப் பொருந்துகின்றன. "ஒவ்வொரு நாளின் வண்ணங்கள் யாவும் நிரந்தர மாயம்!" என்னும் ஒற்றை வரி போதும் இப்பாடலுக்கு!

தினமும் எல்லாருக்குமாய் பொதுவாய்த்தான் விடிகிறது காலை; ஒரே மாதிரியாக விடிகிறதா வாழ்க்கை?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-குற்றம்-கடிதல்-பாடலில்-நகர-வாழ்க்கையின்-விடியல்/article7294785.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யுடியூப் பகிர்வு: ஓர் இளம்பெண்ணும் மூன்று குரங்குகளும்!

 
 
Capture_2418953h.jpg
 

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு பொம்மைகளின் கதை பெரும்பாலானோருக்குத் தெரியும்."தீயனவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே!" என்பதுதான் அது. ஆனால் இந்தக் குறும்படத்தின் கதை யாருக்காவது தெரியுமா?

இளம்பெண் ஒருவர் அலுவலகம் செல்ல, பேருந்துக்காகக் காத்து நிற்கிறார். நீண்ட நேரமாக அதே இடத்தில் நிற்கும் அவரிடம் ஓர் ஆண், விரும்பத்தகாத முறையில் நடந்துகொள்கிறான். சில நிமிடங்களில் அங்கிருந்து சென்றவனைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கலங்கி நிற்கிறார் அந்தப் பெண். அருகில் இருந்த சாமியார் ஒருவர், அவரைச் சமாதானப்படுத்தி, மூன்று குரங்கு பொம்மைகள் உள்ள மரச்சட்டத்தைக் கையில் கொடுத்துக் காதிலும் ஏதோ ரகசியம் சொல்கிறார்.

அதன் பின்னர், தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும் ஆண்களை அந்தப் பெண் எவ்வாறு தன் குரங்கு பொம்மைகளைக் கொண்டு எதிர்கொள்கிறாள் என்பதுதான் மீதிக்கதை. குறும்படத்தின் முடிவு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில்தான் இருக்கும்.

எந்தவித உரையாடல்களும் இல்லாமலே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்திப் புரியவைக்க முடியும் என்பதற்கு இக்குறும்படம் சிறந்த எடுத்துக்காட்டு.

பொது இடங்களில் பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதுமே நகைச்சுவை இழையோடி இருக்கிறது. படத்தின் நாயகிக்கு உதவும் சாமியாரைப் புகைபிடித்தவாறு காண்பிக்கும் காட்சியே அதற்கு சிறந்த சான்று. அப்பெண்ணிடம் வாலாட்டும் இளைஞர்களுக்கு என்னவாகிறது என்பதை மறைமுகமான "குறியீடு"களுடன் காண்பித்தது அருமை.

”சவிதா சினி ஆர்ட்ஸ்” என்னும் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், டெக் மகேந்திரா குறும்படப் போட்டியின் சிறந்த குறும்படம் உள்ளிட்ட விருதுகளை வென்றிருக்கிறது.

தனியாய் இருக்கும் பெண்களிடம் எல்லை மீற நினைக்கும் ஆண்களுக்கு இக்குறும்படம் ஒரு சாட்டையடிப் பதிவு.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யுடியூப்-பகிர்வு-ஓர்-இளம்பெண்ணும்-மூன்று-குரங்குகளும்/article7251474.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உன்னை அறிந்தால்... 'செல்ஃபி' குறும்படம்

 
 
selfie_2411012h.jpg
 

ரயில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டியின் ஒரு கட்டத்தை நிரப்ப யோசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பயணி. பதிலைக் கூறிவிட்டு, செல்பேசி அழைத்ததும் எழுந்து வெளியே வருகிறார் நம் கதாநாயகன்.

பேசி முடித்துப் பாக்கெட்டில் போட எத்தனிக்கும் சமயத்தில் தவறுதலாக முன்னால் நிற்கும் பயணியின் பேண்டில் கை படுகிறது. கண் முன்னேயே பிக்பாக்கெட்டா எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார் அப்பயணி. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.

ரயிலை விட்டு இறங்கியதும், பரிசோதகர் எல்லோரையும் விட்டுவிட்டு இவரிடம் மட்டும் டிக்கெட்டைக் காட்டச்சொல்கிறார். சிறிது தூரம் சென்று டாக்ஸி அருகில் நிற்பவரிடம், டிரைவர் என்று நினைத்து வண்டி வருமா என இளம்பெண்ணொருத்தி கேட்கிறாள். இது போல வரிசையாய் நடக்கும் சில சம்பவங்கள் அவரைக் காயப்படுத்துகின்றன.

எப்போதுமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெண்ணி வருந்துகிறார் அவர். அவமானமாய் உணர்ந்து கலங்கி நிற்பவரின் முன்னால் நடக்கும் அந்த சம்பவம், மனவோட்டத்தையும், அவரின் மீதேயான மொத்த மதிப்பீடுகளையும் ஒற்றை நொடியில் தகர்த்தெறிந்து செல்கிறது. அப்படி என்ன நடந்தது? விடை, குறும்படத்தில்!

குறைவான வசனங்களில் சொல்ல வந்தது நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்ந்து ஒலிக்கும் இசை பார்ப்பவர்கள் மனதின் வழி ஊடுருவித் தாங்கவியலாப் பாரமொன்றை இறக்கி வைத்து விட்டுச் செல்கிறது.

எப்போதுமே, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்புதான் நம்மை அதிகம் அலைக்கழிக்கிறது; காயப்படுத்துகிறது. சுய பரிசோதனை தேவையோ என்று எண்ண வைக்கிறது.

வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையின் மூலமே மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும். நாம் எல்லோருமே நம் மனசைத்தான் முதலில் செல்ஃபி எடுக்க வேண்டும். தகுந்த காட்சியமைப்புகளோடு, தன்னை உணர்தலை மென்மையாய் உணர்த்துகிறது ஆகாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட செல்ஃபி குறும்படம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உன்னை-அறிந்தால்-செல்பி-குறும்படம்/article7223705.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கதறவைக்கும் தெருநாய் பிழைப்பு!

 
dog_2404920h.jpg
 

"சை, என்னடா இது, எப்பப் பார்த்தாலும் நாய்ப்பொழப்பாவே இருக்கு!" என்று அடிக்கடி புலம்புவரா நீங்கள்? என்ன காரணத்தால் இந்த வார்த்தைப் பிரயோகம் புழக்கத்துக்கு வந்திருக்கும் என்று ஒரு முறையாவது யோசித்திருப்பீர்களா?

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் படித்தவர்களே வேலை இல்லாமல் திண்டாடும் போது, விலங்குகளின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் வீட்டு விலங்குகளின் நிலை இன்னமும் மோசம். காடுகளில் வாழ்ந்து தன் அன்றாடத் தேவைகளை அங்கேயே பூர்த்தி செய்துகொள்ளும் மற்ற விலங்குகளைப் போலில்லை இவற்றின் நிலைமை.

முக்கியமாய் நாய்கள். வீட்டு நாய்கள், வளர்க்கப்பட்ட வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும், தெருநாய்கள் அங்கேயே பிறந்து, வளர்ந்து, பிரசவித்து, வாழ்ந்து, அடிபட்டு இறந்தும் போவது பழகிப்போய் விட்டது.

நீங்கள் ஒரு நாளாவது தெருவில் வாழும் வாழ்க்கையைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வேண்டாம் கற்பனையாவது செய்திருக்கிறீர்களா? சிறுவர்களில் தொடங்கி வண்டிகள், குடிகாரர்கள், பொது மக்கள், போலீஸ்காரர், ஏன் சக நாய்களே, ஒரு தெருநாயை என்னவெல்லாம் செய்கிறார்கள்?

சூரியன் உதயமாவதில் இருந்து மறையும் வரைக்குமான ஒற்றை நாளிலேயே உணவுக்கும், வாழ்வுக்குமாய் இந்த நாய் படும்பாட்டைப் பாருங்கள். மும்பையை மையமாகக் கொண்ட சர்வதேச பிராணிகள் நல மற்றும் தத்தெடுப்பு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இக்காணொளியைப் பார்த்தால் கண்ணில் படும் நாய்களையெல்லாம் கல்லால் அடிக்கத் தோன்றாது; கையில் எடுத்து வாரியணைக்கத் தோன்றும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கதறவைக்கும்-தெருநாய்-பிழைப்பு/article7201802.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அவனால் அவளுக்கு நேர்ந்தது என்ன?

 
 
avan_2395815h.jpg
 

தலைநகர் டெல்லி முதல் தளவாய்ப் பட்டணம் வரை, பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பயம், இரவு வீட்டுக்கு பத்திரமாகப் போய்ச் சேருவோமா என்பதே!

நடக்கும் சம்பவங்களும், வெளிப்படும் செய்திகளும் எல்லோரின் மனதிலும் பயத்தை விதைத்து விட்டன. தவறான நோக்கோடு பார்க்கும், தொடரும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, செய்ய வேண்டிய வழிமுறைகளை ஃபேஸ்புக் முதல் பக்கத்து வீட்டு பாட்டி வரை அனைவரும் வாரி வாரி வழங்குகின்றனர்.

இங்கே ஓர் இளம்பெண் தனியாக நடந்து வந்துகொண்டிருக்கிறாள். இருள் சூழ்ந்த இரவு. வழியில் புகைப்பிடித்தவாறே ஓர் இளைஞன், அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பயத்தில் நகர எத்தனிப்பவளின் செல்பேசி அழைக்கிறது. தன் அம்மாவிடம் பேசிக்கொண்டே வீடு செல்லத் தொடங்குகிறாள். நடந்து செல்லச் செல்ல அந்த இளைஞன், இவளைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறாள். நடையில் வேகம் கூட்ட அவனும் அதற்கு இணையாக வருகிறான்.

ஒரு கட்டத்தில் அப்பெண் ஓடத் தொடங்க அவனும் ஓட்டமாய் வருகிறான். கால் தடுக்கி ஓரிடத்தில் கீழேயும் விழுந்துவிடுகிறாள். இளைஞன் அவளை நெருங்கிவிட, அடுத்து நேர்ந்தது என்ன? நீங்களே இந்த 2 நிமிட வீடியோவைப் பாருங்கள்...

நச்சென்று நாலே வாக்கியத்தில், ஓர் அவசியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது இக்குறும்படம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அவனால்-அவளுக்கு-நேர்ந்தது-என்ன/article7173347.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 60 நொடிகளில் 60 உழைப்பாளர்கள்!

 
 
may_2390784h.jpg
 

உலகில் வாழும் அனைவருமே ஒரு வகையில் உழைப்பாளிகள்தாம். ஆனால் ஒவ்வொருவரின் உழைப்பிலும், செய்யும் தொழிலிலும் வேறுபாடு இருக்கிறது. ஏசி அறையில் அமர்ந்து விசைப்பலகைப் பொத்தான்களைத் தட்டி உலகின் இன்னொரு மூலையைத் தொடர்பு கொண்டு செய்து முடிப்பவரும் உழைப்பாளர்தான். ஒற்றைக் கூரையின் கீழ் தன் உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வேலை பார்ப்பவரும் உழைப்பாளர்தான்.

அறுபதே நொடிகளில், அறுபது விதமான தொழில்களைச் செய்யும் உழைப்பாளர்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறது இக்காணொளி.

வெகு விரைவாய் நகர்கின்ற காட்சிகளினூடாக உழைப்பாளர்கள் செய்யும் வேலையின் ஒலியே, துல்லியமான பின்னணி இசையாகக் காணொளி முழுவதும் இழைந்தோடி இருக்கிறது. கச்சிதமான படத்தொகுப்பு இக்காணொளியின் மற்றொரு பலம்.

மே 1, சர்வதேச உழைப்பாளர் தினம். நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அலுவல்களுக்கு இன்றியமையாமல் இருக்கும் இவர்களை இந்த தினத்தில் கொண்டாடி மகிழலாமே!

ஸ்லிங்ஷாட்ஸ் என்னும் விளம்பரப் பட தயாரிப்பு நிறுவனம் இக்காணொளியை வெளியிட்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-60-நொடிகளில்-60-உழைப்பாளர்கள்/article7158746.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: அன்புச் சங்கிலி உங்களை பிணைத்திருக்கிறதா?

 
 
love_2389374h.jpg
 

பரபரப்பான சாலை. இரு சக்கர வாகனங்களும் கார்களும் பச்சை விளக்கொளிக்காகக் காத்து நிற்கின்றன. வெயிலில் இருந்து தப்பிக்க கார்க்கதவுகளின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கருடன் ஒருவர், அங்கு நிற்கும் கார்களையே சுற்றி வருகிறார். ஏற்கனவே சுத்தமாக இருக்கும் காரின் கண்ணாடிகளை தன்னிடமிருக்கும் துணியால் அழுந்தத் துடைக்கிறார். எப்படியாவது கையிலிருக்கும் ஸ்டிக்கர்களை விற்றுவிட வேண்டுமென்ற முனைப்பு. யாரும் அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சில கார்கள் கடந்து போக, அடுத்து வந்த காரின் பின்கண்ணாடி மட்டும் கீழிறங்குகிறது. உள்ளிருந்து மடிப்பு கலையாத புத்தம்புதிய இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளோடு ஒரு கை நீள்கிறது. வாங்குபவரின் கண்கள் ஆச்சரியத்தாலும், சந்தோஷத்தாலும் பெரிதாய் விரிகின்றன. கார்க்காரர் சிரித்துக் கொண்டே கடந்து செல்கிறார்.

யாரென்றே தெரியாத ஒருவரின் மேல், அவர் அன்பு செலுத்தக் காரணம் என்ன?

அன்பு, அது ஒன்றால் மட்டுமே இந்த உலகத்தையே மாற்றிவிட முடியுமா? யாரென்றே தெரியாத ஒருவர் மேல் தன்னலமற்று, எதிர்பார்ப்புகள் எவையும் இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா? அன்பெனும் சங்கிலித் தொடர் சாத்தியமே என்கிறது இக்காணொளி.

அடுத்தவர்கள் மேல் அன்பு செய்யுங்கள்; உங்களை நீங்களே நேசிக்க ஆரம்பிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும் போதுதான் உங்களின் மேலேயே அன்பு பெருகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்- என்ன செய்தாலும்தானே?!

| ஸோர்பா என்னும் யோகா புத்துணர்வு மையம் 'மாயா' என்னும் பெயரோடு இந்தக் குறும்படத்தை வெளியிட்டுள்ளது. |

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அன்புச்-சங்கிலி-உங்களை-பிணைத்திருக்கிறதா/article7154097.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: (நாட்) மை சாய்ஸ்... இது திருநங்கைகளின் அழுத்தக் குரல்

 
choice_2387584h.jpg
 

பொது இடங்களில் நாம் சிலரைப் பார்க்கிறோம். அவர்கள் ஆணா பெண்ணா என்று துல்லியமாக நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதைப் பற்றிய மூல காரணங்கள் எதுவும் தெரியாது. அவர்களை அலட்சியப்படுத்த வேண்டுமென்று மட்டும் நம்மில் பலரும் தெரிந்துவைத்திருக்கிறோம்.

உதாரணமாக ஒரு பேருந்தில் அவர்கள் அருகில் இருக்கை காலியிருந்தும் உட்காரத் தயங்குகிறோம். நாம் உட்கார்ந்திருந்தாலும் அவர்கள் உட்கார முயலும்போது நாம் நெளிகிறோம். நமது பொதுப்புத்தியில் இந்த கசடு எப்படி வந்த நம்மிடம் ஒட்டிக்கொண்டது. அவர்களும் மனிதர்கள்தானே?

நம்மைப் போல இயல்பான சுகதுக்கங்களோடு வாழஇயலாதவர்களாயிற்றே அவர்கள். அந்த வலியோடு நம்மிடையே வலம் வரத் துடிப்பவர்கள்தானே அவர்கள் என்ற கரிசனமோ உணர்வோ அதைக் கடந்த சமமாக நடத்தவேண்டுமென்ற மனமோ ஏன் நமக்கு உருவாகவில்லை.

எங்கோ திரையில் மின்னும் நிழல் நட்சத்திரங்களைக் கண்டு அவர்கள் உலகையே புரட்டியதாக வியப்பவர்களாகவே நாம் இன்னமும் இருக்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. நமது ரசனை நமது உரிமை. அதேநேரம் நாம் சக எளிய மனிதர்களைக் கண்டு எள்ளி நகையாடக் கூடாதென உணர அந்த ரசனை ஏன் நமக்கு கைகொடுக்கவில்லை.

யார் யாரையோ கண்டு அதிசயக்கும், அரவணைக்கும், அன்பு பாராட்டும் நாம் நம்மோடு ரயிலில், கடைவீதியில், சாலைகளில் தென்படும் அந்த மூன்றாம்பாலினத்தவரை நம்மைப்போன்ற சோதர/சோதரிகள்தான் அவர்கள் என்று ஏன் அங்கீகரிக்கத் தவறுகிறோம்.

அவர்கள் அப்படி இருப்பது அவர்கள் தேர்வா அல்லது அப்படி பிறந்தது அவர்கள் விருப்பமா என்பதை இந்த 'மை சாய்ஸ்' / எனது விருப்பத் தேர்வு' (my choice) என்ற சின்னஞ்சிறு குறும்படம் இங்கே தெளிவுபடுத்தியுள்ளது... இந்த சமூகம் தங்களை ஒதுக்குவதுகூட தங்களது தேர்வில் வரவில்லை என்று வலியோடு கூறுகிறார்கள் இந்த திருநங்கைகள்/நம்பிகள்...

பெண்களின் தங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் உரிமை குறித்து தீபிகா படுகோனே எடுத்த எனது விருப்பத் தெரிவு 'மை சாய்ஸ்' போலவே, டீன் பாதர் புரெடெக்ஷன்ஸ் எடுத்துள்ள இந்த எனது விருப்பத் தேர்வு 'மை சாய்ஸ்' வீடியோவும் ஒருவகையில் நமது பொதுபுத்தியை சுத்திகரிக்க உருவாக்கப்பட்டதுதான். இரண்டரை நிமிடங்களுக்கும் குறைவாக இருப்பினும், ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அழுத்தமாகச் சொல்லும் இந்த வீடியோவை பார்க்க மிகச் சில நிமிடங்களை மட்டும் நீங்களும் செலவிடலாமே...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-நாட்-மை-சாய்ஸ்-இது-திருநங்கைகளின்-அழுத்தக்-குரல்/article7147100.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: இவர்களுக்கு காக்கையே பொன்குஞ்சு!

 
kakkai_2384416f.jpg
 

சக உறவுகளையே கண்டுகொள்ள நேரமின்றி ஆட்கள் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறார்கள். சக மனிதர்கள் மட்டுமல்ல சக உயிர்களும் நம்மைப் போன்றவைதான் என எத்தனை பேர் இங்கு நினைத்துப் பார்க்கிறார்கள். | வீடியோ இணைப்பு - கீழே |

தங்கள் நேரத்தையும் பொருளையும் அவற்றுக்காக செலவிடுவதை சிறந்த செயலாகக் கருதி அதில் இன்பம் காணும் மனம் எத்தனைபேருக்கு இருக்கிறது?

ஆனாலும் சக உயிர்களை நேசிக்கும் அசோக் நகர் சேகர் தம்பதியினர் போன்ற அரிய ஜீவன்களும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனது தலை மேலேயே தினமும் ஒரு பறவை வந்து உட்காருகிறது. அதற்கு திராட்சை முதலான பழங்களை தானியங்களைத் தந்து தனது விருந்தினரைப் போல உபசரிக்கிறார் இந்தப் பழக்கடை சேகர்.

அவரது மனைவியோ ஓம்பொடி, காராசேவு போன்ற பலகாரங்களை கடையில் வாங்கிவந்து தினம்தினம் வைக்கிறார். அதில் மகிழ்ச்சியடைவதோடு அவற்றை தங்கள் குழந்தைகள் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார். சேகரும் அவரது மனைவியும் காகங்கள் தங்களைத் தேடி தினம் தினம் வருவதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்கள். தங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையை பறவைகளுக்காக இவர் செலவிடுவதைப் பார்க்கும்போது பெரிய வருமானம் இல்லையென்றாலும் பெரிய மனம் இருக்கிறதே இவர்களுக்கு என நம் புருவங்கள் உயர்கின்றன.

இவர்களிடம் காகங்கள் முதலில் நெருக்கம் காட்டினவா? அல்லது காகங்களிடம் இவர்கள் முதலில் நெருக்கத்தைக் காட்டினரா என்கிற ஆராய்ச்சியில் நாம் இறங்க வேண்டியதில்லை. ஏதோ ஒரு தொடக்கப் புள்ளி இருந்திருக்கலாம். இவர்களுக்கும் காகங்களுக்குமான நட்புறவைக் கண்டு, பத்தோடு பதினொன்றாக கடந்துபோய்விடாமல் அதை படம்பிடித்திருக்கின்றனர் ஜாக்கி சினிமாஸ்.

சுற்றுச்சூழலையும் மாந்தநேயத்தையும் நினைத்துப்பார்க்க இந்த வீடியோ பகிர்வு மேலும் தூண்டுகிறது. இத்தகைய பசுமை துளிர்க்கும் நற்செயலோடு நம்மைப் பிணைத்த ஜாக்கி சேகருக்கு ஒரு ஹாண்ட்ஷேக்.

இந்த வீடியோ பகிர்வை க்ளிக்கிட்டு அதற்குள் நுழைவோம் வாருங்கள் இணைய தலைமுறையினரே...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-இவர்களுக்கு-காக்கையே-பொன்குஞ்சு/article7137557.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிற நவீனு,பச்சை கைவசம் இல்ல நாளைக்குத்தான்:(

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: குற்றம் கடிதலில் மயக்கும் பாரதியின் வரிகள்

 
kutram_2382029h.jpg
 

சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களில் வெறுமனே இசையை மட்டுமே கேட்க முடிகிறது. காதைக் கிழிக்கும் இசையில் பாடல் வரிகள் புரியாமல் இருக்கின்றன. அலறல் சப்தமாக இசை நமக்கு ஒருவித எச்சரிக்கை உணர்வுக்கு தள்ளிவிடுவதால், பாடல் குறித்தோ, வரிகள் குறித்தோ ஆழ்ந்து லயிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

இந்நிலையில், 'குற்றம் கடிதல்' திரைப்படத்தில் சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா பாடல் கவனிக்க வைக்கிறது.

அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேசிய விருது உள்பட பல விருதுகளைக் குவித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ஆடியோ பாடல்கள் யூடியூபில் வெளியிடப்பட்டன. இதில் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ பதிவு இதம் தரவல்லது.

ஷங்கர் ரங்கராஜன் இசை பாடலை எந்த தொந்தரவும் செய்யாமல் ரசிக்க வைக்கிறது. அந்த அனுபவத்தை நீங்களும் அடைய...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-குற்றம்-கடிதலில்-மயக்கும்-பாரதியின்-வரிகள்/article7130166.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சிநேகிதிகள் கவனத்துக்கு...

 
breast1_2365518h.jpg
 

கடற்கரையில் அலைகள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருவர் ''சிநேகிதி, புன்னகை எங்கே, நெஞ்சு கொண்ட கனவுகள் எங்கே" பாடலைப் பாடுகிறார். | குறும்பட இணைப்பு கீழே |

அதிகாலையில் அடித்த அலாரத்தை அணைத்த குடும்பத் தலைவி ஒருவர் சிரமப்பட்டு எழுந்திருக்கிறார். தன் மேலே கையை போட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை சிணுங்க, அலுங்காமல் கையை கீழே எடுத்து வைப்பவர் குளித்து முடித்து துளசிச் செடியை வணங்குகிறாள்.

வழக்கமாகிப் போன வீட்டு வேலைகளை மளமளவெனத் தொடங்கி, சமையலை ஆரம்பிப்பவர், சண்டையிடும் தன் இரண்டு குழந்தைகளைச் சமாதானம் செய்ய முனைகிறார். ஒரு வழியாய்க் குளிக்க அவர்களை அனுப்பிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அணிந்திருக்கும் வெள்ளைச் சுரிதாரின் மார்புப் பகுதியில் பொட்டுகளாய் ரத்தத் துளிகள்.

அதிர்ந்து போய், கவலையோடு அதனை நோக்குபவரின் கவனம் கலைக்கிறது சமையலறையில் இருந்து வரும் விசிலின் ஒலி. துரிதமாய்ச் சமைத்து முடித்து, தன் குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பும் அவர், அலுவலகப் பிரச்சினையால் அலைபேசியில் கோபப்பட்டுக் கத்தும் தன் கணவனையும் சமாதானம் செய்கிறார். ரத்தப்பொட்டுகளைப் பார்த்து என்னவென்று கேட்கும் கணவனிடம் துப்பட்டாவை இழுத்து, ஒற்றைச் சிரிப்புடன் ஒன்றுமில்லை என்கிறார்.

எல்லோரையும் அனுப்பிவிட்டு ஓய்வாய் அமர்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பவர், அதில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரையை யோசனையோடு படிக்கிறார். நிறையக் கொட்டுகின்ற முடிகளும், மார்பகத்தில் தெரிகின்ற மாறுதலும் அவருக்குள் எதையோ உணரச் செய்கின்றன. பயத்தில் அப்படியே சிலையாய் அமர்ந்திருப்பவரை ஓடி வந்து அணைக்கின்றனர் பள்ளி முடிந்து வீடு வந்த பிள்ளைகள்.

சட்டெனத் தெளிந்து, அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, சேர்ந்து விளையாடி, நடனம் கற்றுக் கொடுக்கிறார். இரவானதும், குழந்தைகளுக்கு உணவூட்டி உறங்கச் செல்கிறார்.

அதன் பின் சில அதிர்ச்சி நிகழ்வுகள், திடுக்கிட்ட அவருக்கு என்னதான் ஆனது?

பார்க்க மட்டுமல்ல... பகிரவும் தகுந்த வீடியோ பதிவு:

மார்பகப் புற்றுநோய்க்கான உரிய விழிப்புணர்வைத் தரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தில், மார்பகப் புற்றுநோய் குறித்த ஆறு முக்கிய அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவை:

#1 மார்பத்தில் புதிதாகத் தோன்றும் கட்டி அல்லது சிறு குவியல் இருப்பது போன்ற உணர்வு.

#2 சற்றே கடினமாக மாறும் மார்பகம்

#3 மார்பகக் காம்பில் வரும் ரத்தம் / திரவம்

#4 மார்பகக் காம்பின் வடிவத்தில் ஏற்படும் மாறுபாடு

#5 மார்பகத்தைச் சுற்றியுள்ள தோலின் பகுதிகளில் ஏற்படும் மாற்றம்

#6 அக்குள்களிலும், மடிப்புகளிலும் வரத் தொடங்கும் கட்டிகள், வீக்கங்கள்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சிநேகிதிகள்-கவனத்துக்கு/article7073779.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக அருமையாய் இருக்கு. குற்றங் கடிதல் இசை.

கண்ணத்தில் முத்தமிட்டால் " உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி" இந்த வரியை அமுக்கி விட்டுட்டார். கள் வெறி ஷங்கருக்குப் பிடிக்காது போலிருக்கு. :)

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உன்னை நேசிக்கிறேன் அம்மா!

 
 
amma_2335895h.jpg
 

பின்னணியில் மெலிதான இசையோடு கூடிய 'உன்னை நேசிக்கிறேன் அம்மா!' (LoveYouMa!) பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காவல் துறையில் வேலை பார்க்கும் மகளின் உடையைத் தேய்க்கும் தாயின் முகத்தில், இஸ்திரிப் பெட்டி சூட்டின் வெம்மை படர்கிறது. மகள் 'நீ ஏன்மா இதெல்லாம் பண்ற?' என்னும் கேள்வியை முகத்தில் படரவிட்டுக் கொண்டே வேகமாய் வந்து இஸ்திரிப் பெட்டியை வாங்க எத்தனிக்கிறாள். மறுதலித்த தாய், காக்கிச் சட்டையை நீவிக் கொடுத்து அழகு பார்த்து, கம்பீரமாய் எடுத்துத் தன் மகளிடம் அளிக்கிறார்.

மற்றொரு தாயும் மகளும் கடற்கரையில் இருக்கின்றனர். பதின்ம வயதுக்கே உரிய துள்ளலுடன், கடலுக்குள் தன் தாயை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறாள் மகள். அச்சப்படும் தாயை அழகாய்க் கடலுக்குள் நடத்திச் செல்கிறாள். பயத்துடனேயே கடலின் அழகை ரசிக்கிறார் அம்மா. எதையோ சாதித்த நிறைவுடன் தன் தாயைப் பார்த்து வெடித்துச் சிரிக்கிறாள் மகள்.

வீட்டின் மேல்கட்டில் சமையல் செய்கிறார் ஏழைத் தாய். கூடவே அருகிலிருக்கும் கயிற்றை இழுத்து மின்சாரத்தை வரவழைத்து பல்பை ஒளிரச் செய்கிறார். கீழறையில் இருக்கும் தன் மகள் படிப்பதற்காய்ச் செய்த ஏற்பாடது. அறைக்குள் வெளிச்சம் பரவியது கண்டு சினேகமாய்ச் சிரிக்கும் மகளின் கண்களிலும் ஒளி.

அவசரமாய்ப் பரபரத்துச் செல்லும் மகளின் பின்னே வேகமாய்ச் செல்கிறார் அவளின் அம்மா. மக்கள் நெருக்கடியில் பத்திரமாய்த் தன் மகளின் கைகோத்து நடந்து செல்கிறார் அவர்.

வெளியூருக்குப் புறப்பட்டுச் செல்லும் இரு பெண்கள். செல்ல எத்தனிக்கும் அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வழியனுப்ப நினைக்கிறார் தாய். வேண்டாமென்கிற பாவனையில் தலையைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் பெண்ணின் நெற்றி, தாயின் முகத்தைப் பார்த்த உடனேயே முன்னே நீள்கிறது. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சந்தனமிட்டு, வாழ்த்தி அவர்களை வழியனுப்பி வைக்கிறார் அந்தத்தாய்.

அழகு நிலையத்தில் நீள முடியுடன், தலை பின்னி, பூச்சூடி அமர்ந்திருக்கிறார் அம்மா. எதிரே அவரின் மகள் முடி முழுதாய் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினேகமாய்த் தலையசைக்கும் தாயைப் பார்த்து, புரிதலின் அடையாளமாய்ப் புன்னகைக்கிறாள் மகள்.

மேற்சொன்ன அம்மா - மகளின் நேசத்தை வெளிக்கொணரும் எல்லாக் காட்சிகளும் உணர்வுபூர்வமாய்க் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன.

மகளிர் தினத்தையொட்டிய இக்குறும்படத்துக்கான பாடலைப் பாடிக்கொண்டிருக்கும் தன் மகளைக் கண்டு கண்கள் கலங்கியபடியே நெகிழ்வாய்ச் சிரிக்கும் அவரின் அம்மாவையும் சேர்த்து!

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உன்னை-நேசிக்கிறேன்-அம்மா/article6975173.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: காதலர்கள் ஜாக்கிரதை - ஒரு சின்ன சினிமா

 
 
shortfilm_2359765h.jpg
 

பலவண்ண மின்விளக்குகள் பிரகாசிக்கும் பொருட்காட்சியின் பொன் மாலைநேரத்தில் இரு இளைஞர்களின் பிரவேசிக்கிறார்கள். அங்கு இங்கென்று அவர்கள் கண்கள் அலைபாய்கிறது. அவர்கள் தில்லாக செல்ல வேண்டிய இடம் தீம் பார்க்குகள் போன்ற வசதியான பொழுதுபோக்கு இடங்கள்தான் என்றாலும், பொருட்காட்சியைத் தேர்ந்தெடுத்தது மக்கள் கூடும் இடம் என்ற நோக்கத்தில்தான். அதிலும் அழகான இளம்பெண்களைத்தான் அவர்கள் தேடுகிறார்கள். முக்கியமாக வசதியான இளம்பெண்கள்.

அப்படி ஒரு பெண்ணை கண்டு அவளை வட்டமிடுகிறார்கள். தூண்டில் போடமுடியுமா என்று அவள் செல்லும் இடங்களிலெல்லாம் பின் தொடர்கிறார்கள்... ராட்சத ஊஞ்சலில் எதிர் எதிர் இருக்கைகளில் அவர்களின் புன்னகையை அந்த ஊஞ்சல் ஆட்டம் உல்லாச ஆட்டமாகிறது. எதிர்பாராமல் (?) அவள் அறிமுகமாகிவிட அப்புறமென்ன பொருட்காட்சியின் பிரகாசம் முகத்திலும் மிளிர்கிறது...

ஒரு கட்டத்தில் அவளைத் தேடாமலேயே அவன்களிடம் அவள் சிக்குகிறாள்... அந்த மாலை நேர மயக்கத்தில் அடுத்தடுத்து நடந்ததெல்லாம் எதிர்பாராதவைதான்... எந்த வகையில்... என்னதான் நடந்தது..?

ஒரு வர்த்தகப் பொருட்காட்சியின் சாதாரண சூழலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இக்குறும்படம் தந்திருப்பது, இறுதியாண்டு விஸ்காம் மாணவர்களின் இந்த அழகான முயற்சி...

மூன்று நான்கு பாத்திரங்களின் வழியே ஒரு கதையை சொன்னதிலிருந்து, இயல்பான வசனம், பின்னணி இசையிலிருந்து அங்குநிலவிய வண்ண வண்ண வெளிச்சத்தைக் கொண்ட ஒளியமைப்பு, இயக்கம் எல்லாமே சின்னதானதொரு சினிமாவைப் பார்ப்பதுபோன்ற அனுபவம்...

நாளைய சினிமா படைப்பாளிகளின் சின்ன படத்தை நீங்களும் பாருங்களேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-காதலர்கள்-ஜாக்கிரதை-ஒரு-சின்ன-சினிமா/article7056892.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் குறிப்பு'கள்

 
pls_2334115h.jpg
 

அது ஓர் அழகான குடும்பம். கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னே நொறுக்குத் தீனி வகையறாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிறுவன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான்.

சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர். இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' என்ற அர்த்தம் கொண்ட படமொன்றைச் சொல்கின்றனர் பெற்றோர். அப்படியில்லை என்று மறுக்கும் சிறுவன், அதில் முதல் வார்த்தை மட்டும் என்கிறான்.

மாமாவா எனக் கேட்க ஆமாம் என்கிறான். அடுத்த வார்த்தை என்னவென்று அவர்களும் ஆர்வமாய்க் கேட்கின்றனர். தன் மீதே கைவைத்துக் கொள்ளும் சிறுவனைப் பார்த்து என்ன என்ன என்று பரபரக்கின்றனர். ஒரு வழியாய் மகன் தன்னைத்தானே குறிப்பிடுகிறான் என்பது அவர்களுக்குப் புரிகிறது.

முதல் வார்த்தை மாமா, இரண்டாவது என்னை, மூன்றாவது வார்த்தையில் என்ன இருக்கும் என யோசிக்கின்றனர். சிறுவனின் உடல்மொழி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல... நமக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.

நம் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வை ஊட்டும் அந்தக் குறும்படத்தை நீங்களே பார்த்துணருங்கள்...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சில-அதிர்ச்சிக்-குறிப்புகள்/article6969335.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'ஆம்பள' - ஒரு நிமிட குறும்படம்

ambala_2322125h.jpg
 

எது சரி? எது தவறு? அசாதாரணச் சூழலை எப்படி அணுகுவது? - சமூகத்தில் முக்கியத் தருணங்களின்போது இப்படிச் சில குழப்பமான கேள்விகளுக்கு இந்தப் படத்தில் வரும் சிறுவர்களின் செயல்பாடுகளில் இருந்து விடைகள் கிடைக்கக்கூடும். சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்... உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-ஆம்பள-ஒரு-நிமிட-குறும்படம்/article6932641.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: உருகவைக்கும் உண்மைகள்!

 
 
vidi01_2307221h.jpg
 

சாதிக்க துடிப்பவர்களின் வாழ்வில் சிலசமயம் சறுக்கி விழுவது போன்ற விபத்துகள் நேர்கின்றன. அது காலத்தின் கோலமாகவும், கவனக்குறைவின் விளைவாகவும் உடலியல் பின் உபாதைகளாகவும் பலநேரங்களில் உருவெடுத்து நிற்கின்றன நம்மில் பலருக்கும்.

நாட்டியத் தாரகையாக மின்னவேண்டிய 7 வயதேயான தமிழகத்தின் சுபிக்ஷா சந்திரனுக்கு கல்லீரல் பழுதாக ஆரம்பித்ததால் அவளது உற்சாகம் பாதியில் அறுந்துவிடுகிறது.

தடகளப்போட்டியில் தங்கம் வெல்லத்துடிக்கும் 19 வயதேயான பஞ்சாப் வீராங்கனை ரூபிசிங்கின் இதயம் ஏனோ திடீரென செயலிழக்க ஆரம்பித்துவிட வெற்றி, ஆசைகள் வெற்று ஆசைகளாகும் ஆகிவிடுகிற வேதனை.

காண்போர் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பி கனவுகளைக் குழைத்து காட்சிகளாய்த் தீட்டும் 37 வயதான மேற்கு வங்கத்தின் வண்ணத் தூரிகைக் கலைஞன் தனுஜ்தாஸுக்கு விபத்தில் கண்கள் பார்வை பறிபோய் விட்டதால் கலைமனம் கலையிழக்கிறது.

முகத்துவாரக் கால்வாய்கள் நிறைந்த கேரள மனிதர் சோமன் நாயருக்கு 64 வயதுதான் என்றாலும் மகன் ஏறிச்செல்லும் படகை எளிதாக நீரில் செலுத்திட ஒரு கைகொடுக்கவும் முடியாமல் போனதற்கு வருந்துகிறார். சிறுநீரகம் வேலைநிறுத்தம் செய்ததுதானே தவிர வயது ஒரு காரணமல்ல என்பதும்கூட ஒரு வலிதான்.

இவர்களெல்லாம் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. தினைத்துணையாய் உதவி செய்தவர்கள் வந்து இடுக்கண் களைந்ததால் இன்று இவர்களின் எல்லாக் கனவுகளும் நிறைவேறுகின்றன.

நல்ல செயல்களே நறுமணமாய்த் திகழ்பவர்கள் உறுப்புதானம் செய்ததன்மூலம் இது சாத்தியமாயிற்று. இறந்தாலும் எங்கேயோ இருந்துகொண்டு இன்னொருவர் உயிரைக் காக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உறுப்புதானம் செய்யும் எண்ணம் உதிக்க துணை சேர்க்கிறது இந்த இயக்குநர் விஜய் உருவாக்கிய உருகவைக்கும் வீடியோ பதிவு:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-உருகவைக்கும்-உண்மைகள்/article6882905.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.