Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீர்குலையும் சிரியா

Featured Replies

சீர்குலையும் சிரியா 1

சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி
சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி

வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்?

அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சிரியா. சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். சரித்திரத்தில் அழுத்தமான பதிவு பெற்ற நகரம். உலகில் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் தொன்மையான சில நகரங்களில் ஒன்று. இங்கு அதிகம் வசிப்பது சன்னி அரபு இனத்தவர்.

கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். உக்கிரமான யுத்தம். எந்த வெளிநாட்டுடனும் அல்ல (குறைந்தபட்சம் வெளிப்படையாக). உள்ளுக்குள்ளேயே நடந்து உயிர்களைக் காவு வாங்கும் புரட்சி, அடக்குமுறை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டு கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம். நோய்வாய்ப்பட்டவர்களின் நிலை இன்னும் படுமோசம். ஓடவும் முடியாது, உள்நாட்டில் மருத்துவ வசதிகளும் கிடையாது.

தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு. குண்டு வீசுவது அமெரிக்கா. அவர்கள் இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள். ஆனால் சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காதா என்ன?

சிரியாவின் (துருக்கிக்கு அருகில் உள்ள) எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து ஐ.எஸ்.தாக்குதல் நடத்த, அமெரிக்க அணியின் வான்வெளித் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. 21 தாக்குதல்கள், இருபுறமும் நடந்துள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில்அவர்கள் மேலும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள்.

‘‘எங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்த முடியவில்லை. எனவேதான் வான்வழியாகத் தாக்குகிறோம்’’ என்று வியாக்கியானம் கூறுகிறது வெள்ளை மாளிகை.

இப்படி உள்நாட்டு அவதிகளால் தடுமாறும் மக்களால் ‘‘அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை. என்ன காரணம்? ஒருவேளை பலவீனமான அரசாங்கம் கைகட்டிக் கொண்டிருக்கிறதா? இல்லை தன் பங்குக்கு அதுவும் மக்களை வாட்டி வதைக்கிறது!

கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.

என்னதான் நடக்கிறது சிரியாவில்? ஒரு பக்கம் சிரியா அரசு மறுபக்கம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு. இரண்டும் கடுமையாக மோதிக் கொள்ள, இப்போதைக்கு சிரியா நாட்டில் சுமார் 40 சதவீதம் பேர்தான் அரசின் கட்டுப்பாட்டில்!

ஐ.நா. சபையின் உண்மை அறியும் குழு ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள் மீதும் தாக்குதல். ‘‘சந்தேகமில்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.

‘‘ஆமாம். துருக்கி நாட்டு ஜெட் விமானம் ஒன்றை நாங்கள்தான் சுட்டோம். இப்போது அதற்கு என்னவாம்?’’ என்று தன் குற்றத்தைக் கூசாமல் ஒத்துக்கொண்டிருக்கிறது சிரியா அரசு. (இதைத் தொடர்ந்து துருக்கி தன் ஆதரவை சிரியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டது வேறுவிஷயம்).

ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விசிட். அவ்வளவுதான். தன் தூதர் பதவியியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தை இடது சுண்டு விரலால் தீண்டக் கூட சிரியா தயாராக வில்லை என்பதால் எழுந்த கோபம்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் தலையை நுழைத்தது ‘ஐ.எஸ். ஒட்டகம்’ இன்று சிரியாவின் பெரும்பகுதி அதன் பிடியில். சில வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புரிந்த அநியாயங்களையும் தாண்டிச் செயல்படுகிறது தீவிர(வாத) அமைப்பான ஐ.எஸ்.கள்ள உறவில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெண்மீது கற்களை எறிந்து கொன்றார்கள். சமீபத்திலும் இதே காரணத்துக்காக மற்றொரு பெண் கொல்லப்பட்டாள். இந்த முறை அவளது தந்தையே கற்களை எரியும்படி ஆனது. ‘’நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள்’’ என்று கூறியபடியே அந்தப் பெண் கல்லடிக் கொலைகளுக்குத் தயாரானாள்.

சிறுவன் ஒருவன் ரம்ஜான் நோன்பைக் கடைப்பிடிக்கவில்லை. பொது இடத்தில் சில நாட்கள் அவன் கட்டி வைக்கப்பட்டு காட்சிப் பொருளானான். நோ உணவு, நோ நிழல். ஐ.எஸ். ஏன் சிரியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அது ஒரு தனிக்கதை.

சிரியாவின் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ள ஐ.எஸ். அமைப்பு குறித்து அறிவது அவசியம். அந்த அமைப்பு குறித்து அறிந்து கொள்ள முஸ்லிம்களின் இரு பிரிவுகள் குறித்துப் புரிந்து கொள்வது அவசியம். அதை நாளைக்குப் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/world/சீர்குலையும்-சிரியா/article6543295.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சீர்குலையும் சிரியா - 2

 
 
சிரியாவில் அணிவகுப்பு நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள். கோப்பு படம் - ஏபி
சிரியாவில் அணிவகுப்பு நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள். கோப்பு படம் - ஏபி

முகம்மது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு (கி.பி. 632ல்) இரண்டாகப் பிளவுபட்டது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில் தான் பிளவு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகம் மது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெ டுத்தார்கள். இவர்கள் தங்களை ‘சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

இரண்டாவது பிரிவினர் தங்களை ‘ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர்களைப் பொருத் தவரை முகம்மது நபியின் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.

இப்போதைய உலகின் முஸ்லிம் களில் சுமார் 87 சதவிகித்ம் பேர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். பெரும்பாலான அரபு நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளிலும் அவர்கள்தான் மெஜாரிடி. இரான், இராக், பஹரின் போன்ற நாடுகளில் ஷியாக்கள் அதிக எண் ணிக்கையில் இருக்கிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இந்தோனேஷியா. ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இரான். உலகிலேயே சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடு எது தெரியுமா? உலகிலேயே ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடுதான் அதுவும்! அது நம் அ(ச)ண்டை நாடான பாகிஸ்தான்.

கருத்துவேற்றுமை என்ற கட்டத்தையெல்லாம் எப்போதோ கடந்து விட்டார்கள் இந்த இரண்டு பிரிவினரும். பிரிவு, பகைமை, விரோதம் என்பதையெல்லாம் தாண்டி மற்றொரு இனத்தை அழித்து விடுவதுதான் லட்சியம் என்ற எண்ணப்போக்கு வளர்ந்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் ஐ.எஸ். இயக்கம். I.S.I.L., I.S.I.S., I.S., இந்த மூன்று அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவன்ட் என்பதன் சுருக்கம்தான் I.S.I.L.. லெவன்ட் என்ற சொல் அந்தக் காலத்தில் சிரியா, ஜோர்டான், இஸ்ரேல் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியே குறிக்கப்பட்டது என்றாலும் நாளடைவில் லெவன்ட் என்பது சிரியா மட்டுமே என்று ஆகிவிட்டது. இந்தப் பெயர் மாற்றத்தால் தன் பெயரையும் I.S.I.S. என்று மாற்றிக் கொண்டது அந்த இயக்கம். இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா.

நாளடைவில் இந்த இயக்கத் தினர் மேலும் தீவிரமாக யோசித்தார் கள். ‘’எதற்காக இஸ்லாமிய தேசமாக இராக்கையும், சிரியாவையும் மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும்? இவற்றைத் தாண்டியும் விரிவுபடுத்திக் கொள்ள லாமே’’. இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் I.S. என்று தங்கள் பெயரை சுருக்கிக் கொள்ள வைத்திருக்கிறது.

தங்கள் தலைவராக (அதாவது காலிஃபாக) இந்த இயக்கம் நியமித்திருப்பது அபுபக்கர் அல் பஹாதி என்பவரை. இவர் முன்பு இந்த இயக்கத்தின் தளபதியாக (அதாவது எமிர் என்ற பதவி) விளங்கியவர். இராக்கில் பிறந்து பாக்தாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இஸ்லாமிய மார்க்கம் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பெற்றவர். நாளடைவில் எம்.எஸ்.சி. என்ற அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் முழுப் பெயர் ‘முஜாஹெதீன் ஷுரா கவுன்சில்’.

இந்த அமைப்பின் பெயர் பலருக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் ஆறு சன்னி இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பான இவற்றில் ஒன்றின் பெயர் உலகம் முழுவதுமே பரவலாக அறியப்பட்ட ஒன்று. அல் கொய்தா!

இன்றைய தேதியில் அபுபக்கர் அல் பஹாதியைப் பிடிப்பதற்கோ, கொல்வதற்கோ உதவும் வகையில் துப்பு கொடுப்பவருக்கு ஒரு கோடி டாலர் வெகுமதி என்று அறிவித்திருக்கிறது அமெரிக்கா. இதைவிட அதிகத் தொகையை - 2.5 கோடி டாலர் அளிப்பதாக அமெரிக்கா அறிவித் திருப்பது வேறு ஒரே ஒருவரின் தலைக்குதான். அவர் அய்மான் அல் ஜவாஹிரி அல் கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவர். (என்ன இருந்தாலும் அல் கொய்தா அமெரிக்காவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுத்தியவர் அல்லவா? இடித்து வீழ்த்தப்பட்ட இரட்டை வணிக கோபுரங்கள்).

‘சிரிய ராணுவம்’ என்ற பெயரில் ஒரு பெரிய ‘ராணுவத்தை’ சிரியாவில் ஏற்படுத்தியது ஐ.எஸ். அதன் மூலம் இராக் வழியாக சிரியா வின் கிழக்குப் புறத்தில் ஊடுரு வத் தொடங்கியது. மூன்றே வருடங் களில் சிரியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி ஐ.எஸ்.ஸின் அதிகாரத்துக்குள் வந்துவிட்டது. தற்செயலாகவோ, திட்டமிட்டோ சிரியாவிலுள்ள பெட்ரோலியக் கிணறுகள் பலவும் ஐ.எஸ்ஸால் ஆக்ரமிக்கப்பட்ட இந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளன.

ஐ.எஸ். அமைப்பு குறைந்தகால கட்டத்திலேயே உச்சத்தைத் தொட்டதற்கு சில காரணங்கள் உண்டு. நிதி உதவியைத் தடையில்லாமல் அளிக்கிறார்கள் வளைகுடாவைச் சேர்ந்த அரபு இனத்தவர். ‘’ஷியாக்களை ஒடுக்கு’’ இதுதான் அவர்களுக்கு இடப்படும் ஒரே கட்டளை.

சிரியாவிலும், ஈராக்கிலும் வரி வசூலிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது ஐ.எஸ். சிரியா அரசு எப்படி இவர்களை சமாளிக்கிறது? தீவிரவாத இயக்க மான ஐ.எஸ். அளவுக்கு அந்த அரசும் ஏன் உலகெங்கும் கடுமை யான கண்டனங்களை சந்திக்கிறது? நியாயமான கேள்விகள்தான்.

http://tamil.thehindu.com/world/சீர்குலையும்-சிரியா-2/article6547480.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சீர்குலையும் சிரியா - 3

 
சிரியா அதிபர் பஷார்-அல்-ஆசாத் உடன் அவரது மனைவி அஸ்மா அல்- ஆசாத். கோப்புப் படம் - ஏஎப்பி
சிரியா அதிபர் பஷார்-அல்-ஆசாத் உடன் அவரது மனைவி அஸ்மா அல்- ஆசாத். கோப்புப் படம் - ஏஎப்பி

‘நாட்டை ஆண்ட இந்திரா காந்திக்கு இரண்டு மகன்கள். மகன்களில் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். அரசியல் செயல் பாடுகளில் தடாலடியாக ஈடுபட்டார். பாராட்டுகள், விமர்சனங்கள் ஆகிய இரண்டும் எழுந்தன. அடுத்ததாக அவர்தான் ஆட்சி நாற்காலியில் அமருவார் இப்படித் தான் பலரும் யூகித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் விபத்தொன்றில் இறந்தார் அவர்.

இந்த நிலையில் அவரது சகோதரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலை உண்டானது. தான் அரசியலுக்கு வருவோம் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மேலை நாட்டில் கல்வி கற்ற இளைஞர் அவர். அவர் மனைவியும் வெளிநாட்டைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர்.’’.

எதற்காக இந்திரா காந்தி- சஞ்சய் காந்தி - ராஜீவ் காந்தி சோனியா காந்தி கதையை இங்கே கொண்டுவர வேண்டுமென்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். மேலே குறிப்பிட்டது சிரியாவின் ஆட்சியில் அமர்ந்தவர்கள் குறித்த விவரங்கள்தான்! இந்திரா காந்தி என்ற இரு வார்த்தைகளை மட்டுமே மாற்ற வேண்டும், அவ்வளவுதான்.

சுமார் 30 வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அஸாத். எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது என்று வெளிப்படையாகவே 1990ல் அறிவித்தார். அவ்வப்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் மக்களின் பெரும் ஆதரவு பெற்றவராகத்தான் இவர் விளங்கினார். 1991 தேர்தலில் 99.98 சதவிகித வாக்களித்து இவரை நான்காம் முறையாக நாட்டுத் தலைவராக்கினார்கள் சிரியா மக்கள்.

இவரது இரண்டு மகன்களில் ஒருவனான பஸ்ஸெல் அல் அஸத் என்பவர்தான் அந்த நாட்டின் அடுத்த அதிபர் என்று மக்கள் நினைத்திருக்க, கார் விபத்தொன்றில் அவர் பிராணனை விட்டார்.

மற்றொரு மகன் பஷர் அல் அஸாத் அதிபரானார். பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்கு பாலைவனத்தில் போட்ட மீனாகத் துடித்தார். காரணம் அவரது கனவு அரசியல் அல்ல. லண்டனில் கண் மருத்துவர் படிப்பை முடித்துவிட்டு டமாஸ்கஸுக்கு வந்து தன் தாய் நாட்டு ராணுவத்தில் கண் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த அவருக்குதான் மணிமுடி.

இன்று பல உலக நாடுகளின் கண்டனத்துக்கும், ஐ.எஸ்.ஸின் நேரடித் தாக்குதலுக்கும் அவர் மையப் புள்ளி. கல்வியாளர் என்பதாலோ என்னவோ ராணுவத்திலும் ஒரு நவீனப் பிரிவை ஏற்படுத்தினார். இதன் பெயர் ‘சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி’.

இவர்களின் ஆயுதம் துப்பாக்கி அல்ல, கணினி. அரபு உலகத் தில் இப்படியொரு படை செயல் படுவது இதுவே முதல் முறை. எதிரிகளின்மீது வலைத்தளப் பக்கங்களின் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது சிரியா அரசு. (ஸைபர் அட்டாக்).

இவர் மீது ஐ.எஸ். தனி கவனம் எடுத்து தாக்கத் தொடங்கி இருப்பதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு. பிறப்பால் இவர் ஷியா இனத்தைச் சேர்ந்தவர். ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு தேசத்தை முஸ்லிம் ஒருவர் தலைமையேற்று ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத் திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் ‘முக்கால்வாசி மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் ஒரு தேசத்தை ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார்’. இப்படி நினைத்ததால் அங்கு ஓர் உலக மகா கலவரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அதிபர் பஷாரின் மனைவி அஸ்மா. அழகானவர். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். பிரிட் டனைச் சேர்ந்தவர். ‘பாலைவன ரோஜா’ என்று உள்ளூர் ஊடகங் களால் வர்ணிக்கப்பட்டவர்.

தற்போதைய சிரிய கலவரம் குறித்து இவரது கருத்து என்ன என்பதை அறிய உலக ஊடகங்கள் முயற்சித்தன. இவரது கருத்துகள் கிடைக்கவில்லை. காரணம் இவரே கிடைக்கவில்லை! எந்தப் பொது விழாவிலும் அவரைக் காணோம். ஒருவேளை பிறந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறாரோ? ஆனால் லண்டனில் உள்ள அவரது பிறந்த வீட்டினர் அங்கு அஸ்மா வரவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றனர். எங்கே அஸ்மா? அரண்மனையில் ரகசியமாக சிறை வைக்கப்பட்டுள்ளாரா? பரபரப்பான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

உள்நாட்டில் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு புறமிருக்க, இந்த உள்ளூர் கலவரங்கள் உச்சத்தை அடைவதற்கு முன்பாக தனது அண்டை நாடுகளில் ஒன்றான லெபனானுடன் போரிட்டுக் கொண்டிருந்தது சிரியா. இன்னமும்கூட அந்த நெருப்பு அணைந்த பாடில்லை. செப்டம்பர், 2014ல் ஐ.நா.பாதுகாப்புக் குழு ஒரு தீர்மானம் போட்டது. லெபனானில் உள்ள தனது 15,000 ராணுவ வீரர்களை சிரியா உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். சிரியா தனது 3,000 வீரர்களை மட்டும் இடம் பெயரச் செய்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிலி படுகொலை செய்யப்பட்டார். இதற்குப் பின்னணியாகச் செயல்பட்டது சிரியாதான் என்று பரவலாகவே பேசப்பட்டது.

இஸ்ரேலின் புலனாய்வுத் துறையில் உச்சபதவியில் இருப் பவர் பிரிகேடியர் ஜெனரல் இடாய் ப்ரூன். சிரியாவின் அதிபர் அஸாத் ரசாயன ஆயுதங்களை தீவிரவாதிகள் மீதும் தன் பொது மக்கள் மீதும் நிச்சயம் பயன் படுத்தினார் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உண்டு என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். குறிப்பாக சரின் எனப்படும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் மிக ஆபத்தான ரசாயனப் பொருள் இதில் பயன்படுத்தப்பட்டது எனக்கூறி பதற வைத்தார். பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் கூட இதை வழி மொழிந்தன. குறிப்பாக டமாஸ்கஸ், அலெப்போ, ஹோம்ஸ் ஆகிய பகுதிகளின் மீது ரசாயன ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன என்று கூறின.

இந்தக் கருத்தைப் பற்றி சிரிய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அரசைப் பதற வைத்த வேறு சில நிகழ்ச்சிகள் அரங்கேறின.

http://tamil.thehindu.com/world/சீர்குலையும்-சிரியா-3/article6551262.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சீர்குலையும் சிரியா - 4

 
 
சிரியாவில் இருந்து அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள். கோப்பு படம் - ஏஎப்பி
சிரியாவில் இருந்து அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள். கோப்பு படம் - ஏஎப்பி

பொருளாதாரத்தில் சிரியா தள்ளாட, 2001 மார்ச்சில் அரசுக்கு எதிராக சுவரில் ஓவியங்கள் வரைந்தனர் சில குழந்தைகள். அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பொருளா தாரத்தை மேம்படுத்த அல்ல. மேற்படி குழந்தைகளைக் கொன்றது. மக்கள் கொந்தளித்தார் கள். தொடங்கியது உள்நாட்டுப் போர். வெளிநாடுகளிலிருந்தும் சில ஜிகாதிகள் சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் அழுத்தமாகக் கால் பதித்தது.

ஐ.எஸ்.தீவிரவாதிகளை அடக்குவதற்கு முயற்சி எடுக்கி றேன் என்று பொறுப்பற்ற முறையில் அரசு நாட்டின் பல பகுதிகளிலும் குண்டு வீசிக் கொண்டி ருக்கிறது. இதனால் தீவிரவாதி களைவிட அப்பாவிப் பொதுமக்கள் தான் அதிகமாக இறந்து கொண் டிருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த மக்கள் அண்டை நாடுகளான லெபனான், துருக்கி, ஜோர்டான், எகிப்து, இராக் போன்ற நாடுக ளுக்கு தெறித்து ஓடிக் கொண்டிருக் கிறார்கள்.

சிரியா அரசை இப்போது மிகவும் வெறுப்பேற்றும் மற்றும் கவலைப்பட வைக்கும் விஷயம் இதுதான். இப்போது ஐ.எஸ். இயக்கத்திலுள்ள பலரும் நேற்று அரசின் ராணுவத்தில் பதவி வகித்த வர்கள். உள் விஷயங்களை நன்கு தெரிந்தவர்கள்.

ஜூலை 18 அன்று வெடிக்கப் பட்ட ஒரு குண்டு அஸாத் அரசை நிலைகுலைய வைத்திருக்கிறது. அரசின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கூடி யிருந்தனர். அந்த சந்திப்பு நிகழ்ந்தது தலைநகர் டமாஸ் கஸில் இருந்த தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில். அதாவது உச்சகட்ட பாதுகாப்பான இடத்தில். அங்கு வீசப்பட்ட குண்டு பாதுகாப்பு அமைச்சரைக் கொன்றது. கூடவே அஸாதின் மைத்துனரை யும் கொன்றது. அஸாதின் வலது கை என்று கருதப்பட்ட இவர், அரசின் சக்தி படைத்த உறுப்பினராகவும் விளங்கியவர்.

ஆகஸ்ட் 6 அன்று விழுந்தது அடுத்த இடி. இது குண்டினால் உருவானது அல்ல. முதுகில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி. சிரியாவின் பிரதமர் ரியாத் ஹிஜாப் என்பவரும் வேறு இரண்டு அமைச்சர்களும் ஜோர்டானுக்குச் சென்றார்கள். அங்கு ‘நாங்கள் இனி எதிர்க்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்போம்’ என்று உரத்துக் கூறினார்கள்.

கி.மு. 1500-ல் எகிப்தின் வசமானது பண்டைய சிரியா. பிறகு பலரின் கைமாறி அலெக் ஸாண்டரின் பிடிக்குள் வந்து சேர்ந்தது. நாளடைவில் ரோம சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக ஆனது. கி.பி. 636-ல் அரேபியர்கள் இப்பகுதியை வென்று தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். அப்போது இது ஒரு மாபெரும் வணிகக் கேந்திரமாக உருவானது.

ஏழாம் நூற்றாண்டில் இதனை ஆண்ட ஆட்சியாளர்கள் தங்கள் மொத்த சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக டமாஸ்கஸைத்தான் கொண்டிருந்தனர்.

அப்போது சிரியா நான்கு பிரம்மாண்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததது. அவை டமாஸ்கஸ், ஹோம்ஸ், பாலஸ் தீனம் மற்றும் ஜோர்டான். (ஆம் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம்). இந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்பெயினிலிருந்து படர்ந்தது. ஆனால் காலப்போக்கில் டமாஸ் கஸ் மதிப்பிழந்தது. சாம்ராஜ்யத் தலைநகர் பாக்தாத் (தற்போதைய இராக்கின் தலைநகர்) என்றானது.

1916-ல் ஆங்கிலேயர்களுக் கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற ரகசிய உடன்படிக்கையின்படி பிரான்ஸின் வசம் வந்து சேர்ந்தது சிரியா. நாளடைவில் லீக் ஆஃப் நேஷன்ஸ் (அந்த நாளைய ஐ.நா.சபை) அமைப்பும் பிரான்ஸுக்கு அந்த உரிமையை அளித்தது.

சுதந்திரப் போராட்டங்கள் நடை பெற்ற 1944 ஜனவரி 1 அன்று சிரியாவை சுதந்திரக் குடியரசாக ஏற்றுக் கொண்டது பிரான்ஸ். என்றாலும் தனது படைகளை ஏப்ரல்1946-ல்தான் சிரியாவி லிருந்து விலக்கிக் கொண்டது பிரான்ஸ். எனவே அப்போதுதான் சிரியாவில் சுதந்திர அரசை அமைக்க முடிந்தது.

பிரான்ஸ் நாட்டின் பிடியிலி ருந்த சிரியா 1944 புத்தாண்டு தொடக்கத்தில் சுதந்திரம் பெற்றது. இன்று அந்த சுதந்திரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களில் கணிசமானவர்கள் பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, அவர் களில் சிலர் எடுத்துள்ள முடிவு புருவங்களை உயர்த்த வைக்கிறது.

http://tamil.thehindu.com/world/சீர்குலையும்-சிரியா-4/article6555294.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

சீர்குலையும் சிரியா - 5

syria_2183303h.jpg
 

அரசின் தாக்குதல்களால் வெறுத்துப் போன பொது மக்களில் பலரும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்கிறார்கள். ‘’என் அண்ணனைக் கொன்ற இந்த அரசை சும்மா விடமாட்டேன்’’ என்பதுபோல தனிப்பட்ட பகைமை காரணங்களை தனக்கெதிராக ஏராளமாக உருவாக்கி வருகிறது சிரியா அரசு.

அமெரிக்காவில் கொலாரடோ பகுதியின் டென்வர் நகரில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி அதிர்ச்சிகரமானது. 15லிருந்து 17 வயது கொண்ட மூன்று மாணவி கள் அமெரிக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்ல முடிவெடுத்து கொலாரடோ விமான நிலையத்தை அடைந்துள்ளனர். பள்ளியிலிருந்து இவர்கள் வீடு திரும்பாததால் காவல்துறையிடம் பெற்றோர்கள் புகார் செய்தனர். தேடுதலில் அவர் களைக் கண்டுபிடித்த காவல் துறையினர் ‘’எதற்காக வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பினீர்கள்? எங்கே செல்வதாகத் திட்டம்?’’ என்று கேட்க, சிறிதும் தயக்கமில்லாமல் வந்த விடை இது. ‘’சிரியாவிலுள்ள ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்ந்து சிரியாவின் ஆட்சியை கீழே இறக்கச் செல்கிறோம்’’.

காவல்துறை அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியது வேறு விஷயம். சிரியாவின் ஆட்சியை ஓரள வுக்கு மேல் ஐ.நா.வால் கண்டிக்க முடியவில்லை. காரணம் பொதுச் சபையில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானங்களை சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்து தடுத்து விடுகின்றன. இரானும், லெபனானும் (அங்கு ஷியாக்கள் அதிகம் என்பதால்) சிரியா அரசை ஆதரிக்கின்றன.

ஆக சிரியா - ஐ.எஸ். போர் என்பது உண்மையில் பலவித மறைமுகப் போர்களின் திரைபோலவே காட்சியளிக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இதன் மூலம் தங்கள் பலத்தை சோதனை செய்து கொள்கின்றன.

அமெரிக்கா எதற்காக சிரியா வின் உள்நாட்டுப் போரில் தலையிட வேண்டும்? ‘’வழக்கம்போல அது தன் பெரியண்ணன் தோரணையை காட்டுகிறது’’ என்று மட்டுமே முடிவெடுக்க முடியாது. வேறு பல காரணங்களும் உள்ளன. சிரியா அரசுக்கு எதிரான ஐ.எஸ்., அல் கொய்தாவின் மேலும் தீவிரப்பட்ட வடிவம். ஐ.எஸ்.சிரியாவில் தன் ஆட்சியை நிறுவினால் அது அல் கொய்தாவின் (அமெரிக்க நலனுக்கு எதிரான) செயல்களில் நிச்சயம் ஈடுபடும். ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் ‘இரான், வடகொரியா, இராக் ஆகியவை தீயவற்றின் அச்சாணிகள்’ என்று கருத்து கூறியிருக்கிறார்.

சிரியாவில் ஐ.எஸ். ஜெயித்தாலும், தோற்றாலும் ஒரு காலத்தில் அமெரிக்கா அங்கு போரில் ஈடுபட வேண்டியிருக்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுட னான தூதரக உறவைத் துண்டித் துக் கொண்டுள்ளன. இரானும், சீனாவும், ரஷ்யாவும் இப்போதை க்கு சிரியாவின் நண்பர்கள்.

இந்த நிலையில் பிரிட்டனிலுள்ள பல நிதி நிறுவனங்களும் முக்கியமாக HSBC வங்கி தங்களிடமுள்ள சிரியா தேசத்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கணக்கை முடித்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதியிருந்தன. இதற்குக் கடும் கண்டனம் எழ, சம்பந்தப்பட்ட வங்கி இந்தச் செய்தி தவறென்று சமாளித்திருக்கிறது.

2004 ஜூன் 3 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அஸாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை. காரணம் அரசின் வசம் முழுமையாக இருந்த பகுதி களில் மட்டுமே தேர்தல் நடை பெற்றது. தவிர எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இந்த நிலையில் அஸாத் வென்றது செல்லாது என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. உண்மைதான் என்று ஒத்துக் கொண்டன பல மேலை நாடுகள்.

ஹஜ் பயணம் செல்பவர்கள் மெக்காவிற்குச் செல்வதற்கான ஒரு நுழைவு வாயில் டமாஸ்கஸ் (சிரியாவின் தலைநகர்). அங்கே இப்படிப்பட்ட உச்சகட்ட கலவரங்கள் நடைபெறுவது உலக முஸ்லிம்களுக்கேகூட சங்கடத்தைத் தருகிறது. ஒரு காலத்தில் ஸ்பெயின், ஜோர்டான், பாலஸ்தீனம் போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருந்த சிரியா இப்போது தன் சிறிய பரப்பே துண்டாடப்படுவதை நினைத்து தவிக்கிறது.

http://tamil.thehindu.com/world/சீர்குலையும்-சிரியா-5/article6557456.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.